மதுரை சித்திரைத் திருவிழாபோல் நான் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடுவது புத்தகத் திருவிழாதான். குலதெய்வத் திருவிழான்னா சும்மாவா?. மதுரையில் 2006ல் புத்தகத்திருவிழாவை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் திரு.உதயசந்திரன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 2006 முதல் 2011 வரையிலான எனது புத்தகத்திருவிழா நிகழ்வுகளை அல்லது நினைவுகளை என் நாட்குறிப்பேட்டிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மதுரை ஆறாவது புத்தகத்திருவிழா
02.09.11
இன்று மதுரை ஆறாவது புத்தகத்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள் தொடங்கி வைத்தார். தொடக்கவிழாவில் தமிழண்ணல் வாழ்த்துரை வணங்கினார். திரு.சகாயம் மிக அற்புதமாக பேசினார். மேலும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நல்லிகுப்புசாமி ஆகியோரும் பேசினர்.
03.09.11
இன்று புத்தகத்திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் வாங்கி அவரிடம் கையொப்பம் வாங்கினேன். மேலும், உயிர்மை புத்தகவெளியீடு புத்தகத்திருவிழா அரங்கத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டேன். தேவதச்சனின் இரண்டு சூரியன் என்ற கவிதை நூல் குறித்து எஸ்.ரா, கவிஞர் சுகுமாரன் பேசினர். ஈழவாணியின் ஈழநாட்டார்பாடல் தொகுப்பு குறித்து ந.முருகேசபாண்டியன் பேசினார். வா.மு.கோமுவின் சேகுவேரா வந்திருந்தார் என்ற நூல் குறித்து அர்ஷியா பேசினார். முனைவர் ஷாஜகான் கனியின் திரைப்படக்கலை என்ற நூல் குறித்து மு.ராமசாமி பேசினார்.
04.09.11
இன்று எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகவெளியீடு ஹோட்டல் தமிழ்நாட்டில் நடந்தது. மிக அற்புதமான நிகழ்வு. இன்று காலை பசுமைநடைக்கு எங்களுடன் எஸ்.ராமகிருஷ்ணனும் வந்திருந்தார். மதுரைபதிவர்கள் மதுரைசரவணன், கார்த்திகைபாண்டியன், ஸ்ரீ மற்றும் சீனாஅய்யாவை பார்த்தேன்.
08.09.11
இன்று புத்தகத்திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்கதைக்கம்பளம் மொத்தத்தொகுப்பும், உறுபசி நாவலும் வாங்கினேன். இன்று சாந்தலிங்கம் அய்யா தொல்லியல் நோக்கில் மதுரை என்ற தலைப்பில் அருமையாக உரை நிகழ்த்தினார். மழையும் அதைக் கேட்க வந்திருந்தது.
10.09.11
இன்று மாலை புத்தகத்திருவிழாவிற்கு நானும் நண்பரும் சென்றோம். எழுத்தாளர் சு.வேணுகோபால் அர்ஷியாவின் சிறுகதைத் தொகுப்பை குறித்து பேசியதைக் கேட்டேன். வண்ணதாசனின் பெய்தலும் ஓய்தலும் சிறுகதைத்தொகுப்பும், விக்ரமாதித்தனின் எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு என்ற புத்தகங்கள் சந்தியா பதிப்பகத்தில் வாங்கினேன். ஜோ மல்லூரி அடுக்கு மொழியில் பேசிக்கொண்டிருந்தார். மழை பெய்தது; அதனால் கேட்டுக் கொண்டிருந்தோம்.
11.09.11
இன்று காலை நானும் நண்பனும் புத்தகத்திருவிழா சென்றோம். காலை அரங்குகள் திறந்ததுமே நல்ல கூட்டம். மகிழ்வாக இருந்தது. மனநல மருத்துவர் ருத்ரன் எழுதிய உயிர், தேடாதே என்ற புத்தகங்கள் வாங்கினேன். உடன் வந்த நண்பனை புத்தகம் வாங்கச் செய்வதற்கு பதில் நாலு குதிரைகளை தண்ணி குடிக்க வைத்துவிடலாம் என நினைத்தேன். அந்தளவுக்கு வாங்குவனான்னு சாதிச்சுட்டான். இன்றோடு ஆறாவது புத்தகத்திருவிழா முடிகிறது.
