Posts Tagged ‘நாவல்’

கமல்ஹாசன்அந்தக் காலம் மாதிரி வராது. அது வரம். இடுப்புல ஜாலியா உட்கார்ந்துகிட்டு சாப்டுக்கிட்டேயிருப்பேன். இப்ப எதுக்கெடுத்தாலும் வேலை.

–   கமல்ஹாசன் (மும்பை எக்ஸ்பிரஸ்)

என் நினைவில் பதிந்த வசனமிது. சிக்னல் நிறுத்தத்தில் கார் நிற்கும்போது குழந்தையை கையில் வைத்துகொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சிறுமியைப் பார்த்ததும் கண்ணில் நீர் துளிர்க்க தனக்கு பழைய நினைவு வந்ததாகச் சொல்லி கமல்ஹாசன் சொல்லும் வசனமே மேலே உள்ளது. அந்தப் படத்தில் நிலையான வேலையில்லாமல் மரணக்கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து வண்டி ஓட்டும் காதுகேளாத நாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவரது காதுகேளாமையைப் பலரும் கேலி செய்வார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல் வாசித்ததும் மும்பை எக்ஸ்பிரஸ்தான் நினைவிற்கு வந்தது.  இந்நாவலின் நாயகனான தேவராஜூம் காதுகேளாமல் உருப்படியான வேலையில்லாமல் சிரமப்படுபவர்தான்.

47 வயதில் தேவராஜ் திருமணத்திற்கு முதல்நாள் தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது அவரோடு பயணிக்கும் நாமும் நிசப்தமாக நிராகரிப்பின் வலியை உணர முடிகிறது. தேவராஜிற்கு சிறுவயதில் ஏற்படும் காய்ச்சலால் காதுகேளாமல் போய்விடுகிறது. அதனால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் அவனது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. காதுகேளாததால் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடிக்க முடியாமல், நிரந்தரமான வேலையில்லாமல், உரிய வயதில் திருமணம் செய்யாமல் தேவராஜ் படும் அவமானமும், புறக்கணிப்பும் நம்மையும் பாதிக்கிறது. அந்தளவிற்கு தேவராஜ் நமக்கு நெருக்கமான நண்பராகிவிடுகிறார்.

பிரிண்டிங் பிரஸ், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சோப்பு கம்பெனி, மிளகாய்ப் பொடி அரைக்கும் மில், லாட்டரிச் சீட்டுக்கடை, டாக்டர் வீட்டில் எடுபிடி, ஊட்டியில் கடையில் விற்பனை பிரதிநிதி, காசிக்கு போகும் பாட்டிக்கு துணையாளாக சம்பளத்திற்கு போவது, சீட்டுக்கம்பெனியில் என பல வேலைகள் பார்க்கிறான். ஒரிடத்திலும் நிலையான வேலையில்லாமல தேவராஜ் படும் சிரமங்கள் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது.

நிமித்தம்டிப்ளமோ முடித்து விட்டு நிரந்தர வேலையில்லாமல் அலைந்த நாட்களில் நானும் தேவராஜ் போலத்தான் திரிந்தேன். அதிலும் தேவராஜ் மிளகாய் மில்லில் வேலையை விடுவது போல மதுரையில் இரண்டு பெரிய நிறுவனங்களில் கார்பன் வாடை பிடிக்காமல் கொஞ்ச நாட்களில் வேலையை விட்டிருக்கிறேன். டாக்டர் வீட்டில் தேவராஜ் வேலை பார்த்ததை படித்தபோது நான் ஓரிடத்தில் வேலை பார்த்தபோது பட்ட அசிங்கமும் ஞாபகத்திற்கு வந்தது. இருபது வயதிற்கு மேலாகியும் மனவளர்ச்சி இல்லாத டாக்டர் மகனை தூக்கி சாப்பிட வைக்க, குளிப்பாட்ட உதவியாக தேவராஜ் வேலைக்கு போகிறான். அப்போது அந்தப் பையன் மலம்கழித்து உலப்பிவிட டாக்டர் தேவராஜை திட்டும் இடங்களில் மனது மிகவும் சங்கடமாகிவிட்டது.

டிப்ளமோ படிப்புக்கு ஏற்ற வேலையென ஓரிடத்தில் வேலைக்கு சேர அங்கு நான் சேர்ந்த நேரத்தில் ஒரு நாயையும் புதிதாக வாங்கினார்கள். எனக்கு சிறுவயதிலிருந்தே நாயைக் கண்டாலே கொல நடுங்கிரும். இதில் நாயை சில நேரங்களில் இடம் மாற்றி என்னைக் கட்டச் சொல்வார்கள். பயந்து பயந்து செய்வேன். இடையிடையே அதற்கு சாப்பாடு வாங்கிப் போடும் பணிவேறு. இரவில் உடன் வேலைப்பார்ப்பவர் அதற்கு புரோட்டா வாங்கி சாப்பிடப் போட அது கக்கி வைத்து விட்டது. மறுநாள் காலை அது கக்கி வைத்த இடத்தை கழுவினால் வாடை குடலைப் புடுங்கி எடுத்துவிட்டது. அச்சமயம் சொந்தக்கார பாட்டி செத்துட்டாங்கன்னு ஒரு தகவல் வந்ததும் அப்படியே அந்த வேலைய விட்டுட்டேன். அதுபோல ஏ/சி சர்வீஸ் வேலைக்கு போக உதிரி பாகங்களைக் கழுவ எந்நேரமும் கழிப்பறை போன்ற இடங்களையே நோக்கி போக வேண்டியிருந்தது. மூன்று நாட்களில் வேலையை விட்டு ஓடி வந்துவிட்டேன். இப்படி நான் பல இடங்களில் பட்டபாட்டை நிமித்தம் திரும்பவும் நினைவூட்டிவிட்டது.

தேவராஜிற்கும் அவனது அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம். தண்டமாகத்திரிவது, காதுகேளாமையைச் சுட்டிக் காட்டி எப்போதும் தேவராஜைத் திட்டிக் கொண்டேதானிருப்பார். அவங்கப்பா இறந்தபோதுகூட தேவராஜ் சாமியாராக ஒரு மடத்திலிருப்பார். மற்றவர்கள் வற்புறுத்தலால்தான் இறுதிச் சடங்கிற்கே செல்வார். அந்தளவிற்கு அப்பாவின்மீது தேவராஜிற்கு வெறுப்பு.

தேவராஜிற்கு காதுகேட்க வைப்பதற்காக மருத்துவமனைக்கும், கோயிலுக்கும் அழைத்துச் செல்லும் அம்மா, ஆறுதலாகப் பேசி உதவும் அக்கா, இக்கட்டான சூழல்களிலெல்லாம் உறுதுணையாக உடன்வரும் நண்பனான இராமசுப்பு, ஓவியத்தின் மீதும், புத்தகவாசிப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்திய சுதர்சனம் வாத்தியாரும் அவரது மனைவியான அங்கயற்கண்ணி டீச்சரும், தம் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் கதைகளைப் பகிரும் தாய்வழித்தாத்தாவும் வண்டிப்பேட்டையிலிருக்கும் தம்பையாத் தாத்தாவும், தொழிற்பயிற்சி படிக்கும் நாட்களில் சேட்டைக்காரனாக வரும் ஜோசப்பும்தான் தேவராஜ் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமாக வருபவர்கள்.

நிலையான அன்பிற்கு ஏங்கும் தேவராஜ் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்க்கும் போது ஜோஸ்லினுடன் வரும் காதலை தேவராஜின் அப்பா பிரித்துவிடுகிறார். அதன்பின் ஊட்டியில் சவீதாவுடன் வரும் காதலும் அவளது கல்யாணத்தால் முடிந்து போகிறது. நிரந்தரமான வேலையில்லை, காதுகேளாமை போன்ற காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. இறுதியில் வீடு விற்ற பங்கையும் தேவராஜின் அண்ணன் கொழுந்தியாவைக் கட்டி வைக்கிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி விடுகிறான். இராமசுப்பு தன்னுடன் இணைத்து தொழில் செய்ய வைத்து ஒரு பெண்ணையும் பார்த்து திருமணம் செய்து வைக்கிறான். தன் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு காத்திருக்கும் தேவராஜ் நம்மையும் சலனப்படுத்தி விடுகிறார்.

