தமிழகத்தில் அய்யனார் வழிபாடு

Posted: திசெம்பர் 19, 2021 in பார்வைகள், பகிர்வுகள்

“நாட்டுப்புறத்தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும்” என்ற வரிசையில் முதல் நிகழ்வாக ‘தமிழகத்தில் அய்யனார் வழிபாடு’ என்ற கருத்தரங்கு மதுரையில் டிசம்பர் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு குறித்த அறிவிப்பை சகோதரர் அனுப்பியதும் அதில் கலந்துகொள்வதற்குப் பதிவு செய்துவிட்டு நண்பர்களுக்கும் அச்செய்தியை அனுப்பினேன். என்னோடு இந்நிகழ்விற்கு பசுமை நடை நண்பர் ரகுநாத் வந்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு & தொல்லியல் துறைத் தலைவராக உள்ள முனைவர் வீ.செந்தில்குமார் ‘தமிழக வரலாற்றில் நாட்டுப்புற தெய்வங்கள்’ என்ற தலைப்பில் பேசினார். நாட்டுப்புறத் தெய்வங்களை தொன்மைத் தெய்வங்கள் என்றும் அழைக்கலாம். நியாண்டர்தால் இனம் முதலில் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தது என்கிறார்கள். மேலும், விலங்குகளில் யானைகள், குரங்குகள் ஒரு விலங்கு இறக்கும்போது கூடுவதைக் காண முடிகிறது என்றார். இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு என முதலில் வழிபாடு இருந்தது. படத்தொகுப்புகளின் வாயிலாக பழமையான குமரிக்கல், தாய்த்தெய்வ சிலைகள், நடுகல், ஈமச்சின்னங்களின் படங்களை காண்பித்து அவற்றைப் பற்றி விரிவாக பேசினார். ஈரோட்டில் உள்ள குமரிக்கல், திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள தாய்த்தெய்வ சிலையமைப்பு, பள்ளிப்படை கோவில்கள், புலிமான் கோம்பை – தாதப்பட்டி நடுகற்கள் பற்றிக் கூறியதை கேட்டபோது அங்கெல்லாம் பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது.  

எல்லோரும் பெருங்கோவில்களான மீனாட்சியம்மன் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில் என்று ஆய்வுசெய்யாமல் உள்ளூர் வரலாறு – உள்ளூர் தெய்வங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசி உரையை நிறைவு செய்தார். வீ.செல்வக்குமார் அவர்கள் தாண்டிக்குடிக்கு பசுமை நடை சென்றபோது வந்திருந்தார். அப்போது அவரோடு பலவிசயங்களை நண்பர்களுடன் சேர்ந்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம். 

திருவாடுதுறை ஆதினத்திலுள்ள சரஸ்வதி மஹால் நூல்நிலையத்திலிருந்து ஆய்வாளர் திரு.சு. நாராயணசாமி ‘சிற்பம் மற்றும் ஆகமங்களில் அய்யனார் வழிபாடு’ குறித்துப் பேசினார். இவர் பல கோவில்களுக்கு தல வரலாறு எழுதியதோடு 500க்கும் மேலான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அய்யனார் பற்றி ஸ்காந்த புராணத்தில் விரிவாக வருகிறது. சிவனின் ஐந்தாவது பிள்ளையாக சாஸ்தா குறிப்பிடப்படுகிறார். அய்யனார் இல்லாத கிராமங்களைப் பார்க்க முடியாது என்ற அளவிற்கு தமிழகம் முழுவதும் அய்யனார் கோவில்கள் இருக்கிறது. அய்யனாரின் சிற்ப அமைப்பை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தலையில் ஜடாபாரம், ஜடா மண்டலம், கேச கிரீடம் என சிகையமைப்பு, உட்குடி ஆசனம் (ஒருகாலை குத்தவைத்து ஒரு காலை கீழே தொங்கவிட்டு அமரும் தோற்றம்), அய்யனாரின் இடதுகை பக்கம் புஷ்கலை தேவியும், வலதுகை பக்கம் பூரண தேவியும் அமர்ந்திருப்பது போன்றவற்றை விவரித்தார். யானை – குதிரை வாகனங்களாக கொண்டவர் அய்யனார். சைவ மதம் அய்யனாரை எவ்வாறு உள்வாங்கியது என்பதை இவரது உரையின் வாயிலாக அறிய முடிந்தது.  

