Archive for the ‘மதுரையில் சமணம்’ Category


a«ña»Ça«¬a«+a«¦a«¦a«+a«¿a«+a«»a«òa«¬a»ì

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள். சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர். அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண  மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். அந்நன்னாளே இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பது போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.  

 –  இரா.பானுகுமார், தமிழ்ச்சமணம்

கொங்கர்புளியங்குளம், மதுரையிலிருந்து செக்காணூரணி செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. கொங்கர்புளியங்குளத்திற்கு சகோதரரோடு ஒருமுறையும், பசுமைநடைக்குழுவோடும் ஒருமுறையும் சென்றிருக்கிறேன். அதைக்குறித்து மதுரை கொங்கர்புளியங்குளமும் கி.மு.இரண்டாம் தமிழ்பிராமிஎழுத்துருவும், பஞ்சபாண்டவமலையில் பசுமைநடைப்பயணக்குறிப்புகள் என்று இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். இம்முறை கொங்கர்புளியங்குளத்திற்கு பசுமைநடையாக 20.10.2013 அன்று சென்றிருந்தோம். சாந்தலிங்கம் அய்யா வந்ததால் இம்முறை இன்னும் நிறையத் தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

a«¬a«Üa»üa««a»êa«¿a«ƒa»ê

முதல்நாள் பெய்தமழையால் வழியெங்கும் பசுமையாகயிருந்தது. ஈரநப்படித்து மலையைப் பார்ப்பதற்கு மிகவும் இரம்மியமாகயிருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பேர் தங்குமளவிற்கு படுகைகளை செதுக்கியுள்ளனர். இதை செய்வித்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது. அதை சாந்தலிங்கம் அய்யாவிடம் கல்வெட்டுக்கலை பயிலும் நண்பர் ராஜன்னா தமிழ்பிராமி எழுத்துக்களை ஆர்வமாக பாறையில் வாசித்துப் பார்த்தார். இந்நடை குறித்த அனுபவங்களை அழகான நிழற்படங்களோடு பதிவாகவும் எழுதியுள்ளார். எல்லோரும் கூடியதும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார்.

santhalingam

a«¦a«¦a«¦a«+a«¦a»ìa«¦a»üa«¦a«òa»üa«¬a»ìa«¬a»ü

a«¬a«+a«»a»ìa«Üa»ìa«Üa«¦a»ì

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இம்மலையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். மதுர வரலாறு நூல் முதல் பதிப்பு தீர்ந்து அடுத்த பதிப்பு தயாராகிக் கொண்டிருப்பதை அறிவித்தார். அடுத்த நடை அவனியாபுரம் அருகில் இராணிமங்கமாள் சிலை உள்ள பழமையான கோயிலுக்கு செல்வோம் என்றார். இதுபோல நாம் தொடர்ந்து பயணிப்பதன் மூலம் திறந்தவெளி மதுக்கடைகளாக மாறிவரும் மலைகள்  ஓரளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதையும் கூறினார். மேலும், இங்குள்ள மதுபானப்புட்டிகள், குப்பைகளை விருப்பமுள்ளவர்கள் அகற்றினால் உதவியாக இருக்கும் என முத்துக்கிருஷ்ணன் கேட்டுக்கொள்ள தன்னார்வமாக பலரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தோம். பின் அங்கிருந்து மலைமேல் ஏறி சுற்றிப்பார்த்தோம். நாகமலை மிக அருகில் எழிலோடு காட்சியளித்தது. மலைகளிலிருந்து வேடிக்கை பார்க்கும் போது மனம் இலகுவாகிறது. பறவைக்கோணத்தில் ஊர்களைப் பார்க்கும் போது ஏற்படும் இன்பத்தை சொல்லில் அடக்க முடியாது.

a«¿a«+a«òa««a«¦a»êa«»a«+a«¬a»ì a«Äa«¦a«+a«¦a»ì

எல்லோரும் காலை நேரத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டும், படமெடுத்தும் கொண்டும் இருந்தனர். பின் மலையை விட்டு மெல்ல இறங்கினோம். பாறையிலிருந்து மௌனமாக மகாவீரர் தன்னைக் காணவந்த பசுமைநடை குழுவினரைப் பார்த்து புன்னகையோடு விடைகொடுத்தார். மலையடிவாரத்தில் உள்ள நாட்டார் தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அதை கொஞ்சம் வாங்கி உண்டோம்.

a«¿a«+a«ƒa»ìa«ƒa«+a«¦a»ìa«¬a»èa«Öa»ìa«òa«¦a»ì

அனைவரும் மலையடிவாரத்தில் உள்ள மாயன் கோயில் முன்புள்ள மரத்தடியில் உணவருந்தினோம். இட்லியோடு கேப்பை ரொட்டி, கொள்ளுப் பொடி என இயற்கை உணவு கொஞ்சம் வழங்கினர். மிக மகிழ்வோடு உண்டு உரையாடி அங்கிருந்து கிளம்பினோம்.

