
மதுரை மேலூர்க்கருகேயுள்ள வெள்ளலூர், உறங்கான்பட்டி கிராமங்களை அடுத்து திருமலை என்ற ஊர் மதகுப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த சிற்றூர் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள மலையில் குடைவரையும், மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலும், அதற்கும்மேல் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

தீபாவளி விடுமுறைக்கு மதுரைக்கு வந்த சகோதரர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (15.11.20) திருமலையிலுள்ள தொல்லெச்சங்களைக் காண கிளம்பினோம். அன்று காலை முதலே வெயிலில்லாமல் மேகமூட்டமாய் இருந்தது. வழிநெடுக மலைகளும், நீர்நிலைகளும், வயல்களும் பயணத்தை அழகாக்கின. வெள்ளலூர் தாண்டியதும் கண்மாய்க்கரையோரம் சேமங்குதிரையுடன் அமைந்திருந்த அய்யனார் கோயில் அருகே வாகனத்தை நிறுத்தி போய் பார்த்தோம், குழுவாகப் படமெடுத்தோம். சேமங்குதிரையை வண்ணம் தீட்டும் பணியைச் செய்தவர் ஒக்கூர் என்ற பெயரை அதில் எழுதியிருந்தார். உடன்வந்த சகோதரர் அதைப்பார்த்து சங்க இலக்கியத்தில் உள்ள ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண் புலவர் பிறந்த ஊராக இருக்கலாம் என்றார். அவரது ஞாபகசக்தி மலைப்பூட்டியது.
மதகுப்பட்டி செல்லும் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி திருமலையை அடைந்தோம். மலையிலிருந்து கொஞ்சதூரம் ஏறியதும் குடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலை குடமுழுக்கு என்ற பெயரில் வண்ணம் தீட்டி படுத்தியெடுத்திருக்கிறார்கள். கோயிலில் குடைவரைப் பகுதியில் பெயிண்ட்டில் வண்ணம் பூசியிருக்கிறார்கள்.

மலைக்கொழுந்தீஸ்வரர், பாகம்பிரியாள் சன்னதி சுவர்களில் எல்லாம் கல்வெட்டுகள். சன்னதியைச் சுற்றிவரும் வழியிலுள்ள கல்திண்டு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள். இடதுபுறம் குடைவரைக் கோயில் பகுதி உள்ளது. இங்கிருந்து சுரங்கப்பாதை இருந்தது என்பதை சொல்லும் விதமாக இரும்புக் கம்பிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். குடைவரையிலுள்ள சிவனும் அம்மையும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு திண்டில் ஒரு காலைத் தொங்கப்போட்டு ஒரு காலை குத்துக்காலிட்டு சிவன் அம்மையின் கரங்களை தொட்டபடி அமர்ந்திருப்பதுபோல அழகாக அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு சிற்பம் கழுகுமலை வெட்டுவான் கோயிலில் பார்த்திருக்கிறேன்.

