Archive for the ‘தமிழும் கமலும்’ Category

 

நேற்று ராத்திரி மழையீரத்தை

நக்கிக்குடித்தது சூரியன்!

மரத்தோடிறுகிய

கோந்துப் பாளமும்

மனதிளகியதால் தழுதழுத்தது!

தொண்டை கனத்த

காகம் ஒன்று

தலையைச் சிலிர்த்து

வானம் பார்க்குது

முருங்கைப் பூவைக்

குடையாய்ப் பிடித்தும்

முதுகு நனைத்ததோர்

கம்பிளிப்பூச்சி!

ஆம்! நேற்று ராத்திரி

நல்ல மழைதான்

இன்று

நத்தை மீண்டும் நகர்ந்தது. 

– கமல்ஹாசன்

உத்தமபாளையத்திற்கு சென்ற பயணஅனுபவத்தை குறித்தக் கட்டுரையிது. அதற்கு ஏன் முதலில் கமல்ஹாசனின் கவிதை இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? பயணத்திற்கு முதல்நாள் மாலை இடியும், மின்னலும் இணைந்து மிரட்ட மழை பெய்தது. மழைபெய்யும் போது ஒரு கடைவாசலில் நின்று கொண்டிருந்தேன். அருகில் உள்ள இடம் கூட தெரியாத அளவிற்கு மழை கொட்டியது. மறுநாள் சூரியன் வந்து மழையீரத்தை நக்கிக் குடித்தது.

சகோதரியின் மகனுக்கு முடியிறக்கி, காதுகுத்துவதற்காக அவங்க குலதெய்வ கோயிலுக்கு உத்தமபாளையம் சென்றோம். மதுரையிலிருந்து இரண்டு வேனில் கிளம்பினோம். வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் பாசறையினர் எல்லோரும் கடைசிச்சீட்டைப் பிடித்தோம். அரட்டையடிப்பதற்கும், அலப்பறை பண்ணுவதற்கும் ஏற்ற இருக்கை. வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் படப்பாடல்கள் போடச்சொன்னோம். தலைவரது பாடல்கள் இல்லாததால் பாடல் கேட்பதை புறக்கணித்து அரட்டையை ஆரம்பித்தோம். செக்காணூரணி தாண்டி ஒரு கடையில் தேநீர் இடைவேளை முடிந்து வண்டி ஏறியதும் பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தோம். அந்தாதி போல முடியும் அடியில் தொடங்கிப் பாடினோம். பழைய பாடல்கள், புதுப்பாடல்கள் என கச்சேரி களைகட்டியது.

வழிநெடுக மலைகள் கூடவே வந்தன. உத்தமபாளையம் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறுகுன்றிற்கு அடிவாரத்திலுள்ள முத்துக்கருப்பண சாமி கோயிலுக்கு சென்றோம். பொங்கல் வைப்பதற்கான சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஐஸ் வாங்கித் தின்று கொண்டிருந்தோம். எங்க அண்ணன் வந்து நம்ம ஆளுங்க இங்க இருக்காங்க வா போகலாம்ன்னார்.

கோயிலையொட்டிய பாதையில் சென்றோம். பின்னாலேயே குன்று அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் முன்மண்டபம் ஒன்று காணப்படுகிறது. மலைப்பாறையிலேயே சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. இரண்டு வரிசையாக சிலைகள் அமைந்துள்ளன. பார்சுவநாதர், முக்குடைநாதர் சிலைகள்தான் அதிகமிருந்தன. இங்கு வட்டெழுத்துக்கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் அச்சணந்தியின் பெயர் உள்ளது. மேலும், இதை அமைத்துத்தந்தவர்களைக் குறித்த கல்வெட்டும் உள்ளன. கழுகுமலை பயணத்தின் போது சாந்தலிங்கம் ஐயாவிடம் உத்தம்பாளையத்திலுள்ள  சமணமுனிவர்களின் சிலைகளைப் பற்றி கேட்டபோது இத்தகவலைச் சொன்னார். இந்த இடம் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மண்டபத்தின் கீழே பெரியகுகை போன்ற பகுதி காணப்படுகிறது.  அதன் உள்ளே செல்லமுடியாதபடி குப்பையாகக் கிடக்கிறது. இதைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தமிழ்மொழித்தளத்தைப் பாருங்கள்.

சமணமுனிகளின் சிலைகளிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் முன்பே மலையேறிச்செல்வதற்கு படிகள் கட்டப்பட்டுள்ளது. படியேறும் முன்  நந்தி சிலை நம்மை வரவேற்கிறது.

கொஞ்சம்படிகள் ஏறிச்சென்று பார்த்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப்போன்ற அம்மன் சிலை ஒன்று உள்ளது. அருகில் செங்கல் கட்டிடம் ஒன்றின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. முன்பு இந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம்.

குன்றிலிருந்து பார்த்தால் நாலாபக்கமும் மலைகள் தெரிந்தது. எல்லோரும் சேர்ந்து குழுவாய் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

மலையைப் பார்த்துவிட்டு கோயிலுக்குச் சென்றோம். அங்கு காவல்பூதத்தின் முன் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். இங்குள்ள மிக உயரமான காவல் பூதத்தின் சிலைகள் கருப்புசாமி சன்னதிக்கு இருபுறமும் வெளியில் இருக்கிறது. குதிரை சிலையொன்றும் உள்ளது.

சகோதரியின் மகனிற்கு முடியிறக்கினர்.

எங்க அண்ணனும் இன்னொரு தம்பியும் ஆத்திற்கு குளிக்கச் சென்றனர். நானும் இன்னொரு தம்பியும் அவர்களைத் தேடி ஆத்திற்குச் சென்றோம். நாங்கள் பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டோம். ஒரு வழியாக ஆற்றுக்குப் போனால் அதற்குள் எங்கள் நால்வரையும் வரச்சொல்லி அலைபேசியில் அலை போல மாறிமாறி அழைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் ஷேர்ஆட்டோ பிடித்துக் கோயிலுக்கு போக, ஆட்டோக்காரர் காசு குறைவாக கொடுத்துருவோம்ன்னு நினைச்சு உத்தம்பாளையத்தை எங்கள் அவசரம் தெரியாமல் சுற்றிக்காண்பித்துக்கொண்டிருந்தார். எஜமான் ரஜினி மாதிரி ஒரு சின்ன சந்தில் எல்லாம் நுழைந்து சென்றார்.

நாங்கள் நடந்து சென்றபோது ரெண்டு நெட்டு ரோடுதான் இருந்தது ஆறு. கடைசியில் இறக்கிவிட்டு நாலுபேருக்கு முப்பதுரூபாய் கேட்டார். இதை அங்கேயே சொல்லியிருந்தா கொடுத்துருப்போமே இப்படி ஊரைச்சுத்திக்காட்டணுமான்னு கேட்கலாம் என்பதற்குள் அவர் போய்விட்டார். பிறகு சாமி கும்பிட்டு எல்லோரும் சாப்பிட்டோம்.

உத்தமபாளையத்திலிருந்து வருகையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு சென்றோம்.

இங்கு சித்திரை மாதம் பெருந்திருவிழா நடைபெறுமாம்.

வைகை அணைக்குச் சென்றோம்.

தண்ணீர் குறைவாக வறண்டு இருந்தது.  அணையைச் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம்.

 

இந்தப் பயணத்தில் சமணமுனிகளின் சிலைகளைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்ல, எதிர்பாராத ஆச்சர்யமும் கூட. பயணங்கள் முடிவதில்லை.

நடைப்பயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா? இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா? பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கியிருக்கிறது. சந்தோஷப்படுங்கள் இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டிருக்கிறது.

ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்காக, ஒரே ஒரு காக்கைச்சிறகுக்காக எல்லாம் ஒருவன் சந்தோஷப்படமுடியுமா என்று கேட்கீறிர்களா? நிச்சயம் சந்தோஷப்படலாம். நீங்கள் மாமரங்களுக்கருகில், வாதாம்மரத்திற்கருகில் மட்டுமல்ல, பழந்திண்ணி வவ்வால்களோடும், அணில்பிள்ளைகளோடும், காகங்களோடும் இருக்கிறீர்கள். உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது. அலுவலகத்திலிருந்து திரும்பிவரும்போது உப்புபோட்டுக் குலுக்கிய நாவல்பழங்களுள்ள ஒரு வெங்கலக்கிண்ணம் உங்களை வரவேற்கிறதா? சந்தோஷப்படுங்கள். உங்களுக்கு பிடித்த பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று திடீரென உங்களுக்குத் தோன்றுகிறது. பஸ் ஏறிப்போகிறீர்கள். அளிக்கதவைத் திறந்து வீட்டுக்குள் கால்வைக்கும் போது மஞ்சள்பொடி வாசனையுடன் பனங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது. சந்தோஷப்படுங்கள்.

இலந்தப்பழம் கொண்டுவருகிற உறங்கான்பட்டி ஆச்சிக்காக, மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனா அக்காக்காக, திருவாசகம் படித்துக்கொண்டே பழைய செய்தித்தாள்களில் விதம்விதமாக பொம்மை செய்து தருகிற பூசைமடம் தாத்தாவுக்காக சந்தோஷப்படுங்கள். கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட மின்னணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருத்தன் சந்தோஷப்படுவானா என்று யாரும் உங்களைக் கேலி செய்தால் அந்த மெட்ரோ கேலிகளை, மாநகரக் கிண்டல்களை சற்றே ஒதுக்கித்தள்ளுங்கள். அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள். அவர்களை நீங்கள் அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.