a«ëa«úa«¦a»ü

இம்முறை பசுமைநடைக்கு எங்கள் வீட்டுக்கருகிலுள்ள சிறுவன் மற்றும் இராஜபாளையத்திலிருந்து பசுமைநடைக்கு தொடர்ந்து வரும் சகோதரியின் மகனுடன் சென்றிருந்தேன். பள்ளி மாணவனான சிறுவனுக்கு இந்நடை பெரும் உற்சாகத்தைத் தந்தது.

a«¬a»üa«ña«+a«»a«¬a«»a«úa«+

கொங்கர் புளியங்குளம் குறித்த மற்ற பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள். கொங்கர் புளியங்குளத்தின் அழகைக் காண நண்பர் இளஞ்செழியனின் ‘குவியம்’ பாருங்கள். கொங்கர்புளியங்குளம் பசுமைநடை குறித்த நண்பர் வேல்முருகன் அவர்களின் பதிவையும் வாசியுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Tiruvadhavur 1

வேண்டத் தக்க தறிவோய்நீ                                    வேண்ட முழுதும் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ                      வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டிநீ யாதருள்செய்தாய் யானும்             அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்               அதுவும் உன்றன் விருப்பன்றே  

– திருவாசகம்

சமயக்குரவர் நால்வரில் மாணிக்கவாசகரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அவரும் மதுரை வாசகர். பசுமைநடைக்குழுவாக மதுரையிலுள்ள தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை குழுவாகப் பயணித்து வருகிறோம். இம்முறை திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூருக்குச் சென்றோம். இந்த ஊரில் உள்ள ஓவா மலையில் சமணத்துறவியர் தங்கிய சுவடுகள் காணப்படுகிறது. சனிஸ்வரனுக்கு வாதநோயைப் போக்கிய திருமறைநாதர் ஆலயம் இந்த ஊரில் உள்ளது.

22.09.2013 அன்று அதிகாலை எழுந்து நானும், சகோதரியின் மகனும் கிளம்பி சென்றோம். எங்களுக்கு முன்னதாகவே மாட்டுத்தாவணி முன்னுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் முன் சென்னையிலிருந்து பாபுவும், முருகராஜூம் வந்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வர அரட்டை களைகட்டியது. எல்லோரும் வந்ததும் இரண்டு பேருந்துகளில் திருவாதவூர் நோக்கிச் சென்றோம். மாட்டுத்தாவணிக்கு அருகிலுள்ள தோரணவாயிலுக்குள் யானைமலை அழகாக வரவேற்றது. பார்த்தாலே பரவசம்.

யானைமலை ஒத்தக்கடையிலிருந்து வலப்புறமாக திரும்பி திருமோகூர் – திருவாதவூர் செல்லும் சாலையில் சென்றோம். வழிநெடுக வேடிக்கை பார்த்துக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டே சென்றேன். திருமோகூர், தாமரைப்பட்டி, இடையபட்டி, மூக்கம்பட்டி தாண்டி திருவாதவூர் சமத்துவபுரத்திற்கு சற்றுமுன் மலைக்கருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓவாமலையை நோக்கி நடந்தோம்.

greenwalk

ஒருபக்கம் சிறுசிறு குன்றுகளாக மலைகள் வரவேற்றது. மறுபுறம் பாளம்பாளமாக கிடக்கும் மலையைப் பார்த்து கண்ணீர் வந்தது. ஓவாமலை தன் கிளைகளை இழந்து ‘ஓ’வென்று  இருந்தது.  வெய்யோனும் பசுமைநடையில் கலந்து கொண்டதால் வெயில் கொஞ்சம் சுள்ளென்று இருந்தது.

சமணப்பள்ளி உள்ள குன்றை நோக்கி பயணித்தோம். நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் இரண்டு பகுதியாக மலையிலுள்ள படுக்கைகளையும், தமிழ்பிராமிக் கல்வெட்டுகளையும் பார்த்தோம். திருவாதவூர் குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருவாதவூர் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

திருவாதவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். சங்க காலப்புலவர்களில் கபிலர் பிறந்த ஊர். இவரது காலத்தை கி.மு.2-3 ஆம் நூற்றாண்டு எனலாம். பாரிவள்ளலிடம் அமைச்சராக பணியாற்றியவர் கபிலர். பாரி சிங்கம்பிடாரிக்கு அருகிலுள்ள பிரான்மலையை ஆண்டார். கபிலர், பரணர் என்ற இரண்டு புலவர்களையும் சேர்த்தே அக்காலத்தில் சொல்வார்கள்.

திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர். இவர் திருவாதவூரார் என்றே அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு. பாண்டியனிடம் அமைச்சராகப் பணியாற்றிய இவர் தொண்டிக்கருகில் குதிரை வாங்கச் சென்ற போது சிவனால் ஆட்கொள்ளப்பட்டு அறந்தாங்கிக்கருகில் ஆவுடையார் கோயில் கட்டினார். பின் பாண்டியன் குதிரைகளைக் கேட்க நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை சிவன் நிகழ்த்தினார். (இதைக்குறித்து மேலும் அறிய மதுரை வீதிகளில் பசுமைநடை பதிவை வாசிக்கவும்).

padugai

இங்குள்ள சமணப்பள்ளியில் இரண்டு மூன்று பேர் தங்குவதற்கு படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது. குகையின் விளிம்பில் இரண்டு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நீர்வடிவிளிம்பின் மேலுள்ள கல்வெட்டில் ‘பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்’ என்ற வரி காணப்படுகிறது. பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டது எனப் பொருள் கொள்ளலாம். பாங்காட என்பது இவ்வூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரையும் குறிக்கலாம். பனங்காடியில் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது.

kalvettu

அடுத்த கல்வெட்டு குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ் ‘உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்’  என்றுள்ளது. பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது எனலாம். உபசன் என்பது சமய ஆசிரியரைக் குறிக்கும். இக்குகைத்தளத்தில் வட்டவட்டமாக சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

திருமறைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பிற்காலப்பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுகள் கொஞ்சம் உள்ளன. வியாபாரிகளும், தேவரடியார்களும் கோயிலுக்கு சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன. இந்தக் கோயிலில் எழுபதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் இக்கோயிலில் சிலைகள் உள்ளன.

திருவாதவூரைத் தாண்டிச் சென்றால் பெரிய ஏரியொன்று வரும். அதற்கு ‘உலகளந்த சோழன் பேரேரி’ என்று பெயர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்தது. சோழர்கள் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த போது இந்த ஏரி வெட்டப்பட்டிருக்கலாம். இந்த மடையில் புருஷாமிருகம் சிலையுள்ளது. பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்றதை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் ஒன்று இந்த ஊரில் உள்ளது.

அந்தக் காலத்தில் மதுரையிலிருந்து உறையூருக்குச் செல்லும் பாதைகளில் இந்த வழியும் ஒன்றாகயிருக்கலாம். திருமோகூர், திருவாதவூர், பனங்காடி, மேலூர் வழி பெருவழியொன்று இருந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஊர் சங்ககாலத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஊராகயிருக்கிறது.

sivan temple

சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் கேட்டபின் மலையிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி நடந்தோம். அங்கிருந்து திருமறைநாதர் கோயிலுக்கு சென்றோம். குடமுழுக்குக்கான பணிகள் கோயிலில் நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் பழமையான கோயில். மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் திருமறைநாதர் அமைதியாக வீற்றிருக்கிறார். கோயிலுக்குள் எல்லோரும் கூடினோம்.

அய்யாவுக்கு அவர்படம்

ஒவ்வொரு பசுமைநடையையும் அர்த்தமுள்ள நிகழ்வாக்கும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வை கோயில் வெளிப்பிரகாரத்தில் நடத்தினோம். சமணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் ஜெயஸ்ரீ அவர்கள் ராஜன்னா எடுத்த சாந்தலிங்கம் அய்யாவின் நிழற்படத்தை அவருக்கு வழங்கினார்.

பாபுவுக்குப் படம்

அதற்கடுத்து கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை தேடித்தேடி வாங்கி தந்து அவர்களது ஆய்வுகளுக்கு உதவி வரும் புத்தகத்தாத்தா முருகேசன் அய்யா அடுத்த நினைவுப்பரிசை சாந்தலிங்கம் அய்யாவிடம் வழங்கினார். விருட்சத்திருவிழாவில் புகைப்படகலைஞர் ஜேம்ஸ் எடுத்த படத்தை அற்புதமான ஓவியமாக ஓவியர் ரவி வரைந்திருந்தார். அந்தப் படத்தை அவர் பசுமைநடைக்கு வழங்க ஓவியர் பாபு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்நிகழ்வுகளை அழகாக ஒருங்கிணைத்தார். அற்புதமான நிகழ்வு மிக எளிமையாக நடந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்று திருமறைநாதர், வேதநாயகியை வணங்கினோம். குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால் விதானங்களில் வண்ண வண்ண பூக்கோலங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன. கோயில் மிகவும் ரம்மியமாகயிருந்தது. வரவே மனசில்லை. அவ்வளவு அமைதியான இடம். வெளிபிரகாரத்தில் எல்லோரும் சேர்ந்து உணவருந்தினோம். அங்கிருந்து மறக்க முடியாத நினைவுகளோடு கிளம்பினோம். இந்தப் பயணத்தில் எங்களோடு எம்.ஏ.வி.எம்.எம் பள்ளி மாணவர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குகன் & எம்.ஏ.வி.எம்.எம் பள்ளிகளிலிருந்து இந்நடைக்கு பேருந்து உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றிகள் பல.

kulam

பதிவிற்கான நிழற்படங்களை தந்துதவிய நண்பர் ராஜன்னா சிறந்த வாசகர், சூழலியல் ஆர்வலர், பல் மருத்துவர். மதுரக்காரன் என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வருகிறார். மேலும், இவர் எடுக்கும் படங்களில் மந்திரப்பொடியைத் தூவி அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கும்படி செய்துவிடுகிறார்.

ஆவணி புட்டுத்திருவிழாவிற்கு மதுரைக்கு வந்த மாணிக்கவாசகரை மாட்டுவண்டியில் வைத்து மாட்டுத்தாவணிக்கிட்ட சென்ற மாதம் பார்த்தேன். எளிமையாக சென்று கொண்டிருந்தார். சங்ககாலப்புலவர் கபிலர் மீதான காதலை ஜெயமோகனின் ‘காடு’ நாவல் ஏற்படுத்தியது. குறிஞ்சி நிலப்பரப்பில் அலைய வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கிய நாவல் ‘காடு’. நாலு வருடங்களுக்கு முன் நானும் என் சகோதரனும் திருமோகூரிலிருந்து திருவாதவூருக்கு மாலைப்பொழுதில் சைக்கிளில் சென்றது மறக்க முடியாத அனுபவம்.

தினகரன் நாளிதழில் இப்பயணம் குறித்த பதிவு 23.09.2013 அன்று மதுரை செய்திகளில் வந்திருந்தது. தொடர்ந்து பசுமைநடைப் பயணங்களை பதிவு செய்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

மதுரவரலாறு

தமிழின் தாய்வீடான மதுரைக்கு உலகத்தின் எந்த மூலையிலிருந்து நீங்கள் வந்தாலும் உங்களை வரவேற்பது மதுரையைச் சூழ்ந்த மலைகளே. யானைமலை, நாகமலை, அழகர்மலை, சமணமலை, திருப்பரங்குன்றமலை, பசுமலை போன்ற மலைகளைக் காணாமல் மதுரைக்குள் பயணிக்க இயலாது.

நாலாபக்கமும் நான்மாடக்கூடலைச் சூழ்ந்த இம்மலைகள் மதுரைக்கு அழகாகவும், அரணாகவும்  திகழ்கின்றன. தொல்குடிகளின் பாறைஓவியங்களும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும், சமணத்துறவிகளின் காலடித்தடங்களும்  இம்மலையில் உறைந்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் கொடையாய் வழங்குவதை தம் பணியாகக் கொண்ட சமணத்துறவிகளின் அன்புதான் இம்மலைகளிலுள்ள பாறையிடுக்குகளில் ஊற்றாய் இன்றும் கசிந்து கொண்டிருக்கிறது.

book wrapperமலைகள் சூழ்ந்த மதுரையின் தொல்லியல் தலங்களை நோக்கி மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பயணித்த பசுமைநடைக்குழு அந்த பயண அனுபவங்களைத் தொகுத்து ‘மதுர வரலாறு – சமணப் பெருவெளியின் ஊடே…’ என்ற நூலாக வெளியிட்டுள்ளனர். ‘மதுர வரலாறு’ எனும் போதே தித்திப்பாயிருக்கிறது. மதுர என்றாலே இனிமைதானே.

பசுமைநடையின் 25வது நடையைக் சிறப்பிக்கும் விதமாக கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தோப்பில் கொண்டாடிய விருட்சத் திருவிழாவில் மதுர வரலாறு நூலை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா வெளியிட சமணமலை அடிவாரத்தில் பருத்திபால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக் கொண்டார். அற்புதமான நிகழ்வு.

அழகர்மலை, யானைமலை, கீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி, விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், மேட்டுப்பட்டி சித்தர்மலை, திருப்பரங்குன்றம், வரிச்சூர் குன்னத்தூர், மாங்குளம் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், குப்பல்நத்தம், மாடக்குளம் என மதுரையின் வரலாற்றுத்தலங்களைக் குறித்து கல்வெட்டுத் தகவல்களோடும், பேருந்து வழித்தட எண்களோடும் இந்நூல் வந்துள்ளது.

இந்நூலில் சமணமதத்தின் தோற்றமும், தென்னகப் பரவலும் குறித்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் கட்டுரை மதுரையில் சமண வரலாறை எளிமையாக எல்லோருக்கும் எடுத்துரைக்கிறது. பசுமைநடை உருவான விதம் மற்றும் பசுமைநடைப் பயணக்குறிப்புகளை வாசிக்கும் போது மகிழ்ச்சியாகயிருக்கிறது. பசுமைநடைக்குழுவினருடன் இந்த இடங்களுக்கெல்லாம் பயணித்ததால் இந்நூல் இன்னும் எனக்கு நெருக்கமாகிறது.

மதுர வரலாறு நூலை புதிதாக வாசிப்பவர்கள் பசுமைநடையில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். பசுமைநடையில் இணைய 97897 30105 என்ற அலைபேசி எண் அல்லது greenwalkmdu@gmail.com மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும். இந்நூல் வெளிவர காரணமாக இருந்த அனைவருக்கும், விளம்பரங்கள் தந்துதவிய நிறுவனங்களுக்கும், பசுமைநடையை தொடங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் நன்றிகள் பல.

maduraibookfair

மதுர வரலாறு – சமணப்பெருவழியின் ஊடே…

விலை – 100 ரூபாய், பசுமைநடை வெளியீடு

கிடைக்குமிடம்

சர்வோதய இலக்கியப் பண்ணை, மல்லிகை புக் சென்டர்

மேலவெளிவீதி, மதுரை.

