
அழகர் மலையடிவாரத்தின் அருகில் அமைந்துள்ள பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் கடந்த இருபது ஆண்டுகளுக்குப்பிறகு மையமண்டபத்தை தொடும் அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. அழகர்கோயில் சாலையிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் இத்தெப்பக்குளம் அமைந்துள்ளது. அழகர்கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று குளங்கள் இருந்தாலும் அழகர் தெப்பத்திருவிழாவிற்கு மாசி மாதம் பொய்கைக்கரைப்பட்டிக்கு வருகிறார் என்பது இந்த குளத்தின் சிறப்பு.

அழகர்மலையிலிருந்து மழைபெய்து ஓடைகள் வழியாக வரும் நீர் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களில் நிரம்பி மறுகால் பாய்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தை வந்தடைகிறது. மழைநீர் வரும் வடிகால்களை சீரமைத்ததன் காரணமாக தெப்பத்திற்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தின் நடுவில் பதினாறுகால்களுடன், ஒற்றைக் குவிமாடத்துடன் கூடிய மையமண்டபம் அமைந்துள்ளது. மையமண்டபத்தின் உச்சிப்பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. பழமையான இந்த மைய மண்டபத்தை சீரமைத்தால் மிக அழகாக இருக்கும். மேலும், தெப்பம் தொடர்ந்து நிறைந்திருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் கடந்த பத்துவருடங்களாக முழுதாக நீர் நிரம்பாமல் இருந்ததால் அழகர் கரையைச் சுற்றி சென்றுகொண்டிருந்தார். ததும்பத்ததும்ப நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் இந்தாண்டு அழகர் எழுந்தருளுகிறார் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தது அழகரடியார்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

பௌர்ணமி இரண்டுநாட்கள் வந்ததால் மாசிமகத்திற்கு முதல்நாள் மாசிப்பௌர்ணமியன்று அழகர்கோயிலில் இந்தாண்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது. தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் கஜேந்திர மோட்சம் நடைபெறும். அழகர்கோயிலில் உள்ள ஆடிவீதியைச் சுற்றிவந்து கோபுரத்திற்கருகிலுள்ள மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

பொய்கைக்கரைப்பட்டியில் தெப்பத்திருவிழா அன்று அழகர் கிராமத்துத் தெருக்களின் வழியே வருகிறார். மக்கள் வீட்டுவாசல்களில் விளக்குகளை எடுத்துவைத்து தேங்காய், பழம், மாலை வாங்கி வைத்து காத்திருக்கின்றனர். அழகர் ஊருக்குள் எழுந்தருளியதும் தப்பாட்டம், சிலம்பாட்டம், கொக்கலிகட்டையாட்டம் வைத்து அழகரை வரவேற்றுச் செல்கின்றனர். கிராமத்துசிறுமிகள் பட்டுப்பாவாடை, கனகாம்பரம், மல்லிகை என சூடி திருவிழாவிற்கு வரும் அழகரை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

வெள்ளியங்குன்றம் ஜமீன் அழகர் கோவிலிலிருந்து அழகரோடு வருகிறார். அவருக்கும் ஊரிலிருந்து மரியாதை செய்கிறார்கள். கிராமத்து மந்தையில் பெரிய, பெரிய மரங்கள் உள்ளது அத்தனை அழகு. தப்பும் தவிலும் ஒலிக்க அழகர் வருகிறார்.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் வந்ததும் தெப்பத்தை சுற்றிவருகிறார். சுற்றிவந்து கிழக்குப்பகுதியில் உள்ள படித்துறையில் இறங்கி அன்னவாகனத்தில் அழகர் எழுந்தருளுகிறார். அழகர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியதும், அன்ன ஓடத்தை கழிகளைக் கொண்டு நகர்த்துகிறார்கள்.

சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்ப உலாவந்து கிழக்குப்பகுதியில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் எழுந்தருளுகிறார். வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு பரிவட்ட மரியாதைகள் செய்யப்படுகிறது. காலையிலும், மாலையிலும் தெப்பம் சுற்றி வருகிறது. இரவு விளக்கொளியில் தெப்பம் சுற்றுவதை காண்பது மிக அழகு.

தெப்பத்திருவிழாவிற்கு ஏராளமான கடைகள் போட்டிருக்கிறார்கள். பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அவல்பொரி கடைகள் என கிராமத்து மந்தையிலிருந்து தெப்பம் வரை நிறைய திருவிழாக்கடைகள். தெப்பத்தின் படிக்கட்டுகளில் அழகாய் வெள்ளை, காவி வண்ணம் பூசியிருக்கிறார்கள்.

2012ல் தெப்பத்திருவிழா பார்த்து முன்பு எழுதிய பதிவு அன்னவாகனத்தில் அழகுமலையான்

Nice captures. Excellent commentary. Thank you.