Archive for the ‘பகிர்வுகள்’ Category

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தேனியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வீரபாண்டி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் அன்று தொடங்கி அடுத்த செவ்வாய் வரை எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பூப்பல்லக்கு, தேரோட்டம், ஊர்பொங்கல் என விழா நிகழ்வுகள்.

பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் கண்நோய் தீர்த்த கௌமாரி பல லட்சக்கணக்கான மக்களின் குறைகளையும் தீர்த்து வருவதை ஆண்டுதோறும் கூடும் நேர்த்திக்கடன்களின் வழியாக அறியலாம். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அக்கினிச்சட்டி எடுப்பது, ஆயிரம் கண் பானை எடுப்பது, முல்லையாற்று நீரை கொண்டுவருவது என பலவிதமான நேர்த்திக்கடன்களை கௌமாரிக்கு செலுத்துகின்றனர்.

தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டி குடும்பம்குடும்பமாக கோவிலுக்கு வந்து கிடாவெட்டி கொண்டாடிய கதைகளை இங்குவருகின்ற மூத்தவர்களிடம் கேட்கலாம். காலமாற்றத்தில் வாகனங்கள் மாறினாலும் கௌமாரியை நோக்கிவரும் அடியவர்களின் கூட்டம் குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டுதான் வருகிறது.

கோவிலுக்கு அருகில் ஒருபுறம் முல்லையாறும், மறுபுறம் உள்ள பெருந்திடலும் இத்திருவிழாவை பெருந்திருவிழாவாக மாற்ற உதவுகின்றன. நூற்றுக்கணக்கான கடைகள், குடைராட்டினம் தொடங்கி ஏராளமான பொழுதுபோக்கு விசயங்கள் மக்களை மகிழ்வூட்ட காத்திருக்கின்றன. அந்நாட்களில் தேனி வீரபாண்டித் திருவிழா மக்கள் கூடும் பெரும் சந்தையாக விளங்கியிருந்ததை சுற்றிப் பார்க்கும்போது அறிய முடிகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா சமயத்தில் தேனி வீரபாண்டித் திருவிழா குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும்போது போகவேண்டும் என பலமுறை திட்டமிட்டுருக்கிறேன். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பாக இருக்கும் என உடன்பணியாற்றும் அண்ணன் ஒருவர் சொன்னபோது வெள்ளிக்கிழமை செல்ல திட்டமிட்டோம். 12.05.23 வெள்ளியன்று மதுரையிலிருந்து மாலை தேனி நோக்கிப் புறப்பட்டோம். தேனி பேருந்து நிலையத்தில் இறங்கி ஆளுக்கொரு தோசை சாப்பிட்டு வீரபாண்டி செல்லும் சிறப்பு பேருந்தில் சென்றோம்.

வீரபாண்டியில் இறங்கி கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். வழிநெடுக கடைகள். கோவிலை நெருங்குவதற்கான சமிக்கையாக கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்குகிறது. முல்லையாற்றிலிருந்து தீச்சட்டிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. இரவில் ஆறு மின்விளக்கொளியிலும், தீச்சுடரிலும் அழகாகத் தெரிந்தது. புதிய தீச்சட்டியை வைத்து வணங்கி, தீ வளர்த்து அருள் இறங்கி கோவிலை நோக்கி தீச்சட்டியை சுமந்து செல்கின்றனர். தீச்சட்டி, அலகு குத்துதல், நீர்குடம், ஆயிரம்கண்பானை என ஒவ்வொரு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முன்னாலும் நையாண்டி மேளக் காரர்கள், டிரம்செட் இசைப்பவர்கள் வருகின்றனர். பலர் மருளேறி ஆடிவர அவர்கள் முன்னால் ’ரண்டக்ரண்டக்’ ஓசைக்கே ஆடிவருகின்றனர்.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரம் முழுவதும் மக்கள் வெள்ளமாய் போவதும் வருவதுமாகயிருக்கிறார்கள். வீரபாண்டி கோவிலைச் சுற்றியுள்ள பகுதி பெருவெளியாகயிருப்பது இங்கு நிறைய கடைகள், குடைராட்டினங்கள் போடுவதற்கு வசதியாகயிருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் போடப்படும் சித்திரைப் பொருட்காட்சியைவிட பத்து மடங்கு பெரிதாயிருப்பதற்கு இதுவே காரணம்.

குழந்தைகள் ஏறிக்குதிக்கும் பலூன்கள், வட்டமாய் சுழன்று செல்லும் டிராகன், குதிரை-கார்-பைக் என சுற்றிவரும் சிறிதும்பெரிதுமான குடைராட்டினங்கள், அல்வாக்கடைகள், ஏத்தங்காய் வற்றல்கள், மிளகாய்பஜ்ஜி டெல்லி அப்பளக்கடைகள், பானிபூரி மாசல்பூரிக்கடைகள் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கடைகள். குடைராட்டினத்தைப் போல அந்த வெளியையே சுற்றிச்சுற்றி வரும் மக்கள். எது எடுத்தாலும் 10 ரூபாய் கடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் என ஏராளமான கடைகள்.

முதல் செவ்வாயன்றும், வெள்ளியன்றும் நல்ல கூட்டம் வருகிறது. நள்ளிரவு முழுக்க ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் கோவிலை நோக்கி வந்தபடியிருக்கிறது. விடியவிடிய மக்கள் கூட்டங்கூட்டமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் நள்ளிரவில் கனமான கல்தோசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடலில் ஒருபுறம் இரவு நாடகம் நடக்கிறது. அதைப்பார்க்க ஏராளமான கூட்டம்.

தீ வளர்த்த சட்டிகளோடு ஆடிவரும் மக்கள் கோவிலுக்கு அருகில் அதை செலுத்திவிட்டு கௌமாரியம்மனை வணங்கிச் செல்கிறார்கள். தேரிலேறி கௌமாரி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளியன்று புறப்படும் கௌமாரியம்மன் தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாகச் சுற்றி திங்களன்று நிலையை அடைகிறது. செவ்வாயன்று ஊர்ப்பொங்கலோடு திருவிழா நிறைவடைகிறது. சு.வேணுகோபால் எழுதிய ஆட்டம் நாவலில் தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவைப் பற்றி எழுதியதை வாசித்திருக்கிறேன். அதை மீண்டும் தேடி வாசிக்க ஆசை.

விடியவிடிய அக்கினிச்சட்டி ஊர்வலம் பார்த்து அதிகாலையில் கிளம்பினோம். பேருந்து நிறுத்தும் இடத்தை நோக்கி நடக்க பெரும்பாலான கடைக்காரர்கள் ஆங்காங்கே அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தேனியிலிருந்து வரும் பேருந்து மக்களைக் கொண்டுவந்துவிட்டு திருவிழாப் பார்த்தவர்களை அழைத்துச் செல்கிறது. தேனி பேருந்து நிலையமருகே சூடாக ஒரு தேனீரை அருந்தி மதுரையை நோக்கிப் புறப்பட்டோம்.

நன்றி – கணேசன், சாலமன்

CIMG9563

நெற்காவல், நீர்க்காவல், ஊர்க்காவல் என்று கிராமங்களில் காவல்காத்து வரும் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவரான, அய்யாத்துரை என்றழைக்கப்பட்ட மா. கிருஷ்ணசாமி 02 ஜூலை 2016 அன்று இயற்கை எய்தினார். அகவை 94 என்று தகவல். பஞ்சாலைத் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நல்ல பாடகர். ஓய்வுக்குப் பின் காலையில் எழுந்து ஊரின் கிழக்கேயும், மேற்கேயும் இருக்கும் ஐயனார் கோயில்களுக்கும், காவல் தெய்வங்களான சோணைச்சாமியும், கருப்புச்சாமியும் இருக்கும் கோயிலுக்கும், மற்ற தெய்வங்கள் இருக்கும் இடங்களுக்கும் சென்று கைகளைத் தாள நயத்துடன் தட்டி தாமறிந்த பாடல்களைப் பாடித் தொழுவதையே பணியாகக் கொண்டிருந்தார். இந்தக் கோயில்களில் செய்யவேண்டிய திருப்பணிகளை நினைவுறுத்திக்கொண்டே இருப்பார். இவரும் இவரது மைத்துனரும் நட்டு வைத்து வளர்த்த  மரங்கள் இன்று வளர்ந்து சோலையாகி நிற்கின்றன.

அவர் பாடக் கேட்டு எழுதி வைத்த சில பாடல்கள் இங்கே.

 • முதற் பாடல் கடவுள் வாழ்த்து. கட்டை கொடுத்த கம்மாளன், உடுக்கை கொடுத்த உத்தமன், சத்தம் கொடுத்த சாம்பசிவன் என எல்லாரையும் பணிந்து, குற்றம் குறை இருந்தால் கும்பிடு போட்டுத் தொடங்குவது
 • இரண்டாவது பாடல் தேனாய் மழை பொழியும் மலையாளத்திலிருந்து வந்த ஐயனாரின் பரிவாரத்தைச் சேர்ந்த சோணையாவின் பெருமையைச் சொல்லி, எதிரிகளைச் சங்கரித்து ஏழைகளைக் காத்த திறம்பாடி, மழை வேண்டுவது (கோயிலில் சோணையாவுக்கு எதிரேயுள்ள மேற்குச் சுவரில் ஒரு திறப்பு இருக்கும் – மலையாள தேசம் பார்க்க). ஐயனார் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது.
 • அடுத்த பதிவில் இடம்பெறும் மூன்றாவது பாடல் அவரது மூதாதைகள் பற்றியது. வீரண மணியமும், முத்திருளாண்டி மணியமும் கிழக்குச் சீமையிலிருந்து சிறுவாலை சமீனிடம் காவல் வேலை பார்க்க வரும் வழியில் அரியூரிலும், கோயில் பாப்பாகுடியிலும் தங்கிவிட நேர்வது. காவல் பணியில் உயிர்விட்டு “பட்டவர்”களாகி விடுவது. (மேற்கே உள்ள அய்யனார் கோயிலில் பட்டவர்களுக்குச் சிலைகள் உண்டு). இப்பாடலில் ஐயனாரின் பரிவாரங்கள் அரண்மனை, மாளிகையெல்லாம் விரும்பாமல் இண்டஞ்செடி, சங்கஞ்செடி மண்டிய மேடைகளில் திறந்த வெளியில் கோயில்கொள்வதும் பாடப்படுகிறது. கோயில் பார்ப்பார்குடி உருவான கதையொன்றும் சொல்லப்படுகிறது (ஆனால் இவ்வூரில் தற்காலத்தில் ஒரு பார்ப்பனக் குடும்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்தப் பாடல்களில் எல்லாம் நிலக்காட்சி நன்கு வருணிக்கப்படுகிறது. பயணங்களில் வரிசையாக வரும் ஊர்கள் சொல்லப்படுகின்றன. திருப்பூவனம் பக்கமிருந்து வைகை ஆற்றங்கரை வழியாக மதுரை புட்டுத்தோப்பு வருபவர்கள் “பழைய” சொக்கநாதரைத்தான் பார்க்கிறார்கள். இருளாயி, ராக்காயி, சங்கன், சமையன், சோணைமுத்து, முத்திருளாண்டி, கருப்பு, நீலமேகம், முத்தையா, வீரணன் போன்ற பெயர்கள் ஊரில் வைக்கப்பட்டு வருவதன் காரணம் தெரிகிறது (போன தலைமுறை வரை).

(1)

அரி ஓம் நன்றாள்க

குரு வாழ்க குருவே துணை

ஆதிகுருவே துணையாய் குருபாதம் தஞ்சம்

அரியைப் பணிந்து அரிபாதம் தஞ்சம் என்று

குருவைப் பணிந்து குருபாதம் தஞ்சம் என்று

மண்டு வணங்கி மாமலையும் தஞ்சம் என்று

ஆனைமுகத்தோனே அடிபணிந்தேன் நான் சரணம்

வேலவனை நான் பணிந்தேன் விநாயகனே நான் சரணம்

காரானை நான்முகனே கணபதியே முன் நடவாய்

நாவில் சரஸ்வதியை நான் பணிந்து பாடுகின்றேன்

 

தாயே சரஸ்வதியே சங்கரியே மாரிமுத்தே

நாவில் குடியிருந்து நல்லகவி சொல்லுமம்மா

குரலில் குடியிருந்து குரலோசை தாருமம்மா

 

அரியும் சிவனும் அனுதினமும் நான்மறவேன்

அரகர என்று சொல்லி அடித்தேன் பறையோசை

சிவசிவ என்று சொல்லி எடுத்தேன் சிலைமுகத்தை

 

கட்டைகொடுத்த கம்மாளனைப் பணிந்து

உடுக்கு கொடுத்த உத்தமனை நான் பணிந்து

சத்தம் கொடுத்த சாம்பசிவனைப் பணிந்து

மாதா பிதா குருவை மனதிலே நான் நினைத்து

என்பாட்டனார் ஏழ்வரையும் மிகப்பணிந்து நான்வணங்கி

ஆறுகுற்றம் நூறு பிழை அடியேன் நான் செய்தாலும்

குற்றம் நூறு செய்தாலும் கும்பிடு இருபத்தொன்று

 

(2)

தேனாய் மழைபொழியும் எங்கள்

மலையாளத்தின் சிறப்பதனைக் கூறுவேன் கேள்

 

மரகதத்தால் மாளிகையும் செம்பொன்னால்தான் இழைத்த மாணிக்க மேடைகளும்

சிறப்புடனேதான் துலங்கும் கோபுரங்கள் சூழ்ந்த திருமூர்த்தி ஆலயமும்

சத்திரமும் சாவடியும் அன்னதானம் கொடுக்கும் சார்ந்த பல மேடைகளும்

வித்தகர்கள் யாவருக்கும் பரிசுமிகக் கொடுக்கும் வீரசபா மண்டபமும்

கொடிகள் பலதுலங்க கலிங்கர் தெலுங்கர்களும் கோவலர்கள் வாழ் தெருவும்

நெடிய உயரமதாய் தங்கச் சிகரம் உள்ள நிகரற்ற மாளிகையும்

வீரமுரசொலிக்க மலையாளத்தில் சோணைக்கருப்பன் வீற்றிருந்த கதை உரைக்க

 