குன்னத்தூர்

எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து பசுமைநடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர்குகைகள், படுகைகள், கல்வெட்டுகள், மற்றும் கலைச்செல்வங்களைப் பாதுகாக்கவும் மதுரையின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் பயண இயக்கம் ஒன்றை நடத்திவருகிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் சமண குகைத்தளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வரிச்சியூர், கருங்காலக்குடி, கொங்கர்புளியங்குளம், மேட்டுப்பட்டி, மாங்குளம், நாகமலை, யானைமலை, பெருமாள்மலை, அரிட்டாப்பட்டி, விக்கிரமங்கலம், கீழவளவு, குரண்டி, அணைப்பட்டி, சித்தர்மலை, கீழகுயில்குடி, திருப்பரங்குன்றம், திருவாதவூர், உத்தமபாளையம் போன்ற இடங்களில் சமண சின்னங்கள் காணப்படுகின்றன.  

– எஸ்.ராமகிருஷ்ணன், சமணநடை

எஸ்.ரா’வின் தேசாந்திரி நூல் குறித்த பதிவு எழுதிய போது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசையிருந்ததாக எழுதியிருந்தேன். அந்த ஆசை பசுமைநடை மூலம் நிறைவேறியது. மேலும், பல ஆளுமைகளுடன் பயணிக்கும் வாய்ப்பும் பசுமைநடை மூலம் கிட்டியது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்தாளர். அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.

பசுமைநடை பயணமாக வரிச்சூர்-குன்னத்தூர் என்று கேள்விப்பட்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வருத்தமும் தோன்றியது. மகிழ்ச்சிக்கு காரணம் மாங்குளம் மீனாட்சிபுரத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் சொல்லும் போதே அடுத்த முறை பசுமைநடைக்கு நம்முடன் எழுத்தாளர்களும் வருகிறார்கள் என்றதுதான். வருத்தம் எதற்கு என்று கேட்கிறீர்களா வரிச்சூரில்தான் நான் தொழில்நுட்பவியல் படித்தேன். அந்தப் பகுதியில் படித்தபோது அங்கு இதுபோன்ற மலையிருக்கிறது என்றே தெரியாது. இரண்டு வருடம் அங்கு திரிந்தும் இது குறித்து அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தம்தான்.

04.09.2011 அன்று அதிகாலை நண்பரிடம் வாங்கிய இருசக்கரவாகனத்தில் கிளம்பிசென்றேன். மதுரை ஆவின் பால்பண்ணை வாசலில் எல்லோரும் கூடுவதாக குறுந்தகவல் வந்திருந்தது. அங்கு நான் செல்லும் போதே நிறைய பேர் வந்துவிட்டார்கள். தேநீர்அங்காடி வாசலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்ததும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் போய் வணக்கம் சொல்லி இந்த பசுமைநடைக்கு அவர் வந்தது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக கூறினேன். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரிச்சூர் நோக்கி சென்றோம். படிக்கும் போது இந்த வழிநெடுக பலமுறை பேருந்தில் சென்றிருக்கிறேன். இப்பொழுது நிறைய மாறிவிட்டது. படித்த கல்லூரியை பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை. வரிச்சூர் போய் களிமங்கலம் பிரிவு வழித்திரும்பிச்சென்றோம். கொஞ்ச தூரத்தில் குன்று வந்தது.

உதயகீரிஸ்வரர் குடைவரை

உதயகிரீஸ்வரர்எல்லோரும் வண்டியை நிறுத்திவிட்டு உதயகிரிஸ்வரர் குடைவரைக் கோயிலை நோக்கிச் சென்றோம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கால குடைவரைக்கோயில். சூரிய உதயம் இக்குடைவரையில் உள்ள சிவலிங்கத்தின் மீது காலையில் படும்படி அமைத்திருக்கிறார்கள். மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை. மிகச்சிறிய கோயில். வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் மிகஎளிமையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். இடதுபுறம் குடைவரையோரம் பிள்ளையாரை செதுக்கியுள்ளார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த தகவலைக்கூறினார். இக்குடைவரை எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம் எல்லாம் இதற்கு முந்தியவை. பல்லவர்கள் காலத்தில்தான் இதுபோன்ற குடைவரைகள் அமைக்கப்பட்டன. அதே காலத்தில் பாண்டியர்களும் குடைவரையை அமைத்திருக்கிறார்கள். இதுபோல பல கோயில்கள் மதுரையை சுற்றியிருக்கின்றன். கணபதி வழிபாடு பல்லவர்கள் காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்தது. வணிகர்கள் கணபதியை வைத்து வழிபட்டுவந்தனர். மேலும், அந்தக்காலத்தில் நடுகற்கள் இறந்தவர்களுக்கு எடுத்ததால் கல்லில் கோயில்கள் இறைவனுக்கு எடுக்கப்படவில்லை. பின்னர்தான் இந்த வழக்கம் பரவத்தொடங்கியது. இந்த குடைவரையை விட இம்மலைக்கு பின்னால் உள்ள குடைவரையை சற்று நன்றாக செதுக்கியிருக்கிறார்கள். மேலும், இக்குன்றுக்கு அருகில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச்சார்ந்த சமணர்படுகைகள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாறு சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

