Archive for the ‘நாட்டுப்புறவியல்’ Category

 

நேற்று ராத்திரி மழையீரத்தை

நக்கிக்குடித்தது சூரியன்!

மரத்தோடிறுகிய

கோந்துப் பாளமும்

மனதிளகியதால் தழுதழுத்தது!

தொண்டை கனத்த

காகம் ஒன்று

தலையைச் சிலிர்த்து

வானம் பார்க்குது

முருங்கைப் பூவைக்

குடையாய்ப் பிடித்தும்

முதுகு நனைத்ததோர்

கம்பிளிப்பூச்சி!

ஆம்! நேற்று ராத்திரி

நல்ல மழைதான்

இன்று

நத்தை மீண்டும் நகர்ந்தது. 

– கமல்ஹாசன்

உத்தமபாளையத்திற்கு சென்ற பயணஅனுபவத்தை குறித்தக் கட்டுரையிது. அதற்கு ஏன் முதலில் கமல்ஹாசனின் கவிதை இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? பயணத்திற்கு முதல்நாள் மாலை இடியும், மின்னலும் இணைந்து மிரட்ட மழை பெய்தது. மழைபெய்யும் போது ஒரு கடைவாசலில் நின்று கொண்டிருந்தேன். அருகில் உள்ள இடம் கூட தெரியாத அளவிற்கு மழை கொட்டியது. மறுநாள் சூரியன் வந்து மழையீரத்தை நக்கிக் குடித்தது.

சகோதரியின் மகனுக்கு முடியிறக்கி, காதுகுத்துவதற்காக அவங்க குலதெய்வ கோயிலுக்கு உத்தமபாளையம் சென்றோம். மதுரையிலிருந்து இரண்டு வேனில் கிளம்பினோம். வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் பாசறையினர் எல்லோரும் கடைசிச்சீட்டைப் பிடித்தோம். அரட்டையடிப்பதற்கும், அலப்பறை பண்ணுவதற்கும் ஏற்ற இருக்கை. வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் படப்பாடல்கள் போடச்சொன்னோம். தலைவரது பாடல்கள் இல்லாததால் பாடல் கேட்பதை புறக்கணித்து அரட்டையை ஆரம்பித்தோம். செக்காணூரணி தாண்டி ஒரு கடையில் தேநீர் இடைவேளை முடிந்து வண்டி ஏறியதும் பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தோம். அந்தாதி போல முடியும் அடியில் தொடங்கிப் பாடினோம். பழைய பாடல்கள், புதுப்பாடல்கள் என கச்சேரி களைகட்டியது.

வழிநெடுக மலைகள் கூடவே வந்தன. உத்தமபாளையம் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறுகுன்றிற்கு அடிவாரத்திலுள்ள முத்துக்கருப்பண சாமி கோயிலுக்கு சென்றோம். பொங்கல் வைப்பதற்கான சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஐஸ் வாங்கித் தின்று கொண்டிருந்தோம். எங்க அண்ணன் வந்து நம்ம ஆளுங்க இங்க இருக்காங்க வா போகலாம்ன்னார்.

கோயிலையொட்டிய பாதையில் சென்றோம். பின்னாலேயே குன்று அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் முன்மண்டபம் ஒன்று காணப்படுகிறது. மலைப்பாறையிலேயே சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. இரண்டு வரிசையாக சிலைகள் அமைந்துள்ளன. பார்சுவநாதர், முக்குடைநாதர் சிலைகள்தான் அதிகமிருந்தன. இங்கு வட்டெழுத்துக்கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் அச்சணந்தியின் பெயர் உள்ளது. மேலும், இதை அமைத்துத்தந்தவர்களைக் குறித்த கல்வெட்டும் உள்ளன. கழுகுமலை பயணத்தின் போது சாந்தலிங்கம் ஐயாவிடம் உத்தம்பாளையத்திலுள்ள  சமணமுனிவர்களின் சிலைகளைப் பற்றி கேட்டபோது இத்தகவலைச் சொன்னார். இந்த இடம் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மண்டபத்தின் கீழே பெரியகுகை போன்ற பகுதி காணப்படுகிறது.  அதன் உள்ளே செல்லமுடியாதபடி குப்பையாகக் கிடக்கிறது. இதைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தமிழ்மொழித்தளத்தைப் பாருங்கள்.

சமணமுனிகளின் சிலைகளிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் முன்பே மலையேறிச்செல்வதற்கு படிகள் கட்டப்பட்டுள்ளது. படியேறும் முன்  நந்தி சிலை நம்மை வரவேற்கிறது.

கொஞ்சம்படிகள் ஏறிச்சென்று பார்த்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப்போன்ற அம்மன் சிலை ஒன்று உள்ளது. அருகில் செங்கல் கட்டிடம் ஒன்றின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. முன்பு இந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம்.

குன்றிலிருந்து பார்த்தால் நாலாபக்கமும் மலைகள் தெரிந்தது. எல்லோரும் சேர்ந்து குழுவாய் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

மலையைப் பார்த்துவிட்டு கோயிலுக்குச் சென்றோம். அங்கு காவல்பூதத்தின் முன் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். இங்குள்ள மிக உயரமான காவல் பூதத்தின் சிலைகள் கருப்புசாமி சன்னதிக்கு இருபுறமும் வெளியில் இருக்கிறது. குதிரை சிலையொன்றும் உள்ளது.

சகோதரியின் மகனிற்கு முடியிறக்கினர்.

எங்க அண்ணனும் இன்னொரு தம்பியும் ஆத்திற்கு குளிக்கச் சென்றனர். நானும் இன்னொரு தம்பியும் அவர்களைத் தேடி ஆத்திற்குச் சென்றோம். நாங்கள் பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டோம். ஒரு வழியாக ஆற்றுக்குப் போனால் அதற்குள் எங்கள் நால்வரையும் வரச்சொல்லி அலைபேசியில் அலை போல மாறிமாறி அழைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் ஷேர்ஆட்டோ பிடித்துக் கோயிலுக்கு போக, ஆட்டோக்காரர் காசு குறைவாக கொடுத்துருவோம்ன்னு நினைச்சு உத்தம்பாளையத்தை எங்கள் அவசரம் தெரியாமல் சுற்றிக்காண்பித்துக்கொண்டிருந்தார். எஜமான் ரஜினி மாதிரி ஒரு சின்ன சந்தில் எல்லாம் நுழைந்து சென்றார்.

நாங்கள் நடந்து சென்றபோது ரெண்டு நெட்டு ரோடுதான் இருந்தது ஆறு. கடைசியில் இறக்கிவிட்டு நாலுபேருக்கு முப்பதுரூபாய் கேட்டார். இதை அங்கேயே சொல்லியிருந்தா கொடுத்துருப்போமே இப்படி ஊரைச்சுத்திக்காட்டணுமான்னு கேட்கலாம் என்பதற்குள் அவர் போய்விட்டார். பிறகு சாமி கும்பிட்டு எல்லோரும் சாப்பிட்டோம்.

உத்தமபாளையத்திலிருந்து வருகையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு சென்றோம்.

இங்கு சித்திரை மாதம் பெருந்திருவிழா நடைபெறுமாம்.

வைகை அணைக்குச் சென்றோம்.

தண்ணீர் குறைவாக வறண்டு இருந்தது.  அணையைச் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம்.

 

இந்தப் பயணத்தில் சமணமுனிகளின் சிலைகளைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்ல, எதிர்பாராத ஆச்சர்யமும் கூட. பயணங்கள் முடிவதில்லை.

நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மௌனமாயிருக்கும்போது தொலைவில் எங்கோ மெலிதாக, ஏதோ ஒலிக்கும் ஓசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும் சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் திடுக்கெனத் துடிக்கும். அமானுடத்தின் சக்தி, திகிலாக எல்லோருக்குள்ளும் ஊடுருவும்; மாயப்புனைவின் வால் எல்லோரின் முகத்திலும் உரசிப்போகும். மனதிற்குள் பதுங்கியிருக்கும் பயம் உடலெங்கும் பரவும்.

 – ந.முருகேசபாண்டியன்

நாட்டுநலப்பணித்திட்டற்காக மதுரைக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்தோம். புத்தாண்டன்று இரவு பொருட்கள் இருக்கும் பழைய பள்ளிக்கட்டிடத்தில் என்னைத் தங்கச்சொன்னார்கள். நானும் கடப்பாறை, மண்வெட்டி, இருப்புத்தட்டுகளுடன் இரவைக் கழிக்க ஆயத்தமானேன். மற்றவர்கள் சாலைக்கு மறுபுறம் உள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில் தங்கினார்கள். பழைய பள்ளிக்கூடம் மிகவும் பாழடைந்த மாதிரி இருந்தது. சுற்றி தடுப்புச் சுவர் இருந்ததால் நானும் அசந்து மறந்து தூங்கலாம்ன்னு பார்த்தா கொசு காதுல ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. தூக்கம் துளிக்கூட வரவில்லை. தொலைவில் குடுகுடுப்பைக்காரர் குறிசொல்லி வரும் சத்தம் கேட்டது. பள்ளி ஊரின் மத்தியில் இருந்ததால் அவர் நாலாபக்கமும் சுத்தி வர நாய்களின் குரைப்பொலி எனக்கருகிலேயே கேட்டுக்கொண்டிருந்தது. எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம். நாய் இருக்கிற தெருவுல தனியா போக மாட்டேன் அந்தளவு பயம். நாய் குரைக்கும் சத்தமே குலை நடுங்கச் செய்தது. அதில் குடுகுடுப்பைக்காரர் குரலும் சேர்ந்து ஆட்டிப்படைத்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு நாய் என்னைப் பார்த்துக்கொண்டே நிற்பது போலத் தோன்றியது. மேலெல்லாம் தூக்கிவாரிப்போட்டது. புத்தாண்டன்று இரவு பயத்துல தனியா சாகப்போறோமேன்னு நினைச்சு வருத்தம் வேறு. ஒரு வழியா மனசுக்குள் தைரியம் வரவழைச்சு எழுந்து உட்கார்ந்தேன். அன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான். காலைல அந்தப் பகுதி ஆட்கள்ட்ட கேட்டா இன்னும் பீதியக் கிளப்பிட்டாங்க. பள்ளிக்கூடத்து பக்கத்துல பாழடைஞ்ச கிணறு ஒன்று இருக்கு. அதுனால ராத்திரி வேளைல காத்து, கருப்பு நடமாட்டம் இருக்கும்ன்னு பயமுறுத்திட்டாங்க. மறுநாளும் நான் அங்கு படுத்தேன். அன்றிரவு யாரும் வரலை தூக்கத்தைத் தவிர.

குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல் குறித்த ந.முருகேசபாண்டியனின் ஆய்வுநூலை வாசித்தபோது எனக்கு மேற்சொன்ன அனுபவம்தான் முதலில் ஞாபகம் வந்தது. பகலிலேயே நாய்கள் இருக்கிற தெருவில் தனியே போகப் பயப்படுவேன். இரவில் குடுகுடுப்பைக்காரர்கள் எப்படி தைரியமாக செல்கிறார்கள் என்றறியும் குறுகுறுப்பில் இந்நூலை வாசித்தேன்.

ந.முருகேசபாண்டியன் மதுரைக்கருகிலுள்ள சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் வாழும் குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி 1980களில் அவர் செய்த இனவரைவியல் ஆய்வுநூலே ‘குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்’. இந்நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

இந்நூலில் குடுகுடுப்பைக்கார்களைப் பற்றிய அறிமுகம், அவர்களின் வரலாறு, சமூக அமைப்பு, குறிசொல்லுதல், குலச்சடங்குகள், பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியுள்ளார்.

குடுகுடுப்பைக்கார்களைப் பற்றி அவர்கள் சொல்லும் கதை சுவாரசியமானது. ஆதியில் ஈசுவரன் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்ன தொழிலைச் செய் என்று கூறிப் படியளந்தான். அப்போது ஒரு ஆள் மட்டும் தூங்கிவிட்டான். பின்னர் விழித்தெழுந்த அவன், ஈசுவரனிடம் சென்று தனக்கு ஏதாவது தொழில் தருமாறு கேட்டான். எல்லாத் தொழில்களும் ஏற்கனவே பங்கிடப்பட்டுப் பிரித்துக் கொடுத்து விட்டமையால் ஈசுவரன் யோசித்தார். பின்னர் ஈசுவரன், தனது கையில் வைத்திருந்த சித்துடுக்கையையும் சீங்குழலையும் வந்தவனிடம் கொடுத்து ‘நீ சொல்வது அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும். இவற்றை வைத்துப் பிழைத்துக்கொள்’ என்று கூறினார். அப்போதிருந்து நாங்கள் பிறருக்கு குறி சொல்லிக் கொண்டு குடுகுடுப்பைக்காரர்களாகத் திரிகிறோம்.

விஜயநகரத்தின் வீழ்ச்சி மற்றும் மழையில்லாமல் ஏற்பட்ட பஞ்சம் போன்ற காரணங்களால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தனர். குடுகுடுப்பைக்காரர்கள் கம்பளத்து நாயக்கர்களில் நித்திரவார் பிரிவை சேர்ந்தவர்கள். குடுகுடுப்பைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிச் சமுதாயமாகத் திரிந்து தற்போது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்கின்றனர். மதுரை பரவை கண்மாய்க்கருகில் இவர்கள் தங்கியிருந்த நிலத்தை காமராஜர் முதல்வராயிருந்த போது அவர்களுக்கே வழங்கினார். அந்த இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் என்று பெயர்.

சித்திரை, வைகாசி மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் குறிசொல்வதற்காக வெளியூர் சென்று வருகின்றனர். வெளியூர் செல்வதை ‘தங்கலுக்கு செல்வது’ என்று சொல்கின்றனர். நாலைந்து குடும்பங்களாக சேர்ந்து செல்கின்றனர். ‘ஒரு வாக்கு வெல்லும், ஒரு வாக்கு கொல்லும்’ என்பதில் பெரு நம்பிக்கை கொண்டுள்ளனர். தாங்கள் சொல்வது ஜக்கம்மா அருளால் பலிக்கும் என்பதால் யாரையும் திட்ட மாட்டார்கள். கணவன் மனைவியைத் திட்டினால்கூட ‘குற்றப்பணம்’ கட்ட வேண்டும். (1980களிலேயே 2 ரூபாய்)

திருமணம் செய்ய விரும்பும் பெண்ணின் தந்தைக்கு மணமகன் பணம் தர வேண்டும். அவருடன் சேர்ந்து குடுகுடுப்பைத் தொழிலுக்கு மூன்று அல்லது ஆறு மாதம் செல்ல வேண்டும். அவருக்கு பிடித்திருந்தால் மருமகனாக ஏற்றுக்கொள்வார். உடன்போக்குத் திருமணமும், தம்பதியரில் யாரேனும் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமும் இவர்களிடம் உண்டு.

குடுகுடுப்பைக்காரர்களின் குலதெய்வமாக ஜக்கம்மா இருந்தாலும் சத்தியம் செய்யும்போது துடியான தாய்த்தெய்வங்களான மடப்புரம் காளி – கொல்லங்குடி காளி மீதே சத்தியம் செய்கின்றனர். இரவுகளில் குடுகுடுப்பையை அடித்துக்கொண்டு குறிசொல்லிக் கொண்டு செல்பவர்களை சாமக்கோடாங்கி என்பர். மறுநாள் காலை வீடுவீடாகச் சென்று குறிசொல்லி பணம் மற்றும் அரிசியை வாங்குவர். பெண்களும், சிறுவர்களும் பகல் நேரங்களில் ஏடு போட்டு, கைரேகைப் பார்த்து குறிசொல்கின்றனர். 

குடுகுடுப்பைக்காரர்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அன்று தாங்கள் இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்து கோழி அறுத்து இறைச்சி உணவு சாப்பிடுகின்றனர். அன்று குறிசொல்லச் செல்வது கிடையாது. அன்று வேட்டைக்கு செல்வதை ‘பாரிவேட்டை’ என்றழைக்கின்றனர். குடுகுடுப்பைக்காரர்கள் அவர்களுக்கென சாதிச்சங்கம் வைத்து அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் கொடி, தோரணங்கள் கட்டுவதில்லை.

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள் குரைக்கும் நாய்களின் வாயைக்கட்ட சுடுகாட்டிலிருந்து இரவு கிளம்பும் போது கம்பளியில் ஒரு முடிச்சு போடுவார்களாம். பிறகு மறுநாள் காலையில்தான் அவிழ்ப்பார்களாம். இப்போது அப்படி முடிச்சு போடுவதும் கிடையாது. சுடுகாட்டுக்குப் போய் வரும் சாமக் கோடங்கிகளும் குறைவு.

இன்றைய தலைமுறையினர் குடுகுடுப்பைத் தொழிலை விரும்பாமல் எல்லோரையும் போல வேறு பணிகளுக்கு செல்ல விரும்புவது ஆரோக்கியமான விசயம். இன்னும் கொஞ்சப்பேர் இத்தொழிலையே செய்து வருகின்றனர். குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி  தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்துள்ளனர். மற்ற நாவல், சிறுகதைகளில் இவர்களைப் பற்றிய பதிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்நூலை வாசிக்கத் தந்த சகோதரர்க்கு நன்றி.

இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.

–  என்.டி.ராஜ்குமார்

நன்றி – அழியாசுடர்கள், உயிர்மை, பார்வைகள்

தேர் அழகு! தேர் அசைந்தாடி வருவது அழகு!

அசைந்தாடிவரும் தேர் ஆடியில் வருவது அழகு!

ஆடியில்வரும் தேரில் அழகன் வருவது அழகு!

அழகன் வரும் தேரை அழகுமலையில் காண்பது அழகு!

மதுரை சித்திரைத் திருவிழாவைப் போல அழகர்கோயிலில் ஆடித்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அழகர்கோயிலுக்கு வந்து தீர்த்தமாடிச் செல்வதை கிராம மக்கள் தங்கள் கடமையாகவே கொண்டுள்ளனர். பதினெட்டாம்படிக்கருப்பைக் கும்பிட்டு அழகனை வணங்கி சிலம்பாற்றில் நீராடி இராக்காயி அம்மனை வழிபட்டு சோலைமலை முருகனை வணங்கி வருவது மகிழ்வான அனுபவம்.

