Archive for the ‘நாட்டுப்புறவியல்’ Category

CIMG9563

நெற்காவல், நீர்க்காவல், ஊர்க்காவல் என்று கிராமங்களில் காவல்காத்து வரும் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவரான, அய்யாத்துரை என்றழைக்கப்பட்ட மா. கிருஷ்ணசாமி 02 ஜூலை 2016 அன்று இயற்கை எய்தினார். அகவை 94 என்று தகவல். பஞ்சாலைத் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நல்ல பாடகர். ஓய்வுக்குப் பின் காலையில் எழுந்து ஊரின் கிழக்கேயும், மேற்கேயும் இருக்கும் ஐயனார் கோயில்களுக்கும், காவல் தெய்வங்களான சோணைச்சாமியும், கருப்புச்சாமியும் இருக்கும் கோயிலுக்கும், மற்ற தெய்வங்கள் இருக்கும் இடங்களுக்கும் சென்று கைகளைத் தாள நயத்துடன் தட்டி தாமறிந்த பாடல்களைப் பாடித் தொழுவதையே பணியாகக் கொண்டிருந்தார். இந்தக் கோயில்களில் செய்யவேண்டிய திருப்பணிகளை நினைவுறுத்திக்கொண்டே இருப்பார். இவரும் இவரது மைத்துனரும் நட்டு வைத்து வளர்த்த  மரங்கள் இன்று வளர்ந்து சோலையாகி நிற்கின்றன.

அவர் பாடக் கேட்டு எழுதி வைத்த சில பாடல்கள் இங்கே.

  • முதற் பாடல் கடவுள் வாழ்த்து. கட்டை கொடுத்த கம்மாளன், உடுக்கை கொடுத்த உத்தமன், சத்தம் கொடுத்த சாம்பசிவன் என எல்லாரையும் பணிந்து, குற்றம் குறை இருந்தால் கும்பிடு போட்டுத் தொடங்குவது
  • இரண்டாவது பாடல் தேனாய் மழை பொழியும் மலையாளத்திலிருந்து வந்த ஐயனாரின் பரிவாரத்தைச் சேர்ந்த சோணையாவின் பெருமையைச் சொல்லி, எதிரிகளைச் சங்கரித்து ஏழைகளைக் காத்த திறம்பாடி, மழை வேண்டுவது (கோயிலில் சோணையாவுக்கு எதிரேயுள்ள மேற்குச் சுவரில் ஒரு திறப்பு இருக்கும் – மலையாள தேசம் பார்க்க). ஐயனார் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது.
  • அடுத்த பதிவில் இடம்பெறும் மூன்றாவது பாடல் அவரது மூதாதைகள் பற்றியது. வீரண மணியமும், முத்திருளாண்டி மணியமும் கிழக்குச் சீமையிலிருந்து சிறுவாலை சமீனிடம் காவல் வேலை பார்க்க வரும் வழியில் அரியூரிலும், கோயில் பாப்பாகுடியிலும் தங்கிவிட நேர்வது. காவல் பணியில் உயிர்விட்டு “பட்டவர்”களாகி விடுவது. (மேற்கே உள்ள அய்யனார் கோயிலில் பட்டவர்களுக்குச் சிலைகள் உண்டு). இப்பாடலில் ஐயனாரின் பரிவாரங்கள் அரண்மனை, மாளிகையெல்லாம் விரும்பாமல் இண்டஞ்செடி, சங்கஞ்செடி மண்டிய மேடைகளில் திறந்த வெளியில் கோயில்கொள்வதும் பாடப்படுகிறது. கோயில் பார்ப்பார்குடி உருவான கதையொன்றும் சொல்லப்படுகிறது (ஆனால் இவ்வூரில் தற்காலத்தில் ஒரு பார்ப்பனக் குடும்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்தப் பாடல்களில் எல்லாம் நிலக்காட்சி நன்கு வருணிக்கப்படுகிறது. பயணங்களில் வரிசையாக வரும் ஊர்கள் சொல்லப்படுகின்றன. திருப்பூவனம் பக்கமிருந்து வைகை ஆற்றங்கரை வழியாக மதுரை புட்டுத்தோப்பு வருபவர்கள் “பழைய” சொக்கநாதரைத்தான் பார்க்கிறார்கள். இருளாயி, ராக்காயி, சங்கன், சமையன், சோணைமுத்து, முத்திருளாண்டி, கருப்பு, நீலமேகம், முத்தையா, வீரணன் போன்ற பெயர்கள் ஊரில் வைக்கப்பட்டு வருவதன் காரணம் தெரிகிறது (போன தலைமுறை வரை).

(1)

அரி ஓம் நன்றாள்க

குரு வாழ்க குருவே துணை

ஆதிகுருவே துணையாய் குருபாதம் தஞ்சம்

அரியைப் பணிந்து அரிபாதம் தஞ்சம் என்று

குருவைப் பணிந்து குருபாதம் தஞ்சம் என்று

மண்டு வணங்கி மாமலையும் தஞ்சம் என்று

ஆனைமுகத்தோனே அடிபணிந்தேன் நான் சரணம்

வேலவனை நான் பணிந்தேன் விநாயகனே நான் சரணம்

காரானை நான்முகனே கணபதியே முன் நடவாய்

நாவில் சரஸ்வதியை நான் பணிந்து பாடுகின்றேன்

 

தாயே சரஸ்வதியே சங்கரியே மாரிமுத்தே

நாவில் குடியிருந்து நல்லகவி சொல்லுமம்மா

குரலில் குடியிருந்து குரலோசை தாருமம்மா

 

அரியும் சிவனும் அனுதினமும் நான்மறவேன்

அரகர என்று சொல்லி அடித்தேன் பறையோசை

சிவசிவ என்று சொல்லி எடுத்தேன் சிலைமுகத்தை

 

கட்டைகொடுத்த கம்மாளனைப் பணிந்து

உடுக்கு கொடுத்த உத்தமனை நான் பணிந்து

சத்தம் கொடுத்த சாம்பசிவனைப் பணிந்து

மாதா பிதா குருவை மனதிலே நான் நினைத்து

என்பாட்டனார் ஏழ்வரையும் மிகப்பணிந்து நான்வணங்கி

ஆறுகுற்றம் நூறு பிழை அடியேன் நான் செய்தாலும்

குற்றம் நூறு செய்தாலும் கும்பிடு இருபத்தொன்று

 

(2)

தேனாய் மழைபொழியும் எங்கள்

மலையாளத்தின் சிறப்பதனைக் கூறுவேன் கேள்

 

மரகதத்தால் மாளிகையும் செம்பொன்னால்தான் இழைத்த மாணிக்க மேடைகளும்

சிறப்புடனேதான் துலங்கும் கோபுரங்கள் சூழ்ந்த திருமூர்த்தி ஆலயமும்

சத்திரமும் சாவடியும் அன்னதானம் கொடுக்கும் சார்ந்த பல மேடைகளும்

வித்தகர்கள் யாவருக்கும் பரிசுமிகக் கொடுக்கும் வீரசபா மண்டபமும்

கொடிகள் பலதுலங்க கலிங்கர் தெலுங்கர்களும் கோவலர்கள் வாழ் தெருவும்

நெடிய உயரமதாய் தங்கச் சிகரம் உள்ள நிகரற்ற மாளிகையும்

வீரமுரசொலிக்க மலையாளத்தில் சோணைக்கருப்பன் வீற்றிருந்த கதை உரைக்க

 

முண்டு கட்டி முண்டு உடுத்தும் மூணு மலையாளம்

கச்சை கட்டி முண்டுடுத்தும் கரந்த மலையாளம்

மழைபெய்து நெல் விளையும் மேல மலையாளம்

குளம்பெருகி நெல்விளையும் கோல மலையாளம்

மலையாள தேவதையாம் மண்டுக்கு அதிபதியாம்

சார்ந்த குணமே ஐயா, சற்குணமே சோணைமுத்தே

 

