அய்யா

Posted: திசெம்பர் 25, 2020 in பார்வைகள், பகிர்வுகள்

இறுக்கமான இந்தத் தருணத்தில் சகோதரர் தமிழ்ச்செல்வம் எழுதிய இந்தப் பதிவை இடுகிறேன்:

அசலான ஆய்வாளர்

கபசுரக் குடிநீரில் சேர்மானங்கள் என்னென்னவென்று பார்த்தால் சீந்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும். இந்த சீந்தில் கொடியைப் பற்றி தொ. பரமசிவனிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். படர்ந்திருக்கும் சீந்தில் கொடியை அறுத்து அந்தரத்தில் விட்டாலும் உலர்ந்துபோகாமல், காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சி உயிர்ப்புடன் இருக்கும் என்பதை ஓரிடத்தில் சொல்லியிருந்தார்.  ஆனால் அத்தகைய சஞ்சீவி மூலிகையான சீந்திலைப் பற்றி இன்று கூகிளை நம்பியிருக்கும் ஒருவர் ஆங்கிலம் வழி விக்கிப்பீடியாவில் படிக்கிறார் என்று கொள்வோம். முதல் பத்தியிலேயே என்ன இருக்கிறது? “பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், அந்த நோய்களை இது தீர்க்கிறது என்பதற்கான எந்தவித உயர்தர மருத்துவ ஆய்வுமுடிவுகளும் இல்லை”. அம்மட்டில் அவர் மகத்தான ஒரு மூலிகையைப் பற்றிய ஆர்வத்தை இழப்பார். அது ஒரு அமிர்தவல்லி, சஞ்சீவி மூலிகை என்பது ஒரு ‘தெறிப்பு’ அல்லவா? அதைச் சொல்லித்தர தொ. பரமசிவன் போன்ற சிலர்தானே நம்மிடம் உண்டு?

கோரோசனை பற்றியும் தொ. ப-வின் நூல் ஒன்றிலிருந்தே தெரிந்துகொண்டேன். சித்த மரபு, நாத மரபு பற்றியெல்லாம் தொ. பரமசிவன் தரும் குறிப்புகளால் ஆர்வம் தூண்டப்பட்டு இணையத்தில் தேடினால் உருப்படியாக எதுவும் சிக்காது. ஷ்ரௌதிகள், ஸ்மார்த்தர்கள், கிராமத்தார், கணபாடிகள், குருக்கள் என்ற வகைப்பாடுகளை எல்லாம் தொ. பரமசிவன் கோடி காண்பிப்பார். இணையத்தில் தேடப்புகுந்தால் அவரவர்க்கு வசதியான வகையில், அதுவும் ஆங்கிலத்தில் அரைகுறைத் தகவல்களே இருக்கும். ‘மடையன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது அவர் சொல்லியே தெரிந்தது. ‘பிரம்மாண்டங்கள்’, ‘ஆண்ட பரம்பரைகள்’ மீதான பிரமையை அகற்றியது அவரேயல்லவா?

தொ. பரமசிவன் விண்டு விண்டு எதையும் விளக்கி விரித்து எழுதுவதில்லை. அதனால்தான் சிலர் அவர் அடிக்குறிப்புகள் போடுவதில்லை, ஆதாரங்கள் காட்டுவதில்லை, அதனால் அவர் ஆய்வாளர் இல்லை என்று அடித்துப்பேசுகிறார்கள். அவரது கட்டுரைகளில் ஒரு மந்திரம் போல குறுகத் தரித்த வார்த்தைகளில் செறிவான தெறிப்புகளை அளிக்கிறார். அவை திறக்கும் அறிவுலகம் பெரிது. சான்றாக ‘பரமார்த்திகத்தில் நாத்திகமேயான அத்வைதம்’ என்ற ஒரு வரியைக் கொண்டு தேடப் புகுந்தால் ஒரு தத்துவ உலகம் திறக்கும். அவர் தருவது திறவுகோல் மட்டுமில்லை; ஞானத்தின் கனியைப் பிழிந்திட்ட சாறு.

இன்று பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வேடுகளைச் சமர்ப்பிக்க இருப்பவர்களிடம் ‘அழகர்கோயில்’ தரத்தில் வேண்டும் என்று கேட்டால் உடனடியாக ‘சைட்டோக்கைன் ஸ்டார்ம்’ ஏற்பட்டு அந்த இடத்திலேயே வீழ்ந்துபடுவார்கள்.

கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை உலக சுகாதார நிறுவன ஆலோசகர்களிடம் பெறலாம், தவறில்லை. ஆனால் வீடடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தல் போன்றவற்றை நமது ஊருக்குத் தகுந்த வகையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை நமது சொந்த சமூகத்தின் மூத்த அறிஞர்கள்தானே சொல்லித்தர முடியும்? கி.ராஜநாராயணன், ஆ. சிவசுப்பிரமணியன் போன்றோரது செவ்விகள்தானே நமக்குகந்த நடைமுறையைப் பேசின? தொ. பரமசிவனை நாம் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

தொ. பரமசிவன் அவர்களுடன் உரையாடுகிற, அவருடன் சேர்ந்து பணிசெய்கிற, அவரிடம் படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறு பெற்றவர்கள். இன்றும் டெங்கி மாரியம்மன் ஏன் கோயில்கொள்ளவில்லை, கொசு ஏன் வாகனமாகவில்லை என்று அவரிடமே கேட்கத் தோன்றுகிறது. சென்னையின் நெரிசலான சாலையொன்றின் மருங்கில் அமைந்த கடை வாசலில், மாலை நேரத்தில் தனது மரபான உடையணிந்த மார்வாரிப் பெண் ஒருவர் வாசல் தெளித்து, கோலப்பொடி கொண்டு கம்பிக்கோலம் போடுகிறார். அவர் நிகழ்த்தும் பண்பாட்டு அசைவை அய்யாவிடம் பகிர்ந்துகொள்ளும் அவா பிறக்கிறது.

அவருடன் உரையாட எவ்வளவோ இருந்தன. சாய்பாபா வழிபாடு பெருகிவருவதை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். பெரிதாக ‘ஓ’ வரைந்து அதன் சுழிப்பில் ‘ம்’ எழுதி அதன் குறுக்கே சாய்வாக வேல் வரைந்து எத்தனை முறை சிறு வயதில் சித்திரம் பழகியிருப்போம், இன்றெப்படி தேவநாகரி ‘ஓம்’ நீக்கமற நிறைந்தது. இது எங்கு போய் முடியும்? என்ற ஆதங்கத்தைப் பேசவேண்டும். சோனைச் சாமியை ஏன் ‘ஐயா, மலையாளம்’ என்று கும்பிடுகிறார்கள்? என்று கேட்க வேண்டும்.

இன்னும், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள சோழிப் பற்கள் கொண்ட அழகர் பற்றி; எதிர்காலத்துச் சீலைக்காரி அம்மன்கள் பற்றி; பிரதோஷ வழிபாடும், ஆயுஷ் ஹோமமும், கணபதி ஹோமமும் தமிழ்க் குடும்பங்களில் எவ்வாறு இவ்வளவு செல்வாக்கு பெற்றன என்பது பற்றி; அனுமார் வழிபாட்டின் செல்வழி பற்றி; கண்ணன், பலதேவன் பற்றி; காலநிலை, பொருளாதார மாற்றங்களில் ஆடிப்பெருக்கு போன்ற பண்டிகைகள் என்ன அர்த்தம் கொள்ளும் என்பது பற்றி; சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேத மருத்துவத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை பற்றி; பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் பற்றியெல்லாம் அவரிடம் உரையாடவேண்டும் என்றெல்லாம் ஆவல் கொண்டிருந்தோம்.

சூழல் எவ்வளவு வறண்டிருந்த போதும் வெள்ளெருக்கின் கனி முற்றித் தெறிக்கும். விதைகள் காற்றிலும், நீரிலும் மிதந்து பரவும். பால் பற்றி புதிய செடிகள் பூத்துக்குலுங்கும். அப்படித்தான் அவரைப் பற்றிச் சொல்லமுடிகிறது. கணப்பொழுதில் நிகழும் ஒரு தெறிப்பானது சிலவேளைகளில் வாழ்க்கை முழுதும் தேடிப்பெற்ற அனுபவத்துக்குச் சமமாக இருக்கும் என்பார்கள். அத்தகைய அசலான தெறிப்புகளைச் சொன்ன முன்னோடி ஆய்வாளர் தொ. பரமசிவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s