அழகர்கோயில் தேர்த்திருவிழா மற்ற கோயில் தேர்த்திருவிழாக்களைவிட சற்று வித்தியாசமானது. தேர் கோயிலைச் சுற்றி வருவதில்லை. கோயிலுக்கு வெளியேயுள்ள அழகாபுரிக்கோட்டையைச் சுற்றி வருகிறது. சுற்றியுள்ள கிராம மக்கள் இத்திருவிழாவிற்கு திரளாக வருகின்றனர். தேர் முன்பு கருப்பசாமியாடிகளும், கண்ணன் பாடல்களைப் பாடி கோலாட்டம் ஆடி வருபவர்களைக் காண்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழகன் வரும் தேரழகைக் காண ஆயிரங்கண் வேண்டும்.

அழகர்கோயில் தேரோட்டம், அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும் திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் என்ற முந்தைய பதிவுகளையும் வாசித்துப்பாருங்கள். அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் குறித்து இது மூன்றாவது பதிவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு புழுதி பறக்க வந்த தேர் இப்பொழுது சிமெண்ட் சாலையில் வருகிறது. அதைத் தவிர மாற்றங்கள் ஏதுமில்லை.

 

அழகர்கோயில் ஆடித்தேர்திருவிழா ஒரு பண்பாட்டுத்திருவிழா என்றும் சொல்லலாம். நாம் தொலைத்த பல விசயங்களை இங்கு இயல்பாகக் காணலாம். சொளகு, மூங்கில் கொட்டான், கூட்டு வண்டி, சவ்வுமிட்டாய் என ஒவ்வொன்றையும் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்லி மாளாது.  மலையருகில் தேர் மலை போல அசைந்து வருவது அழகு. கோட்டை சுவர்களுக்கருகில் நகர்ந்து வருகின்ற தேர் இன்னும் அழகு. தேர் ஏறி வரும்  அழகன் அதிஅழகு. எளிய மக்கள் வண்டி கட்டிவந்து அழகனை வணங்கிச்செல்வதைக் காண்பது இன்னும் அழகு.

கருப்பு சாமியாடி வந்தவர்களில் ஒருவர் எங்க தாத்தா மாதிரியே இருந்தார். அவர் மற்றவர்க்கு அருள் சொல்லும்போது கழுத்திலிருந்த மாலையை பிடித்துக் கொண்டு கைகளை சுழற்றி சுழற்றி சொன்னதைப் பார்த்துக்கொண்டே நின்றேன். இம்முறை தேரோட்டத்தில் மறக்க முடியாத நிகழ்விது.

மற்ற தேரோட்ட நிகழ்வுகளை முந்தைய பதிவுகளில் வாசியுங்கள்.

ஆனந்தவிகடன் வழங்கும் இன்று ஒன்று நன்றுவில் வண்ணதாசன் தேரோட்டம் குறித்து சொன்னதை தொகுத்திருக்கிறேன். வாசித்துப்பாருங்கள். வாழ்க்கையை நிதானமாக கொண்டாட கற்றுத் தருகிறார்.

நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது என்னுடைய ஊரில் அல்லது பிறந்த வளர்ந்த வீட்டில் இருக்கத்தான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. யாருக்கும் அது இயற்கைதானே. அந்தந்த ஊர்த்திருவிழாவை அந்தந்த ஊரில் அதே ஆட்களோடு பார்க்க வேண்டும் என்று தோன்றத்தானே செய்யும். அப்படித்தோன்றாவிட்டால் அப்புறம் நான் என்ன மனுசன்? அது என்ன சொந்த ஊர்?

இந்தத்தடவை தற்செயலாகத் தேரோட்டத்தன்றைக்கு நான் பெங்களூரில் இருக்கிறேன். நண்பன் பரமனிடமிருந்து போன் வருகிறது: “கல்யாணி, இன்னைக்கு நம்ம ஊர்ல தேரோட்டம்”. அதை கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது. வடம் பிடிக்கிறவர்கள் சத்தம். நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப்போடுகிறவர்களின் சத்தம். இவையெல்லாம் மொத்தமாக சேர்ந்த ஆனித்திருவிழாவின் சத்தம். எனக்கு தேர் அசைந்து அசைந்து வாகையடிமுக்குத் திரும்பி தெற்குரத வீதியில் வருவது மாதிரித்தெரிக்கிறது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு. தேர் அசைந்த மாதிரி இருக்குமென்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை. தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியிலே கொடி பறக்கும். ஏழுதேர்தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரியிருக்கும். தூரத்திலிருந்து பார்க்கிறபோது சாமியைக் கும்பிடத் தோன்றுகிறதோ இல்லையோ அசைந்து வருகிற தேரைக் கண்டிப்பாக கும்பிடத் தோன்றிவிடும்.

நான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன்: “தேர் பார்க்கப் போயிருக்கியா? தேர் எங்கப்பா வருது?”. “நான் எங்கே போக மயூரில, ஏஎம்என் டிவிலயெல்லாம் வைவ்வா காட்டுறான். சும்மா பாத்துட்டு உட்கார்ந்திருக்கேன்” என்கிறான். இதைச் சொல்ல அவனுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான் நேரே நம் முகத்தைப் பார்க்காமல் சற்று குனிந்து கொண்டிரந்த மாதிரியிருந்தது. இது முடிந்த கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. அதிகமாகப் போனால் காலை  பதினொரு மணிகூட இருக்காது. மூங்கில்மூச்சு சுகா அவருடைய முகப்புத்தகத்தில் தேர் லாலாசத்திரம் முக்குத் திரும்பிட்டுதாம் என்று ஒரு தகவலைப் போடுகிறார். லாலாசத்திரம் முக்குத் திரும்பியாகிவிட்டதென்றால் இனிமேல் ராயல்டாக்கீஸ் முக்கு அதற்குப் பிறகு நேராகத் தேர் போய் நிற்க வேண்டியது நிலையில்தான். எதற்கு இப்படி அவசரப்படவேண்டும்? நெல்லையப்பரை இப்படி வேகமாகக் கொண்டுபோய் நிலையில் நிறுத்துவதற்கு எதற்கு இந்த கொடியேற்று? எதற்கு இந்த ஒன்பது நாள் திருவிழா? சப்பரம், சாமி புறப்பாடு எல்லாம்?.

நான்கு ரத வீதிகளில் ஒவ்வொரு ரதவீதி முக்கிலேயும் தேர் ஒரு நாளாவது நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். எதற்கு இந்த அவசரம்? இப்படி பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பேர் தேரோட்டமா? இப்படி வேகவேகமாக முடித்துவிட்டால் அடுத்து நாம் என்னதான் செய்யப் போகிறோம்? மிஞ்சிப்போனால் தொலைக்காட்சி அல்லது ஒரு திரைப்படம் அல்லது சற்று தூக்கம் அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்கும் வேண்டுமா? திருவிழாக்களை ஏன் ஆறஅமர நிதானமாக சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது. பனி உருகுவது போல, பூ உதிர்வது போல அல்லது ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல ஒரு திருவிழாவை ஏன் அதன் போக்கில் நிகழ்த்தக் கூடாது? இவ்வளவு கனத்த வடம் பிடித்து இவ்வளவு பெரிய தேரை இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது.

தேர் என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி கூடி இழுக்கும்போது அசைந்து அசைந்து அது நகர்வது நன்றாகத்தானே இருக்கும். அது திருவிழாவாக இருக்கட்டும், நீங்கள் தொடுத்த பூவை உங்களுடைய சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்கள் நண்பனுக்கு திருமணநாள் வாழ்த்து சொல்வது போன்ற சில எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். ஏன் நாம் நிதானமாகக் கொண்டாடக் கூடாது. நிதானமாகக் கொண்டாடுவோம். அறுவது நொடிகள் ஓடவேண்டிய தேரை ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் நாம் இழுத்து முடிக்க வேண்டும். கேட்பது நானல்ல அந்த நான்கு ரதவீதிகளும்.

– வண்ணதாசன்

வண்ணதாசன் சொல்வது எவ்வளவு உண்மை. வாழ்க்கை ஒரு திருவிழா அதைக் கொண்டாடுங்கள் என்கிறார் ஓஷோ. எல்லோரும் கொண்டாடுவோம். ஆடித்தேரோட்டம் காணும் ஆவலைத் தூண்டியது தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் புத்தகம்தான். அவருக்கு என் நன்றிகள் பல. வண்ணதாசனின் குரலில் தேரோட்டம் கேட்க வாய்ப்பளித்த ஆனந்தவிகடனுக்கும் நன்றிகள் பல.

அழகர்கோயில் தேரோட்டம்

அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும்

அன்னவாகனத்தில் அழகுமலையான்

சிறுதெய்வங்களை சுலபத்தில்

வசியப்படுத்தி விடலாம்.

பெருந்தெய்வங்கள் தான்

பிடிகொடுத்துத் தொலைக்காது

            – விக்ரமாதித்யன் நம்பி

நாட்டுப்புறத்தெய்வங்கள் எளிமையானவை. நம்மை போலவே இருப்பதால் இன்னும் நெருக்கமானவையும் கூட. முனி என்றாலே அச்சம் தரும் சாமியாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முறுக்கிய மீசையும், சடாமுடியும் நம்மைப் பிடித்த அச்சம் போக்கும்.

பாண்டிமுனி, சண்டிமுனி, சடாமுனி, மொட்டகோபுரமுனி, அலங்காநல்லூர் முனி என எல்லா முனியும் மக்களின் தெய்வமாக நம்மைக் காக்க முன் நிற்கிறார்கள். அவர் முன் போய் நாம் நின்றால் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.

கோபுரம், கோட்டை, கொத்தளம், கண்மாய்க்கரை, வயல்வெளி என எல்லா இடங்களிலும் மக்களைக் காக்கும் காவல் தெய்வமாக முனி இருக்கிறார்.

இந்திரா சௌந்திரராஜனின் நாவலொன்றில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் முனிப்பாட்டு கொஞ்சம் கொஞ்சமாக இருந்ததை மொத்தமாக தொகுத்துள்ளேன். இந்திரா சௌந்திரராஜனுக்கு நன்றிகள் பல. அவர் மதுரைக்காரர் என்பது கூடுதல் பெருமையும் கூட.

நான் நாடறிஞ்ச சாமி; குடிசை வீடறிஞ்ச சாமி…

மனசார நினைப்பதே – எனக்கான மந்திரம்!

நான் காவக்கார சாமி

ரொம்ப கோவக்கார சாமி

 கும்புட்டு நின்னாக்கா

கூடவே துணையிருப்பேன்

எம்புட்டு பெரியவனும்

எதிர்த்தாக்கா தலை எடுப்பேன்!

நடுச்சாமம் என் நேரம்! 

வெள்ளக் குதிர – என் வாகனம்

ஒரு பாட்டில் சாராயம்

ஒருகட்டு பெரும் சுருட்டு

இதெல்லாம் எனக்கு சாதாரணம்!

மாடு கட்டி போரடிச்சு

மஞ்ச நெல்ல குவிச்சு வெச்சு 

கூடி நின்னு குலவை போட்டு

காடு கரை வாழும் கூட்டம்

தேடி வரும் சாமி நான்; யாரும்

வாடிப்போக விட மாட்டேன்!

மாடுகன்னு மஞ்சக்காணி

காடுகரை கட்டாந்தரை ஏதுமின்றி

ஓட்டுவீடு உடைஞ்ச பானை

 கட்டுச்சோறு கடனுக்குக் காசுன்னு

விதிகெட்ட மனுசனுக்கும்

கதிமோட்சம் தருவேன் நான்!

துண்ணூறே பிரசாதம்

எலுமிச்சை என் வாசம்

அருவாளே ஆயுதம்

கரிச்சோறே என் விருந்து!

எனக்குன்னு மந்திரமில்ல

எனக்குன்னு யந்திரமில்ல

தனக்குன்னு ஒருத்தன் 

தாள் பணிஞ்சிட்டா அதுதான்

என் கணக்குன்னு நினைப்பேன்!

முட்டமுளி எனக்கு

கெட்டவன் தான் கணக்கு!

பட்டம் போல பறந்தே

பார்ப்பதும் என் வழக்கம்!

வேலைப் போல கூர்மை – என் பார்வை!

தேளைப் போல தப்புக்கு தருவேன் – ஒரு தீர்வை!

சோலைப்பூ போல மனசிருந்தா

வாலாட்டி நாயா காவ இருப்பேன்!

ஆடு கோழி பலி கொடுத்து 

பாடுபட்டு படையல் போட்டு

கூடி ஜனம் பொங்க வைக்க

நாடி வந்து நிக்கும் நான்

கேடுன்னா விடமாட்டேன்!

கோபுரமில்ல – கூரையுமில்ல

என் உருவமே கோபுரம்

ஏழையில்ல பணக்காரனில்ல

உண்மைதான் நிரந்தரம்!

முனியாண்டி உங்கள் மனதிலும் வந்து குடியேறியிருப்பார் என நம்புகிறேன். மொட்டகோபுரமுனிக்கு முன்பதிவு இந்தப் பதிவு. பதிவுகளில் உள்ள படங்களில் மதுரையைக் காக்கும் முனி வீற்றிருக்கிறார்.

பாண்டிமுனி

அலங்காநல்லூர் முனியாண்டி

கதைதான். இந்தக் கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல. கதை மறந்த பொழுது உயிர்களெல்லாம் அழிந்ததால் கதையே உயிரென்றானது. கதை மண்ணிலிருந்து துவங்குகிறது. மண்ணைப் பற்றியே பேசுகிறது. இந்த மண்ணின் தலைவிளைச்சல் கதைதான்.

– சு.வெங்கடேசன் (காவல்கோட்டம்)

அழகர்கோயில் அருகிலுள்ள வல்லாளபட்டியில் புரவியெடுப்புத் திருவிழா என தினத்தந்தியில் வாசித்ததும் கட்டாயம் போகவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டேன். மே மாதம் 23ம் தேதியே அழகர்கோயிலில் தீர்த்தமாடி காப்புக்கட்டி விட்டார்களாம். ஜூன் ஒன்னாம் தேதி பெரியபுலி அய்யனாருக்கு புரவியெடுப்பு, ஜூன் இரண்டாம் தேதி சனிக்கிழமை சின்னப்புலி அய்யனாருக்கு புரவியெடுப்பு.

பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இத்திருவிழா நடைபெற்றது.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை வல்லாளத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த பலசாலி. அப்போது பக்கத்து நாட்டைச் சேர்ந்த அரசன் இந்த ஊருக்குள் வந்து ஒரு பெண்ணை தூக்கிச் சென்றான். இதனால் ஆத்திரம் அடைந்த வல்லாளத்தேவன் வெகுண்டு சென்று அந்தப் பெண்ணை மீட்டு வந்தான். ஆனாலும் அந்த பக்கத்து நாட்டு மன்னன் அந்த பெண்ணை சிறைபிடிக்க வந்தான். அப்போது இந்த பகுதியில் உள்ள பொட்டல் என்ற இடத்தில் கடும் போர் மூண்டது. அந்த நேரத்தில் சின்னப்புலி, பெரியப் புலி ஆகியோர் எதிரி நாட்டு மன்னனை அடித்து துரத்தி இந்த பகுதி மக்களை காப்பாற்றினார்கள். இதனால் அவர்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். சின்னபுலி அய்யனாருக்கு ஊரின் தெற்குப்பகுதியிலும், பெரியபுலி அய்யனாருக்கு வடக்குப்பகுதியிலும் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
– தினத்தந்தி

சனிக்கிழமை மத்தியானம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வல்லாளப்பட்டி செல்ல நானும், நண்பன் பெரியசாமியும் காத்துக்கொண்டிருந்தோம். வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெந்நீர் ஊற்றுப் போல வியர்வை பொங்கிக் கொண்டிருந்தது.

அழகர்கோயில் பேருந்துவர அதில் ஏறிச்சென்றோம். அழகர்கோயிலில் இறங்கி அங்கிருந்து மேலூர் செல்லும் பேருந்தில் ஏறி வல்லாளப்பட்டி சென்றோம். சுற்றிலும் நிறைய மலைகள் தென்பட்டன.

அழகர்கோயிலுக்கும் மேலூருக்குமிடையில் வல்லாளப்பட்டி அமைந்துள்ளது. வல்லாளப்பட்டியில் இறங்கினால் ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான குதிரைகள் எனும் போது மக்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்தப் புரவியெடுப்பைக் காண இஸ்லாமியர்களும் வந்திருந்தனர் என்பது இன்னும் சிறப்பான விசயம்.

தொலைவில் பெரிய புரவி கிளம்பி வருவது தெரிந்தது. மக்கள் வெள்ளத்தில் பெரியகுதிரையொன்று மிதந்துவருவது போல வந்து கொண்டிருந்தது. குச்சிஐஸ் வாங்கித் தின்று கொண்டே குதிரையை நோக்கி வேகமாக நடந்தோம். அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்பெட்டி முழுக்கத்தின்னலாம் போலிருந்தது. பெரிய குதிரை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குதிரையைத் தூக்கி வந்தவர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் காணப்பட்டார்கள்.

பெரிய குதிரைக்குப் பின் சின்னக்குதிரைகளை வரிசையாகத் தூக்கி வந்தார்கள். இரண்டு பெரிய கம்புகளுக்கு நடுவில் வைத்து குதிரையைக் கட்டி தூக்கி வந்தார்கள். தென்னங்குருத்து, பலூன், கண்ணாடி என பலவிதமான பொருட்களை வைத்து அழகழகாக தங்கள் கற்பனைக்கேற்ப குதிரைகளை அலங்கரித்திருந்தார்கள். இந்தக் குதிரைகள் எல்லாம் நேர்த்திக்கடனுக்காய் செய்யப்பட்டவை.

 

குதிரைகள் கிளம்பி வருமிடத்தைக் காண நானும், நண்பரும் ஊருக்குள் சென்றோம். வல்லாளபட்டி கண்மாய் அருகிலுள்ள பொட்டல் திடலிலிருந்துதான் குதிரைகளை மொத்தமாய் செய்துவைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஊருக்குள் நுழைந்தால் வழிநெடுக மக்கள் புரவியெடுத்து வருபவர்களுக்கும், திருவிழாவிற்கு வந்தவர்களுக்கும் அண்டா மற்றும் குடங்களில் வைத்து குடிக்க நீர் வழங்கிக் கொண்டிருந்தனர். நானும் வாங்கிக் குடித்தேன். எவ்வளவு தண்ணி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை.

திடலில் இராட்டினத்தில் ஏறி மகிழ்ச்சியாய் சுற்றிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்கப் பொறாமையாயிருந்தது. நாங்கள் சென்ற போது சில புரவிகள்தான் கிளம்பாமல் காத்திருந்தன. மற்ற புரவிகளெல்லாம் புறப்பட்டுவிட்டன. இன்று இரவு இன்னிசைக்கச்சேரி என ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.

