
இந்திய அஞ்சல்துறை ஒன்றரை லட்சத்திற்கும் மேலான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அஞ்சல்துறையாகும். உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9. இதையொட்டி தேசிய அஞ்சல் வாரம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அதன்போது இந்திய அஞ்சல் துறை மனோகர் தேவதாஸ் வரைந்த 25 கோட்டோவியங்களைத் தேர்ந்தெடுத்து ஓவிய அஞ்சலட்டைகளாக ‘மதுரை 1950’ தலைப்பில் 12 அக்டோபர் 2021 அன்று வெளியிட்டது. இந்நிகழ்வு அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்திலுள்ள லைக்கா அரங்கில் நடந்தது. ஓவியர் மனோகர் தேவதாஸ் விழாவிற்காக மதுரை வந்திருந்தார்.

1950களின் மதுரைக் காட்சிகளை ஓவியர் மனோகர் தேவதாஸ் வரைந்த ஓவியங்கள் “Multiple Facets of My Madurai” என்ற நூலாக வந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தபோது இந்நூலை வழங்கியது பலராலும் கவனிக்கப்பட்டது. அதேபோல கடந்தாண்டு மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு கடந்த மாதத்தில் அவருக்கு அவ்விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
மனோகர் தேவதாஸ் வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் அன்றைய விழாவிற்கு சென்றிருந்தேன். தமிழ்நாடு அஞ்சலகத்துறை மேலாளர் நடராஜன் அவர்கள் ஓவிய அஞ்சலட்டை உருவாக்கியது குறித்து பேசினார். வெளியூர்க்காரரான அவர் மனோகர் தேவதாஸ் வரைந்த யானைமலை ஓவியத்தைப் பார்த்து யானைமலையை நேரில் போய் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.
ஓவியர் மனோகர் தேவதாஸ் மதுரை குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்தார். அரவிந்த் மருத்துவமனைக்கும், மனோகர் தேவதாஸூக்குமான தொடர்பு குறித்து மருத்துவர் நம்பெருமாள்சாமி பேசினார். ஓவிய அஞ்சலட்டையை தமிழ்நாடு அஞ்சலகத்துறை மேலாளர் நடராஜன் ஓவியர் மனோகர் தேவதாஸிடம் வழங்கினார். வந்திருந்த எல்லோருக்கும் அந்த அஞ்சலட்டையிலிருந்து ஒன்று வழங்கப்பட்டது. எனக்கு சித்திரை வீதி ஓவியம் வந்திருந்தது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
மனோகர் தேவதாஸ் குறித்த ஒரு சிறிய அறிமுகம்
ஓவியர் மனோகர் தேவதாஸ் அவர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. மதுரையில் 1936இல் பிறந்து சேதுபதிப்பள்ளியில் படித்து பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் படித்து ஆராய்ச்சி மேற்படிப்பை ஓபர்லின் பல்கலைக்கழகத்தில் கற்றவர்.
1969இல் அவருக்கு இரவுக்கண்பார்வை மங்கத்தொடங்கிபின் அவரது கண் விழித்திரையில் லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோய்குறைபாடு (ரெடினிடிஸ் பிக்மென்டோசா) ஏற்பட்டு சிறிய வட்டநாணய அளவிற்குத்தான் கண்பார்வை தெரியும் நிலை ஏற்பட்டது. அவர் தனது குறைந்தளவு பார்வையைக் கொண்டு மதுரையை அழகான கோட்டோவியங்களாக வரைந்தார். பெரியளவு லென்ஸ்களை கொண்டு 20 மடங்கு உருப்பெருக்கி, மிகக்குறைந்தளவு தெரிந்த பார்வையை வைத்து வரைந்தது குறிப்பிட வேண்டிய விசயம். கோட்டோவியம் நேர்த்தியாக வரைவதற்கு இந்தப் பார்வைக்குறைபாடு உதவியது என்று அவர் சொல்வதிலிருந்து தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றிக்கொண்ட மனப்பக்குவத்தை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதைவிட பெருந்துயரமாக 1972ல் சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் அவரது மனைவி மகிமாவிற்கு கழுத்துக்கு கீழே செயலிழந்துபோகும் பாரலிசிஸ் அட்டாக் வந்துவிட அந்த தம்பதியர் சோர்ந்துபோகவில்லை. மனோகர் வரையும்போது அவரருகே அமர்ந்து புத்தகங்களை வாசித்துக் காட்டிய நேசமே அவர்களை உயிர்ப்பித்தது. ஒருகண்பார்வை முற்றிலுமாக போன சமயத்தில் மற்றொரு கண்ணில் காட்ராக்ட் ஏற்பட்டது. இந்நிலையில் சோர்ந்துபோகாமல் அவரது பால்யகால மதுரை நினைவுகளை அவரது உதவியாளர் சொல்லச்சொல்ல அவர் தட்டச்சு செய்ய ‘Green Well Years’ என்ற புத்தகம் உருவானது. அதன்பிறகு ஓவியங்கள் வரைவது பற்றி, அவரது மனைவி குறித்தும் புத்தகங்கள் எழுதினார். 85 வயதிலும் இளைஞரைப் போல மவுத்ஆர்கன் கற்றுக் கொண்டிருக்கிறார்.

மனோகர் வரைந்த கோட்டோவியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளின்மூலம் வரும் வருமானத்தையும், அவர் புத்தகங்கள் வாயிலாக வரும் வருமானத்தையும் அறக்கட்டளை வாயிலாக தானமாகக் கொடுக்கும் மனப்பாங்கு வாய்த்தவர். 2008ல் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்துவரும் அவர் தளர்ந்துபோகாமல் 85 வயதிலும் வாழ்க்கை மீது எந்தப் புகாரும் அற்று இருக்கிறார்.
மனோகர் தேவதாஸ் நேர்காணல் – https://www.youtube.com/watch?v=340ORl9CMkc&t=69s
[…] மதுரை 1950 அஞ்சலட்டை வெளியீடு […]