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ள முனைவர். த. ரமேஷ் ‘நடுநாட்டில் அய்யனார் சிற்பங்கள் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். வசந்த் தொலைக்காட்சியில் மண்பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சி மற்றும் விழுப்புரம் மரபுநடை நிகழ்வுகளிலும் இவரது பங்களிப்பு அலாதியானது. பல்லவர் காலந்தொடங்கி சோழர் காலம் வரையிலான அய்யனார் சிற்ப அமைவுகளை படங்களாகக் காண்பித்தார். நடுநாடு என்பது தொண்டை மண்டலத்திற்கும் சோழநாட்டிற்கும் நடுவே அமைந்த பகுதி. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையின் ஒரு பகுதி நடுநாட்டுப் பகுதியாகும். 

வழிபாடு இல்லாமல் வயல்வெளிகளில், கிராமத்து வெளிகளில் உள்ள அற்புதமான சிற்பங்களைக் காணும்போது ஒருபுறம் வருத்தமாக இருந்தது. கல்வெட்டுப் பொறிப்புடன் கூடிய அய்யனார் சிற்பங்களில் இருந்து பல அற்புதமான சிற்பங்கள் நடுநாட்டில் உள்ளன. அவைகளை நேரில் போய் இந்த கருத்தரங்கிற்காகப் பார்த்து படம் எடுத்து வந்திருக்கிறார். இதன் வாயிலாக பல அய்யனார் சிற்பங்கள் புத்துணர்வு பெற்றிருக்கின்றன.  

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கி. ஸ்ரீதரன் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழலிலும் ‘வரலாறு காட்டும் அய்யனார் வழிபாடு (கல்வெட்டு மற்றும் சிற்பங்களில்)’ என்ற தலைப்பில் பேசிப்பதிவு செய்யப்பட்ட படத்தொகுப்பை காணவும் கேட்கவும் முடிந்தது. பேராசிரியர் வீ. செல்வக்குமார் அவரது உரைக்கான படத்தொகுப்பை காண்பித்தார். ஸ்ரீதரன் அவர்கள் எழுதிய, தொகுத்த நூல்கள் தமிழ்நாடு தொல்லியல் துறை தளத்தில் உள்ளது. 

மதியம் எல்லோருக்கும் அருமையான உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளையில் நண்பர்களோடு உரையாடி மகிழ முடிந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு நமக்குப் பிடித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்த மகிழ்ச்சி. மதிய அமர்விற்குத் தலைமையேற்று ஆய்வாளர் காந்திராஜன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.  

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் செயலராக உள்ள திரு. ச. பாலமுருகன் ‘திருவண்ணாமலை பகுதியில் அய்யனார் வழிபாடும் மரபும்’ என்ற தலைப்பில் பேசினார். இவர் அடிப்படையில் ஒரு தாசில்தார். ஆனாலும், அதைக்கடந்து தொல்லியல் ஆர்வலர் என்பது கூடுதல் சிறப்பு. அய்யனார் கோவில் அமைவிடம், சிற்பங்கள், திருவிழாக்கள், சடங்குகள், வழிபாடுகள், பலியிடுதல், மாற்றங்கள் என்ற வரிசையில் சிறப்பாக உரையாற்றினார். ஜவ்வாது மலைப் பகுதி மற்றும் செங்கம் பகுதியில் அதிகமாக அய்யனார் வழிபாடு இல்லை. இப்பகுதியில் அதிகமாக நடுகல் வழிபாடு உள்ளது. பல்லவர் காலந்தொடங்கி சோழர் காலம் பின் சமகாலத்தில் அய்யனார் சிற்பங்களைப் பார்க்கும்போது அதன் அமைப்பு தேய்ந்துகொண்டே வருவதைக் குறிப்பிடுகிறார். திருவண்ணாமலைப் பகுதியில் நடுகற்களை வேடியப்பனாக வணங்குகிறார்கள். அனைத்து சமூக மக்களும் வழிபடும் சூழல், திருவிழாக்கள் வாயிலாக அப்பகுதியில் பொருளாதார உயர்வு இவற்றை சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நல்ல விசயங்களாக சொல்லலாம். எளிமையான தெய்வம் படிநிலை வளர்ச்சி பெற்றதை அய்யனார் வழிபாட்டில் காணலாம். 

யாக்கை வரலாற்றுத் தன்னார்வல அமைப்பைச் சேர்ந்த திரு. குமரவேல் இராமசாமி ‘தொல்லியல் நோக்கில் கொங்கு மண்டல அய்யனார் வழிபாடு’ குறித்துப் பேசினார். ஈரோடு – கரூர்- கோவை பகுதிகளில் தாய்த்தெய்வ வழிபாடு, சந்தி வழிபாடு, கந்து வழிபாடு பற்றிப் பேசினார். சந்தி வழிபாடு என்பது மூன்று பாதைகள் சந்திக்கும் இடங்களில் நடைபெறும் வழிபாடு, கந்து வழிபாடு என்பது தூண் நட்டு வழிபடக்கூடிய வழிபாடு. கொடுமணல் பகுதியில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறித்த பானைஓடுகள், கலித்தொகையில் ஐயனை ஏந்துவோம் என்ற வரி, இராஜகேசரி பெருவழி, கொங்குப் பெருவழி, தென்கொங்குப் பெருவழி குறித்தெல்லாம் விரிவாகப் பேசியதோடு கூகுள் மேப்பில் அந்த இடங்களை ஜி.பி.எஸ் வாயிலாக குறித்துக் காட்டியது சிறப்பு. 

திருச்சிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வே.பார்த்திபன் ‘காவிரிப்படுகையில் அய்யனார் வழிபாடு’ குறித்துப் பேசினார். வேதாரண்யத்திலிருந்து முசிறி வரை 5 நாட்கள் அலைந்து அந்தப் பகுதியில் உள்ள அய்யனார் வழிபாடு குறித்து நேரடி களஆய்வு செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குடும்ப தெய்வம், குல தெய்வம், ஊர் தெய்வம், பெருந்தெய்வம் என தெய்வ வழிபாட்டின் படிநிலைகளில் அய்யனார் சிலருக்கு குல தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் விளங்குவதைக் குறிப்பிட்டார். அய்யனாரைத் தலைமையாக கொண்டு அதன்கீழ் கருப்பு, மதுரை வீரன், காத்தவராயன், பேச்சி என பரிவார தெய்வங்கள் உள்ளதையும் இவை ஊருக்கு ஊர் மாறுபடுவதையும் குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதையில் மாலதிக்கு உதவிய சாஸ்தா பற்றிய கதையைச் சொன்னார். சிறைமீட்ட அய்யனார் பெருகிவரும் நீரை காத்த அய்யனாராகத்தான் இருக்கும். அணை என்ற சொல் மிகவும் பிற்காலச் சொல் என்ற தகவலையும் சொன்னார். கலிதீர்த்த அய்யனார் கோவில் வேதாரண்யம் பகுதியில் சிறப்பாக விளங்குகிறது. சமண, பௌத்த மதங்களில் அய்யனார் குறித்த தகவல்களையும் பேசினார். 

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழியல் ஆய்வாளர் முனைவர் பே.சக்திவேல் ‘திருவாரூர் பகுதியில் நாட்டுப்புற வழிபாட்டில் அய்யனார்’ என்ற தலைப்பில் பேசினார். எல்லா ஊர்களிலும் அய்யனார் இருந்தாலும் அவரது பெயருக்குமுன் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது முன்னொட்டு அமைந்திருக்கும். உதாரணமாக அடைக்கலம் காத்த அய்யனார், சிறைமீட்ட அய்யனார், சொரிமுத்து அய்யனார். சங்க காலப்புலவர்களின் பெயர்களில் சாத்தன் என்ற பெயரைக் காண முடிகிறது. உதாரணமாக சீத்தலை சாத்தன், ஆலவாய் சாத்தன். பாசண்ட சாத்தன் என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆசிவகமும் அய்யனார் வழிபாடும் என்றொரு நூல் எழுதியிருக்கிறார். இதில் இவர் மற்கலிகோசரை அய்யனாராகச் சொல்கிறார். திருவாரூரில் வெள்ளக்குடி ஸ்ரீ சேவராஜ மூர்த்தி அய்யனார்,  திருவண்டுறை பிணி தீர்த்த அய்யனார் போன்ற கோவில்கள் உள்ளன. அய்யனாருக்கு குதிரையெடுப்பது, மதலைகள் நேர்த்திக்கடனாக எடுப்பது வழக்கம். ஆசிவகத்தின் குறியீடாக யானையும், சமணத்தின் குறியீடாக குதிரையும் சொல்லப்படுகிறது. (சில ஊர்களில் இரண்டும் சேர்ந்தே இருக்கிறது) 

வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் திரு. பாவெல் பாரதி ‘அய்யனார் வழிபாட்டின் பன்மைப் பொருண்மை’ குறித்து பேசினார். இதில் அவர் பெயர்ப் பன்மியம், தோற்றப் பன்மியம், வழிபாட்டுப் பன்மியம், மும்மரபு என நான்காகப் பிரித்து அவற்றைக் குறித்து விரிவாகப் பேசினார். ஐ என்ற ஓரெழுத்து ஐயை (கொற்றவை), அவ்வை, அன்னை, அக்கை, அத்தை என பெண் பெயராக உள்ளதையும், ஐ’யோடு அன் விகுதி சேர்ந்து ஐயன், அரசன், கடவுள், அருகன், தந்தை, மூத்தோன் எனப் பொருள் தருவதையும் குறிப்பிட்டார். சாத்தன் என்ற பெயர் வணிகக் குழவினருக்கும் வழங்கப்பட்டது. தமிழிலிருந்த சாத்தன் என்ற பெயர் மலையாளத்தில் சாஸ்தாவாக ஆனதைக் குறிப்பிட்டார். அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு செங்கோட்டைப் பெருவழி, கம்பம் பெருவழி உள்ளதைக் குறிப்பிட்டார்.  

பௌத்த, சமண, ஆசிவக, வைதீக மற்றும் வெகுமக்கள் மரபில் அய்யனார் பற்றிப் பேசினார். ஆசிவகத்தில் வரும் கலிவெண்பிறப்பு நிலையை அடைந்தவர்கள் ஐயன் ஆகிறார்கள். (மற்கலிகோசர், பூரண காயபர், கணிநந்தாசிரியன் என ஆசிவகத்தைச் சார்ந்த மூவருடைய சிலைகளையே அய்யனார், பூரணி, பொற்கலை என அழைப்பதாக நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார்). கருமாத்தூர் பகுதியில் கொண்டாடப்படும் அய்யனார் கோவில் திருவிழா குறித்து விரிவாகப் பேசினார். மூணுசாமி கோவிலில் ஐயனாருக்கு ஒரு குதிரை, கருப்புசாமிக்கு ஒரு குதிரை, பேக்காமனுக்கு ஒரு குதிரை என மூன்று குதிரைகள் இருப்பதை குறிப்பிட்டார்.  அய்யனார் வீரமரபு, அறிவு மரபு, இல்லறமரபு என மூன்று நிலைகளில் வழிபடப்படுவதைக் குறிப்பிட்டார். போர்வீரனைப் போல செண்டு அல்லது சாட்டை வைத்திருப்பது, யோக மரபு – ஆகாச மரபு, கணித அறிவு என்ற நிலைகளில் இருப்பது, பூரணி பொற்கலையுடன் இல்லற மரபு. கல்யாண சாஸ்தா இல்லற மரபிற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒற்றை வழிபாடு என்ற நிலைக்கு எதிர்நிலையில் அய்யனார் வழிபாடு பன்மைத் தன்மையோடு திகழ்வதை பாவெல் பாரதி சிறப்பாக எடுத்துரைத்தார்.  

கருத்தரங்கிற்கு வந்திருந்த எழுத்தாளர் கோணங்கி அய்யனார் குறித்து பேசியது மிக சிறப்பாக இருந்தது. மார்க்வெஸ் சிறப்பிதழை கமுதி அய்யனார் கோவிலில் புரவியெடுப்போடு நடத்தியது, சித்தன்னவாசலில் உள்ள சித்திரங்களை பார்க்க ஓவியர் சந்துருவோடு சென்றது, நீர்வளரி நாவல் எழுதியது என சில அற்புதமான தருணங்களை குறிப்பிட்டார். நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர் ஒருவர் மதுரை – இராமநாதபுர மாவட்டத்தில் அய்யனார் வழிபாடு குறித்து ஆய்வு செய்தவர்களைப் பற்றி பேசினார். கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு வழிபடச் சென்ற நினைவுகளைப் பேசினார். மதுரை, நெல்லை மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு குறித்த கருத்தரங்கங்களையும் நடத்த வேண்டுமென நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் கேட்டுக் கொண்டனர். மரபு இடங்களின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சர்மிளா மற்றும் தீபா இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அய்யனார் குறித்து பேசுகையில் கேட்க மழையும் வந்தது. சூடாக தேநீரும், வாழைப்பூ வடையும் சாப்பிட்டு நிறைவாகக் கிளம்பினோம். 