ஓடுகிற ஆற்றில் கல்மண்டபத்து படித்துறையிலிருந்து உங்களுடைய வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கிலே நீந்திக்கொண்டு சென்றிருங்கள். உங்களுடைய நாணல்திட்டுகளுக்கு, தாழம்புதர்களுக்கு, புளியமரச்சாலைகளுக்காக நீங்கள் சந்தோஷப்படுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்து கிடக்கும் வேப்பம்பூக்களுக்காக, பூ கொறித்து பூ உதிர்த்து தாவும் அணில் குஞ்சுகளுக்காக  சந்தோஷப்படுங்கள். அரிநெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப்பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப்பழங்களுக்காக சந்தோஷப்படுங்கள். இயற்கை உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவிலே இருக்கிறீர்கள். உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப்பிந்திய மண்புழுக்கள் நெளியும். உங்கள் வீட்டுச்சுவரோரம்தான் மார்கழி மாதம் ரயில்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும். சரியாகச்சுடப்பட்ட ஒரு பேக்கரிரொட்டியின் நிறத்தில்தான் ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படமெடுப்பதற்கு தயாரானதுபோல முளைத்திருக்கும். உங்களுடைய தினங்களில் அணில் கடித்த பழமாக, வவ்வால் போட்ட வாதாம் கொட்டையாக, காக்கைச்சிறகாக கிடைப்பதெல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள். கொஞ்சம் குனியுங்கள். உங்கள்  சந்தோஷங்களை நீங்களே பொறுக்கிக் கொள்ளுங்கள்.                              

– வண்ணதாசன்( இன்று ஒன்று, நன்று – விகடன்)

பயணங்கள் இனிமையானவை. பால்பன்னுக்காக பாலமேடு நோக்கி பயணித்தது அதைவிட இனிமையானது. தித்திப்பான அந்தப் பயணத்தையும் அங்கு எடுத்த படங்களையும் குறித்த சிறுபகிர்வுதான் இந்தப் பதிவு. சந்தோஷமாக இருக்கிறது. இயற்கையின் அருகாமையில் இருக்கிறோம். இயற்கையோடு பயணிக்கிறோம் எனும்பொழுது இன்னும் சந்தோஷமாகயிருக்கிறது. நவாப்பழங்களை உலுப்பிய இடங்களுக்கருகே சென்று (சுடாத பழமாக) வாங்கித் தின்பது சந்தோஷமாகத்தானிருக்கிறது.

 கடந்த பத்து நாட்களுக்குள் பாலமேடு பக்கம் மூன்றுமுறை பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. எந்தவிதமான முக்கியநோக்கமும் இல்லை. நண்பருக்கு இருசக்கர வாகனத்தில் மிதமான வேகத்தில் பயணிப்பது பிடிக்கும். எனக்கு பின்னால் அமர்ந்து பராக்கு பார்த்துக்கொண்டு செல்வது ரொம்பப் பிடிக்கும்.

சிக்கந்தர்சாவடி தாண்டியதும் கிராமத்துச்சாலை நம்மை வரவேற்கிறது. சாலையோர மரங்கள் தரும் நிழலில் பயணிப்பது சுகமான அனுபவம். குமாரம் தாண்டியது வலசைப் பிரிவுக்கருகில் உள்ள மின்கம்பத்தில் தூக்கணாங்குருவிக்கூட்டைப் பார்த்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தப்பக்கம் பயணிக்கும் போதெல்லாம் தூக்கணாங்குருவிக்கூடைத் தேடிப்பார்ப்பது வழக்கம். கரும்புத்தோட்டத்திற்கு நடுவே பாதுகாப்பாக இருந்தது. சந்தோஷம்.

குமாரம் தாண்டியதும் இருபுறமும் மிகப்பசுமையான பாதைகளுக்கிடையில், சிலுசிலுவென அடிக்கிற காற்றில் பயணிப்பது சுகமான அனுபவம்.

மிக நெருக்கமாகத் தெரியும் மலைத்தொடர்களும், தென்னந்தோப்புகளும், வாழைத்தோப்புகளும், கரும்புத்தோட்டங்களும் என கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கிடைமாட்டு மணிச் சத்தம் கேட்டு பயணிப்பது இனிமையான அனுபவம்.

வழிநெடுக உள்ள வீடுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கூரை அல்லது ஓடு மேலே வேயப்பட்ட மண்சுவராலான வீடுகள். வாசலில் இருபுறமும் திண்ணை, முன்னால் சாணி தெளித்து இருப்பதைப் பார்க்கும் போது அங்கேயே தங்கிவிடலாமென்று இருக்கும். தென்னை ஓலைகளை வெட்டி தட்டி பின்னுவது இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் தொழில்.

பாலமேடு போய் பால்பன் வாங்கினோம். சூடாகயிருந்த பொன்னிறமான பால்பன்னை ஜீராவில் தோய்த்தெடுத்து கொடுத்தார். ஒன்றை முழுதாக தின்னமுடியவில்லை. அவ்வளவு திகட்டியது. இனிப்பை அடக்க காரத்தை வாங்கினோம். வடை வாங்கி சட்னியில் தோய்த்து தின்றோம். பாலமேட்டிலிருந்து அப்படியே நத்தம் செல்லும் சாலை அல்லது சாத்தியார் அணைப்பக்கம் போய்த் திரும்புவது வழக்கம். அந்த மலைப்பயணம் குறித்து தனியொரு பதிவு செய்யணும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப்போல பாலமேடு ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. மாட்டுப்பொங்கலன்று இந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசலைப் போய் புகைப்படமெடுத்துக்கொண்டேன். வாடிவாசல் பக்கமிருந்த கமல்ஹாசன் நற்பணி மன்ற பதாகையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினோம். மிகவும் இனிப்பாக இருந்தது. பாலமேட்டில் பால்பண்ணை உள்ளதால் இங்கு பால்கோவா, பால்பன் மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்காகவே இந்தப் பக்கம் பயணிக்கிறோம் என்று கூட சொல்லலாம்.

பாலமேடு ஊர் தொடக்கத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்றோம். சமீபத்தில் புரவியெடுப்பு நடந்திருக்கும் போல. அய்யனாரையும், கருப்பனையும் வணங்கி புரவிகளைப் படமெடுத்து வந்தோம். வழிநெடுக கொன்றை மரங்கள் குடைபிடித்து நின்றன. எர்ரம்பட்டி பிரிவிலுள்ள பெட்டிக்கடையில் தேநீர் வாங்கி அருகிலுள்ள பட்டியக்கல்லில் அமர்ந்து மரத்தில் சாய்ந்துகொண்டு தேநீர் அருந்துவது தனிசுகம்.

அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் ஓரிடத்தில் மரங்கொத்தி போன்ற பறவை ஒன்றை மின்கம்பத்தில் பார்த்தேன். அழகாக இருந்தது. நான் போய் படம் எடுக்கும் வரை நின்று கொண்டிருந்தது.

அலங்காரநல்லூர் என்றதாலோ என்னவோ நாங்கள் சென்ற அன்று முனியாண்டி நல்ல அலங்காரத்தில் நின்றார். வணங்கி வந்தோம்.

இப்பயணத்திற்கு உடன்வந்த பவர்ஸ்டார் பாசறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

இந்தப்பயணத்தில் நடந்த ஒரு கூத்தோடு இப்பதிவை முடிக்கிறேன். பாலமேட்டில் உள்ள ஏ.டி.எம்’மில் நூறுரூபாய் பணம் எடுக்கச்சென்றேன். பணம் பரிவர்த்தனை நடந்துகொண்டிருந்த போதே காலம் கடந்துவிட்டது என்பது போன்ற ஒரு வாசகத்துடன் நின்றுவிட்டது. ஆனால், பணம் எடுத்ததாக அலைபேசியில் குறுந்தகவல் வந்துவிட்டது. மறுநாள் வங்கியில் இருப்பை சரிபார்த்துவிட்டு மேலாளருக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை  ‘பணமும் வரவில்லை; ரசீதும் வரவில்லை’ என்ற வசனத்துடன் எழுதிக்கொடுத்துள்ளேன். இந்த வரிகளை வாசித்து வாசித்து அவரும் சந்தோஷமாய் இருக்கட்டும். நீங்களும் சந்தோஷமாகயிருங்கள்.

தொடர்புடைய பிற பதிவுகள்

சாத்தியார் அணையும் கல்லுமலை கந்தன் கோயிலும்

அருகிவரும் இசைக்குறிப்புகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்

எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம்தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.   

– கமல்ஹாசன்

நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் பல மனிதர்களில் சிலரை பார்த்தவுடனே எந்த காரணமும் இல்லாமலே நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அப்படித்தான், கமல்ஹாசன் அவர்களைப் பார்த்த முதல் நாளே மிகவும் பிடித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் மீதான அன்பு நடிகர், ரசிகர் என்பதையும் தாண்டிப் புனிதமானது. அபூர்வசகோதரர்களில் சர்க்கஸ் கலைஞனாக வரும் ‘அப்பு’ கமலை இளம்வயதில் மிகவும் பிடித்தது. ஒலியும் ஒளியும் போடும்போதெல்லாம் அடுத்த பாட்டு கமல் பாட்டாக இருக்க வேண்டுமென்று வேண்டுவேன். எங்கப்பா, சித்தப்பா மற்றும் சகோதரர்கள் எனப்பலரும் எங்கள் வீட்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் கமல்ஹாசனும் ஒருவர்.

