
எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சி.மோகன். நாவல் கலை என்ற புத்தகத்தின் வாயிலாக 2020 ஆகஸ்டில் சி.மோகனின் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் சகோதரர் தமிழ்ச்செல்வம் சி.மோகனின் எல்லா நூல்களும் முக்கியமானவை என்றதோடு, அதிலும் குறிப்பாக ‘காலம் கலை கலைஞன்’ என்ற நூலை மிக முக்கியமாகச் சொன்னார். அதைத்தொடர்ந்து இருமாதங்களுக்கு ஒரு நூலாக கிண்டில் செயலி வழியாக நடைவழிநினைவுகள், நடைவழிக்குறிப்புகள் வாங்கி வாசித்தேன். ஓநாய்குலச்சின்னம் என்ற மொழிபெயர்ப்பு நாவலையும் வாசித்தேன்.
2021ல் கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சி.மோகன் தனது நூல்களை இருநாட்களுக்கு ஒன்றாக இலவசமாக கிண்டிலில் தருவதாக அறிவித்தார். தம் படைப்புகளை வாசிக்க இலவசமாக வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அவ்வாறு கிடைக்கும் அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நீராட இருக்கிறது நதி என்ற நூலில் ஒரு கட்டுரையை வாசித்தபோது பத்மினியின் பிறந்தநாளும் அவரது பிறந்தநாளும் ஜூன் 12 என்று அறிந்தேன். அவரது பிறந்தநாளில் அவரைக் குறித்தும், அவரது படைப்புகள் குறித்துமான எனது வாசிப்பனுபவப் பகிர்வுதான் இது.

சி.மோகன் மதுரையில் 1952, ஜூன் 12ஆம் தேதி பிறந்தவர். வேறுஊர்களில் இளமைக்கால வாழ்க்கை அமைந்தாலும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தோடு 1967ல் மதுரைக்கு வருகிறார்கள். 1967ல் இருந்து 1983ல் வரை மதுரையில் வாழ்ந்திருக்கிறார். மதுரையில் படிக்கும்போது எழுத்தாளர் ஜி.நாகராஜனிடம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. பின் ஜி.நாகராஜனின் இறுதிக்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி தத்தநேரியில் தகனம் செய்யும் வரை உடன் இருந்திருக்கிறார். அந்த நினைவுகளை ‘ஓடிய கால்கள்’ என்ற சிறுகதையாகவும் எழுதியிருக்கிறார். ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும் என்ற நூலின் வாயிலாக அவரது ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார். பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது நாகர்கோவிலுக்கு அடிக்கடி சென்று ஜி.நாகராஜன் எழுத்துக்களைத் தொகுக்கும் பணியைச் செய்திருக்கிறார். சாகித்ய அகாடமி வெளியிட்ட இலக்கியச் சிற்பிகள் என்ற தொகுப்பில் ஜி.நாகராஜன் பற்றி எழுதியிருக்கிறார்.

மதுரையில் வாழ்ந்த ப.சிங்காரம் அவர்களை சந்தித்திருக்கிறார். புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் நாவல்கள் குறித்த சி.மோகனது கட்டுரை வாயிலாக அந்த நூலின் மீதான வெளிச்சம் பரவியது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படிக்கும் நாட்களில் சிறுபத்திரிகை செயல்பாடுகளில் தீவிரமாக இருந்திருக்கிறார். விழிகள், வைகை போன்ற சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார்.
1975 ஜனவரி 31ஆம் தேதி சுந்தரராமசாமியை மதுரை ரயில்நிலையத்தில் சந்தித்திருக்கிறார். சுந்தரராமசாமி நடத்திய காகங்கள் முதல்கூட்டத்தொடரிலேயே பேசும் வாய்ப்பும் சி.மோகன் அவர்களுக்கு கிட்டியிருக்கிறது. காகங்கள் கூட்டத்தில் நாவல் பற்றிய இவரது கட்டுரையாலும், முந்தைய நாள் ஓர் இரவில் அவர் அக்கட்டுரையை எழுதியமை குறித்த வியப்பாலும் சுந்தரராமசாமி இவர் மீது தீவிர அக்கறை காட்டியிருக்கிறார். சுந்தரராமசாமியின் வீட்டில்போய் அடிக்கடி தங்கும் அளவிற்கு நெருக்கமாகப் பழகியிருக்கிறார். சுந்தரராமசாமியைத் தன்னுடைய வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறார்.
வெங்கட்சாமிநாதனை மதுரையில் சந்தித்து அவரோடு உரையாடியிருக்கிறார். தருமுசிவராம் இலங்கையிலிருந்து வந்து மதுரையில் தங்கிய நாட்களில் அவரோடு சி.மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தி.ஜானகிராமனின் ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை 1980ல் சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார். மதுரை வந்தபோது ஜானகிராமனோடு மதுரை வீதிகளில் உலவிய ஞாபகங்களை எழுதியிருக்கிறார்.
க்ரியா ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1983ல் சென்றிருக்கிறார். அப்போது க்ரியா பதிப்பகத்தின் வாயிலாக சம்பத்தின் இடைவெளி நாவலை கொண்டுவந்த போது சம்பத்துடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியிருக்கிறது. துரதிஷ்டவசமாக நாவல் வெளியாவதற்கு முன் சம்பத் இறந்துபோனது பெரும் சோகம். தமிழின் மிக முக்கியமான நாவலாக சம்பத்தின் இடைவெளி நாவலை சி.மோகன் குறிப்பிடுகிறார்.
க்ரியாவில் பணியாற்றிய பொழுது எழுத்தாளர் பிரபஞ்சன், கோபிகிருஷ்ணன் ஆகியோர் கொஞ்சநாட்கள் இவரோடு பணியாற்றியிருக்கிறார்கள். திலிப்குமாரோடு சார்வாகனைச் சந்தித்த அனுபவத்தை வாசித்தேன். மருத்துவராகயிருந்து சிறுகதைகளில் முக்கியப் படைப்புகளைத் தந்தவரின் முதல்தொகுப்பைக் கொண்டுவர முன்னெடுத்தது, பின்னாளில் நற்றிணை பதிப்பகத்திலிருந்து சார்வாகனின் மொத்த சிறுகதைகளைக் கொண்டுவந்தது ஆகியவை போற்றத்தக்க பணிகள்.
தமிழ் படைப்புலகில் எடிட்டிங் மிகக்குறைவு. தன் படைப்புகளைப் பிறர் திருத்துவதை நம் படைப்பாளுமைகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இந்த மனநிலை எல்லோரிடமும் இல்லை என்பது நல்ல விசயம். எழுதிய நூலை வாசித்து காலப் பிழை, கருத்து மயக்கம் போன்றவற்றை பிறர் வாசிப்பின் வாயிலாக எளிதாகக் கண்டறிய முடியும். எழுதியவரால் அதை சட்டென உணர முடியாது. சி.மோகன் சம்பத்தின் இடைவெளி சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், அசோகமித்திரனின் தண்ணீர், போன்ற நாவல்களில் எடிட்டிங் பணியை செய்து கொடுத்திருக்கிறார்.

