Posts Tagged ‘பகிர்வு’

நினைவில் காடுள்ள மிருகத்தை

எளிதாகப் பழக்க முடியாது.  

என் நினைவில்

காடுகள் இருக்கின்றன!

– சச்சிதானந்தன்

2012ல் உலகம் அழிந்துவிடும் என்ற பெரும் வதந்தியில் தொடங்கிய இந்த வருடம் எனக்கு நன்றாகவே அமைந்தது. கொண்டாட்டமான நிகழ்வுகள், மறக்கமுடியாத பயணங்கள், வாசிக்க நல்ல புத்தகங்கள் என பகிர்ந்து கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளன. நாம் ஏன் காயங்களையும், கசடுகளையும் சுமந்து கொண்டு அலைய வேண்டும்?. கம்பாநதியில் வண்ணநிலவன் சொன்ன வரிகள் ஞாபகம் வருகிறது.

நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது. எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன.               

– வண்ணநிலவன்

விகடன் தந்த பரிசு

vikatan

ஆனந்தவிகடன் வரவேற்பறையில் இத்தளம் குறித்த அறிமுகம் வந்தது என்னை பெருமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதுவும் இந்த ஆண்டின்  முதல் இதழாக வந்த விகடனில் எனும்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மதுரேய்.. எனத் தலைப்பிட்டு மதுரை மீது தீராக்காதல் கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள் என விகடனில் வந்த வரிகள், பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து படித்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை விட பொக்கிஷம். என் விகடன் வலையோசைப் பகுதியிலும் மே மாதம் வந்தது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

வாசிப்புத் திருவிழா

thiruparankunram

ஒவ்வொரு வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டே தொடங்குவேன். இந்தாண்டு மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ வாசித்தேன். ஜெயமோகனின் ‘காடு’, போதிசத்வமைத்ரேயின் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, யுவன்சந்திரசேகரின் ‘மணற்கேணி’, நாஞ்சில்நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘சூடிய பூ சூடற்க’, ‘கான்சாகிப்’, வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பான தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’, கடிதத் தொகுப்பான ‘சில இறகுகள் சில பறவைகள்’, மா.கிருஷ்ணனின் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ இசையின் ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ என கொஞ்ச புத்தகங்கள்தான் வாசிக்க முடிந்தது. சங்க இலக்கிய பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான ந.முருகேசபாண்டியனின் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ மற்றும் ஜோ.டி.குருஸூன் ‘கொற்கை’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பசுமைநடை

greenwalk

நினைத்துப்பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. பசுமைநடை குழுவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியபின் இந்தாண்டு மதுரையிலுள்ள தொன்மையான இடங்களான யானைமலை, சமணமலை, விக்கிரமங்கலம், மாடக்குளம் கண்மாய், கபாலிமலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை பெயர் பொறித்த தமிழ்பிராமிக்கல்வெட்டுள்ள அழகர்மலை கிடாரிப்பட்டி குன்று, அணைப்பட்டி சித்தர்மலையோடு மதுரைக்கு வெளியேயும் கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம், கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், திருமெய்யம் என புதுக்கோட்டை வரை நீள்கிறது பசுமைநடை. தனியே இவ்வளவு இடங்களுக்கு பயணித்திருக்க முடியுமா என்றால் சந்தேகந்தான். இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், பசுமைநடை மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றதில் பெருமகிழ்வடைகிறேன்.

kadalநெய்தல் சுவடுகள்

திருச்செந்தூர்க் கடலில் நீராடும் வாய்ப்பு இந்தாண்டு இருமுறை கிட்டியது.

நவம்பர்மாத மழைக்கால மாலையொன்றில் சென்னை மெரீனா கடற்கரையில் நீலவானையும், நீண்ட கடலையும் பார்த்துக் கொண்டே நின்றது நினைவில் நிற்கிறது.

அடுத்தாண்டு கொற்கை துறைமுகத்தை போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் துளிர்த்துள்ளது.

அடுத்த ஆண்டு மலைகளோடு கடலையும் நோக்கி பயணிக்க வேண்டும்.

இயற்கை அருளட்டும்.

மதுரையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்

vishwaroopam

இளமையிலிருந்தே கமல்ஹாசனின் மீதான அன்பு அதிகம். சமீபத்தில் மதுரையில் விஸ்வரூபம் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் வருவதாய் அறிந்ததும் அன்று விடுப்பெடுத்து அவரைக் காணக் கிளம்பினேன். நானும், சகோதரனும் சென்றோம். அந்தத் திடலில் நுழைந்ததும் ஒரே கொண்டாட்டமாகியது. மூத்த இரசிகர்களின் ஆட்டம் என்னை மேலும் உற்சாகமாக்கியது. அரங்கிற்குள் கமல்ஹாசன் வரும்போது அருகில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை எழுத்தில் சொல்லிவிட முடியாது. கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே’ பாடலை சங்கர் மகாதேவனோடு இணைந்து மிக அற்புதமாக பாடினார். மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தேன். தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவரின் விஸ்வரூபம் 2013ல் வெற்றி வாகை சூடும்.

http://www.youtube.com/watch?v=C8IjeOdpAng

சித்திரக்காரன்

madurai

மதுரையை சித்திரமாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்தாண்டு சித்திரவீதிக்காரனின் ‘சித்திர’வதைகள் அதிகரிக்கும். சித்திரவீதியில் வந்து தடம் பதித்து சென்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம்போல இந்தாண்டும் முறையான திட்டமிடலில்லாமல் காலத்தை நிறைய வீணடித்துவிட்டேன். அடுத்தாண்டு அவைகளை நீக்கி இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை கொண்டாட மதுரையும், தமிழும் அருளட்டும்.

எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம்தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.   

– கமல்ஹாசன்

நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் பல மனிதர்களில் சிலரை பார்த்தவுடனே எந்த காரணமும் இல்லாமலே நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அப்படித்தான், கமல்ஹாசன் அவர்களைப் பார்த்த முதல் நாளே மிகவும் பிடித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் மீதான அன்பு நடிகர், ரசிகர் என்பதையும் தாண்டிப் புனிதமானது. அபூர்வசகோதரர்களில் சர்க்கஸ் கலைஞனாக வரும் ‘அப்பு’ கமலை இளம்வயதில் மிகவும் பிடித்தது. ஒலியும் ஒளியும் போடும்போதெல்லாம் அடுத்த பாட்டு கமல் பாட்டாக இருக்க வேண்டுமென்று வேண்டுவேன். எங்கப்பா, சித்தப்பா மற்றும் சகோதரர்கள் எனப்பலரும் எங்கள் வீட்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் கமல்ஹாசனும் ஒருவர்.

கமல்ஹாசனும் சித்திரவீதிக்காரர்தான். அவருக்குச் சித்திரங்களின் மீது விருப்பம் அதிகம் என்பதை அவரது படங்களிலேயே நாம் காணலாம். அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் ஓவியராகவே வருவார். அந்தப்படத்தில் மதன் வரும் காட்சியில் மறைந்த ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நடிப்பதாக இருந்ததாம். ராஜபார்வையில் அந்திமழை பொழிகிறது பாடலில் மாதவி மரத்துக்கருகில் நிற்கும் கமல்ஹாசனை வரைந்து கொண்டிருப்பார். அப்படியே ஓவியத்திலிருந்து கமல்ஹாசன் நடந்து வருவார். அதேபோல, அபூர்வசகோதரர்களில் அண்ணாத்தே ஆடுறார் பாட்டு தொடக்கத்தின்போது ஜனகராஜின் கையிலுள்ள கமல்ஹாசன் ஓவியத்திலிருந்து உருவமாக மாறிவருவார். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு ஓவியர் வருவார். அவர் அப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரம். காக்கிச்சட்டை படத்தில் கதாநாயகி அம்பிகா ஓவியராக வருவார். அந்தப்படத்தில் கமல்ஹாசனை மிக அருமையாக பல விதங்களில் வரைந்திருப்பார். விருமாண்டி படத்தில் ஒரு ஓவியர் வருவார். படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் சித்திரமாக வரைந்துகொண்டேயிருப்பார். கமல் கிணற்றில் அபிராமியுடன் இருக்கும் காதல்காட்சி முதல் நீதிமன்றத்தில் அடிக்க ஓடிவரும் காட்சி வரை நிறையக்காட்சிகளை வரைந்து பதிவு செய்து கொண்டேயிருப்பார். ஆளவந்தான் படத்தில் நந்தகுமார் கதாபாத்திரம் ஓரிரு இடங்களில் கார்ட்டூனாக காட்டியிருப்பார்கள். அதற்காக நிறைய ஓவியங்களை வரைந்திருப்பார்கள். உன்னைப்போல் ஒருவனில் கமல்ஹாசன் சாயல்களை சொல்ல ஒருவர் கணினியில் வரைந்து கொடுப்பார். அதே போல இந்தியனிலும் கிழவர் கமல்ஹாசனைப் படமாக வரைந்து மிகப்பெரிய பதாகையாக வைத்திருப்பார்கள். பஞ்சதந்திரத்தில் ஒரு நீர்வண்ண ஓவியப் புத்தகம் ஒன்றிலிருந்து கதை பின்னோக்கிப் போகும். சிம்ரன் குழந்தைக்கு கமலின் முந்தைய வாழ்க்கையைப் படத்தைக் காண்பித்துக் கதை சொல்லிக்கொண்டே உணவு கொடுத்துக்கொண்டிருப்பார். மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் பாடலில் கமலும் அவரது காதலியும் சுவற்றில் ஓவியம் வரைவது போன்ற காட்சி வரும். அதுவும் அப்பாடல் பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் மிகவும் வித்தியாசமாக எடுத்திருப்பார்கள். ஹேராமில் கூட ஆதிமூலத்தின் ஓவியங்களைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். இப்படித் தன் படங்களில் ஓவியங்களை, ஓவியர்களை கமல்ஹாசன் அதிகம் காட்டியிருப்பார்.