கமல்ஹாசனும் சித்திரவீதிக்காரர்தான். அவருக்குச் சித்திரங்களின் மீது விருப்பம் அதிகம் என்பதை அவரது படங்களிலேயே நாம் காணலாம். அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் ஓவியராகவே வருவார். அந்தப்படத்தில் மதன் வரும் காட்சியில் மறைந்த ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நடிப்பதாக இருந்ததாம். ராஜபார்வையில் அந்திமழை பொழிகிறது பாடலில் மாதவி மரத்துக்கருகில் நிற்கும் கமல்ஹாசனை வரைந்து கொண்டிருப்பார். அப்படியே ஓவியத்திலிருந்து கமல்ஹாசன் நடந்து வருவார். அதேபோல, அபூர்வசகோதரர்களில் அண்ணாத்தே ஆடுறார் பாட்டு தொடக்கத்தின்போது ஜனகராஜின் கையிலுள்ள கமல்ஹாசன் ஓவியத்திலிருந்து உருவமாக மாறிவருவார். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு ஓவியர் வருவார். அவர் அப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரம். காக்கிச்சட்டை படத்தில் கதாநாயகி அம்பிகா ஓவியராக வருவார். அந்தப்படத்தில் கமல்ஹாசனை மிக அருமையாக பல விதங்களில் வரைந்திருப்பார். விருமாண்டி படத்தில் ஒரு ஓவியர் வருவார். படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் சித்திரமாக வரைந்துகொண்டேயிருப்பார். கமல் கிணற்றில் அபிராமியுடன் இருக்கும் காதல்காட்சி முதல் நீதிமன்றத்தில் அடிக்க ஓடிவரும் காட்சி வரை நிறையக்காட்சிகளை வரைந்து பதிவு செய்து கொண்டேயிருப்பார். ஆளவந்தான் படத்தில் நந்தகுமார் கதாபாத்திரம் ஓரிரு இடங்களில் கார்ட்டூனாக காட்டியிருப்பார்கள். அதற்காக நிறைய ஓவியங்களை வரைந்திருப்பார்கள். உன்னைப்போல் ஒருவனில் கமல்ஹாசன் சாயல்களை சொல்ல ஒருவர் கணினியில் வரைந்து கொடுப்பார். அதே போல இந்தியனிலும் கிழவர் கமல்ஹாசனைப் படமாக வரைந்து மிகப்பெரிய பதாகையாக வைத்திருப்பார்கள். பஞ்சதந்திரத்தில் ஒரு நீர்வண்ண ஓவியப் புத்தகம் ஒன்றிலிருந்து கதை பின்னோக்கிப் போகும். சிம்ரன் குழந்தைக்கு கமலின் முந்தைய வாழ்க்கையைப் படத்தைக் காண்பித்துக் கதை சொல்லிக்கொண்டே உணவு கொடுத்துக்கொண்டிருப்பார். மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் பாடலில் கமலும் அவரது காதலியும் சுவற்றில் ஓவியம் வரைவது போன்ற காட்சி வரும். அதுவும் அப்பாடல் பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் மிகவும் வித்தியாசமாக எடுத்திருப்பார்கள். ஹேராமில் கூட ஆதிமூலத்தின் ஓவியங்களைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். இப்படித் தன் படங்களில் ஓவியங்களை, ஓவியர்களை கமல்ஹாசன் அதிகம் காட்டியிருப்பார்.

கமல்ஹாசனை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்று விரும்பினேன். என் விருப்பத்தை எப்பொழுதும் மதுரை நிறைவேற்றிவிடும். நான்மாடக்கூடலிலேயே கமல்ஹாசன் தனது சண்டியர் படத்துவக்கவிழாவைத் துவங்கினார். சண்டியர் படத்துவக்கவிழாவிற்கு மறுநாள் எனக்கு இயற்பியல் முழுஆண்டுத்தேர்வு. ஆனாலும், கமல்ஹாசனைப் பார்த்துவிட்டு, தேர்வன்று அதிகாலை அழகரையும் பூப்பல்லக்கில் பார்த்துவிட்டுப்போய்த் தேர்வெழுதித் தேறினேன். இரண்டு அழகர்களைக் காணும் வாய்ப்பைத் தந்த அந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவை மறக்க முடியாது.  அதற்குப் பிறகு நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு இராஜாமுத்தையா மன்றத்தருகில் சிலை திறந்த அன்றும் கமல்ஹாசனை மற்றொருமுறை காணும் வாய்ப்பை மதுரை மீண்டும் பெற்றுத் தந்தது. கமல்ஹாசனும் நம்ம தென்பாண்டிநாட்டான்தானே.

