“படைப்பாளிகளுக்குள் ரகசிய ரேகையாக இருந்துகொண்டிருக்கும் அசுரப்புலவன் தொ.ப” – கோணங்கி

Posted: ஜனவரி 26, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

தொ.பரமசிவன் அய்யா மறைந்த செய்தி கேட்ட 24.12.2020 அந்த மாலையை மறக்கமுடியாது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் சென்னையிலிருந்து மதுரைவந்தார். அவருடன் பசுமைநடை நண்பர்களும் சேர்ந்து 25.12.2020 அன்று பாளையங்கோட்டை சென்றோம். தொ.ப.வின் இல்லத்திற்கு அவரிடம் கேட்க எந்தக் கேள்விகளும் இல்லாமல் சென்றோம். வீட்டின் முன்னறையில் மாலைகள் மலைபோல் குவிந்திருந்தன. மனித வாசிப்பை முன்னெடுத்த ஆசானுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு மாடியில் உள்ள அவரது நூலகத்திற்கு சென்றுவந்தோம். இறுதி அஞ்சலிக் கூட்டம் அவரது உடலை வாசலில் கொண்டுவந்த சமயத்தில் தொடங்கியது. கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர்கள் சுந்தர்காளி, அ.முத்துக்கிருஷ்ணன், பாமரன் எனப் பலரும் அவரைக் குறித்துப் பேசினர். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அய்யாவின் நினைவுகளை எடுத்துரைத்தனர். எழுத்தாளர் கோணங்கி அப்போது பேசியது என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த உரை:

தமிழினுடைய கடைக்கோடி நெருப்பு இதுதான். முன்னைப் பழந்தீவுகளுடைய மூழ்கிய அத்தனை பிரதிகளுடைய உதிர்ந்த துகள்களை எல்லாம் ஒரு கல்லா நூலாக அவர் வைத்திருந்தார். உங்களுக்கெல்லாம் தெரியும், அவரிடம் இருந்தது ஒரு எழுதா நூல். அது முழுவதுமே சிதறல் சிதறலாகத்தான், அப்போதைக்கப்போது ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் தெறிப்புகளாகத்தான் அவரிடமிருந்து வரும்.

எனக்கும் அவருக்கும் 37 ஆண்டு கால உறவு உண்டு. மதுரையில் அவர் அறையில் பல நாட்கள் தங்கியிருந்திருக்கிறோம். சுந்தர்காளி, வீ.எம்.எஸ், பாபு, லோகு என்று பலரையும் இணைக்கிற இடமாக அது இருந்திருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரியில் அவர் துறைத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் உலகச் சிறுகதைகள் இதழை முடித்து முதல் பிரதியை அவரிடம்தான் கொடுத்தேன்.

ஒவ்வொரு நாவலையும் நான் எழுதுகிறபோது அவரிடம் செல்லும்போதெல்லாம் நாவலின் அத்தியாயங்கள் புதிய வேகத்தில் வேறொரு பரிமாணத்தில் தொடரக்கூடியதாக இருந்திருக்கிறது.

பாழி நாவல் எழுதுகிறபோது, மதுரையிலுள்ள சமணத்தைப் பற்றி நாவல் எழுதுகிறபோது ஈரேழ் சமணக்குன்றுகளுக்கும் அவர் ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு குறியீடுகளையும் அங்கு சமணத் தொன்மங்களுடைய விளக்கத்தையும் அவர் அளித்திருக்கிறார்.

நான் நாவலை எழுதுகிறபோது ஒருமுறை அவர் அறைக்கு அழைத்துச் சென்று, இரண்டு சாக்பீஸ்களை எடுத்துவந்து அதனுள் மதுரையினுடைய தொன்மங்கள், கோட்டை அமைப்புகள், யார்யார் எந்தெந்த இடத்தில் இருந்தார்கள் என்ற 2000 வருட அந்த அகராதிச்சுருளை, நிகண்டை எனக்கு விளக்கமளித்து காண்பித்ததன் வழியாக, நாவல் அடுத்த கட்டத்தை அடைந்தது.

ஒவ்வொருமுறை தொ.ப.வைச் சந்திக்கிறபொழுதும் இசைபடுத்து என உரையாடல் உருவாகியிருக்கிறது. “விசும்பு கைபடு நரம்பு” என்று சொல்லித் தந்ததும், சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையை எனக்கு அவர் விளக்கிக் காண்பித்த விதமும் சரி; இங்கிருந்த பெருமாள் கோயிலுள்ள சிறுசிறு சிற்பங்கள், சிற்றறைச் சிற்பங்கள் குறித்தும் அவருக்கிருந்த அறிவும் சரி; ஒரு பல்துறை அறிவாக, ஒரு archaic mind (தொல்மனம்) தொ.ப.விடம் இருந்தது.

நான் மதுரையில் பழைய புத்தகக்கடையில் குனிந்து ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, தொ.ப. அங்கிருந்து நிமிர்ந்தபடி வேறொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டிருப்பார். இதே திருநெல்வேலியில் உள்ள பழைய புத்தகக்கடைக்குப் போகும்போதெல்லாம் தொ.ப. ஒவ்வொரு முறையும் அங்கே இருந்துகொண்டிருப்பார். பழைய புத்தகக்கடைக்காரர்கள் எல்லோரையுமே அவர் அறிந்திருப்பார். எல்லாவகையான விநோத விசித்திர, பெரிய எழுத்து சம்பந்தமான நூல்களையெல்லாம் காண்பித்து என்னை வாங்க வைத்தார்.

இவ்வாறு படைப்பாளிகளுக்கும் தொ. ப-வுக்கும் இடையிலான அபூர்வமான அந்த interior landscape (அகவெளி) எழுதப்படாத ஒன்று. யார்யாருடைய புத்தகங்களுக்குள்ளேயோ அவர் நுழைந்திருக்கிறார். ஒரு துணைப்பிரதியாக, ஊடிழைப் பிரதியாக தொ.ப. ஒவ்வொரு படைப்பாளியினுள்ளும் ரகசிய ரேகையாக இருந்துகொண்டே இருப்பார்.

அவர் பேராசிரியராக வேலை பார்த்தது எனக்குப் பெரிதில்லை. பேராசிரியர், பேராசிரியர் என்று எங்கு பார்த்தாலும் ஒரே பேராசிரியர்களாக இருக்கிறார்கள். அது பெரிய விஷயமில்லை. அசுரர்களும் புலவர்களாக இருந்த தமிழின் கடைச்சங்கத்தின்,  அந்த அகாடமியின் அசுரப்புலவன் தொ.ப. அவருக்குள் தான்தோன்றியாக இருக்கிற படைப்பாளியின் ஒரு பெரிய வெளி இருக்கிறது. தமிழ் மொழியை வெவ்வேறு வகைகளில் தனக்குள் அவர் வைத்திருந்தார். அவருக்குள் மூழ்கி அடிக்கடலில் சமவெளியில் திரிந்து கொண்டிருந்த தொ.ப.வை நான் மணல்பிரதியாக எடுத்துப்பார்த்தேன். கிரிப்டோநூலகம் அது.

ஆய்வு, பி.எச்.டி நூல் அல்ல அவர். கல்வி என்பதல்ல அவர். அவர் அ-கல்வி. அகல்வி என்பது ஒரு கலைஞனுக்குள் உள்ளது, மாடு மேய்ப்பவனிடம் உள்ளது, ஒரு விவசாயியிடம் உள்ளது. தானியத்திடம் உள்ளது, ஒரு செடியிடம் உள்ளது. ஒரு பேசாத மீனனின் வார்த்தைகள்.

ஒரு கையில்லா மீனன், காலில்லா மீனனாக இங்கு கால் மாற்றிப்படுத்திருக்கிறான். இவனுக்கான மொழி உடல் எப்பொழுதும் எல்லோரிடமும் பரவிக்கொண்டுதான் இருக்கும் என்று கூறி அவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையைச் செலுத்தி, தமிழினுடைய சித்திர கபாலத்தையும், சொற்கபாலத்தையும் அவரிடமிருந்து நான் எடுத்துச் செல்கிறேன்.

“நாட்டார் தெய்வங்களின் வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்தக் கரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடைய ஸ்பிரிட்சுவல் எஸ்சன்ஸ் அடங்கி இருப்பதாக நம்பிக்கை” என தொ.ப.வை சந்தித்து உரையாடிய கணத்தில் சொன்னார். அதுபோல அவரது இறுதிச்சடங்கில் சிந்திய கண்ணீரில் என்னோடு தொ.ப.வையும் அழைத்துவந்தேன்.

(படங்கள்: அ. முத்துக்கிருஷ்ணன், ரகுநாத் & முகநூல்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s