மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று பெரிய சப்பரத்தில் காளை வாகனத்தில் உற்சவர்கள் சுற்றி வருவது சிறப்பு. இறைவன் சகல உயிர்களுக்கும் படியளப்பதை நினைவூட்டும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மற்ற திருவிழாக்களின் போது சாமி ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதிகளில் சுற்றி வரும். மார்கழி அஷ்டமி சப்பரம் மதுரை வெளிவீதிகளில் சுற்றிவருகிறது. மேலும், மீனாட்சியம்மன் எழுந்தருளும் சப்பரத்தை பெண்களே இழுத்து வருவதும் கூடுதல் சிறப்பு.

கீழமாசிவீதியில் அஷ்டம் சப்பரம் புறப்படுகிறது. காளை வாகனத்தில் உற்சவர்கள் மதுரை வீதியுலாப் புறப்படுகிறார்கள். சிவனடியார்கள், சங்கநாதம் இசைப்பவர்கள், கைலாய வாத்தியம் இசைப்பவர்கள், நாதஸ்வரம்-தவில் இசைப்பவர்கள் முன்நடக்க சப்பரம் உற்சாகமாகப் புறப்படுகிறது.
வீதிகளில் சாமிவரும்முன் அழகழகாய் கோலங்களைப் போடுகின்றனர். கீழமாசிவீதியிலிருந்து கீழவெளிவீதிக்குத் திரும்பும்போது மரியன்னையை நலம் விசாரிக்கிறாள் அன்னை மீனாட்சி. சொக்கநாதரின் சிரிப்பை ரசிக்க ஏசுநாதரும் எட்டிப் பார்க்கிறார். சப்பரம் வீதியுலா வருகிறது. சின்னக்கடை தர்கா முக்கில் வந்து முகைதீன் ஆண்டவர் சலாம் வைக்க குதிரைவிற்பவராய் வந்த சொக்கராவுத்தரும் பதில் சலாம் வைக்கிறார். பள்ளிவாசல்களில், தேவாலயங்களில் இருந்துவரும் மக்களும் ஊர்வலத்தைக் காண்கிறார்கள்.
பெரியார் பேருந்து நிலைய வேலைகள் இந்தாண்டாவது முடியணும் என பழம்விற்கும் அம்மா வேண்டிக்கொண்டிருக்கிறார். தெய்வத்தால் ஆகாத பணிகள் மாநகராட்சிப் பணிகள் என நினைத்து மலையத்துவசப் பாண்டியன் மகள் மலைத்துச் சிரிக்கிறாள். பழைய கோட்டை வாசலைக் கடந்து, கட்டபொம்மன் சிலையைக் கடந்து சப்பரம் சுற்றுகிறது. கைலாய வாத்தியம் முழங்க, மதுரையின் பெருவீதிகளில் சப்பரம் உலா வருகிறது. நெல், அரிசி, பருப்பு போன்றவற்றை வீதிகளில் இறைத்தபடி செல்ல மக்கள் அதை எடுத்து வைத்துக் கொள்வார்கள். அந்த அரிசியை வீட்டில் வைத்து வணங்கினால் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வருகிறார்கள். எல்லோரும் வீதிகளில் ஓரங்களில் நின்று மதுரையம்பதியாளும் அம்மையப்பனை தரிசிக்க காத்துக் கிடக்கிறார்கள். பலூன்காரர்களின் முகத்திலிருக்கும் சிரிப்பு, சவ்வுமிட்டாய்க்காரர்களின் மிட்டாயின் இனிப்பு மதுரை வீதிகளில் நிலவட்டும். அன்பும், மகிழ்ச்சியும் தொற்றாகப் பரவட்டும். சித்திரைத் திருவிழா முதற்கொண்டு பலவிழாக்களும் கோயிலுக்குள்ளே நடந்த வேளையில் மார்கழி அஷ்டமி சப்பரம் மதுரை வீதிகளில் சுற்றிவந்தது மக்களுக்கு பெருமகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
படங்கள் உதவி – வேலு, சதீஸ்வரன்