
2022 தொடங்கியதிலிருந்தே வாசிப்பில் ஏற்பட்ட சுணக்கமும், நடுநடுவே ஏற்பட்ட உளச்சோர்வும் என கொஞ்சம் மந்தமாகவே இருந்தது மனநிலை. இந்நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் திட்டமிட்ட பசுமைநடை நண்பர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். சனி, ஞாயிறு இரண்டுநாள் பயணமாக சென்னை செல்ல முடிவெடுத்தோம். எனக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்தது தொடங்கி, சென்னை சென்று மதுரை திரும்பும் வரை பார்த்துக் கொண்ட பசுமைநடை நண்பர்களுக்கும், தோழர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வைகை ரயிலில் பசுமைநடை நண்பர்களுடன் பயணம் ஆரம்பமானது. பலவருடங்களுக்குப் பிறகு வைகை ரயிலில் செல்கிறேன். ரயிலில் பரிசாகக் கிடைத்த கவிதைப் புத்தகங்கள் குறித்து தனிப்பதிவொன்றை எழுதுகிறேன். சென்னை தாம்பரத்தில் இறங்கி அங்கிருந்து மின்ரயில் வாயிலாக மாறி நாங்கள் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தங்கியிருந்த அறையை அடைந்தோம். அவர் எங்களுக்காக மதிய உணவு வாங்கிவைத்துக் காத்திருந்தார்.
சாப்பிட்டு கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலை காணும் வாய்ப்பு கிட்டியது. புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் சென்றோம். ஏராளமான அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள்.
எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் தூங்காநகர நினைவுகள் வெளியாகி சென்னை புத்தகக்கண்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையின் வரலாற்றை, அதன் தொன்மையை, பன்முகத்துவத்தை பறைசாற்றும் நூலாக தூங்காநகர நினைவுகள் திகழ்கிறது. பசுமைநடை நண்பர்கள் எல்லோரும் அ.முத்துக்கிருஷ்ணனுடன் தூங்காநகர நினைவுகள் புத்தகத்தை வைத்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம்.
நண்பர் ரகுநாத்தின் தேயிலை மனிதர்கள் நூல் நாங்கள் சென்ற அன்று காலை வெளியானது. பயணச்சீட்டை நிகழ்விற்கேற்ப மாற்ற முடியாததால் நாங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ள இயலவில்லை. உயிர் பதிப்பக அரங்கில் நண்பர்கள் எல்லோரும் தேயிலை மனிதர்கள் நூலோடு சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம். சண்முகானந்தம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பலமுறை அலைபேசி வழியாக உரையாடியிருக்கிறோம். புத்தகக் கண்காட்சி அரங்கில் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது.

புத்தகக் கண்காட்சிக்குள் குழுவாக செல்லாமல் இரண்டு, மூன்று பேராக சென்றோம். பார்க்கும் பெரும்பாலான புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற அவாவை அடக்கி, வாங்க வேண்டியதை பட்டியலிட்டபடி நடந்தோம். ‘இன்று மாலை பார்த்துவிட்டு, நாளை காலை வந்து வாங்கலாம்’ என்று முடிவெடுத்தோம். நண்பர்கள் சிலர் அப்போதே புத்தகங்களை வாங்கினர். புத்தகக் கண்காட்சியில் மதுரை நண்பர்கள் பலரைக் காண முடிந்தது.

புதிதாக வந்திருக்கும் புத்தகங்களை, எழுத்தாளர்களை, தீவிரமான வாசகர்களை எனப் பலரையும் அரங்கில் காண முடிந்தது. இரவு பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றோம். அங்குள்ள தட்டுக்கடை ஒன்றில் ஆப்பம் சாப்பிட்டோம். கடற்கரை நோக்கிய நடை மனதிற்கு உற்சாகம் தந்தது. பீட்சா செய்து நாங்கள் தங்கிய இடத்திற்கே கொண்டுவந்த நண்பருக்கு நன்றி. உணவுப்பிரியர்கள் பற்றிய பல விசயங்களை அவர் வாயிலாக அறிய முடிந்தது. புதிய இடம் சரியான தூக்கமில்லாமல் அன்றைய பொழுது முடிந்தது.

ஞாயிறன்று காலை வெள்ளென எழுந்து பெசன்ட்நகர் நோக்கிச் சென்றோம். காலைநேரக் கடற்கரை, அழகான சூரியன், ஆர்ப்பரிக்கும் அலைகள், உடற்பயிற்சி – நடைபயிற்சி செய்யும் மக்கள், கரவலை போட்டுவந்த மீனவர்கள் என வேடிக்கை பார்த்தபடி நடந்தோம். காலடி மண்ணும் சொந்தமில்லை என்பதை உணர்த்தும் அலைகளுக்கு நன்றி சொல்லிபடி அங்கிருந்து புறப்பட்டோம். அழகான ஜோல்னாபை ஒன்றை அ.முத்துக்கிருஷ்ணன் வாங்கிக் கொடுத்தார்.
கடற்கரையிலிருந்து வரும்போது சென்னையில் வரையப்பட்ட பெரிய சுவரோவியங்களை பார்த்து ரசித்தபடி வந்தேன்.ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் கருப்பட்டி காபி குடித்தோம், கருப்பட்டி அல்வா வாங்கி சுவைத்தோம். அறைக்குச் சென்று புறப்பட்டு தட்டுக்கடை ஒன்றில் கல்தோசையும், பூரியும் சாப்பிட்டோம். எங்களை அழைத்துச் சென்றது ‘கொலபசி’ தொடர் எழுதும் எழுத்தாளர் என்பதால் அதன் சுவை மிக நன்றாகயிருந்தது.
தமிழினி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கரு.ஆறுமுகத்தமிழன் நிகழ்ச்சியில் தலைமையுரை. அன்று வெளியிடயிருந்த நூல்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கினார். இராஜராஜசோழனின் கதைகளைப் பற்றி மானசீகன் விரிவான உரை நிகழ்த்தினார். அந்த கதைத்தொகுப்பை வாங்கி வாசிக்கத் தூண்டிய உரை. புத்தகக் கண்காட்சிக்கு செல்ல நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்பினோம்.

புத்தகக்கண்காட்சியில் முதல் அரங்கில் புதுமைப்பித்தன் சீர்வாசகர் வட்ட வெளியீடாக வரவேற்றுக் கொண்டிருந்தது. மதுரையிலேயே அந்த நூலை வாங்கிவிட்டேன். அங்கு நண்பர் தாமரைச்செல்வனிடம் உரையாடி அரங்கிற்குள் சென்றேன். நானும் பசுமைநடை நண்பர் சரவணாண்ணனும் சேர்ந்து புத்தக வேட்டைக்கு கிளம்பினோம். சங்க இலக்கியம், தொல்லியல் சார்ந்த நூல்களாக பெரும்பாலும் வாங்கினேன்.
தமிழ்ச்செல்வ அண்ணன் புத்தகக்கண்காட்சிக்கு வந்திருப்பதாக சொன்னதும் மதியம் ஒரு மணிப்போல அண்ணனுடன் சேர்ந்து அரங்கை சுற்றி வந்தேன். சில நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். மூன்று மணிக்கு மேல் ஹக்கீமுடன் அறைக்கு கிளம்பினேன். கிளம்பும் வேளையில்தான் வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவினர் சந்திப்பை தவறவிட்ட நினைவு வந்தது. அங்கிருந்து வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு இரவு பாண்டியனில் மதுரை நோக்கி புறப்பட்டோம். ஆர்.பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை நூலை நண்பரிடமிருந்து வாங்கி கொஞ்ச நேரம் வாசித்தபடி வந்தேன்.
- தமிழாராய்ச்சியின் வளர்ச்சி – தொ.பரமசிவன்,
- தேயிலை மனிதர்கள் – சு.ரகுநாத்,
- அணிநடை எருமை – ஆர்.பாலகிருஷ்ணன்,
- கலையியல் ரசனைக் கட்டுரைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்,
- முப்பது கட்டுரைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்,
- கொற்றவையும் நடுகற்களும் – ரா.பூங்குன்றன், கோ.சசிகலா,
- மாலை மலரும் நோய் – இசை,
- தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம் – கோ.சசிகலா,
- மதுரை நாட்டுப்புற ஆண்தெய்வங்கள் – முனைவர் கு.அன்பழகன்,
- இசையின் முகவரி பறை – மணிமாறன் மகிழினி,
- வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்புநாயகம் ஆய்வுரை – டாக்டர் -மு.அப்துல் கறீம்,
- தமிழர் விளையாட்டுகள் – இரா.பாலசுப்பிரமணியம்,
- பண்டைக்கால வானவியலாளர்கள் – பேரா.சோ.மோகனா,
- பொழுதுபோக்கு வானியல் – யா.பெரல்மான்,
- திசைகளும் தடங்களும் – சுகுமாரன்,
- நிகழ்பாடு – மகுடேசுவரன்,
- பேரெழில் வாழிடம் – மகுடேசுவரன்,
- சுற்றுலா ஆற்றுப்படை – மகுடேசுவரன்,
- இரவு வானின் வழிகாட்டி -தொகுப்பாளர் பரமேஸ்வரன்
ஆகிய நூல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். இவை எல்லாவற்றையும் இந்தாண்டு மதுரை புத்தகத் திருவிழாவிற்குள் வாசிக்க வேண்டும். நன்றி!
படங்கள் உதவி – சரவணன், வெற்றிவேல்
Sirappaha irunthathu thangaal payana katturai.Vazhga valamudan.
ve.subramanian,
TIRUNELVELI.