முண்டு கட்டி முண்டு உடுத்தும் மூணு மலையாளம்

கச்சை கட்டி முண்டுடுத்தும் கரந்த மலையாளம்

மழைபெய்து நெல் விளையும் மேல மலையாளம்

குளம்பெருகி நெல்விளையும் கோல மலையாளம்

மலையாள தேவதையாம் மண்டுக்கு அதிபதியாம்

சார்ந்த குணமே ஐயா, சற்குணமே சோணைமுத்தே

 

ஆண்டி பரதேசி அருந்தவசி பண்டாரம்

சடையும் முடியுமாய் நீ சன்யாசி கோலமுமாய்

இருளா கருப்பா நீ ஈஸ்வரா மாயாண்டி

சங்கா சமையா சப்பாணி சோணைமுத்தா

 

நாடே மயங்குது சாமி நல்ல மழை இல்லாமல்

ஊரே மயங்குது எங்கள் காயாம்பூ மன்னனுடைய

உண்மை விளங்காமல்

பயிரே மயங்குது முத்தையா

பருவமழை இல்லாமல்

நாடு செழிப்பதற்கும் நல்லமழை பெய்வதற்கும்

ஊரும் செழிப்பதற்கும் உங்கள் உண்மை விளங்குதற்கும்

ஐயன் பெருமாளை அன்புடனே நீ அழைத்து

கங்கையைத்தான் அழைத்து நாடு செழிக்க என்று

வருணனைத்தான் அழைத்து வந்துமழை பெய்திடவே

மும்மாரிதான் பொழிந்து முப்போகம்தான் விளைய

CIMG7585

 

உன்மனதை அறிந்து மனம்போல் நடக்காமல்

குணத்தை அறிந்து குணம்போல் நடக்காமல்

குடிகாரத் தெய்வம் என்று கொண்டுநோக்க மாட்டாமல்

பழிகாரத் தெய்வம் என்று பயந்து நடுங்காமல்

துப்பாக்கிக்காரன் என்று சூது அறியாமல்

பணத்தின் திமிராலே ஏழை மக்களைப்

பழிவாங்கி வந்ததினால்

அதிகாரத்தின் திமிராலே அழிந்துவந்த காரணத்தால்

மனது பொறுக்காத முத்தையா நீ

மாறுவேடந்தான் எடுத்து

பச்சைக் குழந்தையைப் போல் பாங்காய் வடிவெடுத்து

சின்னக் குழந்தையைப் போல் தெருவினிலே நீ நடந்து

துலுக்கர் தெருவினிலே சூதாக நீ நுழைந்து

கயவர் தெருவிலே கபடமதாய் நீ நுழைந்து

அரக்கர் தெருவிலே அதிகாரமாய் நீ நுழைந்து

துஷ்டனைக் கருவறுத்து துரிதமாய் வந்து நின்று

துஷ்டர்களைச் சங்கரித்து சூதாகவே நீ நுழைந்து

கயவர்களைச் சங்கரித்து கபடமதாய் நீ நுழைந்து

அரக்கர்களைச் சங்கரித்து அதிகாரமாய் நீ நுழைந்து

ஏழைகளைக் காத்த எங்கள்குல சோணைமுத்தா

CIMG5133

அடுத்த பதிவில் பட்டவன் கதைப் பாடல் காண்போம்.

IMG_1243

மதுரை கீழடியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வைக் காண, தொன்மையான இடங்களை நோக்கிப் பயணிக்கும் பசுமைநடை குழு 3.7.16 அன்று பயணித்தது.

வண்டியூர் தெப்பக்குளத்தருகே நூற்றுக்கணக்கானோர் குழுமினர். அங்கிருந்து எல்லோரும் அவரவர் வாகனங்களில் கீழடி நோக்கி பயணமானோம். வைகைக்கரையை ஒட்டியே பயணம். சிலைமானிற்கு வலது புறம் கொந்தகைக்குச் செல்லும் பாதையில் பிரிந்து சென்றால் கொந்தகைக்கு முன்னரே கீழடி அகழாய்வு முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்லலாம். கிட்டத்தட்ட நூறு ஏக்கர்கிட்ட பரந்து விரிந்த தென்னந்தோப்பு. சிலுசிலுவென காற்றும், அந்தச் சூழலும் ஏகாந்தமாகயிருந்தது.

கைக்குழந்தையிலிருந்து வயதான முதியவர்கள் வரை அங்கிருந்த அகழாய்வுக் குழிகளை அதிசயமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வளவு பேரையும் பார்க்கையில் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ என்ற சுந்தர ராமசாமி நாவலின் தலைப்பு ஞாபகம் வந்தது. தென்னைமரத்தோப்பையும், அதன் நடுவே ஓடிய வாய்க்காலையும் வாட்ஸ்அப் தலைமுறை வாய் பிளந்து பார்த்தது.

எல்லோரும் ஓரிடத்தில் மொத்தமாய் குழுமியிருக்க பசுமைநடையின் அன்றைய வரலாற்று வகுப்பு தொடங்கியது. பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்றார். பேராசிரியர் கண்ணன் தொன்மையான இடங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், கீழடியின் வரலாற்றுப் பெருமைகளையும் எடுத்துரைத்தார். அத்தோடு வரலாறும், தொல்லியலும் மனிதநேயத்தை வளர்க்கும் என்றார். அதற்கு எடுத்துக்காட்டாக யானைமலையிலுள்ள சமணச் சிற்பங்களை பாதுகாக்கும் பொருப்பை வைதீக சமயத்தை சார்ந்தவர்களிடம் கொடுத்திருந்ததை குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து கீழடி அகழாய்வுக் குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் பேசினார். கீழடியில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள், அழகிய மட்கலன்கள் பற்றியெல்லாம் பேசினார். அத்தோடு அங்கு கிடைத்த அரிய பொருட்களைக் காணவும் ஏற்பாடு செய்து தந்தார். அவருக்கு பசுமைநடை சார்பாக நினைவுப் பரிசை தேசாந்திரியான கோணங்கி வழங்கினார்.

IMG_1225

பேராசிரியர் சுந்தர்காளி ‘இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து எழுதும் காலம் வந்துவிட்டது. அதற்கு கீழடி போன்ற அகழாய்வுகள் உதவுகின்றன’ என்றும் குறிப்பிட்டார். விரிவான உரையை தனிப்பதிவாக காணலாம்.

எல்லோரும் அங்கிருந்து வெட்டப்பட்ட அகழாய்வுக் குழிகளை நோக்கி நடந்தனர். முதற்கட்ட அகழாய்வின் போது 40க்கும் மேற்பட்ட குழிகளை வெட்டியிருந்தனர். தற்போது 50க்கும் மேற்பட்ட குழிகளை வெட்டியுள்ளனர். வரலாற்று ஆர்வலர்களான பசுமைநடை பயணிகள் ஒவ்வொரு குழியிலும் காணப்பட்ட அரிய பொருட்களை பார்த்துக் கொண்டே நடந்தனர்.

நண்டு போற அளவு நெல்லுக்கும், நரி போற அளவு கரும்புக்கும், வண்டி போற அளவு வாழைக்கும், தேர் போற அளவு தென்னைக்கும் இடைவெளி விட்டு நடணும் என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக தென்னை மரங்களுக்கு இடையே இடைவெளியிருந்தது. அதனால் அகழாய்வு பணிகள் செய்யும் போது மரங்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

குழிகளில் காணப்பட்ட செங்கற்களின் அகலம், கட்டிட அமைப்பு, மண்பாண்டங்கள், சுடுமண்ணாலான உறைகிணறு, கழிவுநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட குழாய்கள் என ஒவ்வொரு குழியையும் பார்த்துக் கொண்டே செல்ல அதைக்குறித்து பேராசிரியர் கண்ணன் மற்றும் சுந்தர்காளி அவர்களும் எடுத்துரைத்துக் கொண்டே வந்தனர். தமிழர்களை தலைநிமிர வைத்த அகழாய்வை ஒவ்வொருவரும் குனிந்து பார்த்துக்கொண்டே வந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்தை கற்பனையிலும், சங்கப்பாடல்களிலும் படித்திருந்ததைவிட அதை நேரில் காணும் அனுபவம் அலாதியானது. மகாகவியின் சொற்களில் சொன்னால் ‘சொல்லுக்கடங்காவோ பராசக்தி நின் சூரத்தனங்களெல்லாம்’. எல்லோரும் அகழாய்வு முகாமிற்கு அருகிலுள்ள தென்னை மரங்களுக்கடியில் அமர இதுவரை அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களைக் காண்பித்தனர். இரும்பு, செம்பு, யானைத்தந்தம், சுடுமண், சங்கு என பலவகையானப் பொருட்களில் செய்யப்பட்ட அணிகலன்களையும், ஆயுதங்களையும் பார்த்தோம். பசுமைநடைக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த நண்பரின் சார்பாக எல்லோருக்கும் நடராஜன் எழுதிய ஆயிஷா நூல் வழங்கப்பட்டது.

Keezhadi

‘நீ நாடாறு மாதம், காடாறு மாதம் அலைபவன். உன்னைக் கேள்வி கேட்க யாருண்டு?’ என்று வண்ணதாசன் சொன்ன கோணங்கி என் அருகே நின்று கொண்டிருந்தார். அவரோடு ஒரு நிழற்படமும் எடுத்துக் கொண்டேன். மனது சிறகடிக்கத் தொடங்கியது.

உன் மொழியை வேதாளத்தின் புதிர் மொழியாக மாற்றாமல் இனிக் கதை சொல்ல முடியாது. நடந்து முடிந்த மனித நாகரீகங்களின் சாம்பலில் கவுளி ஒன்று எச்சரிக்கிறது. நடந்தவற்றை அப்படியே நகல் எடுக்காதே. கவுளியிடம் கேட்டு அதன் உச்சரிப்பை மொழியாக மாற்று.

கோணங்கி

கவுளியின் பேச்சை கேட்டும் கேட்காமலும் கீழடிக்கு சென்று வந்த பயணக்குறிப்புகளை எழுதிவிட்டேன். இனி, கீழடிக்கு அகழாய்வுக் குழு வந்த கதை, சுந்தர்காளியின் உரை, மதுரைக்காஞ்சியும் கீழடி அகழாய்வும் என அடுத்தடுத்து மூன்று பதிவுகள் எழுத வேண்டும். நன்றி.

படங்கள் உதவி – ரகுநாத், மாரியப்பன்

sramakrishnan

நாவல்களும் ஆறுகளைப் போலத்தான். ஒரு சிறுசொல்லில் துவங்கி இறுதியில் நம்மை வாழ்க்கையெனும் பெரும் கடலில் சேர்த்துவிடும். வேகமெடுக்கும் போது நம்மை இழுத்துச் சென்றுவிடும். கிளையாறுகள் சேர்ந்து பேராறு ஆவது போல, கிளைக்கதைகள் பல சேர்ந்து நாவலாகிறது.

நாவல்கள், அன்றாட வாழ்விலிருந்து மீட்டு நம்மை ஒரு புதிய வெளியில் கொண்டு சேர்ப்பவை. நாம் பார்க்காத பிரதேசங்கள், நமக்கு தெரியாத வட்டார வழக்குகள், நாம் மீண்டும் செல்ல முடியாத கடந்த காலம், நம்மால் வாழ முடியாத பிறரது வாழ்க்கை, நாம் அறியாத மனிதர்களின் கதை எனப் பல விஷயங்களை நாவல் வாசிப்பதன் வாயிலாக நாம் அடையலாம்.

vannanilavan

கண்டது, கடியதையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த நான் வாசிப்புத் தளத்திற்குள் பள்ளி – தொழில்நுட்பக்கல்லூரி படிப்பிற்குப் பின்னரே வந்தேன். அதற்கு முன்னர் ஓரிரு நல்ல நாவல்கள் வாசித்திருக்கலாம். பதினோராம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அக்கதையின் ஈர்ப்பிலேயே அந்த விடுமுறையில் பொன்னியின் செல்வனை ஏழு நாட்களில் வாசித்தேன். அத்தனை பக்கங்களை குறுகிய காலத்தில் வாசித்தது அப்போது பெருமகிழ்வைத் தந்தது.

அதன்பிறகு சாண்டில்யனின் வரலாற்று புனைகதைகளில் சிக்கிக் கொண்டேன். அதில் கன்னிமாடம் பிடித்த நாவல். மற்றபடி நூலகத்தில் அப்போது கிடைத்த எல்லா சாண்டில்யன் நூல்களையும் படித்தேன். கோட்டயம் புஷ்பநாத்தின் கதைகளில் மோகினிகளும், யட்சிகளும் வரும் பக்கங்களை மட்டும் கடந்தேன். வாஸந்தி, பாலகுமாரன் நாவல்கள் வாசித்திருக்கிறேன். பெயர்கள் நினைவிலில்லை. ஞானபீட விருது பெற்ற அகிலனின் சித்திரப்பாவை வாசித்திருக்கிறேன்.

jemo

தமிழ்ச்செல்வ அண்ணன் ஜெயமோகனின் கொற்றவையை வாசிக்கக் கொடுத்த போது அந்த நாவல் முற்றிலும் வித்தியாசமாய் தெரிந்தது. அச்சமயம் மதுரையில் முதலாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. மதுரை புத்தகத்திருவிழா, நூலகங்கள், தமிழ்ச்செல்வம் மற்றும் நண்பர்கள் வாயிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கவும், வாங்கவும் தொடங்கினேன்.

books2

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த நூறு புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் பட்டியல் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியது. அந்த பட்டியலில் உள்ள நாவல்களை கொஞ்சம் தேடிப் பிடித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். மதுரை புத்தகத்திருவிழாவில் சிறந்த நூறு நாவல்கள் மற்றும் புத்தகங்கள் பட்டியலை ஆயிரம் பிரதிகள் எடுத்து ஓராண்டு வழங்கினோம். அதை எஸ்.ரா.விடம் கொடுத்தபோது பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எஸ்.ரா.வின் நாவல் முகாமில் கலந்துகொண்டது ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.

