Posts Tagged ‘திருப்பரங்குன்றம்’

சிக்கந்தர்தர்ஹா

அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்!

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்!

தலைவணங்கிக் கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்!  

தரணியெங்கும் நிறைந்திருக்கும் மகாவல்லவன்!

திருப்பரங்குன்றம், பால்யத்திலிருந்து இன்றுவரை மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது. தினசரி பார்வையில் படும் மலைகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. திருப்பரங்குன்றத்திற்கு பசுமைநடையாக  முதல்முறை சமணப்படுகைக்கும், தென்பரங்குன்றம் குடைவரைக்கும் சென்றோம். அடுத்த நடையில் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலையும், சமணச் சிற்பங்களையும் கண்டோம். இம்முறை 16.02.2014 அன்று மலைமீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவைக் காணச் சென்றோம்.

விடியலைநோக்கி

திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல புதிதாக கட்டியுள்ள பாலத்தில் முதல்முறையாக சென்றேன். மிக நீளமான பாலம். பாலத்திலிருந்து பார்க்கும் போது மலை மிகவும் இரம்மியமாக காட்சி தந்தது. திருப்பரங்குன்றம் பேருந்து நிலையமருகில் எல்லோரும் கூடினோம். அங்கிருந்து பசுமைநடையாக இளங்கதிரவனின் பார்வைபட மலைமீது ஏறினோம். படிகளைக் கடக்கும் போது கொஞ்சம் மூச்சு வாங்கியது. கொஞ்சம் நேரம் இளைப்பாறிப் பின் கிளம்பினோம். ஓய்வெடுக்கும் இடங்களிலெல்லாம் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.

மலைப்பயணம்

மலையிலுள்ள தர்ஹாவிற்கு எல்லோரும் சென்றோம். அங்குள்ள இஸ்லாமிய பெரியோர்களின் நினைவிடங்களை பார்த்தோம். வணங்கினோம். உள்ளே உள்ள தூண்களைப் பார்க்கும்போது தமிழர் கட்டடக்கலை நன்றாகத் தெரிந்தது. எல்லோரும் அங்கு கூடியதும் தர்ஹாவிலுள்ள இஸ்லாமியப் பாடகர் அப்துல் ஜப்பார் அந்த இடம் குறித்த வரலாறைச் சுருக்கமாகச் சொன்னார். தர்ஹாவிலிருந்து பசுமைநடைக்குழுவினர்க்கு சர்க்கரையும், திருநீறும் கொடுத்தனர். பின் எல்லோரும் தர்ஹாவின் முற்றத்தில் கூடினோம்.

கூடல்

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடைக்கு வந்தவர்களை வரவேற்றார். இங்கிருக்கிறவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஈரானியத் திரைப்படம் ஒன்று ஞாபகம் வருகிறது. ப்ளாக் போர்டு என்னும் படம். அந்தப் படத்தில் ஒரு ஆசிரியர் முதுகில் கரும்பலகையைத் தூக்கி கொண்டு பயணித்து கொண்டே இருப்பார். நாடோடியின மக்கள் மற்றும் விளிம்புநிலை மனிதர்கள் பத்து பேரைப் பார்த்தால் அங்கேயே அவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களையும் கற்ற விசயங்களையும் சொல்லிக் கொடுத்துவிட்டு செல்வார். அதுபோலத்தான் இந்த இடம் இன்றைக்கு நமக்கு காட்சி அளிக்கிறது. மிக உயரமான மலை. ஏறுவதற்கு வயதானவர்கள் சிரமப்படுவார்கள் என்று பார்த்தோம். ஆனால், எல்லோரும் உற்சாகத்தோடு ஏறி வந்தது நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையிலிருந்து மற்றும் பல வெளியூர்களிலிருந்தும் பசுமைநடைக்கு மக்கள் வருவது நமக்கு நம்பிக்கையளிக்கிறது. 1935ல் இம்மலையையும் அறுத்துக் கூறுபோட இருந்தார்கள்.  அப்போது அதை லண்டன் வரை போய் தடுத்து நிறுத்திய பெருமை இஸ்லாமியப் பெருமக்களையே சேரும். 

அர்ஷியா

அதைத் தொடர்ந்து எழுத்தாளர் அர்ஷியா இம்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். எந்த ஒரு தேசத்திற்கும், எந்த ஒரு இடத்திற்கும் ஒரு வரலாறும், அடையாளமும் இருக்கவே செய்யும். வரலாறும் அடையாளமும் இல்லாத ஒரு பருப்பொருள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையராது இயங்கிவரும் நம் தொல் மதுரையின் இந்த மலையில் கிறிஸ்துவத்திற்கு மட்டும் ஒரு அடையாளம் இல்லையென்பது கட்டுரையாளனாகவும், படைப்பாளனாகவும் எனக்கு வருத்தத்தை தருகிறது. பசுமலையிலிருந்து வரும் போது இம்மலை எனக்கு மேரிமாதாவின் கைகளிலிருந்து இயேசு அழைப்பதைப் போலத் தோன்றியது.

நாம் கூடியிருக்கும் இந்த இடம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் தர்ஹா. பள்ளிவாசலுக்கும், தர்ஹாவுக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பள்ளிவாசல் என்பது பிரார்த்தனை செய்யும் கூடம். தர்ஹாவென்பது மதத்திற்காக, சமயத்திற்காக சேவை செய்தவர்கள் மரணித்தவர்களின் நினைவிடமாகும். கிறிஸ்துவம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பாகவே அரபு நாட்டிலிருந்து வணிகர்களாக உலகம் முழுவதும் அரேபியர்கள் சென்றிருக்கிறார்கள். ‘சீன தேசம் சென்றேனும் கல்வியைத் தேடு’ என்பது நபியின் பொன்வாக்கு. இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டில்தான் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமயம் பரப்பத் தொடங்கினார்கள்.

நினைவிடம்

இந்தியாவிற்கு சமயம் பரப்ப வந்தவர்களை வரவேற்றது அரபிக்கடல். கேரளத்தை ஆண்ட சேரமன்னர் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மன்தான் (கி.பி.780லிருந்து கி.பி.834)  இஸ்லாத்தை மிகவும் நேசித்திருக்கிறான். அதைக்குறித்து தொன்மைக்கதை ஒன்றுள்ளது. சேரமன்னன் மாடமாளிகையின் உச்சியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த போது அது இரண்டாக கிழிந்து சற்று நேரத்தில் ஒட்டிக்கொண்டது. அதைக்குறித்து தனது அரசவையில் கேட்டபோது அவரிடையேயிருந்த அந்தண அமைச்சர் மேற்கு கரையோரத்தில் ஒரு மதம் தோன்றியிருக்கிறது அதன் அற்புதமிது என்று கூறியிருக்கிறார்.  அந்த மதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இப்போதைய சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் இஸ்லாமியராக மாறி அப்துல் ரகுமான் சாமிரி என்ற பெயரும் ஏற்கிறார். ஹிஜ்ரி 212 – 216 வரை நான்காண்டு காலம் அங்கேயே இருந்தார்.  சாமிரி என்றால் புதியவர் அல்லது வெளிநாட்டவர் என்று பொருள். அவர் கி.பி.834ல் அங்கேயே காலமாகிறார். அதைக்குறித்த கல்வெட்டு அங்குள்ளது.

கண்ணனூர், கொல்லம், முசிறி துறைமுகங்களின் வழியாக மதம் பரப்ப வருபவர்களை சேரமன்னர்கள் வரவேற்கிறார்கள். கி.பி.1182ல் மதீனாவின் ஆளுநராகயிருந்த சையது சுல்தான் இப்ராஹீம் மதம் பரப்ப கிளம்புகிறார். இவர் முகம்மது நபி மகள் வழிவழிப் பேரன்களில் ஒருவர். ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும் இப்ராஹீமுடன் சேர்ந்து மதம் பரப்ப வருகிறார். சேரமன்னன் கொல்லத்தில் இவர்களை வரவேற்கிறான்.

சேரநாட்டிலிருந்து பாண்டியநாட்டிற்கு வருபவர்கள் புன்னைக்காயலில் குலசேகரபாண்டியனின் ஆதரவுடன் மதம் பரப்புகிறார்கள். பின் அங்கிருந்து மதுரைக்கு வரும்போது இங்கு குழப்பநிலை நிலவுகிறது. சோழர் படை படையெடுத்து ஒருபுறம் இருக்க மதம் பரப்ப வந்தவர்கள் மீது பாண்டியன் எரிச்சலடைகிறான். ஒருபுறம் சோழன், மறுபுறம் இப்ராஹீம் என்று வர வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறான். சோழநாட்டிற்கு சென்றதுபோக மீதமிருந்த படையுடன் பாண்டியன் மதம்பரப்ப வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை முகமதியர்கள் வசம் வருகிறது. சையது இப்ராஹீம் சிக்கந்தர் பாதுஷாவை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸூடன் இராமநாதபுரத்திலுள்ள ஏர்வாடிக்கு சென்று விடுகிறார்கள்.

1182லிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார்.  அவரது ஆட்சி குறித்த பதிவு ஏதுமில்லை. வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து தன் மகன் குலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹிமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும் குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். (சிக்கந்தர் பாதுஷா இம்மலைக்கு குதிரையில் வந்த சென்றதாக நம்பிக்கையிருக்கிறது) மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளமருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில் தான் இந்த தர்ஹா அமைந்துள்ளது.

சிக்கந்தரைக் குறித்த பதிவுகள் நிறைய நூல்களில் காணப்படுகிறது. 1866ல் பார்ஸி அரபி மொழியில் மதுரை மகான் அப்துல் ஸலாம் எழுதிய மனாகிப் என்னும் நூலில் ‘ஸலாமி அலாரூஹி இஸ்கந்தரி ஸலாமி அலா ஜிஸ்மார்த்த அத்ஹரி’  என்றால் தமிழில் சிக்கந்தருக்கு ஆத்மார்த்த வந்தனம் மதுரையில் தலம் கொண்ட நாயகனே வந்தனம் என்று பொருள். மனாகிப் என்றால் புகழ்மாலை. 16ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பயணி சிக்கந்தரின் வரலாறை ஒரு பகுதியாக ஷஹாதத் நாமா என்ற நூலில் எழுதியிருக்கிறார். கி.பி.1820ல் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய தீன்நெறி விளக்கத்தில் ஷஹீத் சரிதை என்று சிக்கந்தரின் வீரமரணம் குறித்து காணப்படுகிறது. கோயிற் சாசனக் குறிப்புகளில் குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானக்கல்வெட்டுகளில் சிக்கந்தரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

‘இஸ்லாம் வளர்ச்சியடைந்து அட்லாண்டிக் சமுத்திரம் முதல் பசுபிக் சமுத்திரம் வரை பரவியிருந்தது. ஆனாலும், இஸ்லாமின் செல்வாக்கு நிலையாக இருந்தது, இந்து சமுத்திர நாடுகளில்தான். இந்து சமுத்திரம் ஒரு மாபெரும் அரபுக் கடலாக மாறியது’ என வரலாற்று ஆய்வாளர்கள் ஶ்ரீகந்தையா மற்றும் கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளனர்.

‘கி.பி.1182ல் அரபுநாட்டினின்று வந்த ஸையது இப்ராஹீம் என்பவர் மதுரையில் ஆண்ட விக்கிரம பாண்டியனை வென்று தமிழகத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார்’ என முனைவர் எஸ்.எச்.ஏ.ஹுசைனி தன்னுடைய பாண்டிய நாட்டு வரலாறு நூலில் பக்கம் 17-19ல் குறிப்பிட்டுள்ளார்.

‘மதுரையில் பாண்டியர்படை பிரச்சாரக்குழுவினரைத் தாக்க அதற்கு தற்காப்புப் போர் செய்து வீரபாண்டியனை வென்று சிக்கந்தர் பாதுஷாவை அரசராக்கினார்’ என முனைவர் எஸ்.எம்.ஏ.காதர், தஞ்சை, தமிழ்ப்பல்கலை இஸ்லாமிய இருக்கை சிறப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியிட்ட முகம்மது உவைஸ் மற்றும் பீ.மு.அஜ்மல்கான் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இப்ராஹீமைப் பற்றியும் சிக்கந்தரைப் பற்றியும் பேசுகின்றது.

பழனியில் வாழ்ந்த சித்தர் போகர் ஏழாயிரம் நூலில் 326 – 350ம் வரிகளில் சிக்கந்தரைப் பற்றி எழுதியுள்ளார். சிக்கந்தர் நினைவிடத்தில்தான் அமைதியாக தரிசித்து ஆத்ம அமைதி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் குணங்குடி மஸ்தான் இம்மலையில் வந்து நாற்பது நாட்கள் தியானம் செய்ததாக வரலாறு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டி மோனகுரு மஸ்தான் இங்கு வந்திருக்கிறார்.

வரலாற்றில் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா மதுரையின் கடைசி மன்னர் என்று பிழையாகயிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சையது சிக்கந்தர் பாதுஷா. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா. இருவரது பெயரிலும் சிக்கந்தர் என்றிருப்பதால் வரலாறுகளில் இம்மலையில் மறைந்த சிக்கந்தரை கடைசி சுல்தான் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். விஜயநகர பேரரசிலிருந்து வந்த குமார கம்பணனால்தான் கடைசி சுல்தான் சிக்கந்தர் அலாவுதீன் ஷா கொல்லப்படுகிறார்.

திருப்பரங்குன்றம்

இஸ்லாம் என்பது மக்கள் மதம். நம்பிக்கையின் மதம். சூஃபிகள், இறைநேசர்கள் மறைந்த நினைவிடத்திற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வருகிறார்கள். மலப்புரம், கண்ணனூர் போன்ற வடக்கு கேரளத்திலிருந்து மக்கள் இங்கு வந்து செல்வதை இன்றும் காணமுடிகிறது. ஏர்வாடியிலுள்ள சையது இப்ராஹீம் தர்ஹா செல்லும் அனைவரும் இந்த மலைக்கு வந்து செல்வதையும், இஸ்லாமிய மக்கள் வியாழன்று இரவு தங்கி மறுநாள் காலை செல்வதையும் காணலாம். 18ஆம் நூற்றாண்டளவில் ஆற்காட்டை ஆண்ட நவாப்புகள் தணக்கன்குளம் பகுதியில் இம்மலைக்கு மானியங்களை அளித்துள்ளனர். சிக்கந்தர் பாதுஷாவிற்கு நிறைய விழாக்கள் இம்மலையில் நடக்கிறது. இம்மலை மிகச் சிறப்பு வாய்ந்த மலை.

பசுமைநடை

நாவலாசிரியர் அர்ஷியா கூறிய தகவல்களை கேட்ட போது தர்ஹா குறித்த அவரது மிக நீண்ட தேடலை அறிந்து கொள்ள முடிந்தது. திருமங்கலத்தைச் சேர்ந்த கவிஞர் ஷாஜகான் தர்ஹா குறித்த தகவல்களை சுருக்கமாக பேசினார். கீழே கந்தர் இருக்கிறார். மேலே சிக்கந்தர் இருக்கிறார். தர்ஹாக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. தர்ஹாக்கள் கூடாது என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சொல்கின்றனர். தர்ஹாக்கள் குரான் அடிப்படையில் இல்லையென்பது அவர்கள் வாதம். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். தர்ஹா அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் இடமாக இருப்பதால் நம்மை போன்ற பொது சிந்தனையாளர்களாளும் கொண்டாட வேண்டிய விசயம். எளிய மனிதர்களிடம் மதம் என்பது கையெடுத்து கும்பிட்டுச் செல்வதாகத்தானிருக்கிறது. மதவாதம் தலைதூக்கிற இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடமாக தர்ஹாக்கள் இருக்கிறது.

வழிபாடு

சிக்கந்தர் பாதுஷாவின் நினைவிடத்திற்கு சென்று ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வணங்கிப்பின் கீழே இறங்கத் தொடங்கினேன். தர்ஹாவில் ஒரு பெட்டிக்கடையிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து சமைத்து உண்கிறார்கள். அடிவாரத்திலிருந்து உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை தலைசுமையாக கொண்டுவந்து இங்கு வைத்து சமைத்து சேர்ந்து உண்கிறார்கள். பார்க்கும்போதே நமக்கும் குடும்பத்தோடு இப்படி வந்து திரிய வேண்டுமென்ற ஆசையேற்படுகிறது. பசுமைநடைக்குழுவோடு மதுரையிலுள்ள எல்லா மலைகளிலும் சுற்றி திரிந்து அங்குள்ள மரத்தடிகளில் உரையாடிக்கொண்டே இட்லி தின்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

வானரம்திருப்பரங்குன்றம் மலைமீது தெரியும் பெரிய மரத்தைப் போய் பார்த்தோம். சிறுமிகள் யாராவது ஒற்றைக்குடுமி போட்டிருந்தால் என்ன திருப்பரங்குன்ற மலை மாதிரியிருக்கு என கேலி செய்வேன்? அந்த மரத்தை இந்நடையில் அருகில் பார்த்தேன். மலையை விட்டு இறங்கும் போது எங்கும் அமராமல் ஒரே மூச்சோடு இறங்கினேன். கீழே உள்ள பழனியாண்டவர் கோயிலில் உணவு அருந்தினோம். நடை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சென்றாண்டு பிப்ரவரியில் இம்மலைக்கு வந்த போது அடுத்து ஒருமுறை தர்ஹாவிற்கென தனியே வரவேண்டுமென பேசியது நினைவிற்கு வருகிறது. ஒருவருடம் கழித்து அதுவும் சாத்தியமாகிவிட்டது. தர்ஹா குறித்த தகவல்களை என்னிடம் தந்து அதைக்குறித்து மேலும் உரையாடிய எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கு நன்றி. இந்த நடையை அற்புதமாக நிழற்படங்களில் காட்சிப்படுத்திய அருண் அவர்களின் படங்களை அவரது அனுமதியோடு பகிர்ந்துள்ளேன். அவருக்கும் நன்றி. நீண்ட பதிவை பொறுமையுடன் வாசித்த அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி