2020 வாசிப்பு சார்ந்த விசயங்களுக்கான ஆண்டாக அமைந்தது. வீட்டில் ஒரு அறையை வாசிப்பகமாக அமைத்து எனது மகள் மதுரா பெயரில் மதுரா வாசிப்பகம் அமைத்தேன். தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் வாசிப்பகத்தை திறந்துவைத்தார். பசுமைநடை நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிறைய புத்தகங்களைப் பரிசளித்தனர். வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த வேளையில் கொரோனா வந்தது. 2021இல் அப்பணிகளை மதுரா வாசிப்பகம் வாயிலாகத் தொடருவேன்.

வாசகசாலை கூட்டத்தில் சோ.தர்மனின் சூல் நாவல் குறித்து பேசினேன். சிங்கிஸ் ஐத்மதோவ் எழுதிய ஜமீலா, அன்னை வயல் நாவல்களை மீண்டும் வாசித்தேன். எஸ்.ரா.வின் அறிமுகத்தால் ஜமீலா நாவலை திரைப்படமாகவும் பார்த்தேன். சிங்கிஸ் ஐத்மதோவின் நாவல்கள் குறித்த கட்டுரையொன்றை எழுதிகொண்டிருக்கிறேன். குல்சாரியை மீண்டும் வாசிப்பதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

2020ல் வாசிக்க நிறைய நேரம் கிட்டியது, கொரோனா ஊரடங்கால். நிறைய பெரிய நாவல்களையும், நிறைய கட்டுரைத் தொகுப்புகளையும் வாசிக்க முடிந்தது. தொ.பரமசிவன் அய்யாவின் நூல்களைக் குறித்து “தொ.ப.வுடன் அழகர்கோயிலிலிருந்து பாளையங்கோட்டை வரை” என்ற தலைப்பில் ஒரு குறுநூல் எழுதுவதற்காக அய்யாவின் நூல்களை இந்த ஊரடங்கு காலத்தில் மீள்வாசிப்பு செய்தேன். அதை முடிக்க முடியாமல் போய்விட்டது. டிசம்பர் 24 அன்று தொ.பரமசிவன் அய்யா இயற்கையில் கலந்துவிட்டார். தாங்கமுடியாத பேரிழப்பாக இருக்கிறது. அவரைக் குறித்து சூழல் அறிவோம் முகநூல் குழுவில் “தொ.ப.வுடன் அழகர்கோயிலிலிருந்து பாளையங்கோட்டை வரை” 20 நிமிடங்கள் பேசினேன்.

வாசித்த நாவல்கள்
- சூல் – சோ.தர்மன்
- மணல்கடிகை – எம்.கோபாலகிருஷ்ணன்
- ஜமீலா – சிங்கிஸ் ஐத்மதோவ்
- அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மதோவ்
- அம்மா வந்தாள் – ஜானகிராமன்
- என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
- கள்ளம் – தஞ்சை ப்ரகாஷ்
- நான் ஷர்மி வைரம் – கேபிள் சங்கர்
- என் முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மதோவ்
- ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்
- ஆரோக்கிய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய்
வாசித்த சிறுகதைத்தொகுப்புகள்
- காஷ்மீரியன் – தேவராஜ் விட்டலன்
- பறவையின் வாசனை – கமலாதாஸ்
- ஒரு சிறு இசை – வண்ணதாசன்
- புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ரா
- இறுதிவார்த்தை – தாராசங்கர்
- காளி – பால்வான் ஹெஸ்லே
- ஆர்.எஸ்.எஸ் லவ் ஸ்டோரி – அசோக்
கட்டுரைத் தொகுப்புகள்
- கரிசல்காட்டு கடுதாசி – கி.ராஜநாராயணன்
- காலத்தின் வாசனை – தஞ்சாவூர் கவிராயர்
- மறக்கமுடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்
- தர்ஹாக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும் – ஆ.சிவசுப்பிரமணியன்
- எனக்கு இருட்டு பிடிக்கும் – ச.தமிழ்ச்செல்வன்
- சடங்கில் கரைந்த கலைகள் – அ.கா.பெருமாள்
- தமிழறிஞர்கள் – அ.கா.பெருமாள்
- எனக்குரிய இடம் எங்கே? – ச.மாடசாமி
- தெருவிளக்கும் மரத்தடியும் – ச.மாடசாமி
- பாலைநிலப்பயணம் – செல்வேந்திரன்
- காமம் செப்பாது – இராயகிரி சங்கர்
- தமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்
- வாழும் மூதாதையர்கள் – பகத்சிங்
- விமரிசனக்கலை – க.நா.சு
- மாயவலை – அ.முத்துக்கிருஷ்ணன்
- நாவல்கலை – சி.மோகன்
- நடைவழி நினைவுகள் – சி.மோகன்
- வாசிப்பது எப்படி – செல்வேந்திரன்
- இரண்டாம் சுற்று – ஆர்.பாலகிருஷ்ணன்
- குதிரையெடுப்பு – இரவிக்குமார்
- உணவுப்பண்பாடு – அ.கா.பெருமாள்
- கள ஆய்வில் சில அனுபவங்கள் – சரஸ்வதி, மு.ராமசாமி
- உதயசூரியன் – தி.ஜானகிராமன்
- ஈஸியா பேசலாம் இங்கிலீஸ் – சொக்கன்
- தென்னிந்திய கிராம தெய்வங்கள் – ஹென்றி ஒயிட்ஹெட்
- பிரயாண நினைவுகள் –ஏ.கே.செட்டியார்
- நம்மோடுதான் பேசுகிறார்கள் – சீனிவாசன் பாலகிருஷ்ணன்
மனம் – உடல்நலம் சார்ந்த கட்டுரைகள்
- அமைதி என்பது நாமே – திக் நியட் ஹான்
- எண்ணம் போல் வாழ்க்கை – ஜேம்ஸ் ஆலன்
- உடல், மன நோய்கள் நீக்கி நலம் தரும் மருந்துகள் – டாக்டர்.கே.ராமஸ்வாமி
- உன்னை நீயே சரிசெய்யும் உளவியல் நுட்பங்கள்
கவிதைகள்
- அரைக்கணத்தின் புத்தகம் – சமயவேல்
- மிதக்கும் யானை – ராஜா சந்திரசேகர்
நேர்காணல்கள்
- தமிழ்மொழிக்கு நாடில்லை – அ.முத்துலிங்கம்
ஆங்கில கட்டுரை
- How to Read – Selvendiren
தொகுப்பு நூல்
- தி.ஜா. சிறப்பிதழ் – கனலி வெளியீடு
எஸ்.ராமகிருஷ்ணன் வலைதளத்தில் வாசித்த தொடர்கள்
- குறுங்கதைகள்
- நூலக மனிதர்கள்
10,000 பக்கங்கள் வாசித்திருப்பேன் தோராயமாக. வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுமம் இதற்கு தூண்டுதலாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் தமிழினியின் பழைய இதழ்களை வாசித்தேன். அந்திமழையின் சிறுகதை சிறப்பிதழ் வாயிலாக நிறைய சிறுகதைகள் படித்தேன். மே மாதத்திலிருந்து தினசரி வாசிப்பைக் குறித்து தொடர்ந்து தனி நோட்டு போட்டு எழுதிவருவது உருப்படியான செயலாக இருக்கிறது. 2021ல் இதை இன்னும் முறைப்படுத்த வேண்டும். நண்பரிடமிருந்து அவர் பயன்படுத்திய கிண்டில் கருவியை வாசிப்பதற்காக பாதிவிலைக்கு வாங்கியுள்ளேன். ஸ்ருதி டி.வி.யில் நிறைய இலக்கியம் சார்ந்த காணொலிகள் பார்த்தேன். ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் தொடர் வாயிலாக சங்க இலக்கியம் மீதான காதல் ஏற்பட்டுள்ளது. 2021இல் தினம் ஒரு சங்கப்பாடல் பயில வேண்டும். அதேபோல ஆங்கிலத்தில் வாசிக்க பழக வேண்டும். 2021இல் ஆண்டிற்கு 50 பதிவுகளாவது வலைப்பூவில் எழுத வேண்டும். வாசித்த நூல்களைக் குறித்து யூடியுபில் அறிமுகம் செய்ய வேண்டுமென்ற சில இலக்குகளை நிர்ணயித்திருக்கிறேன். பிரபஞ்சத்தின் பேரருள் எப்போதும் உடனிருக்கும்.
அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக. நன்றி.
படங்கள் உதவி – ரகுநாத், ராஜன்னா, தீபக்