சம்பளம் வாங்கியதும் பலசரக்கு, பெட்ரோல், தினசரிச் செலவு எனப் பிரித்துவைத்தபின் எதிர்பாராத செலவுகள் வரும்பொழுது நம் மனதில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் யாரிடம் கடன் கேட்கலாம் என்பதுதான். கடன் வாங்காமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமீபத்தில் ஒருவர் பேசியபோது அவரோடு முரண்பட்டு ரொம்பநேரம் வாதிட்டுக் கொண்டிருந்தேன். மார்க்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வந்தபோது மன்னன் ஒருவனே கடன்வாங்கி கடன் கொடுத்தவனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை அவரது குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. கடன் குறித்த வரலாற்றை எழுதாமல் தொலைந்துபோன சேமிப்புப் பழக்கம் பற்றி எழுதவே நினைக்கிறேன்.
இளம்பிராயத்தில் முதலாம் வகுப்பு படிக்கும்போது உண்டியலில் கிடைக்கின்ற சில்லரைக்காசுகளை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அஞ்சு காசு, பத்து காசு, காலணா, எட்டனா வரை கிடைக்கும். அவற்றை உண்டியலில் போட்டு வைப்பேன். பிறகு, அதில் வீட்டிற்கு ஒரு கடிகாரம் வாங்கிய நினைவு இருக்கிறது. அதன்பின் நான்காம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் சஞ்சாயிக்கா சேமிப்புத்திட்டம் அறிமுகமானது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்தியா முழுக்க உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
தினந்தோறும் கிடைக்கும் தொகையை சஞ்சாயிக்கா பணம் வசூலிக்கும் பொறுப்பாசிரியரிடம் தினசரி கொடுத்து நோட்டுப்புத்தகத்தில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். சஞ்சாயிக்காவில் சேமிப்பதற்காகவே சில சமயம் வீட்டில் நச்சரித்து காசு வாங்கிக் கொண்டுபோய் சேமித்தது உண்டு. வருட இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அந்தப் பணத்தை மொத்தமாக கொடுப்பார்கள். இதன்மூலம் நமக்கு அச்சமய செலவிற்கு ஒரு தொகை கிடைக்கும். அதன்மூலம் நோட்டு, புத்தகம் எதாவது வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் இப்பொழுது பள்ளிகளில் இல்லை. சேமிக்கும் பழக்கமும் பெற்றோர்களிடம் அருகி வருகிறது.
முன்பு பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து செலவுக்குப் பெறும் தொகையில் ஒரு பகுதியை மிச்சம் பிடித்து சேமித்துவைப்பர். இதை சிறுவாட்டுப்பணம் எனக் கொச்சையாக சொல்வர். இருந்தாலும் இந்தத் தொகையை அந்தப் பெண்கள் பின்னாளில் குடும்பத்திற்குத்தானே செலவு செய்திருக்கிறார்கள். என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பரின் மனைவி 50,000 ரூபாய்கிட்ட சேமித்து வைத்திருந்தார். பணமதிப்பு நீக்கத்தின் போது அவரது கணவரிடம் அந்தத்தொகையைத் தர இவர் ஒரு பெருங்கடனை அடைத்தார்.
அதேபோல நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் சீட்டு அட்டை கடைகளில் பிடிப்பார்கள். அந்த அட்டையில் நூறு கட்டங்கள் இருக்கும். நாம் ஒரு கட்டத்திற்கு 10 காசு, 25 காசு, 50 காசு என சேமிக்கலாம். இதில் நூறுகட்டங்கள் நிரம்பியதும் அவர்கள் 10 விழுக்காடு பிடித்துக் கொண்டு நம்மிடம் சேர்த்துவைத்த பணத்தைக் கொடுப்பார்கள். தினசரி கடைக்குப் போய் வரும்போது வீட்டில் வாங்கும் காசை கடையில் இப்படி சீட்டு அட்டையில் கட்டுவது அப்போது வழக்கம். 50 ரூபாய் கட்டினால் 45 ரூபாய் தருவார்கள். கடைக்குப் போனால் கிடைக்கும் காசு, வாங்கித்திங்க கொடுக்கும் காசு, தாத்தா-பாட்டியிடம் அடம்பிடித்து வாங்கும் காசு, உறவினர்கள் வந்துபோகும் போது கொடுக்கும் காசை சேமித்து வைக்கும் வழக்கம் இருந்தது. இப்போது நினைத்துப்பார்த்தால் மாதம் நூறு ரூபாய் சேமிப்பது மலைப்பாய் இருக்கிறது.
மதுரை புனித பிரிட்டோ பள்ளியில் படிக்கும்போது அங்கு சில்வர் ஸ்டெப் என்றொரு திட்டம் இருந்தது. இந்தத் திட்டம் கல்வித்தொகை கட்ட முடியாத மாணவர்களுக்கு உதவும் அருமையான திட்டம். ஒவ்வொரு வகுப்பிலும் சில்வர்ஸ்டெப்க்காக மாதம் 2ரூபாய் கட்ட வேண்டும். அதுபோக மாதம் ஒருநாள் தொடக்கத்தில் சில்வர் ஸ்டெப்காக ஒவ்வொரு வகுப்பாக பணம் வசூலித்து வருவார்கள். முதல்நாளே அறிவிப்பு செய்துவிடுவார்கள். அதனால், அன்று வாங்கித்திங்க வைத்திருக்கும் தொகையை அந்த சில்வர்ஸ்டெப் பெட்டியில் போட்டுவிடுவோம். இந்த சிறிய தொகை வழியாக ஒரு வகுப்பு மாணவர்களால் ஒரு வருடத்தில் குறைந்தது நான்கு மாணவர்களின் பள்ளிக்கட்டணத்தை கட்டமுடியும். சமூகசேவை செய்வதற்கு பெரிய திட்டமிடல்கள் எல்லாம் வேண்டாம். இதுபோல சிறிய செயல்கள் போதும்.
சேமிப்புப் பழக்கம் நம்மிடம் இல்லாமல் போகும்போது நமது குழந்தைகளிடமும் இல்லாமல் போகிறது. அவர்கள் வாயிலாக சேமிக்க எதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்க ஒவ்வோராண்டும் சேமிக்க வேண்டும் என்று நினைப்பேன். கடைசியில் அச்சமயம் கடன்வாங்கி கொஞ்சப் புத்தகங்கள் வாங்குவதோடு சரி. மேலும், மதுரையில் புத்தகத்திருவிழா ஆவணியில் நடக்கும். பெருமுகூர்த்தங்கள் நடக்கும் அம்மாதம் வரும் திருமணப் பத்திரிக்கைகளை பார்த்தாலே புத்தகம் வாங்கி வாசிக்க முடியாமல் போய்விடும். சேமித்து வைத்து வாங்கும் பழக்கம் போய், கடன் வாங்கி (அந்தச்சொல்லையே கொஞ்சம் மதிப்பாக லோன் வாங்கி) பிறகு அதைக் கட்டும் வழக்கத்திற்கு நம்மைக் கொண்டு வந்துவிட்டார்கள். லோன் மேளா, வீட்டுக்கடன் திருவிழா என்று நல்ல வார்த்தைகளைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். “பெரிய அளவில் சேமிப்பு இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து கடன் வாங்காமல் இருக்க வேண்டும்” என 2021ன் தொடக்கத்திலிருந்து நினைக்கிறேன். திருவள்ளுவர் சொன்னது போல ‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலல்’ என்ற குறள் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தால் நன்றாகயிருக்கும்.
ஒரு பதிவுக்காக வாரக்கணக்கில் காத்திருப்பதா… வேகமாகவும் அதிகமாகவும் பதிவு இடுங்களேன்..