
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தெருமுகம் என்ற நிகழ்ச்சி வாயிலாக நம் வரலாற்றுத் தலங்களை, பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை இயக்கும் பி.என்.எஸ். பாண்டியன் ஒரு எழுத்தாளர் என்பதால் இந்நிகழ்விற்கு புதியதொரு முகம் கிட்டுகிறது.
பொங்கலையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் சல்லிக்கட்டு குறித்த தெருமுகம் நிகழ்வு முதலில் ஒளிபரப்பானது. அதில் சல்லிக்கட்டு சார்ந்த தொல்லெச்சங்கள், இலக்கியக்குறிப்புகள், பார்த்த நினைவுகளை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், மதுரையைச் சேர்ந்த ஓவியர் ட்ராஸ்கி மருதுவும் பகிர்ந்தார்கள். அந்த நிகழ்வில் கோவில்மாடுகளுக்கும் கிராம மக்களுக்குமான உறவைப்பற்றி பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
கோவில்மாட்டை அந்த கிராமத்தின் காவல் தெய்வத்தின் வடிவமாகப் பார்ப்பதும், மந்தையில் நிற்கும் மாட்டுடன் விளையாடும் பள்ளிச் சிறுவர்கள், கோவில்மாட்டுக்காக கழனித்தண்ணி வைத்து காத்திருக்கும் பெண்கள் என அந்த மாடு மக்களோடு கொண்டுள்ள உறவு. அதேபோல கோவில்மாடு வயதாகி இயற்கையெய்தும் வேளையில் ஊரோடு சேர்ந்து அதை அடக்கம் செய்வதை, அதற்கு சிலை எடுத்து வழிபடுவதைப் பற்றியும் அந்நிகழ்வின் வாயிலாக எடுத்துரைக்க முடிந்தது.
திருவிழாக்களின் தலைநகரம் என்ற தலைப்பில் பேசும்போது மதுரையிலுள்ள பெருங்கோவில்கள், இங்குள்ள பெருந்தேரோட்டங்கள் பற்றி பேசும் வாய்ப்பு அமைந்தது. மதுரையிலுள்ள நீர்நிலைகளுக்கும், விழாக்களுக்குமான உறவைப் பற்றி இந்நிகழ்வில் சொல்ல முடிந்தது. மூன்று வாரங்கள் மதுரை குறித்து தெருமுகம் நிகழ்வு ஒளிபரப்பானது மகிழ்ச்சி. மதுரையில் சமணம் குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கமும், பசுமைநடை அமைப்பாளரும் பேசினார்கள். மதுரையின் வீதிகள், விழாக்கள், கல்வி குறித்த பதிவில் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர் ச.சுப்பாராவ், ஓவியர் சிவா என பல ஆளுமைகள் மதுரை குறித்து உரையாடியிருக்கிறார்கள்.
தெருமுகம் நிகழ்ச்சிகளுக்கான யூடியுப் இணைப்பு :
சல்லிக்கட்டு
மதுரை தெருக்கள்
மதுரையில் சமணம்
நல்ல அறிமுகம் …பார்க்கிறேன்