Posts Tagged ‘கமல்ஹாசன்’

மய்யம்

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியில்
நான் தெரிவேன்.  

– கமல்ஹாசன்

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் வாசிப்பை நாசம் செய்யும் வேளையில் நம்மை ஆச்சர்யமூட்டும் விசயமாக தன்னுடைய திரைப்படப் பணிகளினூடே தமிழின் உன்னதமான படைப்புகளை வாசிக்கும் கமல்ஹாசனைப் பார்க்கும்போது பொறாமையாகயிருக்கிறது. வாசிக்க நேரமில்லை என்று சொல்ல வெட்கமாகயிருக்கிறது. புத்தகம் பேசுது  மாத இதழுக்காக கமல்ஹாசனோடு எழுத்தாளர் வெண்ணிலா மற்றும் முருகேஷ் எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு சிறுபகுதி:

கலையுலக இலக்கியவாதியான உங்களின் இலக்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

கலையுலகத்திலிருந்து இலக்கியவாதியின் அனுபவத்தைப் பேசணும்னா, அது ரொம்ப சோகம்தான். ஜே.கே.வினுடைய கலை உலக அனுபவங்கள் மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இன்றைக்கு வாழும் ஹீரோக்களில் முதன்மையானவராக நான் நினைப்பது ஜே.கே.வைத்தான். ஆனால், நான் அவரை வாழ்நாளில் நான்கைந்து முறைகளுக்குமேல் பார்த்ததில்லை. காரணம், அதீதமான வியப்பும் பெருமிதமும். அது மட்டுமில்லாம கிட்ட பார்க்கிறதுல சின்ன தயக்கமும் இருக்கு. நரைச்ச மீசை, உயரம் இதெல்லாம் தொந்தரவு பண்ணிடுமோன்னு தள்ளியே இருக்கேன். குழம்பிடுமோன்னு தோணும். ‘வாழும் ஹீரோ’ அவர் காதுபட சொல்றதுல எனக்கு சந்தோஷம். அந்த மாதிரி நெறய பேர் இருக்காங்க.

Writers

தன்னோட ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு கு.ஞானசம்பந்தன். தொ.பரமசிவன். தொ.ப.வைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம். ஆனா, உடம்பு முடியாம ஒரு வயோதிகரா தொ.ப.வைப் பார்க்கிறதுல ஒரு சின்ன வருத்தம். இளைஞரா இருந்தப்ப எங்க அப்பாவையெல்லாம் பார்க்க வந்திருக்காரு. அப்ப தெரிஞ்சுக்காம போயிட்டமேன்னு தோணும். கோபமான தொ.ப.வைப் பார்த்திருக்கலாம். ஞானசம்பந்தனையே சொல்லலாம். அவர் வெளியே கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டாலும் ரொம்ப ஆழமான, கோபமான ஆளு. கோமாளி தொப்பி ஒரு யுக்தி. ஞானக்கூத்தன், புவியரசு இவங்கள்லாம் எனக்குக் கிடைச்ச பரிசு. நட்புன்றது நானா தேடிக்கிட்டதுதான். அதனால் அது பரிசா, நான் சம்பாதித்தான்னு தெரியல. இதே இடத்தில் உட்கார்ந்து சுந்தர ராமசாமியோட ரெண்டு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். ஞானக்கூத்தன்தான் ஏற்பாடு செஞ்சாரு. முக்கியமான ஒரு வேலையை செஞ்ச மாதிரி ஞானக்கூத்தன் அன்னைக்கு நெகிழ்ச்சியா பக்கத்தில் நின்னுக்கிட்டுருந்தார். எனக்கு ரொம்ப நெகிழ்வான அனுபவம். அதே மாதிரி சமீபத்துல படிச்சது ப.சிங்காரத்தை. அவரு செத்துப்போனப்புறம்தான் அவர படிச்சேன். அவரோட புத்தகம் இருக்கிறதால அவர் இல்லாம போனதைப் பத்தி எனக்கு வருத்தமில்ல. சமீபத்தில் தூக்கி வாரிப்போட்ட புத்தகம் கொற்றவை. மிரண்டுட்டேன். சொல்லியே ஆகணும். ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததால சொல்லலை. ஒருவேளை அவர் என் சினிமாவில் வேலை செஞ்சு என் புஸ்தகம் படிங்கன்னு குடுத்திருந்தார்னா நான் படிச்சிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். நானா தேடி படிச்சதால என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் படிக்கிறது பத்தலன்றது மட்டும் எனக்குத் தெரிஞ்சது.