ஆண்டி பரதேசி அருந்தவசி பண்டாரம்

சடையும் முடியுமாய் நீ சன்யாசி கோலமுமாய்

இருளா கருப்பா நீ ஈஸ்வரா மாயாண்டி

சங்கா சமையா சப்பாணி சோணைமுத்தா

 

நாடே மயங்குது சாமி நல்ல மழை இல்லாமல்

ஊரே மயங்குது எங்கள் காயாம்பூ மன்னனுடைய

உண்மை விளங்காமல்

பயிரே மயங்குது முத்தையா

பருவமழை இல்லாமல்

நாடு செழிப்பதற்கும் நல்லமழை பெய்வதற்கும்

ஊரும் செழிப்பதற்கும் உங்கள் உண்மை விளங்குதற்கும்

ஐயன் பெருமாளை அன்புடனே நீ அழைத்து

கங்கையைத்தான் அழைத்து நாடு செழிக்க என்று

வருணனைத்தான் அழைத்து வந்துமழை பெய்திடவே

மும்மாரிதான் பொழிந்து முப்போகம்தான் விளைய

CIMG7585

 

உன்மனதை அறிந்து மனம்போல் நடக்காமல்

குணத்தை அறிந்து குணம்போல் நடக்காமல்

குடிகாரத் தெய்வம் என்று கொண்டுநோக்க மாட்டாமல்

பழிகாரத் தெய்வம் என்று பயந்து நடுங்காமல்

துப்பாக்கிக்காரன் என்று சூது அறியாமல்

பணத்தின் திமிராலே ஏழை மக்களைப்

பழிவாங்கி வந்ததினால்

அதிகாரத்தின் திமிராலே அழிந்துவந்த காரணத்தால்

மனது பொறுக்காத முத்தையா நீ

மாறுவேடந்தான் எடுத்து

பச்சைக் குழந்தையைப் போல் பாங்காய் வடிவெடுத்து

சின்னக் குழந்தையைப் போல் தெருவினிலே நீ நடந்து

துலுக்கர் தெருவினிலே சூதாக நீ நுழைந்து

கயவர் தெருவிலே கபடமதாய் நீ நுழைந்து

அரக்கர் தெருவிலே அதிகாரமாய் நீ நுழைந்து

துஷ்டனைக் கருவறுத்து துரிதமாய் வந்து நின்று

துஷ்டர்களைச் சங்கரித்து சூதாகவே நீ நுழைந்து

கயவர்களைச் சங்கரித்து கபடமதாய் நீ நுழைந்து

அரக்கர்களைச் சங்கரித்து அதிகாரமாய் நீ நுழைந்து

ஏழைகளைக் காத்த எங்கள்குல சோணைமுத்தா

CIMG5133

அடுத்த பதிவில் பட்டவன் கதைப் பாடல் காண்போம்.

அழகுமலையானுடன்

மதுரை அழகர்கோயிலுக்கு சுற்றத்தோடும், நண்பர்களோடும் பலமுறை சென்றிருக்கிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயிலுக்குள் நுழைந்தபோதுதான் அக்கோயிலின் விஸ்வரூப தரிசனம் கிட்டத்தொடங்கியது; பலவருடங்களாக கொண்டாடிய சித்திரைத் திருவிழாவை புதுக்கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன்; ஆடித்தேரோட்டம் காண தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அழகர்கோயில் நூலைப் படித்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் திருவிழாக்களுக்குச் செல்வது வழக்கம்.

அழகர்மலையிலுள்ள சிலம்பாறு குறித்து சிலப்பதிகாரம், மகாபாரதக் கதைகளிலெல்லாம் வருகிறது. சிலம்பாறு இன்று நூபுரகங்கை என்ற பெயராலேயே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. ஆடிமாதத்தில் இராக்காயி அம்மனை வணங்கி தீர்த்தமாடிச் செல்வதை கிராமத்து மக்கள் கடமையாகவே கொண்டுள்ளனர். ஐப்பசியில் அழகர் தீர்த்தத்தொட்டிக்கு நீராட வருவதால் மழை நன்கு பொழியும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று நாளிதழ்கள் சில குறிப்பிடுகின்றன. ஆனால், தைலக்காப்புத் திருவிழா ஏன் கொண்டாடுகிறார்கள் என அறிய தொ.பரமசிவன் அய்யா அழகர்கோயில் நூலில் என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்ப்போம்.

ஐப்பசிமாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்சத் துவாதசி) முதல் திருமாலையாண்டான் காலாமானார். இவர் ஆளவந்தாரின் மாணவர்; இராமானுசர்க்குத் திருவாய்மொழி கற்பித்தவர். இவர்க்கு அழகர்கோயிலுக்குள் ஒரு சன்னதியும் உள்ளது. இவரது மரபினர் இக்கோயிலில் ஆசார்ய மரியாதையினைப் பெற்று வருகின்றனர்.

இறைவன் தேவியரின்றித் தனித்துச் சென்று நீராடுகிறார். குடத்து நீரில் நீராடாமல், அருவியின் கீழ் உடுத்தவை, அணிந்தவையுடன் நின்று நீராடுகிறார். இன்னும் தமிழ்நாட்டில் பிராமணரல்லாத சாதியினர், ‘இறப்புத் தீட்டு’ கழியும் நாளில் தலைக்கு எண்ணெயிட்டு நீராடுவதைக் காணலாம். தமிழ்நாட்டு வைணவத்தில் குருவின் சிறப்பை விளக்கிக் காட்டும் இத்திருவிழா இக்கோயிலுக்கேயுரியது. பிற வைணவக் கோயில்களில் இல்லை.

தொ.பரமசிவன் (அழகர்கோயில்)

அழகர் மலை மேலுள்ள தீர்த்தத்தொட்டிக்கு நீராடச் செல்லும் தைலக்காப்புத் திருவிழாவிற்கு செல்ல வேண்டுமென்று ஓரிரு வருடமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். இந்தாண்டு நவம்பர் 4 மொகரம் பண்டிகைக்கு அரசு விடுமுறையாகிவிட, அன்று தைலக்காப்புத் திருவிழாவும் வர நல்லவாய்ப்பு கிட்டியது. திருமாலிருஞ்சோலைக்கு திருமங்கலத்திலிருந்து நண்பர்கள் இளஞ்செழியனும், வஹாப் ஷாஜஹான் அண்ணனும் உடன்வர அலங்காநல்லூர் வழியாகச் சென்றோம். நானூறு ஆண்டுகளுக்குமுன் அழகர் தேனூருக்கு அலங்காநல்லூர் வழியாகச் செல்வாராம். அப்போது அழகருக்கு அலங்காரம் செய்த அலங்காரநல்லூர் இப்போது அலங்காநல்லூர் ஆகிவிட்டது.

பதினெட்டாம்படிக்கருப்புமுன்

வழியெல்லாம் மழையால் பசுமை போர்த்தியிருந்தது. பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் கொஞ்சம் நீர் நிரம்பியிருந்தது. அழகர்கோயில் அழகாபுரிக் கோட்டைக்குள் நுழைந்தோம். ஆடித்திருவிழா போல கூட்டம் இல்லை. இரணியன் கோட்டைக்குள் சென்ற போதும் வழக்கமான நாள் போலத்தானிருந்தது. பதினெட்டாம்படியானை வணங்கிவிட்டு கோயிலுக்குள் சென்றோம். திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள சிற்பங்களின் அழகு குறித்து படித்ததால் அம்மண்டபத்திலுள்ள சிலைகளைப் பார்த்தோம். ஒவ்வொரு சிலையும் மிக அழகாக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

கோயில்யானை

வண்டிப்பாதை

கோயிலிலிருந்து அழகர் தீர்த்தமாடக் கிளம்பினார். கோயில்யானை அழகரை அழைக்க முன்வந்தது. கம்பத்தடி மண்டபம்முன் அழகர் நிற்க அங்கு வைத்து நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடினர். தமிழ்பாடல்களை கேட்க கேட்க உள்ளம் குளிர்ந்தது. அங்கிருந்த கோயில் பணியாளரிடம் இன்று என்ன திருவிழா இங்கு என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தேன். அழகர் கிளம்ப அவரோடு நாங்களும் கிளம்பினோம். திருக்கல்யாண மண்டபத்தினுள் நுழைந்து வண்டிவாசல் வழியாக பதினெட்டாம்படிக்கருப்பு சன்னதிக்கு அழகர் வருகிறார். அங்கிருந்து மலைக்கு தீர்த்தமாடக் கிளம்பினார். திருமாலிருஞ்சோலை அழகனுக்கு சுந்தரத்தோளுடையான் என்ற திருநாமமுண்டு. பொருத்தமான திருநாமம்தான். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் மதுரை அழகரை.

சோலமாமலை

மலைவலம்

நாங்கள் இருசக்கர வாகனத்தில் அழகருக்கு முன்னும், பின்னுமாக மாறிமாறிச் சென்று நிழற்படமெடுத்து அவருடன் மெல்ல சென்று கொண்டிருந்தோம். மலைக்காற்று, குரங்குகள் விளையாட்டு, பக்தர்களின் கோவிந்தாவெனும் நாமம் ஒலிக்க மலைப்பாதையில் திருமாலிருஞ்சோலையழகன் வந்து கொண்டிருந்தார். அதிலும் அழகரின் மாற்றுத் தண்டியலைத் தூக்கிச் சென்ற சிறுவர்கள் ‘சோலமாமலை’ எனவும் ‘கோவிந்தா’ எனவும் கூறிக் கொண்டு சென்றது அழகாய் இருந்தது. ‘சோலை மாமலை’ எவ்வளவு அருமையான பெயர்.

ஆராதனை

வழியில் அனுமார் மண்டபம் மற்றும் கருடாழ்வார் மண்டபத்தின் முன் அழகரை நிறுத்தி வழிபாடு நடத்தினர். அழகர் மலைக்கு தீர்த்தமாட வருவதைப் பார்த்து வழியில் பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர். கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போல என்ற சொலவம் அங்கு நிறைவேறியது. பெரும்பாலான மக்களுக்கு தைலக்காப்புத் திருவிழா குறித்து தெரியவில்லை. பழமுதிர்சோலைக்கு முன்புள்ள மலைப்பாதை வழியாக மாதவிமண்டபம் வரை தனிப்பாதை உள்ளது எனக்கு அன்றுதான் தெரியும்.

திருமாலிருஞ்சோலை

இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பாதைகளுக்கிடையில் அழகுமலையானோடு பயணமானேன். ஏகாந்தமாகயிருந்தது. முதியஅடியவர் ஒருவர் கயிறை முன்னெடுத்துச் செல்ல அவரைப் பின்பற்றி பல்லக்கைத் தூக்கி வந்தனர். மாதவிமண்டபத்திற்கருகில் ஒலிபெருக்கியில் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அழகர் மாதவி மண்டபத்திற்கு நுழைவதற்கு முன் பக்தர்கள் பூமாரி பொழிய, பல்லக்கை குலுக்க, பாடல் ஒலிக்க மேனி சிலிர்த்துவிட்டது.

மாதவிமண்டபம்

அழகர் மாதவி மண்டபத்தில் நுழைந்து அங்கு பல்லக்கிலிருந்து மாறி சிறு தண்டியலில் இராக்காயி அம்மன் சன்னதிக்கு செல்வதற்கு முன்னுள்ள மேடைக்கு வருகிறார். அழகருக்கு மிகப் பெரிய சடையை கட்டி வைத்திருந்தனர். அழகருக்கு நைவேத்தியம், ஆரத்தி என நிறைய வழிபாடுகள் செய்தனர். தைலத்தை எடுத்து அழகரின் சடையைப் பிரித்து மெல்ல தேய்த்துவிட்டார் பட்டர்.

அலங்காரன்

மக்கள் அழகர் மதுரைக்கு துலுக்கநாச்சியார் வீட்டுக்குப் போய்வந்ததால் தீர்த்தமாடி இனித்தான் தீட்டுக் கழிந்து கோயிலுக்குள் போவார் என பேசிக்கொண்டனர். சிலர் ஆடிமாதமே தீர்த்தமாடி போய்விடுவாரென்று சொல்லுவர். ஆனால், இந்தக் கதைக்கும் அழகரின் தீர்த்தமாடலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்பதை மேலே அய்யா சொன்ன தகவலிலேயே அறிந்திருப்பீர்கள். அழகர் மதுரைக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கவே வருகிறார். மற்றபடி அவர் மீனாட்சி திருமணத்திற்காக கூட வருவதில்லை. வண்டியூரில் பெருமாள்கோயிலில்தான் அழகர் தங்குவார். அக்காலத்தில் சமய ஒற்றுமைக்காக வடக்கே இஸ்லாமியப் பெண் கண்ணனை விரும்பியதை துலுக்கநாச்சியார் கதையாக்கிவிட்டார்கள் நம்மவர்கள். தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் வாசித்தபின்னே எனக்கு இத்தெளிவு ஏற்பட்டது.

தீர்த்தத்தொட்டி

அழகர் தைலம் தேய்த்து தீர்த்தத்தொட்டிக்கு நீராடச் சென்றார். நான் மாதவிமண்டபத்திற்கு மேலுள்ள மாடிக்குச் சென்று அங்கிருந்து அழகர் தீர்த்தத்தொட்டிக்கு வருவதைப் பார்த்துவிட்டு கிளம்பினேன். தொட்டியில் நீராடுவதால் தொட்டி உற்வசம் எனவும், அருவியில் நீராடுவதால் தலையருவித் திருவிழா எனவும் அழைப்பதாக தொ.ப’ அய்யா சொல்கிறார். மிக அற்புதமான அனுபவம். அங்கிருந்து மெல்லோட்டமாக பழமுதிர்சோலைதாண்டி தைலக்காப்புத் திருவிழா என வரவேற்புதட்டி வைத்திருந்த இடத்தில் நிறுத்தியிருந்த வண்டியை எடுத்து மலையடிவாரம் வந்தேன். வீட்டிற்கு அழகர்கோயில் சம்பா தோசையும், கொய்யாபழமும் வாங்கிக் கிளம்பினேன். உள்ளங்கவர்ந்த அந்த அழகர்மலைக்கள்வர் இனி எந்தத் திருவிழாவிற்கு அழைப்பாரென்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.

பசுமை கொஞ்சும் அந்நாளின் படங்களை மேலும் காண, காண்க முன்னர் இட்ட பதிவு.

தமிழ் உலகின் ஆதிமொழி. காலமாற்றத்திற்கேற்ப கன்னித் தமிழ் கணினித் தமிழாகவும் மாறி இன்றளவும் உயிர்ப்போடு வாழும் மொழி. தமிழின் முக்கியமான நூறு படைப்பாளிகளிடமிருந்து கேள்வி – பதில்களோடு கூடிய பெருந்தொகுப்பாக உயிர்மை நூறாவது இதழ் வந்தது. அதில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவின் பதிலை இதில் பதிவு செய்கிறேன்.

tho.paramasivanநமது நாட்டார் மரபுகளுக்கும் பொதுத் தமிழ் அடையாளத்திற்கும் இடையில் உள்ள பிரதான முரண்பாடுகளாக எதைக் கருதுகிறீர்கள்?

முதலில் உங்கள் கேள்விக்கு என்னால் உடன்படமுடியவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டும். சின்ன வேறுபாடுகள்தான் இருக்கின்றனவே ஒழிய, வழமையான நம் தமிழ் மொழியில் முரண்பாடுகள் இல்லவே இல்லை. பேச்சுத் தமிழும் இலக்கியத் தமிழும் ஒன்றுதான் என தொல்காப்பியரே சுட்டிக் காட்டியிருக்கிறார். வேறு எந்த மொழிக்கும் இல்லாத இவ்வகை சிறப்பு தொன்மையான நம் பழந்தமிழுக்கே உண்டு.

மதுரைபோன்ற நகரத்தில் பட்டி என்று சொல்லுடன் முடியும் ஊர்ப்பெயர்கள் வரும். இதுவே குமரியில் விளை என்ற பெயரில் முடியும் ஊர்ப்பெயர்கள் வரும். அதேபோல் சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசங்கள் ஊருக்கு ஊர் இருக்கின்றன. ஆனால் ஒரே சொல், வட்டாரத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகிறது. ஆனால் குறிக்கும் பொருள் ஒன்றாகத் தானிருக்கும். எடுத்துக்காட்டாக, நெல்லை மாவட்டத்தில் சீம்பால் என்று சொல்லப்படுவது வடமாவட்டங்களில் கடம்பு என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அப்பாவை நெல்லையில் ஐயா என்றும், கொங்குமண்டலத்தில் ஐயன் என்றும் விளிக்கிறார்கள். இங்கு சொற்கள் மாறுபட்டாலும் பொருள் மாறாதிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

பொதுத் தமிழையும் நாட்டார் மரபுகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாததுதான். அந்தளவுக்குப் பேச்சுமொழியாகத் தமிழ் தொல்காப்பியர் இயம்பும் சங்கத் தமிழாகவும் இருக்கின்றது. தமிழ் பேசுகிற அனைத்து மாவட்டங்களிலும் அவ்வூரின் சாதிய அடிப்படைகளுக்குத் தகுந்தவாறு ஒரு சொல் வேறு சொல்லாகப் பேசப்படுகிறதே ஒழிய அர்த்தங்கள் மாறுபடுவதில்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோல பழைய 32 உவமை உருவகங்கள் செத்துதான் போய்விட்டன. இன்றைய காலங்களில் கல்லாட்டம் நிற்கிறான் என்பது போன்ற உவமானங்களால் சென்னை போன்ற நகரங்களில் பேசப்படுகிறது. தொன்மைமிக்க முதன்மையான தமிழில் சின்னச் சின்ன வேறுபாடுகளைத்தான் சொல்லமுடிகிறதே ஒழிய முரண்பாடுகளைச் சொல்ல முடிவதில்லை. ஏனெனில் வழக்கியல் தமிழ், சங்கத் தமிழாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழியென்றும் சங்கத் தமிழென்றும் இனம் பிரிக்கும் வகைமையில் நம் தமிழில் இல்லையென்பதே அதனின் ஆகப்பெரும் சிறப்பு.

(உயிர்மை நூறாவது இதழ், டிசம்பர் 2011)

தொ.பரமசிவன் அய்யாவின் சில கட்டுரைகளைத் தொகுத்து சந்தியா பதிப்பகத்திலிருந்து பரண் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யா உலகமயமாக்கல் சூழலில் பண்பாடும் வாசிப்பும் என்ற தலைப்பில் பேசிய உரையை நான் தொகுத்திருந்தேன். அதை இந்நூலில் சேர்த்திருக்கிறார்கள். தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைத் தொகுப்பில் என் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கு பெரு மகிழ்வைத் தருகிறது. சந்தியா பதிப்பகத்திற்கு நன்றிகள் பல.

நன்றி – உயிர்மை, மதுரக்காரன் கார்த்திகேயன், என் விகடன்.

சொக்கப்பனை

கட்டுக்களங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்

அரிதாள் அறுத்துவர மறுநாள் பயிராகும்

அரிதாளின் கீழாக ஐங்கலத் தேன் கூடுகட்டும்

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை

–    நாட்டுப்புறப்பாடல்

மதுரை மிகப்பெரிய கிராமம். மதுரை வீதிகளில் இன்றும் பால்குடங்களும், முளைப்பாரி ஊர்வலங்களும் நையாண்டிமேளம் முழங்க நடந்து கொண்டுதானிருக்கிறது. மதுரை மிகப்பெரிய கிராமமாகயிருப்பதே அதன் பலம். எங்கள் பகுதியில் கார்த்திகைக்கு மறுநாள் சொக்கப்பனையும், பொங்கலுக்கு மறுநாள் பூரொட்டியும் கொண்டு செல்வதையும் அதைக்குறித்த தகவல்களை இதில் பதிவு செய்கிறேன்.

திருக்கார்த்திகைதான் தமிழர்களின் தீபத்திருநாள். மழையை வழியனுப்புவதற்காக தமிழர்கள் விளக்கேற்றி வழிபடுவதாக தொ.பரமசிவன் அய்யா சமயம் நூலில் கூறியிருக்கிறார். தமிழர் பண்டிகைகள் எல்லாம் பெரும்பாலும் முழுநிலவு நாட்களில் வரும். அந்தக் காலத்தில் இரவு நேரத்தில் இயற்கை வெளிச்சத்தில் விழாக் கொண்டாடிய நம் முன்னோர்களின் அறிவாற்றலை எண்ணி வியக்கிறேன். தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகைகள் முழுநிலவு நாட்களிலேயே கொண்டாடப்படுகிறது.

காய்ந்தசொக்கப்பனைதிருக்கார்த்திகையையொட்டி பெரிய கோயில்களிலும், கிராமங்களில் மந்தைகளிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சிவன் கோயில்களில் திருக்கார்த்திகையன்றும், பெருமாள் கோயில்களில் திருக்கார்த்திகைக்கு மறுநாளும் கொளுத்தப்படுகிறது. எங்க ஊர் அழகர்கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்பார்கள். அதனால் திருக்கார்த்திகைக்கு மறுநாள் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.

காய்ந்த பனை மரம், பனையோலை மற்றும் நல்ல காய்ந்த மரங்களைக் கொண்டு சிறுகுடிசை போல சொக்கப்பனைக்கு தயார் செய்வார்கள். மாலை ஏழுமணிக்கு பிறகு நல்ல நேரத்தில் ஊர் மந்தைக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு வந்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். தீ நன்கு கொளுந்துவிட்டு எரியும். எரிந்து முடிந்ததும்  கனலோடு சில குச்சிகளை வேண்டியவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதை தங்கள் வயல்களில் ஊன்றி விடுவார்கள். பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது மக்கள் நம்பிக்கை.

ஜோதி

தைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா சிறுவீட்டுப் பொங்கல். மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக்கோலமிட்டு, சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் உள்ளது. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காயவைத்துவிடுவார்கள். பொங்கல் முடிந்து 8-15 நாட்கள் கழித்து சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். சிறு வீட்டு வாசலில் பொங்கல் அன்று பொங்கலிடப்படும். பிறகு, பொங்கலையும் பூக்களால் ஆன எருத்தட்டுக்களையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.                                                                                                                                                                                                                                  – தொ.பரமசிவன்

பூசணிப்பூகிராமங்களில் மார்கழி மாதத்தில் கோலமிட்டு அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்திப் பூவை சாணத்தில் செருகி கோலத்தின் நடுவே வைப்பர். பார்ப்பதற்கே மிக அழகாகயிருக்கும். மாலையில் சாணத்தை வட்டமாக ரொட்டி போலத் தட்டி அந்தப் பூவை அதன் மேலே வைத்து பூரொட்டியாக்கி அதைக் காய வைத்துவிடுவார்கள்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாலை சிறுமிகள் அந்தப் பூரொட்டிகளை கிராமக்காவல் தெய்வக்கோயிலில் வைத்து வழிபட்டு அந்த பூரொட்டி கொண்டுபோன கூடைகளை நடுவில் வைத்து சுற்றிவந்து தானானே கொட்டி பின் பூரொட்டி மீது சூடம் பொருத்தி அதை அருகிலுள்ள மடைநீரில் விடுவர்.

கும்மி

சோனையா

வீட்டில் பெண்பிள்ளைகள் இருந்தால்தான் வாசலில் பூசணிப்பூ வைக்க வேண்டுமென்ற கருத்தும் இருக்கிறது. முன்பெல்லாம் பூரொட்டி கொண்டுவரும் சிறுமிகளோடு கூட வரும் அவர்களது மூத்த சகோதரிகளைக் காண இளைஞர்கள் கோயிலுக்கு வழிபாடு செய்ய வருவதும், அவர்கள் பார்க்கும் இடங்களில் விளையாடுவதும் நடக்கும். இப்போதெல்லாம் இளையதலைமுறையிடம் இந்த ஆர்வம் குறைந்து வருகிறது.

பூரொட்டி

நீர்நிலைகளை நம் முன்னோர்கள் கொண்டாடி வழிபட்டு இதுபோன்ற திருவிழாக்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் இன்று பிளாஸ்டிக் கவர்களையும், கழிவுகளையும் போட்டு சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். நம் முன்னோர்களின் செயல்களை மூடப்பழக்க வழக்கங்கள் என்று நிறைய ஒதுக்கிவிட்டோம். ஐம்பூதங்களையும் நேசித்துக் காத்த அந்த இயற்கையோடான மனநிலை நமக்கு வாய்க்குமா? நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எல்லாவற்றையும் வணங்காவிட்டாலும் பரவாயில்லை அவைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

kari

kathir[நண்பர் இளஞ்செழியன் அவர்கள் பொங்கல் சிறப்பிதழாக ‘கதிர்‘ (தை 2014) இதழை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ‘காரி‘ மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இங்கே. இதை வற்புறுத்தி எழுதவைத்து தமது இதழிலும் இடம்பெறச்செய்த இளஞ்செழியன் அவர்களுக்கு நன்றி.]

ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களிலும் துக்கம் அப்பிக் கிடந்தது. வயதான ஆண்கள் அழுகையை வாயில் துண்டை வைத்து அடக்கிக் கொண்டிருந்தனர். கிழவிகளும், பெண்களும் ஒப்பாரி வைத்து மாரடித்துக் கொண்டிருந்தனர். இளவட்டங்களோ தங்கள் நண்பனை இழந்தைப் போல துடிதுடித்து நின்றனர். இப்படி ஊரே உயிரற்றுப் போனது போலப் பரிதவித்துக் கிடந்தது.

ஊரில் அன்று யாரும் வேலைவெட்டிக்குப் போகவில்லை. காரி இறந்த சேதி கேட்டு சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினர். கோயில்மாட்டை இழந்து கருப்புசாமியே ஆலமரத்தடியில் தனித்து நின்று கொண்டிருப்பது போல தோன்றியது. வந்த சனங்கள் அழுத அழுகையில் அந்த ஊர் கண்மாயே நிரம்பிவிடும் போலிருந்தது. வானில் கருமேகங்கள் கூடி காரி போலத் தெரிந்தது.  மார்கழியில் சாவு அத்தனை பேருக்கும் வாய்ப்பதில்லை. பெருமாளே தனக்கு காளை வாகனமில்லையென்று வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசலைத் திறந்து காரியை அழைத்துக் கொண்டார்போல.

தப்பும், தவிலும் மந்தையில் அதிர சிறுவர்கள் காரியை வைத்து ஏதோ திருவிழா போல என்றெண்ணி இழப்பின் வலி தெரியாமல் தப்பிசைக்கு ஆடிக்கொண்டிருந்தனர். படுத்துக்கிடந்த காரியை பட்டியக்கல்லில் உட்கார்ந்திருப்பதைப் போல தூக்கி கட்டினார்கள். சந்தனத்தை மாடு மேலெல்லாம் தெளித்து அலங்காரம் செய்தனர். கொண்டுவந்த மாலையைப் போட்டு ஒவ்வொருவரும் மாட்டைத் தொட்டுக் கும்பிட்டு போனார்கள். ஊரெங்கும் காரி கண்ணீர் அஞ்சலி படத்தில் நிறைந்திருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவர் நினைவினூடாகவும் காரி  உயிர்த்தெழத் தொடங்கியது.

jallikattu

காரி ஊருக்கு வந்த புதுசில் முதன்முதலாக சல்லிக்கட்டுக்கு கூட்டிப் போன போது வழியிலேயே அத்துகிட்டு ஓடியது. அலங்காநல்லூர் வயிற்றுமலை, பாலமேடு மஞ்சமலை, அழகர்மலைப் பக்கமெல்லாம் மாட்டைத் தேடி ஆட்கள் அலைந்து திரிந்தனர். காரியோ அழகர்மலையடிவாரத்தில் பதினெட்டாம்படிக்கருப்பன் சன்னதிக்கருகில் மரத்தடியில் படுத்துக்கிடந்தது. அழகர்கோயிலுக்கு வந்தவர்கள் மாட்டைக் கண்டுபிடித்து பதினெட்டாம் படிக்கருப்பனிடம் உத்தரவு வாங்கி மாட்டை அழைத்துச் சென்றனர்.

வருடந்தோறும் தைப்பொங்கலுக்கு மறுநாள் காரியை குளிப்பாட்டி வர்ணம்பூசி அழகாக அலங்கரித்து பதினெட்டாம்படியானிடம் அழைத்து வந்தபின்பே சல்லிக்கட்டுகளுக்கு அழைத்துச் செல்வது அந்த ஊர் வழக்கமானது. அந்த ஊரிலும் பதினெட்டாம்படிக்கருப்பாகவே காரியை வழிபடத் தொடங்கினர்.

காரி சல்லிக்கட்டில் விளையாடுவதைப் பார்க்கவே ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். வாடிவாசலிலிருந்து காரி மற்ற மாடுகளைப் போல ஓடி வராது. மெல்ல நடந்து வரும். அதன் நடை இராஜநடை. வாடியின் வெளியே வந்து இருபுறமும் காரி பார்க்கும் போது உள்ளுக்குள் நிற்பவர்களுக்கு அடிவயிறு கலங்கும். காரியை சல்லிக்கட்டில் அடக்க நினைத்தவர்கள் அடக்கமாகிப் போனார்கள். காரி இதுவரை யாரையும் வீணாக குத்தியதில்லை.

kari

திருவிழா என்றால் காரிக்கு கொண்டாட்டந்தான். பிடிமண் கொடுப்பதில் தொடங்கி செவ்வாய் சாட்டி குதிரை எடுப்பு வரை காரிக்குத்தான் முதல் மரியாதை. கழுத்திலும், காலிலும் சலங்கை கட்டி கழுத்து நிறைய பூமாலை சூடி சல்சல்லென்று நிலம் அதிர அதிர காரி நடந்து வருவதைப் பார்த்து தொழாத கைகளும் தொழும். கருப்புசாமியே காரியுருக்கொண்டு வருவதைப் போல ஆவேசமாய் விரைந்து வரும். ஒயிலாட்டமும், சிலம்பாட்டமும் காரிமுன் ஆடிவர பெண்கள் குலவையிட காரி கொண்டாட்டமாய் வருவதைக் காண வழியெங்கும் ஆட்கள் திரண்டு நிற்பர். அந்த ஊரில் காரியில்லாமல் காரியம் இல்லை.

வெள்ளாமையில் காரி இறங்கி நின்றால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அறுவடைக் காலங்களில் காரியை முதலில் வயலில் இறக்கி மேய விட்டு பின்னர்தான் கதிரறுக்கத் தொடங்குவர். காரி சல்லிக்கட்டில் சூரன். ஆனால், மற்ற நாட்களில் பரமசாது. தெருவிற்குள் சின்னப்பிள்ளைகள் காரியோடு சேர்ந்து திரிவார்கள். தங்கள் வீட்டுக்குளுதாடிக்கு கூட்டிப்போய் தண்ணி காட்டுவார்கள். அந்த அளவிற்கு பச்சப்பிள்ளைகளோடு கூடத்திரியும்.

பெண்களை வேற்றாள் யாராவது சீண்டினால் ‘’பெரிய ஆம்பிளையா இருந்தா எங்கூர் காரிய புடிச்சுப்பாரு, அப்படிப்புடிச்சுட்டா எங்கூர்காரிக பூராம் ஒன்னைவே கட்டிக்கிறோம்’’ என சவால் விடும் அளவிற்கு காரி மீது நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் காரியின் பெருமையை அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘’காரி வெறுங்கோயில்மாடு மட்டுமல்ல. என்னோட குடும்பத்த காக்க வந்த தெய்வம்ய்யா. பத்து வருசத்துக்கு முந்தி எம் மக கல்யாணத்துக்கு வாங்கி வச்சுருந்த நகையைத் திருடிட்டு இந்த ஊர் கம்மா வழி திருட்டுப்பயக ஓடிவர கரையில நின்ன காரி அவன்ய்ங்கள குத்திப் போட்டுருச்சு. நாங்க நகையத் தேடி வர்றோம். அவன்ய்ங்க கரையில காரி காலடில கிடந்தான்ய்ங்க. காரி கால்ல விழுந்து நகையை மீட்டுட்டு போனோம். எம்மகபிள்ள பேரனுக்கு காரிக்கண்ணன்னுதான் பேரு வச்சுருக்கோம்’’ என்று அவர் சொல்ல சுத்திநின்ன சனங்களெல்லாம் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘இந்தூரு பொம்பளைக காடு கரையப் பக்கம் ஒத்தசத்தையில தைரியமா நடந்துபோறோம்ன்னா காரியிருக்கிற தெம்புதான் காரணம். இராத்திரி வாசல் திண்ணையில கதவத் தெறந்து போட்டுட்டு படுத்து தூங்குறமே ஒரு திருட்டு போயிருக்குமா நம்ம ஊர்ல? கருப்பசாமி கணக்கா ஊர இராத்திரிபூராம் சுத்தி வந்து நம்மள நிம்மதியா தூங்க வைச்ச சாமிய்யா காரி’’ என அங்கிருந்த பெண்ணொருத்தி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு மாரடித்து அழுது கொண்டிருந்த கிழவியொன்று ஒப்பாரியாக காரியின் பெருமையைப் பாட்டாகப் பாடத் தொடங்கியது.

நீ போகாத சல்லிக்கட்டு இல்ல!

நீ வாங்காத பதக்கம் இல்ல!

எமனோட கொட்டத்த அடக்க

எமலோகம் போயிருக்கியோ?

அய்யா எங்களயும் கூட்டிப் போயிறு

ஒன்னவிட்டு ஒத்தயில

நாங்க இங்கிருக்க மாட்டோம்!

அந்த ஊருக்க வர்ற பஸ்ஸூ கண்டக்டர், டிரைவரும் மாலையோடு வந்து காரிக்கு போட்டு வணங்கினர். கண்டக்டர் சொன்னார் ‘இந்த ஊருக்கு மொதநாளு பஸ்ஸ கொண்டுவந்து மந்தையில நிறுத்துறோம். எல்லோரும் வேடிக்கைப் பார்க்க சுத்திவர காரி வந்து காலு ரெண்டையும் தூக்கிப் படியில வச்சுச்சு. இன்னிக்கு வரைக்கும் இந்த பஸ்ஸூ ஒரு ஆக்ஸிடென்டு ஆனதில்ல. பெரிய ரிப்பேருன்னு நின்னதில்ல. எல்லாங் காரியோட இராசி’’.

காரி இறந்த சேதி கேட்டு அந்த ஊர் பள்ளித் தலைமையாசிரியர் துடிதுடித்து ஓடிவந்தார். பெரியமாலையும், சீப்புச்சீப்பாக நாட்டுவாழைப்பழமும் கொண்டு வந்து வைத்து வணங்கினார். காரி உயிரோடிருக்கையில் பள்ளிக்கூடம் முன்புள்ள மரத்தடியில்தான் படுத்திருக்கும். பள்ளிக்கூடம் தொடங்கி முதல்மணி அடித்ததும் தலைமையாசிரியர் அறைமுன்பு காரி போய் நிற்கும். அவரும் அதற்காக வாங்கி வைத்திருக்கும் நாட்டு வாழைப்பழங்களை அதற்கு கொடுத்து கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இது தினசரி வழக்கம். அவர் எல்லோரிடமும் காரி என் மூத்த மகன் மாதிரி என்று சொல்லிக் கொண்டிருப்பார். இன்று காரி மரித்துக் கிடப்பதைப் பார்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த தலைமையாசிரியரைக் கண்டு பள்ளிக்கூட பிள்ளைகளே வாய்பிளந்து ஆச்சர்யமாய் பார்த்தனர். அன்று பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஊரிலிருந்த கண்மாய்கரை ஆலமரத்தடியில் காரியை புதைத்து வழிபட முடிவானது. பெரிய மாட்டுவண்டி கட்டி காரியைத் தூக்கி வைத்து வீதிவீதியாக வலம் வரக் கிளம்பியதும் அதுவரை பொறுத்திருந்த வானும் அழத் தொடங்கியது. மார்கழிமாத பெருமழை அன்று பொழிந்தது. கொட்டும் மழையிலும் மாலையும் கண்ணீருமாய் ஊரே ஊர்வலமாய் போனது. ஊரிலிருந்த ஆண்கள் எல்லோரும் சாதிபேதமில்லாமல் மொட்டையடித்து கண்கள் ஊற்றெடுக்க கண்மாயில் குளித்து வீடு திரும்பினர். வந்த சனமெல்லாம் காரி சல்லிக்கட்டு விளையாடுற விதம், காரியின் சாகசங்களை பத்திபேசிக்கிட்டே சென்றனர்.

அன்று மாலை அந்த ஊரில் சினையாயிருந்த  பசுமாடொன்று காளஞ்கன்று ஈன்றது. கருப்பாயிருந்த அந்த இளஞ்கன்றை அந்த ஊர்க்காரர்கள் காரியின் மறுபிறப்பென்றே நம்பினர். இளங்காரி இன்னும் கொஞ்ச நாட்களில் ஊரைக் காக்க கிளம்பப் போகிறது. கருப்பசாமியின் வீதிவலம் தொடங்கப் போகிறது.

படங்கள்  –  குணா அமுதன், ஒச்சப்பன், முகநூல். நன்றி

தோல்பாவைகள்

என்ன செய்ய நானும்

தோல்பாவைதான்

உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்

நூல் பாவைதான்!

–    வாலி, தசாவதாரம்

தோல்பாவைக்கூத்து திரைப்படக்கலையின் முன்னோடி.  இராமாயணமும், புராணக்கதைகளும் அன்று எளிய மக்களைச் சென்றடைய பாவைக்கூத்து உதவியது. ஆனால், இன்று அழிவின் விழிம்பில் உள்ள பல நாட்டுப்புறக்கலைகளில் தோல்பாவைக்கூத்தும் அடங்கும்.

இராமயணக்காட்சி

Ambedkarஆறு ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் நிகழ்ந்த சிறு பகுதியை தோல்பாவைக்கூத்தில் பார்த்தேன். அம்பேத்கரும் காந்தியும் சந்திக்கும் காட்சியெல்லாம் அதில் காண்பித்தார்கள். மறக்க முடியாத மிக அற்புதமான நிகழ்வு. மற்றொருமுறை, மதுரை கிழக்கு சித்திரைவீதியில் தெருவோரத்திருவிழாவில் இராமாயணக்கூத்து பார்த்தேன். போர்க்காட்சிக்கு தீ அம்புகள் பாய்வதை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

தோல்பாவைகள் ஆட்டுத்தோலில் செய்யப்படுகின்றன. தோலை நன்கு ஊறவைத்து அதிலுள்ள ரோமங்களை நீக்கி நீட்டி காயவைத்து விடுகின்றனர். அதில் கரித்துண்டால் படங்களை வரைந்து பிசினில் வண்ணப்பொடிகளைத் தோய்த்து வண்ணங்களைத் தீட்டுகின்றனர். இப்படி வரையப்பட்ட பாவைகள் பல ஆண்டுகள் சாயம் இழக்காமல் இருக்கும்.

உச்சிக்குடும்பம், உளுவத்தலையன் போன்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் தலை, கை, கால்களை அசைக்கும்படி பாவைகளை செய்கின்றனர். இசைக்கருவியை ஒருவர் வாசிக்க மற்றொருவர் பாடல்களைப் பாடிக்கொண்டு பாவைகளை கதைக்கேற்றாற்போல் வேகமாக அசைக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான பாவைகளை வைத்து பாவைக்கூத்துகளை நிகழ்த்துகின்றனர்.

artist

கள ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா.பெருமாள் தோல்பாவைக்கூத்து குறித்தும், அக்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். இவர் இக்கலை நிகழ்த்த நிதியுதவி பெற்றுத் தந்து கலைஞர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.

மதுரை விழாவில் தோல்பாவைக்கூத்து கலைஞருடன் பேசிக் கொண்டிருந்த போது இப்போதெல்லாம் இதைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை, விழாக்களுக்கு நிகழ்த்தவும் அழைப்பதில்லையென வருத்தத்தோடு சொன்னார். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலைகளை பாடமாக்கி இக்கலைஞர்களை பேராசிரியர்களாக்கினால் நன்றாகயிருக்கும். நம்மூரில் இதெல்லாம் சாத்தியமில்லையெனத் தெரிந்தாலும் மனசு சும்மா இப்படி எதையாவது யோசிக்கிறது.

தோல்பாவைக்கூத்து

எஸ்.ராமகிருஷ்ணன் இலைகளை வியக்கும் மரம் கட்டுரைத் தொகுப்பில் தோல்பாவைக்கூத்து கலைஞர்களைப் பார்க்க கோயில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதிக்கு சென்றிருந்த அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘நாங்க எங்க போனாலும் எங்க கூடவே ராமனும் வர்றார். எங்களுக்கு அவருதான் துணை. இப்போ பிழைக்க வழியில்லாம நாதியத்து கிடக்கிறோம். அதுவும் அவர் கொடுத்ததுதான்னு நினைச்சிட்டு இருக்கோம். ஒரேயொரு மனக்குறைதான் எங்களுக்கு இருக்கு… நாங்க ஊர் ஊராகப் போயி ராமன் புகழைத்தானே பாடினோம். வேறு எதாவது தப்பு செய்திருக்கமா? எதுக்கு எங்களுக்கு இந்த நிலை, ஏன் இப்படி ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாம அல்லாடுற பிழைப்பா போச்சு. சொல்லுங்க’. அங்கு உள்ள பாவைக்கூத்து கலைஞரான பாப்பாத்தியம்மா கேட்கும் கேள்வி நம்மையும் உலுக்கிறது.

போர்பாவைகள்

ஏழுமலையானுக்கு வரும் கூட்டம் நம்மூரில் உள்ள பழமையான நிறைய கோயில்களுக்கு வருவதில்லை.  கலைகளிலும், கடவுள்களிலும் பிரமாண்டங்களை நோக்கியே மக்கள் படையெடுக்கின்றனர்.

பாவைக்கூத்து

இராமாயணப் பாவைக்கூத்து நடக்கும் நாட்களில் பட்டாபிசேகத்தன்று மழை பெய்யும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடமிருந்தது. இன்று பாவைக்கூத்து நடக்காததால்தான் மழை பெய்ய மறுக்கிறதோ என்னவோ? நேரங்காலமில்லாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் தொலைக்காட்சிகளை நிறுத்துவோம். மக்கள் கலைகளை மீட்டெடுப்போம். வாழ்க்கையை கொண்டாடுவோம்.

நாட்டுப்புறக்கலைகள் அகமும் – புறமும்

மணியாட்டிக்காரர்

அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள்(நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்.                                                                 

– ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)

இளமைக் காலத்தில் விடுமுறை நாட்களில் கிராமத்திலுள்ள தாய்வழித்தாத்தா வீட்டிற்குச் செல்வது கொண்டாட்டமான விசயம். அந்த நாட்களை இப்போது நினைக்கும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பெரிய காரை வீடானாலும் சின்ன குடிசை வீடானாலும் திண்ணையோடிருக்கும் வீடுகள், வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்கள், ஓசிக்கஞ்சி எனக் கேலி செய்யும் மாமா முறையினர், கிணற்றடியின் குளுமை என கிராமத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டேயிருக்கும். கிராமத்தின் நினைவுகளையூட்டும் ந.முருகேச பாண்டியனின் ‘கிராமத்துத் தெருக்களின் வழியே’ நூல் நல்லதொரு ஆவணம்.

கிராமங்களில் வெள்ளுடை உடுத்தி மணியாட்டிக்கொண்டு வரும் சாமியார்களை இளம் வயதில் பார்த்திருக்கிறேன். மணியாட்டிக்காரர்கள் மணியை தலைகீழாக கவிழ்த்தி அதில் கம்பை வைத்து சுழற்றும் போது வரும் மணியோசையும், மணியாட்டிக்காரர்கள் பாடும் பாட்டும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எங்கம்மா கூறினார். அந்தப் பாட்டில் நெல்லின் பலரகப்பெயர்களை சேர்த்து பாடுவதையும் குறிப்பிட்டார்.

மணி

சமீபத்தில் மதுரை கூடல்நகர் அருகே நானும் நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தபோது மணியாட்டிக்காரர்களை பார்த்தோம். அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக இப்படி மணியடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று நெல், பணம் காணிக்கையாக பெறுவதாகக் கூறினார். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் ஒன்று இருக்கிறதாம். தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பெரியவர் கூறினார்.

‘அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்’ என அன்பேசிவத்தில் இறுதியில் கமல்ஹாசன் சொல்லும் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்கள் மணியாட்டிக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குறித்து விரிவாக பதிலிடுங்களேன்.

நன்றி.

மாமதுரை போற்றுவோம்

boomboommadu

பூம்பூம் மாட்டை ஓட்டிக்கொண்டு, தோளில் உறுமியை மாட்டிக்கொண்டு வீடுவீடாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் கிராமத்துத் தெருக்களில் கவர்ச்சிகரமானவர். பூம்பூம் மாட்டின் முகத்தில் அழகிய வண்ணமயமான முகபடாம் அணியப்பட்டிருக்கும்; கொம்புகள் பல வண்ணத் துணிகளால் சுற்றப்பட்டு நுனியில் குஞ்சலம் தொங்கவிடப்பட்டிருக்கும். துணியில் ஆங்காங்கே கோலிகள், பாசிகள் பொருத்தப்பட்டுப் பார்க்க அழகாக இருக்கும். பூம்பூம்மாடு தானாகவே நடந்து போகும். மாட்டுக்காரர் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுள்ள உறுமி மேளத்தை அடித்துக் கொண்டு பின்னே வருவார். வீட்டு வாசலில் நிற்கும் மாட்டிடம், மாட்டுக்காரர், ‘இந்த வீட்டு மகராசி மகாலட்சுமி நமக்கு அரிசி போடுவாங்களா’ என்று கேட்பார். அந்த மாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டும். ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப்போகுதா’ என்ற கேள்விக்கும் மாடு தலையை அசைக்கும். மாட்டுக்காரர் கேட்கும் கேள்விகளுக்கு மாட்டின் எதிர்வினை பார்க்க வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும். அரிசியை வாங்கியவுடன் மாட்டுக்காரர், ‘அம்மாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றவுடன், மாடு முன்னங்காலை மடித்து, தலையைச் தாழ்த்தி வணக்கம் செய்வது அருமையான காட்சியாக இருக்கும். பூம்பூம் மாடு போகும் வீட்டிற்குப் பின்னால் சிறுவர் சிறுமியர் திரண்டு படை போலப் பின்னாலே போவர்கள். அந்த மாடு, மாட்டுக்காரரின் எல்லாப் பேச்சுக்கும் பணிந்து செயல்படுவது எப்படி என்று சிறுவர்கள் லயிப்புடன் பேசிக்கொள்வார்கள். பூம்பூம் மாடு இல்லாத தெருக்களாய் இன்றைய கிராமத்து தெருக்கள் வறண்டு போய்விட்டன.                                           

– ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)

கிராமங்களில் திருவிழாக் காலங்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள், சாமியார்கள், வித்தை காட்டுபவர்கள், வளையல் விற்பவர்கள், துணிமணி விற்பவர்கள் என நிறையப் பேர் வருவார்கள். பூம்பூம் மாட்டை சங்கரன்கோயில் மாடு என்றும் சொல்வார்களாம்.

இன்றும் நமக்கு ஆறுதலாக நல்ல சொற்களை யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம். பூம்பூம் மாட்டுக்காரர்கள் நல்ல விசயங்களைச் சொல்ல அதற்கு மாடு தலையாட்டும் போது மாட்டின் வழியே இறைவனே வந்து நமக்கு நல்ல வழி காட்டுவதாக தோன்றிய காலங்கள் மெல்ல மறைந்து வருகிறது. தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மாமதுரையில் இன்றும் அவர்கள் வசிக்கிறார்கள் எனும்போது பெருமையாகயிருக்கிறது.

நமக்கு நல்லகுறி சொல்லி நம்பிக்கையூட்டி தலையாட்டிச்செல்லும் அந்த மாட்டுக்காரருக்கும், பூம்பூம் மாட்டுக்கும் நல்ல வழியை மாமதுரை அருளட்டும்.

இப்போதெல்லாம்

விழுங்கிய

சந்தோஷங்களை

மெல்ல எடுத்து

அசைபோட்டு

மகிழ்ச்சியாக

மண்டை

ஆட்டுகிறேன்

பூம்பூம்மென!

–    சித்திரவீதிக்காரன்

மாமதுரை போற்றுவோம்

குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்

நன்றி – ந.முருகேசபாண்டியன், கிராமத்துதெருக்களின் வழியே, உயிர்மை பதிப்பகம்


சுங்கடி சேலை

சுங்கடிமதுரை சுங்கடிச்சேலை மிகவும் பிரபலமானது. சுங்கடிச்சேலை பெண்கள் மிகவும் விரும்பி அணியும் சேலையும் கூட.

சுங்கடிச் சேலையின் பழமையைப் பறைசாற்றும் விதமாக ‘மாமதுரை போற்றுவோம்’ விழாவின் முதல்நாளான பிப்ரவரி எட்டாம் தேதியன்று சுங்கடி தினமாக அறிவித்து இருக்கிறார்கள்.

சுங்கடிச் சேலை மதுரையில் நெய்யப்படுகிறது. திருமலைநாயக்கர் காலத்தில் அவருக்கு உடைகள் நெய்வதற்காக சௌராஷ்டிர மக்களை மதுரைக்கு அழைத்து வந்ததாக சொல்வார்கள். இன்றும் திருமலைநாயக்கர் அரண்மனையை சுற்றிய வீதிகளில், தெப்பக்குளம் பகுதியில் அவர்கள் சுங்கடிச்சேலை நெய்வதைக் காணலாம்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுங்கடிச் சேலை பல வண்ணங்களில், பல்வகையான பூ வேலைப்பாடுகளுடன் கிடைக்கிறது.

சுங்கடி வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற வகையில் இருப்பதால் மதுரை தவிர மற்ற ஊர்களிலும் பெண்கள் இச்சேலையை அதிகம் விரும்பி அணிகின்றனர்.

மாமதுரை போற்றுவோம் விழாவில் சுங்கடி தினத்தன்று கட்டுவதற்காக ஒரு சுங்கடிச்சேலை சமீபத்தில் எங்கம்மாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து வேலைக்கு சென்று எங்கம்மாவிற்கு நான் வாங்கித் தந்த முதல் சேலை ‘மாமதுரை போற்றுவோம்’ விழாவிற்கு வாங்கியதுதான். மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாங்காமல் என்னைக் காக்கும் மதுரையைப் போற்றும் விழாவிற்காக சேலை வாங்கித் தந்தது மிகவும் மகிழ்வளிக்கிறது.

invite

invitation

தொன்மையைப் போற்றுவோம்! மாமதுரையைப் போற்றுவோம்!

சமைத்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது ”அடுதல்” எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊற வைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.                                         

– தொ.பரமசிவன் (தமிழர் உணவு)

இன்றைய வாழ்வில் நம் பாரம்பரிய உணவுப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நம்முடைய உணவையும், குடிநீரையும் பன்னாட்டுக்கம்பெனிகள் தீர்மானிக்கும் அளவிற்கு மோசமாக சூழல் போய்விட்டது. இதிலிருந்து நம் பாரம்பரிய உணவை மீட்டெடுக்க பூவுலகின் நண்பர்கள், என்விரோ கிளப் – லயோலா கல்லூரி  ஒருங்கிணைந்து ஜனவரி 26 ஆம்தேதி முந்நீர் விழவு என ஒரு விழா எடுக்கிறார்கள். தண்ணீர் குறித்த விழிப்புணவுக் கருத்தரங்கையும், பாரம்பரிய உணவு விருந்தையும் நடத்துகிறார்கள். சென்னை லயோலா கல்லூரியில் இவ்விழா நடைபெறுகிறது. இதுபோன்ற விழாக்கள் எல்லா ஊர்களிலும் நிகழ வேண்டும்.

Azhaippu 1

Azhaippu 2

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரி யோர் ஈண்(டு)

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே

புறநானூறு, பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

[நீரையின்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார். உணவை முதலாக வுடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர். ஔவை துரைசாமிப் பிள்ளை உரை )

நன்றி

பூவுலகின் நண்பர்கள் – ஆனந்தவிகடன் – தமிழ்தொகுப்புகள் – தமிழ்ச்செல்வம்

http://www.poovulagu.net/2013/01/blog-post_16.html

http://www.thoguppukal.in/2011/03/blog-post_9315.html