பொட்டல் திடலிலிருந்து நானும் நண்பனும் சின்னப்புலி அய்யனார் கோயிலை நோக்கி புரவிகளுடன் நடந்தோம். இளைஞர்கள் உற்சாகமாகத் தூக்கிக்கொண்டு ஆரவாரம் செய்தபடி வந்தனர். நாங்கள் முன்னே செல்லும் பெரியபுரவியை நோக்கி வேகமாக நடந்தோம். அதுரொம்பத் தொலைவில் சென்று கொண்டிருந்தது. வழியில் மக்கள் வயக்காட்டில் இறங்கி கோயிலை நோக்கி குறுக்குப் பாதையில் சென்றனர். நாங்களும் அந்தப் பாதை வழியாக இறங்கி நடந்தோம். அறுவடை முடிந்த காலமாதலால் வயக்காட்டில் பயிர் எதுவும் செய்யவில்லை. கண்ணுக்கெட்டியதூரம் வரை புரவியெடுத்துச் செல்வோர்தான் வந்து கொண்டிருந்தனர்.

கோயிலை நெருங்கும்போதே பெரியகுதிரை வந்துவிட்டது. வேகமாக வயக்காட்டு வரப்புகளுக்கிடையே ஓடினோம். பெரியகுதிரையை கோயில் வாசலில் சேமங்குதிரையிலிருந்த அய்யனாருக்கருகில் வைத்திருந்தனர். குதிரையை இறக்கிவைத்து கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். மற்ற குதிரைகளும் வரிசையாக வரத்தொடங்கின. கோயில் அருகிலிருந்த திடலில் அவைகளைக் கொண்டு வந்து வைத்தனர்.

மீண்டுமொரு ஐஸ் வாங்கி வயக்காட்டில் அமர்ந்து தின்றோம். குதிரைகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. கோயில் அருகில் வரும்போது தோளில் வைத்து தூக்கி வந்த குதிரைகளை தோளுக்கு மேல் தூக்கி மகிழ்ச்சியாக இளைஞர்கள் வந்தனர். கோயிலுக்கருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வரும் குதிரைகளை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். கோயில் முன் இரண்டு சேமங்குதிரையிலிருந்த அய்யனாரை வணங்கிக் கிளம்பினோம். வயல்களுக்கிடையே இறங்கி மீண்டும் சாலையை நோக்கி நடந்தோம்.

முதல்நாள் நடந்த பெரியபுலி அய்யனார் திருவிழாவிற்கு வர முடியவில்லையே என வருத்தமாயிருந்தது. அன்றும் ஆயிரம் குதிரைகள் கிட்ட வந்ததாம்.

மேலூர் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிச்சென்றோம். மேலூரில் தேனீரும் வடையும் சாப்பிட்டு பெரியார் வந்தோம். பௌர்ணமி நிலவில் பெரியார் பேருந்து நிலையத்தை பார்த்ததும் மதியம் இங்கிருந்துதான் சென்றோமா என எண்ணும் அளவிற்கு வித்தியாசமாகத் தெரிந்தது. புரவியெடுப்பு பார்க்க வேண்டுமென்று வெகுநாளாய் இருந்த ஆவல் இன்று பூர்த்தியானது. புரவியெடுப்பைக் கண்ட மனது கொண்டாட்டமாக இருந்தது. மக்கள் நாளிதழ் தினத்தந்திக்கு நன்றி.

தூங்காநகரில் உற்சவவிழா

பச்சரிசி மாவிடிச்சி (மாவிடிச்சி)

பக்குவமா மாவரைச்சு (மாவரைச்சு) 

சுக்கிடுச்சு மிளகிடுச்சு (மிளகிடுச்சு) 

பக்குவமா கலந்துவச்சு (கலந்துவச்சு)  

 அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் (எடுத்து வந்தோம்)  

அம்மன் அவ(ள்) எங்களையும் காக்க வேண்டும் காக்க வேண்டும் தாயே!    

மதுரை மரிக்கொழுந்து வாசம் என்ற பாடலில் முதலில் வரும் வரிகள்தான் மேலே உள்ளவை. ராமராஜனின் திரைப்படங்களின் மூலம் கிராமிய மண்வாசனை உலகமெங்கும் பரவியது. நாட்டுப்புறவியல் துறையிலிருந்து ராமராஜனுக்கு முனைவர் பட்டமே வழங்கலாம். நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை.  அது நிற்க.

சமீபத்தில் தன்னனானே பதிப்பக வெளியீடாக வந்த ‘மதுரை நாட்டுப்புறவியல்’ என்ற புத்தகம் வாசித்தேன். அதில் விக்டர் டர்னரின் மீவியல் கோட்பாடுகளை பற்றிய கட்டுரையொன்றை வாசித்தேன். அதில் அவ்வை நோன்பை பற்றி எழுதியிருந்த வரிகள் செவ்வாய்க்கிழமை கொழக்கட்டையை ஞாபகப்படுத்தியது. ரொம்ப நாளைக்கு முன்னாடி காலையில் வேலைக்கு கிளம்பும்போதே அம்மா “சாயந்திரம் சீக்கிரம் வந்திரு, இல்லேன்னா நான் சாமிகும்பிட போயிருவேன்”னு சொன்னதும் ‘ஓ செவ்வாய்க்கிழமையா!’ என்று சொல்லிக்கிளம்பினேன்.

தை, மாசி, ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை நோன்பை பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். அன்று இரவு சாமிகும்பிட்டு கொழக்கட்டை செய்து வழிபடுவர். மேற்கொண்டு வழிபாட்டு முறை குறித்து எனக்கெதுவும் தெரியாது. சாதி, வயது வித்தியாசமில்லாமல் பெண் என்ற அடிப்படை தகுதி ஒன்றோடு அவ்வை நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். நல்ல கணவன் அமைய, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர, குழந்தைப்பேறு போன்ற காரணங்களுக்காக வழிபடுகின்றனர்.

அண்ணாநகரில் நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில் உள்ள பெண்கள் எல்லாம் எங்கள் வீட்டில்தான் சாமிகும்பிட வருவார்கள். ஒரு அறை கொண்ட சிறிய வீடு. எனவே, அவர்கள் சாமிகும்பிடும் வரை இரவு வீட்டிற்கு வெளியே படுக்கச் சொல்லிவிடுவாங்க. மறுநாள் நீங்க மட்டும் கொழக்கட்டை செஞ்சி திங்கிறீங்க எனக்கு இல்லையான்னு கத்துவேன். அதனால் மறுநாள் எனக்கு இனிப்பான பால்கொழக்கட்டை அம்மா செஞ்சு தருவாங்க.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் இடைவேளையின்போது நான் மட்டும் அமர்ந்து என்னமோ எழுதிக்கொண்டிருந்தேன். வகுப்பில் இருந்த ஆறேழு மாணவிகள் ‘அவெம்போகட்டும் அப்புறம் எடுப்போம்’ என பேசியது காதில் விழந்தது. தூக்குச்சட்டியை வைத்திருந்த அந்தப்பிள்ளைகளை பார்த்ததும் ‘ஓ நேத்து செவ்வாய்க்கிழமைல’ன்னுட்டு வெளியில வந்தேன். மதியம் உணவு இடைவேளையின் போது உனக்கெப்படி தெரியும் எனக்கேட்டு பெரிய இம்சைய கொடுத்துருச்சுங்க. எங்க வீட்டிலயும் கும்பிடுவாங்க அதுனால தெரியும்ன்னு சொன்னேன். அதை இன்று நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. அவ்வை நோன்பன்று இரவு சாப்பாடு ஒழுங்கா கிடைக்காது. ஒருமுறை நான், எங்க மாமா எல்லாம் சேர்ந்து அன்று இரவு பலகாரம் வாங்கிவந்து வைத்து போட்டிக்குத் தின்றோம். பிறகு போட்டியாத் தொடரமுடியவில்லை.

அவ்வைநோன்பு போலவே ஆண்களுக்கு முனியாண்டி கோயிலில் கனிமாற்றுவது. வெள்ளி, செவ்வாய்க்கு முனியாண்டிக்கு கனிமாற்றுவதாக வேண்டியவர்கள் ஒற்றைப்படையில் ஐந்து அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை வாங்கி கோயிலில் வைத்து வழிபடுவர். முனியாண்டி முன் வாழைப்பழங்களை வைத்து சூடம், பத்தி பொருத்துவார்கள். சூடம் அமரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் நிறைய சூடம் வைக்காமல் ஒண்ணு மட்டும் வைப்பாங்க. இரண்டு சூடம் வச்சாலே முணங்குவாங்ங. சூடம் அமந்ததும் ஒரு பழத்தை பிச்சு நாளு திசைகளிலும் வீசுவாங்க. பிறகு மீதமுள்ள பழங்களை அங்கேயே வைத்து தின்றுவிடுவோம். வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது. கனிமாற்றும் போது முனியாண்டிகோயில் வழியாக பெண்கள் வந்தாலும் வேகமாக கடந்துவிடுவர். நிறைய வாழைப்பழங்கள் இருந்தால் தின்ன முடியாமல் தின்போம். யாராவது ஆண்கள் அந்தப்பக்கம் வருவார்களா என்று பார்த்து அவர்களுக்கும் கொடுப்போம். கிராமங்களில் இந்தப் பழக்கம் உள்ளது. நான் எங்க அம்மா பிறந்த கிராமத்திற்கு செல்லும்போது கனிமாற்றும்போது உடன் சென்றிருக்கிறேன்.

