சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு

Posted: மார்ச் 4, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

மார்ச் 1, அன்று மாதநாட்காட்டியைத் திருப்பும்போது இம்மாத அரசு விடுமுறை எதாவது இருக்கான்னு பார்த்தேன். அப்போது, இஸ்லாமிய பண்டிகையில் சிக்கந்தர் பாதுஷா உருஸ் என்று போட்டிருந்தது. சிக்கந்தர்பாதுஷா நம்ம திருப்பரங்குன்றத்துக்காரர்தான. உடனே, தம்பிக்கு போன்பண்ணி விழாவை உறுதிபடுத்திட்டேன். திருப்பரங்குன்ற மலையின் மீதுள்ள சிக்கந்தர் சையது சுல்தான் பாதுஷாவின் தர்காவில் சந்தனக்கூடு பார்க்கனும்னு ரொம்பதடவை முயற்சி செஞ்சுட்டுருந்தேன். ஒண்ணாந்தேதி பலசரக்கு வாங்க வேண்டிய பட்டியல் வேறு கையிலிருந்தது. வேலை முடிந்ததும் பலசரக்கு வாங்கிட்டு வீட்டுக்குப் போய் குளித்துக் கிளம்பினேன்.

சந்தனக்கூடு பார்க்க நண்பர் ஹக்கீமை அழைத்தேன். இருவரும் திருப்பரங்குன்றம் நோக்கிச் செல்லும்போதே மலையில் மின்விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. அருகில் செல்லச்செல்ல மலையேறும் பாதைகளில் விளக்கு கட்டியிருந்தது தெரிந்தது. மூலக்கரைகிட்ட வரும் பாலம் ஏற மறந்துட்டேன். அப்படியே திருமங்கலம் ரோட்டில் போய் ரயில்வே கேட்கிட்ட வரும் பாலத்தில் ஏறி இறங்கிட்டோம். ரெண்டு பாலம் கட்டி, திருப்பரங்குன்றம் ஒரு தீவு மாதிரியாகிப்போச்சு.

திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்லும் ரதவீதியில்தான் தர்காவிற்கு மலைக்குச் செல்லும் பாதையும் இருக்கு. மலையடிவாரத்திலுள்ள பள்ளிவாசல்கிட்ட ஜெகஜோதியா தெரிஞ்சுச்சு. மக்கள் கூட்டம். வெளியூரிலிருந்தெல்லாம் சந்தனக்கூடு பார்க்க வந்துருக்காங்க. இன்னிசைக் கச்சேரிக்கான ஏற்பாடுகள் மேடையில் நடந்துகிட்டுருக்க,  தொலைவில் வண்ணவண்ண சின்ன விளக்குகளில் சந்தனக்கூடு அழகா ஒளிர்ந்து கொண்டிருந்தது.

பள்ளிவாசல்ல போய் சந்தனக்கூடு புறப்படும் நேரம், மலைக்கு சந்தனக்குடம் தூக்கிட்டுப் போறதைப் பற்றி விசாரித்தேன். அடுத்து ஒருமுறை வந்து திருவிழாக்களின் தலைநகரம் நூலுக்கு கட்டுரை எழுதனும்ல அதுக்குத்தான். இஸ்லாமிய நாட்காட்டியில் ரஜப் மாதத்தில் பதினாறாம் நாள் பிறையன்று சந்தனக்கூடு விழா நடக்கிறது. அடுத்தாண்டு வந்து பதிவு செய்யனும். இன்று கொஞ்சநேரம் சுற்றிவிட்டு வீட்டுக்குப் புறப்படலாம் என்று திட்டம். வீதிகளில் கொஞ்சநேரம் அலைந்துவிட்டு ஒரு புரோட்டாகடையில்  ரெண்டு புரோட்டாவை வாங்கிப்பிச்சுப்போட்டு சால்னாவை கொளப்பி அடிச்சுட்டு நடந்தோம். மலையேறும் வழியில் ஆரஞ்சு குடினி கொடுத்துட்டு இருந்தாங்க. வாங்கிக் குடிச்சுட்டு மலை ஏறத்தொடங்கினோம். வழிநெடுக மக்கள். மலைக்கு ஏறும் படிக்கட்டுகளில் குடும்பம், குடும்பமாக வந்து உட்கார்ந்திருக்காங்க. கொஞ்சப்பேர் மலையேறிக்கிட்டிருந்தாங்க.

பசுமைநடையாக காலைல வெள்ளென பலமுறை மலைல ஏறிருக்கோம். இம்முறை இராத்திரி கொஞ்சநேரம் மலையில் மொதமொதயா ஏறுறோம். படிக்கட்டு இருக்கும் வரை ஏறிட்டு அங்கிருந்து விளக்கொளியில் ஒளிரும் ஊரை வேடிக்கை பார்த்துட்டு, அப்படியே கீழே இறங்கத் தொடங்கினோம். படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த ஆண்களும், பெண்களும் கையில் குரான் புத்தகத்தை வைத்து படிச்சுட்டு இருந்தாங்க. உருது எழுத்துக்களில் அந்தக் பக்கங்கள் தெரிஞ்சுச்சு. வியானன்று ஜூம்மா தொழுகைக்குமுன் வாசிக்கும் பகுதியென உடன்வந்த நண்பர் சொன்னாரு.

எஸ்.அர்ஷியா எழுதுன அப்பாஸ்பாய் தோப்பு நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவிற்கு சிக்கந்தர் சுல்தான் அவுலியா மீது ரொம்ப நம்பிக்கை. அந்தக்கதையில் மலையில் வந்து தங்குபவர்களைப் பற்றி எழுதியிருக்காரு. அவரோட இயற்பெயரே சையது உசேன் பாஷாதான். மகள் அர்ஷியா பெயரில் நூல்கள் எழுதினார். பசுமைநடை பயணத்துல எஸ்.அர்ஷியா இந்த சையது சுல்தான் குறித்த வரலாறை விரிவா சொல்லிருக்கார். இப்ப நினைக்கும்போது மனசு கணத்துக் கிடக்கு. தம் எழுத்துக்களில் கறாமத்துக்களை நிகழ்தியவர் இப்போது இல்லை.

நானும், நண்பரும் பேசிட்டே மலையடிவாரம் வந்துட்டோம். கூட்டம் அதிகமாகிக்கிட்டேருக்கு. சந்தனக்கூடு இரவில் கூடுதல் அழகாய் தெரிஞ்சுச்சு. சமீபத்தில் பழுத்து நிற்கும் வாதாம் மரம் எனக்கு சந்தனக்கூடுபோல தெரிந்ததை ஒரு நோட்டில் எழுதிவைத்திருந்த ஞாபகம் வந்துச்சு. இரவு இரண்டு மணிக்கு மேல வீதிவலம் வந்து மலைக்குச் செல்லும் பாதையில் சந்தனக்கூடு நிற்க அதிகாலை விடியும்வேளையில் சந்தனக்குடம் தர்காவிற்குச் செல்லுமாம். இரவில் ஒளிரும் நிலவைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குப் போய்ட்டேன். அடுத்த திருழால பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவு – திருப்பரங்குன்றமும் சிக்கந்தர் தர்காவும்

தர்கா பட உபயம் – அருண்

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s