நரசிங்கம்பட்டி பெருமாள்மலை கார்த்திகைத் திருவிழா

Posted: திசெம்பர் 20, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் நரசிங்கம்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. சுங்கவரிச்சாவடிக்கு அடுத்துவரும் வெள்ளரிப்பட்டிக்கு அருகில் நரசிங்கம்பட்டி உள்ளது. நரசிங்கம்பட்டி பெருமாள்மலையில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை நாளிதழ்கள் வழியாக வாசித்திருக்கிறேன். பலமுறை செல்ல முயன்றும் விடுப்பு கிடைக்காமல் போக முடியாமலிருந்தது. இம்முறை கார்த்திகை ஞாயிறன்று வர திருவிழாப் பார்க்க நானும், நண்பர் ரகுநாத்தும் சென்றோம்.

தல்லாகுளம் பெருமாள்கோவிலருகே என்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவைத்துவிட்டு இருவரும் ரகுநாத்தினுடைய வண்டியில் சென்றோம். வழிநெடுக நாட்டார் தெய்வ வழிபாடு, வைதீகமயமாக்கல் குறித்தும், தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்களின் எழுத்துக்கள் குறித்தும் உரையாடியபடி சென்றோம். ஏற்கனவே பசுமைநடையாக அரிட்டாபட்டி, மாங்குளம் மீனாட்சிபுரம் சென்றிருந்ததால் எங்களுக்கு இது பழக்கமான பாதைதான். நரசிங்கம்பட்டி மலைக்குச் செல்லும்பாதையை சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பெரியவரிடம் கேட்டோம். அவர் அந்தக் கோவில் திருவிழாவிற்குத்தான் போய் வந்திருக்கிறார் என்பதை அவர் தலையில் மொட்டையடித்து சந்தனம் பூசியிருப்பதைப் பார்த்தவுடனே தெரிந்தது. அவர் உடன்வந்து வழிகாட்டாத குறையாக பாதைகாட்டினார். இருவரும் அவர்சொன்ன வழியில் சென்றோம். சர்க்கரைப் பொங்கலை வழியில் தொன்னையில் வைத்துக் கொடுத்த குடும்பத்தினரிடம் மகிழ்வோடு பெற்று உண்டுவிட்டு மலையை நோக்கிச் சென்றோம்.

சமீபத்தில் பெய்த மழையால் பெரியாற்றுக் கால்வாயில் தண்ணீர் இருகரைகளையும் தழுவியபடி ஓடிக்கொண்டிருந்தது. கரையின் இருமருங்கிலும் பனைமரங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. திருவிழாப்பார்க்க மக்கள் நடந்தபடி இருந்தனர். வீடுகளைக் கடந்து மலையடிவாரத்தை நோக்கி நடந்தோம். வழியில் ஏராளமான திருவிழாக் கடைகள் கிராமத்துச் சந்தை போல முளைத்திருந்தன.

கொய்யா, அன்னாசி, நெல்லி போன்ற கனி வகைகளும், பஜ்ஜி, அப்பம், வடை, தோசை (அழகர்கோயில் தோசை போல) போன்ற பலகாரங்களும், தாகம் தணிக்க பதநீர், ஐஸ்கிரீம் போன்றவையும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் குடும்பத்திற்கு ஒருவரென மொட்டையடித்த தலைகளை நிறையப் பார்க்க முடிந்தது. மேலூர்ப் பகுதியில் விளையும் கரும்பை இந்தத் திருவிழாவிற்குக் கொண்டுவந்து குறைந்தவிலையில் தருகிறார்கள். ஆளாளாக்கு கரும்புக் கட்டுகளை வாங்கிக் கொண்டுவருவதைப் பார்க்க முடிந்தது. (நானும் திருவிழா பார்த்துவிட்டு வருகையில் கரும்பு வாங்கி வந்தேன்). சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக இத்திருவிழாவிற்கு வருவதைப் பார்க்க முடிந்தது. நண்பர் ரகுநாத் திருவிழாக் காட்சிகளை தன்னுடைய கேமராவில் காட்சிப்படுத்தியபடி வந்தார்.