இயல்பான நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிக்கல் வரும் போது அதற்கு தீர்வாக நாம் மேற்கொள்ளும் சில சடங்கு அல்லது வழிபாட்டு முறைகளைத்தான் மீவியல் என்கிறார்கள். மீவியல், மீவியல் வெளி, மீசமூகம் எனப் பல சொற்களால் சொன்னாலும் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. பழனிபாதயாத்திரை செல்லும் போது மதுரைக்கும் பழனிக்கும் இடையேயான பாதை மீவியல் வெளியாகிறது. பாதயாத்திரை செல்பவர்கள் மீவியலர்கள்.

“மீசமூகம் என்பது இயல்பான சமூகத்திலிருந்து விலகிச்சடங்குக் களத்தில் ஒன்று சேரும் மீவியலர்கள் உருவாக்கும் ஓர் இயல்பு மீறிய சமூகத்தன்மையைக் குறிக்கும்” என்கிறார் மானுடவியலாளர் சி.பக்தவத்சலபாரதி.

எளிய மக்களின் நம்பிக்கைகள் எல்லாமே மூடத்தனமானவை அல்ல. அதற்குள் இதுபோன்ற சில விசயங்களும் இருக்கின்றன. வெளியிலிருந்து பார்ப்பதை விட அவர்களோடு ஒன்றி கவனிக்கும் போதுதான் இதுபோன்ற விசயங்கள் தெரியும். மதுரை நாட்டுப்புறவியல் புத்தகத்தைத் தொகுத்த இ.முத்தையா அவர்களுக்கு நன்றி.

நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்

மழையோடு பாதயாத்திரை

மாசிமாதம் பௌர்ணமியன்று இக்கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெறும். தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் ‘கஜேந்திரமோட்சம்’ எனும் யானைக்கு முக்தியளித்த திருவிழா நடைபெறும். இவ்விழாவும் தெப்பக்குளத்திலேயே முன்னர் நடைபெற்று வந்ததாம். தற்போது கோயில் முற்றத்திலுள்ள ஒரு கல்தொட்டியினையே ஒரு பொய்கையாகப் பாவித்து இறைவனை அதன்முன் எழுந்தருளச் செய்கின்றனர். கோயில் கொத்தனால் செய்யப்பட்ட முதலை, யானைப் பொம்மைகளை நீரில் நிறுத்தி இவ்விழாவினைக் கொண்டாடிவிடுகின்றனர். தெப்பத்திருவிழா நடைபெறும் தெப்பக்குளம் கோயிலுக்கு ஒரு மைல் தெற்கிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி கிராமத்திலுள்ளது. தெப்பத்தின் மீது சப்பரத்தில் இறைவன் தேவியரோடு அமர்ந்து பத்துமுறை சுற்றிவருகிறார்.     

 – தொ.பரமசிவன், அழகர்கோயில்.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் வாசித்ததிலிருந்து திருமாலிருஞ்சோலை அழகனின் மீதான காதலும், ஆர்வமும் அதிகரித்தது. சித்திரைத் திருவிழா என்றாலே இளமையிலிருந்தே கொண்டாட்டமான விசயம். மதுரை தன்னை பெருங்கிராமமாக மெய்ப்பிக்கும் திருவிழா. அழகர்கோயில் ஆடித்தேரோட்டமும் கிராமத்திருவிழா போலத்தான் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பொய்கைகரைப்பட்டியில் தெப்பத்திருவிழா என்று மக்களின் நாளிதழ் தினத்தந்தியில் வாசித்த அன்றே குறித்து வைத்துக்கொண்டேன். குளத்தை சரியாகப்பராமரிக்காததால் கடந்த பத்து வருடங்களாக பொய்கைகரைப்பட்டியில் தெப்பத்திருவிழாவிற்கு வரும் அழகர் கரையைச் சுற்றி சென்றிருக்கிறார். இம்முறை தெப்பத்திற்கு நீர்வரும் பாதைகளை சீரமைத்து தெப்பத்தில் நீர் நிரப்பி உள்ளனர்.

தெப்பத்திருவிழா அன்று மாலை சீக்கிரங்கிளம்பி சைக்கிளை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி படியில் நின்று பராக்கு பார்த்துக்கொண்டே சென்றேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும் சமயமாதலால் மாணவர்கள் உற்சாகமாகக் கதைத்துக்கொண்டு வந்தனர். பொய்கைக்கரைப்பட்டியில் இறங்கி கிராமத்துத் தெருக்களின் வழியே அங்குள்ள மக்களிடம் வழிகேட்டு தெப்பக்குளம் நோக்கி நடந்தேன். ஓட்டுவீடுகளும், கூரைவீடுகளும் அதிகமாக இருந்தன. ஊரில் திருவிழா என்பதால் கிராமமே உற்சாகத்திலிருந்தது. மந்தையம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். கோயிலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ‘ஆத்தா! தீமையெல்லாம் அழியணும்’ என அடிக்கடி தனியே கத்திக்கொண்டிருந்தார். எனக்கும் அப்படிச் சிலசமயங்களில் கத்தணும் போலிருக்கும்.

தெப்பத்தை நோக்கி நடந்தேன். வண்ணமயமான தோரணங்கள் மந்தையில் உள்ள நாடகமேடை பகுதியில் நிறைய கட்டப்பட்டிருந்தது. ஊர்மக்கள் தெப்பத்தேர் பார்க்க மகிழ்ச்சியாக வந்துகொண்டிருந்தனர். கரையில் ஏறிய போது பெரிய கண்மாய் போலத் தெப்பக்குளம் எனக்குத்தோன்றியது. தெப்பத்திருவிழாவிற்கு அமைத்திருந்த தோரணவாயில் மிகவும் அழகாயிருந்தது. தெப்பக்குளத்தில் சிறுவர்கள் குளித்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தனர். நிறைய தின்பண்டங்கள், பலூன், விளையாட்டுச்சாமான்கள், பச்சை குத்துபவர்கள், அரசியல்தலைவர்கள் மற்றும் திரைப்படநடிகர்களின் படம் விற்பவர், சர்பத் விற்பவர் என வழியெங்கும் திருவிழாக்கடைகள் வரவேற்றன.

பாக்குத்தட்டில் நெய்தீபம் விற்றனர். மக்கள் விளக்குகளை வாங்கி கரையிலும், தெப்பத்திலும் விட்டனர். ஒளிமயமாய் இருந்தது. அழகர்கோயிலுக்கு வழங்கப்பட்ட குட்டியானை அங்கே நின்று கொண்டிருந்தது. என் உயரம் கூட இருக்காது. பார்க்க அவ்வளவு அழகாயிருந்த்து. கொஞ்சநேரம் யானையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்தார்.

‘வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாராணன் நம்பி நடக்கின்றான்’ என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ஞாபகம் வந்தது. ஒரு யானையே அவ்வளவு அழகு மற்றும் கம்பீரமாய் இருக்கும் போது ஆயிரம் யானைகள்  போல நடந்து வரும் நாராயணன் எவ்வளவு அழகாய் இருப்பார். ஆண்டாளின் கற்பனை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அழகனைப்பார்த்துவிட்டு அழகர் ஏறிச்செல்லும் அன்னவாகனத்தை பார்க்கச்சென்றேன். பெரிய ஓடம் ஒன்றினை அன்னம் போல அழகாய் கட்டியிருக்கிறார்கள். மையமண்டபம் மிகவும் சிறியதுதான். தண்ணீர்பந்தலைப் பார்த்ததும் தாகம் எடுத்தது. அங்கு போய் தண்ணி குடித்தும் தாகம் அடங்கவில்லை. பிறகு ஜஸ் வாங்கித்தின்றேன். திருவிழாவில் ஜஸ் வாங்கித்தின்பது தனி சுகம். அழகர் கிளம்பும் முன் அங்கிருந்த ஊர்பெரியவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

மேளதாளத்துடன் அழகர் தெப்பக்குளம் நோக்கி கிளம்பினார். கரியநிழல் ஒன்று அருகில் வருவது போலத்தோன்ற என் பின்னாலிருந்த காவலர் என்னை இழுக்க அந்தக் குட்டியானை கடக்கவும் சரியாக இருந்தது. காவலருக்கு நன்றி. தெப்பத்தில் அழகர் ஏறியதும் அன்னம் கிளம்பியது. பெரிய மூங்கில்கழிகளைக் கொண்டு தள்ளியும், ஒரு குழு நீந்தியும் தெப்பத்தேரை இழுத்துச்செல்ல மாயோன் தெப்ப உலா கிளம்பினார். நான் அங்கிருந்து கிளம்பினேன். அழகருக்கு கோயில் பக்கம், நானோ செல்ல வேண்டிய தூரம் அதிகம். சித்திரைத்திருவிழாவில் பார்ப்போம் என்று சொல்லிட்டு கிளம்பினேன். அழகுமலையான் மக்களின் தெய்வம். அவனைத் தொழ “கோவிந்தா” என்ற எளிய மந்திரம் ஒன்று போதும். யானையைக்  காக்க வந்ததைப்போல நம்மைக்காக்கவும் ஓடோடி வருவான் சுந்தரத்தோளுடையான்.

திருமாலிருஞ்சோலையில் தேரோட்டம்

சித்திரைத்திருவிழா

தெப்பத்திருவிழா

பண்பாடு, நாட்டுப்புறவியல், வைணவம், இலக்கியம் என பல துறைகளிலும் தன்னுடைய கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்து வரும் பேராசிரியர் தொ.பரமசிவன் புதியதலைமுறை பொங்கல் சிறப்பிதழில் சுமைதாங்கிக்கல் குறித்து கூறிய இந்தப் பதிவு மிகவும் முக்கியமானது:

இரண்டு அகலமான கற்களை நெட்டுக்குத்தாக நட்டு, அவற்றின் மீது கிடைவசமாக மற்றொரு கற்பலகை வைக்கப்பட்ட அமைப்பை சாலை ஓரங்களில் பார்த்திருக்கலாம். இதுதான் சுமைதாங்கிக்கல். தரையிலிருந்து சுமார் 4ல் இருந்து 4.5அடி உயரத்தில் கிடைவசக்கல் பொருத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் தலைச்சுமையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பிறர் உதவியின்றி இந்தச் சுமைகளை இறக்கி வைத்து, பின்னர் யாருடைய உதவியுமின்றி தலையில் ஏற்றிக் கொள்வார்கள். இப்படி இளைப்பாறும் நேரத்தில் சுமையைத் தாங்குவதற்காக உருவான கற்களே சுமைதாங்கிக் கற்கள். வயிற்றுச்சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் மன ஆறுதலுக்காக, மற்றவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளுதல் என்ற மனிதாபிமான நோக்கமே இதற்குப் பின்னிருக்கும் அம்சம். மகப்பேற்றின்போது வயிற்றுச்சுமை தாங்காமல், இறந்த பெண்களின் நினைவாகவே சுமைதாங்கிக் கற்கள் நடப்படுகின்றன. சாதாரணமாக இவைகளில் கல்வெட்டுகள் இருப்பதில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு கற்களில் இறந்த பெண்ணின் பெயர் பொறிக்ப்பட்டுள்ளது.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் ஒரு சுமைதாங்கி என்பதை இந்த ஓர் இடத்தில் மட்டும் ஆண் சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. பழைய தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் சுமைதாங்கிக் கற்கள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, இந்த வழக்கம் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் பெருகி இருப்பதாகத் தெரிகிறது. தொன்மையாக சுமைதாங்கிக் கற்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமைதாங்கிக் கற்கள் பொதுவாக ஊர் எல்லையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் நிழல் தரும் மரத்தடிகளில் அமைக்கப்படுகின்றன.

சுமைதாங்கிக் கற்களின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் கிடைவசத்தில் அமைக்கப்பட்ட கற்பலகையே இறந்த பெண்ணின் நினைவிற்குரியதாகும். அதனைத் தாங்க நிறுத்தப்பட்ட இரண்டு கற்களும் மகப்பேற்று உதவியாளர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும் மகப்பேற்றுச் சிற்பங்களில் இரண்டு பெண் உதவியாளர்கள் காட்டப்பெறுவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. நாட்டார் மரபில் இந்தப் பெண் உதவியாளர்களை தொட்டுப் பிடித்தவர்கள் என்பர்.

கிராமப்புறங்களில் ஓரளவு பொருள் வசதி உடைய குடும்பத்தவரே இந்தச் சுமைதாங்கிகளை நிறுவியுள்ளனர். பொதுவாக மகப்பேற்றின்போதும் சுமங்கலியாகவும் இறந்த பெண்களை மாலையம்மன், வாழவந்தாள், சேலைக்காரி ஆகிய பெயர்களில் வணங்குவது தமிழக நாட்டார் மரபாகும். பொருள் வசதி குறைந்த வீட்டில் மாலையம்மனுக்கு நினைவு நாளில் படைத்த புதுச்சேலையினை ஓலைப் பெட்டியில் வைத்து உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். மறு ஆண்டு நினைவுநாளில்தான் அந்தச் சேலையினை மற்றவர் எடுத்து உடுத்துவர்.

மகப்பேற்றில் இறந்த பெண்களைப் போல கன்னியாக இறந்த பெண்களும் வழிபாட்டுக்கு உரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் நினைவுக்கு சேலை படைப்பதில்லை. ‘கன்னிசிற்றாடை’ மட்டுமே படைப்பர். இன்றளவும் கிராமப்புறத்துத் துணிக்கடைகளில் கன்னி சிற்றாடைகள் விற்பனைக்கு உள்ளன.

விசயநகர மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி தமிழ் மக்களின் உணவு, உடை, சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மகப்பேற்றில் இறந்த பெண்ணின் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கமும் அக்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதுவன்றி, தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் சுமைதாங்கிக்கல் குறித்த குறிப்புகள் ஏதும் இல்லை.

சந்திப்பு – எஸ்.கார்த்திகேயன்.
நன்றி – புதியதலைமுறை 19 ஜனவரி 2012

ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊர் மதுரை அலங்காநல்லூர்தான். அலங்காநல்லூருக்கும், அழகர்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்திற்கு முன்பு சித்திரைத் திருவிழாவிற்கு வரும் அழகர் இந்த ஊர் வழியாகத்தான் வந்து தேனூர்க்கருகிலுள்ள வைகையாற்றில் இறங்கியிருக்கிறார். அழகர்கோயிலிலிருந்து வரும் அழகருக்கு இந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் அலங்காரநல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்பு இப்பெயர் மருவி ‘அலங்காநல்லூர்’ ஆகி விட்டது.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கலன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல்தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.

முனியாண்டி மலையாள தேசத்திலிருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாளதேசத்தில் முனியாண்டியின் அலப்பறை தாங்காமல் அவருடைய அப்பா ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். அந்த பெட்டி கரையொதுங்கிய இடம் அலங்காநல்லூர். அதைப் பார்த்தவரிடம் முனியாண்டி தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக கூறியிருக்கிறார். அவரை பெட்டியில் வைத்து பார்த்த குடும்பத்தினர்தான் இங்கு காலம்காலமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு ஒரு வருடம் நடத்தாவிட்டாலும் அந்த ஊர் மக்களுக்கு அதிக பிணிகள் ஏற்படுமென நம்பிக்கை நிலவுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஊரில் காலரா பரவியுள்ளது. பின் வழக்கம் போல தொடர்ந்து நடத்தியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டைத் தடை செய்ய சட்டம் வந்தபோது அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தன் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக்கொடுத்தார்.

முனியாண்டி மிகவும் துடியான தெய்வம். நான் மதுரை முனிச்சாலையில் பிறந்தவன். எனவே, முனியாண்டி மீது எனக்கு அதிகப்பிரியம் உண்டு. முனி என்றாலே மக்களுக்கு அச்சமும் உண்டு. ஒருவரை முனி பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுவார்கள். மதுரை மொட்டக்கோபுரம் முனியாண்டியை நிறைய பேர் வணங்கி வருகிறார்கள். சித்திரை வீதிகளில் சுற்றும்போது நானும் முனியாண்டியை வணங்கிச் செல்வேன். முனியாண்டி சொல்லி வரங்கொடுப்பவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

 

அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தென்னந்தோப்புகள் சூழ உள்ளது. முன்பு இப்போது இருப்பதைவிட நிறைய மரங்கள் இக்கோயிலில் அடர்ந்திருந்தன.

கோயிலினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சேமங்குதிரையில் முனியாண்டி அழகாக அமர்ந்திருக்கிறார். மற்ற கோயில்களில் எல்லாம் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதங்களின் தலையில் படும்படி அமைத்திருப்பார்கள். இங்குள்ள சேமங்குதிரை சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. குதிரையின் கால்கள் அந்தரத்தில் மிதப்பது போலிருக்கிறது. பூதகணங்கள் இருவரும் கையில் கொம்பு போன்றதொரு வாத்தியக்கருவியை வைத்திருக்கின்றனர்.

குதிரைக்காலிற்கு நடுவில் கிருஷ்ணன் மிக அழகாக நின்று கொண்டிருக்கிறார். குதிரையின் கீழ் ஒரு புறம் மேளவாத்தியம் வாசிக்கும் ஆண்சிலைகளும், மறுபுறம் நர்த்தனம் ஆடும் பெண்சிலைகளும் உள்ளது.

குதிரை வாலின் கீழ் இங்கு வால்தாங்கி சிலை இல்லை.

 

 

 

கோயிலில் விரித்த சடையுடன் மூலவராக வீற்றிருக்கும் முனியாண்டியைப் பார்த்தாலே மேனி சிலிர்த்துவிடும். அந்தளவு துடியோடு இருக்கிறார். இடதுபுறம் இந்தாண்டு வந்த உற்சவர் சிலை இருக்கிறது. வருடந்தோறும் திருவிழாவின் போது புதிதாக முனியாண்டி சிலைகளை செய்கின்றனர். கோயிலின் பின்னால் கடந்த வருடங்களிலிருந்த முனியாண்டி சிலைகள் உள்ளன. இப்போது கோயிலில் மூலவர் இருக்குமிடத்தில் டைல்ஸ் எல்லாம் போட்டு மண்டபம் அமைத்து உள்ளனர். எனக்கென்னவோ, காவல்தெய்வங்கள் எல்லாம் மரத்தின் கீழ் வெயிலிலும், மழையிலும் இருப்பதுதான் சரியாகப் படுகிறது.

மதுரையில் இதுபோல் உள்ள காவல்தெய்வங்களை எல்லாம் போய் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். மதுரை அருளட்டும்.

வருடந்தோறும் இந்த ஊரில் முனியாண்டி கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எருதுகட்டும் நடைபெறுமாம். இந்த ஊரில் திருவிழாவின் போது இரவு பூசாரி ஊரைச்சுற்றி வரும் போது யாரும் வெளியே வரமாட்டார்களாம். வாய்ப்பிருந்தால் இந்தாண்டு செல்ல வேண்டும்.

(அலங்காநல்லூர் பெயர்க்காரணம் குறித்து ஆறுமுகம் அவர்கள் எழுதிய மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும் என்ற நூலில் வாசித்தேன்.

முனியாண்டி குறித்து மணா எழுதியதை நட்பூ தளத்தில் வாசித்திருக்கிறேன்.

ஆறுமுகம் அவர்களுக்கும், மணா அவர்களுக்கும் நன்றிகள் பல)

படிச்சது இன்ஸ்ட்ருமென்டேசன் – ஆனால்

புடிச்ச இன்ஸ்ட்ருமென்ட்

பறை

மதுரை நகரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என தொ.பரமசிவன் அய்யா புத்தகத்திருவிழாவில் சொன்னார். அதேபோல் இங்குள்ள காற்றில் எப்போழுதும் தப்பும், தவிலும் அதிர்ந்து கொண்டிருக்கும். இளமையிலிருந்தே ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக இருப்பவன் நான். திரைப்படங்களை விட இதயத்திற்கு நெருக்கமானவை நாட்டுப்புறக்கலைகள்தான்.

நையாண்டி மேளம், தப்பாட்டம் மற்றும் சித்திரைத்திருவிழாவில் துருத்தி நீர் தெளிப்போர் ஆடும் ஆட்டமும் என்னை நாட்டுப்புறக்கலைகளின் காதலனாக மாற்றியது. பொதிகை தொலைக்காட்சியில் நாட்டுப்புறக்கலைகள் குறித்து வாரம் ஒருமணி நேரம் ஒரு கலையைப் பற்றி விரிவாக நிகழ்ச்சி போட்டார்கள். அதைவிடாமல் பார்ப்பேன். தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு என வாரவாரம் பார்த்து நானும் ராமராஜனைப்போல மாறிவிட்டேன். அந்தக் கலைஞர்களின் வாழ்வைப் பற்றி காட்டும்போது வறுமையில் அவர்கள் உழல்வதைக் காணும்போது நமக்கு கண்ணீர் வந்துவிடும். ‘ஏழுமலை ஜமா’, ‘கர்ணமோட்சம்’ போன்ற குறும்படங்களில் காட்டியதைப்போல அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் வலியுடையதாகத்தானிருக்கிறது.

தப்பாட்டம் பழக வேண்டுமென்று ரொம்ப நாள் அலைந்தேன். இப்ப வரை நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே உள்ளது. சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் தினம் ஒரு திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்து பள்ளியில் நான் எனது நண்பர்களுடன் அதுபோல அன்றைய நிகழ்வை வில்லுப்பாட்டுப் போல பாடி மகிழ்வேன். மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலைச் சுற்றிய சித்திரைவீதிகளை கல்பாவி போக்குவரத்தை நிறுத்தியபிறகு சுற்றுலாத்துறை சார்பாக தெருவோரத்திருவிழா என்னும் நிகழ்ச்சி வாரவாரம் சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை நிகழ்த்தினார்கள். இதில்தான் நான் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். ஜிம்ளா மேளம் என்னும் அற்புதமான கலையை ஒரு முறை தலித்கலைவிழாவில் அரசரடி மைதானத்தில் பார்த்தேன். அதற்கடுத்து இருமுறை சுற்றுலாத்துறை நடத்திய தெருவோரத் திருவிழாவில் தெற்குச்சித்திரை வீதியிலும், திருமலைநாயக்கர்மகால் முன்பும் பார்த்தேன். அந்தக் கலைஞர்களின் வயது அறுபதுக்கும் மேலிருக்கும். அவ்வளவு உற்சாகமாக அந்த வயதில் ஆடினார்கள். அந்த ஆட்டம் பார்த்த பிறகு அவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்று நினைத்தேன். அந்தளவு என்னை ஈர்த்த ஒரு ஆட்டம் ஜிம்ளா மேளம்.  

ஒரு முறை மக்கள் கலைவிழாவில் ஆறுமுச்சந்தியில் வைத்து களியலாட்டம், குறும்பராட்டம், தப்பாட்டம் மற்றும் வீதிநாடகம் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அதே போல் காந்தி அருங்காட்சியகத்தில் தோல்பாவைக்கூத்தில் மாமேதை அம்பேத்கரின் வாழ்க்கையை காணும் வாய்ப்புக் கிட்டியது. தானம் அறக்கட்டளை தமுக்கத்தில் நடத்திய கூடலரங்கம் என்னும் நிகழ்வில் நிறைய நாட்டுப்புறக்கலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில்தான் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டமும், குச்சியாட்டமும் பார்த்தேன். மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சார்ந்த சில நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளைத் தமுக்கத்தில் பார்த்தேன். மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் மதுரைக்காமராசர் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை மாணவர்கள் ஆடிய தப்பாட்டமும், சிலம்பாட்டமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. அந்த வருடமே நூற்றுக்கும் மேற்பட்ட தப்பாட்ட கலைஞர்கள் வரிசையாய் நின்று தப்படிக்க அழகிரி ‘கலைஞர் அரங்கை’ திறந்து வைக்க வந்தார். அன்றும் தப்பில் மயங்கித்தான் கிடந்தேன். தமிழ்நாடுஅரசுசுற்றுலாத்துறை சார்பில் பொங்கல்விழாவின் போது தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து எல்லாம் பார்த்திருக்கிறேன். இன்றும் எங்காவது கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தால் போய் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். எனக்கு ஆசை என்னவென்றால் இந்த கலைகளை எல்லாம் திருவிழாக்களில் போய் பார்க்க வேண்டும். அப்போதுதான் இன்னும் நெருக்கமாக இருக்கும். தெருக்கூத்தை வடமாவட்டங்களிலும், கணியான்கூத்து,  வில்லுப்பாட்டு எல்லாம் நெல்லைமாவட்டத்திலும் போய் பார்க்க ஆசை.

தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், வில்லுப்பாட்டு, ஆழிநடனம், பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான்கூத்து, களியலாட்டம், சிலம்பாட்டம், கைச்சிலம்பாட்டம், ஜிம்ளா மேளம், பச்சைக்காளியாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், அனுமன்ஆட்டம், கும்மி, கரகாட்டம், ராஜாராணியாட்டம், பகல்வேஷம், குறவன்குறத்தியாட்டம், கருப்புச்சாமியாட்டம், குச்சியாட்டம், வள்ளிதிருமணம், மதுரைவீரன் நாடகம் என நான் இதுவரைப் பார்த்த நாட்டுப்புறக்கலைகள் மிகவும் குறைவு. தமிழகத்தில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட கலைகள் இருந்தனவாம். ஆனால், இன்று எண்பது கலைகள்தான் இன்று உள்ளனவாம். அதிலும் பாதி அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புறக்கலைகளை காக்க நாம் என்ன செய்ய முடியும்? என்று யோசித்தபோது கிடைத்த சில யோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • நம் இல்ல விழாக்கள், அலுவலக விழாக்களில் கட்டாயம் ஒரு நாட்டுப்புறக்கலையை நிகழ்த்தலாம்.
  • தியானம், யோகா எல்லாம் பழக சாமியார்களிடம் செல்வதை தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்க நாட்டுப்புறக்கலைகளை கற்றுக்கொண்டு விடுமுறை நாட்களில் ஆடி மகிழலாம்.
  • பள்ளி,கல்லூரிகளில் நாட்டுப்புறநடனம் என்றாலே நாட்டுப்புறப்பாடல்களுக்கு மட்டும் ஆடுவதைப்போல இன்னும் நிறைய நிகழ்த்துகலைகள் உள்ளதை தேடி பழகி ஆடலாம்.
  • பள்ளிகளில் அந்தந்த வட்டார கலைகளையும் அத்துடன் பிற பகுதிகளின் கலை ஒன்றையும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • நிறைய நாட்டுப்புறக்கலைஞர்கள் மிகவும் வயதானவர்களாக மாறிவிட்டதால் அவர்களோடு அந்தக்கலைகள் அழியும் அபாயம் உள்ளது. எனவே, அவர்களை வைத்து அந்தக் கலைகளை ஆவணப்படுத்த வேண்டும்.
  • பள்ளி,கல்லூரிகளில் அவர்களை கௌரவ ஆசிரியர்களாக நியமிக்கலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கை பிரச்சனைகள் தீரும்.
  • எதுவுமே முடியாவிட்டால் ஆபாசக்கூத்துகளாக இருக்கும் சினிமாப்பாட்டுக்கு ஆடும் நிகழ்ச்சிகளையாவது பார்க்காமல் புறக்கணியுங்கள். நம்முடைய கலைகள் தானே மீண்டும் செழித்து வளரும். கோணங்கி சொன்னது போல ‘வளர்ந்தால் தேயும் கலை, தேய்ந்தால் வளரும் கலை’.