திருமலையிலுள்ள வரலாற்றுத் தகவல்களை அறிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் கூறிய சில முக்கியமான தொல்லியல் தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இங்குள்ள குடைவரைக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியன் குடைவரை. இந்தக் குடைவரையில் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மதுரை யானைமலையிலுள்ள குடைவரைக் கோயில் காலத்தது. மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலும் பாண்டியர்காலக் கோயில்தான். இதில் முதலாம் சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் குறித்த கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள் வணிகக் கல்வெட்டுகள்.
மலைமேலே உள்ள சமணப் படுகையின் மேல் கைக்கெட்டும் தூரத்தில் தமிழிக் கல்வெட்டு ஒன்றுள்ளது. மிகவும் மங்கலாகக் காணப்படும். ‘எருக்காடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டில் கொறிய என்பதில் ‘ற’ மெய் சேர்த்துக் கொற்றிய என்றும் பளிய் என்பதில் ‘ள்’ சேர்த்து பள்ளிய் என்றும் படிக்கலாம். காவிதி என்ற பட்டம் சங்க காலத்திலேயே வணிகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘வ…. கரண்டை’ என பொறிக்கப்பட்ட கல்வெட்டு முழுமையாக கிடைக்கவில்லை. நடுவில் கொஞ்சம் எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கரண்டை என்ற சொல்லுக்கு குகை, குகைத்தளம் என்று பொருள்.
எருக்காட்டூர் குறித்து திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை நூலில் திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டத் திருவிழா குறித்து எழுதிய கட்டுரை நினைவிற்கு வந்தது.
கொடி நுடங்கு மறுகிற் கூடற்குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
– அகநானூறு 149
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரின் அகநானூற்று பாடல் வரிகள் இன்றளவும் எத்தனை பொருத்தமாயிருக்கிறது. மலையைச் சுற்றி வருகையில் உள்ள குகைத்தளத்தில் ‘எருகாட்டூர் ஈழகுடும்பிகன்’ என்ற பெயர் பொறித்த தமிழி கல்வெட்டு உள்ளதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தகுந்தது. சங்கப் புலவரும், குகைத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள் என்பது சிறப்புதானே.
மேலும், எருக்காட்டூர் பற்றி அறிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் எழுதிய மதுரையில் சமணம் என்னும் நூலை வாசித்தபோது கீழ்காணும் தகவல் கிட்டியது.
திருப்பரங்குன்றம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் எருகாட்டூர் இடம்பெற்றுள்ளது. பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டில் ‘எக்காட்டூர்’ இடம்பெற்றுள்ளது. எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் சங்கப்புலவர் அகநானூறு 149, 319 மற்றும் புறநானூறு 397ஆம் பாடல்களைப் பாடியுள்ளார். சிவகங்கை, திருப்பத்தூர் வட்டங்களில் ஏதோ ஒரு பகுதியில் எருக்காட்டூர் அந்நாளில் அமைந்திருக்கலாம்.
மலைக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து மேலே உள்ள சமணப்படுகையைக் காணச் சென்றோம். மலைமேல் ஒரு சிறிய குளம்போல உள்ளது. எளிமையாக ஏறக்கூடிய மலைதான். ஒரு சிறிய கல்தூண் ஒன்றுள்ளது. அதற்கடுத்து மலையின் இடதுபுறமாகச் சென்றால் சமணப்படுகைகளைக் காணலாம். அதில் உள்ள கல்வெட்டுக்களை தேடுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். அந்தளவிற்கு அந்தப்பகுதி முழுக்க வந்துபோகிறவர்கள் தங்கள் பெயர்களை, காதல் சின்னங்களை வரைந்து, செதுக்கி சென்றிருக்கிறார்கள். சகோதரர் தமிழிக் கல்வெட்டுக்களை அடையாளம் கண்டறிந்தார். ‘எருகாடு ஊரு காவிதி கோன் கொறியளிய்’ என்ற கல்வெட்டு படுகையின் மேலே உள்ளது. அதில் இறுதி எழுத்தான ய கண்டறிவதற்கு வசதியாக இருந்தது. கரண்டை என முடியும் கல்வெட்டைத் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல பாறை ஓவியங்கள் வரையப்பட்ட பகுதியையும் தேடினோம். அவற்றையும் பார்க்க முடியவில்லை. பின் மலையின் மேல் பகுதிக்குச் சென்றோம்.

தொலைவில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமை போர்த்தியிருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் வீடுகள் ஊர்கள் இருப்பதை அடையாளம் காட்டியது. தொலைவில் கொஞ்சம் மலைகள் தெரிந்தன. பாறையில் கொஞ்சநேரம் படுத்து வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்து அப்படியே கீழே இறங்கினோம். குழுவாக ஆங்காங்கே படம் எடுத்தோம். சமணப் படுகையின் முன் அமர்ந்து எல்லோரும் சேர்ந்து படம் எடுத்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.

மலையடிவாரத்தில் கோயிலுக்குச் செல்லும் வழியில் அய்யனார் கோவில் ஒன்றுள்ளது. அதன் பெயர் கடம்பவன அய்யனார் கோயில் என்று இருந்தது. புரவியெடுப்பு நடத்திய மண்சிலைகள் கோயிலுக்குள் இருந்தன. அந்தக் கோயிலுக்கு எதிரே சாலைக்கு மறுபுறம் ஒரு நான்குகற்தூண்களும் மேலே கூரையும் கொண்ட சிறிய அம்மன் கோவிலைப் பார்த்தோம். மரங்களுக்கு நடுவே அழகாய் அமைந்திருந்தது. அந்தக் கால காவு போல. அம்மன் சிலை மிகப் பழையதாக இருந்தது. அந்த இடத்தின் அமைதியை உள்வாங்கியபடி மெல்லக் கிளம்பினோம். வேடிக்கை பார்த்தபடி, உரையாடியபடி, பாட்டுக்கேட்டபடி மதுரையை நோக்கி வந்தோம். இதுபோல வருடத்திற்கு நாலைந்து நாட்களாவது பயணிக்க வேண்டுமென வழக்கம்போலத் திட்டமிட்டோம். பார்க்கலாம். நன்றி.
படங்கள் – செல்வம், செல்லப்பா, கௌதம்