Archive for the ‘பகிர்வுகள்’ Category

logorelese

ஒரு பெரிய நிலப்பரப்பிற்கான நீர்ப்படுகையை, தன் வேரடிவாரத்தில் கொண்டுள்ள மலையை வெட்டி – வாகனச் சக்கரங்களில் தேயும் சிறுகல்லாகவும் நடைபாதைகளின் ஓரத்து கால்தூசியாகவும் ஆக்கிவிட நினைத்து நிகழ்ந்தது யானை மலையை அழிக்கும் முயற்சி. அதை எதிர்த்து மலையைக் காக்க சேர்ந்த எண்ணற்ற கரங்களில் தம்மையும் இணைத்துக் கொண்டதோடு துவங்கியது பசுமைநடை இயக்கம்.

பிறகு, வரலாற்றின் பூர்வகாற்றும் வாசமும் மிச்சமிருக்கும் மலைகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், இடங்களையும் காண ஒவ்வொரு முறையும் நூற்றக்கணக்காண நண்பர்களோடு பயணித்தது பசுமைநடை.

அன்றாடக்கூலி உழைப்பாளி முதல் விவசாயி, அலுவலர், ஆய்வு மாணவர், வல்லுனர்கள் வரை விரிந்தது பசுமைநடையில் பங்கேற்போர் வட்டம். தனது 25வது நடையை விருட்சத்திருவிழாவாகக் கொண்டாடியது. இது பசுமை நடை நடந்து வந்த பாதை.

மொழி, மதம், சாதி என்ற எல்லைகளைக் கடந்து இயற்கை, வரலாறு பற்றிய புரதலையும் விழிப்பையும் பொதுசமூகத்தில் உருவாக்க நினைப்பது பசுமைநடை நடக்க நினைக்கும் பயணம்.

காற்றின் சிற்பங்களிலிருந்து

இயற்கையையும், வரலாற்றையும் நோக்கிய பசுமைநடைப் பயணத்தில் 25வது நடை விருட்சத்திருவிழாவாகவும், 40வது நடைப் பாறைத்திருவிழாவாகவும் கொண்டாடினோம். 50 வது நடையை நீரை மையமாகக் கொண்டு கொண்டாட முடிவெடுத்த போது தமிழில் நீர் குறித்த தலைப்புகள் ஆச்சர்யம் ஊட்டியது. நீர் குறித்து ஏராளமான சொற்கள். நல்ல நீரைப் போல அவைகளையும் இன்று தொலைத்து விட்டோம் என்று அப்போதுதான் தெரிந்தது. 49வது பசுமைநடையில் அழகர்மலை கிடாரிப்பட்டி குன்றில் 50வது நடை குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அன்று மாலை சங்கம் ஹோட்டலில் 50வது நடையின் இலட்சினை வெளியீடும், இருஉரை நிகழ்வும் நடைபெற்றது. நூற்றைம்பதிற்கும் மேலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

sangam

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரையும், அதைத் தொடர்ந்து விஜயகுமார் அவர்கள் பாண்டியர் குடைவரையும் ஒற்றைக் கற்றளியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அரங்கிலிருந்த அனைவரையும் வடநாட்டில் தொடங்கி கழுகுமலை வரை அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். அவரது இருஉரை நிகழ்வையும் தனியாக பதிவிட வேண்டும்.

இன்னீர் மன்றல் இலட்சினையை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில் இணைஆணையர் நா.நடராஜன் அவர்கள் வெளியிட அஞ்சலி நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். அதற்கடுத்தாற் போல் ஆங்கிலத்தில் WATER FEST  என இருந்த இலட்சினையை துர்கா முத்துக்குமார் வெளியிட பிரியா அவர்கள் பெற்றுக்கொண்டார். வந்திருந்த அனைவருக்கும் இலட்சினை வழங்கப்பட்டது.

waterfestivel

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் 50வது நடைக்கான தலைப்பை தேடிய அனுபவங்களைச் சொன்னார். நீர், வாவி, அடவி, சுனை, பொய்கை, தடாகம், தெப்பம், கண்மாய், குளம் என நீண்டுகொண்டே போன தமிழில் நீர் குறித்த சொற்களை அறிந்த போது ஏற்பட்ட வியப்பை குறிப்பிட்டார். முந்நீர் விழவு என பூவுலகின் நண்பர்கள் வைத்தது போல தலைப்பை தேடிய போது திருமங்கலத்தில் வசிக்கும் சூழலியல் அறிஞர் பாமயன் சொன்ன தலைப்புகளில் இன்னீர் மன்றல் நன்றாகயிருந்ததாகக் குறிப்பிட்டார். இன்னீர் மன்றல் விழாவில் நீர் மேலாண்மை மற்றும் நீராதாரங்கள் குறித்த உரை நிகழ்வும் இருக்குமென குறிப்பிட்டார். மேலும், பசுமை உங்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கும், விருந்தினர்களுக்கும் மதுரையிலுள்ள ஷாப்பிங்மால்களை சுற்றிக்காட்டாமல் தொன்மையான மலைகளுக்கும், இடங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள் என்பதுதான்.

natarajan

மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் அவர்கள் பசுமைநடை குழுவின் செயல்பாடுகளை வாழ்த்தினார். மேலும், அந்தக் காலத்தில் நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியதைக் குறிப்பிட்டார். தான் பிறந்த பழனிக்கருகில் சண்முகநதியில் நீர் பங்கீடை உதாரணமாகக் கொண்டு பேசினார். ஒரு பெரிய ஏரியில் ஆறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி ஒவ்வொரு தடுப்பனையிலிருந்து வெளியேறும் நீரும் நாலைந்து கண்மாய்களுக்குச் செல்லும். ஒரு கண்மாய் நிறைய மறுகண்மாய்க்கு நீர் செல்லும்படியிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார். நாம் மேற்கத்திய தொழில்நுட்பங்களை மட்டும் நம்பாமல் பாரம்பரிய முறைகளையும் கற்க வேண்டும்.

anjali

அஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்நாதன் அவர்கள் பசுமைநடை குறித்தும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். முன்னெல்லாம் மாதம் குறைந்தபட்சம் ஒரு புத்தகம் படித்ததாகவும், வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்ததாகவும் சொன்னார். வாட்ஸ்அப் வந்த பிறகு வாசிப்பு பழக்கமே சில மாதங்களாக அருகிவிட்டதைக் குறிப்பிட்டார். ஒன்றிருக்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து அலைபேசிக்கு வரும் நூற்றுக்கணக்கான தகவல்களைப் பார்க்கவே இப்போதெல்லாம் நேரமில்லை என்றார். அதனால், இன்றைய தலைமுறையைக் கவரும் வண்ணம் புத்தகங்களைவிட ஒலியும் ஒளியுமாக ஒரு விசயத்தை எடுத்து எல்லோருக்கும் அனுப்பினால் அதைக்குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு போன போது அதன் வரலாறை அவர்கள் சொல்லும் போது நம்ம ஊர் அருவிகள் குறித்து அறியாதது சங்கடமாக உள்ளது என்றார். உள்ளூர் வரலாற்றை அனைவருக்கும் பகிரும் பசுமைநடை மேன்மேலும் வளர வாழ்த்தி விடைபெற்றார்.

muthukrishnan

எல்லோரும் குழந்தையைத் தத்தெடுப்பார்கள் நாங்கள் ஒரு ஞானத் தந்தையையே தத்தெடுத்திருக்கிறோம் என சாந்தலிங்கம் அய்யா குறித்த அறிமுகத்துடன் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். சாந்தலிங்கம் அய்யா தமிழரின் அன்றைய நீர் மேலாண்மைக்கு நல்லதொரு உதாரணம் சொன்னார். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே கூன்பாண்டியன் என்ற நீர்சீர் நெடுமாறன் வைகை நதிக்கு நடுவே (மதுரை குருவிக்காரன் பாலத்துக்கு அருகில்) ஒரு அணையைக் கட்டி நீரை திருச்சுழி வரை கொண்டு சென்றதாக ஒரு கல்வெட்டு மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளதாகச் சொன்னார். அதில் அரிகேசரி மதகு எனப் பெயர் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பசுமைநடை நண்பர்கள் அவருடைய ஓய்வு காலத்தில் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக குறிப்பிட்டார். வடநாட்டில் உள்ள இடங்களைப் பார்க்க பணிபுரிந்த காலத்தில் வசதியும் இல்லை, நேரமும் இல்லை எனக் சொன்னார். பாண்டியன் குடைவரைகள் குறித்து விஜயகுமார் அவர்கள் பேசியதைப் பாராட்டினார்.

இன்னீர் மன்றல் நிகழ்விற்கு அறிமுகமாக இதுவரை நடந்த நடைகளின் எடுத்ததையெல்லாம் ஒலிஒளிப்படமாக அருண் தொகுத்த முன்னோட்டம் அட்டகாசமாகயிருந்தது. அருணை அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

அதைத்தொடர்ந்து சிலைத்திருட்டையும், மீட்பையும் குறித்து இந்திய பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தில் பிரச்சனைகள் என்ன? என்ற தலைப்பில் விஜயகுமார் அவர்கள் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இளஞ்செழியன் நன்றியுரை கூறினார். மதுர வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பசுமைநடையில் முதல் அரங்க அமர்வு வெற்றிகரமாக நடந்தது. ஆலமரத்தடியில் இன்னீர் மன்றலில் சந்திப்போம்.

logo

படங்கள் உதவி – தமீம் அன்சார், வஹாப் ஷாஜகான், செல்வம் ராமசாமி

11055308_10204271218076805_8095906488062105178_o

மலைவாழிடங்களை நோக்கி கோடைக்காலங்களில் சுற்றுலா செல்லும் நாம் அங்கு காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து அதிகம் அறிந்ததில்லை. மலையும், மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கென்று தனித்தெய்வம் முதல் தனியாக இசைக்கும் பண் வரை உள்ளதாக சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. நமக்கு அவையெல்லாம் ஒரு மதிப்பெண் வினா-விடையாகவே தெரிகிறது. மின்னணு மயமான வாழ்க்கையில் தொன்மையின் தொடர்ச்சியை அறிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி மலைக்கு பசுமைநடைப் பயணமாக ஏப்ரல் 25, 26 என இருநாட்கள் சென்றோம்.

எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித்தீ என்னும் நாவல் மழையோடு தொடங்கி மழையோடு முடியும். அதற்கிடையில் சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கை முறைகள், நெசவுத்தொழிலாளியின் பிரச்சனைகள் என பல விசயங்களைச் சொல்லும் அருமையான நாவல். அதுபோல தாண்டிக்குடிக்கு கிளம்பிய அன்று மதுரையில் நல்ல மழை. திரும்பி மதுரை எல்லைக்குள் நுழைந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. இதற்கிடையில் இரண்டுநாட்கள் தாண்டிக்குடி மலையிலுள்ள தொன்மையான கற்திட்டைகள், கற்பதுக்கைகள், கல்வெட்டுகள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு வந்தோம்.

11148673_971643762880731_5516410691778609740_o

தாண்டிக்குடி பழமையான மலைக்கிராமம். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. அதன் தொன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் பசுமைநடைக்குழு தாண்டிக்குடி மக்களுடன் இணைந்து ஒரு வரலாற்றுக் கண்காட்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கண்காட்சியின் திறப்புவிழா ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது. அரசு அதிகாரிகளும், தாண்டிக்குடி பகுதியைச் சார்ந்த மக்களும், பசுமைநடைக்குழுவும் இணைந்து நடத்திய அந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

11174987_1056866707660356_996921274018563292_n

சித்திரை மாதத்தில் மழையோடான காலைப்பொழுதில் நனைந்து கொண்டே வீட்டிலிருந்து தாண்டிக்குடி கிளம்பினேன். ஒருவேளை மழை நிற்காமல் தொடர்ந்து வலுத்து விடுமோ என்ற அச்சமும் உள்ளூர இருந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கருகில் பசுமைநடை குடும்பத்தோடு இணைந்தோம். என்னுடன் எங்க வீட்டிற்கு அருகிலுள்ள சிறுவன் செந்திலும் வந்திருந்தான். லேசாக சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மதுரையிலிருந்து கிளம்பி நான்கு வழிச்சாலையை அடைந்தபோது மழை கொஞ்சம் வெறிக்கத் தொடங்கியது. வாடிப்பட்டி பகுதியில் செல்லும் போது அலங்காநல்லூர் வயிற்றுமலை, அதன்பின்னால் சிறுமலையெல்லாம் மிக ரம்மியமாகத் தெரிந்தன. மேகங்கள் தரையிறங்கி தவழ்ந்துகொண்டிருந்தன. உரையாடலும், அரட்டையுமாகச் சென்று கொண்டிருந்தோம். வத்தலக்குண்டில் தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து கோடைக்கானல் சாலையைப் பிடித்தோம்.

மழை பெய்திருந்ததால் பாறைகள் கருமையாகவும், மரங்கள் பசுமையாகவும் காட்சியளித்தன. மலையினூடாக அருவி ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சிலுசிலுவென குளிர்காத்தடிக்க வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மலையேறினோம். மேலிருந்து பார்த்த போது மஞ்சளாறு அணை அழகாக காட்சியளித்தது. சமீபத்தில் பெய்த மழையால் அணையில் நீர்மட்டம் உயர்ந்திருந்தது. பண்ணைக்காடு வழித்திரும்பிய பிறகு வழிநெடுக அடர்வனப்பகுதி மனதைக் கவர்ந்தது. அரிய வகை மரங்கள் ஆயிரக்கணக்கில் வழிநெடுக வரவேற்று நின்றது. அதன் உயரமும், கம்பீரமும் அவ்வளவு அழகு. பண்ணைக்காட்டைத் தாண்டி அமைதிப்பள்ளத்தாக்கு வழி சென்றபோது கொஞ்சம் அச்சமூட்டியது.

11155165_10204271231437139_1607651878632102591_o

பண்ணைக்காடு தாண்டி சங்கரன்பொத்து என்னுமிடத்தில் காலை உணவாக எல்லோரும் இட்லி, சாம்பார், சட்னியுடன் நிறைவாக உண்டோம். அங்குள்ள கற்திட்டைகளைக் காண குழுவாகச் சென்றோம். மூவாயிரம் ஆண்டுப்பழமையான கற்திட்டைகளின் தொன்மை தெரியாமல் அந்த இடம் கேட்பாரற்று கிடக்கிறது. தஞ்சைப் பல்கலையில் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் செல்வக்குமார் அவர்களை பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். செல்வக்குமார் அவர்கள் அந்த இடம் குறித்து பேசினார்.

11187785_10204271220716871_5302694132642343351_o

11187181_10204271233717196_4166417828271677784_o

உலகமயமாக்கச் சூழலில் இயற்கையோடான உறவு சிதைந்துவரும் வேளையில் அதை மீட்கும் பணியை பசுமைநடை செய்து வருகிறது. மூவாயிரம் ஆண்டுப் பழமையான இந்த கற்திட்டைகள் அக்கால மனிதர்களின் ஈமச்சின்னங்கள். இதை சிலர் அக்காலமனிதர்களின் வீடு என்று சொல்கின்றனர். அது தவறு. இவை இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள்தான். இவை தனியாக அல்லது நாலு அல்லது எட்டு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. பார்க்க பந்தல் போல நாலுபக்கமும் கல்ஊன்றி அதன் மேலே பெரிய கல் போட்டிருக்கிறார்கள். இதை மக்கள் ஒன்றிணைந்து செய்திருக்கிறார்கள். சமூக அடுக்குகளுக்கு ஏற்ப இதன் உயரமும், அளவும் காணப்படுகிறது. இறந்தவர்களை அப்படியே இதனுள் வைக்கவில்லை. அவர்களை புதைத்த இடத்திலிருந்து எடுத்தவைகளைத்தான் வைத்திருக்கிறார்கள். எரிக்கும் இடத்தை சுடுகாடு என்றும், புதைக்கும் இடத்தை இடுகாடு என்றும் சொல்வார்கள். நிலப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது போல இதுபோன்ற மலைப்பகுதிகளில் கற்திட்டைகள் மற்றும் கற்பதுக்கைகள் காணப்படுகிறது. ஐரோப்பாவிலும் இதே போல ஒரே காலகட்டத்தை சேர்ந்த கற்திட்டைகள் காணப்படுவது ஆச்சர்யத்தைத் தருகிறது என பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் கூறினார். ஐரோப்பாவில் இதுபோன்ற இடங்களைக் காண்பதற்கு நாம் பணம் கட்டிச்செல்ல வேண்டும். ஆனால், இங்கோ இதுபோல் உள்ள இடங்களின் அருமை தெரியாமல் இருப்பதையும் நாம் சிதைத்து வருகிறோமென்ற அ.முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டார். அருகிலுள்ள மலையில் காட்டெருதுகள் மூன்று நிற்பதைப் பார்த்தோம்.

11154777_10204271223316936_4670881532674342049_o

11202828_697347867042105_6307081310750535925_o

அங்கிருந்து தாண்டிக்குடி சென்றோம். நாங்கள் தங்கிய பெரிய இல்லத்தில் உடமைகளை வைத்து விட்டு மதிய உணவு அருந்தினோம். உணவை முடித்துவிட்டு பசுமைநடை நண்பர்கள் எல்லோரும் தாண்டிக்குடி நாகம்மாள் நடுநிலைப்பள்ளியில் வரலாற்றுக் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளைச் செய்தோம். இருக்கைகளை ஒழுங்குபடுத்துவது, தட்டிகளில் படங்களை மாட்டுவது போன்ற வேலைகளை குழுவாகச் செய்தோம். விரைவாக வேலையை முடித்துவிட்டு தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினோம். அங்கிருந்து காபி ஆய்வகத் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள கற்பதுக்கையைப் பார்த்தோம். தாண்டிக்குடியை சேர்ந்த மோகனசுந்தரம் அய்யா அவர்கள் அந்த இடம் குறித்த வரலாற்றைச் சொன்னார்.

10985224_971644286214012_8576432436391517129_n

தாண்டிக்குடி பகுதி முன்பு ஆயக்குடி ஜமீனில் இருந்தது. ஆயக்குடி வழியாக முன்பு தாண்டிக்குடி பகுதிக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஊர் பழங்கள் விருப்பாச்சி சந்தையில் விற்பனையாகியுள்ளது. தாண்டிக்குடியில் முன்னர் ஏலம், மிளகு போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். இப்போது காப்பிச்செடிகள், வாழை மற்றும் காய்கறிகளைப் பயிர் இடுகின்றனர். தாண்டிக்குடி மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கற்திட்டைகள் காணப்படுகின்றன. அவைகளை அப்பகுதி விவசாயம் செய்யும் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். காப்பித்தோட்டத்தில் உள்ள கற்பதுக்கையில் உள்ளே ஒரு ஐந்தடி நீள இரும்பு வாள் இருந்தது. தஞ்சை பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்த போது கண்டறிந்துள்ளனர்.

மாலை தாண்டிக்குடிப் பகுதியில் உள்ள தேநீர் கடைப்பக்கம் சென்றோம். பணியாரம் சூடாக சுட்டுக்கொண்டிருந்தனர். வாங்கி தேங்காய் மற்றும் தக்காளிச் சட்னியுடன் பிணைந்து சாப்பிட்ட போது ஏற்பட்ட திருப்தியை எழுத்தில் பதிவது கடினம். அங்குள்ள கடையில் தேநீர் குடித்துவிட்டு வீதியில் உரையாடிக்கொண்டிருந்தோம்.

11041959_697397520370473_1976992642507210253_o

அங்குள்ள விவசாயப் பெருங்குடிமக்களிடம் பேசியபோது வனவிலங்குச் சரணாலயம் அமைக்கப்பட்டால் அதனால் தங்கள் அன்றாட வாழ்க்கைப் பாதிப்புக்கு உள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில் பேசினர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட நிலங்களை அவர்களால் விற்க முடிந்ததாம். 1915ல் போடப்பட்ட சட்டம் நிலங்களை விற்க முடியாமல் செய்தது. அதன்பின் கொஞ்சம், கொஞ்சமாக அவர்களின் உரிமைகளைப் பறித்து இப்போது 2013ல் வனவிலங்குச்சரணாலயமாக்க போகிறோம் என்ற பெரும்பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது அரசுஅமைத்த குழு.

சோலைக்காடுகளில் நல்ல மரங்களை அழித்துவிட்டு யூகலிப்டஸ் நட்டிருக்கிறார்கள். யூகலிப்டஸ் மரம் ஒரு நாளைக்கு 120லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 7500 ஹெக்டேருக்கு யூகலிப்டஸ் நட்டிருக்கிறார்கள். மேய்ச்சல்நிலம் உள்ள பகுதிகளில் மாடுமேய்க்ககூட தினம் 5ரூபாய் கேட்க சமாளிக்க முடியாமல் கால்நடைகளையெல்லாம் விற்றுவிட்டோம். இப்போது காட்டெருதுகள் வந்து எங்கள் செடிகளை அழித்துக் கொண்டிருக்கிறது. ஆதிவாசிமக்களான பளியர்களையும் காட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். ஆதிகுடிகளுக்கு காட்டின் அருமை தெரியும். மரங்களை வெட்ட மாட்டார்கள். அன்றைய தேவைக்குப் போக உணவைக் கூட அதிகம் சேமித்து வைக்க மாட்டார்கள். இப்படி 1983க்கான வனச்சட்டம் எங்களை படுத்தியெடுத்துவிட்டது என விவசாயிகள் புலம்புகிறார்கள்.

11076751_971644846213956_4501710961671915525_o

11109147_971645152880592_1637569893603468897_o

அன்றிரவு மலைக்கிராமத்தில் உறங்கியது மறக்கமுடியாத அனுபவம். காலை எழுந்து மலைச்சிகரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்தச் சென்றது நன்றாகயிருந்தது. தாண்டிக்குடி நடுநிலைப்பள்ளிக்கு சென்று தாண்டிக்குடி வரலாற்றுக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தோம். விழாவை மாவட்டத் துணை கண்காணிப்பாளர் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பசுமைநடைக்குடும்பத்தினர் பங்கேற்றனர். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடைப்பயணம், மலைகள், கற்திட்டைகள் பற்றி விரிவாகப் பேசினார். வரலாற்றுக் கண்காட்சி குறித்து தனியொரு பதிவில் காண்போம்.

11157395_971646519547122_867927186693879419_o

விழா இனிதே நிறைவடைந்ததும் தங்கிய இடம் சென்று மதிய உணவருந்தினோம். அங்கிருந்து தாண்டிக்குடி முருகன் கோயில் சென்றோம். அங்கிருந்து பார்த்தால் நெடும் மலைத்தொடர்களும், தாண்டிக்குடி ஊரும் மிக அழகாகத் தெரிந்தது. எல்லோரும் குழுவாகப் படமெடுத்துக் கொண்டோம். முருகன் கோயில் செல்லும் வழியில் பழங்குடிகளான பளியர்களின் எளிமையான குடிசைகளைக் கண்டோம். மேலும், ஆங்காங்கே காணப்பட்ட கற்திட்டைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். பசுமைநடைப் பயணம் குறித்த அனுபவங்களை வந்திருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியாக கூறினர். முதல்நாள் மாலை வேளைகளில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலை ஐந்து மணிப்போல மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து கொண்டு தாண்டிக்குடியிலிருந்து மதுரை நோக்கி கிளம்பினோம். தாண்டிக்குடி வரலாற்றுக் கண்காட்சி திறப்புவிழா தொடங்கி பயணம் வரை சிறப்பாக ஒருங்கமைத்த முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. மதுரையை நாங்கள் நெருங்கியது மழை பிடித்துக் கொண்டது. மலை பிடித்தவர்களுக்கு மழை பிடிக்காதா என்ன?

11203675_971644206214020_2136404239326098810_o

படங்கள் உதவி – ராஜன்னா, அருண், வஹாப் ஷாஜகான், ஜெயவேல்

CIMG1876

இயற்கை எழிலும், வனப்பும் சூழ்ந்த மலைத்தொடர்கள் மலைகளின் அரசி, மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும்போது மலைகளின் அரசன் யாரென்று தெரியுமா? பார்க்கப் பார்க்கச் சலிக்காத அழகும், கம்பீரமும் ஒருங்கே கொண்ட மதுரை யானைமலைதான் மலைகளின் அரசன். உலகிலேயே நீண்ட ஒற்றைமலைகளில் யானைமலையும் ஒன்று.

திருமால் முல்லைநிலத் தெய்வம். அழகர்மலைக் காட்டில் வாழும் தெய்வம். காடு, மலைகளைக் காக்க காளமேகமாய் திருமோகூரில் வீற்றிருக்கும் தெய்வம். கூப்பிட்ட குரலுக்கு தம் அடிவரை நோக்கி ஓடிவரும் தெய்வம். யானையைக் காக்க சடுதியில் பறந்து வந்த தெய்வம்.

மாசி மகத்தை ஒட்டி பெருமாள் கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், அழகர்கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில்களில் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. யானைக்கு முக்தியளித்த கஜேந்திரமோட்சலீலையை மாசித்திருவிழாவையொட்டி நிகழ்த்துகின்றனர்.

அழகர்கோயிலில் பார்க்கலாமென்றாலும் யானைக்கு முக்தியளித்த லீலையைக் காண யானைமலை நரசிங்கம் போகலாமென்று முடிவெடுத்தேன். அதுவும் திருமோகூரிலிருந்து காளமேகப்பெருமாள் யானைமலைக்கு வருகிறாரெனும்போது நாம் போக வேண்டாமா?. யானைமலையை மேகமாய் தழுவி மழை பெய்யச் செய்யும் காளமேகப்பெருமாள் திருவிழாவுக்கு வரும் போது காண வேண்டாமா?

நரசிங்கம் சாலையில் பலமுறை பயணித்திருக்கிறேன். விழாநாளில் அலைவது கொண்டாட்டமான அனுபவமல்லவா. அதுவும் திருமோகூர் காளமேகப்பெருமாளை வரவேற்று யானைமலை பின்னணியில் நரசிங்கப்பெருமாள் படத்துடன் நிறைய பதாகைகள் வைத்திருந்தார்கள்.

 CIMG1871

நரசிங்கம் தோரணவாயிலுக்குள் திருமோகூர் காளமேகப்பெருமாள் நுழையும்போது பார்த்தேன். பெருமாளைத் தொழுது பல்லக்கு வந்த வாகனத்துடன் சென்றேன். நள்ளிரவில்தான் கஜேந்திரமோட்ச லீலை நடக்குமென்றும், அதன்பின் கருட வாகனத்தில் கோயிலுக்கு செல்வாரென்று கோயில்பணியாளரிடம் கேட்டறிந்தேன். சிறுவர்கள் வெகுஉற்சாகமாக டயர்வண்டியில் வைத்து காளமேகப்பெருமாளை ஊருக்குள் அழைத்துச் சென்றனர்.

CIMG1880

நரசிங்கம் சாலை முழுக்க உற்சாக வெள்ளமாகயிருந்தது. ஆங்காங்கே தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்கள். பெரும்பாலான இடங்களில் ஆரஞ்சு, திராட்சை சுவை மற்றும் வண்ணங்களில் செயற்கை குளிர்பானங்களையே வழங்கினர். இது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. நம் முன்னோர்கள் வெயிலுக்கு இதமாய் வழங்கிய அற்புதக் கொடைகளான நீர்மோரையும், பானகத்தையும் விட்டு நாவின் சுவைக்கு பழகி தண்ணிரைக் கூட குடிக்க மறுக்கிறோம்.

CIMG1889

நரசிங்கத்தில் ஆங்காங்கே திருக்கண்களை எல்லாம் அழகாய் அலங்கரித்து அலங்காரனுக்காக காத்திருந்தார்கள். வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு காளமேகப்பெருமாள் வருகைக்காக காத்திருந்தார்கள். தீபங்களை ஏற்றி திருமோகூரானுக்காக காத்திருந்தார்கள். காத்திருந்த அடியவர்கள் மனங்குளிரும் வண்ணம் மாலழகன் வந்து கொண்டிருந்தார். திருமாலிருஞ்சோலைமலையழகன் மதுரை நோக்கி வருவது போல கள்ளர் வேடமிட்டு கரியமாலழகன் வந்து கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டங்கூட்டமாக சாலைகளில் அலைந்து கொண்டிருந்தனர். இரவை பகலாக்கும் விளக்குகளும், விதவிதமான தின்பண்டங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களும், இராட்டினங்களும் என வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தோம். ஜாலியாக கம்ப்யூட்டர் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தோம். மிளகாய் பஜ்ஜி வாங்கித் தின்றோம். உடன்வந்த தம்பி கனசதுரம் ஒன்றை வாங்கினான்.

CIMG1891

CIMG1894

யானைமலை கருமையாய் மறைந்திருக்க மேலே வானம் அடர்நீலமாகயிருந்தது. நம்பிக்கை ஒளியாய் நிலவொளி மெல்ல யானைமலை முகட்டில் பரவத்தொடங்கியது. அடர்நீலவானம் வெண்நீலவானமாகத் தொடங்கியது.

CIMG1911

திருமோகூரான் யானைமலை நரசிங்கப்பெருமாள் கோயில் முன்வர அவரைக் காண சந்திரன் ஓடோடி வந்தான். அற்புதமான தரிசனம். முழுநிலவு யானைமலைக்கு மேலே ஒளிர ஒருபுறம் திருவிழா என கொண்டாட்டமாகயிருந்தது.

CIMG1898

கோயில் முன்புள்ள ஒரு திருக்கண்ணில் யானை மற்றும் முதலை பொம்மைகளை வைத்திருந்தனர், இறைவனின் அருளை நாடகமாக நிகழ்த்திக் காட்டுவதற்கு. யானை காலை முதலை கவ்வியிருக்க, யானை கூப்பிய தும்பிக்கையோடு திருமாலை நோக்கியிருக்க, அடியவர் துயர் தீர்க்க இன்முகத்தோடு வரும் பெருமாளை பக்தியோடு கருடாழ்வார் சுமந்திருக்கும் திருக்காட்சி சித்திரமாய் வைத்திருந்தனர். எல்லாவற்றையும் பார்த்தோம். அங்கிருந்து தாமரைக்குளம் நோக்கி நடந்தோம். அங்குள்ள ஒரு மண்டபத்தில்தான் இரவு காளமேகப்பெருமாள் வீற்றிருக்க குளக்கரையில் இந்நிகழ்வை நிகழ்த்துவார்களாம்.

CIMG1908

காளமேகப்பெருமாள் ஒவ்வொரு திருக்கண்ணாக நோக்கி வர அவருக்கு முன்பாக கோயில் நாயனகாரும், மேளக்காரரும் வாசித்துக் கொண்டு வந்தனர். பெட்ரோமாக்ஸ் தூக்கி வந்த பெரியவர்கள், திரி பிடித்த வந்த இளைஞர்களைப் பார்த்தேன். திருவிழா நடக்கும் இடங்களுக்கெல்லாம் விளையாட்டுச் சாமான்களையும், பீமபுஸ்டி அல்வாக்கடைகளையும் சரியாகக் கொண்டுவந்து போடுபவர்களுடன் நானும் ஐக்கியமாக விரும்புகிறேன். திருவிழா திருவிழாவிற்கு ஊர் ஊராய் சுற்றித் திரியணும் போலிருக்கிறது.

CIMG1879

CIMG1893

அழகர்கோயில் நூலில் தொ.பரமசிவன் அய்யா கஜேந்திர மோட்சத்திற்கு திருமால் கள்ளர் வேடமிட்டு வருவது குறித்து எழுதியிருக்கிறார். கி.பி.1700களில்  திருமோகூர் கோயிலில் உள்ள விக்கிரகங்களை ஆற்காடுநவாப் படைகளும், ஆங்கிலேயப் படைகளும் சேர்ந்து கொள்ளையடித்துச் செல்ல கள்ளர்கள் அந்த விக்கிரங்களை மீட்டுக் கொண்டு வந்து கொடுத்தனராம். அதற்காக திருமோகூர் கோயிலில் தேரிழுக்கும் உரிமையையும், கஜேந்திர மோட்சத்திற்கு கள்ளர் வேடமிட்டு பெருமாள் வருவதையும் செய்தார்களாம்.                    (நன்றி – தொ.பரமசிவன்)

கஜேந்திர மோட்சம் திருவிழா பார்த்தாச்சு. கள்ளர் வேடமிட்டு வருவது குறித்தும் அறிந்தாச்சு. கஜேந்திரன்னா யானைன்னு நமக்குத் தெரியும். எதற்காக இதைக் கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?. கஜேந்திர மோட்சம் குறித்த கதையை இளம்பிராயத்தில் கேட்டிருக்கிறேன். சமீபத்தில் தமிழ் இந்துவில் ஆனந்தஜோதியில் இதைக் குறித்து கொஞ்சம் வாசித்தேன். கேட்ட கதையையும், வாசித்த கதையையும் சேர்த்துச் சொல்கிறேன்.

மன்னனொருவன் திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன். எந்நேரமும் திருமாலின் திருநாமத்தையே சுவாசித்துக் கொண்டிருப்பவன். ஒருமுறை தன்னை மறந்து பக்தியில் திளைத்திருந்த வேளையில் கோவக்கார முனிவர் துர்வாசர் வந்துவிடுகிறார். மன்னனோ மாலழகனின் நினைப்பில் கண்டுகொள்ளாமலிருக்கிறார். மதங்கொண்ட யானையாகப் போவென சாபமிடுகிறார். பின் மனமிறங்கி திருமாலே வந்து உனக்கு மோட்சமளிப்பார் என்று சாபவிமோசனம் சொல்கிறார். மதங்கொண்ட யானையாய் மன்னன் பிறந்தாலும் திருமால் மீது பக்தி கொண்டிருக்கிறார்.

thirumohoor

ஒரு குளத்தில் வந்து போனவர்களையெல்லாம் இழுத்து வம்பிழுத்த அரக்கன் அகத்திய மாமுனியிடம் தன் விளையாட்டை காட்ட அவர் முதலையாகப் போக சாபமிடுகிறார். பின் திருமாலால் மோட்சம் கிடைக்குமென வரமும் தருகிறார். முதலை குளத்திலிருப்பதால் எந்த விலங்கும் நீரருந்தக்கூட வருவதில்லை. ஒருமுறை மதங்கொண்ட யானை இந்தப்புறம் வந்து குளத்திலிருந்த பூவை பெருமாளுக்கு பறிக்க, முதலை யானை காலைக்கவ்வ, வலியில் ஆதிமூலமே என யானைப் பிளிற, திருமால் ஓடோடி வருகிறார். கருடன் வந்து திருமாலை சுமக்க சக்கரத்தை ஏவி முதலையைக் கொள்கிறார். யானையும், முதலையும் மோட்சம் அடையும் இந்த திருலீலை கஜேந்திர மோட்சம் என்றழைக்கப்படுகிறது. இதை கேட்பவர்கள், படிப்பவர்களுக்கு இறுதிக்காலத்தில் இடர் வராது என்பது நம்பிக்கை. நல்லதுதானே.

sanjaram1

வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் நையாண்டி இசை காதில் ஒலித்தது நல்ல நிமித்தமாகயிருந்தது.

சஞ்சாரம் (5)மனித மனத்தில் நற்குணங்களைப் போன்றே வன்மம், ஆணவம் போன்ற உணர்ச்சிகளும் புதைந்திருக்கிறது. நேரங்கிட்டும் போது வெளிப்பட்டு நம்மைப் படுத்தியெடுத்துவிடுகிறது. நையாண்டி மேளம் இசைக்கும் போது ‘அத அடி இத அடி’ என ஆணவமாக வந்து சொல்லி அதட்டுபவர்கள் கொஞ்ச நேரத்தில் இசைக்கேற்ப ஆடியாடி இசைக்கு பொட்டிப் பாம்பாகிவிடுகிறார்கள். ‘நான்’ என்ற எண்ணம் அற்றுப் போகும்போது காற்றில் சருகு போலாகிவிடுகிறது மனம். இசை இதுபோன்ற எல்லா மாயங்களையும் செய்யும். வேடிக்கை பார்ப்பவர்கள் கூட ஆட வேண்டுமென்ற உணர்வைத் தருவது நையாண்டிமேள இசை.

சஞ்சாரம் நாவல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்ததைக் குறித்தும், அந்நாவல் வாசிப்பனுபவம் பற்றியும் அண்ணனிடம் அலைபேசியில் உரையாடும் போது 280வது பக்கத்திலுள்ள ஒரு வரியைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதை ஏன் கேக்குறே, பாப்பாகுடியில் வாசிக்கப் போயிருந்தோம், வேற ஒரு கீர்த்தனையும் வாசிக்க விடலை, ஆளுக்கு ஒரு சினிமா பாட்டு கேட்கிறான், ஒரே சண்டை உடனே எனக்கும் சஞ்சாரம் வாசிக்கணும் போலிருந்தது. ஏன்னா எங்க ஊரு பேரும் பாப்பாகுடிதான். அது மாதிரி சினிமா பாட்டா கேட்டு ‘அத அடி, இத அடி’ன்னு உயிர எடுப்பாங்ங.

நாதஸ்வரம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பாடுகளினூடாக கரிசல்காட்டு ஊர்கள், நாதஸ்வர சக்ரவர்த்திகள், மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் சாதியப் பாகுபாடுகள் எனப் பல விசயங்களை சஞ்சாரம் நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். எஸ்.ரா பிறந்த வளர்ந்த ஊர்ப்பக்கத்துக் கதையென்பதால் நம்மையும் கரிசல்காடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.

சஞ்சாரம் (2)முதல்அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது

சூலக்கருப்பசாமி வேட்டைக்கு போவதற்கு யார் வில் எடுத்துக் கொடுப்பது என்ற அதிகாரங்களுக்கிடையேயான போட்டியில் சம்மந்தமில்லாமல் நாயனகாரர் ரத்தினத்தின்மீது அடி விழுவதோடு நாவல் தொடங்குகிறது. இதைப் பார்த்த இளம்நாயனகாரனான பக்கிரிக்கு கோவம் வருகிறது. பக்கிரி எதிர்க்க இருவரையும் கட்டி வைத்து அடிக்கிறார்கள். இரவில் பூசாரி அவிழ்த்துவிட தப்பித்துச் செல்லும் போது பந்தலில் தீ வைத்துவிட்டு கொடுமுடியிலுள்ள அக்கா வீட்டுக்கு பக்கிரியும், ரத்தினமும் செல்கிறார்கள். இறுதியில் காவலர்கள் வந்து பக்கிரி கைதாவதோடு கதை நிறைவுறுகிறது.

நாவலினூடாக வரும் மக்களிடம் செவிவழியாய் புழங்கும் கதைகள் நம்மை கட்டிப் போட்டுவிடுகின்றன. கரிசல்காட்டு பக்கம் பிடிபட்ட திருடனுக்கு ஏழுநாள் ஏழுவீட்டுச் சாப்பாடு தண்டனையாக தர அவன் நாலு நாளிலே மனம் மாறி விடுகிறான். பசியோடு இருக்கும் குடும்பத்தை நினைக்கிறான். ஊரில் உள்ள பாட்டி சொல்லும் வரி மனதை நெகிழ்த்தி விடுகிறது. மனுசனுக்குக் கொடுக்கிற தண்டனையிலே எது பெரிசு தெரியுமா, பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றைத் திங்குறதுதான். பிறகு அந்த திருடனுக்கு கொஞ்சம் உணவுப் பொருட்களையும் கொடுத்தனுப்புகிறார்கள்.

கரிசல்கிராமங்களில் வரும் ஊரோடிப்பறவைகள் மக்களிடம் மண்ணு வேணுமா? பொன்னு வேணுமா? எனக்கேட்க மண்ணைக் கேட்டபோது மழை பெய்ய வைத்து ஊரைச் செழிப்பாக்குகின்றன. அடுத்து வரும் ஊரோடிப் பறவைகளிடம் மக்கள் நிறைவில் பொன் வேண்டுமென கேட்க தரையிறங்காமல் தத்தளிக்கின்றன. மழையில்லாமல் ஊரே வறண்டு விடுகிறது. இறுதியில் வரும் ஒரு ஊரோடிப் பறவையிடம் மண் கேட்க அது ஒரு துளி நீரைத் தருகிறது. அந்நீரில் துளிர்க்கும் வேம்பு கரிசலின் மரமாகிறது. அதன்பிறகு ஊரோடிப் பறவைகள் வருவதேயில்லை. மக்களுக்கு நாதஸ்வர இசை, ஊரோடிப் பறவைகளின் றெக்கையடிப்பை நினைவூட்டுகிறது.

மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது எல்லோரும் ஓடிவிட அரட்டானம் சிவன் கோயிலில் தனியே நாதஸ்வரம் வாசிக்கும் லட்சய்யாவின் கதை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. நாதஸ்வர இசைக்கு மயங்கும் மாலிக்காபூர் அவரை அழைத்துக் கொண்டு டெல்கி கில்ஜியிடம் கூட்டிச் செல்ல லட்சய்யாவின் இசையில் வரும் பிரிவின் துயரம் எலுமிச்சை வாசனையாய் பரவுகிறது. மாலிக்காபூர் இறக்க வடக்கே பெரும் குழப்பம் நிலவுகிறது. லட்சய்யா கொலை செய்யப்படுகிறார். அதன்பின் வடக்கே நாதஸ்வரம் செல்லமுடியவில்லை என்ற கதை நம் நாதஸ்வரத்தின் பெருமையை பறைசாற்றுகிறது. இது நடந்த கதையா, புனைவா எனத் தெரியவில்லை என எஸ்.ரா. குறிப்பிடுகிறார்.

சஞ்சாரம் (4)நாதஸ்வர இசைச்சக்கரவர்த்திகளாக வாழ்ந்த மேதைகளை நினைவூட்டுகிறார்கள் கதையினூடாக வரும் ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்றவர்கள். பெரும் இசை மேதைகள் தங்களுக்கு விருப்பமான நேரங்களில் நாத மழையாய் பொழிகிறார்கள். மற்றவர்களை தங்கள் இசைக்காக காத்திருக்க வைக்கிறார்கள். ஆனால், நையாண்டி மேளக் கலைஞர்கள் தவிலையும், நாயனத்தையும் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அரசியல் பிரச்சாரம், திருமணவீடுகள், கோயில் விழாக்கள் என எங்கு சென்றாலும் அவமதிப்புக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகிறார்கள். பேசிய தொகையை கொடுப்பதில்லை, பந்தியில் எல்லோருடனும் சமமாய் உணவருந்த விடுவதில்லை, சாதியப்பாகுபாடுகள் என வலியை சுமந்து கொண்டு இசையோடு வாழ்கிறார்கள்.

சஞ்சாரம் (3)மருதூர் மடத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்து இசை கற்றுக் கொள்ளும் ஹாக்கின்ஸ் திருவிழாவில் மல்லாரி வாசிக்க விரும்புகிறார். தமிழ்ப்பெண் ஒருவரை காதல்மணம் புரிந்து மடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இஸ்லாமியராகயிருந்தாலும் கோயிலிலிருந்து ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கு மயங்கி அதைக்கற்று பின்னாளில் அதேகோயிலேயே கச்சேரி செய்யுமளவு உயரும் அபு இபுராஹிம், போலியோவினால் கால்கள் தளர்ந்தாலும் மனந்தளராத இசைக்கலைஞர். மேலும், இசைக்கு மொழியோ, மதமோ என குறைவில்லையென்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு சான்றாக அமைகிறது.

ஒருமுறை ரத்தினம் குழுவினரை ஒருவன் நாதஸ்வரம் வாசிக்க வெளிநாடு அழைத்துச் செல்கிறான். அந்த பயணத்தில் அவர்கள் படும் அலைக்கழிப்புகள் ஏராளம். லண்டனில் குளிரில் கார்ஷெட்டில் தங்க வைப்பது, இங்க வாசிச்சா நிறைய தருவாங்கன்னு பார்ட்டி நடக்கிறயிடம், ஷாப்பிங்மால்னு வாசிக்கச் சொல்லி கடைசியில் ஊருக்குப் போய் பணம் தருகிறேன்னு சொல்லி ஏமாற்றி விடுகிறான். கலைக்கு மரியாதையில்லாமல் கண்டவனெல்லாம் ஏய்க்கும் நிலையில் வாழ்க்கிறார்கள்.

தவிலையும், நாதஸ்வரத்தையும் பலமணிநேரம் சுமந்து கொண்டு காற்று, மழை, வெயிலென அலைகிறார்கள். மணிக்கணக்கில் வாசித்து வலிதீர குடிக்கிறார்கள். விழாக்கால நாட்கள் தான் வேலை, மற்ற நாட்களில் ரொம்ப சிரமப்படுகிறார்கள். எப்போதும் கடன்பட்டு கஷ்டப்படும் தவில்கலைஞர் தண்டபாணி நான்கு பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறார். இப்படித்தானிருக்கிறது நிலைமை.

சஞ்சாரம் (1)நையாண்டி மேளக்காரர்கள் பாடு இப்படியென்றால் கரகாட்டம் ஆடும் பெண்களின் நிலை இன்னும் மோசம். பார்க்கிறவர்களின் வக்கிரங்களுக்கு பலியாவதுடன், கூப்பிட்டால் வரணும் என நினைப்பவர்களிடையே மானத்தோடு வாழப் போராடுகிறார்கள். இக்கதையில் வரும் ரஞ்சிதம் மற்றும் மல்லிகா என்ற கரகாட்டப்பெண்களுக்கு வாசிக்கப் போகும் ரத்தினமும் பக்கிரியும் அவர்கள் படும் பாட்டைப் பார்த்துவிட்டு காசு வாங்கிக் கொள்ளாமல் வந்துவிடுகிறார்கள்.

சிகரெட் காலி அட்டைகளை சேகரிக்க அருப்புக்கோட்டைக்கு போனது குறித்த பக்கிரியின் பால்யகால நினைவுகள் என்னையும் இளம்பிராயத்திற்கு அழைத்துச்சென்றது. அண்ணாநகரில் சில்லாக்கு விளையாடியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நெற்றியில் எதிர்பாராதவிதமாக வந்து தெறித்த சில்லாக்குக்கல் இன்று வரை சுவடாய் இருக்கிறது. அந்த வயதில் தீப்பெட்டி படம், பிலிம், குண்டு இவையெல்லாம் அதிகம் சேர்ப்பதுதான் பெரிய விசயமாகத் தோன்றியது. வயதாக வயதாக இன்று ஏதேதோ பெரியவிசயமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

நாதஸ்வரக்கலைஞர்களின் வாழ்க்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் சில திரைப்படங்கள் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், பருத்திவீரன். அதில் தில்லானா மோகனாம்பாள் சிவாஜிகணேசன் குழுவினர் நாவலில் வரும் இசைச்சக்கரவர்த்திகளைப் போன்றவர். மற்ற இரண்டு படங்களில் வரும் இசைக்கலைஞர்கள் நாவலில் வரும் ரத்தினம், பக்கிரி குழுவை நினைவுபடுத்துகிறார்கள். ஊரோரம் புளியமரம் மற்றும் பொங்கல் வைக்கும் காட்சிகளில் நையாண்டி மேளத்தை மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் அமீர். உன்னை நினைத்து படத்தில் வரும் சுந்தர்ராஜன் கதாபாத்திரமாகத்தான் ரத்தினம் வாசிக்கும்போது மனதில் தோன்றினார்.

Sanjaramநாவலை வாசித்ததும் மல்லாரியும், மோகனமும் கேட்க வேண்டுமென்ற ஆவல் வந்தது. பழனி பாதயாத்திரை செல்லும் போது மலையைச் சுற்றி வரும் போதுள்ள இசைப்பள்ளிகளில் தவில் கற்ற வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். தொலைநிலைக்கல்வி வழி என்னோடு தமிழ் இளங்கலை படித்த நண்பனொருவன் மதுரை இசைக்கல்லூரியில் நாதஸ்வரம் படித்துக் கொண்டிருந்தான். வகுப்பிற்கு செல்லும் நாட்களில் கோயில் மற்றும் விழாக்களில் வாசிக்கச் சென்ற அனுபவத்தைச் சொல்லுவான். மேலும், அவன் எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த மல்லாங்கிணற்றைச் சேர்ந்தவன். இப்போது அவனுடைய அலைபேசி எண்  இருந்தால் சஞ்சாரம் பற்றியும் நாதஸ்வர ராகங்கள் பற்றியும் அவனோடு பேசணும் போலிருக்கிறது. சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் கொஞ்சம் பார்த்தேன். இப்படி நாவல் வாசித்திலிருந்து மனம் தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டேயிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களைப் போல சஞ்சாரமும் மனதிற்கு மிக நெருக்கமான நாவலாகிவிட்டது.

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை வெளியீடு – விலை 370 ரூ

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

 – கலீல் ஜிப்ரான்

jibranartநாட்குறிப்பேட்டில் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை எழுதும் முன் படித்ததில் பிடித்த வரிகளை குறித்து வைப்பேன். ஜனவரி 5 க்கான நாட்குறிப்பேட்டின் முதல் பத்தியில் கலீல் ஜிப்ரானின் மேலேயுள்ள கவிதை வரிகளை குறித்துவைத்திருந்தேன். தி இந்து நாளிதழில் நடுப்பக்க கட்டுரைப் பார்க்கும் வரை ஜனவரி 6 கலீல் ஜிப்ரான் பிறந்ததினம் என்று தெரியாது. எதேச்சையாக ஜனவரி 5 இரவிலோ அல்லது ஜனவரி 6 காலையிலோ நாட்குறிப்பேடு எழுதும் போது கலீல் ஜிப்ரானின் கவிதையை நினைவுகூர்ந்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது.

kaleeljibranமுன்பு நர்மதா பதிப்பகம் வெளியிட்ட கலீல் ஜிப்ரானின் தத்துவக் க(வி)தைகள் என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். அந்நூலை எடுக்க அதிலிருந்த ஓவியங்களும் ஒரு காரணமாகயிருந்தது. கவிஞர் நாவேந்தன் இந்நூலை அழகாக மொழிபெயர்த்திருந்தார். அதில் எனக்கு பிடித்த வரிகளை குறித்து வைத்திருந்தேன். அதை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.  கலீல் ஜிப்ரான் சிறந்த ஓவியரும்கூட. அரபியிலும், ஆங்கிலத்திலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது தீர்க்கதரிசி என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய தத்துவங்களை கொஞ்சம் பருகலாம் வாருங்கள்.

  • jibran10மிகவும் வசதி படைத்தவர்களுக்கு இறைவன் உபசரிக்கட்டும்.
  • அதிகம் பேசுபவனைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்.
  • மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது.
  • இது மிகவும் வேடிக்கை…! சில இன்பங்களை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையே என் வலிக்கும் காரணமாக அமைகிறது.
  • நாம் அனைவருமே சிறைக்கைதிகள்தான்…!  சிலர் சிறைக்கம்பிகளோடு… சிலர் கம்பி இல்லாமலேயே…!
  • அடிமைச் சுமையைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனே உண்மையான சுதந்திர மனிதன்.
  • தோல்வியடைந்தவர்களைப் பார்த்து வெற்றியடைந்தவர்கள் கூறும் உபதேசத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
  •  ஒவ்வொரு மனிதனும் என்றோ வாழ்ந்த ஓர் அரசன் அல்லது அடிமையின் சந்ததி…!
  • நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!
  • உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.
  • இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது. நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்…!
  • அதிகம் பேசுபவன் குறைந்த அறிவு உடையவன்.. பேச்சாளிக்கும் ஏலம் போடுபவனுக்கும் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை…!
  • இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.
  • குற்றம் என்பது தேவையின் மறுபெயர்… வியாதியின் ஓர் அங்கம்…! மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட பெரிய குற்றம் ஏதுமில்லை…!
  • பூமியில் நடக்கும் அனைவருடனும் நான் நடக்க விரும்புகிறேன்…! ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது…!
  • நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!
  • உன் வாயில் உணவு நிறைந்திருக்கும் போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ள போது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்…?
  • வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்.
  • அவர்கள்… என்னை வாழ்நாளை சரியாக விற்பனை செய்யாத பைத்தியம் என நினைக்கிறார்கள். என் வாழ்நாளுக்கு விலை மதிப்பு உள்ளது என நினைக்கும் அவர்களை நான் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறேன்…!
  • நீ உண்மையில் கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்!
  • மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே எல்லைக்கோடு தெரியாது…! ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்குமிடையில் கல்லைப் பாரக்க முடியாது… ஆனால், மேகத்தின் மீது ஏறி அமர முடியாதது நமது துரதிஷ்டம்…!

 நன்றி – கவிஞர் நாவேந்தன், நர்மதாபதிப்பகம், தமிழ் இந்து நாளிதழ்

kaleel

2015

எனக்கு வழங்கப்பட்ட மீதியில் ஆதியிருந்தது – அந்த

ஆதியிலிருந்து மீதியை எழுதத் தொடங்கிவிட்டேன்

 – சித்திரவீதிக்காரன்

என்னை ஆளும் மதுரையையும், தமிழையும் வணங்குகிறேன். நாட்குறிப்பேட்டின் நீட்சியாக மதுரைவாசகன் வலைப்பூ மலர்ந்தது. இத்தளத்தில் இதுவரை பதிவேற்றிய 200 கட்டுரைகளின் தலைப்புகளோடு 2015 ஆம் ஆண்டின் முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

1.        சித்திர வீதிகள் 2.        புத்தகங்களோடு நான் 3.        அழகர்கோயில் தேரோட்டம்
4.        பாண்டி முனி 5.        தொ.பரமசிவன் அய்யாவிடம் பெற்ற கையொப்பம் 6.        காலச்சக்கரம் {திரை இசைப் பாடல்கள்}
7.        குன்றிலிருந்து குன்றம் நோக்கி 8.        மாவீரர் உரைகள்… நேர்காணல்கள்… 9.        சதுரகிரி பட்டிமன்றம்
10.     தேசாந்திரி      – எஸ்.ராமகிருஷ்ணன் 11.     தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன் 12.     வையைப்புனல்
13.     உயரப்பறத்தல் – வண்ணதாசன் 14.     மதுரையில் நாட்டுப்புறக்கலை விழா 15.     மனங்கவர்ந்த கலெக்டரின் உரை
16.     உள்ளானும் சுள்ளானும் 17.     சிவகாசி ரயில்நிலையமும் கூத்தும் 18.     சாத்தியார் அணையும் கல்லுமலைக் கந்தன் கோயிலும்
19.     துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்        {வாதைக்கும் மீட்சிக்கும் இடையேயான பயணம்} 20.     மழையோடு பாதயாத்திரை 21.     கானல் நதி – யுவன் சந்திரசேகர்
22.     காதல் கவிதைகள் 23.     தூங்கா நகரில் உற்சவ விழா 24.     தொ.பரமசிவன் உரை- உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்
25.     டம்மடும்மா டம்மடம்மடும்மா 26.     உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும் 27.     தலைவன் இருக்கிறான்        {சித்திரம்}
28.     எது கலாச்சாரம்?       – ச.தமிழ்ச்செல்வன் 29.     மதுரையில் சமணம் 30.     மதுரை கொங்கர் புளியங்குளமும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழ்பிராமி எழுத்துருவும்
31.     பம்பாயில பல்டியடிக்கிறவன் வேணுமா? டில்லியில டிமிக்கியடிக்கிறவன் வேணுமா? 32.     தொ.பரமசிவன் பார்வையில் தமிழ்ப் புத்தாண்டு 33.     மதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்
34.     மதுரை சமணமலை குறித்து மயிலைசீனி.வே & எஸ்.ராமகிருஷ்ணன் 35.     சமணமும் தமிழும் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி 36.     மதுரை சித்திரை திருவிழா நினைவுகளும் பழமரபுக்கதைப்பாடல்களும்
37.     மதுரை வீதிகள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் 38.     நகுலன் இலக்கியத்தடம் 39.     மதுரை சித்திரைப் பொருட்காட்சியும், சர்க்கஸும்
40.     ஜெயமோகனின் மத்தகம் 41.     நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகத்திருவிழா 42.     நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்
43.     வாசித்தபுத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும் 44.     அரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்படவேண்டும் 45.     மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை
46.     மதுரை அரிட்டாபட்டி மலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில் 47.     தமிழ்ச்சமணம் – தமிழ்ச்சமணனின் வலைப்பூ 48.     அரிட்டாபட்டிமலை எண்பெருங்குன்றங்களுள் ஒன்று – வெ.வேதாச்சலம்
49.     நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு 50.     இதயங்கவர்ந்த இடைக்காட்டூர் இருதயநாதர் 51.     மதுரை புத்தகத்திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகள்
52.     பஞ்ச பாண்டவ மலையில் பசுமைநடைப் பயணக்குறிப்புகள் 53.     அழகனைக்காண அலை அலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் 54.     மதுரை புத்தகத்திருவிழாவில் கவிஞர் தமிழச்சி
55.     மறக்க முடியாத ஆளுமை – ஜி.நாகராஜன் 56.     தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக சித்திரவீதிக்காரன் 57.     மிதமான காற்றும் இசைவான கடலலையும் ச.தமிழ்ச்செல்வன் கதைகளும்
58.     மறைந்துவரும் விளையாட்டுக்களும் மறக்காத நினைவுகளும் 59.     நாஞ்சில்நாடனின் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை 60.     நாட்டுப்புறக்கலைகள் அகமும்புறமும்
61.     மதுரை உலகின் தொன்மையான நகரம் 62.     காணாமல் போனேன் சாமியேய்… சரணம் ஐயப்பா! 63.     மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புக்கள்
64.     அணிகலன்களின் தேவதை 65.     சில நிகழ்வுகள் சில பகிர்வுகள் 66.     தமிழ்மணத்திற்கும், தமிழ்மனங்களுக்கும் நன்றி
67.     கதவைத்திற காற்றுவரட்டும் 68.     மின்வெட்டில் இருளும் மின்னுலகம் 69.     அன்பின்பாதை சேர்ந்தவனுக்கு
70.     சரக்குன்னா சரக்குதானா? 71.     அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் 72.     பசுமைநடை நட்சத்திரங்கள்
73.     கோணங்கி எனும் தேசாந்திரியின் பயணக்குறிப்புகள் 74.     மதுரையும் தொ.பரமசிவனும் 75.     மாவீரர்தினத்தில் மகாவீரரைக் காண…
76.     வண்ணநிலவனுடன் கடல்புரத்தில் 77.     திரும்பிப்பார்க்கிறேன் 2011 78.     விகடன் வரவேற்பறையில் சித்திரவீதிக்காரன்
79.     அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன் 80.     கலைப்பார்வையா, காமப்பார்வையா 81.     யானைமலையும் பசுமைநடையும்
82.     அருகி வரும் இசைக்குறிப்புகள் 83.     யானைமலையில் சமணம் 84.     தெப்பத்திருவிழா
85.     மதுரை விக்கிரமங்கலத்தில் பசுமைநடை 86.     பெண் என்னும் சுமைதாங்கி 87.     அன்னவாகனத்தில் அழகுமலையான்
88.     என்னைக்காக்கும் காவல்கோட்டம் 89.     காவல்கோட்டத்திலிருந்து 90.     வாழ்வு – வரலாறு – புனைவு
91.     மனதைக் கவர்ந்த காவல்கோட்டக்காரர்கள் 92.     அரவான் – காவல்கோட்டம் – அரிட்டாபட்டி 93.     அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்
94.     அழகர்மலையில் ஆதிகாலக் குகை ஓவியங்கள் 95.     அவ்வைநோன்பும் சில நம்பிக்கைகளும் 96.     மகுடேஸ்வரன் கவிதைகள்
97.     வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன் 98.     புரவியெடுப்பு 99.     சித்திரவீதி
100.  நன்றி 101.  முனிப்பாட்டு 102.  ஆடித்தேர்நடை ஆடியாடி
103.  பால்பன் அழைக்கிறது… பாலமேடு செல்கிறோம் 104.  மதுரை புத்தகத்திருவிழா 105.  வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
106.  கும்பமுனி 107.  குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல் 108.  ஆவணிக்கதைகள்
109.  வாசிப்புத்திருவிழா 110.  மாடக்குளக்கீழ் மதுரை 111.  இப்படியும் ஒரு சுற்றுலா
112.  இங்கும் ஒரு எல்லோரா 113.  அரைமலை ஆழ்வார் 114.  வீரசிகாமணி குடைவரை, குகை, கல்வெட்டு
115.  திருமலாபுரம் பாண்டியன் குடைவரை 116.  எதிர்பாராத தரிசனம் 117.  கமல்ஹாசனின் கானமழை
118.  திருச்செந்தூரின் கடலோரத்தில் 119.  சித்தர்மலையில் பசுமைநடை 120.  நான்மாடக்கூடலில்…
121.  நினைத்தாலே இனிக்கும் 122.  கொடும்பாளூர் மூவர்கோயில் 123.  குடுமியான்மலை குகையும் குடைவரையும்
124.  முந்நீர் விழவு 125.  மாமதுரை போற்றுவோம் 126.  சுங்கடி தினம்
127.  பூம்பூம் மாட்டுக்காரர் 128.  மணியாட்டிக்காரர்கள் 129.  தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா
130.  புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் 131.  திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை 132.  திருப்பரங்குன்ற மலையில் பசுமைநடை – பகுதி 2
133.  வைகை ரயிலாக மட்டும் ஓடினால்.. 134.  பக்தியாத்திரையா? ஜாலியாத்திரையா? தீனியாத்திரையா? 135.  கண்டதையெல்லாம் கவிதையென்று சொல்லாதே
136.  குன்றத்திலே குமரனுக்குத் தேரோட்டம் 137.  எனக்கு புத்தகம் பிடிக்கும் – உதயசந்திரன் 138.  அழகர்கோயில் – தொ.பரமசிவன்
139.  எனக்குப் பிடித்த பிரகடனம் 140.  பறவைக்கோணம் – எஸ்.ராமகிருஷ்ணன் 141.  மதுரை வீதிகளில் பசுமைநடை
142.  ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம் 143.  பாண்டியனின் சமணப்பள்ளியில் 144.  தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி
145.  மதுரையில் இஸ்லாம் 146.  தோல்பாவைக்கூத்து 147.  நிறைகண்மாய் சிலுசிலுப்பு
148.  பகல்வீடு தன்னில் உயிர்வாழ ஒரு மரம் 149.  விருட்சத் திருவிழா அழைப்பு 150.  எழுத்தாளுமைகளுடன் பசுமைநடை
151.  பகல்வீடு மின்னூலை தரவிறக்க… 152.  மதுரையில் 8-வது புத்தகத்திருவிழா 153.  மதுர வரலாறு
154.  தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் 155.  தென்பறம்பு நாட்டுத் திருவாதவூரில் பசுமைநடை 156.  ஐந்து கருட சேவை
157.  நான் நானாக நாலுவிதம் 158.  யாரோ எழுதிய கவிதை 159.  தீபாவளி நாயகனைக் காண..
160.  கமலின்றி அமையாது கலை உலகு 161.  சேரன் பாண்டியன் பெருவழித்தடம் 162.  பகல்வீட்டின் சாளரங்கள் – வயிற்றுக்கும் ஈயப்படும்
163.  பகல்வீட்டின் சாளரங்கள் – சொல்புத்தி 164.  பகல்வீட்டின் சாளரங்கள் – தாய்மொழி வழிக்கல்வி காந்தியடிகள் 165.  நெடுஞ்சாலை – வாழ்க்கைப் பயணம்
166.  நினைவோ ஒரு பறவை 167.  காரி 168.  திருப்பரங்குன்றம் போற்றுவோம்
169.  அனிமல் லவ்வர்ஸ்க்கு அன்பான அழைப்பு 170.  சமணமலை – அகிம்சைமலை – தமிழர்மலை 171.  வேர்தேடும் பயணத்தில் விரல்பற்றி அழைத்துச் செல்பவர்
172.  பயணங்களே கசடுகளைப் போக்கும் – அ.முத்துக்கிருஷ்ணன் 173.  திருப்பரங்குன்றமும் சிக்கந்தர் தர்ஹாவும் 174.  மாதங்களில் நான் சித்திரை
175.  சொக்கப்பனையும் பூரொட்டியும் 176.  விக்ரமாதித்யன் கவிதைகள் 177.  சங்கத்தமிழுக்கு என்றும் அழிவில்லை – தொ.பரமசிவன்
178.  ஜெயமோகனின் வெள்ளையானை 179.  சித்திரைத் திருவிழா நாயகரின் அரண்மனையில் 180.  ஈரம்பிரியன் மதுரைக்காரன்
181.  எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் – நிராகரிப்பின் வலி 182.  தொல்குடிகளின் வாழிடங்களின் மடியில் 183.  பேரையூரில் பாண்டியர்கால மலைக்கோயில்
184.  நெஞ்சில் பதிந்த மிளிர்கல் 185.  மதுரையில் வாழ்ந்த ரோசாப்பூதுரை 186.  வாசிப்பது தியானம்
187.  கமலுக்கு நேரமிருக்கிறது. நமக்கேன் இருக்காது? 188.  பாறைத்திருவிழா கொண்டாட வாருங்கள் 189.  விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக்காட்சிகள்
190.  பிரகடனம் 191.  தெப்பக்குளத்தில் முகிழ்த்த காற்றின் சிற்பங்கள் 192.  மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
193.  திருமாலிருஞ்சோலையில் தைலக்காப்புத் திருவிழா 194.  வைகைக்கரையில் தோன்றிய தாமரைச் சிரிப்புடையோன் 195.  சிலம்பாற்றில் தலைமுழுகும் சீடன்?
196.  மீனாட்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைப் பள்ளி 197.  சேலம் – மேட்டூர், வழி: தாரமங்கலம் 198.  துலாமிலிருந்து விருச்சிகத்திற்கு வரும் சனிபகவானே வருக!
199.  குன்றேறி வையைவளம் காணல் 200. மறக்க மனங்கூடுதில்லையே

தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. பதிவுகளைத் தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வரும் சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், பசுமைநடை மற்றும் வலைப்பதிவுலக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மேட்டூர்நீர்த்தேக்கம்.

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே?
கல் மேடு தாண்டிவரும் காவேரி நீராலே!
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா!
நாத்தோடு செய்தி சொல்ல காற்று வராதா!

