Archive for the ‘வழியெங்கும் புத்தகங்கள்’ Category

1014680_718252694886507_922398142_o

ஒரு சிறுகதைத் தொகுப்பைத் திறந்தபோது உள்ளேயிருந்து கொஞ்சம் சிறகுகள் எட்டிப்பார்த்தன. அதைத் தைத்து அக்கதைகளினூடாகப் பறந்த அனுபவத்தை இப்பதிவினூடாகப் பகிர்ந்து கொள்கிறேன். அப்படிப் பறக்க வைத்த சிறுகதைத் தொகுப்பு அர்ஷியாவின் கபரஸ்தான் கதவு.

12196263_1250405198318351_2072100658548786082_nகபரஸ்தான் கதவு என்ற சிறுகதைதான் இத்தொகுப்பிலேயே மிகவும் நெருக்கமான கதை. அக்கதை சார்ந்த நினைவுகளும் கொஞ்சம் அதிகம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் மதுரை வடக்குமாசிவீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் அர்ஷியா அவர்கள் இக்கதையை வாசிக்க கேட்டிருக்கிறேன்.

எல்லாச்சமூகங்களிலும் சில நம்பிக்கைகள் உண்டு. மதுரை இஸ்மாயில்புரத்தில் உள்ள கபரஸ்தான் (சுடுகாடு) கதவை ஒருமுறைத் திறந்தால் அடுத்தடுத்து இரண்டு மய்யத்துளை பார்த்துவிடுகிறது என்பது அங்குள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எங்க பகுதியிலும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை உண்டு. சனிப்பொணம் தனிப்போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமை ஒருத்தன் செத்தா தனியாச் சாகமாட்டான் அடுத்த சனிக்கிழமைக்குள்ள இன்னொருத்தன கூட்டிட்டுப் போயிருவான்னு. அதுனால கோழிக்குஞ்ச பாடையோடக் கட்டி அனுப்புவாங்க. ஆனாலும், சிலநேரங்களில் அடுத்த சனிக்கிழமை இன்னொருத்தர் கிளம்பிருவாரு.

இக்கதையில் காதல் திருமணம் ஒரு இஸ்லாமியப் பெண் விபத்தில் மரணமடைந்து விடுகிறாள். அவளது தகப்பன்போய் கேட்ட போது அவளது காதல் கணவனும் உடலைத்தர சம்மதித்து விடுகிறான். இங்கு குழி தோண்டி விடுகிறார்கள். ஆனால், அந்தப் பையனது வீட்டில் நம்ம சடங்குகளின் படி தான் அந்தப் பெண்ணை எரிக்க வேண்டுமென்று சொல்ல இப்போது கபரஸ்தானில் தோண்டிய குழியை என்ன செய்வது எனத் தெரியவில்லை. பெருங்குழப்பமாகிவிடுகிறது. கடைசியில் பெரியவர் ஒருவர் ‘உப்பு ரஹ்மத்தானது’ அதைப்போட்டு மூடலாம் என்கிறார். கடைசியில் ஒரு மூடை உப்பைக் கொட்டி குழியை மூடுகிறார்கள்.

பண்பாட்டு அசைவுகளில் தொ.பரமசிவன் அய்யா உப்பு குறித்து எழுதியவை ஞாபகத்திற்கு வருகிறது. உப்பு உறவின் தொடர்ச்சி. அதனால்தான் அதை புதுவீடுகட்டிய போது அதைக் கொண்டு போகிறார்கள். இறப்புச் சடங்கின் போது எட்டு அல்லது பத்தாம் நாள் காரியத்தின்போது உப்பில்லாமல் படையல் வைக்கிறார்கள். உறவை அறுத்துக் கொள்வதற்காக என்று சொல்கிறார். இந்தக் கதை படித்த போது உப்பு குறித்த நம்பிக்கைகள் பொதுவாக எல்லா சமூகங்களிலும் உண்டு என அறிய முடிந்தது.

கபரஸ்தான் கதவு திறந்தால்தானே இரண்டு மய்யத்துளை கேட்கிறது. கதவையே எடுத்துட்டா என இளைஞர்கள் புதுசா யோசிக்கிறாங்க. கதவை தனியே தூக்கி வைத்ததும் சில தவறுகள் வழக்கம்போல நடக்க கதவை மீண்டும் மாட்டிவிடுகிறார்கள். பிறகு குழி வெட்ட ஆள் கிடைக்க மாட்டேங்குதுன்ற பிரச்சனை எழும்போது ஆறேழு குழிகளை புல்டோசர் வச்சு தோண்டி வச்சுட்டா என்ன என்று ஒருவர் புத்திசாலித்தனமாக கேட்கிறார். பிறகு அப்படி ரெடிமேடா குழியெல்லாம் தோண்டி வைக்க கூடாது. இஸ்லாமியர் அல்லாதவர்களை அழைத்துக் கூட குழி தோண்டலாம் என முடிவெடுக்கிறார்கள். பொதுவாக சுடுகாட்டுக்கு செல்கிறவர்களுக்குத் தெரியும். அங்கு ஒரு சிலர்தான் வருத்தத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் அங்கும் போய் தங்கள் லீலைகளை காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

இக்கதை படிக்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எங்க ஊர் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டி நடுவில் வண்டி வரும்படி அகலமான சிமெண்ட் ரோடு போட்டாங்க. அதைப்பார்த்து நானும் ‘உள்ள இருப்பவன் வெளிய வரமுடியாது, வெளிய இருக்கவன் உள்ள போக விரும்பமாட்டான்’ என கேலி பேசியிருக்கிறேன். கொஞ்ச நாளில் என்னுடைய தாய்மாமா மற்றும் அவரது நண்பர்கள் ஒரு வாகன விபத்தில் மரணமடைய அவர்களது பிணங்களை சுமந்து கொண்டு வந்த வண்டி அந்தச் சிமெண்ட் சாலையில் வந்தது. ஒரே ஊரைச் சேர்ந்த நாலு பேர் இறந்துவிட்டதால் அன்று விதிகளைத்தாண்டி ஊரே சுடுகாட்டில்தான் நின்றது பெண்கள் உட்பட. இப்படி கபரஸ்தான் கதவு ஒரு கதையே பல நினைவுகளை கிளறிவிட்டது. இன்னொரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டனே இந்தக் கதையில் வரும் கபரஸ்தான் உள்ள இஸ்மாயில்புரம் பகுதியில்தான் நான் பிறந்தேன்.

நிழலற்ற பெருவெளி என்ற கதையை சற்று வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார். இறந்து கிடக்கும் சடலத்தின் நினைவுகளாக இக்கதை நகர்கிறது. அர்ஷியா எழுதிய ஏழரைப் பங்காளி வகையறா நாவலின் கிளைக்கதையாகக் கூட இதைச் சொல்லலாம். நம்மால் வீட்டிற்கு எந்த பிரயோஜனமுமில்லை எனும்போது நம்மை தண்டச்சோறு என தண்ணி தெளித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இக்கதையில் வரும் மாபாஷா குரங்கின் சாயலோடு முகம் கொண்டவனாகயிருக்கிறான். அதனால் மற்றவர்களைப் போல அவனை வளர்க்காமல் தனியாக வீட்டில் வளர்கிறான். தேரோட திருநாளும் தாயோட பிறந்தகமும் போச்சு என்பார்கள் பெண்கள். அதுதான் அவன் கதையும். அவங்கம்மா அடுத்து அவனது அப்பா இறந்த பிறகு அண்ணன் பொறுப்பில் இருக்கிறான்.

இவனது அப்பா ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது குரங்கைச் சுட்டதால் அடுத்துபிறந்த இவன் இப்படிப் பிறந்ததாகச் சொல்வார்கள். இதைப் படித்தபோது பிரிட்டோ பள்ளியில் ஆசிரியரொருவர் சொன்ன கதை நினைவுக்கு வந்தது. ஒரு ஊரில் தன் வயலில் அடிக்கடி மேயும் மாட்டை உயிரோடு தோலுரித்து விடுகிறான் அந்த வயலின் உரிமையாளன். அவனது சந்ததியில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கால்கள் மாடு போல் சூம்பிப் போய் பிறப்பதாகச் சொன்னார். இது நிகழ்ந்த சம்பவமா, கதையா எனத் தெரியவில்லை. ஆனால், இது போல் நடக்கவும் வாய்ப்புண்டு.

மாபாஷாவின் பாபி(அண்ணி)க்கு இவனைக் கண்டாலே பிடிக்கவில்லை. தன் கணவனிடம் அவனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்கிறாள். மாபாஷாவை அனுப்பிவிட்டால் அவனுடைய சொத்துக்களை அனுபவிக்க முடியாது என்பதால்தான் அவனை சோத்தைப் போட்டு வைத்திருப்பதாக அண்ணன் அண்ணியிடம் சொல்லி சமாளிப்பதை மாபாஷா கேட்டு நொந்து போகிறான். இப்படியிருந்த அண்ணி ஊரார் முன் போலியாக பிணத்தைத் தூக்கிச் செல்லும்போது ‘நம்ம’ மாபாஷா போறாங்க என்று அழுவது கேட்டு திடுக்கிடுகிறான். மேலும், இஸ்லாமிய இறப்பு வீடுகளில் நிகழும் சடங்குகளை அறிந்து கொள்ள முடிகிறது. மய்யத்தை தூக்கிய பிறகு சாப்பிட தயாராகும் பகாரியா வாசனை, உடலைக் கொண்டு செல்ல பள்ளிவாசலிலிருந்து வந்திருக்கும் ஜனாஜா பெட்டி, சீகைக்காய் – அத்தரால் கழுவப்பட்டு ஒலு செய்யப்படும் உடல் போன்ற விசயங்களும் பதிவாகிறது. இக்கதையைப் படிக்கும்போது நாமும் அந்த வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார்.

ஒரு களியாட்டம். இந்தக் கதையில் வரும் கதீஜாபீ நல்ல கதைசொல்லி. அதிலும் ஹவுதுல் ஆலம் முஹைதீன் அப்துல் காதர் ஜிலானி பற்றிய சாகசக் கதைகளை அவள் சொல்லும் போது அந்த இடத்திற்கே நாமும் சென்றதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடக் கூடியவள். தன் மகளிற்கு குழந்தை பிறந்தபோது வருபவர்களிடம் எல்லாம் குழந்தையின் அழகு, சாயல் எனப் பேசுவதோடு கதையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் மகன் தன் தங்கை குழந்தையை காணவந்த போது அவளை கதை சொல்லச் சொல்ல அவனை திருத்தும் நோக்கோடு முகமது நபி பற்றிய கதையைச் சொல்கிறாள்.

