
பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.
அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.
பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.
மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.
பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.
பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.
வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.
இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.
எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.
ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)
பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?
வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.
(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)
https://www.youtube.com/user/bavachelladurai
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB