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்!
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்!
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி!
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

– கவிஞர் வாலி, மகாநதி

மதுரையைத் தாண்டி பயணித்து வெகுநாட்களாயிற்று. ஊர்சுற்றுவதற்கு எப்போதாவதுதான் வாய்க்கிறது. சமீபத்தில் ஒரு திருமணநிகழ்விற்கு கலந்து கொள்வதற்காக சகோதரர் வெள்ளியன்று சேலம் வந்தார். ஞாயிற்றுக்கிழமை இருவருமே கோயம்புத்தூரில் இன்னொரு விசேசத்திற்கு கலந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. ‘சேலத்திற்கு வா இங்கிருந்து கோயம்புத்தூர் போகலா’மென அண்ணன் அழைக்க வெள்ளியன்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி சனிக்கிழமை அதிகாலை சேலம் சென்றேன்.

திருச்செங்கோடு போவதாகத்தான் திட்டம். மலைமேல் உள்ள கோயிலென்பதால் நாங்கள் செல்லும் நேரம் நடைசார்த்திவிட்டால் சிரமமென்று தாரமங்கலம் சிவன் கோயில் போகலாமென்று முடிவெடுத்தோம். தாரமங்கலம் நோக்கி நகரப்பேருந்தில் பயணித்தோம். சேலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

Tharamangalam Assorted 2

தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி நுழைவாயிலுக்கு எதிரேயுள்ள கோயிலை நோக்கி நடந்தோம். கோயிலின் பின்வாசல் என்பதால் அப்பகுதியில் கூட்டமில்லை. வெளிப்பிரகாரத்தைச் சுற்றி சன்னதிக்குள் நுழைந்தோம். கைலாசநாதராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கினோம். அம்மனை வழிபட்டு உட்பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்கள் கண்கொள்ளா காட்சி தருபவை. நடராஜர் சன்னதிக்கு அருகில் உள்ள ஊர்த்துவத்தாண்டவர், சிவனும் அம்பிகையும் ஊடல் கொண்ட சிற்பம் அதற்கடுத்த தூணில் ஊடல் தணிந்திருக்கும் சிற்பம், ஜூரகேஸ்வரர், ரிஷபவாகனர், ரதி, மன்மதன், மோகினி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு.

Tharamangalam Assorted

அந்தக்காலத்தில் இப்பகுதியிலுள்ள சிற்பிகள் கோயில் சிற்பங்கள் செய்யும் பணியேற்கும்போது ‘தாரமங்கலம், தாடிக்கொம்பு நீங்கலாக’ என்று சொல்லித்தான் வேலையை ஒப்புக் கொள்வார்களாம். அந்தளவிற்கு இங்குள்ள சிற்பங்கள் மிக நேர்த்தியாக உள்ளன. தாடிக்கொம்பிற்கு நானும், சகோதரரும் சிறுமலையில் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமிற்கு சென்றுவிட்டு வருகையில் பார்த்துவிட்டு வந்தோம். அங்குள்ள சிற்பங்களும் மிக அழகானவை. என்ன நிழற்படம் எடுக்க இருஇடங்களிலும் அனுமதி கிட்டவில்லை.

ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதனும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதியும் தெரியும் படி சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள். பாதாளலிங்க சன்னதியொன்று உள்ளது. அதிலிருந்து பார்த்தபோது அங்கொருவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். நடைசாத்தும் நேரமென்பதால் உடனே கிளம்பிவிட்டோம். சன்னதிக்குள் நுழையும் முன்புள்ள வாசலில் உள்ள சிற்பங்களை கம்பிவலை வைத்து அடைத்திருக்கிறார்கள். அதிலுள்ள சிற்பங்கள் புகழ்பெற்றவை. அதிலொரு சிற்பத்தில் சிம்மத்தின் வாயினுள் உருளையான பந்து ஒன்றுள்ளது. எப்படி அதை உள்ளே வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

வெளிக்கோபுரத்திற்கு செல்லும்முன் இருபுறமும் இரண்டு சன்னதிகள் உள்ளன. அதில் ஒன்றில் சகஸ்ரலிங்கம் உள்ளது. இந்த சன்னதிகள் மிகப்பழமையானதாக உள்ளது. இக்கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானதாகயிருக்கலாம். பல்வேறு காலகட்டங்களை இக்கோயிலுள் சுற்றி வரும்போது அறியலாம். கோயிலுக்கு வெளியே இக்கோயில் தேர் நிற்கிறது. அருமையான மரவேலைப்பாடுகள் கொண்டது. இக்கோயில் குறித்து தமிழ்விக்கிபீடியா மற்றும் ஜெயமோகன் தளத்தினுள்ள ஒரு கட்டுரை வாயிலாக மேலும் அறிந்து கொண்டேன். பேருந்துநிலையித்திலிருந்து பார்க்கும்போது சமீபத்தில் கட்டிக்கொண்டிருக்கும் நந்தி இக்கோயில் சிற்பங்களுக்கு திருஷ்டி போல உள்ளது.


தாரமங்கலத்திலிருந்து மேட்டூர் அணை பார்க்கச் செல்லலாமென நினைத்தோம். பேருந்துக்காக காத்திருந்தோம். மேட்டூர் RS என்று போட்டு வந்த வண்டி ஊரெல்லாம் சுத்திப்போகுமாம். (RSன்னா Railway Stationனாம்). அதனால் வேறு வண்டிக்காக காத்திருந்தோம். மேட்டூர் வண்டி ஒன்று வந்தது. கூட்டம் கொஞ்சம் குறைவாகயிருந்தது. ஏறி அமர்ந்தோம். லேசாக சொக்கியது. மதிய உணவாக கல்யாணவீட்டில் கொடுத்த லட்டும், சேவும் அமைந்தது.

CIMG0888

நீரோவியம்மேட்டூர் பேருந்து நிலையத்தில் இறங்கி அணை நோக்கி நடந்தோம். பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் இருக்கலாம். அணையை மேலே ஏறிப்பார்க்க அனுமதி கிடையாதாம்.

என்ன செய்வதென யோசித்த போது அங்கிருந்து பவளவிழா கோபுரம் சென்றால் நீர்நிரம்பியிருப்பதைப் பார்க்கலாமென்று சொன்னார்கள். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமென்றதால் ஆட்டோவில் சென்றோம்.

பவளவிழா கோபுரத்திலேறி மேட்டூர் அணையைப் பார்க்க படியேறிச்சென்றால் ஐந்து ரூபாய், மின்தானியங்கியில் சென்றால் இருபது ரூபாய். படியேறியே சென்றோம்.

கீழ்தளத்தில் அணை கட்டப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

Mettur Dam Construction

மேட்டூர் அணை கட்ட அப்போதைய மைசூர் சமஸ்தானாம் அனுமதி கொடுக்கவில்லையாம். கி.பி.1800 களிலிருந்து முயற்சித்து இருக்கிறார்கள். இறுதியில் கி.பி.1920களில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் வெள்ளச்சேதத்திற்கு ஈடாக 30,00,000/- ரூபாய் கேட்க மைசூர் சமஸ்தானம் வேறு வழியில்லாமல் அணை கட்ட அனுமதி கொடுத்து விட்டார்கள். ஸ்டேன்லி என்பவர் கட்டியதால் இதற்கு அவர் பெயரையே வைத்து ஸ்டேன்லி நீர்த்தேக்கம் அழைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே பெரிய அணை இந்த மேட்டூர் அணைதான். 124 அடி உயரம் கொண்டது. (நன்றி – வீக்கிபீடியா)

Mettur Dam

அணையை ஏறிப்பார்த்த போது மலைகளுக்கிடையேயிருக்கும் கடல் போல காட்சியளித்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் என்ற வார்த்தைகளையெல்லாம் நாளிதழ்களில்தான் வாசித்திருக்கிறேன். அதை நேரில் கண்டபோது ஏற்பட்ட அனுபவம் அற்புதமானது. கொஞ்சநேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நீர்வெளியேறிவரும் பகுதியைப் போய் பார்த்தோம். பின் வந்த ஆட்டோவிலேயே ஏறி மேட்டூர் அணைப்பூங்காவிற்கு சென்றோம். அணையை அடியிலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமாகயிருந்தது. நேரம் குறைவாகயிருந்ததாலும், பூங்காக்கள் சிறுவர்களுக்கும், காதலர்களுக்கும் ஏற்ற இடம் என்று தோன்றுவதாலும் சீக்கிரம் கிளம்பிவிட்டோம்.

மேட்டூர் பேருந்துநிலையம் செல்ல பேருந்து கிடைத்தது. அங்கிருந்து சேலம் போய் சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரவு பதினொருமணிவாக்கில் சென்றோம். நள்ளிரவு ஒருமணிவரை அரட்டை. அதன்பின் நல்ல தூக்கம். ஞாயிறு நிகழ்வில் கலந்து கொண்டு இரவு 9 மணிக்கு மதுரையம்பதிக்கு வந்தேன். திங்கள்கிழமை தினத்தந்தியில் மேட்டூர் அணை நூறு அடி நீருடன் தொடர்ந்து ஒருமாத காலமாகயிருந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாக வந்த செய்தியைப் பார்த்தபோது உடன் இருந்தவர்களிடம் நானும் போய் பார்த்துட்டு வந்தேன் என சொல்லிக் கொண்டிருந்தேன். ஆண்டாள் சொன்னது தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியட்டும். வாழ்க வளமுடன்.

சித்திரவீதிக்காரன்

எனக்குள் ஒருவன், தசாவதாரம் – விஸ்வரூபம் எடுத்த உயர்ந்த உள்ளம், நம்மவர், கலைஞன், அன்பால் ஆளவந்த வெற்றிவிழா நாயகன், அபூர்வசகோதரர் கமல்ஹாசன் பிறந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். ஆச்சர்யமாக இருக்கிறது. புதிய விசயங்களைத் தேடித்தேடிக் கற்று என்றும் இளமையாக இருக்கும் சகலகலாவல்லவருக்கு வயது என்றும் பதினாறுதான்.

1989ல் அபூர்வ சகோதரர்கள் வெளியானது. நான் ஓரளவு விவரம் தெரிந்து பார்த்த படம். அப்பு கதாபாத்திரமும், சர்க்கஸ் காட்சிகளும், பாடல்களும் மனதைக் கவர்ந்தன. குள்ளமாக வந்து நெஞ்சில் வெள்ளமாக நிறைந்து விட்டார் கமல்ஹாசன். அந்தப் படம் வெளியானபோது நாங்கள் அண்ணாநகரில் குடியிருந்தோம். சுந்தரம் தியேட்டரில்தான் கமல்ஹாசன் படங்கள் பெரும்பாலும் வெளியாகும்.

பள்ளிநாட்களில் பாட்டுப்புத்தகங்கள் வாங்கி வகுப்பறைகளில் புத்தகங்களுக்கிடையில் வைத்துப்படிப்பது, அங்கேயே பாடுவது என எல்லாம் நடக்கும். சிலநேரங்களில் ஆசிரியர்களால் பறிக்கப்பட்டு கிழிக்கப்படுவதும் உண்டு. கமல்ஹாசன் பாடல்களின் மொத்த தொகுப்பு புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் யார் யாரோ பாட குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லோருமே சூப்பர் ஸிங்கர்ஸ்தான். எங்கள் வகுப்பில் பெரும்பாலான பேர் கமல் ரசிகர்களாக இருந்ததால் கமல்ஹாசன் பாடல்களை மனப்பாடப்பகுதிக்கு குறித்து கொடுத்ததுபோல படித்துக்கொண்டிருந்தோம்.