எல்லா சமயத்திலும் சொர்க்கம், நரகம் பற்றிய கதைகள் உண்டு. சொர்க்கத்தில் தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவார்கள். நரகத்திற்கு போனால் அங்கு எண்ணெய் சட்டியில் வருப்பார்கள் என்றெல்லாம் அள்ளி விடுவார்கள். அப்படி நம்பிக்கை இஸ்லாத்திலும் உண்டு. சொர்க்கம் செல்லும் ஆண் மகன்களை ஹூருளிப் பெண்கள் எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள் என. அப்போது கதீஜாபீயின் மகள் எல்லாச் சமயங்களும் ஆண்களைக் கொண்டாடி பெண்களைப் புறக்கணிப்பதை ஒற்றைக் கேள்வியில் சாட்டையடியாய் கேட்டு விடுகிறாள். ‘ஏம்மா… பூமியில் நல்லது செய்றப் பொம்பளைங்களைக் கூட்டிட்டுப்போய் சந்தோஷப்படுத்த, சுவனத்துல ஹூருளான்னோ.. இல்லை வேற பெயர்கள்லேயோ ஆம்பளைங்க யாரும் இருக்க மாட்டாங்களா?’. பதில் சொல்ல முடியாமல் திகைப்பது கதீஜாபீ மட்டுமல்ல நாமும்தான்.

kabarasthan kadhvu

இந்தக் கதையை வாசித்தபோது எங்க ஆச்சி ஞாபகம் வந்துவிட்டது. இப்போது 30 வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் பெரியவர்களிடம் கதை கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள்தான். எங்க ஆச்சி நிறையக் கதைகள் எனக்குச் சொல்வாங்க. அதுகூட இன்றைய வாசிப்பு ஆர்வத்திற்கு காரணமாகயிருக்கலாம். அர்ஷியா முன்னுரையில் சொல்வது போல இப்போது கதை சொல்ல ஆளில்லை. எல்லோரும் மின்சாதனங்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறோம்.

‘எட்டெழுத்து முஸ்தபாவின் ஹஜ் பயணம்’ எட்டெழுத்து முஸ்தபா என்ற இந்தப் பெயரே இது மதுரைக் கதைதான் என்பதை ஒருவகையில் சொல்லிவிடுகிறது. மற்ற ஊர்களைவிட நீங்கள் மதுரையில் அதிக சுவர் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்க்கலாம். இப்போது ஃப்ளக்ஸ் கலாச்சாரம். அதிலும் அவர்கள் போடுகிற பெயர்களையும், படங்கள் மற்றும் வசனங்களையும் பார்த்தால் இதற்கென தனிப்படையே இருப்பார்களோ என எண்ணத் தோன்றும். அப்படித்தான் இக்கதையிலும் முஸ்தபா தனக்கு முன்னால் என்ன பெயர் போடுவது என ராப்பகலா யோசிக்கிறார். தன்னோட தாத்தா பாட்டன் பேரெல்லாம் யோசிச்சு பார்த்தா ‘ஹைதர்அலி பர்வேஷ் காதர்பாட்ஷா தர்வேஷ் அப்துல் ரஜாக் சையத் தாவூத் ஹூசைன் முஸ்தபா’ ன்னு பெரிசா வருது. அதுனால சுருக்கி எட்டெழுத்து முஸ்தபான்னு பேர வச்சுக்கிறாரு. சரி கதைக்கு வருவோம்.

வராது என நினைத்த பணம் திடீரென மொத்தமாக வருகிறது. என்ன செய்யலாம்னு யோசிச்சா எல்லாத் தேவையும் பூர்த்தியாயிருச்சு. சரி ஹஜ்ஜூக்கு போவோம்னு நினைக்குறார். அதற்கான வேலைகளைத் தொடங்க எல்லாம் நல்ல படியா முடியுது. ஊரையே அழைச்சு துவாசெஞ்சு வழியனுப்புற நிகழ்ச்சிய நடத்துறாரு. எட்டு தேக்‌ஷால மொகல் பலவ் ஆக்கி அதுக்கு தொட்டுக்க கட்டே பைங்கன், சிக்கன் டிக்கா, பியாஜ்கி சட்னின்னு அசத்தியிருந்தாரு. அதுபத்தாதுன்னு ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன் வேற. பிரமாதமான சாப்பாடுன்றதுனால ஹஜ்க்கு போறதுக்கு முன்னாடியே ஹாஜியாரேன்னு வந்த மக்கள் வாழ்த்துறாங்க.

யார் வரலன்னு பார்த்தா அவங்க அக்கா மக சைதானி மட்டும் வரல. பதறிப்போய் அவ வீட்டுக்கு போறாரு. ஏன்னா, இவரு பழமண்டி வச்சு இவ்வளவு பெரிய ஆளா வந்ததே அவங்க அக்கா சொத்த வச்சுத்தான். சைதானி வீட்ல உட்கார இடங்கூட இல்ல. அவட்ட தான் ஏமாத்துன விசயத்த சொல்றாரு. அவ அலட்டாம ஒண்ணு சொல்றா. கல்யாணம் ஆகாத கொமருக நிறையாப் பேரு ஊருக்குள்ள இருக்குங்க. அதுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாக்கூட புண்ணியந்தான். ஹஜ் போயித்தான் புண்ணியம் சேக்கணும்னு இல்லன்னு. அப்படியே கூனிக்குறுகிப் போய் சொல்லாமக் கொள்ளாம வந்துடுறாரு.

காசு இருக்க எல்லாருமே நல்லது செய்ய நினைக்கிறது இல்ல. திருப்பதில உண்டியல்லயும், காசிக்கும் போயிட்டு வந்துட்டா பாவம் தீர்ந்துரும்னு நினைக்கிறவங்க நிறையப்பேரு. தன் படத்துல வந்த லாபத்துல ஒரு கோடி உதவியா லாரன்ஸ்தான் கொடுத்தாரு. வேற எந்த உச்ச நட்சத்திரமும் கொடுக்கல. எல்லாம் மனசுதான்.

1794726_718253511553092_1700576263_n

வாசிக்கும் நம்மை கதைக்களத்திற்கே தன் சொல்லாடல் மூலமாக அழைத்துச் செல்கிறார் அர்ஷியா. ஒவ்வொரு கதையின் இறுதிப் பகுதியும் நம்மை நெகிழ்வுக்குள்ளாக்கிறது. இஸ்லாமிய மக்களின் பழக்க வழக்கங்களை இக்கதைகளினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், எல்லா மனிதர்களும் சாதி, மதம் என பிளவுபட்டு இருந்தாலும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களில் ஒன்றுபோலவே செயல்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

நான் படிக்கிறப்ப ஒவ்வொரு புதுப்படப் பாட்டுப்புத்தகத்தையும் வாங்கி அத மனப்பாடப்பாட்டு மாதிரி படிப்போம். அந்தப் பாட்டுப் புத்தகங்களில் படத்தின் கதையை கொஞ்சம் போட்டு மற்றவற்றை வெள்ளித்திரையில் காண்க என்று முடிப்பார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். இதிலுள்ள நாலு கதைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன். மற்ற கதைகளை புத்தகத்தில் படிங்க.

படங்கள் உதவி – அருண், செல்வம் ராமசாமி மற்றும் தினேஷ்குமார்

sanjaram1

வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் நையாண்டி இசை காதில் ஒலித்தது நல்ல நிமித்தமாகயிருந்தது.

சஞ்சாரம் (5)மனித மனத்தில் நற்குணங்களைப் போன்றே வன்மம், ஆணவம் போன்ற உணர்ச்சிகளும் புதைந்திருக்கிறது. நேரங்கிட்டும் போது வெளிப்பட்டு நம்மைப் படுத்தியெடுத்துவிடுகிறது. நையாண்டி மேளம் இசைக்கும் போது ‘அத அடி இத அடி’ என ஆணவமாக வந்து சொல்லி அதட்டுபவர்கள் கொஞ்ச நேரத்தில் இசைக்கேற்ப ஆடியாடி இசைக்கு பொட்டிப் பாம்பாகிவிடுகிறார்கள். ‘நான்’ என்ற எண்ணம் அற்றுப் போகும்போது காற்றில் சருகு போலாகிவிடுகிறது மனம். இசை இதுபோன்ற எல்லா மாயங்களையும் செய்யும். வேடிக்கை பார்ப்பவர்கள் கூட ஆட வேண்டுமென்ற உணர்வைத் தருவது நையாண்டிமேள இசை.

சஞ்சாரம் நாவல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்ததைக் குறித்தும், அந்நாவல் வாசிப்பனுபவம் பற்றியும் அண்ணனிடம் அலைபேசியில் உரையாடும் போது 280வது பக்கத்திலுள்ள ஒரு வரியைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதை ஏன் கேக்குறே, பாப்பாகுடியில் வாசிக்கப் போயிருந்தோம், வேற ஒரு கீர்த்தனையும் வாசிக்க விடலை, ஆளுக்கு ஒரு சினிமா பாட்டு கேட்கிறான், ஒரே சண்டை உடனே எனக்கும் சஞ்சாரம் வாசிக்கணும் போலிருந்தது. ஏன்னா எங்க ஊரு பேரும் பாப்பாகுடிதான். அது மாதிரி சினிமா பாட்டா கேட்டு ‘அத அடி, இத அடி’ன்னு உயிர எடுப்பாங்ங.

நாதஸ்வரம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பாடுகளினூடாக கரிசல்காட்டு ஊர்கள், நாதஸ்வர சக்ரவர்த்திகள், மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் சாதியப் பாகுபாடுகள் எனப் பல விசயங்களை சஞ்சாரம் நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். எஸ்.ரா பிறந்த வளர்ந்த ஊர்ப்பக்கத்துக் கதையென்பதால் நம்மையும் கரிசல்காடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.

சஞ்சாரம் (2)முதல்அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது

சூலக்கருப்பசாமி வேட்டைக்கு போவதற்கு யார் வில் எடுத்துக் கொடுப்பது என்ற அதிகாரங்களுக்கிடையேயான போட்டியில் சம்மந்தமில்லாமல் நாயனகாரர் ரத்தினத்தின்மீது அடி விழுவதோடு நாவல் தொடங்குகிறது. இதைப் பார்த்த இளம்நாயனகாரனான பக்கிரிக்கு கோவம் வருகிறது. பக்கிரி எதிர்க்க இருவரையும் கட்டி வைத்து அடிக்கிறார்கள். இரவில் பூசாரி அவிழ்த்துவிட தப்பித்துச் செல்லும் போது பந்தலில் தீ வைத்துவிட்டு கொடுமுடியிலுள்ள அக்கா வீட்டுக்கு பக்கிரியும், ரத்தினமும் செல்கிறார்கள். இறுதியில் காவலர்கள் வந்து பக்கிரி கைதாவதோடு கதை நிறைவுறுகிறது.

நாவலினூடாக வரும் மக்களிடம் செவிவழியாய் புழங்கும் கதைகள் நம்மை கட்டிப் போட்டுவிடுகின்றன. கரிசல்காட்டு பக்கம் பிடிபட்ட திருடனுக்கு ஏழுநாள் ஏழுவீட்டுச் சாப்பாடு தண்டனையாக தர அவன் நாலு நாளிலே மனம் மாறி விடுகிறான். பசியோடு இருக்கும் குடும்பத்தை நினைக்கிறான். ஊரில் உள்ள பாட்டி சொல்லும் வரி மனதை நெகிழ்த்தி விடுகிறது. மனுசனுக்குக் கொடுக்கிற தண்டனையிலே எது பெரிசு தெரியுமா, பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றைத் திங்குறதுதான். பிறகு அந்த திருடனுக்கு கொஞ்சம் உணவுப் பொருட்களையும் கொடுத்தனுப்புகிறார்கள்.

கரிசல்கிராமங்களில் வரும் ஊரோடிப்பறவைகள் மக்களிடம் மண்ணு வேணுமா? பொன்னு வேணுமா? எனக்கேட்க மண்ணைக் கேட்டபோது மழை பெய்ய வைத்து ஊரைச் செழிப்பாக்குகின்றன. அடுத்து வரும் ஊரோடிப் பறவைகளிடம் மக்கள் நிறைவில் பொன் வேண்டுமென கேட்க தரையிறங்காமல் தத்தளிக்கின்றன. மழையில்லாமல் ஊரே வறண்டு விடுகிறது. இறுதியில் வரும் ஒரு ஊரோடிப் பறவையிடம் மண் கேட்க அது ஒரு துளி நீரைத் தருகிறது. அந்நீரில் துளிர்க்கும் வேம்பு கரிசலின் மரமாகிறது. அதன்பிறகு ஊரோடிப் பறவைகள் வருவதேயில்லை. மக்களுக்கு நாதஸ்வர இசை, ஊரோடிப் பறவைகளின் றெக்கையடிப்பை நினைவூட்டுகிறது.

மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது எல்லோரும் ஓடிவிட அரட்டானம் சிவன் கோயிலில் தனியே நாதஸ்வரம் வாசிக்கும் லட்சய்யாவின் கதை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. நாதஸ்வர இசைக்கு மயங்கும் மாலிக்காபூர் அவரை அழைத்துக் கொண்டு டெல்கி கில்ஜியிடம் கூட்டிச் செல்ல லட்சய்யாவின் இசையில் வரும் பிரிவின் துயரம் எலுமிச்சை வாசனையாய் பரவுகிறது. மாலிக்காபூர் இறக்க வடக்கே பெரும் குழப்பம் நிலவுகிறது. லட்சய்யா கொலை செய்யப்படுகிறார். அதன்பின் வடக்கே நாதஸ்வரம் செல்லமுடியவில்லை என்ற கதை நம் நாதஸ்வரத்தின் பெருமையை பறைசாற்றுகிறது. இது நடந்த கதையா, புனைவா எனத் தெரியவில்லை என எஸ்.ரா. குறிப்பிடுகிறார்.

சஞ்சாரம் (4)நாதஸ்வர இசைச்சக்கரவர்த்திகளாக வாழ்ந்த மேதைகளை நினைவூட்டுகிறார்கள் கதையினூடாக வரும் ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்றவர்கள். பெரும் இசை மேதைகள் தங்களுக்கு விருப்பமான நேரங்களில் நாத மழையாய் பொழிகிறார்கள். மற்றவர்களை தங்கள் இசைக்காக காத்திருக்க வைக்கிறார்கள். ஆனால், நையாண்டி மேளக் கலைஞர்கள் தவிலையும், நாயனத்தையும் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அரசியல் பிரச்சாரம், திருமணவீடுகள், கோயில் விழாக்கள் என எங்கு சென்றாலும் அவமதிப்புக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகிறார்கள். பேசிய தொகையை கொடுப்பதில்லை, பந்தியில் எல்லோருடனும் சமமாய் உணவருந்த விடுவதில்லை, சாதியப்பாகுபாடுகள் என வலியை சுமந்து கொண்டு இசையோடு வாழ்கிறார்கள்.

சஞ்சாரம் (3)மருதூர் மடத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்து இசை கற்றுக் கொள்ளும் ஹாக்கின்ஸ் திருவிழாவில் மல்லாரி வாசிக்க விரும்புகிறார். தமிழ்ப்பெண் ஒருவரை காதல்மணம் புரிந்து மடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இஸ்லாமியராகயிருந்தாலும் கோயிலிலிருந்து ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கு மயங்கி அதைக்கற்று பின்னாளில் அதேகோயிலேயே கச்சேரி செய்யுமளவு உயரும் அபு இபுராஹிம், போலியோவினால் கால்கள் தளர்ந்தாலும் மனந்தளராத இசைக்கலைஞர். மேலும், இசைக்கு மொழியோ, மதமோ என குறைவில்லையென்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு சான்றாக அமைகிறது.

ஒருமுறை ரத்தினம் குழுவினரை ஒருவன் நாதஸ்வரம் வாசிக்க வெளிநாடு அழைத்துச் செல்கிறான். அந்த பயணத்தில் அவர்கள் படும் அலைக்கழிப்புகள் ஏராளம். லண்டனில் குளிரில் கார்ஷெட்டில் தங்க வைப்பது, இங்க வாசிச்சா நிறைய தருவாங்கன்னு பார்ட்டி நடக்கிறயிடம், ஷாப்பிங்மால்னு வாசிக்கச் சொல்லி கடைசியில் ஊருக்குப் போய் பணம் தருகிறேன்னு சொல்லி ஏமாற்றி விடுகிறான். கலைக்கு மரியாதையில்லாமல் கண்டவனெல்லாம் ஏய்க்கும் நிலையில் வாழ்க்கிறார்கள்.

தவிலையும், நாதஸ்வரத்தையும் பலமணிநேரம் சுமந்து கொண்டு காற்று, மழை, வெயிலென அலைகிறார்கள். மணிக்கணக்கில் வாசித்து வலிதீர குடிக்கிறார்கள். விழாக்கால நாட்கள் தான் வேலை, மற்ற நாட்களில் ரொம்ப சிரமப்படுகிறார்கள். எப்போதும் கடன்பட்டு கஷ்டப்படும் தவில்கலைஞர் தண்டபாணி நான்கு பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறார். இப்படித்தானிருக்கிறது நிலைமை.

சஞ்சாரம் (1)நையாண்டி மேளக்காரர்கள் பாடு இப்படியென்றால் கரகாட்டம் ஆடும் பெண்களின் நிலை இன்னும் மோசம். பார்க்கிறவர்களின் வக்கிரங்களுக்கு பலியாவதுடன், கூப்பிட்டால் வரணும் என நினைப்பவர்களிடையே மானத்தோடு வாழப் போராடுகிறார்கள். இக்கதையில் வரும் ரஞ்சிதம் மற்றும் மல்லிகா என்ற கரகாட்டப்பெண்களுக்கு வாசிக்கப் போகும் ரத்தினமும் பக்கிரியும் அவர்கள் படும் பாட்டைப் பார்த்துவிட்டு காசு வாங்கிக் கொள்ளாமல் வந்துவிடுகிறார்கள்.

சிகரெட் காலி அட்டைகளை சேகரிக்க அருப்புக்கோட்டைக்கு போனது குறித்த பக்கிரியின் பால்யகால நினைவுகள் என்னையும் இளம்பிராயத்திற்கு அழைத்துச்சென்றது. அண்ணாநகரில் சில்லாக்கு விளையாடியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நெற்றியில் எதிர்பாராதவிதமாக வந்து தெறித்த சில்லாக்குக்கல் இன்று வரை சுவடாய் இருக்கிறது. அந்த வயதில் தீப்பெட்டி படம், பிலிம், குண்டு இவையெல்லாம் அதிகம் சேர்ப்பதுதான் பெரிய விசயமாகத் தோன்றியது. வயதாக வயதாக இன்று ஏதேதோ பெரியவிசயமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

நாதஸ்வரக்கலைஞர்களின் வாழ்க்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் சில திரைப்படங்கள் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், பருத்திவீரன். அதில் தில்லானா மோகனாம்பாள் சிவாஜிகணேசன் குழுவினர் நாவலில் வரும் இசைச்சக்கரவர்த்திகளைப் போன்றவர். மற்ற இரண்டு படங்களில் வரும் இசைக்கலைஞர்கள் நாவலில் வரும் ரத்தினம், பக்கிரி குழுவை நினைவுபடுத்துகிறார்கள். ஊரோரம் புளியமரம் மற்றும் பொங்கல் வைக்கும் காட்சிகளில் நையாண்டி மேளத்தை மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் அமீர். உன்னை நினைத்து படத்தில் வரும் சுந்தர்ராஜன் கதாபாத்திரமாகத்தான் ரத்தினம் வாசிக்கும்போது மனதில் தோன்றினார்.

Sanjaramநாவலை வாசித்ததும் மல்லாரியும், மோகனமும் கேட்க வேண்டுமென்ற ஆவல் வந்தது. பழனி பாதயாத்திரை செல்லும் போது மலையைச் சுற்றி வரும் போதுள்ள இசைப்பள்ளிகளில் தவில் கற்ற வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். தொலைநிலைக்கல்வி வழி என்னோடு தமிழ் இளங்கலை படித்த நண்பனொருவன் மதுரை இசைக்கல்லூரியில் நாதஸ்வரம் படித்துக் கொண்டிருந்தான். வகுப்பிற்கு செல்லும் நாட்களில் கோயில் மற்றும் விழாக்களில் வாசிக்கச் சென்ற அனுபவத்தைச் சொல்லுவான். மேலும், அவன் எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த மல்லாங்கிணற்றைச் சேர்ந்தவன். இப்போது அவனுடைய அலைபேசி எண்  இருந்தால் சஞ்சாரம் பற்றியும் நாதஸ்வர ராகங்கள் பற்றியும் அவனோடு பேசணும் போலிருக்கிறது. சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் கொஞ்சம் பார்த்தேன். இப்படி நாவல் வாசித்திலிருந்து மனம் தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டேயிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களைப் போல சஞ்சாரமும் மனதிற்கு மிக நெருக்கமான நாவலாகிவிட்டது.

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை வெளியீடு – விலை 370 ரூ

உன் மொழியை வேதாளத்தின் புதிர் மொழியாக மாற்றாமல் இனிக் கதை சொல்ல முடியாது. நடந்து முடிந்த மனித நாகரீகங்களின் சாம்பலில் கவுளி ஒன்று எச்சரிக்கிறது. நடந்தவற்றை அப்படியே நகல் எடுக்காதே. கவுளியிடம் கேட்டு அதன் உச்சரிப்பை மொழியாக மாற்று.

கோணங்கி

சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இம்முறை பாரதி புத்தகாலய அரங்கில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் கட்டுரைத் தொகுப்பை வாங்கியது எதிர்பார்க்காத விசயம். நான் அவரது வலைப்பூவை படித்து நாவல்கள் மற்றும் சிறுகதைகளை வாசிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நாட்கள் நினைவிற்கு வந்தது. கோணங்கி என்ற பெயரை அட்டையில் பார்த்ததும் ஒரு ஈர்ப்பு. சட்டென்று வாங்கிவிட்டேன். இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் இந்நூலை வரவேற்போம் என்ற ச.தமிழ்ச்செல்வனின் முன்னுரை இந்நூலுக்கு வலு சேர்க்கிறது.

keeranoorjahir

தொலைநிலைக்கல்வி வழியாக தமிழ் இளங்கலை படித்த போது அதிலிருந்து சிறுகதைகள் குறித்த பாடப்பகுதி வாசிப்புத்தளத்தினுள் நம்மை இழுத்துச்செல்லும்படி அமையாமல் வெறும் பாடமாகவே இருந்தது. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை என்ற தலைப்பே கவிதை போல அமைந்துள்ளது. வ.வே.சு ஐயர் எழுதிய கதையிலிருந்து சமகால சிறுகதைகள் வரை உள்ள நெடிய பயணத்தில் தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்களையும் அவர்களது சிறுகதைகளையும் நல்லதொரு அறிமுகம் செய்கிறார்.

koozh_thumb[3]மிதமான காற்றும் இசைவான கடலலையும் ச.தமிழ்ச்செல்வன் கதைகளும் என முன்பு எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் குறித்து பல்வேறாக ஆய்ந்து நல்லதொரு சிறுகதையாசிரியரென நிறுவுகிறார். எனக்கும் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் இந்த 32 கதைகளுக்குப் பிறகு சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டதில் பலரைப் போல எனக்கும் வருத்தம் உண்டு.

தஞ்சைப்ரகாஷ் குறித்து வாசித்திருக்கிறேன். அவரது புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. எங்கே அந்தக் கனவுக்காரன்? என்ற கட்டுரை ஏற்படுத்திய ஈர்ப்பில் இணையத்தில் தஞ்சை ப்ரகாஷின் கதைகளைத் தேடி மேமல் மட்டும் வாசித்தேன். வித்தியாசமாகயிருந்தது. அவருடைய நாவல் எதாவது வாசிக்க கிடைத்தால் படித்துவிட்டு பகிர்கிறேன். தஞ்சை ப்ரகாஷ் பற்றி மட்டுமல்ல, தஞ்சை பெரிய கோயிலைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தஞ்சைப் பெரிய கோயில் குறித்த அந்தக்கட்டுரை பிரம்மாண்டங்களின் அடியில் நசுக்கப்பட்ட எளியவர்களின் வாழ்வை எடுத்துரைக்கிறது. ராசராசனை இன்னும் கொண்டாடுவது ஏன்? என தொ.பரமசிவன் அய்யா எழுதிய கட்டுரை ஞாபகம் வந்தது.

azlogo_new5 (1)

கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் என்ற தலைப்பை பார்த்ததும் சட்டென யாரென புரிபடவில்லை. வாசித்தபிறகுதான் அது க.நா.சு’வின் முழுப்பெயரென அறிந்தேன். க.நா.சு குறித்து இக்கட்டுரை வாயிலாக நிறைய அறிந்து கொண்டேன். தந்தை எதிர்த்தாலும், வறுமை வதைத்தாலும் தமிழுக்காக தினமும் குறைந்தபட்சம் 25 பக்கங்கள் எழுதியும் மொழிபெயர்த்தும் வாழ்ந்த க.நா.சு’வை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள இக்கட்டுரை உறுதுணையாகயிருக்கும். முன்பு க.நா.சு’வின் பொய்த்தேவு என்ற நாவல் மட்டும் வாசித்திருக்கிறேன். மற்றபடி அவரது எழுத்தை அதிகம் வாசித்ததில்லை.

பொன்னீலனின் மறுபக்கம் நாவலைக் குறித்த நல்லதொரு அறிமுகமாக ரசனை அடிப்படையில் மறுபக்கம் என்ற கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை வாசித்ததும் சென்றாண்டு நான் வாசித்த குன்னிமுத்து நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அந்நாவலும் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த கதைதான்.

baseer2_thumb4பஷீரின் மதிலுகள் நாவலோடு இந்தாண்டு (2015) வாசிப்புப் பயணத்தைத் தொடங்கினேன். அவருடைய பாத்துமாவின் ஆடு நல்ல நகைச்சுவையான கதை. பஷீர் குறித்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் கட்டுரை மூலமாக அவர் ஒரு இசைப்பிரியர் என்றறிந்தேன். மேலும், பஷீர் ஜனவரி மாதம் பிறந்தவர் என்றறிந்தேன். பஷீரின் எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது நாவல் குறித்து நான் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த சிறுபத்தி கீழேயுள்ளது:

புத்தகங்களை வாசிக்கும் போது நம்மையறியாமல் கதாமாந்தர்கள் நமக்கு நெருக்கமாகிவிடுவார்கள். அவர்களுக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் நம்மையும் பாதிக்கும். பஷீரின் பால்யகாலசகி வாசித்தபோது பரீதும் சுகராவும் சேராமல் போனபோது என்னையறியாமல் கண்ணீர் கசியத் தொடங்கியது. அப்படி சமீபத்தில் வாசித்த பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது நாவலில் குஞ்ஞுபாத்துமாவும் நிஸார் அகமதுவும் பிரிந்துவிடுவார்களா என்ற அச்சம் எழுந்தது. நல்லவேளை நாவல் சுபமாக முடிய அன்று நிம்மதியாக உறங்கமுடிந்தது.

விடுமுறைக்கு வந்த அண்ணன் வைத்திருந்த நாயிவாயிச்சீல என்ற புத்தகம் தலைப்பால் என்னை ஈர்த்தது. ஹரிகிருஷ்ணனின் இச்சிறுகதைத்தொகுப்பு சிறுகதைக்கான இலக்கணங்களை உடைத்து மிக வித்தியாசமான மொழி நடையில் அமைந்திருப்பதாக உள்ள கட்டுரை வாசித்ததும் அடுத்தமுறை அண்ணன் வரும்போது நாயிவாயிச்சீல வாங்கி வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன்.

வல்லிக்கண்ணன் குறித்த கட்டுரை அவரது எழுத்தையும், அவரது கடித இலக்கியத்தையும் எடுத்துரைக்கிறது. வண்ணநிலவனை உருவாக்கியதில் வல்லிக்கண்ணனின் பங்கு குறித்து ஒரு கட்டுரை முன்பு வாசித்திருக்கிறேன். துணைப்பாடநூலிலிருந்த சிறுகதைகளில் வல்லிக்கண்ணனின் கதையொன்று படித்திருக்கிறேன். இப்போது அவரது கதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.

jahirrajaஎழுத்தாளராகத் தூண்டிய பள்ளி ஆசிரியர்களை குறித்த கட்டுரை நெகிழ்ச்சியாக்கிவிட்டது. இடம் பெயர்வு வாழ்க்கை என்ற கட்டுரை சுப்ரபாரதி மணியனின் நாவலைக் குறித்த பதிவாக மட்டும் அமையாமல் திருப்பூரின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. விட்டல்ராவ் பழைய புத்தகக்கடைகளில் அலைந்து திரிந்து புத்தங்களை வாங்கியது குறித்து எழுதியுள்ள புத்தகம், மலையாளக் கவிஞர் பவித்ரன் தீக்குண்ணியின் கவிதைகள் மற்றும் அவரது வாழ்க்கை, லட்சுமணனின் ஒடியன் கவிதைத் தொகுப்பும் அதனூடாகப் பதிவாகியுள்ள இருளர்களின் வாழ்க்கையும் குறித்த கட்டுரைகள் நம்மை புத்தகங்களை நோக்கி இழுத்துச் செல்கின்றன.

தன்னை விமர்சகராக எண்ணிக் கொண்டு புத்தகங்களைப் பற்றி எழுதாமல் வாசகராய் மனதில் வரித்துக் கொண்டு எழுதியுள்ளதால் நாமும் அந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது கீரனூர் ஜாகிர்ராஜாவின் மொழிநடை.

நன்றி – ட்ராஸ்கி மருது, அழியாச்சுடர்கள்

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது. சென்னை புத்தகக்காட்சிக்கு செல்ல வேண்டுமென்பது வெகுநாள் அவா. ஆனால், பொருளாதாரச் சூழல் தடுத்துவிடும். புத்தகக்காட்சிக்கு சென்று வந்த சகோதரர்களிடமும், நண்பர்களிடமும் புத்தகவெளியீடு, விற்பனை, கூட்டம் குறித்தெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இம்முறை புத்தாண்டன்று வாழ்த்துச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்த சகோதரருடன் சென்னை புத்தகக்காட்சி குறித்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல இந்தாண்டும் வரவாய்ப்பில்லை என்று சொன்னேன். சகோதரர் எதிர்பாராதவிதமாக மறுநாள் சிறுவிபத்தில் சிக்க அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய்விட்டது. அவரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு மாட்டுப்பொங்கலன்று சென்றிருந்தோம்.

மதுரையிலிருந்து சென்னை செல்லும்போது வழியில் பார்த்த நாட்டுப்புறத்தெய்வங்கள் மனதைக் கவர்ந்தது. மதுரையில் சேமங்குதிரைகளில் அமர்ந்திருக்கும் காவல் தெய்வம் கொஞ்சம் தள்ளிப் போகப்போக குதிரைக்கருகில் நின்றுகொண்டிருந்தது. அதைத்தாண்டி இன்னும் கொஞ்சதூரம் போக காவல்தெய்வங்களின் உருவமே மிகப்பெரியதாகயிருந்தது. மதுரையில் குதிரையில் அமர்ந்துள்ள காவல்தெய்வங்களையெல்லாம் தனியே ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. பார்க்கலாம்.

சென்னை முகப்பேரில் உள்ள சகோதரரைப் போய் பார்த்து அங்கு ஒருநாள் தங்கியிருந்தோம். எல்லோரையும் பார்த்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியாகயிருந்தார். அன்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு போகலாம் என்றார்கள். போகலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் நானிருந்த போது பெரியப்பா பழமையான சிவன் கோயில், குரு ஸ்தலம் என்றார். உடனே கிளம்பிவிட்டேன். பாடி என்ற இடத்தில் அந்த கோயில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் அரசின் போர் ஆயுதங்களை வைத்திருக்குமிடம் பாடி என்றழைக்கப்பட்டிருக்கிறது.

சிவன்கோயில்

பழமையான சிறிய சிவன் கோயில். திருவல்லீஸ்வரர் தான் மூலவர். இக்கோயிலை திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அவர் காலத்தில் இக்கோயில் திருவலிதாயம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. கோயிலை அழகாக புதுப்பித்திருக்கிறார்கள். அது என்ன அழகாக புதுப்பிப்பது என்கிறீர்களா?. கோயிலில் உள்ள கற்களை மாற்றி டைல்ஸ், கிரானைட்னு போடாமல் அப்படியே பட்டியக்கல்லைப் போட்டு இருக்கிறார்கள். சுற்றி வருவதற்கு சுகமாகயிருக்கிறது. மேலும், கோயிலுக்கு நூற்றுக்கணக்கான புறாக்கள் வருமாம். வெளிப்பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி, குரு சன்னதி மற்றும் ஆன்மிக நூலகம் ஒன்றுள்ளது.

கோலங்கள்

வீட்டிற்கு வரும்போது அந்த வீதியில் பொங்கல்விழாவையொட்டி கோலப்போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அழகழகாக கோலம் போட்டிருந்தனர். ஒவ்வொன்றையும் போய் பார்த்துக் கொண்டே அலைபேசியில் படமெடுத்தேன். முதல்பரிசு மயில் கோலத்திற்கு கொடுத்தார்கள். நாங்களும் அதைத்தான் கணித்தோம். எந்த வீட்டு வாசலில் அழகான கோலங்களைப் பார்த்தாலும் நின்று கவனிப்பேன். சிக்கலான கம்பி கோலங்களை எப்படி இவ்வளவு எளிதாகப் போடுகிறார்கள் என வியந்துபார்ப்பேன். சில நேரங்களில் எங்கள் வீட்டு வாசலில் நான் கோலமிடுவேன் என்பதை விட கோலப்பொடியில் வரைவேன் எனலாம்.

மறுநாள் வேளச்சேரியிலுள்ள சகோதரன் வீட்டிற்குபோய் அங்கிருந்து மதுரை கிளம்பத் திட்டம். சென்னை மெரீனா கடற்கரைக்குப் போய் கடலை கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தோம். நல்ல வெயில். அன்று காணும்பொங்கல் என்றதால் சீக்கிரம் கிளம்பினோம். சென்னையில் காணும் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குடும்பமாக கடற்கரை மற்றும் பூங்காங்களுக்கு வருகிறார்கள். மதுரையில் காணும்பொங்கலன்றுதான் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் சல்லிக்கட்டு.

வேளச்சேரி செல்லும் வழியில் இறங்கி கிண்டி போய் அலைந்து திரிந்து ஒருவழியாக நந்தனத்தில் சென்னை புத்தகக்காட்சிக்கு சென்றேன். சகோதரர் அறிவுறுத்தியபடி புத்தகக்காட்சி மைதானத்திற்குள் செல்லும்முன் அந்தக்கல்லூரி சிற்றுண்டியகத்தில் மதிய உணவாக தேனீரும், பன்னும் சாப்பிட்டு உள்ளே சென்றேன். உள்நுழைந்ததும் சாப்பாட்டுக்கடைகள் வரவேற்றன. இயல்வாகையிலிருந்து வைத்திருந்த பதாகைகள் ரசிக்கும்படியிருந்தன.

புத்தகத்திருவிழா

சென்னை புத்தகக்காட்சி அரங்கினுள் நுழைந்தேன். திக்கெட்டும் புத்தகங்கள், நூற்றுக்கணக்கான கடைகள், ஆயிரக்கணக்கில் புத்தகம் வாங்க வேண்டுமென்ற ஆசையெழுந்தது. எல்லாவற்றையும் மெல்ல வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தேன். வாங்க வேண்டிய புத்தகப்பட்டியல் மனதிலிருந்தாலும் பையில் என்னயிருக்கிறது என்று தெரியுமல்லவா? எனவே ஒவ்வொரு வீதியாகப் போய் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தேன். வேதாந்தமகரிஷியின் மணிமொழிகள் புத்தகங்களும், வாழ்க வளமுடன் – அருட்காப்பு ஸ்டிக்கர்ஸூம் வாங்கினேன்.

பாரதி புத்தகாலயத்தில் தபாலிபையும், கீரனூர் ஜாகிர்ராஜாவின் குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கிவரை என்ற புத்தகமும் வாங்கினேன். இவையிரண்டும் வாங்குவேன உள்நுழையும் வரை நினைக்கவில்லை. பை லேசானதும் காலாற நடந்தேன். காசில்லாதவன் காலாற நடக்கலாம். அதற்குப்பிறகுதான் நிறைய புத்தகங்கள் ஈர்த்தது. அன்று மாலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவதாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தத்தோடு  அம்புட்டு வீதியும் சுற்றிவிட்டு கிளம்பினேன். தமிழ்இந்து நாளிதழ் வாசகர் திருவிழா என்ற தலைப்பிலிட்ட கட்டுரைகள் சென்னை புத்தகக்காட்சி குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள உதவியாகயிருந்தது. மற்ற ஊடகங்களும் இதைப் பின்பற்றலாம். மேலும், மற்ற ஊர்களில் புத்தகத்திருவிழாக்கள் நடக்கும் போது அந்த செய்திகளை முன்னிலைப் படுத்தினால் நன்றாகயிருக்கும். அங்கிருந்து வேளச்சேரி சென்றேன். பிறகு குரோம்பேட்டையிலுள்ள சகோதரியைப் பார்த்துவிட்டு இரவு நான்மாடக்கூடலை நோக்கி கிளம்பினோம். அதிகாலை நாலுமணிக்கு மதுரையம்பதி வந்தடைந்தோம். காணும் பொங்கல் இம்முறை சென்னையைக் காணும் பொங்கலானது.

padayal

பொங்கலை முன்னிட்டு அழகிய கோலத்தின் நடுவே பூசணிப்போல சிறப்பிதழ்களும் மலர்களும் பூக்கும். நண்பர் இளஞ்செழியனின் சீரிய முயற்சியால் 2013லிருந்து கதிர் பொங்கல் மலர் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், கலை, இலக்கியம், வேளாண்மை, பண்பாடு, தொன்மை, சூழலியல், பயணம் எனப் பல விசயங்களைச் சொல்லும் கட்டுரைகள், கவிதைகள், கதைகளோடு கதிரவனுக்கு எழுத்துப்படையலாய் கதிர் பொங்கல் மலர் ஆண்டுதோறும் வெளிவருகிறது.

மாவீரர் தினத்தன்று மழைக்கால காலைப்பொழுதில் பசுமைநடை மலைப்பயணத்திற்கு சென்றபோது இளஞ்செழியனை முதன்முதலாக சந்தித்தேன். பசுமைநடைப் பயணங்களினூடாக முகிழ்த்த நட்பு வாசிப்பினூடாக மலர்ந்தது. இளஞ்செழியன் தான் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பி கருத்து கேட்டு என் வாசிப்பனுபவத்தை அறிந்து கொள்வார். கதிர் பொங்கல் மலர் 2013ல் இருந்து அதிலுள்ள எல்லாக் கட்டுரைகளையும் பலமுறை வாசித்திருக்கிறேன். 2013லிருந்து 2015க்குள்ளாக பொங்கல் மலர் இன்னும் மெருகேறியிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் தொடர்ந்து கதிர் பொங்கல் மலரில் வருவது மகிழ்வளிக்கிறது. மனதில் நெடுநாள் கருவாயிருந்த காரி கதையை கதிர் பொங்கல் மலர் 2014க்காக எழுத வைத்தார். அவரது தொடர் தூண்டுதலால்தான் அந்தச் சிறுகதையை எழுதினேன். அதற்கு ‘ஒரு கோயில்மாட்டின் கதை’ என நான் வைத்த தலைப்பை மாற்றி பொருத்தமாக காரி என பெயர் சூட்டியதும் இளஞ்செழியன்தான்.

kari

கதிர் பொங்கல் மலர் படையல் அட்டைபடமே அட்டகாசமாக வந்துள்ளது. காளைமாடுகளைப் பூட்டி ஏரோட்டி உழுபவரின் படம் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறது. குணா அமுதன் மிகப் பொருத்தமான படத்தை வழங்கியிருக்கிறார்.

ஆலமரத்தடிவாசிப்பகம்பின்னட்டைப் படம் எங்க ஊர் ஆலமரத்தடி வாசிப்பகத்தின் படம். அதைக்குறித்த சில வரிகள் புத்தகத்திலிருந்து…

காற்றாட இளைப்பாற ஆலடி நிழல். காலைத்தொங்கவிட்டு அமரத் தோதான மேடை. காவல் தெய்வத்தின் அண்மை தரும் அரவணைப்பு. கண்களுக்குச் சிறையிடாத பசுமைவெளி. முன்விரியும் முற்றமாய்க் கண்மாய். கனவுச் சூழலன்றோ வாசிக்க! அருகமர்ந்து கதையாடவும் சிலர். சேர்ந்து சிலம்பும் சில பறவைகள். ஆழமும் விரிவும் தேட அந்த நாளிதழ் ஒரு சாக்கு. ஆலமரத்துடன் சேர்ந்து வாசிப்பகமும் இன்னும் படரும்.

படையலின் பின்னட்டையில் இடம்பெற்ற ஆலமரத்தடி வாசிப்பகத்தை இப்போது இன்னும் விரிவு செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு வந்துவிட்டது. பின்னாளில் எங்களூரில் வாசகசாலையாக அந்த ஆலமரமும் கண்மாய்க்கரையும் அமைய காவல்தெய்வமான சோனையா அருளட்டும். ஆலமரத்தடி வாசிப்பகம் நிழற்படத்தை ஷாஜகான் அண்ணே அழகாய் எடுத்திருக்கிறார்.

புத்தகத்தை திறந்ததும் நம்மை பார்த்துப் புன்னகைக்கும் இயற்கைப் பெரியார் நம்மாழ்வார் அய்யாவின் படம் ஏதோ செய்கிறது. சமரசம் கடந்து போராடத் தூண்டுகிறது அவரது வரிகள். அதற்கடுத்து நம்மாழ்வாரின் உரை நம்மை ஈர்க்கிறது. கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எல்லாம் நம்மை இயற்கையான வாழ்க்கைக்கு அழைக்கின்றன.

சிட்டுக்குருவிகள் தினம், கற்திட்டைகள், அன்பின் வழியது உயிர்நிலை, பல்லுயிரியம், நச்சுப் புகை, பிளாஸ்டிக் அலங்காரப்பொருட்கள், குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டம் எனப் பல்வேறு விசயங்களை குறித்து விரிவாக இளஞ்செழியன் எழுதியுள்ள கட்டுரைகளும், கதைகளும் நாம் செய்ய வேண்டிய பணிகளை நினைவுறுத்துகிறது. சூழலியல் சார்ந்த விசயங்களில் இளஞ்செழியனின் எழுத்து மிளிர்கிறது. இளஞ்செழியன் இதுவரை எழுதிய கட்டுரைகளை தொகுத்து தனிநூலாக வெளியிடலாம்.

வஹாப் ஷாஜகான், உதயகுமார், முகிழ், பெ.விஜய், இரா.சென்றாயன், பாடுவாசி ரகுநாத், கொப்பரமுழுங்கி, இளஞ்செழியன் என பெருங் கவிதைப் படையலே இந்நூலில் உள்ளது. நூலில் ஆங்காங்கே உள்ள கட்டச் செய்திகள் இயற்கையோடு நம்மை உறவாடத் தூண்டுகிறது.

படையலில் சுற்றுச்சூழல் செயல்வீரர் யோகநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணிபுரிந்து கொண்டு லட்சக்கணக்கான மரங்களை நட்டும், ஆயிரத்திற்கும் மேலான கல்விநிறுவனங்களுக்குச் சென்று இளைய தலைமுறையிடம் மரங்களின் மீதான காதலை விதைத்தும் வருகிறார். மரம் வளர்ப்பு, பணிச்சூழல், மரங்களின் தேவை, நம்மாழ்வார் அய்யாவுடன் பழகிய அனுபவங்கள், ‘ட்ரீ’ அமைப்பின் செயல்பாடு போன்றன குறித்து விரிவாகப் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த திராவிடர் திருநாளில் பெரியார் விருது பெற்றுள்ளார் திரு.யோகநாதன்.

கதிர் 2014 பொங்கல் மலருக்காக செயல்பட்டதைவிட இந்தாண்டு படையல் 2015க்கு என்னுடைய பங்களிப்பு மிகவும் குறைவு. ஏற்கனவே வலைப்பூவில் எழுதி தொகுத்திருந்த நம்மாழ்வார் உரை, வாசிப்பது தியானம், பூரொட்டி கட்டுரைகளை பொங்கல் மலருக்கு கொடுத்துவிட்டேன். நூல் முழுவதையும் தங்கை திருமணப்பணிகளினூடாக இளஞ்செழியன் வடிவமைத்திருக்கிறார். புத்தாண்டன்று மொத்தமாக ஒருமுறை திருத்தம் பார்க்க அழைத்த போதும் நான் சித்திரவீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தேன். பொங்கலுக்குப் படையல் தயாராகிவிடுமா என்று எண்ணியிருந்த வேளையில் போகிக்கு முதல் நாள் வந்து சேர்ந்தது. தனியே வெளியீடு நடத்த முடியாத சூழலில் மருதநிலத்தினூடாக இளங்கதிர்களுக்கு நடுவே கதிர் பொங்கல் மலரை படையலாக்கி பெற்றுக் கொண்டோம். படையல் பொங்கல்மலரின் விலை   ரூ25/-. நூல் தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி kathir0550@yahoo.com

Kathir 1kathir 2

கதிர் பொங்கல் மலர் முந்தைய இதழ்களில் இடம் பெற்ற சில கட்டுரை -களைப் படிக்க  இளஞ் செழியனின் வலைப் பூவில் உள்ள இந்தப் படங்களை சொடுக்குக…

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

 – கலீல் ஜிப்ரான்

jibranartநாட்குறிப்பேட்டில் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை எழுதும் முன் படித்ததில் பிடித்த வரிகளை குறித்து வைப்பேன். ஜனவரி 5 க்கான நாட்குறிப்பேட்டின் முதல் பத்தியில் கலீல் ஜிப்ரானின் மேலேயுள்ள கவிதை வரிகளை குறித்துவைத்திருந்தேன். தி இந்து நாளிதழில் நடுப்பக்க கட்டுரைப் பார்க்கும் வரை ஜனவரி 6 கலீல் ஜிப்ரான் பிறந்ததினம் என்று தெரியாது. எதேச்சையாக ஜனவரி 5 இரவிலோ அல்லது ஜனவரி 6 காலையிலோ நாட்குறிப்பேடு எழுதும் போது கலீல் ஜிப்ரானின் கவிதையை நினைவுகூர்ந்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது.

kaleeljibranமுன்பு நர்மதா பதிப்பகம் வெளியிட்ட கலீல் ஜிப்ரானின் தத்துவக் க(வி)தைகள் என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். அந்நூலை எடுக்க அதிலிருந்த ஓவியங்களும் ஒரு காரணமாகயிருந்தது. கவிஞர் நாவேந்தன் இந்நூலை அழகாக மொழிபெயர்த்திருந்தார். அதில் எனக்கு பிடித்த வரிகளை குறித்து வைத்திருந்தேன். அதை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.  கலீல் ஜிப்ரான் சிறந்த ஓவியரும்கூட. அரபியிலும், ஆங்கிலத்திலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது தீர்க்கதரிசி என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய தத்துவங்களை கொஞ்சம் பருகலாம் வாருங்கள்.

 • jibran10மிகவும் வசதி படைத்தவர்களுக்கு இறைவன் உபசரிக்கட்டும்.
 • அதிகம் பேசுபவனைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்.
 • மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது.
 • இது மிகவும் வேடிக்கை…! சில இன்பங்களை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையே என் வலிக்கும் காரணமாக அமைகிறது.
 • நாம் அனைவருமே சிறைக்கைதிகள்தான்…!  சிலர் சிறைக்கம்பிகளோடு… சிலர் கம்பி இல்லாமலேயே…!
 • அடிமைச் சுமையைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனே உண்மையான சுதந்திர மனிதன்.
 • தோல்வியடைந்தவர்களைப் பார்த்து வெற்றியடைந்தவர்கள் கூறும் உபதேசத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
 •  ஒவ்வொரு மனிதனும் என்றோ வாழ்ந்த ஓர் அரசன் அல்லது அடிமையின் சந்ததி…!
 • நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!
 • உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.
 • இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது. நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்…!
 • அதிகம் பேசுபவன் குறைந்த அறிவு உடையவன்.. பேச்சாளிக்கும் ஏலம் போடுபவனுக்கும் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை…!
 • இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.
 • குற்றம் என்பது தேவையின் மறுபெயர்… வியாதியின் ஓர் அங்கம்…! மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட பெரிய குற்றம் ஏதுமில்லை…!
 • பூமியில் நடக்கும் அனைவருடனும் நான் நடக்க விரும்புகிறேன்…! ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது…!
 • நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!
 • உன் வாயில் உணவு நிறைந்திருக்கும் போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ள போது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்…?
 • வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்.
 • அவர்கள்… என்னை வாழ்நாளை சரியாக விற்பனை செய்யாத பைத்தியம் என நினைக்கிறார்கள். என் வாழ்நாளுக்கு விலை மதிப்பு உள்ளது என நினைக்கும் அவர்களை நான் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறேன்…!
 • நீ உண்மையில் கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்!
 • மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே எல்லைக்கோடு தெரியாது…! ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்குமிடையில் கல்லைப் பாரக்க முடியாது… ஆனால், மேகத்தின் மீது ஏறி அமர முடியாதது நமது துரதிஷ்டம்…!

 நன்றி – கவிஞர் நாவேந்தன், நர்மதாபதிப்பகம், தமிழ் இந்து நாளிதழ்

kaleel

கொண்டாட்டம் 2014

ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் எழுதிக் கொண்டு போகிறோம்.

 – வண்ணதாசன்

அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விசயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டேயிருக்கிறது. அதனூடாகத்தான் இந்த எழுத்தும் கொஞ்சம் வாசிப்பும்.

மதுரா

மதுரை வீதிகளிலும், மலைகளிலும் அலைந்து திரியும் என்னைக் காப்பதற்கு மதுராபதித்தெய்வம் என் மகளாய் பிறந்தது இந்தாண்டுதான். சித்திரை வீதியிலுள்ள கோபுரங்களை மதுரா அண்ணாந்து பார்க்க, கோபுரத்திலுள்ள சிலைகளெல்லாம் மதுராவை முண்டியடித்துப் பார்க்கவென ஒரே கொண்டாட்டந்தான்.

புத்தகங்கள்2014

மனதை அலைய வைக்கவும், ஒரு நிலைப்படுத்தவும் புத்தகங்களால்தான் முடியும். 2014ல் நல்ல புத்தகங்கள் வாசிக்கக்கிட்டின. குமாரசெல்வாவின் குன்னிமுத்து, சித்திரநூலான பீமாயணம், கே.என்.செந்திலின் அரூபநெருப்பு, டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மானின் நீங்களும் அகுபஞ்சர் டாக்டராகுங்கள், ஜெயமோகனின் வெள்ளையானை, எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம், மா.செந்தமிழனின் இனிப்பு, சர்க்கரை நோயிலிருந்து விடுதலை, மதுமிதா தொகுத்த இரவு, இரா.முருகவேளின் மிளிர்கல், வைக்கம் முகமது பஷிரின் எங்க உப்பப்பாவிற்கொரு ஆனையிருந்தது, வீரபாண்டியனின் பருக்கை, அ.கா.பெருமாளின் அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், தொ.பரமசிவனின் இந்து தேசியம், சு.வேணுகோபாலின் ஆட்டம், கூந்தப்பனை, திசையெல்லாம் நெருஞ்சி, பால்கனிகள், நிலமென்னும் நல்லாள், கண்மணி குணசேகரனின் பூரணிபொற்கலை, பாடுவாசியின் பயணங்கள் விதைத்தது, டாக்டர் உமர் பாரூக்கின் உங்களுக்கு நீங்களே மருத்துவர், கதிர் பொங்கல் மலர் 2014, வேதாத்ரி மகரிஷியின் வாழ்க வளமுடன், நலம் தரும் மலர் மருத்துவம் உள்ளிட்ட புத்தகங்களை வாசிக்க முடிந்தது.

நாளிதழ் வாசிப்பில் தமிழ் இந்து ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது. நடுப்பக்கங்கள், இணைப்புகள் எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்தி வைக்குமளவிற்கு மிக நேர்த்தியாக வருகிறது. என்னுடன் பணியாற்றுபவர்களெல்லாம் சேர்ந்து ஒரு சிறிய வாசகமையத்தை எங்கள் அலுவலகத்தில் வைத்திருக்கிறோம். தி இந்து, ஆனந்தவிகடன், கல்கி, அந்திமழை என வாங்கி வாசிக்கிறோம்.

கொண்டாட்டம் 2014

திருவிழாக்களின் தலைநகரான மதுரையில் பிறந்ததே வரம்தான். சித்திரைத்திருவிழாவில் உச்சநிகழ்வான அழகர் ஆற்றிலிறங்குவதை இந்தாண்டுதான் பார்த்தேன். அப்பாடி எம்புட்டு கூட்டம்! மறக்கமுடியாத நாள். அழகர்மலையில் தைலக்காப்புத் திருவிழா பார்த்தேன். மதுரை, அழகர்கோயில், சித்திரைத் திருவிழா, நாட்டுப்புறத்தெய்வங்கள்  குறித்தெல்லாம் தொ.பரமசிவன் அய்யாவுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது இந்தாண்டில் பொன்னான தருணமாக எண்ணுகிறேன்.

எனக்கு வாசிப்பின் மீதும், எழுத்தின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் நடத்திய நாவல்முகாமில் கலந்துகொண்டது, இரவு நெடுநேரம் வரை அவருடன் உரையாடியது எல்லாம் இந்தாண்டில் கிட்டிய நல்லதொரு வாய்ப்பு. மதுரையில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகவெளியீட்டின்போது காஃப்காவையும், புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு அவர் ஆற்றிய முக்கியமான உரையைக் கேட்கக் கிடைத்தது. மதுரை புத்தகத்திருவிழாவில் சு.வேணுகோபாலை சந்தித்து உரையாடியதும், க்ரூஸ் ஹூபர்ட் அண்ணனிடமிருந்து நானும், மதுமலரனும் சு.வேணுகோபாலின் புத்தகங்களை வாங்கி வாசித்ததும் மறக்க முடியாத அனுபவம்.

பசுமைநடை2014

மலைகளிலும், கோயில் சிலைகளிலும், குளக்கரைகளிலும், தொல்தலங்களிலும் உறைந்திருக்கும் வரலாற்றை பசுமைநடை வாயிலாகத் தொடர்ந்து கற்றுவருகிறேன். இந்தாண்டு மேலக்குயில்குடி சமணப்படுகை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர்தர்ஹா, விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை, கொடைக்கானல் மலையிலுள்ள கற்திட்டைகள், பேரையூரில் பாண்டியர்கால பழமையான சிவன்கோயில், சதுர்வேதிமங்கலம் கூத்தியார்குண்டு, நிலையூர் கண்மாய், கீழக்குயில்குடியில் பாறைத்திருவிழா, மதுரை தெப்பக்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம் சமணப்படுகை, சித்தர்மலை என பல இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா விருதுகள் 2013 நிகழ்ச்சியில் பசுமைநடைக்கு தொன்மையான இடங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்கான விருது வழங்கப்பட்டது. பசுமைநடை பயணம் குறித்து குங்குமம் நாளிதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. திருமலைநாயக்கர் அரண்மனையில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கு பிறந்தநாள் கொண்டாடியது, முதல்வருக்கு எதிரான தீர்ப்பு வந்தநாள் – மழை என பல்வேறு இன்னல்களுக்கிடையில் பாறைத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடியது, பசுமைநடை குறித்த பதிவுகளைத் தொகுத்து காற்றின் சிற்பங்கள் நூலை தெப்பக்குளத்தில் வெளியிட்டது, சித்தர்மலையிலிருந்து வைகையைப் பார்த்தது போன்ற அற்புதமான தருணங்களை நினைத்தாலே இனிக்கும்.

கமல்ஹாசன்

கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று இத்தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டது மிக மகிழ்ச்சியைத் தந்தது. கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி தொலைக்காட்சிகளில் போட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். கமலின் குரலில் வாய்மொழி கேட்பதும், பார்ப்பதும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. கமல்ஹாசன் 60 என குமுதம் வெளியிட்ட சிறப்பிதழை வாங்கினேன். அருமையான நிழற்படங்களுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்தாண்டு படங்கள் எதுவும் பார்க்காமல் உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 படங்களுக்காக காத்திருக்கிறேன் இப்பதிவின் தலைப்புகூட இஞ்சி இடுப்பழகி பாடலை கமல்ஹாசன் பாடும்போது வருவதுதான். மறக்க மனங்கூடுதில்லையே…

பயணம்2014

மதுரையில் நடந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் இந்தாண்டு மதுரை குறித்து பேசும் வாய்ப்பு கிட்டியதை பெருமையாக எண்ணுகிறேன். மதுரையைத் தாண்டி இந்தாண்டு திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோயில் சிற்பங்களையும், தாரமங்கலம் சிவன் கோயில் சிற்பங்களையும், மேட்டூர் அணைக்கும் செல்ல வாய்ப்பு கிட்டியது. இந்த ஆண்டின் இறுதிப்பதிவான மறக்கமனங்கூடுதில்லையே 2014  உடன் 200-வது பதிவு நிறைவடைகிறது. மதுரையாலும், தமிழாலும் இணைந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

படங்கள் உதவி – சாலமன், மாதவன், டார்வின், அருண், இளஞ்செழியன், ராஜன்னா, ரகுநாத், என் மதுரை (மதுரக்காரன் கார்த்திகேயன்), மய்யம், குங்குமம், விஜய், முகநூல், கூகுள் தேடல்

காற்றின் சிற்பங்களோடு

நம் மனம் ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல, செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்த நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும். இணையம் வந்த பின் வலைப்பூவிலோ அல்லது முகநூலிலோ தான் எழுதியதை பதிவு செய்து வைக்கும்போது அதைப் பலரும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கான மறுமொழிகள் நம்மை மேலும் உற்சாகங் கொள்ள வைக்கிறது.

பசுமைநடைப் பயணத்தின் மலைவகுப்புகள் மனதைவிட்டு நீங்காமல் துரத்த எழுத்தாகப் பதிவு செய்யத் தொடங்கினர் சிலர். பசுமைநடை பயணக்குறிப்புகளிலிருந்து புதிய பதிவுகளை பலரும் தொடங்கினர். அவர்களது எழுத்துகள் பல்வேறு திசைகளிலிருந்தும் வாழ்த்துகளைப் பெற்றது. வெளியூரிலிருந்தெல்லாம் வலைப்பூ மற்றும் முகநூல் வழியாகப் பசுமைநடை குறித்து அறிந்து வந்து பலரும் பசுமைநடையில் கலந்து கொண்டனர்.

பாறைத்திருவிழா பெருங்கொண்டாட்டத்தில் பசுமைநடை குறித்து பதிவு எழுதியவர்களை ஆச்சர்யமூட்டும் வகையில் ‘காற்றின் சிற்பங்கள்’ என்ற தலைப்பில் ஆளுக்கொரு கட்டுரையெடுத்து தொகுப்பு நூலாக வெளியிடத் திட்டமிட்டிருந்தார் ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன். அவருடன் இந்நூல் உருவாக்கத்தில் இரத்தினவிஜயன் அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. பாறைத்திருவிழாவில் இந்நூல் எதிர்பாராத விதமாக வெளியிடமுடியாமல் போனது. அதன்பின் தெப்பக்குளம் பசுமைநடையில் இந்நூல் வெளியிட முடிவானது.

புத்தகவெளியீடு

காற்றின் சிற்பங்கள் நூலை முனைவர் இராம. சுந்தரம் அய்யா வெளியிட்டு அதில் கட்டுரை எழுதிய ஒவ்வொருவரிடமும் அந்நூலைக் கொடுத்தார். மதுரையில் நீரும் நெருப்பும்கூட தமிழ்ச்சுவை அறியும் என்று ஒருமுறை தொ.பரமசிவன் அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. வறண்டிருந்த தெப்பக்குளத்தில் இப்போது நீரேற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்களை வாழ்த்தத்தான் தமிழ்வைகையிலிருந்து நீர் வருவதாக எண்ணுகிறேன்.

Kaatrin Sirpangal Cover
Prefaceகாற்றின் சிற்பங்கள் கறுப்பு வெள்ளை பக்கங்களில் அமைந்திருந்தாலும் பார்த்துக் கொண்டேயிருக்குமளவிற்கு மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கறுப்பு வெள்ளையில் படங்கள் மிகவும் நேர்த்தியாகத் தெரிகிறது. அட்டைப் படமே அட்டகாசமாக உள்ளது. பாறையில் சமணமுனியின் சிற்பத்தின் கீழே தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா உரையாற்ற பசுமைநடைக்குழுவினர் அவரது உரையை உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நூலைப் புரட்டிப் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு வரலாற்று வகுப்பறைக்குள் பயணித்து வந்ததை உணர முடிகிறது. பனிரெண்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளது. அதில் இரண்டு கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளது.

அலைபேசியில் யானைமலை பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் உரையாடி அவருக்கு அந்த இடத்தின் வரலாறு மற்றும் பசுமைநடை குறித்து அறியுமாறு புதிய உத்தியில் அருமையான கட்டுரை எழுதியுள்ளார் உதயகுமார். கருங்காலக்குடி குறித்த தனது நினைவினூடாகப் பசுமைநடைப் பயணத்தின் செயல்களை அனைவரும் அறியுமாறு அழகுதமிழில் கட்டுரையாக மதுமலரன் எழுதியிருக்கிறார்.

காற்றின் சிற்பங்கள் என்ற இந்நூலின் தலைப்பு ராஜண்ணா எழுதிய அரிட்டாபட்டி கட்டுரையில் ஒருவரியிலிருந்து எடுக்கப்பட்டது. பசுமைநடை குறித்து தொடர்ந்து தனது வலைதளத்தில் எழுதிவருகிறார். மாடக்குளம் கண்மாயில் உள்ள கல்வெட்டைக் காணச்சென்றதைக் குறித்து கவிஞர் பாடுவாசி ரகுநாத் எழுதியுள்ளார். விவசாயிகளும், வணிகக்குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதைச் சொல்கிறது இக்கட்டுரை.

கொடைக்கானலில் உள்ள கற்திட்டைகளைக் காணச் சென்றதைக் குறித்து ஆங்கிலத்தில் குருஸ் அந்தோணி ஹூபர்ட் அவர்கள் எழுதிய கட்டுரை மிக அருமை. மே மாத விடுமுறை நாளில் சென்ற அந்த வரலாற்றுப் பயணத்தை தன் பதிவினூடாக மீட்டெடுத்துக் கொடுக்கிறார் ஹூபர்ட்.

திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகை மற்றும் காசிவிஸ்வநாதர் கோயிலைக் காணச் சென்றதைக் குறித்து வேல்முருகன் அவர்கள் எழுதிய கட்டுரை வாசிப்பவர்கள் மனதில் மலையிலிருந்து மதுரையை பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையின் அழகை, வெட்டுவான் கோயிலின் அமைப்பை, சமணப்பள்ளி குறித்தெல்லாம் ரசித்து எழுதியிருகிறார் இளஞ்செழியன்.

மாங்குளம் மீனாட்சிபுரம் குறித்த பாண்டியனின் சமணப்பள்ளியில் என்ற எனது பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் உற்சாகமாகிவிட்டது. அந்த மலையின் தொன்மையும், குளுமையும் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. ஷாப்பிங் மால்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதைவிட்டு இதுபோன்ற மலைகளுக்கு கூட்டி வரவேண்டுமென்ற நல்ல கருத்தோடு உள்ள தீபாவின் கட்டுரை அரிட்டாபட்டியின் எழிலைச் சொல்கிறது.

பசுமைநடையின் பெருந்திருநாளான விருட்சத்திருவிழா குறித்த வஹாப் ஷாஜஹான் பதிவு அன்றைய திருவிழாவின் கொண்டாட்டத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. அன்னதானம், அடைக்கலதானம், அறிவுதானம், மருத்துவகொடை என சமணத்துறவிகளின் பணியைச் சொல்லும் கனகராஜின் கட்டுரை கருங்காலக்குடி குறித்தது. பேரையூர் மலையிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவந்ததை குறித்து வித்யா எழுதிய ஆங்கிலக் கட்டுரை அவரின் முதல்பசுமைநடை பயண அனுபவத்தை அழகாய் சொல்கிறது.

பதிவர்கள்

மாடக்குளம் மற்றும் பேரையூர் கட்டுரைகளில் வேறு இடங்களுக்கான படங்களுள்ளது சற்று நெருடலாகயிருக்கிறது. தீபா அவர்களின் கட்டுரை ‘வியாழன் 1 ஆகஸ்ட் 2013’ சென்றதாகத் தொடங்குகிறது. படிப்பவர்கள் வியாழக்கிழமையில் கூட செல்வார்களோ என குழம்பிப்போக வாய்ப்புள்ளது. மேலும், அரிட்டாபட்டி மற்றும் கருங்காலக்குடி குறித்து இரண்டு கட்டுரைகள் உள்ளதால் இன்னும் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பு விட்டுப்போனதாக உணர்கிறேன். மற்றபடி காற்றின் சிற்பங்களைப் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட இனம்புரியாத மகிழ்ச்சியை நீங்களும் இதைப் படிக்கும்போது சொல்வீர்கள். தெரிந்தவர்களிடமெல்லாம் இந்நூலைக் கொடுத்து பசுமைநடைப் பயணங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். காற்றின் சிற்பங்கள் உங்கள் மனதிலும் உறைவதை வாசித்து மகிழுங்கள்.

படங்கள் உதவி – அருண்

மய்யம்

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியில்
நான் தெரிவேன்.  

– கமல்ஹாசன்

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் வாசிப்பை நாசம் செய்யும் வேளையில் நம்மை ஆச்சர்யமூட்டும் விசயமாக தன்னுடைய திரைப்படப் பணிகளினூடே தமிழின் உன்னதமான படைப்புகளை வாசிக்கும் கமல்ஹாசனைப் பார்க்கும்போது பொறாமையாகயிருக்கிறது. வாசிக்க நேரமில்லை என்று சொல்ல வெட்கமாகயிருக்கிறது. புத்தகம் பேசுது  மாத இதழுக்காக கமல்ஹாசனோடு எழுத்தாளர் வெண்ணிலா மற்றும் முருகேஷ் எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு சிறுபகுதி:

கலையுலக இலக்கியவாதியான உங்களின் இலக்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

கலையுலகத்திலிருந்து இலக்கியவாதியின் அனுபவத்தைப் பேசணும்னா, அது ரொம்ப சோகம்தான். ஜே.கே.வினுடைய கலை உலக அனுபவங்கள் மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இன்றைக்கு வாழும் ஹீரோக்களில் முதன்மையானவராக நான் நினைப்பது ஜே.கே.வைத்தான். ஆனால், நான் அவரை வாழ்நாளில் நான்கைந்து முறைகளுக்குமேல் பார்த்ததில்லை. காரணம், அதீதமான வியப்பும் பெருமிதமும். அது மட்டுமில்லாம கிட்ட பார்க்கிறதுல சின்ன தயக்கமும் இருக்கு. நரைச்ச மீசை, உயரம் இதெல்லாம் தொந்தரவு பண்ணிடுமோன்னு தள்ளியே இருக்கேன். குழம்பிடுமோன்னு தோணும். ‘வாழும் ஹீரோ’ அவர் காதுபட சொல்றதுல எனக்கு சந்தோஷம். அந்த மாதிரி நெறய பேர் இருக்காங்க.