அஞ்ஞாடி நாவல் 400 பக்கங்கள் வாசித்ததோடு நிற்கிறது. அதைப்போலத் தான் சம்பத்தின் இடைவெளியும். சமீபத்தில் பூமணியின் பிறகு வாசித்தபோது அந்நாவலோடு எஸ்.ரா. தேர்ந்தெடுத்த நாவல்கள் பட்டியலில் 25 முடிந்தது. அப்படியே இதுவரை எத்தனை நாவல்கள், குறுநாவல்கள் வாசித்திருப்போம் என்றறியும் ஆசை வந்தது. பட்டியலைத் தொகுக்கும்போது 75 நாவல்கள்கிட்ட வந்தது. நூறு நாவல்களை எட்ட இது ஒரு உத்வேகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பதிவு. மறுமொழியில் உங்களுக்கு பிடித்த நாவல்களை பரிந்துரையுங்கள். உதவியாக இருக்கும்.

arshiya

எஸ்.ரா.தேர்ந்தெடுத்த பட்டியலில் நான் வாசித்தவை

 1. பொன்னியின் செல்வன் – கல்கி
 2. பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்
 3. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
 4. அபிதா – லா.ச.ராமாமிருதம்
 5. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
 6. புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
 7. கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
 8. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
 9. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
 10. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 11. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
 12. கல்மரம் – திலகவதி
 13. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
 14. பிறகு – பூமணி
 15. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
 16. கம்பாநதி – வண்ணநிலவன்
 17. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
 18. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
 19. காடு – ஜெயமோகன்
 20. கொற்றவை – ஜெயமோகன்
 21. உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 22. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
 23. யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 24. நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
 25. ஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்

 novels

பட்டியல் தாண்டி வாசித்த நாவல்கள்

 1. பார்த்தீபன் கனவு – கல்கி
 2. கன்னிமாடம் – சாண்டில்யன்
 3. தென்பாண்டிச்சிங்கம் – மு.கருணாநிதி
 4. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
 5. குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்
 6. ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
 7. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
 8. அலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்
 9. குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
 10. நளபாகம் – ஜானகிராமன்
 11. வெள்ளையானை – ஜெயமோகன்
 12. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
 13. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
 14. நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 15. சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 16. மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
 17. ஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா
 18. பொய்கைகரைப்பட்டி – எஸ்.அர்ஷியா
 19. அப்பாஸ்பாய்தோப்பு – எஸ்.அர்ஷியா
 20. கரும்பலகை – எஸ்.அர்ஷியா
 21. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
 22. எங்கதெ – இமையம்
 23. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
 24. கன்னி – பிரான்சிஸ் கிருபா
 25. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
 26. மிளிர்கல் – இரா.முருகவேள்
 27. ஆட்டம் – சு.வேணுகோபால்
 28. நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
 29. கூந்தப்பனை – சு.வேணுகோபால்
 30. திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
 31. மணற்கேணி – யுவன்சந்திரசேகர்
 32. கானல்நதி – யுவன்சந்திரசேகர்
 33. கொற்கை – ஜோ.டி.குருஸ்
 34. நட்டுமை – ஆர்.எம்.நௌசத்
 35. குன்னிமுத்து – குமாரசெல்வா
 36. கானகன் – லஷ்மிசரவணக்குமார்
 37. பருக்கை – வீரபாண்டியன்
 38. மின்னுலகம் – நீல.பத்மநாபன்
 39. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
 40. கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
 41. சித்திரப்பாவை – அகிலன்
 42. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

su.ve

மொழிபெயர்ப்பு நாவல்கள்

 1. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
 2. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
 3. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) –  சிங்கிஸ் ஜத்மதேவ்
 4. எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
 5. பால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்
 6. பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்
 7. மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர்
 8. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
 9. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
 10. சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா
 11. மோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்

tamilwriters

ஏதேனும் விடுபடல்கள் இருக்கலாம். இவற்றில் அறுபதிற்கும் மேலானவை கடந்த எட்டு ஆண்டுகளில் வாசித்தவை. இன்னும் தமிழில் முக்கியமான ஆளுமைகள் பலரது நாவல்களை வாசிக்கவில்லை எனும் போது சங்கடமாயிருக்கிறது. பெரும்பாலான நாவல்களின் கதை ஒரு கீற்று போலத் தெரிகிறது. ஒரு பக்கத்திலாவது ஒரு பதிவாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. அன்பே சிவம் படத்தின் இறுதி வரிகளைப் போல எழுதினால் இன்னும் வாசிக்க வேண்டிய நூல்கள் ஏராளம், ஏராளம். இதுவரை வாசித்த நூல்களின் பெயரைப் பார்க்கும்போதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை நோக்கி பயணிக்கிறேன்.

CIMG6125

குலமலை, கோலமலை, குளிர்மலை, கொற்றமலை

நிலமலை, நீண்டமலை, திருமாலிருஞ்சோலையதே

– பெரியாழ்வார்

அழகர்கோயிலில் வசந்தவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வளர்பிறையில் தொடங்கி பௌர்ணமி வரை பத்துநாட்கள் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம்  மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகம் வரை வசந்தவிழா கொண்டாடப்படுகிறது.

Slide1

வருடந்தோறும் பொழியும் கோடை மழையில் அழகர்மலை பசுமை போர்த்தியிருக்கிறது. இளவேனிற்காலம் என்பதைவிட விடுமுறைக்காலம் என்பதால் கூட்டம் கோயிலில் அதிகமாயிருக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்கு மதுரை வரை அலைந்து திரிந்து வந்த அழகர்  இளைப்பாறத் தம் தேவியரோடு வசந்தவிழாவிற்கு வசந்த மண்டபம் எழுந்தருளுகிறார்.

Slide2

சித்திரைத் திருவிழாப்போல கூட்டம் இல்லை. அழகர் புறப்படுகிறார் என்ற செய்தியே கோயிலுக்குள் வந்த பிறகே கேட்டு அறிந்து கொள்கிறார்கள் மக்கள். இரண்டாம் திருச்சுற்றில் ஶ்ரீதேவி, பூதேவியோடு சுந்தரராஜப்பெருமாள் அலங்காரமாகிறார். சீர்பாதம் தாங்கிகள் அழகரைத் சுமப்பதற்காக காத்திருக்கிறார்கள். நாயண இசையும், மேளமும் முழங்க கோயில் பணியாளர் சீழ்க்கை அடித்து ஆரம்பிக்க அழகர் உலா கிளம்புகிறார். கோயில் யானை சுந்தரவல்லி முன் நடக்க மங்கல இசையோடு இரண்டாம் திருச்சுற்றில் வலம் வரும் அழகருக்கு ஆங்காங்கே ஆராதனைகள் நடக்கிறது. சுந்தரபாண்டியன் கொறடு தாண்டி தொண்டைமான் கோபுரம் வழியாக வெளியே வரும் அழகர் யதிராஜன் திருவீதி அல்லது ஆடி வீதி என்றழைக்கப்படும் வீதி வழியாக கோயிலை வலம் வருகிறார். நந்தவனங்களினூடாக வரும் அழகரின் ஏகாந்த தரிசனம் நம்மை மகிழ்வூட்டுகிறது.

Slide3

யதிராஜன் முற்றத்திலிருந்து வண்டிவாசல் வழியாக பதினெட்டாம் படிக்கருப்பனிடம் வருகிறார். அழகரை எதிர்பார்த்து காத்திருந்த பதினெட்டாம் படியானும் வழியனுப்ப இரணியன் கோட்டைக்குள் உள்ள வசந்த மண்டபம் நோக்கி செல்கிறார். பதினெட்டாம் படிக்கருப்பு சன்னதிக்கு அருகே மருளேறி ஆடிக்கொண்டிருந்த பக்தர்கள் அழகரை வணங்குகிறார்கள். மந்திகள் மரத்தில் விளையாடியபடி அழகர் வருவதை வேடிக்கைப் பார்க்கிறது. வசந்த மண்டபம் மாங்குளம் கிராமத்து மண்டபத்திற்கு பின்னே கோட்டையையொட்டி அமைந்திருக்கிறது.

கோயிற்பணியாளர்களின் குடியிருப்புகளின் வழியாக அழகர் வருகிறார். அழகான மரத்தடி நிழலில் அடுக்கடுக்கான வீடுகளைக் கடந்து வசந்த மண்டபம் நோக்கி வருகிறார். பழங்களை வாங்கிக் கொடுக்கும் பெண்ணிடம் உரிமையாய் சென்று பழங்களை வாங்கிக் கொள்கிறது கோயில்யானை சுந்தரவல்லி. இராய கோபுரம் பாதி கட்டிய நிலையில் அப்படியே நிற்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் வசந்த மண்டபத்திற்கு முன்னேயும் பாதி கட்டிய நிலையிலுள்ள இராய கோபுரம் நினைவில் நிழலாடுகிறது.

P_20160520_175413

CIMG6126

தண்டியலில் சீர்பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல வசந்தமண்டபத்தின் நடுவினுள்ள மைய மண்டபத்தில் தம் தேவியரோடு எழுந்தருளுகிறார் சுந்தரத்தோளுடையான். விதானத்தில் அழகழகான சித்திரங்கள். அத்தனையும் வண்ணங்களில். நாயக்கர்கால ஓவியங்கள் எனச் சொல்கிறார்கள். பலவிதமான வண்ணங்களில் இராமாயணக்கதையை வரைந்து வைத்திருக்கிறார்கள். இராமாயணக்கதை சொல்லும் அந்த சித்திரங்கள் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்க நிலையிலேயே உள்ளது. பாதி இடங்களில் அவற்றை அழித்து விட்டார்கள். வசந்த மண்டபத்தின் நடுவே ஒரு மண்டபம் அதன் விதானத்தில் சித்திரங்கள். சுற்றி அகழி போல ஒரு பள்ளம். அதற்கடுத்து சுற்றிவருவதற்கு ஏற்ற பாதை. அதன் விதானங்களிலும், அதன் கீழேயும் கொஞ்சம் சித்திரங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள்.

CIMG6127

CIMG6128

CIMG6129

மையமண்டபத்தின் விதானத்தின் மேலே இராமர், சீதையோடு, இலக்குவனும் இருப்பது போன்ற ஓவியம் பெரிதாய் உள்ளது. மையமண்டபத்தின் நடுவினுள்ள மேடையைச் சுற்றி வரும் விதானத்தில் ராமர், பரதன், இலக்குவணன், சத்ருகணன் நால்வரும் பிறந்து, குருகுலத்தில் கல்வி, குதிரையேற்றம் கற்பது போன்ற ஓவியங்கள் உள்ளது. இந்த சித்திரங்களினூடாக நாயக்கர் கால மக்களின் உடைகள், ஆபரணங்கள், கட்டிட அமைப்புகளை அறிந்து கொள்ளலாம்.

P_20160520_1757461940ல் சுந்தரராஜகுருகுலம் என ஒரு பாடசாலை இம்மண்டபத்தில் நடந்திருக்கிறது. அதற்கான கல்வெட்டு வெளியில் காணப்படுகிறது. பள்ளிக்கூடத்தின் சுவடுகளாக மண்டபத்தின் உள்ளே கரும்பலகையாக சுவற்றைப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது அழகர்கோயிலின் சாமான்கள் வைக்கும் அறையோ என எண்ணும் அளவிற்கு உள்ளே கண்டது கடியதை அடைந்து வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி சித்திரங்களை மக்கள் பார்வையிடும் வண்ணம் எப்போதும் திறந்து வைக்கலாம். மீதமிருக்கும் சித்திரங்கள் மேலும் சிதையா வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும்.

மைய மண்டபத்தில் எழுந்தருளிய அழகருக்கு தீபாராதனைகள் நடக்கிறது. ஒற்றை விளக்கு, பஞ்சமுக விளக்கு, திரிவிளக்கு என பலவகையான விளக்குகளில் ஆராதனையும், வெள்ளியில் செய்த சிறிய விசிறி, குடை, சாமரம் கொண்டு ஆராதனையும் நடக்கிறது. வடமொழி ஸ்லோகங்களைச் சொல்வதோடு நாலாயிர திவ்யபிரபந்தத்திலிருந்தும் பாடல்களைப் பாடுகிறார்கள். அழகர்கோயில் குறித்த ஆழ்வார் பாடல்களைப் பாடுவதிலிருந்து நாமும் அதை அறிந்து கொள்ள முடிகிறது.

அழகருக்கு நைவேத்தியம் செய்ய பிரசாதம் கொண்டு வருபவர்களை மேளதாளத்தோடு அழைத்து வருகின்றனர். வாசனையை நுகரா வண்ணம் மூக்கில் துண்டு கட்டி பிரசாதத்தை சுமந்து வருகின்றனர். நெய்வேத்தியம் ஆனதும் திருவிழாப் பார்க்க வந்தவர்களை இருபுறமும் வரிசையாக நிற்க வைத்து வெண்பொங்கல், தயிர்சாதம், சம்பாதோசை, சுண்டல்கடலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கிறார்கள். ஒவ்வொன்றும் குறிப்பிட்டுச் சொல்லும் படி தனிச்சுவையுடன் இருக்கிறது.

