Archive for the ‘மதுரையில் இஸ்லாம்’ Category

நாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்கத்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன. 

– ந.முருகேசபாண்டியன்

பலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.

abbasbhai thoppu 2

உசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

திரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எடுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.

அப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88

முன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதைத்தான் அவரும் சொன்னார்.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be

மதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.

இஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்தார்கள்.

abbasbhai thoppu

சாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின்  சாயல் தெரிகிறது.

ந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.

1014680_718252694886507_922398142_o

ஒரு சிறுகதைத் தொகுப்பைத் திறந்தபோது உள்ளேயிருந்து கொஞ்சம் சிறகுகள் எட்டிப்பார்த்தன. அதைத் தைத்து அக்கதைகளினூடாகப் பறந்த அனுபவத்தை இப்பதிவினூடாகப் பகிர்ந்து கொள்கிறேன். அப்படிப் பறக்க வைத்த சிறுகதைத் தொகுப்பு அர்ஷியாவின் கபரஸ்தான் கதவு.

12196263_1250405198318351_2072100658548786082_nகபரஸ்தான் கதவு என்ற சிறுகதைதான் இத்தொகுப்பிலேயே மிகவும் நெருக்கமான கதை. அக்கதை சார்ந்த நினைவுகளும் கொஞ்சம் அதிகம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் மதுரை வடக்குமாசிவீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் அர்ஷியா அவர்கள் இக்கதையை வாசிக்க கேட்டிருக்கிறேன்.

எல்லாச்சமூகங்களிலும் சில நம்பிக்கைகள் உண்டு. மதுரை இஸ்மாயில்புரத்தில் உள்ள கபரஸ்தான் (சுடுகாடு) கதவை ஒருமுறைத் திறந்தால் அடுத்தடுத்து இரண்டு மய்யத்துளை பார்த்துவிடுகிறது என்பது அங்குள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எங்க பகுதியிலும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை உண்டு. சனிப்பொணம் தனிப்போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமை ஒருத்தன் செத்தா தனியாச் சாகமாட்டான் அடுத்த சனிக்கிழமைக்குள்ள இன்னொருத்தன கூட்டிட்டுப் போயிருவான்னு. அதுனால கோழிக்குஞ்ச பாடையோடக் கட்டி அனுப்புவாங்க. ஆனாலும், சிலநேரங்களில் அடுத்த சனிக்கிழமை இன்னொருத்தர் கிளம்பிருவாரு.

இக்கதையில் காதல் திருமணம் ஒரு இஸ்லாமியப் பெண் விபத்தில் மரணமடைந்து விடுகிறாள். அவளது தகப்பன்போய் கேட்ட போது அவளது காதல் கணவனும் உடலைத்தர சம்மதித்து விடுகிறான். இங்கு குழி தோண்டி விடுகிறார்கள். ஆனால், அந்தப் பையனது வீட்டில் நம்ம சடங்குகளின் படி தான் அந்தப் பெண்ணை எரிக்க வேண்டுமென்று சொல்ல இப்போது கபரஸ்தானில் தோண்டிய குழியை என்ன செய்வது எனத் தெரியவில்லை. பெருங்குழப்பமாகிவிடுகிறது. கடைசியில் பெரியவர் ஒருவர் ‘உப்பு ரஹ்மத்தானது’ அதைப்போட்டு மூடலாம் என்கிறார். கடைசியில் ஒரு மூடை உப்பைக் கொட்டி குழியை மூடுகிறார்கள்.

பண்பாட்டு அசைவுகளில் தொ.பரமசிவன் அய்யா உப்பு குறித்து எழுதியவை ஞாபகத்திற்கு வருகிறது. உப்பு உறவின் தொடர்ச்சி. அதனால்தான் அதை புதுவீடுகட்டிய போது அதைக் கொண்டு போகிறார்கள். இறப்புச் சடங்கின் போது எட்டு அல்லது பத்தாம் நாள் காரியத்தின்போது உப்பில்லாமல் படையல் வைக்கிறார்கள். உறவை அறுத்துக் கொள்வதற்காக என்று சொல்கிறார். இந்தக் கதை படித்த போது உப்பு குறித்த நம்பிக்கைகள் பொதுவாக எல்லா சமூகங்களிலும் உண்டு என அறிய முடிந்தது.

கபரஸ்தான் கதவு திறந்தால்தானே இரண்டு மய்யத்துளை கேட்கிறது. கதவையே எடுத்துட்டா என இளைஞர்கள் புதுசா யோசிக்கிறாங்க. கதவை தனியே தூக்கி வைத்ததும் சில தவறுகள் வழக்கம்போல நடக்க கதவை மீண்டும் மாட்டிவிடுகிறார்கள். பிறகு குழி வெட்ட ஆள் கிடைக்க மாட்டேங்குதுன்ற பிரச்சனை எழும்போது ஆறேழு குழிகளை புல்டோசர் வச்சு தோண்டி வச்சுட்டா என்ன என்று ஒருவர் புத்திசாலித்தனமாக கேட்கிறார். பிறகு அப்படி ரெடிமேடா குழியெல்லாம் தோண்டி வைக்க கூடாது. இஸ்லாமியர் அல்லாதவர்களை அழைத்துக் கூட குழி தோண்டலாம் என முடிவெடுக்கிறார்கள். பொதுவாக சுடுகாட்டுக்கு செல்கிறவர்களுக்குத் தெரியும். அங்கு ஒரு சிலர்தான் வருத்தத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் அங்கும் போய் தங்கள் லீலைகளை காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

இக்கதை படிக்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எங்க ஊர் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டி நடுவில் வண்டி வரும்படி அகலமான சிமெண்ட் ரோடு போட்டாங்க. அதைப்பார்த்து நானும் ‘உள்ள இருப்பவன் வெளிய வரமுடியாது, வெளிய இருக்கவன் உள்ள போக விரும்பமாட்டான்’ என கேலி பேசியிருக்கிறேன். கொஞ்ச நாளில் என்னுடைய தாய்மாமா மற்றும் அவரது நண்பர்கள் ஒரு வாகன விபத்தில் மரணமடைய அவர்களது பிணங்களை சுமந்து கொண்டு வந்த வண்டி அந்தச் சிமெண்ட் சாலையில் வந்தது. ஒரே ஊரைச் சேர்ந்த நாலு பேர் இறந்துவிட்டதால் அன்று விதிகளைத்தாண்டி ஊரே சுடுகாட்டில்தான் நின்றது பெண்கள் உட்பட. இப்படி கபரஸ்தான் கதவு ஒரு கதையே பல நினைவுகளை கிளறிவிட்டது. இன்னொரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டனே இந்தக் கதையில் வரும் கபரஸ்தான் உள்ள இஸ்மாயில்புரம் பகுதியில்தான் நான் பிறந்தேன்.

நிழலற்ற பெருவெளி என்ற கதையை சற்று வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார். இறந்து கிடக்கும் சடலத்தின் நினைவுகளாக இக்கதை நகர்கிறது. அர்ஷியா எழுதிய ஏழரைப் பங்காளி வகையறா நாவலின் கிளைக்கதையாகக் கூட இதைச் சொல்லலாம். நம்மால் வீட்டிற்கு எந்த பிரயோஜனமுமில்லை எனும்போது நம்மை தண்டச்சோறு என தண்ணி தெளித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இக்கதையில் வரும் மாபாஷா குரங்கின் சாயலோடு முகம் கொண்டவனாகயிருக்கிறான். அதனால் மற்றவர்களைப் போல அவனை வளர்க்காமல் தனியாக வீட்டில் வளர்கிறான். தேரோட திருநாளும் தாயோட பிறந்தகமும் போச்சு என்பார்கள் பெண்கள். அதுதான் அவன் கதையும். அவங்கம்மா அடுத்து அவனது அப்பா இறந்த பிறகு அண்ணன் பொறுப்பில் இருக்கிறான்.

இவனது அப்பா ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது குரங்கைச் சுட்டதால் அடுத்துபிறந்த இவன் இப்படிப் பிறந்ததாகச் சொல்வார்கள். இதைப் படித்தபோது பிரிட்டோ பள்ளியில் ஆசிரியரொருவர் சொன்ன கதை நினைவுக்கு வந்தது. ஒரு ஊரில் தன் வயலில் அடிக்கடி மேயும் மாட்டை உயிரோடு தோலுரித்து விடுகிறான் அந்த வயலின் உரிமையாளன். அவனது சந்ததியில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கால்கள் மாடு போல் சூம்பிப் போய் பிறப்பதாகச் சொன்னார். இது நிகழ்ந்த சம்பவமா, கதையா எனத் தெரியவில்லை. ஆனால், இது போல் நடக்கவும் வாய்ப்புண்டு.

மாபாஷாவின் பாபி(அண்ணி)க்கு இவனைக் கண்டாலே பிடிக்கவில்லை. தன் கணவனிடம் அவனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்கிறாள். மாபாஷாவை அனுப்பிவிட்டால் அவனுடைய சொத்துக்களை அனுபவிக்க முடியாது என்பதால்தான் அவனை சோத்தைப் போட்டு வைத்திருப்பதாக அண்ணன் அண்ணியிடம் சொல்லி சமாளிப்பதை மாபாஷா கேட்டு நொந்து போகிறான். இப்படியிருந்த அண்ணி ஊரார் முன் போலியாக பிணத்தைத் தூக்கிச் செல்லும்போது ‘நம்ம’ மாபாஷா போறாங்க என்று அழுவது கேட்டு திடுக்கிடுகிறான். மேலும், இஸ்லாமிய இறப்பு வீடுகளில் நிகழும் சடங்குகளை அறிந்து கொள்ள முடிகிறது. மய்யத்தை தூக்கிய பிறகு சாப்பிட தயாராகும் பகாரியா வாசனை, உடலைக் கொண்டு செல்ல பள்ளிவாசலிலிருந்து வந்திருக்கும் ஜனாஜா பெட்டி, சீகைக்காய் – அத்தரால் கழுவப்பட்டு ஒலு செய்யப்படும் உடல் போன்ற விசயங்களும் பதிவாகிறது. இக்கதையைப் படிக்கும்போது நாமும் அந்த வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார்.

ஒரு களியாட்டம். இந்தக் கதையில் வரும் கதீஜாபீ நல்ல கதைசொல்லி. அதிலும் ஹவுதுல் ஆலம் முஹைதீன் அப்துல் காதர் ஜிலானி பற்றிய சாகசக் கதைகளை அவள் சொல்லும் போது அந்த இடத்திற்கே நாமும் சென்றதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடக் கூடியவள். தன் மகளிற்கு குழந்தை பிறந்தபோது வருபவர்களிடம் எல்லாம் குழந்தையின் அழகு, சாயல் எனப் பேசுவதோடு கதையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் மகன் தன் தங்கை குழந்தையை காணவந்த போது அவளை கதை சொல்லச் சொல்ல அவனை திருத்தும் நோக்கோடு முகமது நபி பற்றிய கதையைச் சொல்கிறாள்.

எல்லா சமயத்திலும் சொர்க்கம், நரகம் பற்றிய கதைகள் உண்டு. சொர்க்கத்தில் தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவார்கள். நரகத்திற்கு போனால் அங்கு எண்ணெய் சட்டியில் வருப்பார்கள் என்றெல்லாம் அள்ளி விடுவார்கள். அப்படி நம்பிக்கை இஸ்லாத்திலும் உண்டு. சொர்க்கம் செல்லும் ஆண் மகன்களை ஹூருளிப் பெண்கள் எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள் என. அப்போது கதீஜாபீயின் மகள் எல்லாச் சமயங்களும் ஆண்களைக் கொண்டாடி பெண்களைப் புறக்கணிப்பதை ஒற்றைக் கேள்வியில் சாட்டையடியாய் கேட்டு விடுகிறாள். ‘ஏம்மா… பூமியில் நல்லது செய்றப் பொம்பளைங்களைக் கூட்டிட்டுப்போய் சந்தோஷப்படுத்த, சுவனத்துல ஹூருளான்னோ.. இல்லை வேற பெயர்கள்லேயோ ஆம்பளைங்க யாரும் இருக்க மாட்டாங்களா?’. பதில் சொல்ல முடியாமல் திகைப்பது கதீஜாபீ மட்டுமல்ல நாமும்தான்.

kabarasthan kadhvu

இந்தக் கதையை வாசித்தபோது எங்க ஆச்சி ஞாபகம் வந்துவிட்டது. இப்போது 30 வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் பெரியவர்களிடம் கதை கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள்தான். எங்க ஆச்சி நிறையக் கதைகள் எனக்குச் சொல்வாங்க. அதுகூட இன்றைய வாசிப்பு ஆர்வத்திற்கு காரணமாகயிருக்கலாம். அர்ஷியா முன்னுரையில் சொல்வது போல இப்போது கதை சொல்ல ஆளில்லை. எல்லோரும் மின்சாதனங்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறோம்.

‘எட்டெழுத்து முஸ்தபாவின் ஹஜ் பயணம்’ எட்டெழுத்து முஸ்தபா என்ற இந்தப் பெயரே இது மதுரைக் கதைதான் என்பதை ஒருவகையில் சொல்லிவிடுகிறது. மற்ற ஊர்களைவிட நீங்கள் மதுரையில் அதிக சுவர் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்க்கலாம். இப்போது ஃப்ளக்ஸ் கலாச்சாரம். அதிலும் அவர்கள் போடுகிற பெயர்களையும், படங்கள் மற்றும் வசனங்களையும் பார்த்தால் இதற்கென தனிப்படையே இருப்பார்களோ என எண்ணத் தோன்றும். அப்படித்தான் இக்கதையிலும் முஸ்தபா தனக்கு முன்னால் என்ன பெயர் போடுவது என ராப்பகலா யோசிக்கிறார். தன்னோட தாத்தா பாட்டன் பேரெல்லாம் யோசிச்சு பார்த்தா ‘ஹைதர்அலி பர்வேஷ் காதர்பாட்ஷா தர்வேஷ் அப்துல் ரஜாக் சையத் தாவூத் ஹூசைன் முஸ்தபா’ ன்னு பெரிசா வருது. அதுனால சுருக்கி எட்டெழுத்து முஸ்தபான்னு பேர வச்சுக்கிறாரு. சரி கதைக்கு வருவோம்.

வராது என நினைத்த பணம் திடீரென மொத்தமாக வருகிறது. என்ன செய்யலாம்னு யோசிச்சா எல்லாத் தேவையும் பூர்த்தியாயிருச்சு. சரி ஹஜ்ஜூக்கு போவோம்னு நினைக்குறார். அதற்கான வேலைகளைத் தொடங்க எல்லாம் நல்ல படியா முடியுது. ஊரையே அழைச்சு துவாசெஞ்சு வழியனுப்புற நிகழ்ச்சிய நடத்துறாரு. எட்டு தேக்‌ஷால மொகல் பலவ் ஆக்கி அதுக்கு தொட்டுக்க கட்டே பைங்கன், சிக்கன் டிக்கா, பியாஜ்கி சட்னின்னு அசத்தியிருந்தாரு. அதுபத்தாதுன்னு ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன் வேற. பிரமாதமான சாப்பாடுன்றதுனால ஹஜ்க்கு போறதுக்கு முன்னாடியே ஹாஜியாரேன்னு வந்த மக்கள் வாழ்த்துறாங்க.

