
தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலானவை ஈம எச்சங்கள் கிடைக்கும் புதைவிடங்களாக இருந்த நிலையில் இதுவரை கிடைக்காத அளவுக்கு ஒரு பெரிய பரப்பில் மக்கள் வாழ்ந்த கட்டிடப்பகுதிகளடங்கிய ஒரு வாழ்விடத் தளமாகக் கிடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கீழடி.

கீழடி பசுமைநடைக்கு எப்போதும்போல முந்நூறுக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். எல்லோரும் தெப்பக்குளத்திலிருந்து கீழடி நோக்கிச் சென்றோம். தென்னந்தோப்பிற்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு அகழாய்வுத் தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கீழடி அகழாய்வுக்குழிகளின் அருகே ஒரு மரத்தடியில் கூடினோம்.

செப்டெம்பர் 2018-இலிருந்து நான்காம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டுவரும் எழுவர் குழுவில் ஒரு அகழாய்வாளரான ஆசைத்தம்பி அவர்கள் இந்த இடத்தில் கிடைத்த பொருட்கள் குறித்தும் தொல்லியல்துறையின் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். இவர் இத்துறைக்கு வருவதற்கு முன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள சான்றுகளை மேற்கோள் காட்டிப் பேசியதோடு, அகழாய்வுப் பொருட்களைப் பற்றி பேசும்போது நெகிழ்வோடு பேசினார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இதுவரை 39க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது. இவை போக, நினைவுச்சின்னங்களைப் பராமரித்தல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளையும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.
கீழடியைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். தமிழ் நிலத்தில் இதுவரை நடந்த பல ஆய்வுகளில், வாழ்விடப் பகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது; இருந்தாலும் மக்கள் வாழ்ந்ததைக் குறிக்கும் ஈமச்சின்னங்கள் போன்ற சான்றுகளே அதிகம் கிடைத்திருக்கின்றன. அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு போன்ற துறைமுகப் பகுதிகளில் அகழாய்வுகள் நடந்துள்ளன. அதன் வழியாக மக்கள் வாழ்விடப் பகுதிகள் அருகில் இருந்தது என அறியலாம். ஆனால், மக்கள் வாழ்ந்த கட்டிடப் பகுதிகள் கடந்த 50-60 வருடங்களில் தமிழகத்தில் கிடைக்கவில்லை. கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில் 110 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய இந்த தொல்லியல் மேடு கிடைத்தது.

அ.முத்துக்கிருஷ்ணன் சொன்னது போல வைகையாற்று நாகரிகத்தின் தொல்லியல் எச்சங்களைத் தேடுகிற exploration என்கிற அந்த மேற்பரப்பு ஆய்வு எப்படி நடந்ததென்றால் வைகைக்கு வடகரையிலும், தென்கரையிலும் எட்டெட்டு கிலோமீட்டர் தொலைவில் கிராமம் கிராமமாக நடந்தே போய் பார்ப்பது. மேற்பரப்பில் பானையோடுகள், மணிகள் போன்ற தடயங்கள் கிடைக்கும். அவற்றோடு அக/புறச் சான்றுகளான இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். இந்த இடத்தைப் பொறுத்தவரை கூட கொந்தகை, கீழடி இரண்டு கிராமங்களிலும் 11-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கோயில்கள் உள்ளன. இதில் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். இப்பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புப் பகுதிகளாக இருப்பதற்கான வலுவான சான்றுகளாக உள்ளன.
மேற்பரப்பு ஆய்வில் ஒரு தொல்லியல் மேடு (archaeological mound) கிடைத்தபிறகு சமஉயர வரைபடம் தயாரிக்கும் contour survey மேற்கொள்வோம். அதன்படி மேடான இடத்திலிருந்து சரிவான இடம் நோக்கி ஆய்வுக்குழிகளை அமைப்போம். நாம் இப்போது அமர்ந்திருக்கும் இடந்தான் இந்த 110 ஏக்கர் தொல்லியல் மேட்டில் உயரமான பகுதி. உங்கள் இடதுபுறந்தான் முதன்முதலில் ஆய்வுக்குழிகள் வெட்டப்பட்டன. முதலில் உறைகிணறுகளும், பானையோடுகளும் கிடைத்தன. பிறகு அக்குழிகளை விரிவாக்கம் செய்தபோது கிழக்கு மேற்காக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் கட்டிடப்பகுதியும் கிடைத்தது.
தொல்லியல் ஆய்வு நடைமுறைகளைப் பற்றி இன்னும் விளக்கவேண்டியுள்ளது. ஒரேயடியாக மேடு முழுவதையும் மொத்தமாகத் தோண்டிவிட முடியாது. 10க்கு 10 என்ற அளவில் அகழாய்வுக்குழிகள் அமைக்கப்படுகின்றன. ஆய்வுக்குழிகளை அமைப்பதற்கென்று சில உலகளாவிய விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் 2-3 செமீக்கு மேல் கொத்தக்கூடாது. அங்குலம் அங்குலமாக கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு குழியில் கிடைக்கும் பொருட்களை வைத்துதான் அடுத்த குழியை எங்கு எடுப்பது என்று முடிவெடுப்போம். உள்ளுணர்வின் உதவியும் தேவை.
தமிழகத்தில் ஆய்வுக்குழிகளைத் தோண்டுவதற்கான அனுமதி ஜனவரி மாதம் தொடங்கி மழைக்காலம் துவங்குகிற செப்டம்பர் மாதம் வரை கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் அகழாய்வுக் குழிகளை மூடிவிடுவதுதான் வழக்கம். அவற்றை மூடிவிடுவதுதான் பாதுகாப்பு. கண்டெடுத்த தொல்லெச்சங்களை திறந்த வெளியில் வைத்தால் பருவகால மாற்றங்களால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது. மனிதர்கள் பாழ்படுத்தவும் வாய்ப்புண்டு. அதுபோக, தனியார் இடமாக இருந்தால் மூடித் தந்துவிடுவோம் என்று சொல்லித்தான் ஒப்பந்தமே போடப்படுகிறது. இந்திய அளவிலேயேகூட மூடப்படாத அகழாய்வு இடங்கள் மிகக்குறைவு. சிந்து சமவெளி அகழாய்வில் கொஞ்ச இடங்களில் – எங்கு வசதிப்படுகிறதோ அங்கு – மூடாமல் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறையைப் பொறுத்தவரை கங்கைகொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என்ற பகுதி அவ்வாறு விடப்பட்டுள்ளது.

நான்காவது கட்டமாக கீழடியில் இந்த அகழாய்வு நடந்தாலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு இது முதல் கட்டம்.
இதில் மிகப்பெரிய கருப்பு சிவப்பு பானையொன்று கிடைத்தது. எத்தனை பானை விளிம்புகள் கிடைக்கின்றன என்பதை வைத்து அது என்னமாதிரியான இடம் என்று கணிக்கலாம். உதாரணமாக நான்கு ஐந்து விளிம்புகள் கிடைத்தால் ஒரு பத்து பேர் கொண்ட வீடு எனலாம். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட பானையோட்டு விளிம்புகள் கிடைக்கும்போது அது ஒரு சேமிப்புக் கிடங்கு போலத் தோன்றுகிறது. மணிகள் தயாரிக்கும் தொழில், துணிகளுக்குச் சாயமேற்றும் தொழில், அதைச் சார்ந்து வாழ்வோரின் வசிப்பிடங்கள் என ஒரு முன்னேறிய நகர நாகரிகமாக கீழடி உள்ளது. முந்தைய கட்டங்களில் கிடைத்த பொருட்களைத் தேதியிடல் செய்யும்போது அவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது.
பெரிய வட்டை (bowl) பற்றிச் சொன்னேன். கருப்பு சிவப்பு ஓட்டாலான இவ்வளவு பெரிய கலயம் இதுவரை இந்தியாவில் கிடைத்ததில்லை. அதியமான் அவ்வைக்கு ‘நாட்படு தேறல்’ கொடுத்து விருந்தோம்பியதைப் போல உயர்குடி மக்கள் மது விருந்து நடத்தி உண்டாட்டு கொண்டாடியதைக் காட்டுவதாக இந்தக் கலயம் உள்ளது. இதை ஒரு முக்கியமான கண்டெடுப்பாகக் கருதுகிறோம்.
கருப்பு சிவப்புப் பானையோடுகளைச் செய்யும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. வைக்கும் பொருட்களோடு வினைபுரியாத வகையில் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் பளபளப்பாகச் சிவந்தும் இருக்கும். மெல்லிய இழைகளைக் கொண்ட புற்களை நிரப்பி பாண்டத்தை ‘கவிழ்த்து வைத்துச் சுடுதல்’ என்ற inverted firing முறையில் இதைச் செய்திருக்கிறார்கள். அலங்காரங்களும் செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அவை நிறம் மங்காமல் உயர் வேலைப்பாட்டுடன் இருக்கின்றன.
சிறியதும் பெரியதுவுமாக மீன் சின்னங்கள் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. அத்தகைய சிலவற்றை முழுவதுமாகத் தோண்டாமல் in situ – ஆக அப்படியே விட்டிருக்கிறோம். அழகன் குளத்தில் படகுச் சின்னம் பொறித்த பானையோடு கிடைத்ததைப் போல இது முக்கியத்துவம் வாய்ந்தது.
வட இந்தியாவில் நிறையவும் தென்னிந்தியாவில் அரிதாகவும் கிடைக்கக் கூடிய சாம்பல் நிறப் பாண்டம் வளையத்தோடு முழுமையாகக் கிடைத்துள்ளது.
கீழடுக்குகளில் கீறல்கள்/ குறியீடுகள் (graffiti marks) கொண்ட ஓடுகளும், அதற்குமேல் திசன், ஆதன் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 16க்கும் மேற்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளன.

முதல் அகழாய்வுக்குழியில் ஒரு உறைகிணறும், இரண்டாவது குழியில் 13 உறை கிணறுகளும் (ring well) கிடைத்திருக்கின்றன. ஒரே இடத்தில் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் ஒரு உறைகிணறு கிடைத்துள்ளது. நான்கு மீட்டர் ஆழத்திலும் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இது இரு குடியேற்றங்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது. காலத்தால் முற்பட்ட ஒரு குடியேற்றம் சில காரணங்களால் மண்மூடிப்போக மீள்குடியேற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இது காட்டுகிறது. சங்க காலம் தொட்டு கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியைக் காண்கிறோம்.
வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில் குறியீடுகள் ஏதும் இல்லாவிட்டாலும் சதுர வடிவிலான அதன் வடிவத்தையும் அதன் அளவையும் வைத்து பாண்டியர்களுடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறோம். இன்னும் கொஞ்சம் நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து ஆய்வும் ஆவணப்படுத்தலும் நடக்கின்றன.
ஒன்றரை மீட்டர் ஆழத்தில் தங்கத்தினாலான ஆறேழு பொருட்கள் கிடைத்துள்ளன. தங்கத்திலான தோடுகள், தொங்குதாலிகள் (pendent), காதில் மாட்டக்கூடிய வளையங்கள், பித்தான்கள் (button) கிடைத்துள்ளன. யானைத் தந்தத்திலான சீப்புகள், பிறபொருட்கள் கிடைத்துள்ளன. விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட அம்பு முனைகள் கிடைத்துள்ளன.
பெரிய விலங்கு ஒன்றின் முழுமையான எலும்புக்கூட்டு புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.
காடிகள் கொண்ட கூரை ஓடுகள் (grooved roof tiles) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில் கயிறு வைத்து கழிகளில் கட்டுவதற்கு ஏற்ப இரண்டு துளைகள் உள்ளன. கழிகள் ஊன்றுவதற்கான குழிகளும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அவர்களது அறிவிற்கான சான்று.
காடியுடன் கூடிய கூரை ஓடு ஒன்றில் அதைச் செய்த முப்பாட்டன் அல்லது பாட்டியின் கை அச்சும் பதிந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு அதை நாம் தொடுகிறோம் என்பது புல்லரிப்பைத் தருகிறது.

குயவுத்தொழில் நடந்ததற்கான சான்றாக சுடுமண் பொம்மைகள் செய்யும் அச்சு (mould) கிடைத்துள்ளது. அந்த அச்சில் செய்த சுடுமண் பொம்மையும் கிடைத்துள்ளது. இவை மந்திரம், சடங்குகளுக்குப் பயன்பட்டிருக்கலாம்.
இரும்புக் கட்டி ஒன்று கிடைத்துள்ளது. இரும்புக் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் செம்புக்காலம் அதிக அளவில் இல்லை என்ற கருத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் கண்ணுக்கு மைதீட்டக் கூடிய செம்புக்கம்பி கிடைத்துள்ளது.
கண்ணாடியை உருக்கி மணிகள் தயாரிக்க ஊதுஉலைகள் இருந்திருக்கின்றன. வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு வண்ணங்களிலான மணிகள் தயாரிக்கும் நுட்பம் மிகுந்ததாக கண்ணாடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் இருந்துள்ளது. கடுகு அளவேயான மணியிலிருந்து மிகப்பெரியது வரை வெவ்வேறு பாசிமணிகள் கிடைக்கின்றன. ஒரே இடத்தில் குவியலாக 300 க்கும் மேலான மணிகள் கிடைத்துள்ளன.
பானை ஓட்டுச் சில்லுகள் விளையாட்டுப் பொருட்களாகவும், எடைக்கற்களாகவும் பயன்படத்தக்கவகையில் செதுக்கப்பட்டுள்ளன.
நாகரீக வளர்ச்சியின் அடிப்படையான சக்கரங்கள் கிடைத்துள்ளன. பானைகளுக்கு வண்ணந்தீட்டுவதற்கான இலச்சினைகள் (emblem) கிடைத்துள்ளன. நெசவுத் தொழில் இப்பகுதியில் நடந்திருப்பதற்கு சான்றாக பருத்தியிலிருந்து நூலைப் பிரிப்பதற்கான நூற்புக்கதிர்கள் (தக்ளி, spindle-whorl) நிறைய கிடைத்துள்ளன.
மண்ணில் செய்தது முதல் தந்தந்தில் செய்தது வரையான விளையாட்டுச்சாமான்கள், பகடைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைக்காததான ‘அகேட்’ என்ற பொருளாலான சாமான்கள் உள்ளன. இறக்குமதி செய்யும் அளவுக்கான செல்வச்செழிப்பை இது காட்டுகிறது.
நான்காவது கட்ட அகழாய்வில் இவ்வாறு 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடி அகழாய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
அகழாய்வாளர் ஆசைத்தம்பியின் ஆசை தம்பிதான் நமது பசுமைநடை நண்பர் உதயகுமார். ஆசைத்தம்பி அவர்களின் உரைக்குப் பின் உதயகுமார் தன் அண்ணன் தொல்லியல்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தான் இதில் ஆர்வமாக உள்ளதை தன்னிலை விளக்கமாக கூறினார்.

முன்னதாக அங்கு பசுமைநடை அமைப்பாளர், கீழடியின் புகழை உலக அரங்குகளில் எடுத்துரைத்து வந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கீழடியைத் தொல்லியல்துறை கண்டடைந்ததைப் பற்றிப் பேசினார்:
மதுரை மக்களின் வரலாற்று மீதான ஆர்வமே தொடர்ந்து நம்மைப் பயணிக்க வைக்கிறது. தமிழரிடையே இன்று கீழடி அளவுக்குப் புகழ்பெற்ற அகழாய்வுத் தளம் வேறில்லை. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் ஈம எச்சங்கள் முதல் கல் ஆயுதங்கள் வரை பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன என்றாலும் பெரும்பாலானவை burial sites எனப்படும் புதைவிடங்களாக இருந்த நிலையில் கீழடி மிகப்பெரிய வாழ்விடத் தளமாக (habitation site) கிடைத்துள்ளது.
வைகைநதிக்கரை நாகரிகத்திற்கான தேடுதலில், வைகையாறு உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள 256 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றின் இருமருங்கிலும் எட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள கிராமங்களுக்குச் சென்று வீட்டிற்கு வானம் தோண்டும்போதோ, உழவுப்பணிகளின் போதோ ஏதேனும் மட்பாண்டங்கள் கிடைத்ததா? விசித்திரமான பொருட்கள் கிடைத்தா? என்று கேள்விகளோடு மக்களைச் சந்தித்து கேட்டறிந்தனர். இதில் 256 கிலோமீட்டரில் 293 இடங்கள் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையால் செய்யப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் 170 புதிய, குறிப்பிட்ட இடங்கள் இருந்தன. அவற்றிலிருந்து 18 இடங்கள்/ 9/ 3 இடங்கள் என்று வடிகட்டி வடிகட்டி கடைசியாகக் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் அகழ்வாய்வுகள் தொடங்கின. அதிகம் பாதிக்கப்படாத ஒரு மண்மேடாக (undisturbed mound) இந்த இடம் கிடைத்தது. வரலாற்றுக்காலம் தொடங்கி இன்று வரை வேளாண் நடவடிக்கை தவிர மற்றபடி மக்களால் அதிகமாகத் தொந்தரவு செய்யப்படாத இடமாக, இந்த இடம் அப்படியே கிடைத்தது. இந்த இடம் குறித்து தொடர்ந்து பேசி, தொல்லியல்துறையை அழைத்துவந்தவர் என இவ்வூரில் வசிக்கக்கூடிய ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம்.
இந்த இடத்தில் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் செய்யப்பட்டது. நான்காவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் செய்யப்பட்டது.

பேராசிரியர் சுந்தர்காளி கீழடியின் சிறப்புகளை, அகழாய்வுத் தகவல்களை விரிவாகக் கூறினார்.

எல்லோரும் அகழாய்வுக்குழிகளைப் பார்த்து வியந்தனர். தென்னந்தோப்பில் எல்லோருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சரணவன் அவர்களின் மகன் சர்வேஸ்வரன் பிறந்த நாள் கீழடியில் பசுமைநடையாளர்களால் கொண்டாடப்பட்டது. கீழடியை விட்டு வர மனமே இல்லாமல் கிளம்பினோம்.