‘தமிழ்வையை’யின் கரையிலுள்ள இராமநாதபுரத்தில் பிறந்த காரணத்தால் கமல்ஹாசனுக்கு தமிழ் மீது பற்று சற்று அதிகம். நடிகராயிருந்த போதும் மய்யம் எனும் இலக்கியப்பத்திரிக்கை நடத்தும் அளவு தமிழ் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பும் நடிகர் கமல்ஹாசன்தான். ஒரு நேர்காணலில் தொ.பரமசிவன் அய்யாவை சந்தித்ததை மிகவும் முக்கியமாக குறிப்பிடுகிறார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா கமல்ஹாசனுடைய நண்பர். மேலும், சுந்தர ராமசாமியையும் ஒருமுறை நேரில்போய் சந்தித்திருக்கிறார். ஜெயகாந்தன், தொ.பரமசிவன், கவிஞர் புவியரசு, ஞானசம்பந்தன், மனுஷ்யபுத்திரன், ஞானக்கூத்தன், ரா.கி.ரங்கராஜன், பாலகுமாரன், நீலபத்மநாபன், பிரளயன், மதன் எனப் பலருடனும் நட்புடன் இருக்கிறார். கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு கமல்ஹாசன் தன் நற்பணிமன்றத்தின் மூலமாக விழா எடுத்தார். அன்று கமல்ஹாசன் ஜெயமோகனின் கொற்றவையை பலமுறை வாசித்ததாக கூறினார். அதைப் படித்ததும் வியப்படைந்தேன். கமல்ஹாசனின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது தொ.பரமசிவன் அய்யா கமல்ஹாசன் குறித்து பேசிய பொழுது

கமல் சிறந்த வாசகர். மருதநாயகம் படத்திற்காக சில புத்தகங்களை வாசிக்கச்சொல்லி நான் அவரிடம் படிக்க பரிந்துரைத்த போது அதையெல்லாம் தான் வாசித்துவிட்டதாகக் கூறி மற்ற மொழிகளிலும் வந்த சில புத்தகங்களை எல்லாம் வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஆய்வு மாணவன் போன்ற அவரது உழைப்பைக் கண்டு வியந்தேன். மேலும், கமல்ஹாசன் கோணங்கி வரை வாசிக்கிறார். இப்ப உள்ள பல வாத்தியார்களுக்கு கோணங்கி யாருன்னே தெரியாது. அதனால் கமல் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்யாதது ஒருவகையில் நல்லதுதான். அப்படியில்லையென்றால் இந்த அளவு வாசிப்பு அவருக்கு கிட்டியிருக்காது

என்றார். கமல்ஹாசனின் இலக்கிய ஆர்வத்திற்குச் சான்றாக தொ.பரமசிவன் அய்யா சொன்ன இந்த ஒரு விசயம் போதும். கமல்ஹாசன் நடித்த அவள் அப்படித்தான் பட வசனகர்த்தாக்களில் வண்ணநிலவனும் ஒருவர்.

கமல் ஒருமுறை விகடனில் தன் வீடு குறித்துப் பேசும் பொழுது அவரது நூலகம் குறித்துச் சொன்னது:

என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைப் படிக்கிறது, எழுதறது எல்லாமே இங்கேதான்! ஷேக்ஸ்பியர், கம்பன், சித்தர்கள், காளிதாசர், பாரதி, ஜெயகாந்தன், லா.ச.ரா, மில்டன், கீட்ஸ், தேவதச்சன், வண்ணதாசன், தொ.பரமசிவம் எல்லோரும் இந்த ரூம்லதான் இருக்காங்க.

கமல்ஹாசனது திரைக்கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான நாவல்கள் எனலாம். உதாரணமாக, மகாநதி, அன்பேசிவம், தசாவதாரம்.

 விஜய் தொலைக்காட்சி மதுரை திருமலைநாயக்கர் மகாலில் கமலும் தமிழும் என்ற நிகழ்ச்சி நடத்தியபோது தமிழின் இலக்கிய ஆளுமைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு எடுத்த முக்கியமானதொரு விழா எனலாம். அன்று எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பிரளயன், ஞானசம்பந்தன், சிவசங்கரி, ஷாஜி, இரா.முருகன், கபிலன், சண்முகராஜா, இயக்குனர்கள் சசிக்குமார், சேரன், சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு சிறந்த கலைஞன் மற்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கலைஞானி கமல்ஹாசனும் அப்படித்தான் மற்ற கலைகளின் மீது விருப்பம் கொண்டவர். வீதிநாடகம் குறித்த கமல்ஹாசனின் விருப்பத்தினால்தான் அன்பே சிவம் படத்தில் வரும் நாட்டுக்கொருசேதி சொல்ல என்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை வீதிநாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரளயன் அவர்களைக் கொண்டு எடுத்திருப்பார். அந்த படத்தில் பிரளயனும் ஒரு காட்சியில் வருவார். பிரளயனின் வீதிநாடகங்களை இரண்டுமுறை மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது பெரும்பாக்கியம் என நினைக்கிறேன். தசாவதாரத்தில் தோற்பாவைக்கூத்து, அன்பேசிவத்தில் வீதிநாடகம், விருமாண்டியில் தேவராட்டம் (அதைச் சரியாக கம்பளநாயக்கர் வீட்டுவிழாக்களில் நடைபெறும் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்), அபூர்வசகோதரர்களில் புலியாட்டம், தேவர்மகனில் தப்பாட்டம், சிலம்பாட்டம், சலங்கைஒலியில் பரதக்கலைஞனாக, அபூர்வராகங்களில் மிருதங்கக்கலைஞனாக என தன் படங்களில் மற்ற கலைகளையும் காட்டியிருக்கிறார். புலியாட்டம் என்று ஒரு புத்தகம் வாசித்த போது அதில் அந்நூலாசிரியர் திரைப்படத்தில் புலியாட்டத்தை சிறப்பாக காட்டியது அபூர்வசகோதரர்களில்தான் என்கிறார்.

கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் ஓரிரு காட்சிகளில் கமல் வரும் படங்கள்கூட எனக்குப் பிடிக்கும். உதாரணத்திற்கு தில்லுமுல்லு, மகளிர் மட்டும், நளதமயந்தி. மறக்க முடியாத படங்கள் என்றால் தனிப்பதிவே எழுத வேண்டிவரும். அபூர்வசகோதரர்கள், உன்னால்முடியும் தம்பி, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, உயர்ந்த உள்ளம், சத்யா, குணா, தெனாலி, அன்பேசிவம், விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களில் சில காட்சிகளில் ஒன்றிப்போய் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன். அதுவும் வேலை கிடைக்காத நாளில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் பார்த்துக்கொண்டிருந்த போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வி.கே.ராமசாமி இறந்த பிறகு ஒரு கடையில் கணக்குபிள்ளை இறந்துட்டாருன்னு சொல்லும் காட்சி, பழம் விற்கும் பாட்டி இரண்டு ரூபாய்க்கு மூணுபழம் எனும்போது கமல் மூணுரூபாய்க்கு இரண்டுபழம் கேட்கும் காட்சியில் அந்தப்பாட்டியின் உயர்ந்த உள்ளம், கழிவுகளை அள்ளுவதற்காகத்தான் குடித்ததாய் அம்பிகாவிடம் புலம்பும் காட்சி எல்லாம் பார்த்து அழுதபோது சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனாலும், அதுபோல என்னை நெகிழ வைத்த காட்சிகள் கமல்ஹாசன் படங்களில் அதிகம். ரேடியோ மிர்ச்சியில் கமல்ஹாசன் பேசுவதை அடிக்கடி போடுவார்கள். அதில் வலி குறித்து பேசும் போது ‘வலிதான் உயிர் வாழ்வதற்கான அத்தாட்சி. NO PAIN NO GAIN’ என்று கூறிவிட்டு ‘வலியுடன் கமல்ஹாசன்’ என்பார். அதை கேட்டதும் எனக்கு மனசு ரொம்ப வலிக்கும்.

அன்பே சிவம்’ படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு குடையை வைத்து சண்டையிடும் காட்சி கமல்ஹாசனின் படங்களில் எனக்கு பிடித்த சண்டைக்காட்சி. அந்தப்படத்தில் இறுதியில் வரும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவைதான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.

கமல்ஹாசன் படங்களில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அதிலும் கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடிய சில பாடல்களை மற்றவர்கள் பாடினால் அந்தளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். உதாரணமாக ‘நினைவோ ஒரு பறவை, விக்ரம், கடவுள்பாதி மிருகம்பாதி, ஆழ்வார்பேட்டை ஆளுடா, சுந்தரிநீயும் சுந்தரன்ஞானும், கண்மணி அன்போடு, தென்பாண்டி சீமையிலே, ராஜா கையவச்சா, உன்னவிட,  தகுடுதத்தம், முத்தே முத்தம்மா’. அதே போல பாடல்களிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். வசனம் பாடலினூடாக வருவது, வட்டார வழக்கில் பேசுவது எல்லாம் கமல்ஹாசனின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மகாநதியில் வரும் ‘தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது’ என்னும் பாடலுக்கு முன் பாரதியின் ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை கமல்ஹாசன் வாசிப்பார். அதைத்தான் எனது அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன். மேலும், அந்தப்பாடலின் இறுதியில் வரும் வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை.

அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி!

எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வியென்பதை ஏற்பதில்லையடி!

கமல்ஹாசனின் துள்ளலான பாடல்களை உற்சாகமான வேளைகளில் பாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டும் போது பாடிக்கொண்டே ஓட்டுவது மகிழ்வான விசயம். ‘மாருகோ மாருகோ, பூப்போட்டதாவணி, அண்ணாத்தே ஆடுறார், ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வானிலே தேனிலா, பேரைச்சொல்லவா’ போன்ற பாட்டுகளை கேட்டாலோ அல்லது பாடினாலோ தானாகவே தோள்கள் அசைய, மெல்லிய ஆட்டம் உடலில் பரவத்தொடங்கும். அவரைப் போல நடனமாட வேண்டும் என்பது எனது இளமைக்கால விருப்பங்களுள் ஒன்று. அப்பொழுதெல்லாம் தனியாக கண்ணாடிமுன் அல்லது விளக்கொளியில் என் நிழலைப் பார்த்து ஆடிக்கொண்டிருப்பேன். கமல்ஹாசன் படங்களில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் தனித்துவமானவை. கதாநாயகர்களில் கமலும், ரஜினியும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மைக்கேல் மதனகாமராசன், தெனாலி, அவ்வைசண்முகி, பஞ்சதந்திரம், பம்மல். K. சம்பந்தம், வசூல்ராஜா எல்லாம் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும். கமல்ஹாசன் – கிரேஸிமோகன்  கூட்டணி என்றால் எல்லாத்தொகுதிகளிலும் மகிழ்ச்சிதான்.

முன்பு தூர்தர்ஷனில் அலைவரிசை பிரச்சனை ஏற்படும் பொழுது குறுக்கும் மறுக்குமாக கட்டங்கள் தெரிய ‘கொய்ங்ங்’ என்று தடங்கல் ஒலி கேட்கும். சண்டியர் படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஏற்பட்ட தடங்கலை, படத்தின் பெயர் மாற்றியதால் பேர் போடும் போது அது போல கட்டங்களில் பெயர்கள் மட்டும் சாதாரணமாக வர பின்னால் இளையராஜாவின் இசையில் பிளிறல் போன்ற ஒலி பின்னனியில் ஒலித்துக்கொண்டிருக்கும். தனது கருத்தை நுட்பமாக பதிவு செய்திருப்பார்.

‘நடிகர்களுள் ஒரு நாயகன்’ என்று எழுத்தாளர் வாஸந்தி சொன்னது கமல்ஹாசனின் மனிதநேய குணத்திற்கு மிகவும் பொருந்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் நடிகர்களில் முதன் முதலில் கண்தானம், இரத்ததானம் என்பதையும் கடந்து உடல்தானம் செய்து அதன் மீதான கவனத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாபர் மசூதி இடித்த பொழுது அதைக்கண்டித்து திரைப்படத்துறையிலிருந்து எதிரொலித்த முதல்குரல் கமல்ஹாசனுடையது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சனை வந்தபோது தொழிலாளர் பக்கம் நின்றவர் கமல்ஹாசன். ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றியவர்.

கமல்ஹாசனைக் குறித்த செய்திகள், கமல்ஹாசனின் நேர்காணல்கள், கமல்ஹாசன் நிழற்படங்கள் என எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். கமல்ஹாசனைக் குறித்து வந்த புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கி விடுவேன். கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற விசயம் என்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் குறித்து எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் போட்டாலும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பும் சகோதரர்கள், என்னைப் பார்க்கும் போது கமல் குறித்து பேசும் நண்பர்கள், விருமாண்டி வந்த சமயம் முழுபக்க ஃப்ளோஅப் வந்ததை பார்த்ததும் எனக்கு எடுத்து வர நினைத்த ஆசிரியர் என கமல்ஹாசன் மீதான எனது அன்பை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பதிவில் உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றிகள் பல.

என்னுடைய வாசிப்பு மேம்பட கமல்ஹாசனும் ஒரு காரணம். அவருடைய நல்லசிவம் (அன்பேசிவம்), வின்சென்ட் பூவராகன் (தசாவதாரம்), உதயமூர்த்தி (உன்னால் முடியும் தம்பி) போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் வாழ்வில் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ நடிகர் என்பதோடு இல்லாமல் என்னுடைய அபூர்வ சகோதரராகவே நினைக்கிறேன். பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானையும், கடலும் மட்டுமல்ல கமலும்தான். அவரை குறித்து நினைத்தாலே இனிக்கும், பார்த்தால் பசி தீரும். உயர்ந்த உள்ளம், வெற்றிவிழா நாயகன், அன்பால் ஆளவந்த அபூர்வசகோதரர், எனக்குள்ஒருவன் மருதநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்து இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி. அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் சித்திரவீதிக்காரன்.