விழாவிற்கு வழங்கிய நிகழ்ச்சிநிரல் பட்டியலோடு இருந்த அய்யனார் பற்றிய செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்வது முக்கியமானது என கருதுகிறேன். “அய்யனார் தென்னிந்தியா, இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளில் கடந்த காலங்களிலும், தற்போதும் பரவலாக வழிபடப்பட்டுவரும் ஒரு மக்கள் தெய்வமாகும். பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கிராமவாசிகள் தங்களைக் காக்கும் கடவுளான அய்யனாரைப் போற்றி வருகின்றனர். இத்தெய்வம் வேளாண்மையையும், கால்நடைகளையும் காப்பதோடு, இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதோடு தீயசக்திகளை கிராமத்திற்குள் அண்டவிடாமல் தடுப்பதாகவும் நம்புகின்றனர். அய்யனார் என்ற தமிழ்ச்சொல் அய்யன் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. இது மரியாதைக்குரிய ஒருவரையும், மூத்தோரையும், உயர்ந்தோரையும் குறிப்பதற்குத் தமிழ்மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு மரியாதைச் சொல் ஆகும். சமஸ்கிருதத்தில் சாஸ்தா எனப்படும் இத்தெய்வம், பண்டைய தமிழ்ப் பதிவுகளில் சாத்தன் என்றே குறிப்பிடப்படுகின்றது. அய்யனார் வழிபாடு பொ.ஆ.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால், இவ்வழிபாடு இக்காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கியிருக்கலாம். தமிழின் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரம் சாத்தன் கோவில்களையும், பக்தர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதைத் தொடர்ந்து பக்தி இலக்கியங்களிலும் சாத்தன் வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொடர்ந்து ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் அய்யனார் உருவம் தனியாகவும் பூரணத்தாள் மற்றும் பொற்கொடியாளோடு சேர்ந்தும் சிற்பமாக தமிழகமெங்கும் இன்றளவும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயில்களுக்கு மன்னர்களின் பங்களிப்பு ஏதும் இல்லாமல் கோவில்களும் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. அதுபோல பெரும்பான்மையான குடிகளுக்கு குலதெய்வமாகவும் இருந்து வருவது இதன் சிறப்பாகும். அய்யனார் கோவில்கள் பொதுவாக கிராமப்புற எல்லைப்பகுதிகள், நீர்நிலைகள் அல்லது வழித்தடங்களில் அமைந்துள்ளன. அய்யனாருக்கு இரண்டு வகையான கோயில்கள் உள்ளன. ஆகமம் அல்லாத திறந்தவெளியில் மரங்களுடன் அமைந்த கோவில்கள், ஆகம பாணியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில்கள். இவ்வகையில், தமிழகத்தில் அதிக மக்களால் வழிபட்டு வரும் அய்யனார் வழிபாடு குறித்த ஆய்வுகள் அதிகம் நடத்தப்படவில்லை. ஆகையால் அவ்வழிபாட்டின் தொன்மை மற்றும் வழிபடுவோர் குறித்த பல்துறைசார் அறிஞர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த கருத்தரங்கு அதற்கு ஒரு முதல் தொடக்கப்புள்ளியாகும். 

(2022ல் மதுரையில் அய்யனார் வழிபாடு குறித்த பயணத்தைத் தொடங்க இந்த கருத்தரங்கு எனக்கு ஒரு உந்துதலாக அமைந்துள்ளது. அடுத்தாண்டு டிசம்பரில் 50 அய்யனார் கோவில்களைக் குறித்த செய்திகளையும், அதைக் குறித்த படங்களையும் காணலாம்) 

படங்கள் உதவி – திரு.பாவெல் பாரதி மற்றும் மரபு இடங்களின் நண்பர்கள் (FRIENDS OF HERITAGE SITES) 

நன்றி : அய்யனார் படங்கள் – மங்கை ராகவன் (ஆய்வாளர்) – ஐயனார் – சாத்தனார் வழிபாடு / Iyanar and sastha cult (Facebook Page) 

தமிழகத்தில் அய்யனார் வழிபாடு நிகழ்வை யூடியுப் வாயிலாக காண்பதற்கான இணைப்பு – https://youtu.be/GwTtZoxO-TY 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s