மதுரை ஆறாவது புத்தகத்திருவிழாவிற்கு சுவரொட்டிகள் நூறு அடித்து ஒட்டக் கொடுத்தோம். இதற்கு உதவிய சகோதரர்க்கும், சுவரொட்டிகள் ஒட்டும்போது உடன் வந்த நண்பர்களுக்கும் நன்றி. மதுரைநகருக்குள் ஒட்டிய அந்த நண்பருக்கும் நன்றி. ஆனால், அதை ஒரு வாரம் கூட விட்டுவைக்காமல் மறைத்து ஒட்டிவிட்டார்கள். மதுரையில் இதெல்லாம் சாதாரணம். இருந்தாலும், அடுத்த முறை நல்ல முறையில் திட்டமிட வேண்டும்.
மதுரை புத்தகத்திருவிழாவை இதுவரை ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஆட்சியர்தான் தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழாவிற்கு உதயசந்திரன் வந்து எங்கள் இதயங்குளிர வைத்துக்கொண்டிருந்தார். இந்த ஆண்டு வரவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. இந்தப் புத்தகத்திருவிழாவை தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சிறப்பாக நடத்துகிறது. கவிஞர் தேவேந்திரபூபதியும் மதுரை புத்தகத்திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்க பல முயற்சிகள் எடுத்துவருகிறார். அவருடைய தளத்திலிருந்துதான் இதில் உள்ள சிலபடங்கள் எடுத்தேன். நன்றி. ஆனால், ஈரோடு புத்தகத்திருவிழா அளவிற்கு மதுரையில் விளம்பரம் இல்லை. அடுத்த முறை ஈரோட்டுடன் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட முயற்சியெடுப்போம்.
மதுரை புத்தகத்திருவிழாவிற்கு யார் வருகிறார்களோ இல்லையோ மழை வந்துவிடும். மழையிடமிருந்து இந்த வாசிப்பு பழக்கத்தை நானும் கற்றுக்கொள்கிறேன். நன்றி. இது போன்ற நிகழ்வுகளால்தான் ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், அவர்களுடன் உரையாடவும், அவர்களது உரையும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி.
மதுரை ஐந்தாவது புத்தகத்திருவிழா
(இதில் சில குறிப்புகள் மட்டும் புத்தகங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்டவை. இந்த வருடம் நான் நாட்குறிப்பேடு எழுதுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.)
02.09.10
இன்று மதுரை ஐந்தாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. பாரதி புத்தகாலயத்திலிருந்து கிறுகிறுவானம், கடவுளை பார்த்தவனின் கதை என்ற புத்தகங்கள் வாங்கினேன்.
03.09.10
இன்று மதுரை புத்தகத்திருவிழாவில் கொடுப்பதற்காக அடித்திருந்த எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த 100 புத்தகங்கள், 100 நாவல்கள் பட்டியலை மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் கொடுக்கத் தொடங்கினேன். மேலும், அவரது கவிதைத்தொகுப்பான ‘என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற புத்தகம் வாங்கி அவரிடம் கையொப்பம் பெற்றேன்.
04.09.10
இன்று புத்தகத்திருவிழாவிற்கு அடித்திருந்த புத்தகப்பட்டியலை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்தேன். அவர் பார்த்து வாழ்த்தியது மகிழ்ச்சியை தந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் கோடுகள் இல்லாத வரைபடம், நகுலன் வீட்டில் யாருமில்லை, எப்போதிருக்கும் கதை என்ற புத்தகங்கள் வாங்கினேன்.
05.09.10
இன்று ஹோட்டல் சுப்ரீமில் நடந்த எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகவெளியீட்டிற்குச் சென்றேன். கலாப்ரியா, பாரதிகிருஷ்ணகுமார், சாருநிவேதிதா, பிரபஞ்சன், அருணன், எஸ்.ராமகிருஷ்ணன் உரை கேட்டேன். அற்புதமான நிகழ்வு. இன்று வெளியிட்ட புத்தகங்களில் ‘காண் என்றது இயற்கை’ என்ற புத்தகம் மட்டும் வாங்கினேன்.
06.09.10
இன்று சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற புத்தகம் வாங்கினேன். பின் வழக்கம்போல வருபவர்களிடம் புத்தகப்பட்டியல் பிரதிகளை வழங்கிக்கொண்டிருந்தேன்.
08.09.10
இன்று புத்தகத்திருவிழாவில் கோபல்லகிராமம், நாளை மற்றுமொரு நாளே, மதுரை அன்றும் இன்றும் என்ற புத்தகங்கள் வாங்கினேன்.
09.09.10
இன்று புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யாவை பார்த்து அவரிடம் ‘ஜமீலா’ என்ற ரஷ்ய நாவலில் கையொப்பம் பெற்றேன். மிக மகிழ்ச்சியான நாள்.
10.09.10
இன்று மாலை நல்ல மழை. ஆனாலும், உதயசந்திரன் அவர்கள் பேசியதைக் கேட்கச்சென்றேன். இந்த புத்தகத்திருவிழா இந்த பத்து நாட்கள் மட்டும் கூடிக்கலையும் நிகழ்வாக இல்லாமல் வருடம் முழுவதும் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். கு.பூபதி தொகுத்த மாவீரர் உரைகள் நேர்காணல்கள் என்ற புத்தகம் வாங்கினேன்.
இம்முறை புத்தகத்திருவிழாவிற்கு எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு புத்தகங்கள், சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை 1000 பிரதிகள் எடுத்து புத்தகத்திருவிழாவில் வழங்கினோம். இதற்கு சகோதரரும், நண்பரும் உதவி செய்தனர். தினமும் மாலை வேளையில் நுழைவாயில் அருகில் இருந்து இந்தப் புத்தகப்பட்டியலை கொடுத்தேன். பத்துநாள் நடைபெற்ற புத்தகத்திருவிழாவிற்கு ஏழுநாட்கள் கிட்ட சென்றேன். மேலும், புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யாவை பார்த்து அவரிடம் புத்தகத்தில் கையொப்பம் வாங்கியது மறக்க முடியாத அனுபவம். இந்த புத்தகத்திருவிழாவில் எழுத்தாளரும், பசுமைநடை ஒருங்கிணைப்பாளருமான அ.முத்துகிருஷ்ணனிடம் இந்த பட்டியலை கொடுத்தேன். மகிழ்ச்சி. புத்தகத்திருவிழாவில் இந்த ஆண்டு உதயசந்திரன் ஆற்றிய உரை முக்கியமானது.
மதுரை நான்காவது புத்தகத்திருவிழா
29.08.09
இன்று மதுரை நான்காவது புத்தகத்திருவிழாவிற்கு சென்றேன். தெருவோரத் திருவிழாவில் பார்க்கத்தவறிய பொன்னர் சங்கர் கூத்து புத்தகத்திருவிழாவில் கொஞ்சம் பார்த்தேன். கு.ஞானசம்பந்தன் நகைச்சுவையாகப் பேசினாலும் சங்கஇலக்கியமான நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி குறித்தெல்லாம் பேசினார்.
30.08.09
இன்று உயிர்மை இணைய இதழ் முதலாமாண்டு விழாவும், உயிர்மையின் பத்து புத்தகவெளியீடும் ஹோட்டல் சுப்ரீமில் நடந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், சமயவேல், சுகுமாரன், சுந்தர்காளி, தமிழ்மகன், தமிழவன், சுரேஷ்குமார் இந்திரஜித் என பலரும் உரையாற்றினர். மிக அற்புதமான நிகழ்வு.
31.08.09
இன்று உயிர்மை புத்தகஅரங்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை பார்த்துப் பேசினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காற்றில் யாரோ நடக்கிறார்கள் புத்தகம் வாங்கி அதில் அவரது கையொப்பம் வாங்கினேன். ந.முருகேசபாண்டியனின் கிராமத்து தெருக்களின் வழியே மற்றும் சூஃபி கதைகள் புத்தகங்களும் வாங்கினேன்.
01.09.09
இன்று புத்தகத்திருவிழாவிற்கு சென்று பாரதி புத்தகாலயத்திலிருந்து புத்தர், எது மூடநம்பிக்கை, தமிழர்திருமணம், ஏமாளியும் திருடனும், நூலகங்களுக்குள் ஒரு பயணம், நமக்கான குடும்பம், சங்கஇலக்கியப்பதிவுகள், அரவானிகளும் மனிதர்களே, கருவாச்சி, வரலாறு என்றால் என்ன? என்ற பத்து புத்தகங்களை வாங்கினேன். பேராசியர் தொ.பரமசிவம் அய்யாவின் மண்ணும் மக்களும் என்ற உரை கேட்டேன். மதுரை குறித்து மிக அருமையாக பேசினார். ரொம்ப மகிழ்ச்சி.
03.09.09
இன்று புத்தகத்திருவிழாவிற்கு நண்பருடன் சென்றேன். இன்று பாரதிபுத்தகாலயத்திலிருந்து சிலந்தியும் ஈயும், சார்லஸ் டார்வின் என்ற புத்தகங்கள் வாங்கினேன்.
06.09.09
இன்று புத்தகத்திருவிழா சென்றேன். நல்ல கூட்டம். பார்க்கவே மகிழ்ச்சியாகயிருந்தது. இன்று கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
08.09.09
இன்று புத்தகத்திருவிழா சென்றேன். தேசாந்திரி மற்றும் கொஞ்சம் குறுந்தகடுகள் வாங்கினேன். தேசாந்திரி புத்தகத்தைத்தான் திருமணவிழாக்களுக்கு பெரும்பாலும் பரிசாக வாங்கித்தந்திருக்கிறேன். பாரதி புத்தகாலயத்தில் எது நல்ல பள்ளி?, நலம், நலமறிய ஆவல், செய்தியின் அரசியல், காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும், உ.வே.சா, இஸ்லாமிய பெண்ணியம் என்ற புத்தகங்கள் வாங்கினேன். இன்றுடன் புத்தகத்திருவிழா நிறைவடைகிறது.
நான்காவது மதுரைபுத்தகத்திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி தந்தது. தொ.பரமசிவன் அய்யாவின் மதுரை குறித்த உரை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மதுரை தந்த வரம்.
மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழா
27.11.08
இன்று மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. இன்று மாலை சென்றேன். விழா அழைப்பிதழ் கிடைத்தது.
29.11.08
இன்று மதுரை புத்தகத்திருவிழாவிற்கு நானும், நண்பரும் சென்றோம். நான்மாடக்கூடல் ஓவியஅரங்கை பார்த்தோம். மிக அருமையாக இருந்தது. பருத்திவீரன் படத்தில் நாட்டுப்புறக்குழுவினரின் பாடல்கள் பார்த்தோம். உதயசந்திரன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், தஞ்சாவூர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் உரை கேட்டேன்.
01.12.08
இன்று புத்தகத்திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’, நம்மாழ்வாரின் ‘உழவுக்கும் உண்டு வரலாறு’ புத்தகங்கள் வாங்கினேன். தமிழருவி மணியனின் உரை கேட்டேன். மிக அருமையான உரை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
02.12.08
இன்று புத்தகத்திருவிழாவில் மனோகர் தேவதாஸின் ‘எனது மதுரை நினைவுகள்’, தமிழினி மாத இதழ்கள், சமயம் மற்றும் பாலியல் குறித்த உரையாடல் புத்தகங்கள் வாங்கினேன். எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் கவிஞர் தமிழச்சி உரை கேட்டேன்.
05.12.08
இன்று புத்தகத்திருவிழாவிற்கு என்னுடன் பணிபுரியும் நண்பர்களும் உடன்வந்தார்கள். தொ.பரமசிவன் அய்யா ‘உலகமயமாக்கலில் பண்பாடும் வாசிப்பும்’ குறித்து பேசினார். மிக அற்புதமான உரை. அதற்கடுத்து இளசை சுந்தரம் பேசியதை கேட்டேன். இன்று இரவு அவ்வளவு சீக்கிரம் தூக்கம் கூட வரவில்லை, காரணம் தொ.ப’வின் உரைத்தாக்கம்.
மூன்றாவது புத்தகத்திருவிழா மிகவும் முக்கியமானது. இதில்தான் பலருடைய உரைகளையும் அலைபேசியில் பதிந்து வைத்து தனியாக குறிப்பேட்டில் எழுதிவைத்தேன்.
மதுரை இரண்டாவது புத்தகத்திருவிழா
10.08.2007
இன்று மதுரை இரண்டாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. அமைச்சர் தங்கம்தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜவஹர் இருவரும் புத்தகங்களை குறித்து நன்றாக பேசினர். தங்கம்தென்னரசு சங்கஇலக்கியத்தில் பறவைகள் பெயர் குறித்து அற்புதமான தகவல்களை கூறினார். ஜவஹர் புரட்டிப்பார்க்கும் புத்தகங்களை விட புரட்டிப்போடும் புத்தகங்களை படிக்கச்சொன்னார்.
11.08.2007
இன்று புத்தகத்திருவிழாவில் கலைஞர் அரங்கைத் திறந்துவைக்க அழகிரி வந்தார். அவரை வரவேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள் தப்படித்தனர். இன்று வண்ணதாசன், கலாப்ரியா, கனிமொழி, தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினர்.
12.08.2007
இன்று புத்தகத்திருவிழாவில் மனநல மருத்துவர் ருத்ரன் பேசினார். மேலும், ஜெயகாந்தன் தன் கதாபாத்திரங்கள் குறித்து அருமையாகப் பேசினார்.
13.08.2007
இன்று புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை கேட்டேன். கடந்து வந்த கதைகள் என்ற தலைப்பில் நிறைய கதைகள் சொன்னார். மூக்கு அறுபட்டவன் கதை, பதினாலு வருடம் நிலவறையில தங்கியவன், சாகாவரம் பற்றி பாரதி, மளையாள எழுத்தாளர் பஷீர் கதை என பல கதைகளை சொல்லி ஒரு மணி நேரத்திற்கு கதையுலகிற்குள் அழைத்து சென்றார்.
14.08.2007
இன்று புத்தகத்திருவிழாவில் மனோகர் தேவதாஸ் அவர்கள் மதுரை குறித்து வரைந்த கோட்டோவியங்கள் நிரம்பிய MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகம் வாங்கினேன்.
15.08.2007
இன்று மதுரை புத்தகத்திருவிழாவில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் எது? என்ற கேள்விக்கு மதுரை என சொல்லி திருக்குறள் புத்தகம் ஒன்று பரிசாக பெற்றேன். இன்று நான்மாடக்கூடல் அரங்கை உதயசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். பேராசிரியர் தொ.பரமசிவன் சங்ககால மதுரை என்ற தலைப்பிலும், முனைவர் வெ.வேதாச்சலம் நாயக்கர்கால மதுரை என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆங்கிலேயர்கால மதுரை என்ற தலைப்பிலும் பேசினார்கள். உதயசந்திரனும் மிக அருமையாக பேசினார். இடியும், மழையும் கொட்டியெடுத்தது. சூர்யவம்சம் எழுதிய கந்தசாமி மற்றும் கவிஞர் சிற்பியும் பேசினர். அருமையான உரைகளைக் கேட்டு வீட்டுக்குப்போக பதினோரு மணியாகிவிட்டது.
வீட்டில் நிறைய திட்டு வாங்கி இந்த ஆண்டு புத்தகத்திருவிழாவை இன்றோடு முடித்து கொண்டேன்.
மதுரை முதலாவது புத்தகத்திருவிழா
03.09.2006
இன்று நானும் எனது நண்பன் முனியசாமியும் மதுரை புத்தகத்திருவிழா சென்றோம். அவனுக்கு தபூசங்கர் காதல்கவிதைகள் வாங்கினோம்.
08.09.2006
இன்று மதுரை புத்தகத்திருவிழாவில் இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான், இன்றைய சிந்தனை – கு.ஞானசம்பந்தன் புத்தகங்கள் வாங்கி கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் கையொப்பம் பெற்றேன். மேலும், கண்ணதாசனின் ‘துன்பங்களிலிருந்து விடுதலை’, சுகி.சிவத்தின் ‘நல்ல குடும்பம் நமது லட்சியம்’ புத்தகங்கள் வாங்கினேன்.
நல்ல குடும்பம் நமது லட்சியம் புத்தகத்தை ஒரு திருமணத்திற்கு பரிசளிப்பதற்காக வாங்கினேன். எனது சகோதரர் திருமணம் செப்டம்பர் 10ந்தேதி நடந்ததால் தொடர்ச்சியாகச் செல்லமுடியவில்லை. தினசரி உலகசினிமா, கருத்தரங்குகள், கலைநிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கிறது. இறுதிநாள் சக்திகலைக்குழுவினரின் தப்பாட்டம் நடந்திருக்கிறது. போய் பார்க்கமுடியவில்லை.