Books

‘ஆழி சூழ் உலகு’ன்னு ஒரு புஸ்தகம். நண்பர்கள் பரிந்துரை பண்ணாங்க. ஜி.நாகராஜனையே நான் அவர் இறந்து போனதுக்குப் பின்னாடிதான் படிச்சேன். ‘குறத்திமுடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ எல்லாம் அப்புறம்தான் படிச்சேன். ஜெயகாந்தனைத் தெரிஞ்சுகிட்டது மாதிரி அவரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்தா அவர் கூட கைகுலுக்கியிருக்கலாமேன்னு தோணுச்சு. கு.ப.ரா.ல்லாம் காலதாமதமாக வாங்கிப் படிக்கிறேன். நான்தான் சொல்றேனே, 15 வருசமாத்தான் தெளிவு வர ஆரம்பிச்சுருக்கு.

(நன்றி – வெண்ணிலா, முருகேஷ் – புத்தகம் பேசுது, ஜனவரி 2008 இதழ்)

கமல்ஹாசன் தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.சா.ரா, கு.ப.ரா, பிரமிள், புவியரசு, ஞானக்கூத்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தொ.பரமசிவன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், கோணங்கி என இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என தொ.பரமசிவன் சொல்கிறார். கமல்ஹாசன் மய்யம் என்ற இலக்கிய மாத இதழை முன்பு நடத்தியிருக்கிறார். நாமும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்போம்.

ஜி. நாகராஜன் பிறந்த நாள்  & மதுரை புத்தகத் திருவிழா சிறப்புப் பதிவு

நினைவில் காடுள்ள மிருகத்தை

எளிதாகப் பழக்க முடியாது.  

என் நினைவில்

காடுகள் இருக்கின்றன!

– சச்சிதானந்தன்

2012ல் உலகம் அழிந்துவிடும் என்ற பெரும் வதந்தியில் தொடங்கிய இந்த வருடம் எனக்கு நன்றாகவே அமைந்தது. கொண்டாட்டமான நிகழ்வுகள், மறக்கமுடியாத பயணங்கள், வாசிக்க நல்ல புத்தகங்கள் என பகிர்ந்து கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளன. நாம் ஏன் காயங்களையும், கசடுகளையும் சுமந்து கொண்டு அலைய வேண்டும்?. கம்பாநதியில் வண்ணநிலவன் சொன்ன வரிகள் ஞாபகம் வருகிறது.

நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது. எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன.               

– வண்ணநிலவன்

விகடன் தந்த பரிசு

vikatan

ஆனந்தவிகடன் வரவேற்பறையில் இத்தளம் குறித்த அறிமுகம் வந்தது என்னை பெருமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதுவும் இந்த ஆண்டின்  முதல் இதழாக வந்த விகடனில் எனும்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மதுரேய்.. எனத் தலைப்பிட்டு மதுரை மீது தீராக்காதல் கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள் என விகடனில் வந்த வரிகள், பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து படித்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை விட பொக்கிஷம். என் விகடன் வலையோசைப் பகுதியிலும் மே மாதம் வந்தது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

வாசிப்புத் திருவிழா

thiruparankunram

ஒவ்வொரு வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டே தொடங்குவேன். இந்தாண்டு மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ வாசித்தேன். ஜெயமோகனின் ‘காடு’, போதிசத்வமைத்ரேயின் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, யுவன்சந்திரசேகரின் ‘மணற்கேணி’, நாஞ்சில்நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘சூடிய பூ சூடற்க’, ‘கான்சாகிப்’, வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பான தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’, கடிதத் தொகுப்பான ‘சில இறகுகள் சில பறவைகள்’, மா.கிருஷ்ணனின் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ இசையின் ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ என கொஞ்ச புத்தகங்கள்தான் வாசிக்க முடிந்தது. சங்க இலக்கிய பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான ந.முருகேசபாண்டியனின் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ மற்றும் ஜோ.டி.குருஸூன் ‘கொற்கை’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பசுமைநடை

greenwalk

நினைத்துப்பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. பசுமைநடை குழுவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியபின் இந்தாண்டு மதுரையிலுள்ள தொன்மையான இடங்களான யானைமலை, சமணமலை, விக்கிரமங்கலம், மாடக்குளம் கண்மாய், கபாலிமலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை பெயர் பொறித்த தமிழ்பிராமிக்கல்வெட்டுள்ள அழகர்மலை கிடாரிப்பட்டி குன்று, அணைப்பட்டி சித்தர்மலையோடு மதுரைக்கு வெளியேயும் கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம், கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், திருமெய்யம் என புதுக்கோட்டை வரை நீள்கிறது பசுமைநடை. தனியே இவ்வளவு இடங்களுக்கு பயணித்திருக்க முடியுமா என்றால் சந்தேகந்தான். இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், பசுமைநடை மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றதில் பெருமகிழ்வடைகிறேன்.

kadalநெய்தல் சுவடுகள்

திருச்செந்தூர்க் கடலில் நீராடும் வாய்ப்பு இந்தாண்டு இருமுறை கிட்டியது.

நவம்பர்மாத மழைக்கால மாலையொன்றில் சென்னை மெரீனா கடற்கரையில் நீலவானையும், நீண்ட கடலையும் பார்த்துக் கொண்டே நின்றது நினைவில் நிற்கிறது.

அடுத்தாண்டு கொற்கை துறைமுகத்தை போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் துளிர்த்துள்ளது.

அடுத்த ஆண்டு மலைகளோடு கடலையும் நோக்கி பயணிக்க வேண்டும்.

இயற்கை அருளட்டும்.

மதுரையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்

vishwaroopam

இளமையிலிருந்தே கமல்ஹாசனின் மீதான அன்பு அதிகம். சமீபத்தில் மதுரையில் விஸ்வரூபம் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் வருவதாய் அறிந்ததும் அன்று விடுப்பெடுத்து அவரைக் காணக் கிளம்பினேன். நானும், சகோதரனும் சென்றோம். அந்தத் திடலில் நுழைந்ததும் ஒரே கொண்டாட்டமாகியது. மூத்த இரசிகர்களின் ஆட்டம் என்னை மேலும் உற்சாகமாக்கியது. அரங்கிற்குள் கமல்ஹாசன் வரும்போது அருகில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை எழுத்தில் சொல்லிவிட முடியாது. கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே’ பாடலை சங்கர் மகாதேவனோடு இணைந்து மிக அற்புதமாக பாடினார். மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தேன். தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவரின் விஸ்வரூபம் 2013ல் வெற்றி வாகை சூடும்.

http://www.youtube.com/watch?v=C8IjeOdpAng

சித்திரக்காரன்

madurai

மதுரையை சித்திரமாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்தாண்டு சித்திரவீதிக்காரனின் ‘சித்திர’வதைகள் அதிகரிக்கும். சித்திரவீதியில் வந்து தடம் பதித்து சென்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம்போல இந்தாண்டும் முறையான திட்டமிடலில்லாமல் காலத்தை நிறைய வீணடித்துவிட்டேன். அடுத்தாண்டு அவைகளை நீக்கி இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை கொண்டாட மதுரையும், தமிழும் அருளட்டும்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல                                  

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்                         

வாடித் துன்பமிக உழன்று – பிறர்                                     

வாடப் பலசெயல்கள் செய்து – நரை                                

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்                             

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல                        

வேடிக்கை மனிதரைப் போலே – நான்                                 

வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி                            

என்னைப் புதிய உயிராக்கி – எனக்                                     

கேதுங் கவலையறச் செய்து – மதி                                 

தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்                               

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய அலைபேசியின் அழையோசையே இந்தக்கவிதைதான். கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரது திரைப்படங்கள், பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்!                               

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்!

எனக்கு பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனைப் பிடிக்கும். இசைஞானி இளையராஜாவும், கலைஞானி கமல்ஹாசனும் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் படிக்கையில் பாட்டுப்புத்தகம் வாங்கி வைத்து படிப்பது வழக்கம்.  பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஆளவந்தான் பாட்டு புத்தகம் வைத்து படித்துக் கொண்டிருந்தோம். அதைப்பார்த்த ஆசிரியை பாட்டுப்புத்தகத்தை வாங்கி கிழித்துப்போட்டு விட்டார். மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் என்று அவங்களுக்கு தெரியாது.

கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியா கவிதை நான்!

கமல்ஹாசனின் குரலின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமான காந்தக்குரல். கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எல்லாமே தனித்துவமானவை. கமல்ஹாசன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களை தொகுத்துள்ளேன்.

 1. நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
 2. நரிக்கதை – மூன்றாம் பிறை
 3. விக்ரம், விக்ரம் – விக்ரம்
 4. கண்ணே தொட்டுக்கவா – விக்ரம்
 5. அம்மம்மா வந்ததிங்கு – பேர் சொல்லும் பிள்ளை
 6. தென்பாண்டிச்சீமையிலே – நாயகன்
 7. போட்டா மடியுது – சத்யா
 8. ராஜா கையவச்சா – அபூர்வ சகோதரர்கள்
 9. சுந்தரி நீயும் – மைக்கேல் மதன காமராஜன்
 10. கண்மனி அன்போடு – குணா
 11. போட்டுவைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன்
 12. சொன்னபடிகேளு – சிங்காரவேலன்
 13. சாந்துப்பொட்டு – தேவர்மகன்
 14. இஞ்சி இடுப்பழகி – தேவர்மகன்
 15. கொக்கரக்கோ – கலைஞன்
 16. தன்மானம் உள்ள நெஞ்சம் – மகாநதி
 17. எங்கேயோ – மகாநதி
 18. பேய்களை நம்பாத – மகாநதி
 19. எதிலேயும் வல்லவன்டா – நம்மவர்
 20. ருக்கு ருக்கு – அவ்வை சண்முகி
 21. காசுமேலே காசுவந்து – காதலா காதலா
 22. மெடோனா மாடலா நீ – காதலா காதலா
 23. ராம்…ராம்… – ஹேராம்
 24. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹேராம்
 25. ராமரானாலும் பாபரானாலும் – ஹேராம்
 26. கடவுள்பாதி மிருகம்பாதி – ஆளவந்தான்
 27. சிரி…சிரி…சிரி – ஆளவந்தான்
 28. ஆழங்கட்டி மழை – தெனாலி
 29. இஞ்சிருங்கோ – தெனாலி
 30. கந்தசாமி மாடசாமி – பம்மல் கே சம்மந்தம்
 31. ஏண்டி சூடாமணி – பம்மல் கே சம்மந்தம்
 32. வந்தேன் வந்தேன் – பஞ்சதந்திரம்
 33. காதல்பிரியாமல் – பஞ்சதந்திரம்
 34. ஏலே மச்சி மச்சி – அன்பே சிவம்
 35. யார்யார் சிவம் – அன்பே சிவம்
 36. நாட்டுக்கொரு சேதி சொல்ல – அன்பே சிவம்
 37. உன்னவிட இந்த உலகத்தில் – விருமாண்டி
 38. மாடவிளக்க – விருமாண்டி
 39. கொம்புலபூவசுத்தி – விருமாண்டி
 40. அன்னலட்சுமி – விருமாண்டி
 41. பாண்டி மலையாளம் – விருமாண்டி
 42. ஆழ்வார்பேட்டை ஆளுடா – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
 43. கலக்கப்போவது யாரு – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
 44. ஏலேய் நீ எட்டிப்போ – மும்பை எக்ஸ்பிரஸ்
 45. குரங்கு கையில் மாலை – மும்பை எக்ஸ்பிரஸ்
 46. ஓஹோசனம் ஓஹோசனம் – தசாவதாரம்
 47. அல்லா ஜானே – உன்னைப்போல் ஒருவன்
 48. தகிடுதத்தம் – மன்மதன் அம்பு
 49. கண்ணோடு கண்ணை – மன்மதன் அம்பு
 50. நீலவானம் – மன்மதன் அம்பு

இந்த 50 பாடல்களையும் பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. சில பாடல்களை கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பாடியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையிலும், முண்ணனி பாடகர் – பாடகிகளோடும் இணைந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் சிறந்த பாடகர் என்று இசையாளுமைகள் பலரும் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.

அன்று சொன்னான் பாரதி

சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

எந்தன் எண்ணம் என்றைக்கும்

தோல்வி என்பதை ஏற்றதில்லையடி!

மகாகவி பாரதியாரின் வசனகவிதை மேல் கமல்ஹாசனுக்கு காதல் அதிகமென நினைக்கிறேன். கமலின் நிறையப் பாடல்களில் வசனநடையைக் காணலாம். வசனநடையில் வந்த பாடல்களை எல்லாம் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். கமல்ஹாசனின் பாடல்களுக்கிடையே உரையாடல்களும் அதிகம் வரும். சென்னைவட்டார வழக்கில் ‘ராஜா கையவச்சா, காசுமேலே, ஆழ்வார்பேட்டை ஆளுடா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை!

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!  

ஓடிஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை!

அன்பேசிவம் படத்தில் ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல’ பாடலில் வரும் ‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற வரிகளை அலைபேசியில் எனது குரலில் பதிந்து அழையோசையாக வைத்திருந்தேன். நிறையப்பேர் அது கமல்ஹாசனின் குரல் என்றெண்ணியதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் பிற நடிகர்களுக்காக பாடிய பாடல்களும் சிறப்பானவை. அஜித்திற்காக உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்புவாயினில்’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

துடிக்குது புஜம்!   ஜெயிப்பது நிஜம்!

விரைவில் விஸ்வரூபம் படப்பாடல்கள் மதுரையிலிருந்து முதலில் ஒலிக்கப் போகிறது. கமல்ஹாசன் நம்ம வைகைகரையைச் சேர்ந்தவர் எனும்போது பெருமையாய் இருக்கிறது. நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

அபூர்வசகோதரர் கமல்ஹாசன்

நன்றிவிகடன்.காம்