யார் வரலன்னு பார்த்தா அவங்க அக்கா மக சைதானி மட்டும் வரல. பதறிப்போய் அவ வீட்டுக்கு போறாரு. ஏன்னா, இவரு பழமண்டி வச்சு இவ்வளவு பெரிய ஆளா வந்ததே அவங்க அக்கா சொத்த வச்சுத்தான். சைதானி வீட்ல உட்கார இடங்கூட இல்ல. அவட்ட தான் ஏமாத்துன விசயத்த சொல்றாரு. அவ அலட்டாம ஒண்ணு சொல்றா. கல்யாணம் ஆகாத கொமருக நிறையாப் பேரு ஊருக்குள்ள இருக்குங்க. அதுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாக்கூட புண்ணியந்தான். ஹஜ் போயித்தான் புண்ணியம் சேக்கணும்னு இல்லன்னு. அப்படியே கூனிக்குறுகிப் போய் சொல்லாமக் கொள்ளாம வந்துடுறாரு.

காசு இருக்க எல்லாருமே நல்லது செய்ய நினைக்கிறது இல்ல. திருப்பதில உண்டியல்லயும், காசிக்கும் போயிட்டு வந்துட்டா பாவம் தீர்ந்துரும்னு நினைக்கிறவங்க நிறையப்பேரு. தன் படத்துல வந்த லாபத்துல ஒரு கோடி உதவியா லாரன்ஸ்தான் கொடுத்தாரு. வேற எந்த உச்ச நட்சத்திரமும் கொடுக்கல. எல்லாம் மனசுதான்.

1794726_718253511553092_1700576263_n

வாசிக்கும் நம்மை கதைக்களத்திற்கே தன் சொல்லாடல் மூலமாக அழைத்துச் செல்கிறார் அர்ஷியா. ஒவ்வொரு கதையின் இறுதிப் பகுதியும் நம்மை நெகிழ்வுக்குள்ளாக்கிறது. இஸ்லாமிய மக்களின் பழக்க வழக்கங்களை இக்கதைகளினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், எல்லா மனிதர்களும் சாதி, மதம் என பிளவுபட்டு இருந்தாலும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களில் ஒன்றுபோலவே செயல்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

நான் படிக்கிறப்ப ஒவ்வொரு புதுப்படப் பாட்டுப்புத்தகத்தையும் வாங்கி அத மனப்பாடப்பாட்டு மாதிரி படிப்போம். அந்தப் பாட்டுப் புத்தகங்களில் படத்தின் கதையை கொஞ்சம் போட்டு மற்றவற்றை வெள்ளித்திரையில் காண்க என்று முடிப்பார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். இதிலுள்ள நாலு கதைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன். மற்ற கதைகளை புத்தகத்தில் படிங்க.

படங்கள் உதவி – அருண், செல்வம் ராமசாமி மற்றும் தினேஷ்குமார்

பரந்தவெளி

நாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…!

–    கலீல் கிப்ரான்

பேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே! மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.

கோயில்

பேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.

மலையேற்றம்

தொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.

மலைகள்

சிவன்மலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.

ஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.

நந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.

காவல்தெய்வம்

சுனை

மலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.

கன்னிமார்

கல்வெட்டு

முத்துக்கிருஷ்ணன்சூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:

எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.

இக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

மலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.

மேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.

Dargah

எல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.

மலையடிவாரம்

மேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.

படங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்

சிக்கந்தர்தர்ஹா

அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்!

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்!

தலைவணங்கிக் கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்!  

தரணியெங்கும் நிறைந்திருக்கும் மகாவல்லவன்!

திருப்பரங்குன்றம், பால்யத்திலிருந்து இன்றுவரை மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது. தினசரி பார்வையில் படும் மலைகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. திருப்பரங்குன்றத்திற்கு பசுமைநடையாக  முதல்முறை சமணப்படுகைக்கும், தென்பரங்குன்றம் குடைவரைக்கும் சென்றோம். அடுத்த நடையில் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலையும், சமணச் சிற்பங்களையும் கண்டோம். இம்முறை 16.02.2014 அன்று மலைமீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவைக் காணச் சென்றோம்.

விடியலைநோக்கி

திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல புதிதாக கட்டியுள்ள பாலத்தில் முதல்முறையாக சென்றேன். மிக நீளமான பாலம். பாலத்திலிருந்து பார்க்கும் போது மலை மிகவும் இரம்மியமாக காட்சி தந்தது. திருப்பரங்குன்றம் பேருந்து நிலையமருகில் எல்லோரும் கூடினோம். அங்கிருந்து பசுமைநடையாக இளங்கதிரவனின் பார்வைபட மலைமீது ஏறினோம். படிகளைக் கடக்கும் போது கொஞ்சம் மூச்சு வாங்கியது. கொஞ்சம் நேரம் இளைப்பாறிப் பின் கிளம்பினோம். ஓய்வெடுக்கும் இடங்களிலெல்லாம் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.

மலைப்பயணம்

மலையிலுள்ள தர்ஹாவிற்கு எல்லோரும் சென்றோம். அங்குள்ள இஸ்லாமிய பெரியோர்களின் நினைவிடங்களை பார்த்தோம். வணங்கினோம். உள்ளே உள்ள தூண்களைப் பார்க்கும்போது தமிழர் கட்டடக்கலை நன்றாகத் தெரிந்தது. எல்லோரும் அங்கு கூடியதும் தர்ஹாவிலுள்ள இஸ்லாமியப் பாடகர் அப்துல் ஜப்பார் அந்த இடம் குறித்த வரலாறைச் சுருக்கமாகச் சொன்னார். தர்ஹாவிலிருந்து பசுமைநடைக்குழுவினர்க்கு சர்க்கரையும், திருநீறும் கொடுத்தனர். பின் எல்லோரும் தர்ஹாவின் முற்றத்தில் கூடினோம்.

கூடல்

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடைக்கு வந்தவர்களை வரவேற்றார். இங்கிருக்கிறவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஈரானியத் திரைப்படம் ஒன்று ஞாபகம் வருகிறது. ப்ளாக் போர்டு என்னும் படம். அந்தப் படத்தில் ஒரு ஆசிரியர் முதுகில் கரும்பலகையைத் தூக்கி கொண்டு பயணித்து கொண்டே இருப்பார். நாடோடியின மக்கள் மற்றும் விளிம்புநிலை மனிதர்கள் பத்து பேரைப் பார்த்தால் அங்கேயே அவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களையும் கற்ற விசயங்களையும் சொல்லிக் கொடுத்துவிட்டு செல்வார். அதுபோலத்தான் இந்த இடம் இன்றைக்கு நமக்கு காட்சி அளிக்கிறது. மிக உயரமான மலை. ஏறுவதற்கு வயதானவர்கள் சிரமப்படுவார்கள் என்று பார்த்தோம். ஆனால், எல்லோரும் உற்சாகத்தோடு ஏறி வந்தது நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையிலிருந்து மற்றும் பல வெளியூர்களிலிருந்தும் பசுமைநடைக்கு மக்கள் வருவது நமக்கு நம்பிக்கையளிக்கிறது. 1935ல் இம்மலையையும் அறுத்துக் கூறுபோட இருந்தார்கள்.  அப்போது அதை லண்டன் வரை போய் தடுத்து நிறுத்திய பெருமை இஸ்லாமியப் பெருமக்களையே சேரும். 

அர்ஷியா

அதைத் தொடர்ந்து எழுத்தாளர் அர்ஷியா இம்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். எந்த ஒரு தேசத்திற்கும், எந்த ஒரு இடத்திற்கும் ஒரு வரலாறும், அடையாளமும் இருக்கவே செய்யும். வரலாறும் அடையாளமும் இல்லாத ஒரு பருப்பொருள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையராது இயங்கிவரும் நம் தொல் மதுரையின் இந்த மலையில் கிறிஸ்துவத்திற்கு மட்டும் ஒரு அடையாளம் இல்லையென்பது கட்டுரையாளனாகவும், படைப்பாளனாகவும் எனக்கு வருத்தத்தை தருகிறது. பசுமலையிலிருந்து வரும் போது இம்மலை எனக்கு மேரிமாதாவின் கைகளிலிருந்து இயேசு அழைப்பதைப் போலத் தோன்றியது.

நாம் கூடியிருக்கும் இந்த இடம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் தர்ஹா. பள்ளிவாசலுக்கும், தர்ஹாவுக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பள்ளிவாசல் என்பது பிரார்த்தனை செய்யும் கூடம். தர்ஹாவென்பது மதத்திற்காக, சமயத்திற்காக சேவை செய்தவர்கள் மரணித்தவர்களின் நினைவிடமாகும். கிறிஸ்துவம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பாகவே அரபு நாட்டிலிருந்து வணிகர்களாக உலகம் முழுவதும் அரேபியர்கள் சென்றிருக்கிறார்கள். ‘சீன தேசம் சென்றேனும் கல்வியைத் தேடு’ என்பது நபியின் பொன்வாக்கு. இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டில்தான் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமயம் பரப்பத் தொடங்கினார்கள்.

நினைவிடம்

இந்தியாவிற்கு சமயம் பரப்ப வந்தவர்களை வரவேற்றது அரபிக்கடல். கேரளத்தை ஆண்ட சேரமன்னர் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மன்தான் (கி.பி.780லிருந்து கி.பி.834)  இஸ்லாத்தை மிகவும் நேசித்திருக்கிறான். அதைக்குறித்து தொன்மைக்கதை ஒன்றுள்ளது. சேரமன்னன் மாடமாளிகையின் உச்சியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த போது அது இரண்டாக கிழிந்து சற்று நேரத்தில் ஒட்டிக்கொண்டது. அதைக்குறித்து தனது அரசவையில் கேட்டபோது அவரிடையேயிருந்த அந்தண அமைச்சர் மேற்கு கரையோரத்தில் ஒரு மதம் தோன்றியிருக்கிறது அதன் அற்புதமிது என்று கூறியிருக்கிறார்.  அந்த மதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இப்போதைய சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் இஸ்லாமியராக மாறி அப்துல் ரகுமான் சாமிரி என்ற பெயரும் ஏற்கிறார். ஹிஜ்ரி 212 – 216 வரை நான்காண்டு காலம் அங்கேயே இருந்தார்.  சாமிரி என்றால் புதியவர் அல்லது வெளிநாட்டவர் என்று பொருள். அவர் கி.பி.834ல் அங்கேயே காலமாகிறார். அதைக்குறித்த கல்வெட்டு அங்குள்ளது.

கண்ணனூர், கொல்லம், முசிறி துறைமுகங்களின் வழியாக மதம் பரப்ப வருபவர்களை சேரமன்னர்கள் வரவேற்கிறார்கள். கி.பி.1182ல் மதீனாவின் ஆளுநராகயிருந்த சையது சுல்தான் இப்ராஹீம் மதம் பரப்ப கிளம்புகிறார். இவர் முகம்மது நபி மகள் வழிவழிப் பேரன்களில் ஒருவர். ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும் இப்ராஹீமுடன் சேர்ந்து மதம் பரப்ப வருகிறார். சேரமன்னன் கொல்லத்தில் இவர்களை வரவேற்கிறான்.

சேரநாட்டிலிருந்து பாண்டியநாட்டிற்கு வருபவர்கள் புன்னைக்காயலில் குலசேகரபாண்டியனின் ஆதரவுடன் மதம் பரப்புகிறார்கள். பின் அங்கிருந்து மதுரைக்கு வரும்போது இங்கு குழப்பநிலை நிலவுகிறது. சோழர் படை படையெடுத்து ஒருபுறம் இருக்க மதம் பரப்ப வந்தவர்கள் மீது பாண்டியன் எரிச்சலடைகிறான். ஒருபுறம் சோழன், மறுபுறம் இப்ராஹீம் என்று வர வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறான். சோழநாட்டிற்கு சென்றதுபோக மீதமிருந்த படையுடன் பாண்டியன் மதம்பரப்ப வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை முகமதியர்கள் வசம் வருகிறது. சையது இப்ராஹீம் சிக்கந்தர் பாதுஷாவை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸூடன் இராமநாதபுரத்திலுள்ள ஏர்வாடிக்கு சென்று விடுகிறார்கள்.

1182லிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார்.  அவரது ஆட்சி குறித்த பதிவு ஏதுமில்லை. வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து தன் மகன் குலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹிமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும் குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். (சிக்கந்தர் பாதுஷா இம்மலைக்கு குதிரையில் வந்த சென்றதாக நம்பிக்கையிருக்கிறது) மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளமருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில் தான் இந்த தர்ஹா அமைந்துள்ளது.

சிக்கந்தரைக் குறித்த பதிவுகள் நிறைய நூல்களில் காணப்படுகிறது. 1866ல் பார்ஸி அரபி மொழியில் மதுரை மகான் அப்துல் ஸலாம் எழுதிய மனாகிப் என்னும் நூலில் ‘ஸலாமி அலாரூஹி இஸ்கந்தரி ஸலாமி அலா ஜிஸ்மார்த்த அத்ஹரி’  என்றால் தமிழில் சிக்கந்தருக்கு ஆத்மார்த்த வந்தனம் மதுரையில் தலம் கொண்ட நாயகனே வந்தனம் என்று பொருள். மனாகிப் என்றால் புகழ்மாலை. 16ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பயணி சிக்கந்தரின் வரலாறை ஒரு பகுதியாக ஷஹாதத் நாமா என்ற நூலில் எழுதியிருக்கிறார். கி.பி.1820ல் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய தீன்நெறி விளக்கத்தில் ஷஹீத் சரிதை என்று சிக்கந்தரின் வீரமரணம் குறித்து காணப்படுகிறது. கோயிற் சாசனக் குறிப்புகளில் குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானக்கல்வெட்டுகளில் சிக்கந்தரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

‘இஸ்லாம் வளர்ச்சியடைந்து அட்லாண்டிக் சமுத்திரம் முதல் பசுபிக் சமுத்திரம் வரை பரவியிருந்தது. ஆனாலும், இஸ்லாமின் செல்வாக்கு நிலையாக இருந்தது, இந்து சமுத்திர நாடுகளில்தான். இந்து சமுத்திரம் ஒரு மாபெரும் அரபுக் கடலாக மாறியது’ என வரலாற்று ஆய்வாளர்கள் ஶ்ரீகந்தையா மற்றும் கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளனர்.

‘கி.பி.1182ல் அரபுநாட்டினின்று வந்த ஸையது இப்ராஹீம் என்பவர் மதுரையில் ஆண்ட விக்கிரம பாண்டியனை வென்று தமிழகத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார்’ என முனைவர் எஸ்.எச்.ஏ.ஹுசைனி தன்னுடைய பாண்டிய நாட்டு வரலாறு நூலில் பக்கம் 17-19ல் குறிப்பிட்டுள்ளார்.

‘மதுரையில் பாண்டியர்படை பிரச்சாரக்குழுவினரைத் தாக்க அதற்கு தற்காப்புப் போர் செய்து வீரபாண்டியனை வென்று சிக்கந்தர் பாதுஷாவை அரசராக்கினார்’ என முனைவர் எஸ்.எம்.ஏ.காதர், தஞ்சை, தமிழ்ப்பல்கலை இஸ்லாமிய இருக்கை சிறப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியிட்ட முகம்மது உவைஸ் மற்றும் பீ.மு.அஜ்மல்கான் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இப்ராஹீமைப் பற்றியும் சிக்கந்தரைப் பற்றியும் பேசுகின்றது.

பழனியில் வாழ்ந்த சித்தர் போகர் ஏழாயிரம் நூலில் 326 – 350ம் வரிகளில் சிக்கந்தரைப் பற்றி எழுதியுள்ளார். சிக்கந்தர் நினைவிடத்தில்தான் அமைதியாக தரிசித்து ஆத்ம அமைதி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் குணங்குடி மஸ்தான் இம்மலையில் வந்து நாற்பது நாட்கள் தியானம் செய்ததாக வரலாறு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டி மோனகுரு மஸ்தான் இங்கு வந்திருக்கிறார்.

வரலாற்றில் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா மதுரையின் கடைசி மன்னர் என்று பிழையாகயிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சையது சிக்கந்தர் பாதுஷா. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா. இருவரது பெயரிலும் சிக்கந்தர் என்றிருப்பதால் வரலாறுகளில் இம்மலையில் மறைந்த சிக்கந்தரை கடைசி சுல்தான் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். விஜயநகர பேரரசிலிருந்து வந்த குமார கம்பணனால்தான் கடைசி சுல்தான் சிக்கந்தர் அலாவுதீன் ஷா கொல்லப்படுகிறார்.

திருப்பரங்குன்றம்

இஸ்லாம் என்பது மக்கள் மதம். நம்பிக்கையின் மதம். சூஃபிகள், இறைநேசர்கள் மறைந்த நினைவிடத்திற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வருகிறார்கள். மலப்புரம், கண்ணனூர் போன்ற வடக்கு கேரளத்திலிருந்து மக்கள் இங்கு வந்து செல்வதை இன்றும் காணமுடிகிறது. ஏர்வாடியிலுள்ள சையது இப்ராஹீம் தர்ஹா செல்லும் அனைவரும் இந்த மலைக்கு வந்து செல்வதையும், இஸ்லாமிய மக்கள் வியாழன்று இரவு தங்கி மறுநாள் காலை செல்வதையும் காணலாம். 18ஆம் நூற்றாண்டளவில் ஆற்காட்டை ஆண்ட நவாப்புகள் தணக்கன்குளம் பகுதியில் இம்மலைக்கு மானியங்களை அளித்துள்ளனர். சிக்கந்தர் பாதுஷாவிற்கு நிறைய விழாக்கள் இம்மலையில் நடக்கிறது. இம்மலை மிகச் சிறப்பு வாய்ந்த மலை.

பசுமைநடை

நாவலாசிரியர் அர்ஷியா கூறிய தகவல்களை கேட்ட போது தர்ஹா குறித்த அவரது மிக நீண்ட தேடலை அறிந்து கொள்ள முடிந்தது. திருமங்கலத்தைச் சேர்ந்த கவிஞர் ஷாஜகான் தர்ஹா குறித்த தகவல்களை சுருக்கமாக பேசினார். கீழே கந்தர் இருக்கிறார். மேலே சிக்கந்தர் இருக்கிறார். தர்ஹாக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. தர்ஹாக்கள் கூடாது என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சொல்கின்றனர். தர்ஹாக்கள் குரான் அடிப்படையில் இல்லையென்பது அவர்கள் வாதம். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். தர்ஹா அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் இடமாக இருப்பதால் நம்மை போன்ற பொது சிந்தனையாளர்களாளும் கொண்டாட வேண்டிய விசயம். எளிய மனிதர்களிடம் மதம் என்பது கையெடுத்து கும்பிட்டுச் செல்வதாகத்தானிருக்கிறது. மதவாதம் தலைதூக்கிற இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடமாக தர்ஹாக்கள் இருக்கிறது.

வழிபாடு

சிக்கந்தர் பாதுஷாவின் நினைவிடத்திற்கு சென்று ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வணங்கிப்பின் கீழே இறங்கத் தொடங்கினேன். தர்ஹாவில் ஒரு பெட்டிக்கடையிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து சமைத்து உண்கிறார்கள். அடிவாரத்திலிருந்து உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை தலைசுமையாக கொண்டுவந்து இங்கு வைத்து சமைத்து சேர்ந்து உண்கிறார்கள். பார்க்கும்போதே நமக்கும் குடும்பத்தோடு இப்படி வந்து திரிய வேண்டுமென்ற ஆசையேற்படுகிறது. பசுமைநடைக்குழுவோடு மதுரையிலுள்ள எல்லா மலைகளிலும் சுற்றி திரிந்து அங்குள்ள மரத்தடிகளில் உரையாடிக்கொண்டே இட்லி தின்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

வானரம்திருப்பரங்குன்றம் மலைமீது தெரியும் பெரிய மரத்தைப் போய் பார்த்தோம். சிறுமிகள் யாராவது ஒற்றைக்குடுமி போட்டிருந்தால் என்ன திருப்பரங்குன்ற மலை மாதிரியிருக்கு என கேலி செய்வேன்? அந்த மரத்தை இந்நடையில் அருகில் பார்த்தேன். மலையை விட்டு இறங்கும் போது எங்கும் அமராமல் ஒரே மூச்சோடு இறங்கினேன். கீழே உள்ள பழனியாண்டவர் கோயிலில் உணவு அருந்தினோம். நடை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சென்றாண்டு பிப்ரவரியில் இம்மலைக்கு வந்த போது அடுத்து ஒருமுறை தர்ஹாவிற்கென தனியே வரவேண்டுமென பேசியது நினைவிற்கு வருகிறது. ஒருவருடம் கழித்து அதுவும் சாத்தியமாகிவிட்டது. தர்ஹா குறித்த தகவல்களை என்னிடம் தந்து அதைக்குறித்து மேலும் உரையாடிய எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கு நன்றி. இந்த நடையை அற்புதமாக நிழற்படங்களில் காட்சிப்படுத்திய அருண் அவர்களின் படங்களை அவரது அனுமதியோடு பகிர்ந்துள்ளேன். அவருக்கும் நன்றி. நீண்ட பதிவை பொறுமையுடன் வாசித்த அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

pallivasaal

இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை!

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை!

குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. மதுரையில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர். மதுரையில் இஸ்லாமியர்கள் பாண்டியர்கள் காலந்தொட்டே வசித்து வருகின்றனர். நான் பிறந்த பகுதியான முனிச்சாலை, சந்தைப்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம். அண்ணாநகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில்தான் முதலிரண்டு வகுப்புகள் படித்தேன். இஸ்லாமின் சூஃபி மார்க்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உண்டு. மதுரையில் பள்ளிவாசல்கள் தர்ஹாக்கள் குறித்தும், ரமலான், மொஹரம் போன்ற பண்டிகைகள் குறித்தும், சந்தனக்கூடு போன்ற திருவிழாக்கள்  குறித்தும் எழுத வேண்டுமென்ற ஆசையை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானிலிருந்து தொடங்குகிறேன். இன்ஷா அல்லா, சிறப்பாக இத்தலைப்பின்கீழ் பதிவுகள் தொடருமென நம்புகிறேன்!

மதுரையில் இஸ்லாம் குறித்து எழுத்தாளர் அர்ஷியா மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மிக அருமையான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய இக்கட்டுரையின் சுட்டியை மட்டும் வழங்கியிருக்கலாம்தான். இருப்பினும் பொருத்தம் கருதியும், வாசிப்புத் தடை இல்லாதிருக்கவும் அதை அப்படியே இங்கே சில புகைப்படங்கள் மட்டும் சேர்த்து இடுகிறேன். இரு நிழற்படங்கள் குணாஅமுதன் போட்டோகிராபி முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இருவருக்கும் நன்றிகள் பல.

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்

மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது                                               

– எஸ்.அர்ஷியா

முஸ்லிம்களை விட்டுவிட்டு மதுரையின் சிறப்பை எழுதுவதென்பது, சிற்பத்துக்குக் கண் திறக்காதது போல முழுமைபெறாமல் போய்விடும். முஸ்லிம்களும், அவர்களின் ஏற்ற இறங்கங்கள் நிறைந்த வாழ்நிலையும் மதுரை மண்ணோடு இரண்டறக் கலந்து கிடக்கிறது. சரித்திரங்கள் வரையறுத்துச் சொல்லும் மாலிக் கபூரின் படையெடுப்புக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் மதுரையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு, மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் அத்தனை பேரின் ஆதரவும் இருந்திருக்கிறது. தங்கள் படைகளில் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள். கூன் பாண்டியனின் தளபதியாக முஸ்லிம் ஒருவரும், படைவீரர்களாக எண்ணற்றவர்களும் இருந்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களின் படைக்குத் தேவையான ஆயுதங்களை முஸ்லிம்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆயுதத் தொழிற்சாலைகள் இருந்த இடம்தான் கொல்லன் பட்டறை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்தவர்களின் வாரிசுகளே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் தொழில், கருவிகள் செய்வதாகவே இருந்து வருகிறது.

கி.பி.பனிரெண்டாம்நூற்றாண்டில், ஆற்ற முடியாத வேதனையில் தவித்துக்கிடந்த மதுரை மன்னனின் வெக்கை நோய்க்குச் சிகிச்சையளித்து, அவனது அபிமானத்தைப் பெற்ற சூபி ஞானிகள் சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா, மதுரையின் திருப்பரங்குன்றம் பகுதியை ஆண்ட சிக்கந்தர் பாதுஷா, நோய்வாய்ப்பட்ட மக்களின் துயரை நகரின் மத்தியப் பகுதியிலிருந்துத் துடைத்த மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் ஆகியோர், தங்களின் சேவைகளினூடேயே இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்களின் சேவைகளாலும் அந்த மார்க்கம் காட்டிய நல்வழிகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள், முஸ்லிம்களாக மதம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மதுரை மண்ணின் மொழியான தமிழை, தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள்.

மதம் பரப்பிய சூபி ஞானிகளுக்கு பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் கட்டிக்கொள்ள இடம் கொடுத்து, மதுரை மன்னர்கள் சிறப்பு செய்திருப்பது, தமிழ் மண்ணில் முஸ்லிம்கள் காட்டிய பற்றின் வெளிப்பாட்டினால்தான். அப்படி எழுப்பப்பட்டவைகளில் ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவும் பள்ளிவாசலுமாகும். இந்துக் கோவில்களின் வேலைப்பாடுகள் அதன் உள்ளும் புறமும் காணப்படும். 70 அடி விட்டங்கொண்ட அரைக்கோள வடிவத்தில் மேற்புறமும் 20 அடி உயரமும் கொண்டது, தர்ஹாவின் உட்பகுதி. இந்த தர்ஹாவின் உள்ளே சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. மதுரை மக்களின் நோய்த் தீர்க்கும் நம்பிக்கைத் தருபவர்களாக, இன்றும் அவர்கள் இருந்து வருகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், இங்கு வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, மதங்களைத் தாண்டிய சமத்துவத்தைக் கொண்டதாக இருந்து வருகிறது.

தெற்குவாசல் மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் தர்ஹாவும், பள்ளிவாசலும் கூட அப்படிக் கட்டப்பட்டக் கலை வடிவங்கள்தான். இங்கும் மாலைநேரங்களில் வந்து மந்திரித்துத் தாயத்துக் கட்டிக்கொண்டு செல்லும் அனைத்துச் சமூக மக்களையும் பார்க்க முடியும்.

அன்னியப் படையிடம் தோல்வி கண்டு ஓடிய சிக்கந்தர் பாதுஷா, (கி.பி. 1195 – 1207) திருப்பரங்குன்றம் மலை மீது தங்கியிருந்தபோது மரணத்தைத் தழுவ, அந்த இடத்தில் அவருக்கு சமாதியும் தர்ஹாவும் கட்டப்பட்டுள்ளது. இங்கும், மனநலம் குன்றியவர்கள், வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

வைகையையும் வளமையான ஆட்சியையும் கொண்டிருந்த மதுரை மன்னர்கள், தங்கள் படைகளுக்குத் தேவையான குதிரைகளை, அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்துள்ளனர். குதிரைகளைக் கொண்டுவந்த அரேபிய வியாபாரிகளுக்கும் மதுரை மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் அவர்களுக்குள் உறவுமுறைகளும் உருவாகியிருக்கின்றன. பாண்டிய மன்னர்கள், அரேபியர்களின் வருகைக்கு பெரும் ஆதரவு தந்துள்ளனர். அவர்கள் தந்த ஆதரவு, இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்கதரிசிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது.

 கி. பி. 12ம் நூற்றாண்டில், ஓமன் தேசத்திலிருந்து ஹஜரத் சையத் தாஜூதீன் என்பவர் மதுரைக்கு நேரடியாக வந்து தங்கி, இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பியிருக்கிறார். முகமது நபியின் நேரடி வாரிசான ‘சையது’ தானென்று சொல்லிக்கொண்ட அவருக்கு, நகரின் நடுப்பகுதியிலேயே மன்னன் கூன் பாண்டியன் இடமளித்துள்ளான். அந்த இடத்தில், முஸ்லிம்களுக்கான முதல் தொழுகைப் பள்ளி கட்டப்பட்டது. தாஜூதீன் முஸ்லிம்களின் மதகுருவான காஜியாகக் கருதப்பட்டார். இன்றுவரை, அவரது வாரிசுகளே காஜிக்களாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கமும் அந்த வாரிசுகளை மட்டுமே மாநகரின் காஜிக்களாக நியமித்து சிறப்புச் சேர்த்து வருகிறது. மாநகரக் காஜியின் கட்டுப்பாட்டில் பெருவாரி முஸ்லிம் மக்களின் நிக்காஹ் எனப்படும் திருமணப் பதிவு, தலாக் எனும் ம(ன)ண முறிவு உள்ளிட்ட பல அதிகாரங்கள் இருந்து வருகின்றன.

மதுரையின் மிக முக்கியப் பகுதியாகக் கருதப்படும் காஜிமார் தெருவில், காஜிகளுக்கு முன்பே ‘கூடுவாலா’ என அழைக்கப்படும் வெல்லம் காய்ச்சி வியாபாரம் செய்த முஸ்லிம் மக்கள், இருந்திருக்கிறார்கள். அவர்களிடையே மதத்தை வேரூன்றச் செய்ய வந்த காஜிக்களின் வருகை, முன்னமே குடியிருந்தவர்களை இடம்பெயரச் செய்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் வசித்துவந்த கூடுவாலாக்கள், இன்று நகரின் பல பகுதிகளுக்குச் சிதறிச்சென்று, எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாகிப் போய்விட்டனர். இதே பகுதியில் கலைநயமிக்க ஜரிகை வேலைப்பாட்டுத் தொழில் செய்யும் முஸ்லிம் மக்கள், பெருமளவில் இருந்து வருகின்றனர். ‘ஜர்தாரி’ என்றழைக்கப்படும் இவர்கள் வசிக்கும் தெருவுக்குப் பெயர், ஜர்தாரி மஹல்லா. அதாவது ஜரிகைக்காரத் தெரு.

பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி. 1311 ல், தில்லியை ஆண்ட அலாவூதீன் கில்ஜி, தனது படைத் தலைவனான மாலிக் கபூரை மதுரையை – மீனாட்சிக் கோவிலை – வெற்றிகொண்டு, அங்கிருக்கும் நகைகள், வைரங்கள், விலைமதிக்க முடியாத பொருட்களை அள்ளிக்கொண்டு வர கட்டளையிடுகிறான். மதுரையின் எல்லைக்கு வந்துசேர்ந்த மாலிக் கபூரை, பாண்டிய மன்னனின் படைத் தலைவனான முஸ்லிம் ஒருவனே எதிர் கொள்கிறான். பாண்டிய மன்னனின் படை ஒன்றும் வலுமிக்கதாக இல்லை. ஆனாலும், படைத்தலைவன் தைரியமாக எதிர்த்து நிற்கிறான். அவனிடம் மாலிக் கபூர், ‘நீயும் முஸ்லிம்… நானும் முஸ்லிம்… பேசாமல் என்னுடன் சேர்ந்து விடு’ என்கிறான்.

பாண்டிய மன்னனின் படைத்தலைவன் சொல்கிறான்… ‘மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது’ என்று மறித்து நிற்கின்றான். அவனை எளிதாக வென்றான், மாலிக் கபூர் என்பது சொல்லப்பட வேண்டியதில்லை.

vaigai

மாலிக் கபூரின் வெற்றிக்குப் பின், மதுரை பல்வேறு முஸ்லிம் மன்னர்களால் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. இக்கால கட்டத்தில், மதுரை நகரம் பல்வேறு கட்டமைப்புகளைப் பெற்றது. வைகை ஆற்றைக் கடந்தே ஊருக்குள் வரும்படியான முறை ஒன்று இருந்திருக்கிறது. அப்போது, ஊருக்குள் நுழைபவர்களிடம் சுங்கவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் செய்யப்பட்ட அந்த இடம், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலாக உருமாறியது. அதற்கு சுங்கம் பள்ளிவாசல் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

townhallroad

மீனாட்சி கோவிலைச் சுற்றி, பெருவாரியான முஸ்லிம்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் நிறைய நிலபுலன்கள் இருந்துள்ளன. கோவிலைச் சுற்றி இந்து மக்கள் குடியேறவும், இந்துக்களுக்கான விழாக்கள் தங்குதடையின்றி நடைபெறவும் ஏதுவாக மனமுவந்து, பரிவர்த்தனை முறையில் சுற்றுப் பகுதியிலிருந்துக் கிளம்பி, சற்றுத்தள்ளி தங்கள் குடியிருப்புகளை முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டுள்ளனர். கோவிலுக்கு சற்றுத்தள்ளி அமைந்துள்ள மேலமாசி வீதியின் பள்ளிவாசல் அப்படியாக அமைக்கப் பெற்றதுதான். இந்துமடங்களின் அமைப்பைப் போலவே தோற்றத்தில் காணப்படும் இப்பள்ளி வாசலைச் சுற்றியுள்ள பகுதியில், பெருமளவு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். மதுரையின் மிக முக்கிய பள்ளிவாசலான இது, ‘மார்கஸ்’ என்றழைக்கப்படுகிறது. மக்களிடையே மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் ‘தப்லிக்’குகளை வரவேற்று, அவர்களுக்கு நகர் குறித்த வழிகாட்டுதலையும், நகரிலுள்ள பள்ளிவாசல்களையும், எந்தப் பகுதியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற குறிப்புகளையும் வழங்கும் முக்கிய இடமாக, இது இருந்து வருகிறது.

 மதுரையை ஆண்டவர்களில் மிக முக்கியமான முஸ்லிமாகக் கருதப்படுபவர்களில் கான் சாகிபுக்கு நிச்சயம் இடமுண்டு. அவர் காலத்தில் (கி.பி.1759 – 1964) உருவாக்கப் பட்டதுதான் கான்(சா) பாளையம், கான் சா(கிப்) மேட்டுத்தெரு, கான் சா(கிப்) புரம் ஆகியவை. மதுரை கான் சாகிபின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, மீனாட்சிக் கோவிலுக்கு அவர் பல தானங்களைச் செய்திருக்கிறார். அவர் அளித்தக் கொடை இடம்தான், மீனாட்சி கோவிலின் யானைகள் கட்டும் லாயம். அந்தக் கொட்டடியின் மேற்கூரை அப்படியே இஸ்லாமிய கட்டிடக் கலையின் வடிவமாகவே இன்னும் இருக்கிறது.

அதன் பிறகு மதுரையின் தாசில்தாராகவும், மீனாட்சி கோவிலின் நிர்வாகியாகவும் ஏழரைப் பங்காளி வகையறாவின் மூலகர்த்தா சையத் இஸ்மாயில் இருந்து வந்திருக்கிறார். மீனாட்சிக் கோவில் அருகேயுள்ள (தாசில்தார்) பள்ளிவாசலைக் கட்ட அவர் நன்கொடைகளையும் வழி முறைகளையும் சொல்லியிருக்கிறார். அவரது முயற்சியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசலுக்கு தாசில்தார் பள்ளிவாசல் என்ற பெயரை வைத்து (கி.பி. 1811) அப்பகுதி முஸ்லிம்கள் கெளரவித்திருக்கிறார்கள். அப்பகுதியிலேயே குடியிருந்த அவர், அல்லங்காடியின் ஜன சந்தடியிலிருந்து விலகி, புறநகர் ஒன்றை அமைத்து அங்கே குடியேறியிருக்கிறார். அந்தப் புறநகர் பகுதிதான், இன்றைய இஸ்மாயில்புரம். அடுத்தடுத்து 19 தெருக்களையும் அதனைத் தொடர்ந்து ஓலைப்பட்டிணம் என்ற பெயரில் மூன்று சந்துகளையும் அமைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர் சந்தைப்பேட்டை பகுதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இஸ்மாயில் புரத்தில் அவர் கி.பி. 1897 ல் உருவாக்கிய பள்ளிவாசல், நூர்தீன் பள்ளிவாசல் என்றழைக்கப்படுகிறது. தனது தாசில்தார் பதவி காலத்தில், மீனாட்சி கோவிலின் உள்ளே பேச்சியம்மன் மண்டபத்தின் வாயிலில் 616 அடுக்குகளில் பொருத்தப்பட்ட பலநூறு விளக்குகளைக் கொண்ட தோரணம் ஒன்றை அமைத்துள்ளார். 1819 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி அமைக்கப்பட்ட அந்த விளக்குத் தோரணங்களின் பக்கவாட்டில், அதை தாசில்தாராகப் பணியாற்றிய சையத் இஸ்மாயில் அமைத்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே முஸ்லிம் மக்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பகுதிகள்தான் மஹபூப் பாளையம், அன்சாரி நகரம், அசனுதீன் சாகிப் தெருக்கள் ஆகியவை.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. அன்றைய மதுரையில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சுதந்திர வேள்வியின் அனைத்துப் போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கிலாபத் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் போலிஸின் எதிர்ப்பையும் மீறி தாசில்தார் பள்ளிவாசலிலிருந்து காலேஜ் ஹவுஸ் வரை போராட்ட ஊர்வலத்தை நடத்திச் சென்றுள்ளார், மெளலானா சாகிப். கள்ளுக்கடை போராட்டத்தில் மைதீன் அப்துல் காதர், மெளலானா சாகிப், அவரது சகோதரர் முகம்மது இப்ராஹிம், சம்சுதீன் சாகிப், உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். சட்ட மறுப்புப் போராட்டத்தின்போது காந்தி, ஜனவரி 4, 1932 ல் கைதான நேரத்தில் பெரும் போராட்டம் நாடெங்கும் நடந்தது. மதுரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கைதானார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள்.

1942 ல் நாடெங்கும் இந்து – முஸ்லிம் கலவரம் நடந்தபோது, மதுரையின் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதி காத்து, சகோதரத்துவத்தை நாட்டுக்கு எடுத்துக் காட்டினர். 1942 – 44 களில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மதுரையில் முஸ்லிம்களான டி.எஸ்.அப்துல் ரஹிம், சாஹித் சாகிப், சையத் அஹமத் சாகிப், பி.மொய்தீன் கான், மீரா மொய்தீன், அப்துல் ரஜாக், மெளலானா சாகிப் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

இலக்கியத்திலும் மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பென்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த மஹதி என்பவர் வெடிகுண்டு, சிட்டி கெஜட் ஆகிய பத்திரிகைகளை நடத்தி வந்திருக்கிறார். சுதந்திரத் தாகமூட்டும் அவரது பணி செவ்வன நடந்திருக்கிறது. ஏழரைப் பங்காளி வகையறாவைச் சேர்ந்த எஸ். சையத் இஸ்மாயில் இண்டியன் பிரஸ் எனும் அச்சகத்தை நடத்தி, உத்வேகமூட்டும் சுதந்திரப் பணிகளைச் செய்ததுடன், நூருல் ஹக் எனும் இஸ்லாமிய பத்திரிகையையும் நடத்திவந்தார். இன்றும் மதுரை இலக்கியப் பணியில் முன்னணியிலேயே உள்ளது. குர்ஆனின் குரல், சிந்தனைச் சரம், மறைச் சுடர் ஆகிய இஸ்லாமிய பத்திரிகைகள் பல ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் வெளியாகின்றன. இஸ்லாமியத் தளத்திலிருந்து வெளியாகும் புதிய காற்று, இடதுசாரி சிந்தனையுடன் வெளியாகும் ஒரு முக்கியப் பத்திரிகையாகும்.

எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் மதுரை முஸ்லிம்கள் படைப்புலகிலும் இருந்து வருகின்றனர். வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஜே. ஷாஜஹான், எஸ். அர்ஷியா ஆகியோர் அவர்களில் முக்கியமானோர். அதுபோல மறைந்த எழுத்தாளர் ஜியாவுதீனின் படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

மதுரை முஸ்லிம்களின் பொருளாதார நிலை என்பது, கவலைக்கிடமான ஒன்றாகவே இருக்கின்றது. கல்வி கற்றோரின் எண்ணிக்கை முஸ்லிம்களில் மிகவும் குறைவு. அதனால் அரசின் உயர் பணிகளில் இருந்தோர், இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. முன்னோர்களின் சேமிப்பை செலவு செய்து வாழும் மேம்போக்குத்தனம் இம்மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் தொழில் என்பது, பத்தி உருட்டுதல், பாய் முடைதல், எவர்சில்வர் பட்டறையில் கூலிவேலை, இரும்புப் பட்டறை, தகரத் தொழில்கள், கட்டிட வேலை போன்றவற்றிலேயே ஈடுபட்டுள்ளனர். சவரத் தொழில் மற்றும் சலவைத் தொழில் செய்யும் முஸ்லிம்களும் மதுரையில் உள்ளனர். பெண்களை மார்க்கக் கல்வி தவிர்த்த பொதுக்கல்வி கற்க வெளியே அனுப்புவது, சமீப காலமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதையே மிகப்பெரிய முன்னேற்றமாகமாக கருதவேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் உணவுப் பழக்கம் அசாதாரணமாகிவிட்டது. பண்டிகைக் காலங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பிரியாணி, தற்போது விடுமுறை தினத்துக்கான உணவாக மாறிவிட்டது. பஸவ், மொகல் பிரியாணி போன்ற அதிக அளவில் கறியும் மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்ட வகைகள் அவர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. மிட்டா கானா, பீர்னி, முத்தஞ்ஜன் போன்ற இனிப்பு வகைகள் யாரையும் சுவையால் கட்டிப் போடக் கூடியவை.

 பல நூற்றாண்டு காலமாக மதுரை முஸ்லிம்களின் ஆடைகளில் ஒரு ‘ஜிகுஜிகு’த் தன்மை இருந்து வந்தது. பளபளப்பான, வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளையே ஆண்களும் பெண்களும் விரும்பி அணிந்து வந்தனர். வசதி நிறைந்தவர்களின் நகை அலங்காரமும், வாசனைத் திரவிய வீச்சமும் பிரசித்தியானது. சமீப காலமாக அவர்களின் ஆடை, அலங்காரம் குறித்த செயல்பாடுகளில் பெரும் வித்தியாசம் தோன்றியிருக்கிறது என்றபோதும் காஜிமார் தெரு போன்ற பகுதிகளில் தொன்மையான கலாச்சாரம் கைவிடப்படாமல் தொடர்ந்து வருகிறது.

santhankkoodu

எந்தவொரு இனப்பண்பாடும் அதன் திருவிழாக்களின் மூலமே வெளிப்படும். அந்த வகையில், மதுரை முஸ்லிம்கள் கொண்டாடும் திருவிழாக்களாக கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக் கூடு, முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் நடக்கும் தீமித் திருவிழாக்கள் இருந்து வருகின்றன. அல்லாஹ்வுக்கு இணையாக எதுவுமில்லை என்று மார்க்கம் வலியுறுத்தி வரும்போதும், இதுபோன்ற திருவிழாக்கள் மண்ணின் கலாச்சாரத்தை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடும், அதைத் தொடர்ந்து வரும் ஜஹாஜூம் காணக் கண்கோடி வேண்டும் அம்சங்களாகும். நோன்பு நோற்று, விரதமிருந்து, நேர்த்திக் கடனை நேர் செய்யும் பழக்கம் இந்துக்களை போலவே முஸ்லிம்களிடமும் இருந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலைமீது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பாத்திஹாவின்போது, தீயில் இறங்கும் பூக்குழி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. ஏராளமான முஸ்லிம் பெண்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கும் பழக்கம், கால காலமாக நீடித்து வருகிறது. வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம் பெண்கள் இதுபோன்ற விழாக்களின்போது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், சில மணி நேரங்கள் வெப்பமற்றக் காற்றை சுவாசிக்கும் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்.

மதுரை முஸ்லிம்களுக்கென்று, தனித்த குணமென்று ஒன்றுண்டு. அது மற்றவர்களுடன் அனுசரித்துப் போவது. தேசமே இந்து – முஸ்லிம் கலவரத்தில் வெட்டுக் குத்துக்களாலும், தீச்சுவாலைகளாலும் தகித்துக் கொண்டிருந்தபோது, மதுரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவொரு பிரச்சனையுமின்றி அப்பு – மகன் உறவிலும், மாமன் – மச்சான் உறவிலும் கைகோர்த்து சகிப்புத் தன்மையை வெளிக்காட்டிக் கொண்டனர். இந்த குணம் வேறு எந்த ஒரு ஊருக்கும் கிடைக்காத அற்புத வரமாகும். அந்த நிலை இன்றும் தொடர்வது, இந்துக்களும் முஸ்லிம்களும் பரஸ்பரம் காட்டிவரும் உறவு முறைக் கண்ணியமாகும்.

நன்றி:

எஸ்.அர்ஷியா

http://arshiyaas.blogspot.in/2009/09/blog-post_09.html