இரண்டு மூன்று இடங்களில் மணலை மொத்தமாக மலைபோல் குவித்து வைத்திருக்கிறார்கள். திருவிழாவிற்கு வருபவர்கள் மூன்று கை மணல் அள்ளி மேலே கொண்டுபோய் போட்டு, உப்பு-மிளகு சேர்த்த பொட்டலத்தையும் போட்டு தங்கள் வேண்டுல்களைச் சொல்லிவருகிறார்கள். நினைத்தது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. நாங்களும் உப்பு-மிளகு வாங்கிப் போட்டு மூன்று கை மணலை அள்ளிப்போட்டு வணங்கிவந்தோம். இப்படித் திருவிழா திருவிழாவிற்கு தொடர்ந்து செல்லும் வாய்ப்பை கொடுப்பா என்ற வேண்டுதலோடு வந்தேன்.

மரத்தடியில் ஆண்டிச்சாமியின் பெரிய பீடமிருக்கிறது. இந்த மலையடிவாரத்தில் மூன்று இடங்களில் இதுபோன்ற பீடங்கள் இருக்கின்றன. பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா என்ற விருமாண்டிப் பாடல் வரி நினைவிற்கு வந்தது. அழகர்கோயில் பெருமாள் வந்த இடம்தான் இந்த நரசிங்கம்பட்டி மலை என்கிறார்கள். அதனால்தான் இம்மலைக்கு பெருமாள்மலை என்று பெயர் வந்தது என ஒரு பெரியவர் சொன்னார். அலங்காநல்லூர் வயிற்றுமலைப் பகுதியிலும் இதுபோன்ற கதையைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கோவிலைச் சுற்றி ஏராளமான கூட்டம். குழந்தைவரம் கேட்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் கரும்புத் தொட்டில்களில் குழந்தைகளைப் போட்டு கோவிலை மூன்று சுற்று சுற்றிவருவதைக் காண முடிந்தது. விளக்குப் போடும் பெண்கள் ஒருபுறம். ஏராளமான திருவிழாக் கடைக்காரர்கள் ஒருபுறம். வண்டிகளில் வளையல், விளையாட்டுச் சாமான் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பீம்புஸ்டி அல்வாக்கடைக்காரர்களைப் பார்த்து பேசிவிட்டு அரைக்கிலோ அல்வா வாங்கினேன். (வீட்டிலும், மறுநாள் பணியிடத்திலும் கொடுத்து விழாவின் இனிப்பை பகிர்ந்தளித்தேன்)

மலையடிவாரத்தில் மொட்டையெடுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு பாட்டி குழந்தைக்கு மொட்டையெடுப்பதைப் பார்க்க முடிந்தது. பெரிய கோவில்களைப்போல அதற்கொரு சீட்டு, அவர்கள் சொல்வதுதான் ரேட்டு என்பது போல இல்லை. இங்கு மக்கள் எளிமையாக தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. மலையடிவாரத்தைச் சுற்றி மூன்று இடங்களில் மணற்குவியல்களில் மணலை அள்ளிப்போட்டு வேண்டிவந்தோம். மேலூர் பகுதியிலுள்ள பலகாரக்கடைக்காரர்கள் அதிகம் வந்திருந்தனர். பூந்தி, காரச்சேவு, அல்வா, மிக்சர் என பலவிதமான பலகாரங்களை குவித்து வைத்திருந்தனர். வேடிக்கைப் பார்த்தபடி வந்தோம்.

அடுத்து இந்தத் திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்து சாய்ந்தரம்வரை இருந்து மலையில் விளக்கேற்றுவதை பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என பேசியபடி கிளம்பினோம். நரசிங்கம்பட்டி ஊரிலுள்ள கடையில் சூடாகப் போட்டுக்கொண்டிருந்த பஜ்ஜியை வாங்கி பசியாறியதும் கிளம்பினோம். ஒருநாளின் முற்பகல் கொண்டாட்டமாகக் கழிந்தது.

படங்கள் – ரகுநாத்

பின்னூட்டங்கள்
  1. தமிழறம் சொல்கிறார்:

    சிறப்பான பதிவு ஆவணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s