பொதும்பு எங்கள் ஊரை அடுத்துள்ள ஊர். திரைப்படத் தயாரிப்பாளர் சங்கிலி முருகனின் சொந்த ஊர் என்பதால் எங்க ஊருப் பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பதிவாகி உள்ளது.

அவ்வூரின் பெருஞ்சிறப்பு பெண் கவிஞர் உள்பட மூன்று சங்கப் புலவர்கள் வாழ்ந்திருப்பது. ஆனால் அது பலருக்கும் தெரியாது. எனவே பொதும்பில் புலவர்கள் என்ற தலைப்பில் ஒரு சிறுநூலை வெளியிட்டோம்.

11 ஜனவரி 2020 அன்று பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளியின் முந்நூற்றுச் சொச்சம் மாணவர்களுக்கும் காலை வழிபாடு முடிந்ததும் இந்நூலை வழங்கினோம்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலராணி அவர்கள், உதவி தலைமை ஆசிரியர் சசிகலா அவர்கள், சுரேஷ் உள்ளிட்ட பிற ஆசிரிய பெருமக்கள் எங்களுக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்கினார்கள். அவர்களுக்கு நன்றிகள்.

அந்நூலின் முன்னுரை வருமாறு:

பொதும்பு என்ற சொல்லுக்கு இளஞ்சோலை என்றும் பொருள்.  சோலைகள் சூழ்ந்த பொதும்பு அந்நாளில் ‘பொதும்பில்’ என்ற பெயருடன் திகழ்ந்திருக்கிறது. குறைந்தது மூன்று சங்கத் தமிழ்ப் புலவர்கள் பொதும்பைச் சேர்ந்தவர்களாக அறியப்படுகிறார்கள். நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் “பொதும்பில் பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்; மதுரைத் தாலூகாவில் உளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகிறது” என்கிறார். தமிழகம் – ஊரும் பெயரும் என்ற நூலில் ரா. பி. சேதுப்பிள்ளையும் இதைக் குறிப்பிடுகிறார்.

பொதும்பில்கிழார் நற்றிணை 57-ஆம் பாடலைப் பாடியவர். அகநானூற்றில் உள்ள 192-ஆம் பாடலைப் பாடிய பொதும்பில்கிழார் வெண்கண்ணனார் என்பாரும் இவர்தானா வேறொருவரா எனத் தெரியவில்லை. பொதும்பில்கிழாரின் புதல்வரான பொதும்பில்கிழார் மகனார் வெண்கண்ணியார் நற்றிணையில் உள்ள இரு பாடல்களைப் (375, 387) பாடியவர். அந்நாளிலேயே நம் நிலத்தில் பெண்கல்வி சிறந்து விளங்கியதை பொதும்பில் புல்லாளங்கண்ணியார் என்ற பெண்புலவர் இருந்ததைக் கொண்டு அறியமுடிகிறது. புல்லாளங்கண்ணியார் அகநானூற்றில் உள்ள 154-வது பாடலைப் பாடியவர்.

இப்பாடல்கள் யாவும் அகத்துறை சார்ந்தவை என்பதால் இயற்கை விவரிப்புகளை மட்டும் கொடுத்துள்ளோம். அகவையும், ஆர்வமும் உள்ளவர்கள் முழுப்பாடல்களையும், அவற்றில் உள்ள உள்ளுறை முதலான இலக்கிய நயங்களையும் சுவைக்கலாம்.

தோராயமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையும், இலக்கியமும் செழித்திருந்த இப்பகுதியைச் சேர்ந்த நாம் இவ்விரண்டையும் கண்ணெனப் பேணலாம்தானே!

நூறு புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற பெரிய இலக்கோடு தொடங்கப்பட்ட பயணம் பாதி நிறைவேறியிருக்கிறது. 2020ல் நூறு புத்தகங்கள் வாசிக்க முயற்சிக்கலாம். இந்தாண்டு, தோராயமாக 10,000 பக்கங்கள் வாசித்திருப்பேன் என எண்ணுகிறேன். இதில் நான் எழுதிய “திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை” நூல் தந்த உற்சாகம் அலாதியானது.

நாவல்கள் & குறுநாவல்கள்

 1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
 2. சேவல்களம் – பாலகுமார் விஜயராமன்
 3. சுளுந்தீ – முத்துநாகு
 4. ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
 5. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்
 6. வெக்கை – பூமணி
 7. உப்புநாய்கள் – லஷ்மி சரவணக்குமார்
 8. பெர்முடா – கேபிள் சங்கர்
 9. சிவப்புப்பணம் – பாலகுமார் விஜயராமன்
 10. மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது – பாஸூ அலீயெவா
 11. குட்டி இளவரசன் – அந்த்வான்
 12. கோல்யா சினிட்சின் நாட்குறிப்புகள் – நிகோலாய் நோகோவ்

சிறுகதைகள் & சிறுவர் கதைகள்

 1. சுடரும் சிறுமி – டி.பத்மநாபன்
 2. ஆங்கோர் ஏழைக்கு – எட்டயபுரம் ராஜன்
 3. செந்நிற விடுதி – பால்ஸாக்
 4. அனல்ஹக் – வைக்கம் முகமது பஷீர்
 5. தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ்
 6. லாலிபாலே – எஸ்.ராமகிருஷ்ணன்
 7. பம்பழாபம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 8. சக்கரியா கதைகள் – பால் சக்கரியா

கட்டுரைகள்

 1. இருவர் கண்ட ஒரே கனவு – ச.தமிழ்ச்செல்வன்
 2. நகலிசைக் கலைஞன் – ஜான் சுந்தர்
 3. மனக்குகைச் சித்திரங்கள் – ஆத்மார்த்தி
 4. தமிழ்க் கிறித்துவம் – ஆ.சிவசுப்பிரமணியன்
 5. பனுவல் போற்றுதும் – நாஞ்சில்நாடன்
 6. முத்தமிழ் மதுரை – புலியூர்க்கேசிகன்
 7. எங்கே இருக்கிறாய் கேத்தரின் – மானசீகன்
 8. மதுர வரலாறு – பசுமை நடை வெளியீடு
 9. மண்ணின் மரங்கள் – கா.கார்த்திக், தமிழ்தாசன்
 10. இந்திய வானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 11. பாளையங்கோட்டை – தொ.பரமசிவன்
 12. ஆதலினால் – தொ.பரமசிவன்
 13. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
 14. தமிழ் எழுத்தியல் வரலாறு – சு.இராசவேலு, நடனகாசிநாதன்
 15. சமயங்களின் அரசியல் – தொ.பரமசிவன்
 16. நயிதலீம் – டாக்டர் அபய்பங்
 17. இலக்கற்ற பயணி – எஸ்.ராமகிருஷ்ணன்
 18. எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன்
 19. அருணா இன் வியன்னா – அருணா
 20. கொம்பு முளைத்தவன் – பா.ராகவன்
 21. ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது – ச.தமிழ்ச்செல்வன்

கவிதைகள்

 1. ஆழித்தேர் – விக்ரமாதித்யன்
 2. கவிதையும் கத்திரிக்காயும் – விக்ரமாதித்யன்
 3. கல்யாண்ஜி கவிதைகள் – கல்யாண்ஜி
 4. காஹா சத்தச ஈ – மொழிபெயர்ப்பு சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்

நேர்காணல்கள் மற்றும் பிற

 1. திருவிழாக்களின் தலைநகரம் – சித்திரவீதிக்காரன்
 2. மானுட வாசிப்பு – தொ.பரமசிவன்
 3. சிறுகோட்டு பெரும்பழம் – சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்
 4. சில இறகுகள் சில பறவைகள் – வண்ணதாசன்

இதிலுள்ள புத்தகங்களில் சிலவற்றைத் தவிர மற்றவற்றை நூலகங்களில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும், கிண்டில் வாயிலாகவும் வாசித்தேன். வாசிக்க உதவிய அனைவரையும் இக்கணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

13வது புத்தகத்திருவிழாவை ஒட்டி மதுரை தமுக்கம் திடலில் கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் தமிழினியின் 7 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ‘சொல் என்னும் உயிர்விதை’ எனும் மொழியியல் கட்டுரை நூலை பேராசிரியர் சாகுல் ஹமீது அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்

இந்நூல் குறித்து பேராசிரியர் ந.ரத்தினக்குமார் உரையாற்றினார். அதிலிருந்து:

நூறுபக்கங்கள் கொண்ட இந்நூல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் சங்க இலக்கிய வார்த்தைகள், வட்டாரப் பெயர்கள், தனித்துவமான பழமொழிகள், சில வழக்காறுகள் இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு அவற்றின் பின்புலங்கள் என்ன அவற்றை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும், அதில் நடைமுறையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன என்பதைக் குறித்து மகுடேசுவரன் எழுதியிருக்கிறார். தமிழ்மொழி சந்திக்க கூடிய இடர்பாடுகள் குறித்து இரண்டாவது பகுதியில் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக இணையதமிழ் என்ற தனித்துவமான தமிழ்மொழி உருவாகிவருகிறது.

மகுடேசுவரன் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்கிறார். குறிப்பாக 5000க்கும் மேலான வாசகர்களுக்கு அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே செல்கிறார். இந்த உரையாடல் என்பது நவீனத் தமிழ் வந்தபொழுதே தொடங்கிய விசயம்தான். இதழியல் துறையில் புழங்கத் தொடங்கிய தமிழின் சிக்கல்கள் குறித்து ரா.கி.பரந்தாமனார், நன்னன், தமிழண்ணல் போன்றவர்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். நவீன இலக்கியம் அல்லது 80-களுக்கு பின்னால் வரக்கூடிய மொழிப்பிரச்சனைகளை நஞ்சுண்டன், பெருமாள் முருகன் போன்றவர்கள் உரையாடிச்சென்றார்கள். அவர்களுடைய தொடர்ச்சியாக சமூக ஊடகத்தில் நம்முடைய மொழிப்பயன்பாடு குறித்த சில விவாதங்களை, விளக்கங்களை  மகுடேசுவரன் தேடிச் செல்கிறார்.

இப்பொழுது நம்முடைய பெயர்கள் எல்லாம் எப்படி வைக்கப்படுகின்றன? என்றொரு கேள்வியை எழுப்பிக் கொள்கிறார். தந்தையினுடைய பெயரைத் தான் நாம் முன்வைத்து எழுதுவது மரபுன்னு சொல்றாங்க. அதுதப்புன்னு சொல்றார். அவங்கவங்க ஊர்ப்பெயர், வட்டாரப்பெயர்களை, அந்த சமூகப்பெயர்களை வைப்பதற்கான காரணமென்ன என்பது குறித்து பேசுகிறார்.

மோடி குறித்து, எடப்பாடி குறித்து பேசுகிறார். சென்னைப்பட்டினம் என்பது நமக்கு தெலுங்குச்சொல் என்று அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இவர் அதை மறுக்கிறார். சென்னாகூனி என்ற சொல்லக்கூடிய ஒரு மீனிலிருந்து வந்திருக்கலாம். சென்னையினுடைய ஆதிகுடிகள் மீனவர்கள்தான். ஒரு பறவை ஒன்று இருக்கிறது. பறவை அல்லது மீனின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார்.

இணையத்தில் எழுதுவதால் மேலோட்டமாக அவர் எழுதுகிறார் என்று நாம் முடிவுசெய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர் மரபு இலக்கணத்தை முழுமையாக கற்றுக்கொண்டு தொல்காப்பியத்திலிருந்தும், நன்னூலிலிருந்தும் நூற்பாக்களை மேற்கோள் காட்டிப் பேசுவது நாம் கவனிக்கத்தக்கது.

கா.சிவத்தம்பி சொல்வது போல தமிழ்மொழியின் பெருமை தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்பார். அந்தவகையில் தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்துவதற்கு, சொல்வழக்காறுகளை அடுத்த தலைமுறையை நோக்கி கொண்டுசெல்வதற்கு இது முக்கியமான நூல். இந்நூலை எழுதிய மகுடேசுவரனுக்கும், பதிப்பித்த தமிழினி வசந்தகுமாருக்கும் வாழ்த்துக்கள்.

படங்கள் உதவி – வேல்முருகன், ரகுநாத்

யாரும் யாரையும் தாண்டட்டும்
நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.
என்னையே நான் கூட.

வண்ணதாசன்

முகநூலில் உள்ள நல்ல குழுக்களில் வாசிப்பை நேசிப்போம் குழுவும் ஒன்று. இந்த குழுவிலுள்ளவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து அறிமுகம் செய்கின்றனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டிற்கு இரண்டு, மூன்றுமுறை வாசிப்பு போட்டியை நடத்துகிறார்கள். 30 நாள், 50 நாள், 100 நாள் என போட்டிகளை நடத்தியதில் நான் நான்கு முறை கலந்துகொண்டிருக்கிறேன். இதில் பங்குபெறுபவர்கள் அவர்கள் தினமும் வாசிக்கும் புத்தகங்களின் விபரங்களை கூகுள் டாக்குமென்ட்ஸ் பகுதியில் ஏற்றுவதற்கான இணைய இணைப்பையும் வழங்கிவிடுகிறார்கள். மறுநாள், போட்டியில் கலந்துகொள்ளும் நபர்கள் வாசித்த பக்கங்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல், வரைபடம் என போட்டு வாசிப்பு மீதான ஆர்வத்தை உண்டாக்குகிறார்கள். மேலும், இதில் அதிகப்பக்கங்களையும், அதிகநாட்களும் வாசித்தவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் பத்திலிருந்து முப்பது நபர்களுக்கு புத்தகப்பரிசு வழங்குகிறார்கள். வாசித்த புத்தகம் குறித்து வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் சிறுபதிவு எழுதினால்தான் பரிசுபெறுவதற்கு தகுதியுடைய நபர்களாகத் தேர்தெடுக்கிறார்கள் என்பது சிறப்பு.

நானும் இதில் பங்கெடுத்து வாசிக்கத்தொடங்கினேன். அதன் வாயிலாக 8 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. அந்த நூல்கள் குறித்த சிறிய அறிமுகப்பதிவு.

செந்நிற விடுதி – பால்ஸாக் ஹொனேரே

டி பால்ஸாக், பிரான்ஸ் நாட்டில் 1799ல் பிறந்த எழுத்தாளர். இவர் கிட்டத்தட்ட நூறு நாவல்களையும், பல நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘செந்நிற விடுதி’ என்ற தொகுப்பை குறித்த சிறு அறிமுகம்.