Slide4

பிரசாதம் வழங்கிய உடன் வெளியே உள்ள மரத்தடிகளில் கதைத்துக் கொண்டிருந்த சீர்பாதம் தாங்கிகள் வசந்த மண்டபத்தின் உள்ளே வருகிறார்கள். சுந்தரத்தோளுடையானை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு வந்து வண்டியில் சேர்க்கிறார்கள். அழகர் கோயில் நோக்கி புறப்படுகிறார். வரும்போது பதினெட்டாம்படியானிடம் சொல்லிக்கொண்டு வந்தது போல போகும் போது சொல்லிக் கொண்டு செல்கிறார். பதினெட்டாம்படிக்கருப்பு அழகுமலையானுக்கு காவல்காரர். யதிராஜன் முற்றம் கடந்து இரண்டாம் திருச்சுற்றின் வழியாக இருப்பிடம் சேர்கிறார்.

CIMG6133

P_20160516_174103_1மழை போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வசந்த மண்டபத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும் போது வசந்த உற்சவத்திற்கு பெருமாள் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

வசந்த மண்டபம் சித்திரக்கூடம் என்றால் திருக்கல்யாண மண்டபம் சிற்பக்கூடம். ஒவ்வொரு தூணிலும் எம்பெருமான் பல்வேறு ரூபங்களில் தரிசனம் தருகிறார்.

வசந்த விழா கோயில் உற்சவமாக கொண்டாடப்படுவது மக்கள் உற்சவமாக கொண்டாடப்பட வேண்டும். சித்திரக்கூடத்திற்கு வசந்தவிழாக் காண எல்லோரும் வாருங்கள்.

IMG_20151128_130332

9788188661435மதுரை மீதான காதல் ஆதிகாலத்தொடர்பு. சித்திரை வீதிகளின் மீதும், சித்திரங்களின் மீதும் பால்யத்திலிருந்தே விருப்பம் இருந்தாலும் அது காதலாய் உருவெடுக்க ஓவியர் மனோகர் தேவதாஸ் அவர்களது கோட்டோவியங்களே காரணம். அவரைக் குறித்து ஆனந்தவிகடனில் படித்தபோது அவர் மீதான ஈர்ப்பு அதிகமானது. அவரது GREEN WELL YEARS வாங்கி வாசிக்க விரும்பினேன். mymaduraiஆனால், முந்திக்கொண்டது MULTIPLE FACETS OF MY MADURAI. 2வது மதுரை புத்தகத்திருவிழா சமயம் அந்தப் புத்தகத்தில் உள்ள படங்களோடு வரவேற்பு பதாகைகள், விழா அறிவிப்புகள் வர அந்தப் புத்தகத்தை வாங்க விரும்பினேன். (அச்சமயம் அந்தப் புத்தகத்தின் விலை என் ஒருமாதச் செலவுக்கான தொகை) புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதிலுள்ள படங்கள் என்னை ஆட்கொண்டதால் வாங்கினேன். நேரங் கிட்டும்போதெல்லாம் அவருடைய சித்திரங்களைப் பார்ப்பதும், சில படங்களை வரைந்து பார்ப்பதும் வழக்கமானது. அதற்கடுத்து அவரது GREEN WELL YEARS எனது மதுரை நினைவுகள் ஆக தமிழில் வர, காத்திருந்தது ஒரு வகையில் நல்லதாய் போனது.

0000chn_07001_1-500x500_0சில மாதங்களுக்கு முன் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த ஓவியர் அ.பெருமாள் ஐயாவின் நூற்றாண்டு விழாவிற்கு மனோகர் தேவதாஸ் வருவதாக அழைப்பிதழில் பார்த்தேன். நாட்களை குறித்து வைத்துக் கொண்டு மூன்று நாளும் சென்று பார்த்தேன். அங்கு மனோகர் தேவதாஸ் அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க முடிந்ததும், ஓவியங்கள் தொடர்பான அவரது பவர்பாயிண்ட் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வு. அவர் வரைந்த சித்திரங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தில் அவருடைய கையெழுத்துக் கேட்டேன். கண்பார்வை இப்போது மிகவும் பாதிப்படைந்திருந்தால் கையொப்பம் இட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர என்னைச் சூழ்ந்தது.  மூன்றாம் நாள் நிகழ்வின்போது மனோகர் தேவதாஸ் அவர்களிடம் என்னை சித்திரவீதிக்காரன் என அறிமுகப்படுத்தியதோடு நிழற்படம் எடுக்கவும் பசுமைநடை நண்பர் உதயகுமார் உதவினார். என் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான தருணங்களில் இதுவும் ஒன்று.

ஒரே பக்கத்தில் 2016-இன் அனைத்து மாதங்களுக்குமான நாட்காட்டி. தமிழக அரசு விடுமுறை நாட்கள் கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பிடிஎப் கோப்புகளைத் தரவிறக்கி விரும்பியதை அச்செடுத்து ஒட்டிக்கொள்ளவும்.

தொ. பரமசிவன் அய்யாவின் கருத்து ஒன்றுடன்.

2016 Calendar Tho.pa

தொ. ப நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

அசோகமித்திரன் அவர்களின் கருத்து ஒன்றுடன்:

2016 Calendar A.Mi

அ.மி நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

என் போன்ற கமல் ரசிகர்களுக்கென்றே:

2016 Calendar Kamalகமல் நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மனிதனும் என்றோ வாழ்ந்த

ஓர் அரசன் அல்லது அடிமையின் சந்ததி…!

 – கலீல் ஜிப்ரான்

எல்லாருக்கும் சின்ன வயசுக்கு திரும்பிறனும்னு ஆசை. ஆனா, நாம நினைச்சது நடக்காதுன்றதுதான உலகத்துலயே நல்ல விசயம். அப்படியிருக்கும் போது புத்தகங்களால நம்மள பழைய நினைவுக்குள்ள இழுத்துட்டு போக முடியும். அப்படி நான் படிச்ச எஸ்.அர்ஷியாவோட ஏழரைப்பங்காளி வகையறா என்னைய நான் பொறந்த இஸ்மாயில்புரத்துள்ள கூட்டிட்டு போச்சு. சின்ன வயசுல என்னை தூக்கி வளர்த்த முஸ்லீம் மக்களோட கதை. இந்த கதை எனக்குப் புடிக்க ஏராளமான காரணம் இருக்கு. அதுல முக்கியமான ஒண்ணு நான் பொறந்த மதுரை இஸ்மாயில்பொரத்தோட கதை. இன்னொன்னு இதுவரைக்கும் படிச்சதுலயே இந்த கதைய சொல்ற மொற ரொம்ப புடிச்சுப் போச்சு. அர்ஷியா வந்து நம்மட்ட இஸ்மாயில்புரத்து ஏழரைப்பங்காளிக கதைய சொல்றமாரி இருந்துச்சு. அது எப்படின்னா இந்தப் பதிவுமாரி முழுக்க பேச்சுநடைல. ஒரு முழுக்கதையையும் இப்படி பேச்சு நடைல, அலுப்புத்தட்டாம எழுதுறது எம்புட்டு கஷ்டம். ஆனா, அர்ஷியா அத அசால்ட்டா செஞ்சுருக்காரு. இதுல வர்ற மனுசங்க செவப்பா, கக்கரா புக்கரான்னு பேசுறவங்களா இருந்தாலும் அவங்க நமக்கு சொந்தக்காரங்கமாரி ஆயிடுறாங்க கதைய முடிக்கையில.

pangali

வெள்ளைக்காரன் காலத்துலயே தாசில்தாரா இருந்த இஸ்மாயிலுக்கு எல்லாச் சமூகத்து மக்கள்ட்டயும் நல்ல பேரு. அவர் கட்டுனதுதான் இன்னைக்கு நாம பார்க்கும் தாசில்தார் பள்ளிவாசல். இஸ்மாயில் தாசில்தாரு அந்தக்காலத்துலயே பெரிய புதுமையெல்லாம் பண்ணிருக்காரு. அவரோட சொத்த ரெண்டா பகுந்து அதுல ஒரு பாதில ஏழு மகனுக்கும், மறுபாதிய மகளுக்கும் கொடுத்தவரு. அவரு வகையறாதான் இந்தக்கத நாயகன் தாவூத். சித்திரைவீதியில இருந்து நேரா புதுமண்டபம் தாண்டி வந்தா கீழமாசிவீதி, கீழவெளிவீதி வரும், அதத்தாண்டி நேராப் போனா இஸ்மாயில்புரம்தான்.

இந்த கதைல முக்கியமான கதாபாத்திரம்னு பார்த்தா நாலுபேருதான். தாவூத், ஆபில்பீ, உசேன் மற்றும் குத்தூஸ். தாவூத்ன உடனே நம்மாளுகளுக்கு தோன்றமாரி எதுவுமில்லாத சாதாரண மனுசன். கர்ணன போல கேட்டவுகளுக்கு அள்ளிக் கொடுப்பாரு. சூதுவாது தெரியாத மனுசன் மட்டுமல்ல நல்ல கஸிதே(கவித) பாடுற ஆளு. தண்ணி, பொம்பளன்னு எந்த கெட்ட சாவகாசமும் கிடையாட்டியும் பரம்பரைச் சொத்த தொலைச்ச பொழைக்கத் தெரியாத ஏமாளி.

தாவூத்

தாவூத்தோட மனைவி ஆபில்பீ. பாக்தாத்ராணி போல வாழ வேண்டிய ஆளு பாய்மொடஞ்சு பொழைக்க வேண்டிய நிலை வரும்போது தடுமாறாம குடும்பத்த தாங்கிக்கிர்ற வைராக்கியமான மனுஷி. அவங்க கஷ்டப்படுறத படிக்கும்போது அழாம வாசிச்சதில்ல. இந்தக் கதைல கடும் இருட்டுக்கு பெறகு வர்ற விடிவெள்ளி மாதிரி தாவூத்தோட மகன் உசேன். நல்ல பைய. பசியோட பள்ளிக்கூடம் போனாலும் நல்லாப் படிக்கணும்ன்ற ஆர்வம் உள்ள ஆளு. ஒரு வகைல என்னோட சின்ன வயசுக் காலத்த ஞாபகப்படுத்துற நண்பனுங்கூட.

குத்தூஸ் இருக்காறே அவரு சகுனி மாதிரின்னு அர்ஷியாவே கதைல ஓரிடத்துல சொல்றாரு. ஆனாலும், அவரு இந்தக் கதைல முக்கியமான ஆளு. தாவூத்தோட அப்பா செத்துப்போனப் பெறகு அவனப் பாத்துக்க யாருமில்ல. அவங்கம்மா ஜொகரா சொந்தக்காரவுக வீடே கதின்னு சுத்திட்டு இருக்குற ஆளு. அந்த நிலைல தாவூத்துக்கு ஆபில்பீ மாதிரி நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிவச்சு அதுவும் ஊரே வியக்குற மாதிரி பண்ணிவச்சு பாத்த மனுசன் குத்தூஸ். சொத்த நேரங்கிட்டும் போதெல்லாம் ஆட்டையப்போட்டாலும் கடைசில தாவூத் கடங்காரனா மயங்கி கிடக்குறப்ப அத அடச்சு குடும்பத்த தேட பணம் கொடுத்த அனுப்புறதும் குத்தூஸ்தான். எல்லா மனுசனும் கடவுள்பாதி மிருகம்பாதிதானே!

தர்ஹா

நெறயா விசயங்கள படிக்கும் போது குறிச்சு வச்சு அம்புட்டயும் சொல்லிரனும்னு தோணுச்சு. ஆனா, அதுவே நீண்டுரும்னு சிலத மட்டும் சொல்றேன். தாவூத் ஆபில்பீ கல்யாணத்தப்ப அங்க பிரியாணி ஆக்குறதப்பத்தி வாசிக்கிறப்ப உங்களுக்கு எச்சி ஊறும். அதேமாரி யானைல மாப்பிள்ள அழைப்புக்கு ஏற்பாடு பண்ணி ஒரு கேமரா வாங்கி ஒரு போட்டாவும் எடுப்பாரு குத்தூஸ். அந்தக் கல்யாணத்த பாத்து ஊரே வியக்குற மாரி மெறட்டிருப்பாரு. அதே மாதிரி குத்தூஸ் சாகக் கெடக்குறதுல இருந்து செத்த பெறகு நடக்குற சடங்க படிக்கும்போது அம்புட்டு நம்ம கண்ணு முன்னாடி நடக்குற மாரி எழுதிருப்பாரு அர்ஷியா.

தென்னமரம் படம் போட்ட டால்டா டப்பா, சோழவந்தான் வெத்தல, வெடிதேங்கா தயாரிக்கிறது, பிரைஸ் அட்டை, காசு மிட்டாய், மீன் பிடிச்சது பத்தியெல்லாம் படிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சந்தோஷமா இருந்தமாரி சில இடங்கள்ல அழவும் விட்டுருச்சு இந்தக்கத. தாவூத்து வீட்ட வித்துட்டு ஊர விட்டு ஓடிப்போன பெறவு ஆபில்பீ அஞ்சுபிள்ளைகளையும் கூட்டிட்டு போயி ஏர்வாடி தர்ஹால அநாதையா கெடக்குறத படிக்கும்போது கண்ல தண்ணியா வரும்.

இந்தக் கதைல ஊடால அங்கனயும், இங்கனயும் வர்ற சில கிளைக்கதைகள் கூட தனிச் சிறுகதையாக, குறுநாவலாக எழுதுமளவு சிறப்பாக உள்ளன. குறிப்பா சொல்லனும்னா பண்டிதர் பிச்சை, கோதைநாச்சியார், குல்சும், கமலா மற்றும் பேய்புடிச்ச பெண்களோட கதை. இதுல குத்தூஸோட மகனா வர்ற மாபாஷா பத்தி ‘நிழலற்ற பெருவெளி’ எனத் தனிக்கதையாகவே அர்ஷியா எழுதிருக்காரு. (அதப்பத்தி கபரஸ்தான் கதவு பதிவுல படிச்சுப்பாருங்க) உருது வார்த்தைகள நாவல்ல அப்படியே சில எடத்துல எழுதுனாலும் நமக்கு புரியுது. உதாரணத்துக்கு அடுத்து வர்ற வார்த்தைகளைப் பாருங்க. ஃபரி(தேவதை), சிச்சானியம்மா(சின்னம்மா), மும்மானி(அத்தை), ரஹாம்(கருணை), ஜின்(முனி).

