Archive for the ‘நான்மாடக்கூடல்’ Category

பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.

அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.

பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.

மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.

பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.

பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.

வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.

ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)

பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?

வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.

(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)

https://www.youtube.com/user/bavachelladurai

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB

aasaithambi1

தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலானவை ஈம எச்சங்கள் கிடைக்கும் புதைவிடங்களாக இருந்த நிலையில் இதுவரை கிடைக்காத அளவுக்கு ஒரு பெரிய பரப்பில் மக்கள் வாழ்ந்த கட்டிடப்பகுதிகளடங்கிய ஒரு வாழ்விடத் தளமாகக் கிடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கீழடி.

greenwalk

கீழடி பசுமைநடைக்கு எப்போதும்போல முந்நூறுக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். எல்லோரும் தெப்பக்குளத்திலிருந்து கீழடி நோக்கிச் சென்றோம். தென்னந்தோப்பிற்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு அகழாய்வுத் தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கீழடி அகழாய்வுக்குழிகளின் அருகே ஒரு மரத்தடியில் கூடினோம்.

keeladi7

செப்டெம்பர் 2018-இலிருந்து நான்காம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டுவரும் எழுவர் குழுவில் ஒரு அகழாய்வாளரான ஆசைத்தம்பி அவர்கள் இந்த இடத்தில் கிடைத்த பொருட்கள் குறித்தும் தொல்லியல்துறையின் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். இவர் இத்துறைக்கு வருவதற்கு முன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள சான்றுகளை மேற்கோள் காட்டிப் பேசியதோடு, அகழாய்வுப் பொருட்களைப் பற்றி பேசும்போது நெகிழ்வோடு பேசினார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இதுவரை 39க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது. இவை போக, நினைவுச்சின்னங்களைப் பராமரித்தல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளையும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.

கீழடியைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். தமிழ் நிலத்தில் இதுவரை நடந்த பல ஆய்வுகளில், வாழ்விடப் பகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது; இருந்தாலும் மக்கள் வாழ்ந்ததைக் குறிக்கும் ஈமச்சின்னங்கள் போன்ற சான்றுகளே அதிகம் கிடைத்திருக்கின்றன. அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு போன்ற துறைமுகப் பகுதிகளில் அகழாய்வுகள் நடந்துள்ளன.  அதன் வழியாக மக்கள் வாழ்விடப் பகுதிகள் அருகில் இருந்தது என அறியலாம். ஆனால், மக்கள் வாழ்ந்த கட்டிடப் பகுதிகள் கடந்த 50-60 வருடங்களில் தமிழகத்தில் கிடைக்கவில்லை. கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில் 110 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய இந்த தொல்லியல் மேடு கிடைத்தது.

keeladi2

அ.முத்துக்கிருஷ்ணன் சொன்னது போல வைகையாற்று நாகரிகத்தின் தொல்லியல் எச்சங்களைத் தேடுகிற exploration என்கிற அந்த மேற்பரப்பு ஆய்வு எப்படி நடந்ததென்றால் வைகைக்கு வடகரையிலும், தென்கரையிலும் எட்டெட்டு கிலோமீட்டர் தொலைவில் கிராமம் கிராமமாக நடந்தே போய் பார்ப்பது. மேற்பரப்பில் பானையோடுகள், மணிகள் போன்ற தடயங்கள் கிடைக்கும். அவற்றோடு அக/புறச் சான்றுகளான இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். இந்த இடத்தைப் பொறுத்தவரை கூட கொந்தகை, கீழடி இரண்டு கிராமங்களிலும் 11-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கோயில்கள் உள்ளன. இதில் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். இப்பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புப் பகுதிகளாக இருப்பதற்கான வலுவான சான்றுகளாக உள்ளன.

மேற்பரப்பு ஆய்வில் ஒரு தொல்லியல் மேடு (archaeological mound) கிடைத்தபிறகு சமஉயர வரைபடம் தயாரிக்கும் contour survey மேற்கொள்வோம். அதன்படி மேடான இடத்திலிருந்து சரிவான இடம் நோக்கி ஆய்வுக்குழிகளை அமைப்போம். நாம் இப்போது அமர்ந்திருக்கும் இடந்தான் இந்த 110 ஏக்கர் தொல்லியல் மேட்டில் உயரமான பகுதி. உங்கள் இடதுபுறந்தான் முதன்முதலில் ஆய்வுக்குழிகள் வெட்டப்பட்டன. முதலில் உறைகிணறுகளும், பானையோடுகளும் கிடைத்தன. பிறகு அக்குழிகளை விரிவாக்கம் செய்தபோது கிழக்கு மேற்காக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் கட்டிடப்பகுதியும் கிடைத்தது.

தொல்லியல் ஆய்வு நடைமுறைகளைப் பற்றி இன்னும் விளக்கவேண்டியுள்ளது. ஒரேயடியாக மேடு முழுவதையும் மொத்தமாகத் தோண்டிவிட முடியாது. 10க்கு 10 என்ற அளவில் அகழாய்வுக்குழிகள் அமைக்கப்படுகின்றன. ஆய்வுக்குழிகளை அமைப்பதற்கென்று சில உலகளாவிய விதிமுறைகள் உள்ளன.  ஒவ்வொரு முறையும் 2-3 செமீக்கு மேல் கொத்தக்கூடாது. அங்குலம் அங்குலமாக கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு குழியில் கிடைக்கும் பொருட்களை வைத்துதான் அடுத்த குழியை எங்கு எடுப்பது என்று முடிவெடுப்போம். உள்ளுணர்வின் உதவியும் தேவை.

தமிழகத்தில் ஆய்வுக்குழிகளைத் தோண்டுவதற்கான அனுமதி ஜனவரி மாதம் தொடங்கி மழைக்காலம் துவங்குகிற செப்டம்பர் மாதம் வரை கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் அகழாய்வுக் குழிகளை மூடிவிடுவதுதான் வழக்கம். அவற்றை மூடிவிடுவதுதான் பாதுகாப்பு. கண்டெடுத்த தொல்லெச்சங்களை திறந்த வெளியில் வைத்தால் பருவகால மாற்றங்களால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது. மனிதர்கள் பாழ்படுத்தவும் வாய்ப்புண்டு. அதுபோக, தனியார் இடமாக இருந்தால் மூடித் தந்துவிடுவோம் என்று சொல்லித்தான் ஒப்பந்தமே போடப்படுகிறது. இந்திய அளவிலேயேகூட மூடப்படாத அகழாய்வு இடங்கள் மிகக்குறைவு. சிந்து சமவெளி அகழாய்வில் கொஞ்ச இடங்களில் – எங்கு வசதிப்படுகிறதோ அங்கு – மூடாமல் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறையைப் பொறுத்தவரை கங்கைகொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என்ற பகுதி அவ்வாறு விடப்பட்டுள்ளது.

keeladi

நான்காவது கட்டமாக கீழடியில் இந்த அகழாய்வு நடந்தாலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு இது முதல் கட்டம்.

இதில் மிகப்பெரிய கருப்பு சிவப்பு பானையொன்று கிடைத்தது. எத்தனை பானை விளிம்புகள் கிடைக்கின்றன என்பதை வைத்து அது என்னமாதிரியான இடம் என்று கணிக்கலாம். உதாரணமாக நான்கு ஐந்து விளிம்புகள் கிடைத்தால் ஒரு பத்து பேர் கொண்ட வீடு எனலாம். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட பானையோட்டு விளிம்புகள் கிடைக்கும்போது அது ஒரு சேமிப்புக் கிடங்கு போலத் தோன்றுகிறது. மணிகள் தயாரிக்கும் தொழில், துணிகளுக்குச் சாயமேற்றும் தொழில், அதைச் சார்ந்து வாழ்வோரின் வசிப்பிடங்கள் என ஒரு முன்னேறிய நகர நாகரிகமாக கீழடி உள்ளது. முந்தைய கட்டங்களில் கிடைத்த பொருட்களைத் தேதியிடல் செய்யும்போது அவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது.

பெரிய வட்டை (bowl) பற்றிச் சொன்னேன். கருப்பு சிவப்பு ஓட்டாலான இவ்வளவு பெரிய கலயம் இதுவரை இந்தியாவில் கிடைத்ததில்லை.  அதியமான் அவ்வைக்கு ‘நாட்படு தேறல்’ கொடுத்து விருந்தோம்பியதைப் போல உயர்குடி மக்கள் மது விருந்து நடத்தி உண்டாட்டு கொண்டாடியதைக் காட்டுவதாக இந்தக் கலயம் உள்ளது. இதை ஒரு முக்கியமான கண்டெடுப்பாகக் கருதுகிறோம்.

கருப்பு சிவப்புப் பானையோடுகளைச் செய்யும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. வைக்கும் பொருட்களோடு வினைபுரியாத வகையில் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் பளபளப்பாகச் சிவந்தும் இருக்கும். மெல்லிய இழைகளைக் கொண்ட புற்களை நிரப்பி பாண்டத்தை ‘கவிழ்த்து வைத்துச் சுடுதல்’ என்ற inverted firing முறையில் இதைச் செய்திருக்கிறார்கள். அலங்காரங்களும் செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அவை நிறம் மங்காமல் உயர் வேலைப்பாட்டுடன் இருக்கின்றன.

சிறியதும் பெரியதுவுமாக மீன் சின்னங்கள் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. அத்தகைய சிலவற்றை முழுவதுமாகத் தோண்டாமல் in situ – ஆக அப்படியே விட்டிருக்கிறோம். அழகன் குளத்தில் படகுச் சின்னம் பொறித்த பானையோடு கிடைத்ததைப் போல இது முக்கியத்துவம் வாய்ந்தது.

வட இந்தியாவில் நிறையவும் தென்னிந்தியாவில் அரிதாகவும் கிடைக்கக் கூடிய சாம்பல் நிறப் பாண்டம் வளையத்தோடு முழுமையாகக் கிடைத்துள்ளது.

கீழடுக்குகளில் கீறல்கள்/ குறியீடுகள் (graffiti marks) கொண்ட ஓடுகளும், அதற்குமேல் திசன், ஆதன் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 16க்கும் மேற்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளன.

keeladi3

முதல் அகழாய்வுக்குழியில் ஒரு உறைகிணறும், இரண்டாவது குழியில் 13 உறை கிணறுகளும் (ring well) கிடைத்திருக்கின்றன. ஒரே இடத்தில் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் ஒரு உறைகிணறு கிடைத்துள்ளது. நான்கு மீட்டர் ஆழத்திலும் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இது இரு குடியேற்றங்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது. காலத்தால் முற்பட்ட ஒரு குடியேற்றம் சில காரணங்களால் மண்மூடிப்போக மீள்குடியேற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இது காட்டுகிறது. சங்க காலம் தொட்டு கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியைக் காண்கிறோம்.

வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில் குறியீடுகள் ஏதும் இல்லாவிட்டாலும் சதுர வடிவிலான அதன் வடிவத்தையும் அதன் அளவையும் வைத்து பாண்டியர்களுடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறோம். இன்னும் கொஞ்சம் நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து ஆய்வும் ஆவணப்படுத்தலும் நடக்கின்றன.

ஒன்றரை மீட்டர் ஆழத்தில் தங்கத்தினாலான ஆறேழு பொருட்கள் கிடைத்துள்ளன. தங்கத்திலான தோடுகள், தொங்குதாலிகள் (pendent), காதில் மாட்டக்கூடிய வளையங்கள், பித்தான்கள் (button) கிடைத்துள்ளன. யானைத் தந்தத்திலான சீப்புகள், பிறபொருட்கள் கிடைத்துள்ளன. விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட அம்பு முனைகள் கிடைத்துள்ளன.

பெரிய விலங்கு ஒன்றின் முழுமையான எலும்புக்கூட்டு புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.

காடிகள் கொண்ட கூரை ஓடுகள் (grooved roof tiles) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில் கயிறு வைத்து கழிகளில் கட்டுவதற்கு ஏற்ப இரண்டு துளைகள் உள்ளன. கழிகள் ஊன்றுவதற்கான குழிகளும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அவர்களது அறிவிற்கான சான்று.

காடியுடன் கூடிய கூரை ஓடு ஒன்றில் அதைச் செய்த முப்பாட்டன் அல்லது பாட்டியின் கை அச்சும் பதிந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு அதை நாம் தொடுகிறோம் என்பது புல்லரிப்பைத் தருகிறது.  

keeladi6

குயவுத்தொழில் நடந்ததற்கான சான்றாக சுடுமண் பொம்மைகள் செய்யும் அச்சு (mould) கிடைத்துள்ளது. அந்த அச்சில் செய்த சுடுமண் பொம்மையும் கிடைத்துள்ளது. இவை மந்திரம், சடங்குகளுக்குப் பயன்பட்டிருக்கலாம்.

இரும்புக் கட்டி ஒன்று கிடைத்துள்ளது. இரும்புக் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் செம்புக்காலம் அதிக அளவில் இல்லை என்ற கருத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் கண்ணுக்கு மைதீட்டக் கூடிய செம்புக்கம்பி கிடைத்துள்ளது.

கண்ணாடியை உருக்கி மணிகள் தயாரிக்க ஊதுஉலைகள் இருந்திருக்கின்றன. வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு வண்ணங்களிலான மணிகள் தயாரிக்கும் நுட்பம் மிகுந்ததாக கண்ணாடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் இருந்துள்ளது. கடுகு அளவேயான மணியிலிருந்து மிகப்பெரியது வரை வெவ்வேறு பாசிமணிகள் கிடைக்கின்றன.  ஒரே இடத்தில் குவியலாக 300 க்கும் மேலான மணிகள் கிடைத்துள்ளன.

பானை ஓட்டுச் சில்லுகள் விளையாட்டுப் பொருட்களாகவும், எடைக்கற்களாகவும் பயன்படத்தக்கவகையில் செதுக்கப்பட்டுள்ளன.

நாகரீக வளர்ச்சியின் அடிப்படையான சக்கரங்கள் கிடைத்துள்ளன. பானைகளுக்கு வண்ணந்தீட்டுவதற்கான இலச்சினைகள் (emblem) கிடைத்துள்ளன. நெசவுத் தொழில் இப்பகுதியில் நடந்திருப்பதற்கு சான்றாக பருத்தியிலிருந்து நூலைப் பிரிப்பதற்கான நூற்புக்கதிர்கள் (தக்ளி, spindle-whorl) நிறைய கிடைத்துள்ளன.

மண்ணில் செய்தது முதல் தந்தந்தில் செய்தது வரையான விளையாட்டுச்சாமான்கள், பகடைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைக்காததான ‘அகேட்’ என்ற பொருளாலான சாமான்கள் உள்ளன. இறக்குமதி செய்யும் அளவுக்கான செல்வச்செழிப்பை இது காட்டுகிறது.

நான்காவது கட்ட அகழாய்வில் இவ்வாறு 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடி அகழாய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

அகழாய்வாளர் ஆசைத்தம்பியின் ஆசை தம்பிதான் நமது பசுமைநடை நண்பர் உதயகுமார். ஆசைத்தம்பி அவர்களின் உரைக்குப் பின் உதயகுமார் தன் அண்ணன் தொல்லியல்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தான் இதில் ஆர்வமாக உள்ளதை தன்னிலை விளக்கமாக கூறினார்.

muthukrishnan

முன்னதாக அங்கு பசுமைநடை அமைப்பாளர், கீழடியின் புகழை உலக அரங்குகளில் எடுத்துரைத்து வந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கீழடியைத் தொல்லியல்துறை கண்டடைந்ததைப் பற்றிப் பேசினார்:

மதுரை மக்களின் வரலாற்று மீதான ஆர்வமே தொடர்ந்து நம்மைப் பயணிக்க வைக்கிறது. தமிழரிடையே இன்று கீழடி அளவுக்குப் புகழ்பெற்ற அகழாய்வுத் தளம் வேறில்லை. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் ஈம எச்சங்கள் முதல் கல் ஆயுதங்கள் வரை பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன என்றாலும் பெரும்பாலானவை burial sites எனப்படும் புதைவிடங்களாக இருந்த நிலையில் கீழடி மிகப்பெரிய வாழ்விடத் தளமாக (habitation site) கிடைத்துள்ளது.

வைகைநதிக்கரை நாகரிகத்திற்கான தேடுதலில், வைகையாறு உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள 256 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றின் இருமருங்கிலும் எட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள கிராமங்களுக்குச் சென்று வீட்டிற்கு வானம் தோண்டும்போதோ, உழவுப்பணிகளின் போதோ ஏதேனும் மட்பாண்டங்கள் கிடைத்ததா? விசித்திரமான பொருட்கள் கிடைத்தா? என்று கேள்விகளோடு மக்களைச் சந்தித்து கேட்டறிந்தனர். இதில் 256 கிலோமீட்டரில் 293 இடங்கள் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையால் செய்யப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் 170 புதிய, குறிப்பிட்ட இடங்கள் இருந்தன. அவற்றிலிருந்து 18 இடங்கள்/ 9/ 3 இடங்கள் என்று  வடிகட்டி வடிகட்டி கடைசியாகக் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் அகழ்வாய்வுகள் தொடங்கின. அதிகம் பாதிக்கப்படாத ஒரு மண்மேடாக (undisturbed mound) இந்த இடம் கிடைத்தது. வரலாற்றுக்காலம் தொடங்கி இன்று வரை வேளாண் நடவடிக்கை தவிர மற்றபடி மக்களால் அதிகமாகத் தொந்தரவு செய்யப்படாத இடமாக, இந்த இடம் அப்படியே கிடைத்தது. இந்த இடம் குறித்து தொடர்ந்து பேசி, தொல்லியல்துறையை அழைத்துவந்தவர் என இவ்வூரில் வசிக்கக்கூடிய ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம்.

இந்த இடத்தில் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் செய்யப்பட்டது. நான்காவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் செய்யப்பட்டது.

sundarkali.jpg

பேராசிரியர் சுந்தர்காளி கீழடியின் சிறப்புகளை, அகழாய்வுத் தகவல்களை விரிவாகக் கூறினார்.

birthday

எல்லோரும் அகழாய்வுக்குழிகளைப் பார்த்து வியந்தனர். தென்னந்தோப்பில் எல்லோருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சரணவன் அவர்களின் மகன் சர்வேஸ்வரன் பிறந்த நாள் கீழடியில் பசுமைநடையாளர்களால் கொண்டாடப்பட்டது. கீழடியை விட்டு வர மனமே இல்லாமல் கிளம்பினோம்.

keeladi1

 

 

sankar.jpg

நாற்றங்கால் பள்ளி தொட்டு சமணப்பள்ளி வரை நான் கற்ற பள்ளிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பள்ளி புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளி. அங்கு இடம் கிடைப்பதே மிகச் சிரமம். அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படித்தேன். 50-வது பொன்விழா ஆண்டையொட்டி தொடர்ந்து பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. போகிபண்டிகையன்று (13.01.2018) ஒளிரும் நட்சத்திரங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பிரிட்டோ பள்ளியில் படித்து சாதனைபடைத்த மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்துறை சார்ந்தவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

பள்ளிக்கு நான் என் சகோதரர்களோடு சென்றேன். என்னுடன் வந்த தமிழ்ச்செல்வ அண்ணன் 1998ல் அங்கு பனிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் பிரிட்டோ பள்ளியில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவர். பள்ளியில் நுழையும் போது உரையாற்றிக் கொண்டிருந்த குரல் மிகவும் நெருக்கமாகத் தோன்ற, நாங்கள் படித்த போது எங்கள் கதாநாயகனாய் திகழ்ந்த லூயிஸ் அமல்ராஜ் சார் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு அறிவியல் ஆசிரியராய் இருந்த லூயிஸ் சார்தான் இப்போது பள்ளியின் தலைமையாசிரியர் எனும்போது பெருமகிழ்வாய் இருந்தது.

பள்ளியின் மையத்தில் போட்டிருந்த அரங்கு மிகப்பெரிதாய், புதிதாய் இருந்தது. நாங்கள் படித்தபோது அங்கு மேற்கூரை எதுவும் இல்லை. திங்கள்கிழமைதோறும் பிரேயரின்போது மேடையை நோக்கி மாணவர்கள் வந்து நிற்பதை மேலிருந்து பார்த்தால் சிலுவை போலிருக்கும். உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டேயிருக்க மனம் முழுக்க படித்த நாட்களை நோக்கி பின்சென்றது.

painting.jpgபெத்தானியாபுரத்தில் இறங்கி பாபுசங்கர் கல்யாண மண்டபம் வழியாக இறங்கி நடந்து செல்வோம். பள்ளியில் நிறைய புதுநண்பர்கள் கிடைத்தனர். கடைசிபெஞ்ச் என்பதால் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பை படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை எங்களோடு படிக்க வந்த நண்பர்களோடு பழக்கமானது. ஒவ்வொரு ஆசிரியரும் பாடத்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கம், வாழ்க்கை என மேம்பட உதவினார்கள் என்றால் அது மிகையாகாது.

நான் பிரிட்டோ பள்ளியில் படித்தபோது எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த தமிழாசிரியர் சுப்பிரமணிய ஐயா, பிரிட்டோ ரொட்ரிகோ(ஆங்கிலம்), எஸ்.ஆர்.ஏ (கணிதம்), லூயிஸ் அமல்ராஜ்(அறிவியல்), திவ்யானந்தம்(சமூக அறிவியல்), ஜீவானந்தம் (உடற்கல்வி) என எடுத்தனர். பத்தாம் வகுப்பில் ஜி.இருதயராஜ் சார் ஆங்கிலமும், சமூக அறிவியலும் எடுத்தார். மற்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் எடுத்தவர்களே. யாகப்பன் ஐயாதான் தலைமையாசிரியராக இருந்தார். மிகவும் கண்டிப்பானவர்.

prasanna.jpgவெள்ளை சட்டை, செர்ரி வண்ண காற்சட்டையும் யூனிபார்ம். கண்டிப்பாக உடற்கல்வி பாடவேளையில் அரைகாற்சட்டையும் பள்ளி இலட்சினை பொறித்த பனியனும் போட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் உடற்கல்வி ஆசிரியர்கள் பூசை வைப்பார்கள். அதிலும் எல்லோரும் சேர்ந்து ஒன்-டூ, ஒன்-டூ என்று சொல்லி இரண்டு குழுக்களாக பிரியும்போது சிலநேரம் யாராவது ஒருத்தன் குழப்பினாலும் மொத்தமாக மொத்துவிழும். ஆனாலும், குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் மறுநாள் முழுப்பரிட்சையே இருந்தாலும், கடைசிப்பாடவேளை உடற்கல்வி என்றால் விளையாடத்தான் செல்ல வேண்டும். கூடைப்பந்தாட்டமும், கைப்பந்தும், பேஸ்பாலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பிரிட்டோவில் இருந்தனர். பள்ளிக்கும் வீட்டுக்குமான தொலைவு அதிகமென்பதால் கூடைப்பந்தில் சேர முடியவில்லை.

with MJD.jpg

நிகழ்ச்சியின் இடைவேளையில் எல்லோருக்கும் பொங்கல் வழங்கினார்கள். என்.சி.சி. ஆசிரியராக இருந்த தன்ராஜ் சார், சுப்பிரமணிய அய்யாவை நானும் அண்ணனும் பார்த்து பேசினோம். கிறிஸ்டோபர் சாரைப் பார்த்தேன். நான் படித்தபோது என்னோடு படித்த நண்பர்கள் யாரும் வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்த கட்டிடத்தருகே நிழற்படம் எடுத்துக்கொண்டோம். அங்கு படிக்கும் நாட்களில் படம் எதுவும் எடுக்கவில்லை, ஹால்டிக்கெட்டுக்கு தவிர. பத்தாம் வகுப்பு முழுப்பரிட்சைக்கு முன்பு ஓரியூரில் உள்ள அருளானந்தர் தேவாலயத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் அழைத்துச்சென்றனர். தேர்வு எழுதும் கலையை கற்றது பிரிட்டோ பள்ளியில்தான்.

karumbu juice vendor.jpg

பள்ளியிலிருந்து வரும்போது கரும்புச்சாறு வாங்கிக் குடித்தோம். அந்தக் கரும்புவண்டிக்காரர் நான் படித்தபோதிருந்தே கரும்புச்சாறு விற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் கேட்டபோது 20 வருடங்களுக்கு மேலே இருக்கும் என்றார். நான் 1998ல் இருந்து 2018 வரையிலான நாட்களில்  அந்த வீதி வழியாக செல்லும் நாட்களில் அவரிடம் கரும்புச்சாறு வாங்கிக்குடித்து பழைய நினைவுகளுக்குள் செல்வது வழக்கம். ஆம், நண்பர்களே! கரும்புச்சாறின் ஒரு மிடறு நம்மை 20 வருடங்களுக்கு முன் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது.

பி.கு: “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்பது இப்பள்ளியின் குறிக்கோள் சொற்றொடர். வசீகரமிக்க கிறித்துவத் தமிழில் சொன்னால் “விருதுவாக்கு”

puthumandabam  (7).jpg

மதுரையில் நானூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புது மண்டபமாய் திருமலை நாயக்கர் கட்டிய வசந்த மண்டபம் திகழ்கிறது. நோட்டு, புத்தகம், வெள்ளி, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், நாட்டார் தெய்வ விழாக்களுக்குத் தேவையான பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுச்சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் செல்ல வேண்டும்.

சுந்தர்காளி

மதுரை மேலவாசலிலுள்ள கொத்தளத்தில் அதன் வரலாறு குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யா பேசினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி மரபுச்சின்னங்களுக்கும் நமக்குமான உறவு குறித்து பேசினார்.

மதுரை கொத்தளத்திற்கும் தனக்குமான உறவு குறித்து சாந்தலிங்கம் அய்யா சொன்னதைக் கேட்டதும் எனக்கும் அதற்குமான உறவு நினைவிற்கு வந்தது. கோட்டைக்கு வடக்குப் பகுதியில் துளசிராம் இட்லிக்கடை இருந்தது. இரவு 12 மணிக்கு கூட சுடச்சுட இட்லிகள் கிடைக்கும். மதுரையில் இதுபோல பல இடங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய இட்லிக்கடைகளை அக்காமார்கள் வைத்திருந்தனர். 2005 வரை மதுரை தூங்காநகரமாக இருந்தது. அதன்பிறகு காவல்துறையின் கெடுபிடியால் நகரத்தில் இரவு நேரங்களில் நடமாடக்கூட முடியவில்லை. அதன்பிறகு இப்போது ஒருசில இடங்களில் மட்டும் இரவு உணவு கிடைக்கிறது.  மேலப்பெருமாள் மேஸ்திரிவீதியில் பலமுறை பணிகளை முடித்து இரவு நேரங்களில் நண்பர்களோடு இட்லி சாப்பிட்டு இருக்கிறேன். பெருமாள் மேஸ்திரி எதையோ பெரிதாக கட்டியிருக்கிறார். அதனால்தான் அவர் பெயர் நாலாபக்கத் தெருக்களிலும் வைத்திருக்கிறார்கள் என முன்பு நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அவர் இருந்த விசயத்தை இடிப்பதற்காக வேலை செய்திருக்கிறார் என்று.

kottai

தற்போது அரசன் இல்லை, மன்னராட்சி இல்லை. இந்தக் கோட்டை அதன் பயன்பாட்டை இழந்துவிட்டது. இன்றைக்கு வெறும் வரலாற்றுச் சின்னமாகப் பார்க்கிறோம். பழைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த விசயம் பிற்காலத்தில் பயன்ற்றுப் போகும் போது அதை என்ன செய்வது என்ற கேள்வியை உங்கள் முன்னால் வைக்கிறேன். அதைக் குறித்து இரண்டு விதமான பார்வைகள் உண்டு. ஒன்று என்னவென்றால் அப்படியே அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும். மரபியல் சின்னமாக கருதி அதை அப்படியே ஒரு அருங்காட்சியம் போல பாதுகாக்க வேண்டும். இரண்டாவது அதை அன்றாடப் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். அதை சேதப்படுத்தாமல், அழித்துவிடாமல் புதிய பயன்பாடுகளுக்குக் கொண்டு வரலாம்.

நாம் இப்பொழுது மதுரைல பார்க்குறோம். திருமலைநாயக்கர் மகாலுக்கு பக்கத்துல பத்துதூண் சந்துனு ஒண்ணு இருக்கு. அது இருக்குற இடத்தைப் போய் பாத்தீங்கன்னா அதைச்சுற்றி கடைகள் இருக்கு. அது ஒரு காலத்தில் நாயக்கர் மகாலின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றைக்கு அது மக்கள் புழங்குகிற ஒரு வெளியாக மாறிவிட்டது. அதை பயன்பாட்டில் இருக்கும் வரலாற்றுச் சின்னம் அப்படினு கூட சொல்லலாம்.

புதுமண்டபம் பற்றியும் இந்த இரண்டு பார்வைகள் இருக்கின்றன. ஒன்று அந்தக் கடைகளை மரபுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும். இன்னொன்று கடைகள் இருக்கட்டும். அந்தச் சிற்பங்களை சேதப்படுத்தாமல் கடைகள் இருக்கலாம் என்றொரு விசயம்.

புதுமண்டபத்துல மட்டுமே கிடைக்கக்கூடிய விசயம் மதுரைல இருக்கு. ஒரு காலத்துல புத்தகக்கடைகள் எல்லாம் புதுமண்டபத்துலதான் இருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1940கள் வரைக்கும் மிக அரிய நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் எல்லாம் அங்கே கடைகளை வைத்திருந்தார்கள். புதுமண்டபத்துல இன்றைக்கும் ஒரு பக்கம் புத்தகக்கடைகள் இருக்கின்றன. அவங்க இன்றைக்கு பாடப்புத்தகங்களைத்தான் விற்குறாங்க. அன்றைக்கு இலக்கியம், இலக்கணம், தத்துவ நூல்களை வெளியிட்டவர்கள் கடைகளை வைத்திருந்தார்கள்.

இன்னொரு பக்கத்துல கோயிலுக்கு பயன்படுற பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், மஞ்சள்-குங்குமம் போன்ற விசயங்கள் அங்க கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வருகிற பயணிகள் மதுரையில் கிடைக்கக்கூடிய பருத்தி துணிகளை வாங்கி உடனே தைத்து போட்டுக் கொள்வதற்கான வசதி, அங்கே நிறைய தையற்காரர்கள் இருக்காங்க. அதுனால, சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாவும் அது இருக்கு.

தையல்கடைகள்

இப்ப புதுமண்டபத்தோட வரலாறு பாத்தீங்கன்னா அது வசந்தமண்டபம். திருமலைநாயக்கர் கட்டியது. அதைச்சுற்றி நீரை நிரப்பி வசந்த உற்சவம் கொண்டாடினர். நடுவில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பல நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அங்கே வாதங்கள் நடந்திருக்கின்றன. யாராவது ஒருத்தர் தன்னுடைய கொள்கையை நிரூபிக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு எதிராய் இருக்கக்கூடியவரோடு வாதம் புரிவர். யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்தக் கொள்கை ஏற்றுக் கொள்வது, அதை விட்டுவிடுவது நிகழும். பல நேரங்களில் வாதத்தில் தோற்றவர் ஜெயித்தவருக்கு அடிமையாகிவிடுவர். இப்ப அதெல்லாம் இல்ல. ஆனால், மக்கள் அதிகம் போய் வாங்கக்கூடிய அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகள் இருக்கின்றன.

வசந்தவிழா.jpg

இப்ப ஒரு சாரார் இந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சொல்கிறார்கள். இன்னொரு சாரார் சேதம் விளைவிக்காமல் இருக்கட்டும். இதில் எந்தப் பார்வை உங்களுக்கு உடன்பாடானதோ அதை எடுத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டாவது பார்வையைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன். வெறும் மரபுச் சின்னமாக பாதுகாக்காமல் தற்கால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன். 1994ல நான் நியுயார்க் நகரத்துக்கு மாநாடுக்காக போயிருந்த போது மிக மையமான பகுதியில மான்ஹாட்டன்ல நடந்தது. மான்ஹாட்டன்ல பெரிய கிறிஸ்துவ தேவாலயத்துலதான் நடந்தது. மிகப்பெரிய அந்த தேவாலயத்தில் இரண்டு மூணு மாடிகள் இருந்தன. பெரிய, பெரிய கருத்தரங்க அறைகள் இருந்தன. அங்க தான் அந்த மாநாடு நடந்தது. கீழ்தளத்துல பெரிய ஹோட்டல் இருக்கு. 20ம் நூற்றாண்டு தொடக்கத்துலயே பல கோயில்ல வழிபாடு இல்லாமல் போய்விட்டார்கள். மூடிப் போட்டுட்டாங்க. பல கோயில்கள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு மரபுச்சின்னத்தை அப்படியே அருங்காட்சியகம் போல் பாதுகாப்பதா? இல்லை தற்காலப் பயன்பாட்டுக்கு உகந்ததாகக் கொள்வதா என்ற பார்வைகளை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம், விவாதிக்கலாம்.

பேராசிரியர் சுந்தர்காளி அவர்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். நான் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் புதுபுத்தகம் போட்டார்கள். பழைய புத்தகங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, ஒவ்வொரு ஆண்டும் நோட்டு, புத்தகம் வாங்க புதுமண்டபம் சென்ற நினைவிருக்கிறது. அதேபோல எங்க வீட்டு முன்புள்ள தென்னை மரம் பாளை போட்ட போது பொங்கல் வைக்க காதோலை கருகமணி வாங்கிக் கட்டணும் என்றதும் அதை வாங்க புதுமண்டபம்தான் சென்றேன். பெயர் புதுமண்டபமாக இருந்தாலும் பழமையான பொருட்கள் வாங்க ஏற்ற இடம் அது. புதுமண்டபத்திலுள்ள தையல்கடைகள், பாத்திரக்கடைகள் குறித்து நியூஸ்18 யாதும் ஊரே நிகழ்வில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கச்சை

திரிசித்திரைத் திருவிழாவில் அழகருக்குத் திரியெடுப்பவர்கள், துருத்தி நீர்பீச்சுபவர்கள், சாமியாடுபவர்களுக்குத் தேவையான திரி, உடை, நாங்குலி கம்பு எல்லாம் புதுமண்டபத்தில்தான் கிடைக்கும். அதை அருங்காட்சியகம் போல் மாற்றக் கோருவது நாட்டார் மக்களின் நம்பிக்கையை குலைத்துப் போடும் செயல். மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி மதுரையிலுள்ள பழமையான பல கோயில்களில் உள்ள சிற்பங்களையே நாம் நின்று ரசிப்பதில்லை. அப்படியிருக்கும்போது புதுமண்டபத்தை அருங்காட்சியகம் போல மாற்றுவதால் நம் மக்களின் கலை ரசனை உயர்ந்து விடுமா?

புதுமண்டபத்திற்கு தொன்மை அங்குள்ள கடைகள் வாயிலாகத் தொடர்ந்து வருகிறது. எனவே, புதுமண்டபக் கடைகளை மாற்றக் கூடாது. அந்த இடம் மக்களின் புழங்கு பொருள் பண்பாட்டின் கூடமாகத் தொடர்ந்து திகழட்டும்.

படங்கள் உதவி – து.ச.சதீஸ்வரன்

கொத்தளம்

மதில்கள் நிறைந்த மாட மதுரையில் பாண்டியர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் கட்டிய கோட்டைகள் இடிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், மதுரையைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத கோட்டை ஒன்றுள்ளது. அந்தக் கோட்டை தமிழர்களின் பண்பாடு, தொன்மை இவைகளை காத்து நிற்கும் கோட்டை. அகழாய்வாகட்டும், அலங்காநல்லூர் சல்லிக்கட்டாகட்டும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் கோட்டையாக மதுரை திகழ்கிறது.

இடிந்து போன கோட்டைகளின் எச்சமாக அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் அமைந்துள்ள பாண்டியர் கால விட்டவாசலும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் வணிகவளாகப் பேருந்து நிலைய வாசலில் நாயக்கர் கால கொத்தளமும் உள்ளன. இம்முறை பசுமைநடையாக கொத்தளத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

பள்ளிவாசல் (1)

அதிகாலை கிளம்பி வணிகவளாகப் பேருந்துநிலையம் எதிரேயுள்ள பள்ளிவாசல் முன்னே எல்லோரும் கூடினோம். நண்பர்கள் எல்லோரும் ஆங்காங்கே கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வந்ததும் கொத்தளத்தை நோக்கி நடந்தோம். கொத்தளத்தின் கீழே நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கொத்தளத்தின் மீதேறினால் உள்ளே மரங்கள் நிறைந்த சிறு பூங்கா. மார்பிள் கல்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள் அரைவட்ட வடிவில் அனைவரும் அமர்ந்து பேசுவதற்கு ஏற்ற வடிவில் அமைந்துள்ளது. கொத்தளத்திலிருந்து பேருந்து நிலையம், யுனியன் கிறிஸ்டியன் பள்ளி, தேவாலயம் இவைகளை மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வந்திருந்தவர்களில் 95% பேர் முதன்முறையாக வந்தவர்கள் என்னைப்போல.

முத்துக்கிருஷ்ணன் (1)

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் மதுரையின் வரலாற்றில் இந்தக் கோட்டை கொத்தளம் குறித்து விரிவாகப் பேசினார். அவரது உரையின் சாரம் கீழே காணலாம்:

சங்க காலத்தில் கூடல் அழகர் பெருமாள் கோயில் இருந்த பகுதி இருந்தையூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கூடலழகர் பெருமாள் கோயில் அருகில் கிருதுமாலா நதி ஓடியிருக்கிறது. அந்நதி வைகையின் கிளைநதி. அதேபோல இன்மையில் நன்மைதருவார் கோயில் அமைந்த பகுதிக்கு நடுவூர் என்று பெயர். (அங்குள்ள அம்மனை இன்று மத்தியபுரி அம்மன் என்று அழைக்கிறார்கள்). அந்த சிவன் கோயிலை நடுவூர் சிவன் கோயில் என்றே அழைத்திருக்கிறார்கள். இப்போது தல்லாகுளம், சொக்கிகுளம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் பெயர்கள் இருப்பது போல அக்காலத்தில் இருந்தையூர், நடுவூர், ஆலவாய் என்று இப்பகுதிகள் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊர்களின் தொகுப்பாக மதுரை இருந்துள்ளது.

சங்க காலத்தில் பாண்டியர்கள் கோட்டை இருந்த இடம் தெரியவில்லை. ஆனால், பிற்காலப் பாண்டியர்கள் இருந்த கோட்டை தற்போது மீனாட்சியம்மன் கோயில் தெற்கு சித்திரைவீதிக்கருகில் உள்ள போலிஸ் கமிஷனர் அலுவலகமாக இருந்திருக்கலாம். அதன் உள்ளே போய் பார்த்தால் மாடங்கள், அதன் அழகிய விதானங்களைப் பார்த்தால் தெரியும்.  நேதாஜி ரோட்டிலுள்ள ராஜா பார்லி எதிரேயுள்ள தெருவிற்கு பாண்டியன் மேற்கு அகழித் தெரு என்று பெயர். திருமலைநாயக்கர் அரண்மனைகிட்ட தெற்கு அகழித் தெரு இருக்கிறது. பாண்டியர் காலத்தில் கோட்டையும் இருந்ததற்கு சான்றாக விட்டவாசல் இருக்கிறது. பாண்டியர் காலக் கோட்டையில் இடிக்காமல் விட்ட வாசலே இன்று விட்டவாசல் என்ற பெயரோடு திகழ்கிறது. பாண்டியர்களுக்குப் பிறகு சுல்தான்கள், விஜயநகர ஆட்சிக்குப் பின் நாயக்கர்கள் ஆட்சி 15ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

நாயக்கர் ஆட்சி காலத்தில் நிர்வாக அமைப்பு நிறைய மாற்றி அமைக்கப்பட்டது. விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களும், திருவாங்கூரின் ஒரு பகுதியும் நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த பரந்துபட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு பாளையக்காரர்களை நியமித்தார். அவர்கள் அமர நாயகர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் ஆட்சிசெய்து வரிவசூல் செய்து கொள்ளலாம். அதில் மூன்றில் ஒரு பகுதியை அவர்கள் செலவுகளுக்கும், மற்றொரு பகுதியை படைகளை பராமரிப்பதற்கும், மீதமுள்ள மூன்றாவது பகுதியை அரசுக்கும் செலுத்த வேண்டும். விசுவநாத நாயக்கரின் செயல்களுக்கு மூளையாக இருந்தவர் தளவாய் அரியநாத முதலி. இவர் காஞ்சிபுரம் பகுதியில் பிறந்தவர். இவர் மூன்று நாயக்க மன்னர்களிடம் பணியாற்றியிருக்கிறார். ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் இவரே. அம்மண்டபத்தின் வாயிலில் உள்ள குதிரை வீரன் சிலையை அரியநாதமுதலி என்றும் சொக்கநாதராவுத்தர் என்றும் சொல்லுவர். இவர் தொண்டை மண்டல வேளாளர்.

மதுரையில் பாண்டியர் கோட்டையைச் சுற்றி வெளியே நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மிக வலிமையாக கட்டப்பட்டது. 72 கொத்தளங்களின் கீழும் வீரர்கள் 50 – 100 பேர் தங்குவதற்கு இடவசதி இருந்தது. தற்போது கீழ்தளத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மதுரை கோட்டையை முற்றுகையிட பல மன்னர்கள் முயன்றனர். 1790களில் திண்டுக்கல்லை வென்று சோழவந்தானில் வந்து காத்திருந்தார் திப்பு சுல்தான். ஆனால், அவரால் மதுரையை வெல்ல இயலவில்லை. இந்தக் கோட்டையை பாதுகாத்த மற்றொருவர் மருதநாயகம் என்ற கான்சாகிப். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இக்கோட்டை ஜோகன் பிளாக்பர்ன் என்ற கலெக்டரால் நகரவிரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது. இக்கோட்டையை இடிக்கும் பகுதியில் அதை இடித்த மக்களே குடியேறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்போடு இக்கோட்டையை இடித்து அகழிகளை மேவினார். அவருக்கு இப்பணியில் உதவியாக இருந்த நில அளவையாளர் மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரியின் பெயர்களின் மதுரையில் மாசி வீதிகளுக்கு வெளியே அவர்கள் பெயர்களில் தெருக்கள் அமைந்தன.

சாந்தலிங்கம் (1)

பெரியார் பேருந்துநிலையத்திற்கு பின்னே வலைவீசித் தெப்பக்குளம் ஒன்று இருந்தது. அப்பகுதியில் இருந்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை நான் படியெடுத்திருக்கிறேன். ஆவணித்திருவிழாவின்போது வலைவீசிய திருவிளையாடலை நிகழ்த்திக்காட்ட கோயிலிலிருந்து சாமி வரும். தற்போது வருவதில்லை. அங்கு வலைவீசித்தெப்பமும் தற்போது இல்லை. அதேபோல டவுன்ஹால்ரோட்டில் உள்ள கூடலழகர் கோயில் தெப்பத்திற்கு மாசிமகத்திற்கு பெருமாள் வருகிறார். அங்கு தண்ணியில்லை.

இந்த கோட்டைக்கு நான் 1974 – 75 ல் முதன்முறையாக வந்திருக்கிறேன். அப்போது தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை படித்துக்கொண்டிருந்த மாணவன் நான். பாரதியார் விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றேன். பரிசு வழங்கிய நாளில் நான் ஊரில் இல்லாததால் அதை இங்குள்ள டி.ஓ.அலுவலகத்தில் வந்து பெற்றபோது முதல்முறையா வந்தது. அதன் பிறகு பலமுறை வந்திருக்கிறேன். மதுரையின் கோட்டையின் எச்சமாகத் திகழும் இந்தக் கொத்தளம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சாந்தலிங்கம் அய்யாவைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி மரபுச் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அவைகளை அருங்காட்சியம் போல பாதுகாப்பதா? அல்லது அன்றாட மக்கள் புழக்கத்தோடு அதைப் பாதுகாக்கலாமா என்று இரண்டு பார்வைகளை சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் மதுரை குறித்து பேசினார். அந்த உரைகளை அடுத்த பதிவில் காணலாம். அற்புதமான நிகழ்வான அன்றைய நடை இன்றும் நினைவில் நிற்கிறது.

படங்கள் உதவி – அருண்

Fullscreen capture 23-07-2017 143159.bmp

கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரியான “யாதும் ஊரே” என்ற சொல்லை மெய்பிக்கும் வகையில் NEWS 18 செய்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் உள்ளது. வெறும் பயண நிகழ்ச்சியாக இல்லாமல் பண்பாடு, கலை, உணவு போன்ற மண்ணின் வேர்களை வருடிச் செல்கிறது.

மதுரையைக் குறித்த ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சி குறித்த பதிவு. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரை மிகப்பெரிய கிராமமாகவும் விளங்கி வருவதை இந்நிகழ்ச்சி அழகாய் காட்டுகிறது. மதுரை கிராமத் திருவிழாவில் பபூன் அறிமுகத்தோடு தொடங்கும் நிகழ்ச்சி, கீழடி அகழாய்வுப் பகுதி, மதுரை வீதிகள், புதுமண்டபம், நாடக நடகர் சங்கம் என நீள்கிறது.

Fullscreen capture 23-07-2017 143102.bmp

மதுரையை 30 நிமிடங்களில் காட்சிப்படுத்துவது கடினமான காரியம். ஆனாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவம் போல மதுரையின் தொன்மை, நாடகக்கலைக்கு கிராமங்கள் அளிக்கும் முக்கியத்துவம், எளிய மக்களுக்கான சாலையோர கடைகள், நாடகக் கலைஞர்களை காட்டுவதன் வாயிலாக மதுரையைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

Fullscreen capture 23-07-2017 143356.bmp

கீழடி அகழாய்வு மதுரையின் தொன்மையை 2500 ஆண்டுகள் என்பதிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொண்டு சென்றுள்ளதையும், இங்கு கிடைத்த அரிய பொருட்கள் குறித்தும் பேசும் கஸ்தூரிரங்கன் சிறப்பாய் அகழாய்வை எடுத்துரைக்கிறார். அங்குள்ள செங்கல் கட்டிடங்களையும், உறைகிணறுகளையும், அங்கு கிடைத்த பொருட்களையும் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணி கார்த்திக் அருமையாய் பதிவுசெய்கிறார்.

புதுமண்டபத்திலும் அதற்கு எதிரேயுள்ள எழுகடல் தெருவிலும் இன்றும் அரிவாள்மனை, தோசைக்கல், இரும்பு அடுப்பு பொருட்கள் விற்பதோடு பித்தளை, வெங்கலம், செப்பு பாத்திரங்கள் விற்பதையும் படமாக்கியிருக்கிறார்கள். அங்குள்ள கடைக்காரர்களோடான உரையாடல், மக்களோடு அந்தக் கடைக்காரர்கள் கொண்டுள்ள உறவு, அவர்களுக்கிடையே நடக்கும் பேரம் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானை, குடம் நம் வீட்டில் இன்னமும் இருக்கிறது. நாமோ பயன்படுத்தி தூக்கி எறியும் (USE AND THROW) கலாச்சாரத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம். உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டுமானால் பிளாஸ்டிக்கை தூக்கி எறிய வேண்டும்.

Fullscreen capture 23-07-2017 143326.bmp

புதுமண்டபத்தில் உள்ள தையல்கலைஞர்கள் கரகாட்டம், சாமியாட்டம், போன்ற கலைகளுக்கு உடை தைப்பதோடு குலசேகரப்பட்டினம் திருவிழாவிற்கும் உடை தைத்து தருகிறார்கள் என்று அறியும்போது பெருமையாக இருக்கிறது. மேலும், கரகாட்டக்காரன் தொடங்கி பல திரைப்படங்களுக்கு இங்கிருந்தே உடை தைத்து தந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றும் போனால் உடனே தைத்து வாங்கி வந்துவிடலாம் என புதுமண்டபத்திற்குச் செல்பவர்கள் இருக்கிறார்கள்.

Fullscreen capture 23-07-2017 143227.bmp

மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் நாடக நடிகர் சங்கம் அமைந்துள்ளது. அந்த வீதியில் உள்ள தேனீர்கடையில் தேனீர் அருந்தும் போது கலைஞர்கள் பவளக்கொடி, வள்ளி திருமணம் என உரையாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும். நாடக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்களுடைய பேச்சு, வசனத்தை அவர்கள் கடகடவென சொல்ல நம் நெஞ்சம் தடதடவெனப் பறக்கிறது. அதோடு மீனாம்மாள் என்ற மூத்த நாடக நடிகையுடனான உரையாடலும், அவர் சொல்லும் தகவல்களும் நம்மை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிழுத்துச் செல்கிறது.

Fullscreen capture 23-07-2017 143250.bmp

யாதும் ஊரே – நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு டி.வி.டி.யாக வெளியிட்டால் பயணிப்பவர்களுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு, பண்பாட்டை தேடி அலைபவர்களுக்கு உதவியாக இருக்கும். பேருந்துகளில் இதை ஒளிபரப்பும்போது நம் ஊரைப் பற்றியும், அதன் பன்முகத்தன்மை பற்றியும் அறிந்துகொள்ள உதவும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப மாற்றம் மெல்ல, மெல்ல நிகழ இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகம் வர வேண்டும். மதுரையைப் போல விரும்பி ரசித்த மற்ற ஊர்ப் பதிவுகளையும் தொடர்ந்து எழுதலாமென்று இருக்கிறேன். அதோடு நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டுமென்ற ஆசையையும் ‘யாதும் ஊரே’ தூண்டிவிட்டது. இந்நிகழ்ச்சியை இயக்கும் தோழர் தயாளன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.

20140146_1520601538010456_8785251497691358081_n.jpg

தொல்லியல், கல்வெட்டுகள் மீதான காதல் பசுமைநடைப் பயணங்களில் துளிர்த்தது. ஒவ்வொரு மலையிலும் தமிழின் தொன்மை, பண்பாடு, வரலாறு என பல விசயங்களை அங்குள்ள கல்வெட்டுகள் மௌனமாக உணர்த்திக் கொண்டே இருந்தன. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களை வரலாற்று வகுப்பாகவே மாற்றி எங்களை அவரது மாணவர்களாக்கிவிட்டார். இந்நடையில் இன்னும் கூடுதல் சிறப்பாக கல்வெட்டுகளைப் படியெடுத்துக் காட்டி செய்முறை வகுப்பையும் விருப்பமுள்ளதாக்கி விட்டார். கல்வெட்டை படியெடுத்து காட்டியபோது பள்ளி செல்லும் மாணவன் முதல் ஓய்வு பெற்ற முதியவர் வரை எல்லோருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.

மாடக்குளம் கண்மாயில் உள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை பசுமைநடையாக 2012-இல் சென்ற போது பார்த்தோம். 2016-இல் பசுமைநடை நாட்காட்டியை மாடக்குளத்தில் வெளியிட்டபோது நீர்நிறைந்திருந்ததால் கல்வெட்டைப் பார்க்க முடியவில்லை. இம்முறை 16.7.2107 அன்று கல்வெட்டைப் பார்த்ததோடு அதை படியெடுப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

 

19642614_1520602788010331_4521376679230410892_n

ஒரு கல்வெட்டைப் பார்த்ததும் வாசிப்பது இலகுவானதல்ல. காலப்போக்கில் அதன்மீது படியும் தூசி, நீர், எண்ணெய், சுண்ணாம்பு போன்றவை அதை வாசிப்பதற்கு தடையாக அமைகின்றன. மேலும், ஒரு கல்வெட்டைப் படியெடுக்கும்போதுதான் அதை ஆவணப்படுத்த முடியும். அப்படி கல்வெட்டை படியெடுப்பதை படிப்படியாக சாந்தலிங்கம் அய்யா விளக்கினார்.

20031916_1520602174677059_5344261814083699559_n

கல்வெட்டை படியெடுக்கத் தேவையான உபகரணங்கள் சில. மேப்லித்தோ தாள், இரும்பு பிரஸ், நார் பிரஸ், மை, மை ஒற்றி, ஒரு வாளித்தண்ணீர், குவளை. முதலில் நாம் படியெடுக்கப்போகும் கல்வெட்டை இரும்பு பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வெட்டுகளின் மீது படிந்திருந்த புற அழுக்கு நீங்குகிறது. அதன்பிறகு நார்பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாளியிலுள்ள தண்ணீரை கல்வெட்டின் மீது ஊற்றும்போது கல்வெட்டு தெளிவாகத் தெரிகிறது.

20140182_1520601174677159_1356534778018266392_n

நாம் எடுக்க வேண்டிய அளவிற்கு மேப்லித்தோ தாளை கிழித்து வைத்து கொள்ள வேண்டும். அதை நீரில் முக்கி கல்லின் மீது ஒட்ட வேண்டும். ஷூ பாலிஸ் போடுவதற்கு தேவையான பிரஸ் போல உள்ள பெரிய பிரஸ் கொண்டு தாளின் மீது மெல்லத் தட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தாள் கல்வெட்டினுள் ஒட்டிவிடும். இதை கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிடும் அபாயமும் உள்ளது.

 

20046427_1520600454677231_2690470872136597246_n

இந்தியன் இங்க், விளக்கு கரி, சிரட்டை கரி கொண்டு தயாரிக்கப்பட்ட மையை மையொற்றியில் தொட்டுத்தொட்டு கல்வெட்டின் மீது அழுத்த வேண்டும். கல்வெட்டு உள்ள பகுதி வெள்ளையாக மற்ற பகுதி கருப்பாக மாற அந்தச் கல்வெட்டு அழகாகத் தெரியும். காய்ந்ததும் அதை எடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும். மேலும், அதன் பின்னால் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, என்று எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளை விபரமாக எழுதி வைத்துக் கொள்வது நல்லது. கல்வெட்டு படியெடுத்தலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வந்த ஆய்வு மாணவர்கள் இரண்டு பேரும் அய்யாவின் வழிகாட்டுதலில் பசுமைநடை பயணிகளுக்கு செய்து காட்டினர்.

CIMG3892

மாடக்குளம் கல்வெட்டு சித்திரமேழி என்ற விவசாயக்குழுவினுடையது. இதன் மேலே ஒரு குடை, அதற்கு மேலே இரண்டு சாமரங்கள், அதன்கீழே இரண்டு புறமும் விளக்குகள், நடுவில் கலப்பை, விளக்கு அருகில் இரும்பு கருவிகள் அதன் கீழே ‘ஸ்வஸ்திஶ்ரீ இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்’ என்பதை சொல்லும் வட்டெழுத்துக் கல்வெட்டு. அதனடியில் யானை மீது வீரனொருவன் செல்வது போன்ற சித்திரக்குறியீடு உள்ளது. யானை என்பது அத்திகோசம் என்ற யானைப்படையைக் குறிக்கும் குறியீடாக கருதலாம். கி.பி.5ம் நூற்றாண்டிலேயே பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய இன்னொரு விசயம் இந்த ஊரிலுள்ள ஈடாடி அய்யனார் கோயிலில் யானை மீது அமர்ந்த கருப்புசாமி சிலை உள்ளது. இந்தக் கல்வெட்டை கண்மாயில் கண்டுபிடித்து படியெடுப்பதற்கு முன்பே இந்தச் சிலை உள்ளது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஸ்வஸ்திஶ்ரீ என்பது மங்களமான வார்த்தை. இப்போது போட்டுத் தொடங்குவது போல அப்போது ஸ்வஸ்திஶ்ரீ பயன்பட்டிருக்கிறது.

20108392_1520602504677026_1187620972165438612_n

கருப்பு வெள்ளைப் படங்களில் உறைந்த காலம் போல படியெடுத்த தாளில் கருப்பு வெள்ளையில் ஒளிர்ந்த எழுத்துச் சித்திரங்களில் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான காலம் உறைந்திருந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு அருகே நின்று பார்த்தது மனநிறைவைத் தந்தது. பள்ளி, கல்லூரிகளில் வரலாறு வகுப்பறைகளில் முடங்கி முடைநாற்றமெடுக்க பசுமைநடைப் பயணங்களோ பல்துறை சார்ந்தவர்களை வரலாற்று மாணவராக, சூழலியல் ஆர்வலராக, நிழற்படக்கலைஞராக என பன்முகத்தன்மைகளை வளர்க்கும் அமைப்பாக உள்ளது.

20031782_1520602901343653_3341131522843178166_n.jpg

மாடக்குளம் குறித்த முந்தைய பதிவுகள்

மாடக்குளக்கீழ் மதுரை

ஆலவாயின் எழில் கபாலி மலையிலிருந்து

17190812_10210678483789723_1383421333775565590_n

இளம்பிராயத்தில் சிலப்பதிகாரம் கதை கேட்டதிலிருந்தே எனக்கு கண்ணகியைப் பிடிக்காது. ஏனெனில் கண்ணகி மதுரையை எரித்தாள் என்ற கதையால். பின்னாளில் ஜெயமோகன் எழுதிய கொற்றவை வாசித்த போது அக்கால மதுரைச் சூழலும், கண்ணகி மதுரையை எரித்த காரணமும் அறிந்த பின் சாந்தமானேன். மதுரையில் சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இடங்கள் பல உள. அதில் செல்லத்தம்மன் கோயிலும், கோவலன் பொட்டலும் முக்கியமான இடங்கள். கண்ணகியின் சிற்பம் உள்ள செல்லத்தம்மன் கோயிலுக்கு பசுமைநடையாக முன்பொரு முறை சென்றிருக்கிறோம். வெகுநாட்களாக பார்க்க வேண்டுமென்றிருந்த கோவலன் பொட்டலுக்கு 5.3.2017 அன்று சென்றோம்.

17757485_10210880174711870_5649541695805347157_n

எல்லோரும் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாண்டியன் அங்காடித்தெரு முனையில் கூடினோம். (சிலப்பதிகாரத்தில் அக்காலத்தில் மதுரையில் இருந்த அல்லங்காடி, நாளங்காடி பற்றி விரிவாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதைக்குறித்து தனிப்பதிவே எழுதலாம்) அங்கிருந்து அவரவர் வாகனங்களில் பழங்காநத்தம் நோக்கி சென்றோம். பழங்காநத்தத்திலிருந்து டி.வி.எஸ் நகர் செல்லும் சுரங்கபாலத்திற்கு அடியில் சென்று வலது புறம் திரும்பியதும் அதுதான் கோவலன் பொட்டல் என வண்டியை நிறுத்தியதும் சொன்னார்கள்.

பொட்டல் என்ற சொல் என் நினைவில் பெரிய திடலாக மனதில் பதிந்திருந்தது. கோவலன் பொட்டல் என்ற இடத்தின் பெயரையும் பெரிய திடலாகத்தான் நினைத்திருந்தேன். அந்தக் காலத்தில் கோவலனை வெட்டிய இடம் இன்று சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், அது மரங்கள் அடர்ந்த கல்லறைத் தோட்டமாகயிருக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். மரங்களுக்கடியில் இறந்தவர்களை புதைத்திருந்தனர். சுடுகாட்டின் நடுவே ஒரு சிறிய கட்டிடத்தின் உள்ளே மூன்று சிலைகள் உள்ளது. அதை கோவலன், கண்ணகி, மாதவி எனக் கூறுகின்றனர். சிலைகள் மிகச் சிறியதாக உள்ளதால் பகுத்துணர முடியவில்லை.

17191352_10210678511670420_5914690612762751590_n

எல்லோரும் அந்த இடத்தில் கூடினோம். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தொடக்க உரை ஆற்றினார். பழங்காநத்தத்திற்கும், டி.வி.எஸ் நகருக்கும் இடையிலான பாலம் எதற்காக கட்டினார்கள் என்றே தெரியவில்லை. பலகோடி செலவளித்துக் கட்டிய பாலம் மக்கள் நடைபயிற்சி செய்வதற்குத்தான் இப்போது காலை வேளைகளில் பயன்படுகிறது என்றார். மேலும், டி.வி.எஸ். பள்ளியில் படிக்கும் போது இப்பகுதி வழியாக நடந்து செல்லும் போது சுடுகாடு இருந்ததால் வேகமாக கடந்துவிடுவோம். அப்போது இப்பகுதியில் ஒரு ஊருணி ஒன்று இருந்தது என தன் பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

17201191_10210678486269785_5460121395905849501_n.jpg

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அந்த இடத்தின் வரலாறு, தனக்கும் அந்த இடத்துக்குமான தொடர்பு குறித்து பேசினார்.

“1981-ல் உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்த போது, இந்த கோவலன் பொட்டல் பகுதியை அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மூன்று அகழாய்வுக் குழிகள் மட்டும் அப்போது இடப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள், தாழிகள் போன்றவற்றை காலக்கணிப்பு செய்த போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்விடப் பகுதியாகவும்; இறந்தவர்களை புதைக்கிற இடுகாடாகவும் இருந்திருப்பதை உறுதிசெய்தோம். இதேபோல தற்சமயம் கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் வயது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கரிம பகுப்பாய்வு மூலம் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பழங்காநத்தம் என்கிற பெயர் கூட பழங்கால நத்தம் எனும் சொல்லின் திரிபுதான். நத்தம் என்பதற்கு குடியிருப்பு என்பது பொருள். பழங்கால அல்லது பழைய குடியிருப்பு பகுதி என காலம் காலமாக வழங்கிவருகிறோம். எனவே இங்கு மக்கள் பல காலமாக இங்கு வசித்துவருகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. கோவலன் பொட்டல் என்பதற்கான பெயர் காரணம் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக இருக்குமே தவிர; இங்குதான் கோவலன் கொல்லப்பட்டான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இங்கு அகழாய்வு செய்த போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்மகனது முழுமையான எலும்புகள் கிடைத்தன. அந்த ஆணின் இடது கை முழங்கையில் இருந்து இல்லாமல் இருந்தது. அவன் ஊனமுற்ற மனிதனா அல்லது கை வெட்டுப்பட்ட மனிதனா என்பது தெரியவில்லை. இது போக மக்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய புதிய கற்கால கைக்கோடரி ஒன்றின் சிதைந்த பகுதியும்; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக் காசு ஒன்றும்; சில செப்புக்காசுகளும் கிடைத்தன. வரலாற்றில் நெடுங்காலமாக மக்களின் வாழ்விடப்பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளதை இங்கு கிடைத்த தொல்பொருட்கள் உறுதிசெய்கின்றன.” என்றார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா. மேலும், தனக்கு இந்த இடத்தோடு 55 ஆண்டுகால உறவு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கப்பாவுடன் ஒரு திருமணத்திற்கு ஜெய்ஹிந்த்புரம் வந்தேன். அப்போது இப்பகுதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மீனாட்சி நூற்பாலைக்கு முன்பாக ரயில்வே கேட் இருந்தது, அப்போது பாலம் கட்டவில்லை. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு காலைக்கடன்களை கழிக்க இப்பகுதிக்கு போகச் சொல்லி அப்போது அனுப்பினார்கள். அப்போதும் இதன் பெயர் கோவலன் பொட்டல்தான்” என்றார்.

17190910_10210678482789698_6364544683537357998_n

பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் கோவலன் பொட்டல் குறித்து, சிலப்பதிகாரம் குறித்து, அகழாய்வு குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.

“வரலாறு என்பது அங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது. அதுவும் மதுரை போன்ற மிகப் பழைய நகரங்களில் எங்கு நோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாகரீக காலத்தில் நாம் நமது ஓட்டத்தை சற்று நிறுத்தி ஒரு புள்ளியில் நின்று பார்த்தால் அந்த வரலாற்றை உணர முடியும்.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வே மூன்று அடுக்காக தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வு குழிகளின் அடிப்பகுதியில் இரும்புக்கால மண் அடுக்கு; அதற்கு மேலே உள்ள அடுக்கு சங்க காலத்தை சேர்ந்த அடுக்கு; அதற்கும் மேலே பாண்டியர் கால செப்புகாசுகள் கிடைத்திருப்பதால் அது இடைக்கால அடுக்கு என அறியப்படுகிறது. இங்கு தாழிகள் கிடைக்கபட்டுள்ளன என்பதை எப்படி பார்க்கிறோம் என்றால், தென் தமிழகத்தில்தான் அதிகமாக தாழிகள் காணக் கிடைக்கின்றன. எனவே இந்த பகுதிகளில்தான் தாழிகளில் புதைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது. வட தமிழ்நாட்டிலோ மேற்கிலோ கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் கற்பதுக்கைகளை தான் அதிக வயதுள்ளதாக கூறிவந்தனர். ஆனால் சமீப கால ஆய்வுகளுக்கு பிறகு தாழிகளில் புதைக்கப்படுகிற பழக்கம்தான் தொன்மையானது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கற்பதுக்கைகளை நான்கு காலகட்டமாக பார்க்கலாம். பள்ளம் தோண்டி கற்களை அடுக்கி அதற்குள் புதைத்து கற்களால் மூடுவது பழைய பழக்கம். அதன் பிறகு மேல் பரப்பில் கற்களை அடுக்கி புதைத்து அதன்மேல் கற்களை கொண்டு மூடுவது கற்திட்டை முறை. நெடுங்கற்கள் என்று பெரிய அளவிளான கற்களை நடுவது மூன்றாம் கட்டமாகவும் அதில் இருந்து சிறிய கற்களை நடுகற்களாக நடுவதுமாக காலத்தில் மாற்றம் அடைந்து வந்துள்ளன. இவ்வாறு கிமு.1300 ஆண்டில் இருந்து சங்க காலத்தின் இறுதி காலமான கிமு.5-ஆம் நூற்றாண்டு வரை இந்த பெருங்கற்காலச் சின்னங்கள் மாறிவந்துள்ளன.

கோவலன் என்கிற மனிதன் இருந்தானா, சிலப்பதிகாரம் நடந்த சம்பவமா என்று விவாதங்கள் எழுகின்றன. நடந்த ஒரு கதை மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதும் முன்னமே மக்கள் மத்தியில் இந்த கதை புழங்கி வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலேயே ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்கிற பெண்ணை பார்க்கிறோம். பேகன் என்கிற மன்னனுடைய மனைவி கண்ணகியினுடைய கதையை பார்க்கிறோம்.. அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த கதையை பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தின் பதிகத்தை பார்த்தாலே, சேரன் செங்குட்டுவனோடு இளங்கோ காட்டிற்கு செல்கையில் மலைவாழ் மக்கள் அந்த கதையை சொல்வதாகதான் வருகிறது. எனவே ஒரு நிகழ்ந்த சம்பவம், மரபுக் கதையாக மக்களிடம் புழங்கிவந்து படிப்படியாக வளர்ந்து தொன்மமாக மாறி பிறகு சிலப்பதிகார காப்பியமாகியிருப்பதாக தான் அறிய முடிகிறது.

தமிழகம், கேரளா மட்டுமல்லாது, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிங்களர்கள் வாழும் பகுதியிலும் கூட இந்த கதை புழங்கி வருகிறது. இலங்கையில் கண்ணகிக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன. பல கூத்துகள் பாடல்கள் இந்த கதையில் நிகழ்த்தப்படுகின்றன. பத்தினிதெய்வோ என்று இலங்கையில் மக்கள் கண்ணகியை தெய்வமாக வழிபடுகின்றனர்.

17201309_10210678495070005_4911996144100358032_n.jpg

சுந்தர்காளியின் உரைக்கு பிறகு ஓவியர் பாபு அந்த இடம் குறித்து பேசினார். அகழாய்வுகள் காலக்கணிப்புகளைத் தாண்டி தான் கதைகளை மிகவும் விரும்புவதாகச் சொன்னார். ஏனென்றால், இந்த கார்பன் டேட்டிங் போன்ற விசயங்கள் இதன் காலத்தை சமீபத்தில் காட்டுகிறது. எனக்கெல்லாம் இந்த இடம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற நம்பிக்கைதான் பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் இப்பகுதியில் ஒரு குழாயில் வென்னீர் ஊற்று வந்ததாகச் சொன்னார்.

பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் முதன்முதலில் தன்னுடைய பிரச்சனைக்காக பொதுச்சொத்தை சேதப்படுத்தியது கண்ணகிதான் எனக்கூற அதை சாந்தலிங்கம் அய்யா மறுத்து கண்ணகி நல்லவர்களை ஒன்றும் அப்போது எரிக்கச் சொல்லவில்லை என சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டினார்.

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவிஎனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகை அழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல்நகர்.

17202798_10210678496710046_4672592595240284209_n

சிலப்பதிகாரம் நூலில் கோவலன் கொலைசெய்யப்பட்டது குறித்து தேடியபோது அதில் இந்த இடத்தில்தான் வெட்டப்பட்டான் என்ற குறிப்பு எதுவும் இல்லை. மக்களின் நம்பிக்கைதான் இதை கோவலன் பொட்டல் என வெகுநாட்களாய் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுந்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்

  • சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை 211 – 217

17191390_10210678500670145_2235684531358895000_n.jpg

பன்னீர் செல்வம் அய்யா எழுதிய ‘தேயிலைப் பூக்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இலங்கை மலையகத் தமிழர்களின் வலியைச் சொல்லும் இந்நூல் இந்த இடத்தில் வெளியிடப்படுவது பொருத்தமானது என நூலாசிரியர் கூறினார். அற்புதமான நிகழ்வு, மறக்கமுடியாத நாள்.

படங்கள் உதவி – பிரசாத்

Front Cover Sottangalநாலாபக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள் நுழைந்தால் நாமே அறை முழுவதும் வியாபித்திருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதுபோலத்தான் சொட்டாங்கல் நாவலை வாசிக்கையில் தோன்றியது. கதையில் வரும் எல்லா இடங்களிலும் நானும் நிறைந்திருப்பது போன்ற உணர்வைத் தந்தது. கதையில் வரும் சில பக்களினூடாகத்தான் தினந்தோறும் பயணிப்பதால் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் நானே நின்று வேடிக்கை பார்த்தபடி செல்வது போலிருந்தது. இந்நாவல் என்னை ஈர்த்த விதத்தை கொஞ்சம் பத்திகளில் சொல்ல முயல்கிறேன்.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரம் நாலாபக்கமும் வளர்ந்ததைப் போல வைகையின் வடகரையில் கோரிப்பாளையம் தர்ஹாவைச் சுற்றி வளர்ந்த ஊர்களின் கதையைச் சொல்கிறது. மதங்கடந்து மனிதநேயத்தை வளர்த்த இறைநேசரின் தர்ஹாவில் தொடங்கும் கதை அதைச் சுற்றிய மக்களின் கதையாகி அவுலியாவின் சந்தனக்கூடு விழாவோடு முடிகிறது. மதுரை கோரிப்பாளையம் தர்ஹா பாண்டியர் காலந்தொட்டே புகழ்பெற்றது. அரண்மனை மராமரத்துக்கு கொண்டு சென்ற கல் கோரிப்பாளையத்தைவிட்டு நகர மறுக்கிறது. அவுலியாவின் விதானக்கல்லுக்கு அதை அவரே தேர்வு செய்த கதையெல்லாம் நாவலில் வருகிறது.

18512_805820796171521_973933649478453124_n

Kuthiraiஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சித்திரங்களில் குதிரையை பல விதமாய் வரைந்திருக்கிறார். வேளார்தெருவில் குதிரைகள் செய்வதை இளம்பிராயத்தில் பார்த்த நினைவுகளை ஒரு நேர்காணலில் ஓவியர்  கூறியிருக்கிறார். அந்த வேளார் தெரு எப்படி உருவானது என்பதையெல்லாம் சொட்டாங்கல் கூறிச் செல்கிறது. அய்யங்கோட்டை கிராமத்தில் வாழும் ஆகாசம்பிள்ளையின் கனவில் வந்த கருப்புசாமி சாயபுமார் எல்லைக்கு போகச் சொல்கிறார். ஆகாசம்பிள்ளை வந்து விசயம் சொன்னதும் அவர் எங்க சீயான்ல என சாயபுமார்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல கோயில்காசை ஆட்டைய போட்ட சந்தனத்தேவரும் இப்பகுதி வந்து சேர்ந்து ஓர் ஆட்டை அடித்துப் போட்டு அழிந்து போகிறார். ஒவ்வொரு சமூகமும் கோரிப்பாளையம் தர்ஹாவை சுற்றி வந்து சேர்கிறது. கோயிலுக்கு சற்று தொலைவில் வேதக்காரப் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே கதீட்ரல் தேவாலயம் உருவாகிறது.

CIMG5079

சையத் சிராஜ்தீன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர். அவர் வைத்திருக்கும் அரசமரஸ்டோர் மஞ்சப்பையில் எவ்வளவு நினைக்குறாரோ அவ்வளவு பணம் நிரப்புவதில் வல்லவர். ஆனால், அவரது இரு மகன்களும் அதை அனுபவிக்க முடியாமல் செய்து விடுகிறது காலம். மூத்த மகன் ரப்யூத்தின் இளமையில் வீட்டைவிட்டு போய் டெல்லியில் பெரிய அதிகாரியாகிவிடுகிறார். இன்னொரு மகன் காஜா படிக்கையில் சல்லித்தனம் செய்து ‘காட்டுப்பய’ என அழைக்கும் தொனியில் காட்டுவா’வாகி விடுகிறான். சிராஜ்தீனின் வீடிருந்த இடத்தை அமைச்சரின் அடியாள் கைப்பற்றி விடுகிறான். தாத்தா சேர்த்ததை பேரன் அழிப்பான் என்பார்கள். இங்கே மகன்கள் சரியில்லாததால் சேர்த்தவரோடே போய்விடுகிறது.

ஒரு திரைப்படம் வெளியாகும் போதே அந்த நடிகருக்கு ரசிகர் மன்றம் தொடங்கும் மதுரையில், கமலும் ரஜினியும் உச்சத்திலிருந்த 80களின் காட்சியை அழகாய் படம்பிடிக்கிறார். அப்போதெல்லாம் படம் வெளியாகும் போது திரைப்பட போஸ்டர்களை வரைவார்கள். முதல்நாள் முதல்காட்சி பார்ப்பது அப்போதெல்லாம் பெரிய சாகசம். இப்போது போல டீசர் டிரைலரெல்லாம் இல்லாத காலம். கமல் ரசிகரான காஜா தன் நண்பனோடு தலைவரின் போஸ்டர் பார்க்கப் போக அங்கு வரும் ரஜினி ரசிகர்களுடன் கைகலப்பாகிறது. கடைசியில் கமல் மன்றம் தீப்பிடிக்க, ரஜினி ரசிகர்களை சிறைபிடிக்க தலைவர் படத்தை முதல்காட்சி பார்க்கமுடியாததால் அவர்களுக்கு துக்க தீபாவளி-ரம்ஜானாகிறது அந்நாள்.

A_still_from_rescue_operations_in_Maduraiமதுரையில் 1994ல் வந்த பெருவெள்ளத்தில் வைகைக் கரையோரம் இருந்த குடிசைகள் மற்றும் செல்லூர் பகுதி பலத்த சேதமடைந்தது. அப்போது கண்மாய்கள் எல்லாம் நிரம்பி வைகையை நோக்கி வந்தன. வயிற்றுமலை பக்கமிருந்து வந்த வெள்ள நீர் கூடல்நகர் வழியாக செல்லூர் கண்மாயை அடைந்து உடைந்து ஊரே நீர் சூழ்ந்து விட்டது. அதில் மாட்டியதை எல்லாம் எங்கள் உறவினர்கள் சொல்ல கதையாய் கேட்டிருக்கிறேன். வெள்ளம் போன்ற பேரழிவுக்காலங்களில் மனிதர்களுக்குள் மனிதம் துளிர்ப்பதை நாவலில் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

Sottankal Back Coverமதுரை போன்ற தென்மாவட்டங்களைச் சூழ்ந்த பெருவியாதி சாதி. இவிங்ஙளுக்கு அவிங்களப் பிடிக்காது. அவிங்களுக்கு இவிங்ஙளப் பிடிக்காது. ஆனாலும், இது ஒட்டு மொத்த மனநிலை இல்லை என்பதை நாவலில் ஓரிடத்தில் பதிவு செய்கிறார். அவங்ங ரொம்ப பாசக்காரங்ங என இன்னொரு சாதிக்காரர் சொல்வது முக்கியமான இடம். இதே எண்ணத்தோடு உள்ள நாவலின் முக்கிய கதாபாத்திரமான காஜாவை ஒரு சிலர் மாற்றி சல்லித்தனம் செய்ய வைக்கிறார்கள். கடைசியில் செய்யாத கொலைக்கு போலீஸ் தேட மறைந்து இருந்து வாழ்க்கை வீணாகிறது.

காட்டுவா(காஜா) தேன்மொழி காதல் அத்யாயம் அத்தனை அழகு. அழகை ஆராதிக்கத் தெரியாத கணவனிடம் காலங்கழிக்கும் தேன்மொழி, பிள்ளைகள் வளர்ந்த சூழலிலும் காட்டுவாவின் காதலில் வீழ்கிறாள். அழகை கொண்டாடும் காட்டுவாவின் பின்னால் வர அவள் தயாராய் இருக்கும் சூழலில் காட்டுவா மறைந்துவாழும் சூழல் வருகிறது. நாவலின் கடைசி அத்தியாயங்களில் தேன்மொழியின் துர்மரணத்தை  சில வரிகளில் சொல்லிச் சென்றாலும் தாங்க முடியாத சோகத்தைத் தந்தது.

அரசியலின் சமகாலக் காட்சிகள் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது. ஒரே சமூகமாய் இருந்தாலும் யார் அமைச்சருக்கு அருகில் என்ற போட்டியின் இறுதியில் ஒருவரையொருவர் போட்டுக்கொள்கிறார்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட ஆகாமல் சாதி – பணம் போன்ற விசயங்களைக் கொண்டு தலைமையை நெருங்கும் சமகால சூழலை அருமையாய் சொல்லிச் செல்கிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் சாதியினரின் வளர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது. அவர்கள் நடத்தும் மொய்விருந்தில் லட்சக்கணக்கில் மொய் வருகிறது. அதைக் கொண்டு அவர்கள் மேம்படுகிறார்கள். இந்தப் பகுதி அண்ணாநகரில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர்களை நினைவுறுத்தியது. அவர்கள் வட்டிக்கு விடுவார்கள். ஆனால், பழகியவர்களோடு அத்தனை அன்பாய் இருப்பார்கள். இந்தக் கதையில் வரும் தண்டட்டி பாட்டி போல அந்த வீட்டிலிருந்த பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்டட்டி பாட்டி(வேலுத்தேவர் மனைவி) அச்சமூகப் பெண்களின் மன உறுதியை, அவர்களின் துணிச்சலை பிரதிபலிக்கிறது. தண்டட்டி பாட்டி இறக்கும்போது வரும் காட்சிகள் ‘மக்க கலங்குதப்பா’ போன்ற பாடல் களத்திற்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

சமீபத்திய கூலிப்படைகள் போல அக்கால ரவுடிகள் இல்லை. கலக்குமுட்டி போன்ற சரக்குகளை குடித்து தெருவில் சளம்பினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டால் அமைதியாகிறார்கள். அவர்களிடையே ஒரு அறம் இருந்ததை கதையினூடாக காண முடிகிறது. தர்ஹா பகுதியில் குடியேறிய பிற சாதியினர் குலதெய்வக்கோயில்களை கட்ட முயல இப்ப பெரிய கோயில் எதற்கு தர்ஹா இருக்குள்ள என ரவுடியென ஊரால் அழைக்கப்படுபவர் சொல்வது அதில் குறிப்பிடத்தகுந்த காட்சி.

சில நாவல்கள் நம்மை புதிய பிரதேசங்களுக்குள் அழைத்துச் சென்று நம்மை கிறங்கடிக்கும். அதுவொரு வகை. ஆனால், சில நாவல்கள் நாம் வாழும் பகுதியின் மீதே புத்தொளி பாய்ச்சும். அப்படிப்பட்ட நாவல்தான் சொட்டாங்கல். நான் தினசரி பயணிக்கும், பார்க்கும் இடங்களின் பின்னால் ஒளிந்து நிற்கும் கதைகளை எடுத்துச் சொல்கிறது. நாவலை வாசித்த பிறகு நரிமேடு சோனையா கோயில் தெருமுனையில் நிற்கும் கட்டிடத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது நாவலின் பக்கத்தினூடாக நானும் நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. முப்பரிமாணக்காட்சி போல என்னுள் பதிந்த நாவல்.

சோனையா கோயில் தெருவின் ஒருமுனையில் நாவலாசிரியரை சந்தித்து அவ்வப்போது உரையாடுவேன். இந்த நாவல் குறித்து ‘இருண்ட பக்கங்களை புரட்டும் வெளிச்சப்புள்ளி’ என்ற தலைப்பில் அற்புதமான பதிவை இரா.முருகவேள் எழுதியிருக்கிறார். இந்நாவல் எழுதத்தூண்டிய நினைவுகளை ‘புழுதிபோர்த்திய வெண்மை’யென அர்ஷியா அவர்கள் எழுதியிருக்கிறார். இப்பகுதியை அவர் வாசித்துக் கேட்கும் பாக்கியமும் எனக்கு நாவல் வெளிவருவதற்கு முன்பே கிட்டியது. அவரின் அன்பிற்கு நன்றி. இந்நாவலை சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கி வந்த அண்ணனுக்கு நன்றி.

நாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்கத்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன. 

– ந.முருகேசபாண்டியன்

பலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.

abbasbhai thoppu 2

உசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

திரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எடுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.

அப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88

முன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதைத்தான் அவரும் சொன்னார்.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be

மதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.

இஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்தார்கள்.

abbasbhai thoppu

சாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின்  சாயல் தெரிகிறது.

ந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.