எட்டாம் வகுப்பிற்கு பிறகு நண்பர்கள் எல்லோரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பேசிக்கிட்டே கண்மாய்கரையோரம் உள்ள சோனையா கோயிலுக்கு போய்ட்டு வந்து மந்தையில் ஒளியும் ஒளியும் பார்க்க அமர்வோம். கமல்ஹாசன் பாடல் எப்போது போடுவார்கள் என்று காத்திருந்த அந்தக் காலம் திரும்ப வருமா?

Kamal Haasan's Uthama Villain First Look Wallpapers

தேவர்மகன் வெளியான போது ஒரு கம்பை எடுத்து கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் என் நிழலைப் பார்த்து சாந்துப்பொட்டு பாடலை பாடிக்கொண்டே கம்பு சுற்றிப் பழகியதையெல்லாம் மறக்க மனங்கூடுதில்லையே. தனிமை கிட்டும்போது கணினியில் கமல்ஹாசன் பாடலைப் போட்டு ஆடுவது பெருங்கொண்டாட்டமான விசயம். சமீபத்தில் அப்படி ஆடத்தூண்டிய பாடல் ‘உன்னைக் காணாமல் நானிங்கு நானில்லையே’.

பாலிடெக்னிக் படிக்கும்போது எங்கள் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நான் கமல்ஹாசன் ரசிகனென்று தெரியும். அன்பே சிவம் வெளியான சமயம் மீசையை எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிந்த காலம். விருமாண்டி வந்த போது தினமலரில் ஒருபக்க ப்ளோஅப் கொடுத்தார்கள். அதை எனக்கு எடுத்துவர வேண்டுமென்று ஒரு ஆசிரியர் நினைக்குமளவிற்கு பிரபலமாக இருந்தேன்.

2004ல் விருமாண்டி பார்த்துத் தொடங்கினேன். கல்லூரி காலமென்பதால் அந்த வருடம் மட்டும் 24 படங்கள் பார்த்துவிட்டேன். இறுதியாக டிசம்பர் 28 அன்று மீனாட்சி தியேட்டரில் விருமாண்டி பார்க்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டு சென்று 25வது படமாக விருமாண்டி பார்த்தேன். படித்து முடித்தபின் இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது அங்குள்ளவர்கள் என்னை கமல் என்றே அழைப்பார்கள்.

Actor Kamal Haasan in Papanasam Movie Stills

உரையாடலின் போது கமல்ஹாசன் பட வசனங்களை அடிக்கடி சொல்வேன். அதிலும் வசூல்ராஜா பட வசனங்களைத்தான் மேற்கோளாக பெரும்பாலும் கூறுவேன். வசூல்ராஜாவை திரையரங்குகளில் மட்டும் ஆறுமுறை பார்த்தேன். கமல்ஹாசன் குறித்த செய்தியோ, பேட்டியோ நாளிதழ்களில் வந்திருந்தால் அதை அப்போதே வாங்கிவிடுவேன். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தை மட்டும் எப்படியாவது எடுத்துருவேன். அப்படி தொகுத்தவை இரண்டு பெட்டி நிறைய இன்னமும் இருக்கிறது. இப்போது கணினியில் கமல்ஹாசனின் நேர்காணல்கள், பாடல்கள், படங்கள் எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

விஸ்வரூபம்2

திருமணம் முடிந்தபிறகு கமல்ஹாசன் படம்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என ஹாட்ரிக் ஹிட் கொடுக்க வருகிறார். என்னுடைய திருமண ஆல்பத்தில் ஒருபக்கம் எங்க படமும் மறுபக்கம் கமல் பியானோ வாசிப்பது போல் உள்ள படத்தையும் சேர்த்திருந்தோம். பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

கமல்ஹாசன்

எங்க வீட்டில் இன்னமும் கமல்ஹாசன் படங்களைப் பார்க்கும் இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறேன். மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சலாடும் நவம்பர் மாதத்தில் கமல்ஹாசனைப் போல வைகையெனும் மகாநதிக்கரையில் நானும் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. கமல்ஹாசனை நினைத்தாலே இனிக்கும். பார்த்தால் பசி தீரும். அன்பே சிவம், அன்பே கமல்.

blogersmeet

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்  
தான் வாட, வாடாத தன்மைத்தே – தென்னவன்  
நான்மாடக் கூடல் நகர்.  
– பரிபாடல்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. மற்ற ஊர்களில் நடைபெற்று வந்த வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக்கண்காட்சி எல்லாம் திருவிழாவானது மதுரையில்தான். நாள்தோறும் மதுரையில் திருவிழாதான்.  நான் வலைப்பதிவு எழுத வந்த கதையும், வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு மதுரை குறித்து பேசியதையும் குறித்த சிறுபதிவு.

வாசித்தலும், அலைதலும் தான் வாழ்க்கையாய் இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கையிலிருந்து நாட்குறிப்பேடு எழுதுகிறேன். வேண்டாத வேலையாக தோன்றி நடுநடுவே விட்டாலும் இன்று வரை நாட்குறிப்பேடு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன். புத்தக வாசிப்பு இளமையிலிருந்தே தொடர்கிறது. ஆனால், இணையத்தில் தமிழில் வாசிக்க இது போன்ற வலைதளங்கள் இருக்கிறது என்பதே 2009ல் தான் தெரியும். விகடன் வரவேற்பறையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம் குறித்து வாசித்து பின் அவரது தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

மற்ற தளங்களை வாசித்த போது நாமும் எழுதலாமே என்று மனதுக்குள் கெவுளி அடித்தது. மதுரையையும், வாசித்ததையும் குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்குத் தொற்றிக் கொண்டது. என்னுடைய கனவை சாத்தியமாக்கிய தமிழ்ச்செல்வ அண்ணனுக்குத்தான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பதிவுகளைப் படித்து தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி. 23.10.2010ல் சித்திரவீதிகள் என்ற பதிவோடு வலைப்பதிவு எழுதத் தொடங்கிய இந்த நாலாண்டுகளில் என் வாசிப்பும், பயணமும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் மதுரை குறித்து பேச வேண்டுமென்று என்னிடம் சீனா அய்யாவும் அவரது துணைவியார் செல்விசங்கர் அம்மாவும் சொன்னார்கள். மதுரை குறித்து பேசுவது மகிழ்வான விசயம்தான். ஆனாலும், கிராமத்து பள்ளிநாட்களுக்குப் பிறகு எனக்கு மேடை வெகுதூரமாகிப் போனது. என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையில் சரியென்றிருந்தேன்.

26.10.2014 அன்று தெப்பக்குளத்தில் உள்ள கீதா நடன கோபால மந்திர் அரங்கில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் பசுமைநடை முடிந்தவுடன் பசுமைநடை நண்பர்களுடன் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. தமிழணங்குதான் அந்த அரங்கில் பலரையும் ஒருங்கிணைத்திருக்கிறது.

தெரிந்த வலைப்பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். புதிய நண்பர்களும் அறிமுகமானார்கள். சிலர் என்னுடைய பதிவுகளை வாசித்தேன் என்று சொன்னது மகிழ்வாகியிருந்தது. விழாவில் தருமி அய்யா, சீனா அய்யா, ரமணி அய்யா என மதுரையின் மூத்த பதிவர்கள் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். தொழில்நுட்பப் பதிவர்களுக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது. மதுரை சரவணன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பசுமைநடை பயணத்தில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை எழுதிய பதிவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து காற்றின் சிற்பங்கள் என்ற நூல் தெப்பக்குளம் பசுமைநடையில் வெளியிடப்பட்டது. அதை தமிழ் வலைப்பதிவர் திருவிழாவிலும் வெளியிட்டு அந்நூல் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்பட்டது. அச்சமயத்தில் மதுரை, தமிழ், பசுமைநடை குறித்து பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னை வாழ்த்தி செல்வி சங்கர் அம்மா அருமையாகப் பேசினார். அவரது வாழ்த்து எனக்கு பதட்டத்தைக் குறைத்து நம்பிக்கையை அளித்தது.

chithraveedhikkaranஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே! – திருமந்திரம்
 
என்னை நன்றாக மதுரை காக்கிறது
தன்னை நன்றாகப் பதிவு செய்யுமாறே!

என்ற வரிகளுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கினேன். என்னைக் குறித்து அறிமுகத்தை ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு மதுரையின் தொன்மை, பரிபாடல், மதுரையில் உள்ள மலைகளின் வரலாறு, பசுமைநடை, திருவிழாக்கள், குடைவரைகள், மதுரையும் தமிழும் குறித்து ஐந்து நிமிடங்களுக்குள் பேசினேன். மதுரையின் பல பெயர்கள், மீனாட்சியம்மன் கோயில், மதுரையின் பன்முகத்தன்மை குறித்தெல்லாம் பேசணும் என்று நினைவில் இருந்தாலும் என்னையறியாமல் நன்றி சொல்லி முடித்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த சீனா அய்யாவிற்கும், மதுரை மற்றும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

maduraivaasaganதமிழ் சிறப்பாக இருக்கும் வரை மதுரை இருக்கும் என்று பரிபாடல் சொல்கிறது. அதே போல மதுரை சிறப்பாக இருக்கும் வரை தமிழும் இருக்கும். இனி அகராதிகளில் மதுரை என்றால் தமிழ் என்றும் தமிழ் என்றால் மதுரை என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பேசும்போது குறிப்பிட்டேன். நான் மதுரையையும், தமிழையும் தெய்வமாக வழிபடுபவன்.

எல்லோருக்கும் அருந்த குளிர்ந்த ‘மதுரைப்புகழ்’ ஜிகர்தண்டா கொடுத்தார்கள். பதிவர்கள் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு தொடங்கியது. தாங்கள் எழுதும் பதிவுகள் குறித்து எல்லோரும் பேசினார்கள். இரத்னவேல் நடராஜன் அய்யாவைப் பார்த்தேன். ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து துணைவியாருடன் கலந்து கொண்டார். என்னுடைய பதிவுகளைப் படித்து மறுமொழியிட்டு அதை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்வார். அன்றுதான் நேரடியாக சந்தித்தோம். திண்டுக்கல் தனபாலனையும் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து பேசினேன். பதிவர்களின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத் தொடர்பை இன்றைய வானம் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிருந்தார். திருமங்கலத்திலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது.

நெருங்கிய உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக மதுரை அலங்காநல்லூர் தாண்டி ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் மதியத்தோடு கிளம்பினேன். மதியத்திற்கு மேல் நடைபெற்ற விழா நிகழ்வுகளை மறுநாள் வலைப்பூக்களில் பார்த்தேன். தமிழ்முரசு மற்றும் தினகரன் நாளிதழ்களில் நான் பேசும்போது எடுத்த படம் வந்திருந்தது. தினகரன் நாளிதழ் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

மதுரை உலகின் தொன்மையான நகரம் என்று கல்லூரி ஆண்டுவிழா மலரில் நான் எழுதிய கட்டுரையில் உள்ளதைத்தான் கொஞ்சம் பேசினேன். அந்தக் கட்டுரையைப் படத்தில் பார்க்கவும். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில்.

படங்கள் உதவி – தினகரன் (நாளிதழ்), ரகுநாத், இளஞ்செழியன்

madurai