Writers

தன்னோட ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு கு.ஞானசம்பந்தன். தொ.பரமசிவன். தொ.ப.வைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம். ஆனா, உடம்பு முடியாம ஒரு வயோதிகரா தொ.ப.வைப் பார்க்கிறதுல ஒரு சின்ன வருத்தம். இளைஞரா இருந்தப்ப எங்க அப்பாவையெல்லாம் பார்க்க வந்திருக்காரு. அப்ப தெரிஞ்சுக்காம போயிட்டமேன்னு தோணும். கோபமான தொ.ப.வைப் பார்த்திருக்கலாம். ஞானசம்பந்தனையே சொல்லலாம். அவர் வெளியே கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டாலும் ரொம்ப ஆழமான, கோபமான ஆளு. கோமாளி தொப்பி ஒரு யுக்தி. ஞானக்கூத்தன், புவியரசு இவங்கள்லாம் எனக்குக் கிடைச்ச பரிசு. நட்புன்றது நானா தேடிக்கிட்டதுதான். அதனால் அது பரிசா, நான் சம்பாதித்தான்னு தெரியல. இதே இடத்தில் உட்கார்ந்து சுந்தர ராமசாமியோட ரெண்டு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். ஞானக்கூத்தன்தான் ஏற்பாடு செஞ்சாரு. முக்கியமான ஒரு வேலையை செஞ்ச மாதிரி ஞானக்கூத்தன் அன்னைக்கு நெகிழ்ச்சியா பக்கத்தில் நின்னுக்கிட்டுருந்தார். எனக்கு ரொம்ப நெகிழ்வான அனுபவம். அதே மாதிரி சமீபத்துல படிச்சது ப.சிங்காரத்தை. அவரு செத்துப்போனப்புறம்தான் அவர படிச்சேன். அவரோட புத்தகம் இருக்கிறதால அவர் இல்லாம போனதைப் பத்தி எனக்கு வருத்தமில்ல. சமீபத்தில் தூக்கி வாரிப்போட்ட புத்தகம் கொற்றவை. மிரண்டுட்டேன். சொல்லியே ஆகணும். ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததால சொல்லலை. ஒருவேளை அவர் என் சினிமாவில் வேலை செஞ்சு என் புஸ்தகம் படிங்கன்னு குடுத்திருந்தார்னா நான் படிச்சிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். நானா தேடி படிச்சதால என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் படிக்கிறது பத்தலன்றது மட்டும் எனக்குத் தெரிஞ்சது.

Books

‘ஆழி சூழ் உலகு’ன்னு ஒரு புஸ்தகம். நண்பர்கள் பரிந்துரை பண்ணாங்க. ஜி.நாகராஜனையே நான் அவர் இறந்து போனதுக்குப் பின்னாடிதான் படிச்சேன். ‘குறத்திமுடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ எல்லாம் அப்புறம்தான் படிச்சேன். ஜெயகாந்தனைத் தெரிஞ்சுகிட்டது மாதிரி அவரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்தா அவர் கூட கைகுலுக்கியிருக்கலாமேன்னு தோணுச்சு. கு.ப.ரா.ல்லாம் காலதாமதமாக வாங்கிப் படிக்கிறேன். நான்தான் சொல்றேனே, 15 வருசமாத்தான் தெளிவு வர ஆரம்பிச்சுருக்கு.

(நன்றி – வெண்ணிலா, முருகேஷ் – புத்தகம் பேசுது, ஜனவரி 2008 இதழ்)

கமல்ஹாசன் தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.சா.ரா, கு.ப.ரா, பிரமிள், புவியரசு, ஞானக்கூத்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தொ.பரமசிவன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், கோணங்கி என இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என தொ.பரமசிவன் சொல்கிறார். கமல்ஹாசன் மய்யம் என்ற இலக்கிய மாத இதழை முன்பு நடத்தியிருக்கிறார். நாமும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்போம்.

ஜி. நாகராஜன் பிறந்த நாள்  & மதுரை புத்தகத் திருவிழா சிறப்புப் பதிவு

1bookfair

அலைபாயும் மனதை அடக்குவது கடினம். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்வது அதைவிடக் கடினம். மனதை அடக்க முயலாமல் எண்ண ஓட்டங்களை ஒருநிலைப்படுத்த எளிய வழி வாசிப்பது. வாசிக்க வாசிக்க புத்தகத்தோடு மனம் ஒன்றிவிடுகிறது. வாசிப்பது தியானம்.

வாசிக்கத் தெரிந்த எல்லோரும் நல்ல வாசகர்களாக இல்லை என்பது வருத்தமான விசயம். வாசிப்பின் பயன், எதை வாசிப்பது, வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம், வாசிப்பதற்கு உள்ள தடைகள் என்னவெல்லாம் என்பது குறித்து பார்ப்போம்.

Vaasippai Nesippavan

நம் நாட்டில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு மனச்சிக்கல்களே காரணம். பலவிதமான மனிதர்கள், இடங்கள், சூழல்கள் குறித்து வாசிக்கும் போது எது சரியான வாழ்க்கை என்பதை நாமே உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள நல்லதொரு வழிகாட்டியாக புத்தகங்கள் திகழ்கின்றன. வாசிப்பது வாழ்க்கைக்காக என்ற இலக்கோடு வாசிக்கத் தொடங்கினால் புத்தகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் உன்னதமாக்கும். நம்மை சாதி, மதங்கடந்த நல்லதொரு மனிதனாக்கும்.

முதலில் எதை வாசிப்பது என்ற தயக்கம் நம் எல்லோருக்கும் இருக்கும். நமக்கு பிடித்தமான விசயங்களைக் குறித்த தேடல் நம்மை சரியான வாசிப்புத் தளத்திற்குள் கொண்டு சேர்க்கும். மதுரையை உங்களுக்குப் மிகவும் பிடிக்குமென்றால் மதுரையை மையமாகக் கொண்டு வந்துள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆய்வு நூல்களை தேடிப்படிக்கலாம். அரவிந்தன் – பூரணி என்ற அற்புதக் கதாமாந்தர்களை கொண்டு நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர், மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைச் சொல்லும் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களை வாசிக்கும்போது மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும்.

மனோகர் தேவதாஸ் மதுரையில் தன் இளமைக்கால நினைவுகளை கோட்டோவியங்களோடு வரைந்து எழுதிய எனது மதுரை நினைவுகள் உங்களையும் ஒரு புத்தகம் எழுதத்தூண்டும். தொ.பரமசிவனின் அழகர்கோயில் என்ற ஆய்வு நூல் கோயில்வரலாறு தொடங்கி சித்திரைத் திருவிழா வரையிலான பல தளங்களில் வாசிக்கச் சுவாரசியமான நூல். ஆறுமுகம் எழுதிய மதுரைக் கோயில்களும் திருவிழாக்களும், குன்றில் குமார் எழுதிய மதுரை அன்றும் இன்றும், பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் எழுதிய மதுரையில் சமணம், தொல்லியல் துறை வெளியீடான மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு போன்ற நூல்கள் மதுரையின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும்.

ThUkkam vara

இயற்கையை நேசிப்பவர்கள் நம்மாழ்வாரின் உழவுக்கும் உண்டு வரலாறு, மா.கிருஷ்ணனின் பறவைகளும் வேடந்தாங்கலும், தியோடர் பாஸ்கரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக போன்ற நூல்களை வாசிக்கலாம். சங்க இலக்கியங்களில் பாடாத சூழலியலையா ஆங்கிலத்தில் எழுதிவிடப் போகிறார்கள்? பயணங்களில் விருப்பமானவர்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி வாசித்தால் உங்கள் பயணங்கள் இன்னும் அற்புதமாகும். திரைப்படங்கள் உங்களுக்கு பிடித்தவிசயமென்றால் தியோடர் பாஸ்கரன் தொகுத்த சித்திரம் பேசுதடி, செழியனின் உலக சினிமா போன்ற கட்டுரைத்தொகுப்புகளை வாசிக்கலாம். திரைப்படங்கள் மீதான புதிய பார்வையை இந்நூல்கள் உங்களுக்கு ஏற்படுத்தும்.

நெய்தல்நில மக்களின் வாழ்வை அறிய விரும்பினால் வண்ணநிலவனின் கடல்புரத்தில், ஜோ டி குருஸூன் ஆழி சூழ் உலகு, கொற்கை, ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்கரையில், ஜெயமோகனின் கொற்றவை, ஆ.சிவசுப்பிரமணியனின் உப்பிட்டவரை வாசிக்கலாம். இந்நூல்கள் கடல்சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பாடுகளை உங்களுக்கு கற்றுத்தரும். நம் பண்பாட்டின் வேர்களை அறிய தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள், பக்தவத்சலபாரதி தொகுத்த தமிழர் உணவு போன்ற நூல்கள் உதவும். வாசிப்பே எல்லாவற்றிற்கும் மையப்புள்ளியாக விளங்குகிறது.

இளையதலைமுறையிடம் வாசிப்பை பழக்கமாக்க பள்ளி, கல்லூரிகளில் வாசகர் மன்றங்களை உருவாக்கலாம். தினம் ஒரு சிறுகதை வாசித்து அதைக் குறித்த உரையாடல்கள் மூலம் வாழ்க்கையை கதைகளின் வாயிலாக புரிந்து கொள்ளலாம். விடுமுறை நாட்களில் நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் வாசிக்கலாம். இதன்மூலம் வருடத்திற்கு குறைந்த பட்சம் 200 சிறுகதைகள் வாசிக்க முடிவதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட நல்ல புத்தகங்களையும் வாசிக்க முடியும். இப்பழக்கத்தை வீடுகளிலும் கடைபிடிக்கலாம். ஒருவருக்கொருவர் உரையாடும் போது குடும்பத்தில் இணக்கம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். புத்தகத்திருவிழாக்களுக்குச் செல்வதும், எழுத்தாளுமைகளை சந்தித்து உரையாடுவதும் வாசிப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

வாசிப்பின் முதல்தடையே வாசிப்பு பழக்கத்தை மதிப்பெண்களோடு போட்டுக் குழப்பிக் கொண்டதுதான். அதனால்தான் பலர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்ததும் புத்தகங்களைத் தொடுவதில்லை. அதற்குப் பின் வாசிப்பவர்களும் அதிக சம்பளமுள்ள பணிகளை நோக்கி போட்டித் தேர்வுகளுக்காக பல்லாயிரக்கணக்கான தகவல்களை படித்து தகவல் களஞ்சியமாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இன்னொரு புறம் வாசிப்பு ஜோதிடம், சுயமுன்னேற்றம், சமையல், திரைப்படத்துணுக்குகள் என குறுகிப்போனது மற்றொரு சோகம்.

ஒருநாள் முழுவதும் இடைவிடாமல் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் நாம் ஒருமணிநேரங்கூட நல்ல புத்தகங்களை வாசிக்க நேரம் செலவளிப்பதில்லை. ஆயிரக்கணக்கில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் நாம் நூறு ரூபாய் செலவளித்து நல்ல புத்தகம் வாங்கத் தயங்குகிறோம். வாரந்தவறாமல் வழிபாட்டுத் தலங்களுக்கும், பொழுதுபோக்கிடங்களுக்கும் செல்லும் நாம் நூலகங்கள், புத்தகநிலையங்களுக்குள் காலடியெடுத்து வைக்கத் தயங்குகிறோம். இந்நிலை மாற வேண்டும்.

Puthagam Virparvar

ஐந்து ரூபாயிலிருந்து நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன. நூலகங்களில் உறுப்பினர் ஆவதற்கு நூறு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை அதிகமாக்குவோம். நாம் மற்றவர்க்கு வழங்குவதற்கான அற்புதப் பரிசு புத்தகங்களே.வாசிப்பை நேசிப்போம். புத்தகங்களே நம்முடைய நல்ல தோழன் என்பதை உணர்வோம். நம் அகத்தையே வாசிப்பகமாக்குவோம். வாசிப்பது தியானம்.