பாலைவனத்தில், செந்நிற விடுதி, லா க்ராண்ட் பெர்தெஷே, நாத்திகரின் பூசை என்ற நாலு சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது நாத்திகரின் பூசை என்ற கதைதான். இந்தக் கதை குறித்து சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். டெஸ்ப்ளேன் என்ற புகழ்பெற்ற மருத்துவர், நாத்திகர். இவரிடம் மருத்துவப் பயிற்சி பெற வந்த பியான்கன் என்ற இளம் மருத்துவரை தன்னருகிலேயே வைத்து நன்கு பயிற்சியளிக்கிறார். பியான்கன் ஒருமுறை நாத்திகரான டெஸ்ப்ளேன் தேவாலயத்திலிருந்து வருவதைப் பார்த்துவிடுகிறார். ஒருமுறை அவரிடம் கேட்ட பொழுது தான் நாத்திகராக இருந்தாலும், தான் மருத்துவம் படித்த காலத்தில் தனக்கு உதவிய மனிதருக்காக தேவாலயத்தில் பூசை செய்து வருவதைச் சொல்கிறார். வாசிக்கும் நாமும் அவரோடு சேர்ந்து நெகிழ்ந்து போகிறோம்.

அதேபோல இன்னொரு கதை பாலைவனத்தில். இதில் பாலைவனத்தில் தனியாக மாட்டிக்கொண்ட வீரனிடம் ஒரு சிறுத்தை வருகிறது. அன்பாக அவனுடன் விளையாடும் அதை எதிர்பாராதவிதமாக அந்த வீரன் கொன்றுவிடுகிறான். கொன்றபின் தன் வாழ்வில் கிடைத்த எல்லா விருதுகளையும் கொடுத்தாலும் அந்த சிறுத்தை கொடுத்த அன்பை பெற முடியாது என்பதை உணர்கிறான். மற்ற இருகதைகளும் குறிப்பிடத்தக்கவை. வாசித்துப்பாருங்கள்.


சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்

சிலுவைராஜ் சரித்திரம் ஒரு தன்வரலாற்று நாவல். இந்நாவல் 1950-இலிருந்து 1975 வரையிலான தன் வாழ்க்கையை சிலுவை என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ராஜ்கௌதமன் எழுதியிருக்கிறார்.

கிராமத்தில் இளம்பிராயத்தில் அவரது வாழ்க்கை அல்லது அப்போது வாங்கிய அடிகள், அதன்பிறகு மதுரை சென்மேரீஸ் பள்ளியில் படித்த நாட்கள் மற்றும் விடுதியில் தங்கிப்பட்ட பாடுகள், பின் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் விலங்கியல் படித்த நாட்கள் பின் தமிழ் டியூட்டராகி பின் தமிழ் எம்.ஏ படித்து வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தபோது பட்ட துயரங்கள்தான் இந்நாவலின் கதை. ஆனால், அக்காலகட்ட வாழ்க்கை, சாதியின் வன்மை, மதத்தின் மறுபக்கம் எல்லாம் இந்நாவலின் வாயிலாகப் பதிவாகியுள்ளது. சிலுவை என்ற கதாபாத்திரம் நாவல் வாசித்ததும் நமக்கு மிகவும் நெருக்கமானவராகிவிடுகிறார்.

கணிதம் மட்டுமே இவருக்கு கடினம். மற்றபடி தமிழ், ஆங்கிலம், அறிவியல் எல்லாவற்றையும் விரும்பி படிக்கிறார். இவர் படிக்கும் முறையே அலாதியானது. இந்நாவலில் சிலுவை வாசிக்கும் எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகளை வாசிக்கையில் தமிழிலக்கிய அறிமுகம் நமக்கு கிடைக்கிறது. தமிழினி வெளியீடாக இந்நாவல் வந்துள்ளது.


காஹா சத்தசஈ

சங்க அகப்பாடல்களைப் போல மஹாராஷ்டிரப் பகுதியில் வழங்கப்பட்ட பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள். இதைத் தொகுத்தவர் ஹால என்ற அரசன். நிறைய பாடல்கள் இவரே எழுதியது என்றும் சொல்கின்றனர்.

எழுநூறுக்கும் மேலான பாடல்களிலிருந்து 251 பாடல்களை பேராசிரியர்கள் சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் மொழிபெயர்த்துள்ளனர். இக்கவிதைகள் காமத்தை இலைமறைகாயாக மட்டுமல்லாமல் வெளிப்படையாகவே பேசுகின்றன.

இத்தொகுப்பிலுள்ள ஓரிரு கவிதைகள் உங்கள் பார்வைக்கு

 • வேலிப்புதர்களின் பின்னோ
  காற்றில் வளைந்தசையும்
  நாணற்புதர்களின் உள்ளோ
  தொந்தரவின்றிக் கலவிசெய்யும்
  மலைக்கிராமத்தில் வாழ்வோர்
  பாக்கியசாலிகள்
 • பூக்காரியிடம்
  விலையைக் கேட்பதைச் சாக்கிட்டுச்
  சுற்றிச் சுற்றி வருகிறான் அந்தப் போக்கிரி

  அவள் அழகிய தோள்களைக் கண்குளிரக் காண.
 • பார்,
  திருமணப் பாடல்களை
  அந்தப் பெண்கள் பாடத்தொடங்குகையில்
  மணப்பெண்ணுக்கு மயிர்க்கூச்செறிகிறது
  மணமகனின் பெயரை
  அவையும் கேட்கவிரும்புவது போல்.

நூறு ரூபாயில் மிக நேர்த்தியான தரத்துடன் இந்நூலை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலுக்காக ஒரு கட்டுரையைத் தட்டச்சு செய்து கொடுத்ததற்காக நூலில் பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் என்னுடைய பெயரையும் நன்றி பட்டியலில் சேர்த்திருப்பதற்கு நன்றி.


வெக்கை – பூமணி

தலைப்பு வெக்கை என்றிருந்தாலும் நாவல் முழுக்க நீர்மையைப் பேசுகிறது. அரிவாள்வெட்டில் ஆரம்பமானாலும் அன்பையே மையஇழையாகக் கொண்டு ஓடுகிறது. இந்நாவலில் தந்தைக்கும் மகனுக்குமான அன்பு, அண்ணன் –தம்பி- தங்கையிடேயான அன்பு, தாய்மாமாவும் அத்தையும் தன் தங்கை குடும்பத்தின் மீது கொண்டுள்ள அன்பு, சகலைகளுக்கும், மைத்துனர்களுக்கிடையேயான அன்பும் புரிதலும், வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் அந்த சிறுவனுக்குமான அன்பு என நாவலின் எல்லாப் பக்கங்களிலும் அன்பே கொப்பளித்துப் பொங்குகிறது.

தந்தையும் மகனும் தனித்து ஒரு வாரம் வாழும் காலத்தில் மகன் சமைக்க அப்பா உண்ணும் காட்சி, மலைகளில் கிடைக்கும் விதவிதமான பழங்கள், மரங்களில் கிடைக்கும் பிசின், இருளில் தனிமையில் நட்சத்திரங்கள் மின்னும் வானம் என எல்லாமே அற்புதம்தான். திருவிழாக்களில் அலைந்து திரியும் எனக்கு இந்நாவலில் பதிவாகியுள்ள சுடுகாட்டில் நடக்கும் திருவிழாவையும் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்துள்ள அசுரனில் தனுஷ் ஒவ்வொரு கனத்திலும் வன்முறையை தவிர்க்கத் துடிப்பது தன் குடும்பத்தின் மீதான அன்பினால்தான். அதனால்தான், தன் மகனுக்காக ஊரார் காலில் விழுகிறார். படத்தில் வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் அதன் பின்னால் ஓடுவது நீர்மைதான். வெக்கை பூமணியின் நல்ல படைப்பு. இன்று பரவலாகப் பேசப்படுவது பெருமகிழ்ச்சியளிக்கிறது.


தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ்

ஸெல்மா லாகர்லெவ் எழுதிய தேவமலர் நாற்பதுபக்க அளவு கொண்ட சிறிய கதைதான். ஐரோப்பிய இலக்கியத்தின் சிகரமாகத் திகழும் ஸ்காண்டிநேவிய இலக்கியம் திகழ்கிறது. ஸெல்மா லாகர்லெவ் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர். ஸ்காண்டிநேவியர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள். க.நா.சு. அவர்களால் தமிழில் தேவமலர் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை வாசித்தேன். கீயிங்கே வனத்தில் ஊரினால் ஒதுக்கிவைக்கப்பட்ட திருடன் அவன் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்துவருகிறான். அந்தக் காட்டில் கிறிஸ்துமஸ்க்கு முதல்நாள் இரவு கீயிங்கே வனம் விழித்துக்கொள்ளும் காட்சியை திருடனின் மனைவி மதத்தலைவர் ஹான்ஸிடம் சொல்கிறார். அவருக்கு அதைக்காணும் ஆவலில் தன் சீடனுடன் வருகிறார். வனம் விழித்துக்கொள்ளும் வேலையில் சீடனின் மடத்தனத்தால் அந்த அற்புதம் அதோடு நின்றுபோகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் உரையிலிருந்து இந்தக் கதை மீதான ஈர்ப்பு ஏற்பட்டு வாசித்தேன்.


குட்டி இளவரசன் – அந்துவான்த் செந்த் எக்ச்பெரி

அந்துவான்த் செந்த் எக்ச்பெரி என்ற பிரெஞ்சு எழுத்தாளரால் 1943ல் எழுதப்பட்ட இந்த நாவல் தமிழில் 1981ல் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தநாவல் 173 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இதை வாசிக்கையில் தமிழிலும் இதுபோன்ற தரமான படைப்புகள் உலக மொழிகளில் வெளியாகி பல ஆயிரம் விற்கும் காலம் என்று வருமோ? குட்டி இளவரசன் நாவல் குறித்து எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தாலும், உரையாலும் ஈர்க்கப்பட்டு 2019 மதுரை புத்தகத்திருவிழாவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்த குட்டி இளவரசன் வாங்கினேன். பாலைவனத்தில் விமானம் பழுதடைந்து நிற்கும் வேளையில் குட்டி இளவரசனை சந்தித்த அனுபவத்தை விவரிக்கும் கதைதான் இந்நாவல்.  பேராசை இல்லாத மனது, தான் வரையும் பெட்டியைக் கூட வீடாக நினைக்கும் மனோபாவம் என நாம் தொலைத்த இளம்பிராயத்தை நினைவூட்டுகிறது இந்நாவல்.


அனல்ஹக் – வைக்கம் முகம்மது பஷீர்

பஷீரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பால்யகாலசகி, பாத்திமாவின் ஆடு, எங்க உப்பப்பாவிற்கொரு ஆனையிருந்தது, மதில்கள் போன்ற நாவல்கள் வாசித்திருக்கிறேன். காலச்சுவடு வெளியிட்ட இந்திய கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் வெளியான பஷீரின் அனல் ஹக் என்ற சிறுகதைத்தொகுப்பை தல்லாகுளம் கிளைநூலகத்திலிருந்து எடுத்துட்டு வந்தேன். அதில் நிறைய கதைகளில் போலிஸ் ஸ்டேசனில் நடக்கும் லாக்கப் கொடுமைகளை எழுதியிருக்கிறார். நூறு ரூபாய் நோட்டு, போலீஸ்காரனின் மகள், நோட்டு இரட்டிப்பு, தங்க மாலை, ஏழைகளின் விலைமாது போன்ற கதைகள் மிகவும் பிடித்திருந்தன. கதைகளைச் சொல்லும்போது மெல்லிய நகைச்சுவையோடு சொல்லுவது அவரது பாணி. தங்க மாலை, நோட்டு இரட்டிப்பு எல்லாம் அந்த வகையில் சொல்லலாம்.


சில இறகுகள் சில பறவைகள் – வண்ணதாசன்

வண்ணதாசனின் கடிதத்தொகுப்புகளின் தொகுப்பு இந்நூல். அந்நியமற்ற நதி-50 வண்ணதாசன் எழுதவந்து 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை அமெரிக்கன் கல்லூரியும் சந்தியா பதிப்பகமும் இணைந்து கொண்டாடியபோது மதுரை புத்தகத்திருவிழாவில் இந்த நூலை வாங்கினேன். அவருடைய கடிதங்களின் வாயிலாக நமக்கும் கொஞ்சம் இறகுகள் கொடுத்து பறக்கவைத்துவிடுகிறார். 35பேருக்கு அவர் எழுதிய கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் ஏராளமான முக்கியமான வரிகளை குறித்து வைத்திருக்கிறேன். அதில் முன்னுரையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள்

“மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும், சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.”

பொங்கல் விடுமுறையில் எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலை அவரது மகன் வீட்டிலிருந்தபோது வாசித்ததை நான் படித்ததும் எனக்கு நானும் அச்சமயத்தில் சகோதரர் பொங்கல் விடுமுறைக்கு வந்தபோது கொடுத்த துயில் வாசித்த நினைவு வந்தது. இருவரும் ஒரே காலத்தில் வாசித்திருக்கிறோம். இத்தொகுப்பிலுள்ள கே.கே.ராஜன் அவர்களை சந்தித்து உரையாடியபோது வண்ணதாசன் அவர்களுடனான அவரது பழக்கம் குறித்து அறிய முடிந்தது. வண்ணதாசனிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வராதா என்று ஏங்கிய வேளையில் மதுரையில் வாசகசாலை கூட்டத்தில் அவரை சந்தித்து, பேசியதும், அவரது கரம்பற்றி நிழற்படமெடுத்ததும் மறக்கமுடியாதது. அதன்பின் அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் எனக்குப் பொக்கிஷம்.


இந்தப் போட்டியில் என்னுடைய எண் VN154. இந்தப் போட்டிகள் நடத்துவதில் பெரும் முனைப்புடன் செயல்படும் கதிரவனுக்கு நன்றி.

நீங்களும் வாசிப்பை நேசிப்போம் குழுவில் இணையுங்கள்!

சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.

அ.முத்துக்கிருஷ்ணன்

2006இல் மதுரை புத்தகத் திருவிழா தொடங்கியதிலிருந்து 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் மறக்க முடியாத பல அற்புத நினைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் மறக்க முடியாததே.

‘திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை’ நூல் மதுரை புத்தகத் திருவிழாவில் நூறுக்கும் மேலான பிரதிகள் விற்று பெருமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நூலை வாங்கிய சிலர் என்னிடம் கையொப்பம் கேட்டும், என்னோடு நிழற்படம் எடுத்தும் தங்கள் அன்பால் என்னை நெகிழ வைத்துவிட்டார்கள்.

எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உறவு ஆத்மார்த்தமானது. இந்தாண்டு மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வரும் எஸ்.ரா.விடம் திருவிழாக்களின் தலைநகரம் நூலிற்கு அவரது இணையதளத்தில் கொடுத்த வாழ்த்துரைக்கு நன்றி சொல்லவும், கேட்டி வில்காக்ஸ் அம்மையார் குறித்து எழுதிய சிறுகதை குறித்து அவரது கருத்து கேட்கவும் எண்ணியிருந்தேன். மதுரை புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி அரங்கில் எஸ்.ரா.வைப் பார்த்ததும் அன்போடு நல்லாருக்கீங்களா என கேட்டதோடு, திருவிழா நூல் நன்றாகயிருந்தது என்றார். அதைவிட ஆச்சர்யம் தரக்கூடிய செய்தி கேட்டி வில்காக்ஸ் குறித்து எழுதிய சிறுகதை நன்றாக வந்துள்ளதெனச் சொன்னார். இதைக் குறித்து அவரிடம் நான் ஒரு வார்த்தை கூட சொல்லாத போதும். ஆச்சர்யங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை.

மதுரை புத்தகத் திருவிழாவில் மதுர வரலாறு மற்றும் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூல்கள் தமிழினி, கருத்து = பட்டறை, டிஸ்கவரி புக் பேலஸ், யாவரும் அரங்குகளில் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து திருவிழாக்களின் தலைநகரம் குறித்து கார்த்திக் புகழேந்தியுடன் உரையாடிய வீடியோ ஷ்ருதி டிவியின் முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. மதுரை புத்தகத் திருவிழா, பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் அழகர் கோயில், பசுமை நடை குறித்தெல்லாம் பேச முடிந்தது. ஷ்ருதி டிவி கபிலனுக்கும், சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.

தமிழினி அரங்கில் தமிழினியின் புதிய வெளியீடுகளும், வாசல் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளும் வெளியிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்வை எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் டி.பத்மநாபன் எழுதிய ‘சுடரும் சிறுமி’ சிறுகதைத் தொகுப்பை பசுமைநடை நண்பர் சரவணன் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழினிக்கு நன்றி. மதுரை இலக்கிய நண்பர்களும், பசுமை நடை நண்பர்களும் கலந்துகொண்டனர்.

2019இல் 14வது மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் ஒன்றை வைத்திருந்தேன். ஆனால், வாங்கிய புத்தகங்கள் எல்லாமே வேறு. பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் அரங்கில் 1992இல் வந்த புத்தகங்கள் இரண்டு ரூபாய்க்கு கதைகள், கட்டுரைகள் விற்க அதில் ஆறேழு தலைப்புகளில் 75 புத்தகங்கள் வாங்கி பத்துக்கும் மேலானவர்களுக்கு கொடுத்தேன். குறைந்த செலவில் வாசிப்பின் மீது மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்த கிட்டிய வாய்ப்பு. மேலும், ஆசிரியர் தினத்தன்று என்னுடைய மகளுடைய ஆசிரியர்கள் நால்வருக்கு புத்தகங்களை கொஞ்சம் வாங்கி பரிசளிக்க கொடுத்துவிட்டேன். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ நாவலும், ‘இலக்கற்ற பயணி’ கட்டுரைத் தொகுப்பும் வாங்கினேன். எஸ்.ரா.வின் உரை தந்த ஈர்ப்பால் அந்த்வான் து செந்த் – எக்ஸ்பெரி எழுதிய, க்ரியா பதிப்பகம் வெளியிட்ட  குட்டி இளவரசன் நாவலையும் வாங்கினேன். இரா.நடராஜனின் 10 எளிய இயற்பியல், வேதியியல், உயிரியல் சோதனைகள் நூலை வாங்கினேன். குழந்தை வளர்ப்பு குறித்து வெளிவரும் ‘செல்லமே’ மாத இதழுக்கு சந்தாதாரர் ஆனதும், அங்கிருந்த பழைய இதழ் தொகுப்புகளை கொஞ்சம் எடுத்து வந்ததும் இந்தாண்டுதான்.

பரமக்குடியிலிருந்து புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தவர் என்னை சந்தித்து மதுரை வாசகன் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வருவதாக குறிப்பிட்டார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சமீபமாக அதிகம் எழுதாத குற்றவுணர்ச்சியும் மறுபுறம் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை 11 நாட்கள் நடந்த புத்தகத் திருவிழாவில் 10 நாட்கள் புத்தகத் திருவிழாவிற்கு சென்றேன். விடுமுறை நாட்களில் நல்ல கூட்டமிருந்தது. மற்ற நாட்களில் சுமாரான கூட்டமே. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் மீதான காதலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்தவில்லை. ஊடகங்களும் புத்தகத் திருவிழாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மதுரை புத்தகத் திருவிழா எனக்கு குலதெய்வத் திருவிழா போல. மதுரை புத்தகத்திருவிழாவில்தான் என் வாழ்வை மாற்றிய பல ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதிலும் குறிப்பாக 2007இல் நடந்த இரண்டாவது மதுரை புத்தகத் திருவிழாவில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா அவர்களின் உரையையும், தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் கதைசொல்லியதையும் கேட்கும் வாய்ப்பை தந்தது. அதோடு அந்தாண்டு மனோகர் தேவதாஸ் வரைந்து எழுதிய மை மதுரை புத்தகம் வாங்கினேன். இன்றுவரை அதிக விலையில் வாங்கிய புத்தகம் அதுதான்.

புத்தகத்திருவிழாவில் நண்பர்களோடு புத்தகங்கள் குறித்து, வாசிப்பு குறித்து உரையாட முடிந்தது. நிறைய புத்தகங்கள் வாங்க முடியவில்லையே என்று வருந்தியபோது நண்பரொருவர் “எல்லாப் புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்று யோசிக்காதீர்கள். நண்பர்களிடம் வாங்கிப் படியுங்கள். நூலகங்களுக்குச் செல்லுங்கள்” என்ற யோசனையைச் சொன்னார்.  ஆனாலும், வாசிப்பகம் ஒன்றைத் தொடங்கும் எண்ணமிருப்பதால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும். அடுத்தாண்டு இலக்குகள் நிறைவேறும்.

பேராசிரியர் சுந்தர்காளி – பரிமளம் சுந்தர் தம்பதியர் மொழிபெயர்ப்பில் வந்த ‘காஹா சத்தசஈ’யிலுள்ள இந்தக் கவிதையில், நல்ல புத்தகங்கள் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காஹாக்கள்
பாடல்கள்
யாழிசை
அணுக்கமான பெண்
சிலர் இவற்றைச் சுவைத்ததேயில்லை.
அதுவே அவர்தம் தண்டனை.

காஹா சத்தசஈ

தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட.

அலர் காதலைக் கொல்கிறது.

சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது.

காஹா சத்தசஈ

எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் உண்டு. இருநூறு பக்க அளவு கொண்ட இந்நாவல் மனதை நெகிழ்வூட்டும் அருமையான காதல் கதை. காதல் என்ற சொல் எப்போதும் பரவசத்தைத் தரக்கூடியதுதானே!

இந்நாவல் இரண்டு காலகட்டங்களில் பயணிக்கிறது. ஒன்று கோடைகால விடுமுறையில் மலரும் பதின்பருவக்காதல். இந்தக் கதை 1980-90களில் நிகழ்கிறது. அருப்புக்கோட்டை அருகேயுள்ள சிறிய கரிசல் கிராமத்திலிருந்து தாத்தா வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் இராமசுப்பிரமணியனுக்கும், சென்னையிலிருந்து தாத்தா வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் சில்வியாவிற்கும் இடையே கோவில்பட்டியில் மலரும் காதலைச் சொல்லும் கதை.

மற்றொன்று சமகாலத்தில் நிகழும் கதை. இதில் குளிர்காலத்தில் கர்நாடகாவிலுள்ள சித்தாபுரம் என்ற மலைக்கிராமத்தில் வசிக்கும் சில்வியாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடச் சொல்லும் இராமசுப்பிரமணியனுக்குமான அன்பைச் சொல்லும் கதை. இந்நாவலின் கதை சில அத்தியாயங்களிலேயே தெரிந்துவிட்டாலும் முழு நாவலையும் வாசிக்காமல் நூலை கீழே வைக்க முடியாத அளவிற்கு சுவாரசியமாக கதை நம்மை இழுத்துச் செல்கிறது.

எஸ்.ரா.வின் எழுத்தின் வாயிலாக நாம் கோவில்பட்டி வீதிகளில் அலையும் வெயிலையும், சித்தாபுரா எனும் மலைகிராமத்துக் குளிரையும் நாவலை வாசிக்கையில் உணர்கிறோம். கிராமத்திலிருந்து வரும் சுப்பிரமணியனுக்கு சில்வியா இயல்பாய் தொட்டுப் பேசுவதும், அடித்து விளையாடுவதும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவளை ஒரு தேவதைப் போல பார்த்துக் கொண்டே இருக்கிறான். சின்னச் சின்னக் குறும்புகளால், துணிச்சலான செயல்களால் நம்மையும் சில்வியா ஈர்க்கிறாள்.

சித்தாபுராவில் கணவன் இறந்து மகளோடு வாழும் சில்வியாவை எதிர்பார்ப்பில்லாத அன்பால் பார்த்துக் கொள்ளும் இடங்களில் இராமசுப்பிரமணியன் ஈர்க்கிறான். இக்கதையில் சில பக்கங்களில் வந்தாலும் தன் தாய்க்கு யாரும் இல்லாத நிலையில் தாயின் முன்னாள் காதலனான இராமசுப்பிரமணியனை சில்வியாவின் மகள் நான்சி ஏற்று புரிந்து கொள்ளுமிடத்தில் அவள் இவர்களிருவரையும் விட உயர்ந்து நிற்கிறாள். பால்யத்தில் வறுமையும், தனிமையும் ஏற்படுத்திய பக்குவம் அது.

சித்தாபுராவில் சில்வியாவும், சுப்பியும் (இப்படித்தான் இராமசுப்பிரமணியனை சில்வியா அழைப்பாள்) சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொள்வது அழகான காட்சி. எந்த அலங்காரமும் இல்லாமல் காய்கறிக்கூடையுடன் இயல்பாய் நிழற்படம் எடுப்பதும், இருவரும் ஒருவருக்கு பிடித்த உடையைத் தேடி கிறிஸ்துமஸிற்கு வாங்குவதும், சில்வியாவிற்காக தேவாலயத்திற்கு செல்வதும் கவிதையான காட்சிகள். கோவில்பட்டியில் கதிரேசன் மலையில் அமர்ந்து உரையாடுவதும், சைக்கிளில் பயணிப்பதும், மதுரை வந்து ஜிகர்தண்டா குடிப்பதும் என பதின்பருவக் காட்சிகள் அத்தனை அழகு. இப்போதுபோல அந்தக்காலத்தில் சட்டெனத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருவரும் பிரிவதும், விதிவசத்தால் மறுபடி சந்திப்பதும் வாழ்வின் தீராத விளையாட்டு.

விடுமுறை எப்படா வருமென்று காத்துக்கிடந்து தாத்தா – பாட்டி வீட்டுக்கு சென்ற நாட்களை, தொட்டி மோட்டரில் குளித்து கும்மாளமிட்டதை, நொங்கு வண்டியோட்டி விளையாடியதை, கரிப்பிடித்த அடுப்படியில் வெல்லம் மணக்க பணியாரம் தின்றதை, கிணற்றடியில் சித்திகளோடு சேர்ந்து கதையடித்ததை, ஓசிக்கஞ்சி என மாமாக்கள் அழைத்த கேலியை எல்லாம் நினைவுக்கு கொண்டு வருகிறது இந்நாவல். அத்தோடு கோடை கால விடுமுறையில் தல்லாகுளம் திருக்கண்ணில் நாலைந்து நாட்கள் தங்கிருந்து ஓடிஓடிப்போய் பார்த்த அழகனின் மீதான காதலை இந்நாவல் ஞாபகமூட்டியது.

கோடை காலத்தை, காதலை மட்டுமல்ல. குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் பிள்ளைகள் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதையும் சில்வியா வாழ்க்கை வழியாக அறிகிறோம். 8, 9, 10 வகுப்பு விடுமுறைகளுக்கு கோவில்பட்டிக்கு வருகையில் குடும்பப்பிரச்சனை சில்வியாவை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியிருப்பதை நாம் அறியலாம். சில்வியாவின் பெற்றோரது எதிர்பாராத அகால மரணம் சில்வியாவையும் அவளது இருசகோதரிகளையும் முடக்கிவிடுகிறது.

1990களில் பத்தாவது படித்தவுடன் பாலிடெக்னிக் படிக்க வைப்பதுதான் அன்று பல பெற்றோர்களின் கனவு. அதற்கு இந்த கதை நாயகனும் என்னைப் போல பலிகெடாவாகிறான். எனக்கு காதல் வரம் கிட்டாவிட்டாலும், இன்றுவரை கோடைகால விடுமுறை வரமாய் கிட்டியிருப்பது மகிழ்ச்சி. மிக அழகான இக்காதல் கதையை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நாவலின் விலை 200 ரூபாய்.

ஒரு எளிய, இனிய நிகழ்வு

நாங்கள் தொடுத்த வினாக்கள் (குமிழி மடை உள்ளிட்டவை)

எனது கண்மாய் வினா-விடைப் போட்டியில் மாணவர்கள் எழுதியிருந்தவற்றில் இருந்து சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இதோ:

 • தமிழின் இயல்பான ஒலிநயம் தோன்ற அடுத்தடுத்த சொற்களை இயல்பாகவே அமைத்திருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பட்டாம்பூச்சிக்கு அடுத்து தும்பி என்றோ வெறும் தட்டான் என்றோ எழுதாமல் ‘பட்டாம்பூச்சி, தட்டான்பூச்சி’ என்று எழுதியிருந்தார்கள். இதுபோலவே ‘மழை விட்டில், மர விட்டில்’;  ‘வண்டுகள், நண்டுகள்’; ‘பொறி வண்டு, பொன் வண்டு’ என்று சொற்றொடர்கள் சந்த நயத்தோடு இருந்தன. ஆங்கிலச் சொற்கள் கலந்து உடைந்து உடைந்து நொறுங்கிச் சிதைந்த மொழியை அன்றாடம் கேட்டு, பார்த்து வருகிற சூழலில் இது மாறுபாடாக இருந்தது.
 • உயிரினங்களைக் குறிக்க இவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் இன்னும் பறவையியல் மொழிபெயர்ப்பாளர்களைச் சென்றடையவில்லை. எருமைச்சீயான், முகவண்டு, நட்டுவாக்காலி, ராமக்கோழி, அரிப்பூச்சி, அனாதைப்பூ போன்றவை.
 • மின்மினிப் பூச்சியை எழுதுவது இயல்புதான். கம்பளிப்பூச்சியையும் எழுதியிருந்தார்கள். கொசுவும், தோசிக்கொக்கும் இடம்பெற்றிருந்தன. மஞ்சணத்தி, கனகாம்பரம் இவற்றோடு மழுமட்டைக் குச்சி எனப்படும் காட்டாமணக்குச் செடியின் ரேடியோப் பூவான அனாதைப் பூவுக்கும் இடமிருந்தது.
 • முக்குளிப்பானுக்கு ‘நீர்மூழ்கி வாத்து’ என்று பெயர்சூட்டி இருந்தான் ஒருவன். ‘நீண்ட அலகுகளுடனும், நீண்ட கால்கள், அகலமான இறக்கைகள் கொண்ட வினோதப் பறவை’ என்று நீர்ப்பறவையொன்றை ஒருவன் சுட்டியிருந்தான். ஒரு சிறுமி சித்தெறும்பைச் ‘சிற்றெறும்பு’ என்றெழுதாமல் சிட்டு+எறும்பு= சிட்டெறும்பாகக் கற்பனை செய்து பறக்கவிட்டிருந்தார்.
 • அதிபுனைவில் ஈடுபட்ட ஓரிருவர், நாய்கள் மட்டுமே உலவும் – அதுவும் கார்த்திகையில் மட்டுமே சுறுசுறுப்பாக உலவும் – ஊரில் ‘வெருகு என்னும் காட்டுப்பூனை, நடுநிசியில் ஊளையிடும் நரிகள், ஓநாய்கள், முதலை எல்லாம் இருப்பதாக எழுதியிருந்தார்கள்.
 • கழிவுநீர் என்றால் சாக்கடை என்று பொதுவாக மனதில் பதிவாகிவிட்டது. ஆனால், ஒரு ஊரின் கண்மாய் நிரம்பிய பிறகு மிகையாக உள்ள நீர் என்பதற்கு கழிவுநீர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இதை உள்வாங்கவே சற்று நேரம்பிடித்தது. கழிவுநீர் என்ற சொல்லை சரியாகப் புரிந்துகொள்வதே நீர்மேலாண்மையின் ஒரு பாடம்தான் என்று மாணவர்கள் கற்றுக்கொடுத்ததாகவே எடுத்துக்கொள்கிறோம்.
 • ஊரில் இடப்பெயர்கள் எப்படி மாறியிருக்கின்றன என்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மடைகள், நீர்வழிகளின் பெயர்களைச் சொல்லும்போது பழைய பெயர்களான இலுப்பையடி, செம்மங்குளம், சுத்து மருதவள்ளி, தாழம்பூ முனியாண்டி, செட்டிவயல், பூசாரி மானியம் போன்றவற்றோடு புதிதாக முளைத்த பெயர்களான சத்தியா நகர், காய்கறி வணிக வளாகம் போன்றவை சேர்வது ஒரு கால வரைபடத்தை அளிக்கிறது.
 • விடை எழுதி வழங்கிய மாணவர்களின் 37 பெயர்களில் 21 பெயர்களை வடமொழி எழுத்துகள் இல்லாமல் எழுதிவிட முடிந்தது.
 • கவிதைப் பரப்பு பயமூட்டுவதாகத்தான் இருக்கிறது. ‘நீயின்றி ஒரு நொடிகூட வாழாது என் சுவாசம்’ என்று எழுதுவதுதான் கவிதை என்று பலரிடமும் பதிவாகி இருக்கிறது. ‘அன்பே அன்பே எனக்கே யாரும் இல்லையே’ என்றெல்லாம் ஒரு சிறுவன் எழுதியிருந்தான். ‘ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போறவழி தென்கிழக்கோ’ என்ற திரைப்பாடலை எழுதிவைத்தவனைப் பாராட்டலாம். ‘இறைச்ச கிணறுதான் ஊறும்; இது எங்க ஊரு சொலவடை ஆகும்’ என்று எழுதியவனைக் கோயில்கட்டியே கும்பிடலாம். கைபேசியில் கூகிளைத் திறந்து கவிதை என்று தட்டி வருவதை அப்படியே எழுதிவைக்கிறவர்களை முட்டிக்கு முட்டி தட்டவேண்டும்.
 • காலாங்கரை, வரத்துக்கால், மறுகால், கலிங்கு, மடை, சுழிசு (sluice), சட்ரசு (shutters) என்றெல்லாம் பாசனம் சார்ந்து சொற்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றன.
 • நீரிடங்களின் பண்பாட்டு முக்கியத்துவம் பதிவாகி இருந்தது. முளைப்பாரி கரைக்கவும், வினாயகர் சிலையைக் கரைக்கவும் ஊரணி உதவுகிறது என்று எழுதியிருந்தார்கள். ஐப்பசி, கார்த்திகை என்று பெரும்பாலும் தமிழ் மாதப் பெயர்களையே எழுதியிருந்தார்கள்.
 • சில நேர்மையான பதிவுகள் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தன. ‘இந்தக் கண்மாயில்தான் கீரை, பாகற்காய், வெள்ளரிச் செடிகள் போட்டு விற்பனை செய்கிறோம். அது தாய்போல எங்களுக்கு உதவுகிறது’ என்று ஒரு விடை. ‘எங்கள் கிணற்று நீர் சற்று உவர்ப்பாக இருப்பதால் எதுவும் சரியாக விளைவதில்லை’ என்று ஒரு ஆதங்கம். அணையிலிருந்து வருகிறது, மலையிலிருந்து வருகிறது என்றெல்லாம் புழுகாமல் தான் பார்த்தவரை குடிநீர்த் திட்ட ‘ஆனைக்குழாய்’ கசிவில்தான் நீர் வருகிறது என்றொரு வெளிப்படையான பதில். எந்த மாதம் நீரற்றுப் போகும் என்ற கேள்விக்கு ‘அதுவாக வற்றுவதில்லை. ஏலம் எடுத்தவர்கள் குட்டை குட்டையாக நீரை இறைத்து மீன்களையும் நீரையும் காலிசெய்து விடுவார்கள்’ என்று பளிச்சென்று எழுதியிருந்தார் ஒரு மாணவர்.
 • கரிசனம் இயல்பாக வெளிப்பட்டிருந்தது. ‘மரம் வெட்டுவதாக இருந்தால் சீமைக் கருவேல மரத்தை வெட்டுங்கள், பிளீஸ்’ என்றது ஒரு பிள்ளை. ‘சம்பை ஊரணி கெட்டுப் போய்க்கிடக்கிறது, அதை எப்படியாவது சரிசெய்யவேண்டும்’ என்கிறான் ஒரு பையன்.

அசர் அறிக்கை, அது இதுவென்று ஒரேயடியாகப் பயப்படும் அளவுக்கு எல்லாம் இல்லை கல்வித்தரம், நாம் படித்ததைவிட நன்றாகத்தான் படிக்கிறார்கள் என்று சிற்றறிவுக்குப்படுகிறது.

பகல்வீடு

ஒரு எளிய, இனிய நிகழ்வு

மண்ணும் நீருமாய் பல்லாயிரம் கால்களும் கணுக்களும் கொண்டு நமது நிலமெங்கும் பரந்த பேருடலி ஒன்று மழைநீர் சேகரித்து உயிர்ப்பால் சுரக்கிறது.  அத்தகைய சங்கிலித்தொடர் கண்மாய், கால்களின் உள்ளூர் நிலை பற்றியே எனது கண்மாய் வினா-விடைப் போட்டிவைத்தோம். உள்ளூரின் நீரிடங்கள் சார்ந்து கேள்விகள் கேட்டிருந்தோம். விடைகளை எழுதுவதற்காக தாள்களும் வழங்கியிருந்தோம்.

இலக்கியம் கூறுவதுபோல எட்டாம் நாள் பிறை வடிவில் அமைந்தது எங்கள் கண்மாய். பெரிய மடைக்குப் பின்னே H வடிவில் இரு பெரும்தூண்களும், குறுக்குக் கற்களும் கொண்ட அமைப்பு ஒன்று உள்ளது. அதை அளவுக்கல் என்றே சொல்லக் கேட்டிருக்கிறோம்.

அதில் குறிப்பிட்ட மட்டத்துக்குக் கீழே போனால் மடைவழியே நீர் திறப்பதைக் குறைக்கவேண்டும், அதிகமானால் மிகைநீரை வெளியேற்ற வேண்டும். இவ்வளவுதான் அதன் பயன்பாடு என்று அறிந்திருந்தோம். பின்பு தஞ்சை ஆ. மாதவனின் தொடர் டிவீட்டு ஒன்றின் வழியே அது குமிழி மடை என்று அறிந்தோம்.

ஏரியில் சேரும் வண்டலையும் சகதியையும் ஏரியிலிருந்து வெளியேற்றும் அமைப்புதான் குமிழி என்னும் தொழில்நுட்பம். மடையில் இருந்து கண்மாயின் உட்புறமாக சுமார் 300 அடி தொலைவில் இருக்கும். பெரிய தொட்டி போன்ற அமைப்பில் இயங்கும் குமிழியில் சுரங்கப்பாதை போல ஒன்று இருக்கும். இதன் நுழைவாயில் கண்மாய்க்குள்ளும், வெளிவாயில் கரைக்கு வெளியே பாசனக்கால்வாயிலும் இருக்கும். அதிகமான வண்டல் சேர்ந்தபின் இதைத் திறந்துவிடுவார்கள். குறுக்குக் கல் நடுவே உள்ள துளைகள் வழி செருகப் பட்ட அடைப்புக்கல்லை நீக்கியவுடன் சேறோடித் துளை வழியாக வண்டலும் சேறும் கண்மாய்க்கு வெளியே போய் விழுந்து வயலுக்கு உரமாகும். இது நாளடைவில் வழக்கொழிந்துவிட்டது என்று தெரிந்துகொண்டோம்.

இதுபோலவே எங்கள் ஊரில் உள்ள கலிங்கு தரை மட்டத்தில் வரத்துக்காலில் இருக்கிறது. அடுத்துள்ள கண்மாய்களுக்குத் தேவைப்பட்டால் எங்கள் கண்மாயில் நீர்நிரம்பும் முன்பே திறந்துவிட முடியும். அடுத்துப்போனால் ஆறுதான் என்னுமளவுக்கு கிட்டத்தட்ட கடைப்பகுதியாகவும், ரயில் தண்டவாளத்தை ஒட்டியும் உள்ள விளாங்குடி கண்மாயில் உள்ள கலிங்கானது கண்மாய் நிறைந்தபிறகு மேல்வழிந்தோடி மறுகால் செல்லும்வகையில் அமைந்துள்ளது.

பெரிய கண்மாய் தவிர்த்து, சின்னக் கண்மாய், ஊருணி போன்றவையும், ஓடைகள், வாய்க்கால்கள், கிணறுகளுமாய் செழிப்புற இருந்த ஊர்தான் என்பதால் இன்றளவும் நீரைச் சிறுகப் புழங்கும் பழக்கம் கைவராத ஊர். கரண்டு போனால் கடைசியாக மிஞ்சியிருக்கும் நிலத்தடிநீர் தொட்டியேறாது என்ற இன்றைய நிலையில் இந்த நுட்பங்களைப் பேசத்தான் இதுபோன்ற போட்டிவைத்தோம்.

6 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் 43 பேரில் 36 மாணவர்கள் விடையளித்தார்கள். அவர்கள் தந்த பதில்களில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம். அவை அடுத்த பதிவில்.

மனம் கவர்ந்த மாணவர் பதிவுகள்

பகல்வீடு

நாங்கள் பயின்ற எங்க ஊர் அரசுப் பள்ளியில் (மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவில்பாப்பாகுடி) முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து தற்போது பயிலும் மாணவர்களுக்கு நீர்நிலைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறிய போட்டியொன்றை நடத்தினோம். கண்மாயில் உள்ள குமிழி அமைப்பு, கலிங்கு, மடை படங்களைப் போட்டு அதைக் குறித்து தெரியுமா? அதன் பெயர் என்ன? கண்மாய்க்கு வரும் பறவைகளின் பெயர்கள்? நீர்நிலைகள் சார்ந்த சொலவடைகள், கதைகள் பற்றியெல்லாம் கேட்டிருந்தோம். குறிப்பாக பத்தாவது கேள்வியாக உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென கேட்டிருந்தோம்.

மாணவர்களுக்கு வழங்க துணிப்பை, புத்தகங்கள், பறவை போல் ஒலியெழுப்பும் மண்விசில், விளையாட்டு உபகரணங்கள், விதைகள் மற்றும் மாணவர்களுக்கான சிற்றுண்டி போன்றவைகளை ஏற்பாடு செய்ய ‘நீரோடை ஆர்வலர் குழு’ என சிறிய அமைப்பு உருவானது. அதில் ஒவ்வொருவரும் தம் பணிகளை சிறப்பாக செய்தனர். 

விழா 22.7.19 அன்று மதியம் சிறப்பாக நடைபெற்றது. மேகம் சூழ்ந்து வாழ்த்திய இயற்கைக்கு நன்றி.

தலைமையாசிரியர் தலைமை உரையாற்றி இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நான் எழுதிய திருவிழாக்களின் தலைநகரம் நூலை பள்ளி மாணவர்களிடம் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த போட்டி வைத்ததற்கான காரணத்தையும், மாணவர்கள் எழுதிக் கொடுத்த விடைகளில் தான் கண்ட சுவாரசியங்களையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் முன்னாள் மாணவர்  ப.தமிழ்ச்செல்வம். 

நன்றாக எழுதிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் துணிப்பை, ஆளுக்கு ஒரு புத்தகம், விசில், விதைகள் வழங்கப்பட்டது. புத்தகங்கள் மதுரை வாசல் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், தும்பி,  நேசனல் புக் டிரஸ்ட் வெளியீடுகளிலிருந்து மாணவர்களுக்கான புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

விழாவின் நிறைவாக அனைவரும் மண்விசிலில் நீரினை நிரப்பி பறவைபோல கீச்சிட அந்த மகிழ்ச்சியொலி ஊரெங்கும் பரவியது. விழா சிறப்பாக நடக்க உதவிய ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச்செல்வங்களுக்கும் நன்றி.

உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்ளவும், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை பேணிகாக்கவும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆர்வலர்கள் இன்னும் அதிகமாகும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்தலாம்.

நாங்கள் தொடுத்த வினாக்கள் (குமிழி மடை உள்ளிட்டவை)

மனம் கவர்ந்த மாணவர் பதிவுகள்

பகல்வீடு

பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.

அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.

பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.

மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.

பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.

பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.

வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.

ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)

பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?

வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.

(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)

https://www.youtube.com/user/bavachelladurai

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB