ஏழூர் முத்தாலம்மன் ஊர்ச்சாத்திரை

Posted: நவம்பர் 16, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

திருவிழாக்களின் தலைநகரம் நூலில் ஏழூர் முத்தாலம்மன் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவையும், வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் திருவிழாவையும் பதிவுசெய்துவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் ஏழூர் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவைக் காணும் வாய்ப்பு இந்தாண்டுதான் கிட்டியது.

ஏழூர் திருவிழா என்றால் ஏழு ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாதான். தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, கிளாங்குளம், ஏ.சத்திரப்பட்டி, காடநேரி இந்த ஆறு ஊர்களில் இருந்து தேர்போல சப்பரங்களை செய்து தலைச்சுமையாக அதை அம்மாபட்டிக்கு கொண்டு வருகின்றனர். அம்மாபட்டியில்தான் ஏழு அம்மன் சிலைகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். அம்மாபட்டியில் மட்டும் தேர் செய்வதில்லை. தேர்போன்ற சப்பரங்களை செய்துவந்தாலும் அம்மனைத் தலைச்சுமையாகவே ஊருக்கு தூக்கிச் செல்கின்றனர். மேலும், இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால் மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு அதிக மக்கள்கூடும் திருவிழாவாக இதைச் சொல்லலாம். கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் கூடுகிறார்கள். (இம்முறை ஊரடங்கு காலம் என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது)

நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் திருவிழா என்றதும் சென்றுபார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகியது. தேவன்குறிச்சி கல்லுப்பட்டியிலுள்ள நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விழா நிகழ்வுகளைக் கேட்டு அறிந்தேன். நவம்பர் 4 அன்று இரவே வரச்சொன்னார். அன்று இரவு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. எங்க ஊரிலிருந்து தே.கல்லுப்பட்டி 50 கிலோமீட்டர் மேல் இருக்கும்.

திருவிழாவிற்கு என்னோடு சகோதரனும் வந்ததால் இருவரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்பினோம். அதிகாலை இருளினூடாகப் பயணித்து தே.கல்லுப்பட்டியை நோக்கிச் சென்றோம். சமயநல்லூர் அருகே சூடான அப்பமும், தேநீரும் அன்றைய பொழுதை அற்புதமாகத் தொடங்கி வைத்தது. திருமங்கலத்திலிருந்து தே.கல்லுப்பட்டி செல்லும்சாலை இருமருங்கிலும் ஆங்காங்கே புளியமரங்கள் குடைவரையைப் போல அழகாகயிருந்தது. பயணங்கள் குறித்து பேசிக்கொண்டே சென்றோம்.

நாங்கள் தே.கல்லுப்பட்டி செல்லும்பொழுது ஊரே திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தது. பெரிதாக கட்டப்பட்ட தேர் சாலையில் தயாராக நின்றுகொண்டிருந்தது. அடுத்து தேவன்குறிச்சியிலிருந்து தேர்போன்ற சப்பரத்தை உற்சாகமாக கொண்டுவந்து தே.கல்லுப்பட்டி சப்பரத்திற்கு முன் நிறுத்தினர். அதை வைக்கும்முன் மூன்றுமுறை முன்னும்பின்னும் கொண்டுவந்து வைத்தனர். இந்த சப்பரத்தை வைப்பதற்காக மூன்று கனமான மூங்கில்களை கூம்புவடிவில் நிறுத்தி அதில் இந்த சப்பரத்தை வைக்கின்றனர். சப்பரத்தை நிறுத்துவதற்குத் தேவையான நான்கு மூங்கில்தாங்கியை நாலுபேர் சுமந்து வருகின்றனர்.

ஒவ்வொரு சப்பரத்தையும் வடிவமைக்க வெகுசிரத்தை எடுத்து இருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக இதைச் செய்கிறார்கள். ஐந்து நீண்ட மூங்கில்கழிகளை நேராக வைத்து அதன்நடுவே பெரிய சதுரமாக ஒன்றைக் கட்டி, அதன்மேல் அதற்கடுத்த சிறிய சதுரம், அதன்மேலே உச்சியில் சின்ன சதுரம் என்ற அமைப்பில் இதைக் கட்டுகிறார்கள். நாலைந்துநாட்களுக்கு முன்னரே இந்த தேர் கட்டும்பணியைத் தொடங்கிவிடுவார்களாம். பெரியவர்கள் மூங்கில்கழியை வைத்து தேர்கட்ட சிறியவர்கள் காகித அலங்காரங்களைச் செய்கின்றனர். ஒவ்வொன்றையும் நிறைய வண்ணகாகிதங்கள் கொண்டு அழகாக வடிவமைத்துள்ளனர்.

30 அடி உயரம் அல்லது அதற்கு மேலிருக்கும் ஒவ்வொரு சப்பரமும். இந்த சப்பரங்களை மற்ற ஊர்களைப்போல வண்டியில் வைத்து கொண்டுவருவது என்றில்லாமல் தலைச்சுமையாகவே கொண்டுவருகிறார்கள். 5 வரிசையாக ஒருவர்பின் ஒருவர் நின்று ஐம்பதிலிருந்து அறுபது பேர் இந்த சப்பரத்தை சுமக்கின்றனர். நிறுத்தும் இடங்களை சுமப்பதை மாற்றிக்கொள்ள இன்னும் ஐம்பதுபேர் உடன்வருகிறார்கள். இவர்களது கூட்டு உழைப்பின் அழகே நாம் அந்த சப்பரத்தைப் பார்க்கும்போது அது கப்பல் போல மிதந்துவருவதுபோலத் தெரியும். அவ்வளவு சீராக அதை சுமந்து வருகிறார்கள்.

தே.கல்லுப்பட்டியில் இரண்டு சப்பரங்களைப் பார்த்துவிட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்மாபட்டியை நோக்கி நடந்தோம். தே.கல்லுப்பட்டியிலிருந்து அம்மாபட்டிவரை சாலையின் இருமருங்கிலும் ஏராளமான திருவிழாக்கடைகள் முளைத்திருக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், பெண்களுக்கான அணிகலன்கள், தின்பதற்கான பண்டங்கள் உள்ள கடைகள். மிளகாய் பஜ்ஜி, பானிபூரி, காலிப்ளவர் 65 என உணவுவகைகளே மாறிவிட்டது. காலை நேரத்தில் அதையும் வாங்கி உண்டுகொண்டிருந்தார்கள். நாங்கள் சப்பரங்கள் வருவதற்கு முன்னும் பின்னுமாக இருமுறை தேனீர் வாங்கிக் குடித்தோம். மஞ்சளாகயிருந்த வெங்காய பஜ்ஜியை இனிப்பு அப்பம் என நினைத்து வாங்கிசாப்பிட்டோம். மஞ்சள் கேசரிப் பொடி போட்டிருப்பார்கள்போல. ஐஸ்கிரீம் வாங்கினோம். அதோடு அடித்துபிடித்து அன்னதானத்தில் தக்காளிசாதம் வாங்கி காலைப்பசியாறினோம்.

அம்மாபட்டியில் ஒரு கூரைவீட்டில் ஏழு அம்மன்களையும் வைத்திருக்கின்றனர். எல்லாச்சிலைகளையும் ஒரேபோல நேர்த்தியாக செய்திருக்கின்றனர். நையாண்டி மேளம் அந்த கோயில்வீட்டருகே முழங்கிக் கொண்டிருந்தது.

தே.கல்லுப்பட்டியில் தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி மூன்று சப்பரங்களும் ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து அம்மாபட்டியை நோக்கி வருகின்றன. அம்மாபட்டிக்கு அருகிலுள்ள சாலையில்வந்து கிளாங்குளம் மற்றும் ஏ.சத்திரப்பட்டி சப்பரங்கள் வன்னிவேலம்பட்டி சப்பரத்திற்குப்பின் வந்து இணைகின்றன. காடநேரி ஊர் அம்மாபட்டிக்கு வலப்பகுதியில் உள்ளதால் அந்த ஒரு சப்பரம் தனியாக வந்துவிடுகிறது. ஒவ்வொரு சப்பரமும் வரும்போது அந்த ஊரே முன்னால்வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகத்துடன் அந்த சப்பரங்கள் முன்னே வருவதைக் காணும்போதே கொண்டாட்டமாகயிருக்கிறது. இதில் தேவன்குறிச்சி சப்பரம் முதலில் அதற்குப்பின்னேதான் மேற்சொன்ன வரிசையில் சப்பரங்கள் வருகின்றன.

ஒவ்வொரு சப்பரத்தைக் கொண்டுவந்து நிறுத்தும்போதும் முன்னும்பின்னுமாக கொண்டுவந்து மூன்றுமுறை கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். மூங்கில்கழியைக் கொண்டு நிறுத்திவைத்துவிட்டு அவர்கள் அதனடியில் அமர்ந்திருப்பது அருமையான காட்சி. சப்பரத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்க்கரைகளில், சாலைகளில், வீட்டுமாடிகளில் அமர்ந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு வான்வழியாகப் படம்பிடிக்க கேமராவும் பறக்கிறது. வண்ணப்புகையாக வரும் வெடியை வெடிப்பதும், சப்பரத்தை மேலும், கீழுமாக குலுக்குவதும் என பெருங்கொண்டாட்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சப்பரமும் முன்செல்ல அதைப்பார்த்துவிட்டு பின்னே வருவதற்குள் விழிபிதுங்கிவிடுகிறது அவ்வளவுகூட்டம். ஐந்துசப்பரங்களைப் பார்த்தோம். கூட்டம் கடைசியில் கொண்டுவந்து தள்ளிவிட்டது. அப்படியே கண்மாய்க்கரையோரமாக வந்து வயல்களுக்குள் இறங்கி தே.கல்லுப்பட்டியை நோக்கி நடந்தோம்.

600 வருடங்களுக்கு முன்னே இப்பகுதிக்கு ஒரு தாயும், ஆறுபெண்பிள்ளைகளும் இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்குப்பின் நல்ல மழை பெய்ததாகவும் அந்த பெண்களை பின் தெய்வமாக வழிபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். (பொதுவாக முத்தாலம்மனாகச் சொன்னாலும் ஒவ்வொரு ஊரிலும் இத்தாய் தெய்வத்தை வெவ்வேறு பேரில் அழைக்கிறார்கள்.) முத்தாலம்மன் என்பதால் அன்று இரவே அதைக் கரைத்துவிடுகிறார்கள். முத்தாலம்மனை அன்றே தோன்றி அன்றே மறைவாள் என்று சொல்வார்கள். இதில் ஆறு அம்மன்களை அக்கா தங்கச்சியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு அம்மனும் அந்தந்த எல்லையில் பிரியும்போது அக்காவை விட்டுட்டு போறோமே எனப் பார்க்கும் என்கிறார்கள்.

கிளம்பிட்டாளாம் ஆத்தா கிளம்பிட்டாளாம்! கிழக்குவாசல் சன்னதி நோக்கி கிளம்பிட்டாளாம்! என தாய்த்தெய்வங்களின் வர்ணிப்பு பாடல்கள் ஒலிக்க ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. வெகுநாட்களாக ஊருக்கு வராதவர்கள்கூட இந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். ஆண்டுதோறும் கொண்டாடினால் பொருட்செலவு அதிகமாகுமென்று அந்தக்காலத்திலிருந்தே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடிவருகிறார்கள்.

இந்தத் திருவிழா பார்த்துவிட்டு நானும் சகோதரனும் வந்து பதினொரு மணியளவில் தே.குண்ணத்தூரில் ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டோம். அங்கிருந்து மெல்ல வீட்டை நோக்கி கிளம்பினோம். எங்களுக்குப் பின்னாலேயே மழையும் கிளம்பியிருக்கும்போல. வீடு வந்ததும் மழை வந்துவிட்டது. ஐப்பசியும் வந்தது அடைமழையும் தந்தது. திருவிழாவும் வந்தது மகிழ்ச்சியும் தந்தது.

படங்கள் உதவி – செல்லப்பா

பின்னூட்டங்கள்
  1. saravanaprabur சொல்கிறார்:

    What instruments were used in this festival?

  2. திருவிழாவில் நையாண்டிமேளம் இசைப்பதால் நாதஸ்வரம், தவில், பம்பை இவைகளை இசைக்கின்றனர். ஒரு ஊரில் செண்டை மேளம் வைத்திருந்தார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s