நர்மதை நதிவலம்

Posted: மே 2, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

தென்னிந்தியாவில் மலையைச் சுற்றி கிரிவலம் வருவது போல, வட இந்தியாவில் நதியை வலம் வரும் வழக்கம் இருக்கிறது. அதிலும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள நர்மதை நதியை வலம் வருவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். காசி, ராமேஸ்வரம் செல்வதுபோல இந்த புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர். அப்படி நர்மதை நதியை நடந்தே வலம்வந்த தமிழரான கே.கே.வெங்கட்ராமனைப் பற்றிய அறிமுகமும், அவர் எழுதிய நர்மதை நதிவலம் என்ற புத்தகமும் சகோதரர் வாயிலாக கிட்டியது. இந்தப் பயணக்கட்டுரையை வாசித்தபோது அவரோடு நாமும் நடந்த அனுபவம் கிட்டுகிறது. மேலும், அவரைப் போல யாத்திரை செல்ல வேண்டுமென்ற எண்ணமும் எழுகிறது. ஆங்கிலத்தில் கே.கே.வெங்கட்ராமன் எழுதிய இந்நூலைத் தமிழில் வரதராஜன் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். ஶ்ரீராமகிருஷ்ண மடம் இந்நூலை பதிப்பித்துள்ளது.

இந்தப் பதிவின் வழியாக நர்மதை நதி குறித்தும், நடந்தே நதிவலம் வந்த வெங்கட்ராமன் அவர்களின் அனுபவத்தையும் காணலாம். நர்மதை மத்திய பிரதேசத்தில் அமர்கண்ட் மாநிலத்தில் உருவாகி, குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலில் கலக்கிறது. கிட்டத்தட்ட 1300 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்நதியின் தென்கரையிலிருந்து வடகரை வழியாக நதி தொடங்கும் இடம் வரையிலான தொலைவு 2,600 கிலோ மீட்டர்கள். இதை 3 வருடங்கள், 3 மாதங்கள், 13 நாட்கள் என்று நியமமாகச் செல்கிறார்கள். மார்க்கண்டேய முனிவர் இந்த நர்மதை நதிவலத்தை தொடங்கிவைத்தார் என்பது புராணக்கதை.

கே.கே.வெங்கட்ராமன் என்பவர் இராமகிருஷ்ண மடம் வட இந்தியாவில் நடத்தும் பள்ளியில் பணியாற்றியிருக்கிறார். இவர் முன்னாள் இராணுவ வீரரும்கூட. இவரது மனதில் நர்மதை நதிவலம் செல்ல வேண்டும் என்ற உணர்வு எழ மடத்திலுள்ள மூத்த துறவிகளின் ஆலோசனையுடன் அதை நிறைவேற்றியிருக்கிறார். இந்தப் பயணத்தை நியமமாக 3 ஆண்டுகள் செல்லாமல் 130 நாட்களில் முடித்திருக்கிறார். இந்தப் பயணத்தை 1987ல் செய்திருக்கிறார். விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இதை 2013இல் எழுதியிருக்கிறார். இந்தப் பயணக்குறிப்பை பல வருடங்கழித்தும் சிறப்பாக எழுத அவருக்கு உதவியது அவர் பயணத்தின் போது எழுதிவைத்த குறிப்புகள். ஒவ்வொரு நாள் இரவும் அன்று கடந்து வந்த ஊர்கள், அன்னமிட்டவர்களின் முகவரிகள் இவற்றை குறித்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். பயணம் முடிந்தபிறகு அவர்களுக்கு எழுதிய கடிதங்களுக்கு, மறுமொழியாக வந்த கடிதங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறார்.

பயணத்தின்போது அவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை முன்னர் இப்பயணத்தை முடித்த பரிக்கிரமாவாசிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். யாரிடமும் காசும் வாங்கக்கூடாது. உணவை யாசகமாகப் பெற்று உண்ண வேண்டும்.  பணம் வைத்துக்கொள்ளாமல் 2600 கிலோ மீட்டரை கடப்பதென்பது எவ்வளவு கடினமான காரியம். மனதில் உறுதியோடு கிளம்புகிறார்.

பயணத்தில் அவருக்குகிட்டிய அனுபவங்களில் பல சுவாரசியமான அனுபவங்கள் நமக்கும் கிட்டுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 15லிருந்து 20 கிலோ மீட்டர் வரை நடக்கிறார். காலை 7 மணியிலிருந்து இரவு வரை நடக்கிறார். இரவு நடப்பதில்லை. அதேபோல ஒரே ஊரில் மறுநாள் தங்குவதில்லை. குழுவாகச் செல்லாமல் தனியாக இந்த யாத்திரையை முடிக்கிறார். மஹாராஷ்டிரப் பகுதியில் வரும் காட்டுப்பகுதியை மட்டும் ஒரு குழுவோடு கடக்கிறார்.

காட்டுப்பாதையில் செல்லும்போது வழியில் தன்னிடம் உள்ள ரொட்டியை இவருக்கு தந்த ஆதிவாசி இளைஞன், ஏழ்மையான தம்பதியர் அளித்த உணவும் அடைக்கலமும், இஸ்லாமிய வணிகர்கள் யாத்திரை செய்யும் இவருக்காக செய்த சைவ உணவு, மறுநாளுக்கான உணவுப்பொருள் மட்டுமே உள்ள சூழலில் அதை சமைத்து தந்த மனிதர்களின் அன்பை நினைத்து நெகிழ்கிறார். பயணிக்கும்போது எதிர்ப்படும் மனிதர்கள் மீதான நம்பிக்கையை விதைக்கிறது இந்த நர்மதை நதிவலம் நூல்.

நர்மதையின் அகலம் 500 மீட்டர் தூரம். நதியின் இருகரைகளுக்கும் இடையே படகுப் போக்குவரத்து உள்ளது. வடகரையில் இவர் பயணிக்கும்பொழுது தென்கரையில் உள்ள மக்களுக்குச் சொல்லி அனுப்பினால் உணவுடன் வந்து இவருடன் பயண அனுபவங்களை பேசிச் செல்வார்கள். அதேபோல, இவரும் ஒருவருக்கு நோய் தீர்க்க மண் ஒன்றை தென்கரைப் பகுதியில் உள்ளவர்க்கு கொண்டு சேர்க்க அவர் ஆச்சர்யமடைகிறார். அதேபோல, ஆசிரியர் ஒருவரை சந்தித்ததன் வாயிலாக வழியில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. தனியாகச் செல்கையில் திருமாலின் ஆயிரம் திருநாமங்களை (விஷ்ணு சகஸ்ரநாமம்) சொல்லியபடி நடக்கிறார். தத்துவப் பாடல்களைப் பாடியபடி சென்றதைப் படித்தபோது, சிவாஜிகணேசன் ஆறுமனமே ஆறு என்று பாடியபடி செல்லும் பாடலும், பயணமும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

நாய் ஒன்று ஓரிடத்தில் வழிகாட்டுவதாக அமைவதும், தனக்காக அதிக உணவை சேர்த்துக்கொள்ள நினைக்கையில் நாய் இரண்டு ரொட்டிகளை பறித்துக் கொண்டுபோன போதும் அதை தனக்கான பாடமாக எடுத்துக் கொள்கிறார். வழியில் பழங்குடிப் பகுதியில் கள்வர் பயம் இருந்த பகுதியிலும் இவரை அவர்கள் தொந்தரவு செய்யவில்லை. தனக்கு கிடைத்த போர்வையை மற்றொரு ஏழைக்கு கொடுத்துவிடுகிறார். குறைந்த பொருட்களுடன் பயணிப்பதன் மகிழ்ச்சியை உணர்கிறார். பயணத்தில் தமிழைப் பேசுபவர்கள் ஓரிருவரை பார்க்கையில் அதிகமகிழ்ச்சியடைகிறார்.

வழியில் உள்ள ஊர்களின் பெயர்களை மாவட்ட வாரியாக, தேதி வாரியாக தொகுத்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பழனி பாதயாத்திரையின்போது நான் இருமுறை எழுதிவைத்த நாட்குறிப்புகள் நினைவுக்கு வந்தது. வழியில் உள்ள ஊர்கள். அதைக் கடந்த நேரம், வழியில் கடைகளில் உண்டான செலவு எல்லாவற்றையும் குறித்து வைத்திருந்தேன். இந்நூலைக் கொடுத்தபோது சகோதரர் வைகை நதியின் கரையோரங்களில் இதுபோன்ற ஒரு நடையை முயற்சிக்கலாம் என்றார். வைகை தென்கரையில் தொடங்கி திருப்புவனம் வரை சென்று சிம்மக்கல் சொக்கநாதர் கோயிலில் முடிப்பதுபோல ஒரு சிறுயாத்திரையை இந்த இளவேனில் காலத்தில் தொடங்க வேண்டும். அதன்பின் வைகையாற்றை ஒருமுறை இருசக்கர வாகனத்திலாவது மூலவைகையில் இருந்து கடலில் கலக்கும் இடம்வரை பயணிக்க வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள் உதவி – ஆடல்வல்லான் வலைப்பதிவு + கூகுள்

பின்னூட்டங்கள்
  1. Kandasamy சொல்கிறார்:

    🚶🚶🚶🚶👍

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s