க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்ற மூத்த படைப்பாளிகளையும் சந்தித்திருக்கிறார். நடைவழிநினைவுகள் என்ற நூலில் தாம் சந்தித்த படைப்பாளிகள் 16 பேர் குறித்து தமிழ் இந்துவில் ஒரு தொடர் எழுதினார். இந்தத் தொடரின் வாயிலாக படைப்பாளிகள் குறித்தும், அவர்களது முக்கியமான படைப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். நடைவழிக்குறிப்புகள் என்ற நூலையும் முன்னர் எழுதியிருக்கிறார். இதில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் 25 பேரைக் குறித்து எழுதியிருக்கிறார். நவீன கலையின் தமிழக ஆளுமைகள் என்ற நூலில் ஓவியர்களைப் பற்றியும், நவீன ஓவியங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.
கே.ராமானுஜம் என்ற ஓவியக்கலைஞனின் வாழ்க்கையை வைத்து இவர் எழுதிய விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் என்ற நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல். சென்னையிலுள்ள சோழமண்டல ஓவிய கிராமத்திற்கும், ஓவியக்கண்காட்சிகள் வைக்கும் கேலரிகளுக்கும் சென்று ஓவியங்களைப் பார்ப்பதோடு நில்லாமல் அதைப்பற்றி எழுதவும் செய்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் இவருக்கு சிவாஜி கணேசன், சந்திரபாபு, சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி, தேவிகா, இயக்குநர் ஶ்ரீதர் போன்றவர்கள் பிடித்தமானவர்கள் என்கிறார். ஓய்வு நேரங்களில் பழைய திரைப்படப் பாடல்களை தொலைக்காட்சியில் காண்பதும், கேட்பதும் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது என்கிறார். தூத்துக்குடியில் இருந்த காலத்தில் அங்கிருந்த பெரிய தியேட்டரான சார்லஸ் திரையரங்கில் குடும்பத்தோடு சென்று படம் பார்த்த நினைவுகளை எழுதியிருக்கிறார். நவீன சமயத் திருவிழாவாகத் திரைப்படங்களைச் சொல்லும் இவரது கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மஞ்சள் மோகினி என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது பெரும்பாலான கதைகளில் மரணத்தின் நிழல் படிந்திருப்பதைக் காணலாம். எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை என்ற கவிதைத் தொகுப்பும் எனக்குப் பிடித்திருந்தது.
நடைவழி நினைவுகள், நவீன கலையின் தமிழக ஆளுமைகள் குறித்த புத்தகங்களை நாம் எல்லோரும் வாசிக்க வேண்டும். நாவல் கலை என்ற நூல் நாவலை விரும்பிவாசிக்கும் ரசிகர்களுக்கு ஏற்றது. தெறிகள் கட்டுரைத் தொகுப்பு புத்தகங்கள் குறித்த இவரது மதிப்புரைகள், முன்னுரைகள் அடங்கியது. மொழிபெயர்ப்பில் இவரது ஓநாய் குலச்சின்னம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க படைப்பு. (2014ல் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமில் சகோதரர் தமிழ்ச்செல்வம் வாங்கினார். பலமுறை அந்த நாவலைக் குறித்து பேசும்போதெல்லாம் புத்தகம் சென்னையிலிருக்க, சென்றாண்டுதான் நானும் ஓநாயை நேசிக்கத் தொடங்கினேன்.)

நவீன இலக்கிய வாசகர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டிய ஆளுமை சி.மோகன். விளக்கு விருது பெற்றவர். 2021ல் அவரது படைப்புகளை மொத்தமாக வாசிக்க கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது. இந்தாண்டில் அவரது படைப்புகள் குறித்து தனித்தனியே பதிவு எழுதவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கிறது. நன்றி.