மண்குதிரைதேவராஜின் தாய்வழித்தாத்தா குயவர். மிக அழகாக குதிரை, மண்பாண்டங்கள் செய்பவர். சேவல் சண்டைக்கு நடுவராகச் செல்பவர். அவர் ஓரிடத்தில் சொல்வார். குதிரை செய்யும்போது மனதில் கோபமோ, கவலையோ இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலை ஒழுங்காக வராது என்று. அதை நானும் பலமுறை குதிரையை வரையும் போது உணர்ந்திருக்கிறேன். குதிரையை கொஞ்சம் கவனமில்லாமல் வரைந்தாலும் கழுதை போலாகிவிடும். தாத்தா வீட்டில் இருந்த நாட்களில் தேவராஜ் அந்த ஊர் கதைகள், மண் சிலைகள் என மகிழ்ச்சியாக இருப்பான். அப்பகுதி நம் எல்லோருடைய தாத்தா-பாட்டி வீட்டு நினைவுகளையும் மீட்டெடுக்கக் கூடியது.

கங்கைக் கரையில் ஹேமாவதி பட்டு நூல் நெய்யும் கதை, வண்டிப்பேட்டைக்கு வருபவர்கள் சொல்லும் திருடன் கதை, குயவரான தாத்தாவின் உதவியாளர் சொல்லும் வைரவன் செட்டியார் கதை, தம்பையாத் தாத்தா சொன்ன ஆண்கிணறு பெண்கிணறு உருவான கதை, ஜோசப்பின் கடற்கரை கிராமத்தில் கிரேசம்மாள் கிழவி சொல்லும் காற்றடிக்காலக்கதையென நாவலில் கிளைக்கதைகளாக வரும் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கிறது.

nimithambooklaunch2நாவலில் காந்தி விருதுநகருக்கு வருவது, நேரு காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், இந்திரா காந்தி காலத்திலிருந்த மிசா தடைச்சட்ட காலம், விருதுநகரில் வண்டிப்பேட்டை உருவான கதை, நாத்திகம் பேசிய திராவிடக் கட்சிக்காரர்கள் என அந்தக் கால நிகழ்வுகளையும்  கதையினூடாக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலினூடாக சில கணங்களே வந்துபோகும் உணவகம் நடத்தும் காந்தி மீது பற்றுக் கொண்டவரான இராஜாமணி இறக்கும்போது நமக்கும் வலிக்கிறது.

நாவலின் களம் விருதுநகர். மதுரையையொட்டிய பகுதியென்பதால் இன்னும் நெருக்கமாகிறது. மதுரையில் நான் பணிபுரியும் பகுதியில் தேவராஜ் கொஞ்சகாலம் சீட்டுக் கம்பெனியில் வேலை பார்ப்பதை வாசித்தபோது மகிழ்வாகயிருந்தது. இந்நாவலை எனக்கு வாசிக்கத் தந்த அண்ணனும் நெருக்கமான நிறைய பகுதிகளைச் சொல்லி சிலாகித்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறுநாவல்களையும் வாசித்துவிட்டேன்ற திருப்தி நிமித்தம் வாசித்ததும் மனதில் அப்பிக் கொண்டது தனிக்கதை. கதைசொல்லியான எஸ்.ராமகிருஷ்ணன் நிமித்தத்தினூடாக நம்மை அவரது எழுத்தில் கிறங்க வைத்து விடுகிறார். வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்.

elephant like iceberg

Vellaiyanaiஆளும்வர்க்கத்தின் வாழ்வே பெரும்பாலும் வரலாறாக பதியப்படும் வேளையில் அடித்தட்டு மக்களின் பிளிறலாக வெள்ளையானை வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்திருக்கிறேன். இம்மூன்றும் தமிழின் மிக முக்கியமான நாவல்கள். அந்த வரிசையில் இப்போது வெள்ளையானையும் சேர்ந்துவிட்டது.

வெள்ளையானை என்றதும் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோயிலில் சிவன் சன்னதியை சுற்றிவரும் போது துதிக்கை நீட்டி முன்னங்கால்களை எட்டெடுத்து வைத்து வெளிவருவது போல மூன்று பக்கமும் இருக்கும் வெள்ளையானை சிற்பங்கள்தான். இந்திரனின் வாகனமான ஐராவதமும் வெள்ளையானைதான். அது சாபம் நீங்கிய தலம் மதுரை. இன்றும் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அடுத்துள்ள ஊர் ஐராவதநல்லூர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், இந்நாவலில் மிகப்பெரிய பனிக்கட்டிதான் வெள்ளை யானையாக உருவகிக்கப்படுகிறது.

ஏய்டன் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பார்வையில் இந்நாவல் விரிகிறது. நாவலின் நாயகரான ஏய்டன் எனக்கு மிகவும் நெருக்கமானவராகத் தோன்றுகிறார். தன்னுடைய செயல்களின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பும் அவர் மேல்தட்டு வர்க்கத்தால் பின் வாங்கிய கதைதான் வெள்ளையானை. நம்பிக்கையோடு பயணித்து சறுக்கல்களை சந்திக்கும் ஏய்டன் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை.

ஏய்டன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர். கடும் பஞ்சம் வந்த போதும் ஊரை விட்டு போகாமல் வாழ்ந்தவர். கல்விகற்று பிரிட்டிஷ் படையில் ஏய்டன் சேர்வது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. ஏய்டன் பிரிட்டிஷ் அதிகாரியானாலும் அவருக்கு எளிய மனிதர்களின் மீதான அன்பு குறையாமல் தன்னால் முடிந்த அளவு சேவை செய்கிறார்.

Ice House Madras 1851-80

மதுவில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அருந்துவதற்காக கப்பலில் வரும் பெரிய ஐஸ்கட்டிகளை ஐஸ்ஹவுஸில் வைத்து உடைத்து எடுத்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள். பெரிய ஐஸ்கட்டி வெள்ளையானை போலத் தெரிகிறது ஏய்டனுக்கு. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பனிகட்டியில் இருட்டு அறையில் பணி புரிகிறார்கள். அடிமட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தலித் மக்கள் மீதான சாதி இந்துக்களின் கொடுமையோடு வெள்ளைக்காரர்களும் அம்மக்களைச் சுரண்டுகிறார்கள். ஐஸ்ஹவுஸில் பணிபுரியும் ஒரு தம்பதி கொல்லப்பட ஏய்டன் அவர்களுக்கு ஆதரவாக போராடும் கதையே வெள்ளையானை.

நாம் வாசித்த சில கவிதைகள் பொருத்தமான சூழலில் நினைவுக்கு வந்து நமக்கு உத்வேகமூட்டும். இந்நாவலின் நாயகனான ஏய்டனோ ஷெல்லிதாசன். அவ்வப்போது ஷெல்லியின் வரிகள் நினைவிற்கு வர ஏய்டன் சிலிர்க்கிறார். எனக்கும் இப்படி அடிக்கடி பாரதி, நகுலன், விக்ரமாதித்யன் கவிதைகள் ஞாபகத்திற்கு வரும்.

இந்நாவலில் வரும் பாதிரியார், மரிஸா மனதில் நிற்கிறார்கள். காத்தவராயன் பாத்திரம் நடைமுறைக்கு மீறியதாகத் தோன்றினாலும் நாவல் முழுக்க பயணித்து நமக்கு பழக்கமாகிவிடுகிறார். ஏய்டன் ஐஸ்ஹவுஸில் இறந்த தொழிலாளியின் வீட்டைத் தேடிப் போகும் போது ஏய்டனுக்கு கொடுக்க ஏதுமில்லாமல் ஒற்றை நுங்கை கொடுக்கும் பாட்டியின் அன்பு மனதை நிறைக்கிறது.

பஞ்சத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக மரிப்பதை ஏய்டன் காணச் செல்வதை வாசிக்கும் போது நெஞ்சு கனத்துப் போகிறது. எப்போதும் கொடிய பஞ்சங்களில் எல்லாம் எளிய மக்களே இறந்து போகிறார்கள். ‘தொர’, ‘தொர’ என்ற அந்தப் பிஞ்சுக்குரல்கள் நம்மையும் கரைத்துவிடுகிறது. கிராமங்களில் எல்லோருக்கும் உணவுஉற்பத்தி செய்யும் விவசாயத்தொழிலாளர்கள் சாலைகளில் சாவது எத்தனை கொடுமை?

பஞ்சம் குறித்த அறிக்கைகளை எல்லாம் அரசு வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு அதை தயாரித்துக் கொடுத்த ஏய்டனை வேறு இடத்திற்கு மாற்றுகிறது. மேலும், அந்த அறிக்கையை வைத்து எளிய மக்களை சுரண்ட பெரிய கால்வாய் வெட்டவும் திட்டமிடுகிறார்கள். நாவலில் ஓரிடத்தில் அரசு குறித்து ஏய்டன் சொல்லும் வரிகள் எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

ஆட்சி என்பது என்ன? அது மேலோட்டமாக எவ்வளவுதான் சமத்துவம், நீதி, கருணை என்றெல்லாம் பேசினாலும் உள்ளே இருப்பது சுரண்டல்தான். அப்பட்டமான நேரடியான சுரண்டல். அந்தச்சுரண்டலைக் குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்தால்மட்டும்தான் நான் நல்ல ஆட்சியாளனாக முடியும்.

ஐஸ்ஹவுஸில் அடிமட்டத் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் சலுகைகளும், ஊதியஉயர்வும் தர அமெரிக்க நிர்வாகத்தலைவர் முன்வரும்போது இங்குள்ள உயர்சாதி இந்துக்கள் அம்மக்களுக்கு சலுகைகள் தருவது பின் தங்களைப் பாதிக்கும் எனத் தடுப்பது எல்லாம் இன்றைக்கும் நிலவுகின்ற காட்சிகள். அன்பே சிவத்தில் நாசர் சொல்லும் வரிகள் நினைவிற்கு வந்தது பத்துபத்து ரூபாயா சம்பளம் ஏத்துனா நம்ப பேரனுங்க நாளைக்கு பிச்சை எடுக்க வேண்டி வரும். சம்பளம் எப்பயும் 910தான்னு சொல்லுவார். இன்றைக்கும் அரசு ஊழியரல்லாத அலுவலர்களும், முறைசாராத் தொழிலாளர்களும் படும்பாடு சொல்லிமாளாது.

அடித்தட்டு மக்களின் இந்தப் போராட்டம் பெரும் மாற்றமாக அமையுமென ஏய்டன் எண்ணி மகிழும்போதே ஏமாற்றமாக மாற்றிய ஆதிக்க சாதிவர்க்கங்களின் சூழ்ச்சி இன்னமும் தொடரத்தான் செய்கிறது. சகமனிதனை மனிதராக நினைக்கிற பண்பு அழிவது கொடுமை.

Vellaiyanai Inverted

வாசிப்பதற்கு சுகமாகயிருக்கிறது எழுத்து பதிப்பகத்தின் அச்சாக்கம். முகப்போவியம் மற்றும் உள்ளட்டை ஓவியங்களை இராமச்சந்திரன் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார். 1878 ஆண்டுகால பஞ்சத்தை நினைவூட்டும் கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது இதுபோன்ற சூழல் இனி வரவே கூடாது என்ற எண்ணம் எழுகிறது.

ஜெயமோகனின் வெள்ளையானை தமிழக வரலாற்றில் 1878ல் நடந்த பஞ்சத்தையும் அதில் மாண்ட அடித்தட்டு மக்களையும், ஐஸ்ஹவுஸ் போராட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஆங்கிலேய அதிகாரிகளிலும், பாதிரிகளிலும் ஒருசிலர் தங்கள் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜெயமோகனின் இந்நாவல் மிக அருமை. ஜெயமோகன் நாவல்களின் இரசிகனான எனக்கு வெள்ளையானையும் மிகவும் பிடித்துவிட்டது. நம்மவர் கமல்ஹாசனும் ஜெயமோகன் எழுத்தின் தீவிர வாசகர். நீங்களும் வெள்ளையானையை வாசித்துப் பாருங்கள்.