சந்தனக்கூடு

முஸ்லீம்களோட கல்யாணச்சடங்கு, இறப்புச்சடங்கு, சாப்பாட்டு பழக்கவழக்கம் பத்தியெல்லாம் இதுல விரிவா பேசுறாரு. மேலும், ஏர்வாடி தர்ஹா, தெற்குவாசல் சந்தனக்கூடு திருவிழாலாம் பத்தி படிக்கைல நாமும் அங்க போகனும் போல இருக்கும். அதுலயும் மட்டைச்சோறு பத்தி எழுதியிருப்பாரு. அத வாங்கிச் சாப்புடவாச்சும் அந்த ஏர்வாடி தர்ஹாக்கு போணும்னு தோணும். ஒருமொற தொ.ப.அய்யா பேசும்போது இனவரைவியல் நாவல்களப் பத்தி பேசுனாரு. அதுல நீலபத்மனாபனோட தலைமுறைகள், எம்.வி.வெங்கட்ராமோட வேள்வித்தீ, அர்ஷியாவோட ஏழரைப்பங்காளி வகையறாலாம் இனவரைவியல் நாவல்னு குறிப்பிட்டாரு. அதுவும் இத எழுதும்போது ஞாபகத்துக்கு வந்துருச்சு.

ஏழரைப்பங்காளி

இஸ்லாமியர்களோட வாழ்க்கைமுறை என்பதைத் தாண்டி எங்க வீட்லயும், உங்க வீட்லயும் நடக்குற கதைதான் இது. இன்னொரு வகைல வாழ்ந்து கெட்ட குடும்பத்தோட கதைன்னு சொல்லலாம். கஷ்டப்படுறப்ப வேடிக்கை பாக்குற சொந்தக்காரங்க, நம்மள அந்தக் கஷ்டத்துல இருந்து தூக்கிவிட்ட பழக்கமானவங்க(நண்பர்கள்), கஷ்டப்படுறவங்கள கண்டபடி வேலை வாங்குறவங்கன்னு நாம அன்றாடம் பாக்குற மனுசங்கதான் இந்த இஸ்மாயில்புரத்துக்குள்ளயும் இருக்காங்க.

இந்தக்கதையப் படிக்கிறப்ப எங்கப்பாதான் ஞாபகத்துக்கு வந்தாரு. அவரும் தாவூத்தும் கிட்டத்தட்ட அண்ணந்தம்பி மாதிரித்தான். இந்தக் கதைல வர்ற கஷ்டம்லாம் பாதியாச்சும் நான் அனுபவிச்சுருக்கேன். அதையுந்தாண்டி எங்கப்பா இந்த ஏரியாலதான்(சந்தைப்பேட்டை) முப்பதுவருசத்துக்கிட்ட இருந்துருக்காரு. அவர்ட்ட ஒராட்ட இந்த நாவல கொடுத்து படிக்கச் சொல்லி பழைய கதையெல்லாம் கேட்கணும். நேரங்கிட்டும்போது பார்ப்போம்.

ஏழரைப்பங்காளி வகையறா மதுரைக்காரங்க, முஸ்லீம்ங்க மட்டும் வாசிக்க வேண்டிய நாவல் இல்ல. எல்லோரும் வாசிக்கணும். மனுசங்களல புரிஞ்சுக்க, வாழ்க்கையை பல்வேறு கோணங்கள்ல தரிசிக்க இந்த நாவலும் உதவும். அதுவும் இந்நாவலோட நடைக்காகவே ஒராட்ட எல்லோரும் கட்டாயம் படிக்கணும். அதுக்காகத்தான் அங்கன இங்கன கட்டத்துல நாவல்ல வர்ற வரிகள அப்படியே எடுத்துப் போட்டுருக்கேன். படிச்சுப்பாருங்க. புடிச்சா ‘ஏழரைப்பங்காளி வகையறா’ வாங்கிருங்க. உங்க புத்தக அலமாரி பெருமைப்படும்.

நன்றி – தினேஷ் குமார், மதுமலரன், குணா அமுதன், அருண், மதுரக்காரன் கார்த்திகேயன்

அர்ஷியா நாவல்

தொ.பரமசிவன்

தொ.பரமசிவன் அய்யாவின் உரையைக் கேட்பதும், அவருடன் உரையாடுவதும் வரம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் அவர் சொல்வதைக் கேட்பது நம் பாக்கியம். அய்யாவிடம் பெரியாழ்வார் குறித்தும் பேசலாம், பெரியார் குறித்தும் பேசலாம் என்பது தனிச்சிறப்பு. சமீபத்தில் பூவுலகு முதுவேனிற்கால இதழில் தொ.பரமசிவன் அய்யாவுடன் எடுத்த நேர்காணல் வந்துள்ளது. அந்தச் செவ்வியை படிக்கலாம். பூவுலகு இதழுக்கும், எழுத்தாக்கம் செய்தனுப்பிய நண்பர்  தயாளனுக்கும் நன்றிகள் பல.

நேர்காணல் – சங்கர்ராம், குட்டிரேவதி, ஆர்.ஆர்.சீனிவாசன்.

தொகுத்து எழுதியவர்கள் – தெய்வு, தயாளன், சங்கர்

தமிழர்கள் பொருளிலக்கணத்தில் காலத்தை ஆறாக வகுக்கிறார்கள்.  அது என்னவிதமான பொருத்தப்பாடு?

தொ.ப:     உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான வானியல் இருக்கு. இந்த வானியல் சோதிடத்தை பேஸ் பண்ணி இருக்கு. இத முதன்முதல்ல சொன்னவன் கிரேக்கர்கள். அப்புறம் சங்க இலக்கியத் தமிழர்களும், சங்க காலத்துல வாழ்ந்த ஆரியர்களும் ஒரு கால்குலேஷன் வச்சிருந்தாங்க. காலத்தை வகுத்த முன்னோடி தமிழனே. நாள் காட்டியை கண்டுபிடிச்சது, ஆடு மாடு மேய்க்கிறவங்கதான். ஆடு மாடுகளைப் பத்தி விட்டு, திறந்த வெளியில படுத்துக்கிட்டு ஆகாயத்தைப் பார்க்கிறபோது, இந்த நட்சத்திரத்த இங்கன கண்டா மழைவரும். இந்த நட்சத்திரத்த இங்கன கண்டா அடுத்த மாசம் பொறந்தாச்சு அப்படின்னு கண்டுபிடிச்சுட்டான்.

தமிழின் ஐவகை நிலங்களில் அதிகம் பாடப்பட்ட நிலம் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா?

தொ.ப     :     முல்லைதான். அதுதான் நாகரிகத்தின் தொட்டில். அவன் தான் வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல் தெருவில் நின்று இயற்கையை வாசித்தவன். இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் அப்பழக்கம் தொடருகிறது. கறி, மீன் சாப்பிட்ட இலைகளில் மோர் ஊற்றி சோறு சாப்பிடுவதில்லை. காரணம் இறைச்சி சாப்பிட்ட இலையில் புனிதமான பசுவின் மோரை ஊற்றக்கூடாது என்கிற கோட்பாடு. மற்ற உயிர்களை மதிப்பதுதான் இதற்கு அடிப்படை. தலைசீவினால் முடி கழியும், அது மாட்டின் வயிற்றுக்குள் போய்விடக்கூடது என்பதற்காக தூரத்தில் சென்று போடுவார்கள். எதற்கும் ஒரு சார்பு நிலை இருக்குல்ல. இது எல்லாம் ஏங்கல்ஸ் படிச்சு வரல. தானா வந்தது. வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயரக் கோன் உயர்வான்,  ஒன்னுக்கொண்னு சார்ந்துதான இருந்துது. இத அவன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளி அப்படின்னு சாதரணமாச் சொன்னான். மழை நல்லா இருந்தா மாங்கா நல்லா காய்க்கும். மழை இல்லேண்ணா புளி நல்லா காய்க்கும். புளி நல்லா காய்ச்சிருந்தாலே மற்ற பயிர்கள் மழை இல்லாம பட்டுப்போகும்ணு அர்த்தம், நம்பிக்கை. நம்பிக்கைங்கறது பலகாலம் பார்த்துப்பார்த்து வர்றதுதானே.

தொல்காப்பியத்துக்கு முன்னால நமக்கு பனுவல் இருக்கா?

தொ.ப     :     திடீர்னு ஒருநாள் ஒரு பனுவல் வர முடியாதில்லயா? என் வீட்டிற்கு வருகிறீர்கள், என் புகைப்படங்களைக் கால வரிசையில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள், 18 வயதில் ஒரு புகைப்படம் இருக்கு. 18 வயதுக்கு முந்தின ஃபோட்டோ இல்லை. அப்ப நான் இல்லண்ணு அர்த்தமா? என்னோட 5 வயசு ஃபோட்டோவும் மூணு வயசு ஃபோட்டோவும் இல்ல அப்ப நான் இல்லேண்ணு அர்த்தமா, இருந்திருக்கேன். ஃபோட்டோ எடுக்கலண்ணுதான அர்த்தம். அப்போ இவ்வளவு பெரிய வளர்ச்சி திடீர்னு வந்திருக்க முடியாதில்ல. இருந்திருக்கனும்ல, இதத்தான் தொல்காப்பியர் முந்தியோர் மரபு, மேலை மரபு, ஏனை மரபுண்ணு வேறு சில வர்த்தைகள்ல சொல்றாரு.

அந்த தொல்காப்பியம் இயற்கையை எப்படி விளக்குது? தொல்காப்பியத்தில இயற்கை, சுற்றுச்சூழல் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

தொ.ப     :     ”செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி” தொல்காப்பியம் எழுதப்பட்ட விதம்னு முன்னுரையில் சொல்றான். செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் தமிழ்மக்கள் இயற்கையோடு பொருந்திய வரலாறு, அதுதான் தொல்காப்பியப்பாயிரம், பாயிரம் என்றால் முன்னுரை.

தொல்காப்பியமே இயற்கை சார்ந்த விஷயமா?

தொ.ப     :     இயங்குகிற எல்லா உயிர்களும் இயற்கை சார்ந்தவைதான், நானும், நீங்களும் உட்பட. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணி புலந் தொகுத்தேனே போக்கறு… வரிசையா ஒன்னொண்ணா சொல்லிட்டு வருவான். தொல்காப்பியம் வேதம் மாதிரி ஒரு பூரணமான டெக்ஸ்ட் இல்ல. தொல்காப்பியத்துல கம்ப்யூட்டர் பத்தி சொல்லப்பட்டிருக்கான்னா இல்ல, ஆனா வேதத்துல இருக்குண்ணு பாப்பான் ஏதாவது ஆதாரத்தைக் கொண்டுவந்து காட்டுவான்.

ஐந்திணைகளை வகுத்தது யார்?

தொ.ப     :     : திணைகளை வகுத்தது இயற்கைதான். திணைகள் என்பது நிலவெளி. பஸ்ல போகும்போது பாத்துக்கிட்டே போவேன். நான் காளையார்கோவில் போகிறவழியில் பார்த்தேன். வெள்ளை வெள்ளையா ஒரு மரம். இது என்ன மரம் நாம பாத்ததேயில்லையேண்ணு ரொம்பநாளா யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அப்புறம் ஒருமுறை தெரிஞ்ச நண்பரோடு போகும்போது அவர் சொன்னார் அது வெவ்வேலா அப்படிண்ணு. ஏதோ க்ரீக் பெயர் மாதிரி இருக்கேண்ணு யோசிச்சேன். அப்புறம்தான் புரிஞ்சது அது வெள்வேலமரம். அடிமரம் வெள்ளையா இருக்கும். வேல மரம் மாதிரி வெள்வேல மரம். வெட்டி உரத்துக்குப் போடுவாங்க. அதே மாதிரி ஒவ்வொரு வட்டாரமும் ஒரு பொருளாதார மண்டலம். சங்கரன்கோவில்ல விளையுற தினை மானூர்ல விளையாது. மானூர்ல விளையுற மிளகாய் வற்றல் திருநெல்வேலி டவுனுக்குள் விளையாது. சின்னச்சின்ன பொருளாதார மண்டலங்களா வகுத்திருந்தாங்க.

எப்படி பொருளாதார மண்டலம்னு சொல்றீங்க? சூழலியல் மண்டலம்னு சொல்லாமல்?

தொ.ப     : சூழலியலா உள்ளதுதான். அதிகப்படியா ஒண்ணு வரும்போது விக்கறதுக்குப் போறான்ல. அவன் வயல்ல விளைஞ்ச மிளகாய் மிகையாகும்போது விக்கணும்ல. விக்கப்போறப்பொ அவன் அது எப்படி இருந்திச்சுன்னா ஒன்றையொன்று சார்ந்து இருந்திச்சு. நான் ஒரு வட்டம் போட்டுக் காட்டுறேன் (ஒரு தாளில் வட்டம் வரைந்து விளக்குகிறார்) ஒரு மண்டலம் ஒரு மண்டலத்தை தொட்டடுத்து இருக்கும். ஒன்னுக்கொன்னு உறவு இருக்கும். இடையில ஒரு ஆறு ஓடும் அவ்வளவுதான். வணிக வழிகள் எப்படி இருக்கும்னா ஒரு ஊரணி, ஒரு தாவளம் இருக்கும். தாவளம்னா இப்ப நீங்க சொல்ற மோட்டல்தான். விநாயகருக்கு தாவள விநாயகர்ணு பேரு. ஒவ்வொரு தாவளத்திலும் ஒரு விநாயகரை வச்சிருப்பான். வியாபாரிகளுக்குத் தேசிகள்னு பேரு. நாலு திசைகளுக்கும் பயணம்செய்வதால்  நானாதேசிகள் என்றும் பெயர். தேசிக விநாயகம்ணு பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பான். இந்த தங்க நாற்கரச் சாலையால அழிந்துபோன கல்மண்டபங்கள் எக்கச்சக்கம்.

கல்மண்டபம்ணா தங்குற இடம் இல்லையா?

தொ.ப     : ஆமாம். அங்க ஒண்ணும் இருக்காது. பெரிய கல் மண்டபம் பெரிய தங்குற இடம்னா பக்கத்துல ஒரு கிணறு இருக்கும். கிணறு இல்லாம இருக்காது. சங்கரன்கோவில் போகும்போது பாத்திருக்கேன். குற்றலம் போறப்பவும்  நிறைய பாக்கலாம்.

பசுமைப்புரட்சிக்கு அப்புறம் நிறைய பூச்சிகள் எல்லாம் அழிஞ்சு போச்சுல்ல. பி.எல்.சாமி சங்க இலக்கியத்தில் பூச்சிகள்ணு ஒரு புத்தகம் எழுதியிருக்காருல்ல. பசுமைப்புரட்சிக்கு முன்னால இயற்கை சார்ந்த ஒரு சுழற்சி இருந்திருக்குல்ல அந்த சுழற்சி எப்படி பதிவாகியிருக்கு? கண்ணிண்ணு நம்ம எல்லோரும் சொல்றோம். அந்த கண்ணி எப்படி பதிவாகியிருக்கு?

தொ.ப     : மழையச் சொல்றான். மேகத்தை சொல்றான். பெய்கிற மழையச் சொல்றான். பாய்கிற தண்ணிய சொல்றான். வரப்பைச் சொல்றான். வயலைச் சொல்றான். வயல்ல விளைகிற நெல்லச் சொல்றான். மீனைச் சொல்றான். அப்புறம் வயல்ல பாட்டுப்பாடி நெல் வாங்கிட்டுப்போற பாணர்களைச் சொல்றான். பாணர்கள் களம்பாடுறது  நெல்லைப் பக்கத்துல இல்ல. அங்கே விளைச்சல் அதிகம், அதனால களம் பாடுறது இல்ல. மதுரை மாவட்டத்துல நெல் அறுவடைக்காலத்துல களத்துலபோய் பாணர் சமூகத்தை சார்ந்தவங்க களம்பாடுவாங்க. அறுவடைக்காலத்துல நெல்களத்துல போய் ’பட்டிபெருக, பால பானை பொங்க, எட்டு லெச்சுமியும் ஏறிவிளைய’ அப்டீண்ணு பாட்டு பாடுவான். பொலிக பொலிக பொலிகண்ணு நெல் பொலி தூற்றும்போது பாடுவான். பொலிகண்ணா பெருகண்ணு அர்த்தம் – பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்ண்ணு நம்மாழ்வார் பாட்டு ஒண்ணு இருக்கு. அதுபோல நெல்லு வாங்கிட்டுப்போவாங்க. விளையுறதுல பாணர்களுக்கு ஒரு பங்கு இருந்தது. ஆனா இந்த மந்திரவாதி வாயைக்கட்டுறவன், அவங்களுக்கு ஏதும் இல்ல.

பூச்சிக்கொல்லி மருந்துன்னு எதையும் பயன்படுத்தல. பூச்சிக்கொல்லி மருந்தாக பூச்சிகளையேதான் பயன்படுத்தியிருக்காங்க. மாற்றுப் பயிர்முறை பயன்படுத்தியிருக்காங்க. உதாரணமா ஒரு வயலை மேடாக்கணும்னா கம்படிகம்பா வச்சா வயல் மேடாயிரும்பாங்க. திரும்பத்திரும்ப கம்பு பயிரிட்டா வயல் மேடாயிரும்னு. இல்லேண்ணா அந்த ஒரு ஏக்கர் நிலத்துக்கும் சமமா மண்ணடிச்சு நிரப்பி மேடாக்க முடியாது. வயல் மேடாக மேடாக என்னாகும். எறும்புக்கு நல்ல இடம் கிடைக்கும். பூச்சிகளுக்கும் நல்ல இடம் கிடைக்கும். மாற்றுப்பயிர வச்சுத்தான் பூச்சிகளக் கட்டுப்படுத்தினாங்க. இல்லேண்ணா சங்க காலத்துல விவசாயம் பண்ணதுக்கு இந்நேரம் பூச்சிகள் எல்லாத்தியும் அழிச்சு முடிச்சிருக்குமே. ஆகலையே எப்படீன்னா மாற்றுப் பயிர்கள் மாற்று உயிர்களை வச்சுத்தான். மாற்று உயிர்களை வச்சு உயிரினப் பன்மைய சமப்படுத்தியிருக்கான். இயற்கையாகவே உயிர்களிடத்துல இருக்குற ஒரு விஷயம் என்னன்னா பல்லுயிர் பெருக்கத்துக்காக செய்து கொள்ற காம்ப்ரமைஸ். திருநெல்வேலி நகரத்து நாய்கள் பத்து,  பாளையங்கோட்டை நாய்கள் பத்து. இரண்டு தரப்புக்கும் சரியான சண்டை பாலத்துல நடக்கும். பாளையங்கோட்டை நாய் தோத்துத்போகுது. தலைமை தாங்கின நாய் திரும்புது. எல்லா நாய்களும் திரும்பிப்போகுதுங்க. ஜெயிச்ச நாய் நகரத்து நாய்கள் பெருமிதத்தோட கொஞ்சநேரம் பாத்துக்கிட்டு நின்னுட்டு அதுகளும் திரும்பிப்போகுதுங்க. இங்க (பத்து நாய்களில்) எட்டு நாய் சாகுறது. அந்தப் பக்கத்தில் எட்டு நாய் சாகுறதுன்னெல்லாம் இல்ல. சமரசம். ஜாதிக்கலவரம்னாலும் அதுதான். ஜாதிக்கலவரம் எங்கேயாவது 200 நாளைக்குமேல நீடிச்சிருக்கா?. 200 நாளைக்குள்ள 2 கொலை விழும் அவ்வளவுதான். ஒரு எல்லைக்குமேல அந்த பண்பாட்டுச் சமரசம் பன்மைத்தன்மைக்கு ஒருவித சமரசவாதத்தைக் கொண்டுவந்துவிடும். அந்த சமரசவாதம் இயற்கையிலேயும் இருக்கு. செயற்கையிலே மனிதன் கிட்டயும் இருக்கு. கலவரத்துல உயிர்களப் பலிகொடுத்த பிறகு சமரசம் பண்ணிக்கிறது தோல்வி இல்ல. அது புத்திசாலித்தனம். திருக்குறளே ஒரு சமரசவாதம்பேசுற நூல்தான்.

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

பக்கத்துநாடு சின்ன நாடா இருந்தா ஒரு தட்டு தட்டி வைக்கணும். ஒரு பயம் இருக்கணும்ல அதுதான்.

திணை என்பது ஒரு சூழலியல் ஒழுங்கமைவுதான் (ECO SYSTEM) என்று பாமயன் சொல்றாரு. அது ஒரு சுற்றுச்சூழல் பிரிவு என்கிறார் அதுபற்றி உங்க கருத்து என்ன?

தொ.ப     : இருக்கலாம். ஒவ்வொரு 10 மைலுக்கும் இடையில மழைப் பொழிவு வித்தியாசப்படுதில்ல. இளையான்குடியில் இருந்து காளையார்கோவில் போறவழியில மறவமங்கலம்ணு ஒரு ஊர். அந்த ஊர்ல ஒரு தெப்பக்குளம். ராமநாதபுரம் மாவட்டத்தில மற்ற ஊர்கள்ல 200 அடிதோண்டி தண்ணி இல்லாம போகும்போது அந்த ஊர் கிணத்துல சாதாரணமா தண்ணி எடுத்து மக்கள் குளிச்சிகிட்டு இருப்பாங்க. அந்த ஊர்ல மட்டும் மழை பெய்யும். அந்த ஊரின் வான் இயற்பியல் தன்மை (astro physics) இப்படித்தான் இருக்கு. இத அனுபவத்தில கண்டு பிடிச்சான். ஆனிமாசம் 13ந் தேதி நெல்லையப்பர்கோவில் கொடியேத்தணும்னு யாரு முடிவு பண்ணினா? இயற்கைதான் முடிவு பண்ணிச்சு. ஆனி 13 கொடியேத்தற அண்னிக்குதான் சாரல் தொடங்கும். சங்கரன்கோவில்ல திருவிழாத்தொடங்கும். சங்கரன்கோவில்ல சாமி கும்பிட்டுவிட்டு இங்கவந்து மாம்பழம் வாங்கிகிட்டு போனா அது மாம்பழ சீஸன். பாளையங்கோட்டையில் மாம்பழச்சங்கம்ணு ஒரு சங்கம் வைச்சிருந்தான். நூற்றாண்டு மண்டபத்துக்கு வெளியில ஒரு 50 கடை போட்டிருப்பான். மாம்பழச்சங்க விழா நடக்கும். இயற்கையோடு இணைஞ்சு வருதில்ல.

திணைக் கோட்பாடுங்கறது தமிழர்களுடைய தனித்துவமான கோட்பாடா?

தொ.ப     : அப்படித்தான் இன்னைக்கு உலகம் முழுக்க சொல்லுது. ஐரோப்பிய சமூகம் முழுக்க குறிப்பா ஆங்கில இலக்கியம் படிக்கிறவங்க இதைத்தான் ஆய்வு பண்ணிக்கிட்டிருக்காங்க. கனடாவுக்கு நான் போயிருந்தப்ப அவங்க திணைக்கோட்பாடு பற்றித்தான் ஆர்வமாக் கேட்டாங்க. எல்லை மீறினதில்லையா இயற்கை. இயற்கைக்கு நாம கட்டுப்படணுமில்ல. எதிலயும் எப்படியும் இல்ல. கட்டுப்படலேண்ணா நான் நட்டப்படுவேன். பாதிப்பு வரும். மழைவரும்போல இருக்குன்னா ஒரு குடையை எடுத்துக்கிட்டு கிளம்பறேன். குடை இல்லேன்னாலும் இரவல் வாங்கிக்கறேன். அப்ப மனித உயிர் வாழ்வதற்குத்தான் இருக்கு, சாகறதுக்கு இல்ல. வாழும்போது நிறைய சமரசம் பண்ணிக்கிட்டுதான் வாழுது. அந்த சமரசங்களுக்கு சில பகுதிகள்ல திருவிழாச்சாயம் பூசி விட்டுருவாங்க. அவ்வளவுதான். புள்ள குடுக்கலேன்னாலும் சாமி கருணை காட்டலேன்னுடுவான். புள்ள வந்தாலும் சாமி அருளால புள்ள வந்துதுன்னுடுவான். அது ஒரு வகையான சமரசம்தான்.

தொ.ப (2)

தொல்காப்பியர் காலத்துல கடவுள் வழிபாடு இயற்கை வழிபாடு இதுல எது இருந்தது?

தொ.ப     : பொதுவா சொன்னா இயற்கை வழிபாடுதான் இருந்திச்சு. கடவுள் வழிபாடு இல்ல. இயற்கையோட விளைபொருட்களில் ஒன்னுதான மனுஷன். மனுஷன் தாயை மட்டும் பாக்கல, தாய் மண்ணையும் பாத்திருக்கான். என் உணவுக்கான ஆதாரம் இந்த நிலம்தான். வீட்டுக்குப்பின்னால ஒரு 3 செண்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கீங்க. அந்த இடத்தை பின் வீட்டுக்காரன் கேட்கிறான் கொடுப்பீங்களா? காய்கறி விளைஞ்ச அந்த நிலத்தினுடைய மதிப்பும் மரியாதையும் கூடிரும். அந்த மாதிரிதான். அதுதான் உணவளிக்கும் தாய்ண்ணு புரிஞ்சுகிட்டான்.

தொல்காப்பியத்துல நெல் இருந்துதா? நெல்லோட வரலாறு என்ன?

தொ.ப     : பொருந்தல்னு சங்க இலக்கியத்துல இருந்த ஒரு ஊரைக் கண்டுபிடிச்சிருக்காங்க அங்க நெல் இருந்திருக்கு. ஆதிச்சநல்லூர்ல நெல் இருந்திருக்கு. அது அதிகமா தண்ணீர் சாப்பிடுகிற ஒரு பணக்காரப்பயிர். வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்தா நெல்லு சமைச்சுப்போடணும். சிலபேர் வந்தா பழையசோறு போட்டாப்போதும். நெல்லு ரொம்ப காஸ்ட்லியான பயிர். நீர் மேலாண்மை தேவைப்படுகிற பயிர். நாம கெட்டுப்போனதற்கு அதுவும் ஒரு காரணம். புஞ்சை நிலங்கள நஞ்சை நிலங்களா மாத்தறோம்ணு சொல்லி இது நடந்தது.

எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது?