சாந்தலிங்கம்

பின் அங்கிருந்து அருகில் சமணர்படுகை இருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றோம். அந்த இடத்தில் வேறுகடவுளை வைத்து தற்போது  பொதுமக்கள் வழிபடும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் படுகைக்கு மேலே முகப்பில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன். இதில் ஒரு கல்வெட்டு அந்தக்காலத்தில் நூறுகலம் நெல் கொடையாக வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இந்த மூன்று கல்வெட்டுகளையும் சாந்தலிங்கம் அய்யா வாசித்துக்காட்டினார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

பிறகு பேராசிரியர் சுந்தர்காளி இந்தநடை குறித்து உரையாடினார். இந்த நடைக்கு பலர் வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்களுடன் இதுபோன்ற இடங்களுக்கு வருவதைக் குறித்தும், அதைப் பதிவு செய்ய வேண்டிய கடமை குறித்தும் விரிவாக பேசினார். சமணநடை என்ற அவரது பதிவை வாசியுங்கள். அங்கிருந்து அஸ்தகீரிஸ்வரர் குடைவரை நோக்கி நடந்தோம். மிக அழகாக குடைவரை செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்.

அங்கிருந்து அருகிலுள்ள பழமையான கோயிலைப் பார்க்க சென்றோம். மிக அருமையான இடம். பசுமைநடை குறித்த அனுபவங்களை சில நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். சு.வேணுகோபால் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அவருடைய வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு வாசித்ததை சொன்னேன். அங்கிருந்து மதுரை சரவணனுடன் பேசிக்கொண்டே கீழ்குயில்குடி ஆலமரத்தடிக்கு வலசை கூட்டத்திற்கு சென்றேன். மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது பெற்றதற்காக பாராட்டுவிழா நடந்தது. அருமையான நிகழ்வு. இந்த நாள் இனிய நாள்.

எழுத்தாளுமைகள்

கவிஞர் தேவதேவன், ஆவணப்பட இயக்குனர் இளங்கோவன், அவரது துணைவியார் கீதா இளங்கோவன். தமிழினி வசந்தகுமார், எழுத்தாளர் வேணுகோபால். எழுத்தாளர் அர்ஷியா, குறும்பட இயக்குனர் அருண்பிரசாத், பேராசியர் சுந்தர்காளி, ஓவியர் பாபு என நிறைய ஆளுமைகள் இப்பயணத்தில் கலந்து கொண்டார்கள்,

படங்கள் பசுமைநடை முகநூல் பக்கத்திலிருந்தும், அ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய பதிவிலிருந்தும் எடுத்தேன். நன்றி. இது மீள்பதிவல்ல, முதல்பதிவுதான். இதுபோல எழுத்தாளுமைகள் பலரையும் சந்திக்க பசுமைநடை 25 விருட்சத்திருவிழாவிற்கு கீழக்குயில்குடி சமணமலையடிவார ஆலமரத்தடிக்கு வாருங்கள். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் மற்றும் பல ஆளுமைகள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

அனைவரையும் அன்புடன் விருட்சத்திருவிழாவிற்கு அழைக்கிறோம்.

எதிர்வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் பசுமைநடை 25: விருட்சத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

invitation front

invitation back

(அழைப்பிதழை முழு அளவில் காண படத்தின்மேல் சொடுக்கவும்)

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு (நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்குமே) நேரடிப் பேருந்து வசதி உள்ளது. வழித்தட எண் 21C. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலையிலிருந்து மதியம் வரை பேருந்து கிளம்பும் நேரங்கள்: 05.35, 07.05, 07.15, 08.30, 10.05, 11.35, 12.55. (பத்து நிமிடங்கள் முன்பின் ஆகலாம்).  கீழக்குயில்குடி சமணமலை கருப்பு கோயில் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

மற்றபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழியாகச் செல்லும் எந்தப் பேருந்திலும் வந்து நாகமலை புதுக்கோட்டையில் இறங்கினால் 2கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமணமலைக்கு ஷேர்ஆட்டோ வசதி உண்டு.

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com

???????????????????????????????

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.                 

– கோணங்கி

(ஆகஸ்ட் 2011ல் சென்ற பசுமை நடை குறித்த நினைவுப்பதிவு)

கொங்கர்புளியங்குளம் பஞ்சபாண்டவமலை பசுமைநடையின் போது அடுத்த நடை மாங்குளம் மீனாட்சிபுரம் என்றதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அங்குள்ள படுகைகளை செய்வித்தவன் மதுரைக்காஞ்சி, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதுதான். பசுமைநடை செல்லும் ஞாயிறுக்கு நாலு நாட்களுக்கு முன்பே உடல்நிலை சரியில்லை. எதாவது தகுடுதத்தம் செய்தால்தான் ஞாயிறு செல்ல முடியுமென்றெண்ணி சனிக்கிழமை விடுப்பெடுத்தேன்.

21.08.2011 ஞாயிறு காலை வெள்ளென எழுந்து நண்பரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். எல்லோரும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் முன் கூடினோம். அப்போது டீக்கடைக்காரர் இன்று ஏதும் போட்டித்தேர்வு உள்ளதா எனக் கேட்டார். எனக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. ஏன்னா எனக்கும் போட்டித்தேர்வுகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எல்லோரும் வந்ததும் கிளம்பினோம். சிட்டம்பட்டி பிரிவிலிருந்து மீனாட்சிபுரம் சென்றோம். வழிநெடுக பசுமையாயிருந்தது. வயல்களிலிருந்து அடிக்கிற காற்று மேனியை சிலிர்க்க வைத்தது. அந்தப்பகுதி மக்கள் மலையை பார்க்க இவ்வளவு பேர் செல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்.

???????????????????????????????

மீனாட்சிபுரம் மிக அழகான கிராமம். இங்குள்ள குடிசை வீடுகள், கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் காரை வீடுகள் என பெரும்பாலான வீடுகளில் திண்ணை இருந்தது. திண்ணையில் சாய்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் வாசிப்பதும், எல்லோருமாய் அரட்டையடிப்பதும் அலாதியான சுகம். மீனாட்சிபுரம் பெரிய கண்மாயை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வழியில் ஒரு அண்ணன் ‘மலையப் பாக்கப் போறீங்களா? மேலயிருந்து பார்த்தா அழகர்கோயில் தெரியும்’ பாருங்கன்னு சொன்னார். வண்டியை நிறுத்திவிட்டு மலையை நோக்கி நடந்தோம். மழை மீது ஏறும் போது தொலைவில் தெரிந்த ஒரு மலையை உடன் வந்த நண்பரிடம் காட்டினேன். அந்த மலையைப் பார்க்க ஒரு பொம்மை கணினிப்பெட்டி முன் அமர்ந்திருப்பதை போலிருக்கும். அரிட்டாபட்டி போகும் போது அதை பார்த்திருக்கிறோம்.

மாங்குளம்-மீனாட்சிபுரம்

???????????????????????????????

வழியில் நரந்தம்புல் நிறைய வளர்ந்திருந்தது. வழியில் ஓரிடத்தில் ஒரு கட்டிடத்தின் அடித்தளம் மட்டும் இருந்ததை பார்த்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அங்கு முன்பு ஆய்வு செய்ததை பற்றிக் கூறினார். அக்காலத்திலேயே செங்கல்கள் வைத்துக் கட்டியுள்ளனர்.

சாந்தலிங்கம்

அடுத்திருந்த குகைத்தளத்தில் எல்லோரும் கூடினோம். குகையின் முகப்பில் தமிழி(தமிழ்பிராமி) எழுத்துக்களைப் பார்த்தோம். இம்முறை நடைக்கு நிறையப்பேர் வந்திருந்தனர். நிறைய நண்பர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். குகைத்தளத்தில் அமர்ந்தோம். சாந்தலிங்கம் அய்யா சமணம் குறித்தும், கல்வெட்டுக்களில் இருந்ததை பற்றியும் பேசினார்.

மாங்குளம் ஓவாமலை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான இடம். ஐராவதம் மகாதேவன்  அவர்கள் மதுரை வரும் போது மாங்குளத்திற்கு வருவார். சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி இம்மலையில் உள்ள கல்வெட்டில் குறிப்புள்ளது. இந்த மலையில் ஆறு தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் உள்ளன. மதுரையில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்களில் மாங்குளம் மிகவும் பழமையானது.

இந்தியாவில் பிராமி எழுத்து போல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் கரோஷ்டி என்ற ஒரு வகை எழுத்துமுறை இருந்தது. கழுதைக் காது போன்றிருப்பதால் இதற்கு இப்பெயர். இன்று அதை வாசிப்பதற்கு கூட அதிகம் ஆளில்லாமல் அழிந்துவிட்டது. வடக்கே அசோகர்கால பிராமிக் கல்வெட்டுக்களுக்கு தமிழிக் கல்வெட்டுகள் மூத்தது.

மாங்குளம் கல்வெட்டில் தம்மம்(தர்மம்), அசுதன்(மகன்), சாலகன்(சகலன்)  போன்ற பிராகிருதச் சொற்கள் கலந்து காணப்படுகிறது. மேலும், இங்குள்ள கல்வெட்டுக்களில் கடல் அன் என்று பிரித்தே எழுதப்பட்டுள்ளது. உயிர் மெய் சேர்த்து கடலன் என எழுதும் வழக்கத்திற்கு முந்தைய கால கல்வெட்டுக்கள் இவை.

மாங்குளத்தில் உள்ள கல்வெட்டில் நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி, கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு படுகை வெட்டிக்கொடுத்தை குறிப்பிடுகிறது. இன்னொரு கல்வெட்டில் காவிதி என்ற வரி உள்ளது. இது தற்போது வழங்கப்படும் கலைமாமணி போன்ற பட்டமாக இருக்கலாம். வெள்ளறை நிகமம் என்ற வரி கல்வெட்டில் உள்ளது. இப்போதுள்ள வெள்ளரிப்பட்டி ஊரிலிருந்த வணிகக்குழுவாகயிருக்கும். நிகமம் என்பது வணிகக்குழுக்களைக் குறிக்கும். தற்போது கூட பாரத் சஞ்சார் நிகாம் என்பதை காணலாம்.

மாங்குளத்திற்கு முந்தைய தமிழிக் கல்வெட்டாய் 2004ல் புலிமான்கோம்பை கல்வெட்டைச் சொல்லலாம். இதில் ஆகோள் பூசல் என மாடுபிடி சண்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது. நிரைகவர்தல், நிரைமீட்டல் என்ற தொல்காப்பியத்தில் வரும் திணைக் கோட்பாடு பற்றி அறிய உதவும் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு.

2007ல் இம்மலையில் அகழாய்வு செய்த போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புக்காசு கிடைத்தது. அதில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னொரு இடத்தில் செங்கல் கட்டிட அடித்தளம் காணப்பட்டது. அதை வழியில் வரும்போது பார்த்திருப்பீர்கள். இரண்டு அறைகள் கொண்ட கட்டிடம். 33 செ.மீ நீளம் x 13 செ.மீ அகலம் x 5 செ.மீ உயரம் கொண்ட செங்கல் கற்கள். மண் கலவையை வைத்து பூசியிருக்கிறார்கள். கூரை ஓடு பயன்படுத்தியிருக்கிறார்கள். மரச்சட்டங்களை இணைப்பதற்கு ஆணியை பயன்படுத்தியிருக்கிறார்கள். வழிபாட்டு கூடமாக இந்த அறைகள் இருந்திருக்கலாம்.

மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊர் சமீப காலங்களில் உருவாகிய ஊர். மாங்குளம் வழி வரும்போது பாதியோடு நின்றுபோன குடைவரை ஒன்றைக் காணலாம். இதில் தூண்களோடு முன் வராண்டா மட்டும் வெட்டப்பட்டுள்ளது. அதற்குமேல் கட்டாமல் பாதியோடு விடப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மாங்குளம் ஓவாமலை தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான இடமாகும்.

அ.முத்துக்கிருஷ்ணன்

அ.முத்துக்கிருஷ்ணன் பேசும்போது இந்த இடங்களை குறித்தெல்லாம் நாம் ஒரு இடத்தில் சேர்ந்து ஏசிஹாலில் புரொஜக்டரில் பார்ப்பது வேறு. இது போன்ற இடங்களுக்கே நேரில் வந்து பார்ப்பது வேறு. மேலும், இது போல மதுரையில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாதந்தோறும் பயணிப்போமெனக் கூறினார்.

அடுத்த கல்வெட்டிருந்த இடங்களுக்கு சென்றோம். இரண்டு பெரும் பாறைகளுக்கு நடுவில் சென்ற போது அவ்விடத்திலிருந்த குளுமை, சூழல் எல்லாம் எழுத்தில் எப்படிச் சேர்ப்பது? அங்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் இருந்தன. நிறைய புதிய நண்பர்கள் அறிமுகமானர்கள். அங்கிருந்த கல்வெட்டுக்களையும், படுகைகளையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு பாறை வழுவழுப்பாக இருந்தது. எப்படியென்றால் பாலமேடு பால்பன் மீது ஜீராவ ஊத்தி வச்ச மாதிரியிருந்தது.

கண்ணன்

இயற்கையாக குகைபோலிருந்த இடத்தில் தமிழிக் கல்வெட்டுகளைப் பார்த்தோம். வரலாற்று பேராசிரியர் கண்ணன் அவர்கள் தொன்மையான இடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

தமிழ்பிராமிக்கல்வெட்டுகளையும், தொன்மையான மலைகளையும் காப்பதன் மூலம் சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்த முறைகளையும், கல்வி நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. வடநாட்டிலுள்ள கல்வெட்டுகள் எல்லாம் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை காட்டுகிறது. இங்கு அரசர்கள், வணிகர்கள், மக்கள் இந்த எழுத்துகளை பயன்படுத்தியிருப்பதை குகைத்தளங்கள், பானைஓடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இது போன்ற தொன்மையான கல்வெட்டுகள் உதவியது. இவைகளை பொக்கிஷமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பது நமது கடமை.

கல்வெட்டு

மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு வெயில் ஏறும் முன் மாங்குளம் மலையிலிருந்து இறங்கி வந்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் குழுவாக உண்டோம். அடுத்த நடையில் புத்தகத்திருவிழாவிற்கு வரும் எழுத்தாளர்களும் நம்மோடு கலந்து கொள்வார்கள் என்றது மகிழ்வைத் தந்தது. இந்த நடையில் சென்னைப் பகுதியிலிருந்து வந்த தமிழ்ச்சமணர்கள் சிலரும், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த சிலரும் கலந்து கொண்டது பெருமகிழ்வை தந்தது.

படங்கள் அ.முத்துக்கிருஷ்ணன் தளத்திலிருந்தும், பசுமைநடை நண்பர் கந்தவேலிடம் வாங்கியும், பசுமைநடை முகநூல் பக்கத்தில் சுந்தர்ராஜன் அவர்கள் பகிர்ந்ததிலிருந்தும் எடுத்துள்ளேன். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.