Posts Tagged ‘தமிழி’

greenwalkers

மலைக்க வைக்குமளவு மழை இந்தாண்டில் மதுரையில் பெய்யாவிட்டாலும் முல்லைப்பெரியாறு பகுதியிலும், மூலவைகைப் பகுதியிலும் மழை பெய்து வைகை அணை ஓரளவு நிரம்பி அவ்வப்போது வைகையாற்றில் நீரோடுவதைப் பார்க்க முடிந்தது. தெப்பக்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம் பசுமைநடை செல்லும் போது வைகையை ஆற்றங்கரைச்சாலைகளிலும், பாலத்தின் மீதிருந்தும் பார்த்துக் கொண்டே சென்றேன். மீனாட்சிபுரம் பசுமைநடையின் போது அடுத்தடுத்த நடைகள் மருதநிலங்களினூடாக அமைந்த மலைகளை நோக்கியே இருக்குமென பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அறிவித்தார். வைகையை மலைமீதிருந்து பார்க்க சித்தர்மலை சென்றால் நன்றாகயிருக்குமென்று மனதுக்குள் தோன்றிய ஓரிரு நாட்களில் அடுத்தநடை சித்தர்மலையில் என குறுந்தகவல் வந்தது.

sithermalai1

வைகையில் கொஞ்சமாய் நீரோட்டம் இருந்ததை வேடிக்கை பார்த்தபடி அதிகாலைப்பனியினூடாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நோக்கி சகோதரர்கள் செல்லப்பா, பிரசன்னாவுடன் சென்றேன். கூதலான மார்கழியில் நீளமான இராத்திரியை வரவேற்க போர்வைகள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் முன்பாக நின்றிருந்த குழுவினருடன் இணைந்து கொங்கர்புளியங்குளம், செக்காணூரணி, விக்கிரமங்கலம், சொக்கன்கோவில்பட்டி, பெருமாள்பட்டி, பானாமூப்பன்பட்டி, போலக்காபட்டி வழியாக கல்யாணிப்பட்டி சென்று சித்தர்மலை அடிவாரத்தை அடைந்தோம். பெரியார்நிலையத்திலிருந்து கல்யாணிப்பட்டி தோராயமாக 40 கிலோமீட்டர்கள் வரும்.

பூஞ்சோலைகளுக்கு நடுவே சாலைகள். மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, பிச்சிப்பூ, கோழிக்கொண்டை என வழிநெடுகப் பூந்தோட்டங்கள். வெங்காயம், வெண்டைக்காய், நெல் மற்றும் பயறு வகைகளையும் இப்பகுதிகளில் பயிர் செய்கின்றனர். சமணக்கல்வெட்டுகள் உள்ள உண்டாங்கல்லு மலையையொட்டி உள்ள குளத்தில் நீர் நிறைந்திருந்தது. வழியில் கால்வாய்களில் நீர் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. காலை நேரங்களில் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் காண முடிந்தது. வழியில் பார்த்த அந்திமந்தாரை வண்ணத்தில் இருந்த சுடுகாடு கட்டிடம் மிகவும் ஈர்த்தது. ஆனாலும், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது.

சுடுகாடு

இருநூறுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். எல்லோரும் உற்சாகமாக மலையேறத்தொடங்கினோம். கொஞ்சம் பெரிய மலை. ஏற்கனவே சென்ற மலையென்பதால் சிரமமாகயில்லை. கொஞ்சதூரம் படிகள்; அதன்பின் பாறைகள். அதைப்பிடித்து ஏற இரும்புக்கம்பியிருக்கிறது. நரந்தம்புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. பறித்து நுகர்ந்து பார்த்தால் எலுமிச்சை நறுமணம். அதனால்தான் ஆங்கிலத்தில் லெமன்கிராஸ் என்கிறார்கள். மனதிற்கு புத்துணர்வு ஊட்டக்கூடியதாம். தேநீராக இதை அருந்தலாமாம். செதுக்கப்பட்ட சமணப்படுகையில் போய் படுத்தேன். வியர்வை பொங்கி வழிந்தது. எழுத்தாளர் அர்ஷியா அவர்களுடன் பாறைகளில் கிறுக்கியிருந்த பெயர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பெயிண்ட் டப்பா சகிதம் மலைகளுக்கு வந்து தங்கள் வருகைப் பதிவு செய்யும் காதல்கிறுக்கர்கள் நம்ம நாட்டில் அதிகம்.

sithermalai

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா சித்தர்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களைக் கூறினார். மேலும், சேரநாட்டிற்கும் பாண்டியநாட்டிற்குமான பெருவழிப்பாதை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் யாத்ரீகன் நிகழ்ச்சியில் ‘கண்ணகி சென்ற பாதை’ குறித்து பேசியதைக் குறிப்பிட்டார். அக்கதையில் உள்ளபடி பார்த்தால் கண்ணகி இவ்வழியாகத்தான் சேரநாட்டிற்குள் சென்றிருக்க முடியும். அக்காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதையில் இம்மலை அமைந்திருக்கிறது என்றார்.

map

பசுமைநடைக்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த விஜயகுமார் அவர்களை பல்மருத்துவர் ராஜன்னா அறிமுகம் செய்து வைத்தார். POETRY IN STONE எனும் தளத்தில் தொடர்ந்து சிலைகள், கோயில்கள் மற்றும் நம் கலைச்செல்வங்கள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்து வருகிறார். மேலும், சிலைத் திருட்டை தடுத்து நம் வரலாற்றுப் பொக்கிஷங்களை காக்கும் பணியையும் செய்து வருகிறார். இத்தளத்தை முன்பு தொடர்ந்து வாசித்திருக்கிறேன். படங்கள் மிகவும் தெளிவாகவும், அந்த இடத்தின் வரலாறு மிக எளிமையாகவும் பதிவு செய்திருப்பார்.

விஜயகுமார் அவர்கள் பசுமைநடை குழுவினருடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். “பசுமைநடைக்கு பத்து இருபது பேர் வருவார்களென்று நினைத்தேன். ஆனால், இங்கு கடலே திரண்டிருக்கிறது. மதுரையில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். நான் சிங்கையிலே ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை எங்க அலுவலக வாசலில் சாலைப்பணி செய்யும் நம்மாள் ஒருவர் அந்த ஊர்க்கார மேலதிகாரியிடம் உடைந்த ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மேலதிகாரி புரிந்தாலும் புரியாத மாதிரி நடித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் என்ன விசயம் என்று கேட்டேன். அவர் இரண்டு சீருடைகள் கொடுத்திருக்காங்க. ஒன்றை மாற்றி ஒன்றை துவைத்துப் போட்டால் காயமாட்டேங்குது. அதனால் இன்னொரு உடுப்புக்கேட்டேன் என்றார். நான் அந்த மேலதிகாரியிடம் ஆங்கிலத்தில் கூறினேன். உடனே, உனக்கு எப்படி அவன் பேசுவது புரிந்தது என்றார். நானும் அந்த ஊர்க்காரர்தான் என்றேன். அவன் ஏளனமாகப் பார்ப்பது போலத்தெரிந்தது. நான் அந்த மேலதிகாரியிடம் சொன்னேன். எங்க ஊர் 2500 ஆண்டுப் பழமையான ஊர் மட்டுமல்ல, தொடர்ந்து உயிர்ப்புடன் வாழும் தன்மையுடையது என்றேன். அது மேலதிகாரிக்கு தெரியாதது வருத்தமல்ல. நம்மாட்களுக்கே தெரியவில்லையே அதுதான் வருத்தமாக உள்ளது.

திருடுறாங்க. நம்மாட்களே நம்ம ஊர் கலைச்செல்வங்களை திருடி பகிரங்கமா ஏலத்துல விற்கிறாங்க. நாம பார்த்தாலும் இந்தியாக்காரன்தானே அதன் மதிப்புத் தெரியாது என நம்முன்னே விக்குறாங்க. இதையெல்லாம் தடுக்கணும். நம்ம ஆட்கள் முகநூலில் தமிழன் என பல பொய்யான தகவல்கெல்லாம் நெஞ்சை நிமிர்த்துறாங்க. ஆனால், உண்மையான வரலாறு எல்லோருக்கும் தெரியவில்லை. நாம் கோயிலில் உள்ளதை சிலைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவற்றை திருமேனியென நம் முன்னோர்கள் கொண்டாடியிருக்காங்க. காலையில் எழுப்பி குளிப்பாட்டி உணவு கொடுத்து இரவு பாட்டுப்பாடி தூங்க வைத்திருக்காங்க. நாம் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம்.

இந்த மலையில் பாருங்க. பெயிண்ட் கொண்டு வந்து இந்த இடத்தின் அருமை தெரியாமல் கிறுக்கியிருக்காங்க. பின்னாளில் பசுமைநடைக்கு வரும் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து வந்து இதுபோன்ற விசயங்களைத் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. பசுமைநடைப் போல எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும். நான் வியட்நாம் பகுதிக்கு சென்ற போது இதுபோல அங்குள்ள மலையிலுள்ள கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் என்ன சொல்லியிருக்குன்னா ‘இதை நீங்க பார்த்துக் கொள்ளாவிட்டால் நான் செய்த பாவங்கள் எல்லாம் உன்னைச் சூழும்’ என நாலாம் நூற்றாண்டிலேயே நம்மாள் எழுதிவைத்திருக்கான். அந்தக்கோயில் வாசலில் உள்ள அந்த ஊர்க்காரன் நம்மாட்களைப் பார்த்ததும் கந்த சஷ்டி கவசம் போடணும் என்ற அளவிற்காவது பழகியிருக்கான். இன்று மாலை சங்கம் ஹோட்டலில் சோழர்காலச்சிலைகள் குறித்து பாண்டியத்தலைநகரத்தில் பேசுகிறேன். முடிந்தவர்கள் வந்து கலந்து கொள்ளுங்கள்” என்றார்.

sithermalai2

பசுமைநடையின் சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்திலுள்ள மகாவீரர் சிற்பங்களிலே மிகப்பெரியதும், மிக அழகானதுமான கீழக்குயில்குடி மகாவீரர் திருமேனிப் படத்தை விஜயகுமார் அவர்களுக்கு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வழங்கினார். அவருடைய தளத்தின் பெயரை (POETRY IN STONE) அந்தப் பரிசு நினைவூட்டியது. அவருக்கு மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூலை எழுத்தாளர் அஜாதசத்ரு மற்றும் கவிஞர் வழங்கினர்.

சித்தர்மலை

மலைமீது ஏறி வைகையைப் பார்க்க குழுவாகச் சென்றோம். மலைமீது மகாலிங்கங்கோயில் உள்ளது. சிவராத்திரிக்கும், ஆடி அமாவாசைக்கும் இங்கு அன்னதானம் நடப்பதை அங்குள்ள கோயில் பூசாரி சொன்னார். மிக அழகான கோயில். மலைமீதிருக்கும் மகாலிங்கம் மகிழ்வாகியிருக்கிறார். கீழே வைகை நதி கொஞ்சமாக ஓடினாலும், பளிங்கு போல மிகத் தெளிவாகயிருந்தது. கரையோரம் இருந்த தென்னை மரங்கள் சிறு செடிகள் போலவும், வைகை சிறுவாய்க்கால் போலவும் தோன்றியது. ஓவியர் ரவி அவர்களுடன் ஓவிய ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சில தகவல்களைக் கூறினார். வைகை பின்புலமாக குழுவாக நிழற்படம் எடுத்துக் கொண்டோம். அடுத்த நடை மலையடிவாரத்தில் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடலாமா என பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரிடமும் கருத்து கேட்டார். எல்லோரும் மகிழ்வாக சரியென்றனர்.

மகாலிங்கம்

மலைமீதிருந்து மெல்ல இறங்கினோம். பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூல் விற்பனைப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டே புதிய பசுமைநடைப் பயணிகளிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கினேன். வரும்போது நானும் கந்தவேலும் வந்தோம். கந்தவேலின் அதீதநிழற்பட ஆர்வத்தால் நின்று நின்று மெல்ல நிழற்படமெடுத்துக் கொண்டே வந்தோம். காலையில் கூட்டமாக வந்ததைக் குறித்து விசாரித்தவர்களிடம் பசுமைநடை மற்றும் சித்தர்மலை குறித்து கூறினோம்.

history of sidhermalai

விக்கிரமங்கலம் அருகே வந்தபோது மழை வந்தது. என்னுடன் வந்த சகோதரர்கள் விக்கிரமங்கலம், காடுபட்டி, தென்கரை வழியாக சோழவந்தான் சென்றுவிட்டனர். கடந்தமுறையைவிட இந்தாண்டு வைகையைப் பார்த்தது மிக மகிழ்வாயிருந்தது. இனியொருமுறை ஆற்றில் நிறைய வெள்ளம் போகும் போது சித்தர்மலைக்குப் போகணும்.

xpress

படங்கள் உதவி – அருண், பிரசன்னா, செல்லப்பா, செல்வம் ராமசாமி, சரவணன், ஹூபர்ட், தமிழ்ச்செல்வம், இந்தியன் எக்ஸ்பிரஸ்

1623756_589651444438808_16599272_n

பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. அயற்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் மனநிலை அப்போது பிறக்கிறது.

–    வெ.இறையன்பு

சமணமலையை இளம்வயதில் எங்க ஊரிலிருந்து பார்க்கும் போது நாகமலைக்கு இடதுபுறமாக வில்போல அமைந்த  சிறுகுன்றாகத்தான் தெரியும். பின்னாட்களில் பணிவிசயமாக மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் சென்றபோதும் அந்த மலையின் பெயர் தெரியாது. ஆனாலும் நாகமலைப்புதுக்கோட்டைக்கு முன் வரும் கால்வாய்கிட்ட நின்று பார்த்துவிட்டுதான் செல்வேன். மதுரையைக் குறித்த தேடலும், வாசிப்பும் அதிகமான போது சமணமலை மிகவும் நெருக்கமானது. விருட்சத்திருவிழாவிற்கு பின் சமணமலையின் மீதான காதல் இன்னும் அதிகமானது.

பசுமைநடையாக குடியரசு தினத்தன்று காளவாசலில் எல்லோரும் கூடி அங்கிருந்து சமணமலையின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மேலக்குயில்குடிக்கு சென்றோம். நாகமலைப்புதுக்கோட்டையிலுள்ள வெள்ளைச்சாமிநாடார் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலையில் சென்றால் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி தாண்டி தெரியும் சமணமலையின் பின்பகுதியில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகள் உள்ளது.

1511726_589650247772261_1814438295_n

1545198_589650944438858_2118255101_nசமணப்பண்பாட்டு மன்றம் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் மலையை நோக்கி நடந்தோம். பனியைப் பத்திவிட்டு பகலவன் பல்லக்காட்டத் தொடங்கினான். மலையை வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் அப்பகுதி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். படுகைக்கு செல்லும் பாதையில் சீமைக்கருவேலமுள் அதிகம் வளர்ந்திருந்தது. ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள நண்பர்கள் சிலர் ஏறி பாதையை சரிசெய்தனர்.

1538935_589651264438826_1053547566_n ஏறுவதற்கு சிரமமான இடங்களில் நின்று வந்தவர்களை கைகொடுத்து ஏற்றிவிட்டனர். சரளைக்காக மலையை உடைத்திருந்ததாலும், இடியால் சிதைந்திருந்ததாலும் மலை உருக்குலைந்து காணப்பட்டது. மலைமீது ஏறி படுகைகளைத் தேடினோம். மேற்கூரையில்லாமல் உடைந்து கொஞ்சம் படுகைகள் கீழே கிடந்ததைப் பார்த்து மனமுடைந்து போனது. எல்லோரும் அங்கு கூடியதும் அனைவருக்கும் அந்த இடம் குறித்த கைப்பிரதி வழங்கப்பட்டது.

1536746_589652691105350_901473715_n

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசத் தொடங்கினார். கடினமான பாறை இடிபாடுகளைக் கடந்து இந்த இடம்வரை கிட்டத்தட்ட எல்லாருமே ஏறிவந்திருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமான மனதை யாராலும் சிறைபிடிக்க முடியாது என்பதை இந்த நடை நிரூபித்திருக்கிறது. தனியாக இந்த இடத்திற்கு வரும்போது தயக்கம் ஏற்படும். ஆனால், குழுவாக இணையும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை அலாதியானது. மனித சமூக வரலாற்றிலேயே ஒற்றுமையாக இருந்தவர்கள்தான் பல விசயங்களை சாதித்திருக்கிறார்கள்.

1623563_589651604438792_2093625257_n

ஜனவரி 1 அன்று விஜய்டிவி நீயா? நானா? 2013 விருது பசுமைநடை குழுவிற்கு தொன்மையான இடங்களை நோக்கி பயணித்து பாதுகாத்து வருவதற்காக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான அழைப்புகளும், வாழ்த்துகளும் உலகமுழுவதிலுமிருந்தும் வரத்தொடங்கியது. விருட்சத்திருவிழாவிற்குப் பிறகு ஊடகங்கள் பசுமைநடையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.

குங்குமம்

ஜனவரி முதல் வார குங்குமம் இதழிலும் வரலாற்றை சேகரிக்கும் பசுமைநடை என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் கட்டுரை வந்துள்ளது. மற்ற ஊரில் இருக்கும் நண்பர்கள் எங்கள் ஊரிலும் பசுமைநடையை நடத்துங்கள் என அழைக்கிறார்கள். இப்போது பசுமைநடைக்காக இருபது நண்பர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுபோல இன்னும் ஐம்பது நண்பர்கள் பசுமைநடைக்காக நேரம் ஒதுக்கினால் நாம் பசுமைநடையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லலாம்.

1654112_772816259414473_1814524161_nமேலக்குயில்குடி மலை இடிந்து விழுகிற நேரம் இந்தப் பகுதியில் உள்ள சர்ச்கிட்டதான் நடந்து சென்று கொண்டிருந்தோம். மிகப் பெரிய சத்தம் கேட்டது. அப்போது அணுகுண்டு வெடித்ததுபோல இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். இதுபோன்ற இடங்களுக்கு யாரும் வராததால்தான் இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகளையாவது விட்டுவையுங்கள் என நாம் கேட்கிறோம்.

முத்துக்கிருஷ்ணனைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார். Muthukumarசமணமலை முக்கியத்துவம் வாய்ந்த மலை. மதுரையில் யானைமலை, அரிட்டாபட்டி போன்ற பல மலைகளில் சமணத்தின் சுவடுகள் இருந்தாலும் இம்மலைக்குப் பெயரே சமணமலை என்றிருக்கிறது. மேலக்குயில்குடி மலையில் பத்திற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இருந்தன. இங்கு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலை ஆய்வுமாணவராக இருந்த முத்துக்குமார் என்ற இளைஞர் இப்படுகைக்கு மேலுள்ள பாறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டைக் கண்டறிந்தார். (நாம் முன்பு கீழக்குயில்குடி சென்ற போது அதைப் பார்த்தோம்). இந்த மலை அதற்கான பரிசை அவருக்கு வழங்கிவிட்டது. இப்போது அந்த இளைஞர் தில்லி ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி நமது ஆட்கள் பல இடங்களிலும் இருப்பது நமக்கு நல்லது.

இம்மலையை முன்பு சரளை உடைப்பதற்கெடுத்த ஒப்பந்ததாரர் அடியிலிருந்து உடைக்கத்தொடங்கினார். இதனால் மேற்பகுதி வலுவிழந்துகொண்டே வந்தது. நல்லவேளையாக இம்மலை உடைந்த அன்று பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால் தனக்கு வாக்களிப்பதற்காக பணியாட்களையும் கூட்டிக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.  அதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பொதுவாக எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றியதாகச் சொல்லி இக்கலை நகரத்தை கொலை நகரமாக பலர் சித்தரிக்கும் வேளையில் இயற்கையாகவே ஆளில்லாத நாளில் மலை இடிந்துவிழுந்ததன்மூலம் அன்று இம்மலை அகிம்சை மலை என்று காட்டிவிட்டது. பின் அந்த ஒப்பந்ததாரரே இல்லாமல் போனார். இம்மலை தப்பியது. மலைகளை பாதுகாக்க தனியாக ஆட்களை நியமிப்பதைவிட இதன் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

இதுபோன்ற இடங்களை நோக்கி இப்போது பலரும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். வந்தவாசிப் பகுதியிலுள்ள சமணர்கள் இப்போது அங்குள்ள சமணத்தலங்களை நோக்கி அகிம்சைநடை என்ற பெயரில் பயணிக்கிறார்கள். மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள் சேர்ந்து குறிஞ்சிக்கூடல் என்ற பெயரில் தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒருமுறை குடும்பத்துடன் பயணிக்கின்றனர். மூன்றாவது நடையாக அரிட்டாபட்டியில் பொங்கல்விழா கொண்டாடிய போது நானும் சென்றிருந்தேன்.

பெருந்தேவூர் குவித்த அயம்

இம்மலை மீதுள்ள ஆடு உரிச்சான் பாறையில் பெருந்தேவூர் குவித்த அயம் என்ற தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. பெருந்தேவூரைச் சேர்ந்தவர்கள் செய்வித்த படுகை என்பது இதன் பொருள். சமணத்துறவிகள் தங்கியிருந்த இடத்திற்கு ஆடுஉரிச்சான் பாறையென பின்னாளில் பெயர்வந்தது நேர்முரணான விசயம். மதுரையை சமணத்தின் தாயகம் என்று சொல்லும் தமிழ்ச்சமணர்களும்  இந்நடைக்கு வந்துள்ளது மற்றுமொரு சிறப்பு.

1535024_589652207772065_585803335_n

வந்தவாசிப்பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் கொஞ்சப்பேரும் இந்நடைக்கு வந்திருந்தனர். அ.முத்துக்கிருஷ்ணன் அறவாழி அய்யாவை எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்தார். அறவாழி அய்யா எளிமையான மனிதர், பல முக்கியமான தலைவர்களின் சமகாலத்திய நண்பர், மு.வரதராசனின் மாணவர் என்று அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அறவாழி அய்யா பேசத் தொடங்கினார். மதுரையிலுள்ள மலைகளுக்கெல்லாம் கடந்த 25, 30 ஆண்டுகளாக திங்களுக்கொருமுறை, இரண்டு திங்களுக்கொருமுறை வந்து செல்கிறோம். நாங்கள் தமிழகத்தில் மைக்ரோஸ்கோபிக் மைனாரிட்டி என்று சொல்லும்படி எண்ணிக்கையில் சிறுபான்மையினர்.

நான் பொதுவாக இந்த வரலாற்றுச் சின்னங்களை சமணம் சார்ந்தவை என்று எண்ணுவதில்லை. இவை அனைத்தும் தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் சார்ந்தவை. இயற்கையாகவே இம்மலைக்கு சமணமலை என்ற பெயர் வந்துவிட்டது. சாந்தலிங்கம் அய்யா பேசும்போது இம்மலையை அகிம்சை மலை என்றார். நான் இதை தமிழர்மலை என்கிறேன்.

முதுபெரும் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இம்மலை உடைந்த போது கண்ணீர் விட்டு அழுதார். அருகிலுள்ள விக்கிரமங்கலம் சென்று பார்த்துவிட்டு அழிவின் விளிம்பில் விக்கிரமங்கலம் என தினமணியில் மகாதேவன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்து நான், சாந்தலிங்கம், ஆனந்தராஜ் மூவரும் விக்கிரமங்கலம் சென்றோம். மலையை கொஞ்சம் சரளைக்காக சுக்குச்சுக்காக உடைத்திருந்தார்கள். மலையின் மறுபுறம் உள்ள படுகையில் காணப்படும் தமிழிக்கல்வெட்டுகளைக் காணச் சென்றோம். இப்போது எனக்கு வயது எழுவத்தொன்பது. ஆறேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஆற்றல் இருந்தது. அப்போது கல்வெட்டுக்களை காணும் ஆவலில் பாறைகளைப் பிடித்து சிரமப்பட்டு ஏறினேன். அதை வியந்து பார்த்த சாந்தலிங்கம் புகைப்படமாக எடுத்துக் கொடுத்தார். அந்த படங்களை சிறப்பு ஆணையர் ஶ்ரீதரிடம் காட்டியபோது இவ்வளவு சிரமமான இடங்களுக்கெல்லாம் இனி ஏறாதீர்கள். தவறிவிழுந்தால் என்ன ஆவது என்று வருத்தப்பட்டார். பசுமைநடைக்கு வருபவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் இங்கு இளைஞர்கள்வட்டம் அதிகமாகத் தெரிகிறது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இப்போது போனஸ் லைஃபில் இருக்கிறோம். எங்களுடைய ஒழுகலாறுகள் காரணமாக கொஞ்சம் கூடுதல் ஆயுளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், தமிழகம் இனி எங்கள் கையில் இல்லை. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலத் தமிழகம் இருக்கிறது. இங்கே இருக்கிற இளைஞர்களைப் பார்த்து மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். தமிழர்களுடைய பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.

எல்லோரும் மெல்ல இறங்கினோம். நான், சகோதரர் தமிழ்ச்செல்வம், இளஞ்செழியன் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.  எல்லோரும் விஜய்டிவி விருதை வைத்து புகைப்படமெடுத்துக் கொண்டனர். மதுர வரலாறு நூலை வாங்காத புதிய நண்பர்கள் வாங்கினர். கதிர் பொங்கல் மலரையும் வேண்டியவர்களுக்குக் கொடுத்தோம். காவலர் ஒருவர் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த கைப்பிரதியை எல்லோருக்கும் வழங்கினார். விழித்தெழு மதுரை குழுவினர் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கான அவர்களது ஏழு அம்ச செயல்திட்டம் குறித்துப் பேசினர்.

1655911_589653754438577_1386311960_n

சமணப்பண்பாட்டு மன்றத்தில் பசுமைநடைக்குழுவினர்க்கு காலை உணவு வழங்கப்பட்டது. கேசரி, வடையையும்; சாம்பார் சட்னியில் குழைத்து வெண்பொங்கலையும் வயிராற உண்டோம். சமணப்பண்பாட்டு மன்றம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றதை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அதில் பசுமைநடை ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்து கொண்டோம்.

விஜய் டி.வி நீயா? நானா?2013 விருதுக்கான காணொளிக்கான இணைப்பு

தமிழிக் கல்வெட்டுக் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்திக்கான இணைப்பு.

படங்கள் உதவி – ரகுநாத், செல்வம் ராமசாமி

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com