தொ.ப     : விஜயநகரத்துக்காரன் வாரானில்லையா? அப்ப நடந்தது. அதுக்கு முன்னால ரெண்டு நிலத்துக்கும் சம மதிப்புதான் இருந்தது. நெல் விளையலேன்னா புல் விளையும்ண்ணு இருந்தது. கம்பு, கேப்பை போன்ற உணவுகள்தான் புல்லுணவுகள். விஜயநகரப்படைகள் மூலமா புதுக்குடியேற்றங்கள் நடந்தது. அவங்க ஆந்திராவில நல்லா நெல் விளையுற பகுதியிலிருந்து கிருஷ்ணா, கோதவரி பாய்கிற நிலப்பகுதியிலிருந்து வந்தவங்க. நெல்சோறு கேட்டாங்க. அதுக்காக புதிய பயிர் நிலங்களை உண்டாக்கினான். அதுக்கு முன்னால இதே தண்ணிதான இருந்தது. நெல்லு ஒரு 5000 வருஷத்துக்கு முந்தி வியட்நாம்ல சம்பாங்கற இடத்தில இருந்து வந்ததுண்ணு ஒரு தியரி இருக்கு. சம்பாங்கற சொல்லே தென் வியட்நாமைக் குறிக்கும் என்கிற ஒரு வரலாறெல்லாம் இருக்கு. நெல் என்கிற சொல்லே மிகப் பழமையானது. நெல் என்றாலே சம்பாண்ணு ஆகிப்போச்சே. சம்பா தொடர்பான சொற்களையெல்லாம் சேகரிங்க. சம்பா+ அளம்= சம்பளம். நெல்லும் உப்பும் கூலியாகக் கொடுத்தா சம்பளம். சம்பளத்துக்கு ஒரு மாற்றுச் சொல் கண்டுபிடிங்க. வியட்நாம்ல எவ்வளவு மழைவீச்சு இருக்கு எவ்வளவு தாவரம் இருக்கு. வருஷம் முழுக்க நெல்லுக்கு தண்ணீர் நிக்கணும்ல. மற்ற தானியங்களுக்கு அப்படி இல்லியே. ஆதிவாசிகள் சொல்றான்ல கிழங்கும் தேனும் சாப்பிட்டுக்கிட்டிருந்த எங்களுக்கு அரிசியைக் கொடுத்து கெடுத்திட்டீங்களேன்னு. அவனவனுக்குப் பிடிச்ச சாப்பாட்டுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கணுமே தவிர அரசுக்கு பிடிச்ச சாப்பாட்ட அவன் தலையில கொண்டு கட்டக்கூடாது.

இயற்கை குறித்த விஷயங்கள் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்திலிருந்து எவ்வளவு மேம்பட்டுள்ளது?

தொ.ப     : எல்லாமே தொல்காப்பியத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடாது. பார்ப்பனர்களிடம் கேட்டால்  கம்ப்யூட்டரும் வேதத்துல இருக்கு, யூரிக்காரின் பேரும் வேதத்துல இருக்கும்பான்.  ரொம்ப ஆழமான கேள்வி. இரண்டுக்கும் இடையில ஒரு நூறு விஷயங்களுக்கான டாக்குமெண்ட் நம்மகிட்ட இல்ல. அதுபத்தி நாம பேச முடியாது. வணிகம் பற்றியே தொல்காப்பியம் நிறைய பேசவில்லை.

அப்படியென்றால் அந்த அளவுக்கு வணிகம் ஆழமானதாக இல்லயா?

தொ.ப     ; வணிகம் எப்போது பெருகும்ணா  அரசு பேரரசாக உருவாகும்போதுதான் வணிகம் பெருகும். இப்ப இருக்கிற கார்ப்பொரேட் கம்பெனிகள் மாதிரிதான். பெருவணிகர்கள் உள்ளே நுழைகிறபோதுதான் வணிகம் பெருகும். அது தொல்காப்பியத்திற்கு பிறகு. ஆரியர் நிறைய வணிகக் குழுக்களோட வர்றாங்க. அஞ்சு வண்ணம், மணிக்கிராமம், நகரத்தார், பதினெண்விசயத்தார் என்று நிறைய குறிப்புகள் இருக்கு. இந்த அரசாங்கம் கொள்முதல் பண்ணனும்னா வீரவநல்லூர் தாலுகாவிலேயிருந்து (அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி தாலுகாவிலேயிருந்து) நெல்லை வெளியே கொண்டுபோகக்கூடாதுண்ணு வைத்திருந்தார்கள் இல்லையா, அந்த மாதிரி.

சங்க இலக்கியத்துல உள்ள நீர்மேலாண்மை, இயற்கை, மரங்கள், பூச்சிகள் இதப்பத்தி சொல்லுங்க.

தொ.ப     : பெரிய பெரிய குளத்துக்கு வாட்டர் கார்டு இருந்திருக்கான். பெருங்குளக்காவலன் போலண்ணு அது போட்டுருக்காங்க. அது எப்படி ஆச்சு பெருங்குளக்காவலன்போல எங்கம்மா தூங்காமலேயே திரியுறா நான் வெளியே ஓடிப்போயிருவேன்னுட்டு’ (அகநானூறு)

தொ.ப


சங்க இலக்கியம்னாலேயே அது மேலோர் இலக்கியம் வளமா வாழ்ந்தவங்களோட இலக்கியம் அப்படீன்னு ஒரு கருத்து நிலவுதே?

தொ.ப     :     இல்ல இல்ல. அதில் பேசப்படுகிற உணவுகளைப்பத்தி பார்க்கிறபோது அது மேலோர் இலக்கியம் மாதிரியா தோணுது?. ஆனா உண்மை அது இல்ல. அது மக்கள் இலக்கியம். மேலோர் இலக்கியமா இருந்தா இதுக்குள்ள காணாமப்போயிருக்கும். ஐங்குறுநூறு பத்தி எழுதும்போது நான் எழுதியிருக்கேன். ‘நெல் பல பொலிக பொன்பெரிது சிறக்க’ண்ணு பாடுவா. நம்ம ஊர்ல ராப்பாடி பாடிக்கிட்டுப்போவான் பட்டி பெருக பால்பானை பொங்க என்று, காலங்காலமா அதுதான நடக்குது. பட்டின்னா மாடு அடைக்கிற பட்டி, பட்டின்னா வேலின்னு ஒரு அர்த்தம், பட்டிய காவல்காக்கிற நாய்க்கு பட்டிநாய்ன்னு பேரு. அப்புறம் மலையாளத்துல பட்டின்னாலே நாயைக் குறிக்கிற சொல்லாயிருச்சு. பட்டிகள் பெருகுகிற இடத்திலிருந்துதான் கிராமங்கள் உருவாகுது. ஏன்னா கால்நடைகளைப் பாதுகாக்கனும். அதைத்தான் வேலிபோட்ட கிராமங்கறான். மதுரையிலிருந்து காரைக்குடி போகிற வழியில பாத்தீங்கன்னா பஸ்ல உக்காந்தே ஒரு 200 பட்டிவரை எண்ணலாம். பட்டியில மக்கள் குடியிருந்து அது ஊராக மாறும்போது அந்த பட்டியின் பெயர்கொண்ட ஊராகுது. அம்மங்கோயில்பட்டின்னு ஒரு ஊரு. அம்மன்கோவில் பக்கத்துல பட்டி போட்டுருக்காங்க அதுதான் பின்னால அம்மங்கோவில்பட்டின்னு மாறிடுச்சு. பட்டிபெருக பால்பானை பொங்கன்னா, நாடு செழிக்கனும்னா பட்டிபெருகன்னுதான் அர்த்தம்.

முல்லை இல்லாத மற்ற திணைகளெல்லாம் எப்படி இருந்தன?

தொ.ப     : நம்மகிட்ட அதைப்பத்தி அதிகமா குறிப்பு இல்ல. மற்ற திணையெல்லாம் ரொம்ப புவர் லிவிங்தான். மருதத்துலதான் நல்ல சோறு உண்டு இருக்காங்க. பெருந்தடி வரால் மீன்கள்ங்கறான். விடியக்காலம் பழையசோறும் வரால்மீனும் சேர்த்து சாப்பிட்டுட்டு வயலுக்குப்போயிருக்கான். மருத நிலத்தத் தவிர மத்தவுங்க எல்லாம் புவர் லிவிங்தான். காய்ந்த இறைச்சிய குறுநில மக்கள் சாப்பிடறாங்க. செந்நாய் அடிச்சுப்போட்டுட்டுப்போன காய்ந்த இறைச்சிய சாப்பிடறாங்க. முல்லைநில மக்கள் விதை தானியங்கள தின்பாங்க. விதைதானியங்கள் தானா வளரக்கூடியவை இல்லிய. எப்பவோ சிந்திவைத்த தினை ஒரு மழைபேஞ்சவுடனே 60 வருஷம் கழிச்சு முளைக்கும். அதற்கு உள்ளே இருக்கிற விதை, உறைநிலையில தன்னைப் பாதுகாத்துக்கொண்டு கிடக்கும். அதன் மேல இருக்கிற உறை உடையாம இருக்கனும். அது ஒரு ஃப்ரோசன் ஸ்டேஜ். இயற்கையிலேயே இருக்கு. இந்த எலுமிச்சம் பழத்தை சர்பத் போடறதுக்குப் புழிஞ்சுட்டு தூர எறியுவாங்க. ஆஃபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்துபாத்தா அந்த நாலுவிதையும் தன்னைசுத்தி ஒரு உறையை ஃபார்ம் பண்ணிட்டு அங்கேய கிடக்கும்.

விதைத்தானியங்களுக்கு தோல் ரொம்ப முக்கியம். வரகுக்கு 7 அரண்மனைகளுக்குள் இருக்கிற இந்திராணிண்ணு பேரு. தொலி அதைச்சுத்தி இருக்கும். அவ்வளவு பாதுகாப்போட அது இருக்கும்.

தொ.ப     :     தானே ஒரு உறை உருவாகி விடும். அதை எடுத்துவந்து போட்டீங்கன்னா அந்த உறை கழன்று அந்த விதை முளைக்கும். இப்படி உறைநிலையில எல்லாத் தாவரங்களும் இருக்கும். மாங்கா தேங்கால்லாம்கூட இருக்கும். மூளையிலேயும் அப்படி நிறைய விஷயங்க உள்ள கிடக்குது. அது வெளிப்படுகிறபோது வெளிப்படும். புறச்சூழ்நிலைகள் கூடிவருகிறபோது அதாவது நல்ல மண்ணு, நல்ல மழை, நல்ல வெயில்னு இருக்கிற இடத்துல அந்த விதை கிடைச்சுதுன்னா நல்லா முளைச்சிரும்.

ஜ்யோக்ரஃபிக் சானல்ல பார்த்தேன். மீன் வந்து நீர்வற்றிப்போகும்போது அப்படியான ஒரு உறைநிலைக்குப்போறதும் அப்புறம் ஒரு வருஷம் கழித்து மழை பெய்த பிறகு அதற்கு உயிர் வருவதும். அதை அறிவியல்பூர்வமா விளக்குறாங்க.

தொ.ப     :     ஆமா, நம்ம வயல்லயும் அப்படித்தானே. வயல்ல அறுவடை முடிஞ்சு தாள் அறுத்தப்புறம் வயல் காய்ஞ்ச கருங்கல் பாறை மாதிரி ஆயிடுது. அப்புறம் மழை பெய்தபிறகு மீண்டும் முளைக்குதில்ல, அது மாதிரிதானே.

தொ.ப

அப்போ நெய்தல் பற்றி…

தொ.ப     நெய்தல்ல விவசாயம் பற்றி அதிகமில்லை. இந்த பேக்வாட்டர்ஸ் பத்தி நிறைய பேசியிருக்கான். ’இருங்கழி நெய்தல்’ங்கிறது நன்னீரும் உப்புநீரும் சந்திக்கிற இடம். அந்த இடத்துல எக்கோ சிஸ்டம் வேற. அதுல உள்ள மரம் வேற.

இயற்கைய நெய்தல் நிலத்துல எப்படிப் புரிந்து கொண்டாங்க, இந்தக் காற்றோட அளவு பற்றியெல்லாம்?

தொ.ப     ; காற்று மழை இத வச்சுதான் சொல்லியிருக்கான். இந்த வருஷம் இந்த மீன் செழிப்பா இருக்கும். அவங்க காற்றப் பத்திச் சொல்லுவான். ஒரு காத்தை கச்சா’ம்பான், இன்னொன்னை மச்சா’ம்பான். இந்தக் காத்து இங்க அடிக்குற சீஸன்ல தோணி கொண்டுப் போறவனுக்கு இந்த பாய்மரத்தை வச்சு சொல்லுவான்ல. வலையில படுகிற மீனை வச்சு சொல்லுவான்ல. இந்த வருஷம் மத்தி நிறையப்படும், ஏன் இந்த மீன் நிறைய படலை, ஏன் இந்த மீன் நிறைய பட்டுச்சுன்னு சொல்வான். இதெல்லாம் அவங்களுக்கு அனுபவத்துல வர்றதுதான். நீங்க கடற்கரையில போய் பேசுனீங்கன்னா எந்தக் கடற்கரையில எந்த மீன் கிடைக்கும்ணு சொல்லுவான். நான் பாண்டிச்சேரி போயிருந்தப்போ அங்கயிருந்தவங்க பாண்டிச்சேரியில நீங்க என்ன பாக்கணும்னு கேட்டாங்க. மீன் மார்க்கெட்ன்னு சொன்னேன். இவர் சரியான மீன் சாப்பிடுறவர்ணு நெனைச்சுருப்பாங்க. காலைல போனா மீன் மார்க்கெட் அவ்வளவு சுத்தமா இருக்கு. கறுப்பு மீன் செவப்பு மீன், கறுஞ்சிவப்பு மீன், நீளமீன்னு வகை வகையா மீன்கள். கடல்ல ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஏரியா இருக்கு போல. சுருக்கமா சொன்னா ஒரு சீஸனுக்கு நம்மகிட்ட 20 வகையான மீன் கிடைச்சுதுன்னா, அவன்கிட்ட 40 வகையான மீன் கிடைக்கும். வகை வகையா இருக்கும், அழகழகா இருக்கும். அந்த அழகப்பாத்து ஒருநாள் நான் சாப்பிடனும்ணு நெனைச்சேன். அதே மாதிரி கேரளாவுல ஒரு சீஸனுக்கு போயிருந்தேன். வாழைக்காய் மாதிரி சீவிற்றான். சீவி இந்த முட்டைபஜ்ஜி மாதிரி போடுறான். சின்ன சைஸ்லேருந்து பெரிய சைஸ் வரைக்கும். சின்ன அப்பளத்தில இருந்து பெரிய அப்பளம் வரைக்கும் வகைவகையா. நடுவுல வெட்டுனா பெரிய அப்பளம், நுனியில வெட்டுனா சிறுசு. வகைவகையா வெட்டிப்போட்டான். அதுக்கு மத்தின்னு ஏதோ பேர் சொன்னான்.

குறிஞ்சி நிலம் குறித்து

தொ.ப.     :     அவனுக்குத்தான் உணவு சேகரிப்பு ரொம்ப எளிமையான விஷயம். ஒரு மானை ஒருநாளைக்கு அடிச்சுட்டான்னா ஒரு கிராமத்துக்கே ரெண்டு நாளைக்கு அது போதும். அவன்கிட்ட மீன் பிடித்தலும் உண்டு. அவங்க தூண்டில் வச்சிருப்பாங்க. அப்புறம் கிழங்கு.

சங்கர்ராம்  :இன்னிக்கும் கேரள மக்கள் கிழங்கைத்தானே விரும்பிச் சாப்பிடறாங்க.

தொ.ப     : மீனவ மக்கள்கிட்ட பேசிப்பாக்கனும் நீங்க. சாப்பாட்டப்பத்தி அவ்வளவு சொல்லுவான். பாளையங்கோட்டைக்காரன் போய்த்தான் வட்டிக்கு பணம்கொடுத்து கெடுத்துட்டான். தொழிலோட சீரழிவுக்கு அதுதான் காரணம்.

சங்க இலக்கியத்துல மரங்களோட பெயர்கள், பறவைகள் பெயர்கள் எல்லாமே தொகுக்கப்பட்டிருக்கு. அப்போ இலக்கியம் என்பதே ஒரு அதிகபட்ச உயிர்ச்சூழலை புவியியல் ரீதியா வந்து அடையாளப்படுத்தக்கூடிய விஷயமாத்தனே இருந்திருக்கு. அது பத்தி.

தொ.ப     : சங்க காலத்துப் பெயர் இன்னும் சிலது இருக்கு. பெயரிடு மரபுண்ணு. குமரன் அப்படிங்கிற பெயர் இன்னும் இருக்கு. குறவர்கள்கிட்ட நிறைய இருக்கு தெரியுமா? நாமாதான்  நவீனம் அப்படிங்ற பேர்ல விடமாட்டேன்கிறோம். நீலன். சாத்தன், கபிலன் இது மாதிரி நிறைய பெயர்கள குறவர்கள்கிட்ட நீங்க பார்க்கலாம்.

இப்போ சங்க இலக்கியம் பத்தி பாத்தோம். சிலப்பதிகாரத்துல இயற்கை பத்தி என்ன சொல்லியிருக்கு?

தொ.ப     : அது பெரிய விஷயம். பெருமளவுக்கு சார்ந்திருக்கு. தலைகீழ் மாற்றங்கள் மாதிரி. அத தனியா பேசணும். சிலப்பதிகாரத்துலதான் நிறைய பூ பெயர்கள், தாவரங்கள், பெயர்கள் பதிவாகியிருக்கிறது.

கண்ணகிய மதுரையில இருந்து கூட்டிட்டு வரும்போது, என்னெல்லாம் இருக்கும் என்ன கிழங்குகள் இருக்கும், என்ன பூக்கள் எல்லாம் இருக்கும், முள்சார்ந்த பூக்கள் இருக்கும்கற விவரமெல்லாம் இருக்கு. இன்னின்ன மிருகங்கள்லாம் இருக்கும்,  நீ வரமாட்ட, பயப்படுவாய் அப்படின்னெல்லாம். அது பெருங்கடல், அதற்குள்ள நுழையறதுக்கே நம்மள தயார் படுத்திக்கணும்.

தொ.ப     : மக்கள் வாழ்க்கைய தெளிவா பதிவு பண்ணியிருக்கு, நம்மால கண்டெடுக்கவும், கண்டுபிடிக்கவும் முடியாம இருக்கு. கண்ணகி கதை எல்லோருக்கும் தெரியும். 50 வருஷத்துக்கு முன்னயே அதை தெருக்கூத்தா ஆடியிருக்காங்க. அதே மாதிரி மணிமேகலை முழுக்க முழுக்க பவுத்தம்தான். அது பவுத்தக்கோட்பாட்டை விளக்குறதுதான். எல்லோருக்கும் சோறுகொடு, எல்லோருக்கும் கல்விகொடு எல்லோருக்கும் மருந்து. அதுதான் WHO உலக சுகாதார அமைப்பின் அடிப்படை முழக்கமும் கூட. அனைவருக்கும் சோறு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் மருத்துவம்.

பூவுலகு, மார்ச் – ஏப்ரல் 2015

படங்கள் உதவி – பாமரன், அ.பெ.மணி, செல்வபிரகாஷ், இளஞ்செழியன்.

logorelese

ஒரு பெரிய நிலப்பரப்பிற்கான நீர்ப்படுகையை, தன் வேரடிவாரத்தில் கொண்டுள்ள மலையை வெட்டி – வாகனச் சக்கரங்களில் தேயும் சிறுகல்லாகவும் நடைபாதைகளின் ஓரத்து கால்தூசியாகவும் ஆக்கிவிட நினைத்து நிகழ்ந்தது யானை மலையை அழிக்கும் முயற்சி. அதை எதிர்த்து மலையைக் காக்க சேர்ந்த எண்ணற்ற கரங்களில் தம்மையும் இணைத்துக் கொண்டதோடு துவங்கியது பசுமைநடை இயக்கம்.

பிறகு, வரலாற்றின் பூர்வகாற்றும் வாசமும் மிச்சமிருக்கும் மலைகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், இடங்களையும் காண ஒவ்வொரு முறையும் நூற்றக்கணக்காண நண்பர்களோடு பயணித்தது பசுமைநடை.

அன்றாடக்கூலி உழைப்பாளி முதல் விவசாயி, அலுவலர், ஆய்வு மாணவர், வல்லுனர்கள் வரை விரிந்தது பசுமைநடையில் பங்கேற்போர் வட்டம். தனது 25வது நடையை விருட்சத்திருவிழாவாகக் கொண்டாடியது. இது பசுமை நடை நடந்து வந்த பாதை.

மொழி, மதம், சாதி என்ற எல்லைகளைக் கடந்து இயற்கை, வரலாறு பற்றிய புரதலையும் விழிப்பையும் பொதுசமூகத்தில் உருவாக்க நினைப்பது பசுமைநடை நடக்க நினைக்கும் பயணம்.

காற்றின் சிற்பங்களிலிருந்து

இயற்கையையும், வரலாற்றையும் நோக்கிய பசுமைநடைப் பயணத்தில் 25வது நடை விருட்சத்திருவிழாவாகவும், 40வது நடைப் பாறைத்திருவிழாவாகவும் கொண்டாடினோம். 50 வது நடையை நீரை மையமாகக் கொண்டு கொண்டாட முடிவெடுத்த போது தமிழில் நீர் குறித்த தலைப்புகள் ஆச்சர்யம் ஊட்டியது. நீர் குறித்து ஏராளமான சொற்கள். நல்ல நீரைப் போல அவைகளையும் இன்று தொலைத்து விட்டோம் என்று அப்போதுதான் தெரிந்தது. 49வது பசுமைநடையில் அழகர்மலை கிடாரிப்பட்டி குன்றில் 50வது நடை குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அன்று மாலை சங்கம் ஹோட்டலில் 50வது நடையின் இலட்சினை வெளியீடும், இருஉரை நிகழ்வும் நடைபெற்றது. நூற்றைம்பதிற்கும் மேலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

sangam

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரையும், அதைத் தொடர்ந்து விஜயகுமார் அவர்கள் பாண்டியர் குடைவரையும் ஒற்றைக் கற்றளியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அரங்கிலிருந்த அனைவரையும் வடநாட்டில் தொடங்கி கழுகுமலை வரை அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். அவரது இருஉரை நிகழ்வையும் தனியாக பதிவிட வேண்டும்.

இன்னீர் மன்றல் இலட்சினையை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில் இணைஆணையர் நா.நடராஜன் அவர்கள் வெளியிட அஞ்சலி நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். அதற்கடுத்தாற் போல் ஆங்கிலத்தில் WATER FEST  என இருந்த இலட்சினையை துர்கா முத்துக்குமார் வெளியிட பிரியா அவர்கள் பெற்றுக்கொண்டார். வந்திருந்த அனைவருக்கும் இலட்சினை வழங்கப்பட்டது.

waterfestivel

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் 50வது நடைக்கான தலைப்பை தேடிய அனுபவங்களைச் சொன்னார். நீர், வாவி, அடவி, சுனை, பொய்கை, தடாகம், தெப்பம், கண்மாய், குளம் என நீண்டுகொண்டே போன தமிழில் நீர் குறித்த சொற்களை அறிந்த போது ஏற்பட்ட வியப்பை குறிப்பிட்டார். முந்நீர் விழவு என பூவுலகின் நண்பர்கள் வைத்தது போல தலைப்பை தேடிய போது திருமங்கலத்தில் வசிக்கும் சூழலியல் அறிஞர் பாமயன் சொன்ன தலைப்புகளில் இன்னீர் மன்றல் நன்றாகயிருந்ததாகக் குறிப்பிட்டார். இன்னீர் மன்றல் விழாவில் நீர் மேலாண்மை மற்றும் நீராதாரங்கள் குறித்த உரை நிகழ்வும் இருக்குமென குறிப்பிட்டார். மேலும், பசுமை உங்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கும், விருந்தினர்களுக்கும் மதுரையிலுள்ள ஷாப்பிங்மால்களை சுற்றிக்காட்டாமல் தொன்மையான மலைகளுக்கும், இடங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள் என்பதுதான்.

natarajan

மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் அவர்கள் பசுமைநடை குழுவின் செயல்பாடுகளை வாழ்த்தினார். மேலும், அந்தக் காலத்தில் நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியதைக் குறிப்பிட்டார். தான் பிறந்த பழனிக்கருகில் சண்முகநதியில் நீர் பங்கீடை உதாரணமாகக் கொண்டு பேசினார். ஒரு பெரிய ஏரியில் ஆறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி ஒவ்வொரு தடுப்பனையிலிருந்து வெளியேறும் நீரும் நாலைந்து கண்மாய்களுக்குச் செல்லும். ஒரு கண்மாய் நிறைய மறுகண்மாய்க்கு நீர் செல்லும்படியிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார். நாம் மேற்கத்திய தொழில்நுட்பங்களை மட்டும் நம்பாமல் பாரம்பரிய முறைகளையும் கற்க வேண்டும்.

anjali

அஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்நாதன் அவர்கள் பசுமைநடை குறித்தும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். முன்னெல்லாம் மாதம் குறைந்தபட்சம் ஒரு புத்தகம் படித்ததாகவும், வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்ததாகவும் சொன்னார். வாட்ஸ்அப் வந்த பிறகு வாசிப்பு பழக்கமே சில மாதங்களாக அருகிவிட்டதைக் குறிப்பிட்டார். ஒன்றிருக்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து அலைபேசிக்கு வரும் நூற்றுக்கணக்கான தகவல்களைப் பார்க்கவே இப்போதெல்லாம் நேரமில்லை என்றார். அதனால், இன்றைய தலைமுறையைக் கவரும் வண்ணம் புத்தகங்களைவிட ஒலியும் ஒளியுமாக ஒரு விசயத்தை எடுத்து எல்லோருக்கும் அனுப்பினால் அதைக்குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு போன போது அதன் வரலாறை அவர்கள் சொல்லும் போது நம்ம ஊர் அருவிகள் குறித்து அறியாதது சங்கடமாக உள்ளது என்றார். உள்ளூர் வரலாற்றை அனைவருக்கும் பகிரும் பசுமைநடை மேன்மேலும் வளர வாழ்த்தி விடைபெற்றார்.

muthukrishnan

எல்லோரும் குழந்தையைத் தத்தெடுப்பார்கள் நாங்கள் ஒரு ஞானத் தந்தையையே தத்தெடுத்திருக்கிறோம் என சாந்தலிங்கம் அய்யா குறித்த அறிமுகத்துடன் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். சாந்தலிங்கம் அய்யா தமிழரின் அன்றைய நீர் மேலாண்மைக்கு நல்லதொரு உதாரணம் சொன்னார். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே கூன்பாண்டியன் என்ற நீர்சீர் நெடுமாறன் வைகை நதிக்கு நடுவே (மதுரை குருவிக்காரன் பாலத்துக்கு அருகில்) ஒரு அணையைக் கட்டி நீரை திருச்சுழி வரை கொண்டு சென்றதாக ஒரு கல்வெட்டு மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளதாகச் சொன்னார். அதில் அரிகேசரி மதகு எனப் பெயர் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பசுமைநடை நண்பர்கள் அவருடைய ஓய்வு காலத்தில் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக குறிப்பிட்டார். வடநாட்டில் உள்ள இடங்களைப் பார்க்க பணிபுரிந்த காலத்தில் வசதியும் இல்லை, நேரமும் இல்லை எனக் சொன்னார். பாண்டியன் குடைவரைகள் குறித்து விஜயகுமார் அவர்கள் பேசியதைப் பாராட்டினார்.

இன்னீர் மன்றல் நிகழ்விற்கு அறிமுகமாக இதுவரை நடந்த நடைகளின் எடுத்ததையெல்லாம் ஒலிஒளிப்படமாக அருண் தொகுத்த முன்னோட்டம் அட்டகாசமாகயிருந்தது. அருணை அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

அதைத்தொடர்ந்து சிலைத்திருட்டையும், மீட்பையும் குறித்து இந்திய பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தில் பிரச்சனைகள் என்ன? என்ற தலைப்பில் விஜயகுமார் அவர்கள் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இளஞ்செழியன் நன்றியுரை கூறினார். மதுர வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பசுமைநடையில் முதல் அரங்க அமர்வு வெற்றிகரமாக நடந்தது. ஆலமரத்தடியில் இன்னீர் மன்றலில் சந்திப்போம்.

logo

படங்கள் உதவி – தமீம் அன்சார், வஹாப் ஷாஜகான், செல்வம் ராமசாமி