கமல்ஹாசனை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்று விரும்பினேன். என் விருப்பத்தை எப்பொழுதும் மதுரை நிறைவேற்றிவிடும். நான்மாடக்கூடலிலேயே கமல்ஹாசன் தனது சண்டியர் படத்துவக்கவிழாவைத் துவங்கினார். சண்டியர் படத்துவக்கவிழாவிற்கு மறுநாள் எனக்கு இயற்பியல் முழுஆண்டுத்தேர்வு. ஆனாலும், கமல்ஹாசனைப் பார்த்துவிட்டு, தேர்வன்று அதிகாலை அழகரையும் பூப்பல்லக்கில் பார்த்துவிட்டுப்போய்த் தேர்வெழுதித் தேறினேன். இரண்டு அழகர்களைக் காணும் வாய்ப்பைத் தந்த அந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவை மறக்க முடியாது.  அதற்குப் பிறகு நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு இராஜாமுத்தையா மன்றத்தருகில் சிலை திறந்த அன்றும் கமல்ஹாசனை மற்றொருமுறை காணும் வாய்ப்பை மதுரை மீண்டும் பெற்றுத் தந்தது. கமல்ஹாசனும் நம்ம தென்பாண்டிநாட்டான்தானே.

‘தமிழ்வையை’யின் கரையிலுள்ள இராமநாதபுரத்தில் பிறந்த காரணத்தால் கமல்ஹாசனுக்கு தமிழ் மீது பற்று சற்று அதிகம். நடிகராயிருந்த போதும் மய்யம் எனும் இலக்கியப்பத்திரிக்கை நடத்தும் அளவு தமிழ் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பும் நடிகர் கமல்ஹாசன்தான். ஒரு நேர்காணலில் தொ.பரமசிவன் அய்யாவை சந்தித்ததை மிகவும் முக்கியமாக குறிப்பிடுகிறார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா கமல்ஹாசனுடைய நண்பர். மேலும், சுந்தர ராமசாமியையும் ஒருமுறை நேரில்போய் சந்தித்திருக்கிறார். ஜெயகாந்தன், தொ.பரமசிவன், கவிஞர் புவியரசு, ஞானசம்பந்தன், மனுஷ்யபுத்திரன், ஞானக்கூத்தன், ரா.கி.ரங்கராஜன், பாலகுமாரன், நீலபத்மநாபன், பிரளயன், மதன் எனப் பலருடனும் நட்புடன் இருக்கிறார். கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு கமல்ஹாசன் தன் நற்பணிமன்றத்தின் மூலமாக விழா எடுத்தார். அன்று கமல்ஹாசன் ஜெயமோகனின் கொற்றவையை பலமுறை வாசித்ததாக கூறினார். அதைப் படித்ததும் வியப்படைந்தேன். கமல்ஹாசனின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது தொ.பரமசிவன் அய்யா கமல்ஹாசன் குறித்து பேசிய பொழுது

கமல் சிறந்த வாசகர். மருதநாயகம் படத்திற்காக சில புத்தகங்களை வாசிக்கச்சொல்லி நான் அவரிடம் படிக்க பரிந்துரைத்த போது அதையெல்லாம் தான் வாசித்துவிட்டதாகக் கூறி மற்ற மொழிகளிலும் வந்த சில புத்தகங்களை எல்லாம் வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஆய்வு மாணவன் போன்ற அவரது உழைப்பைக் கண்டு வியந்தேன். மேலும், கமல்ஹாசன் கோணங்கி வரை வாசிக்கிறார். இப்ப உள்ள பல வாத்தியார்களுக்கு கோணங்கி யாருன்னே தெரியாது. அதனால் கமல் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்யாதது ஒருவகையில் நல்லதுதான். அப்படியில்லையென்றால் இந்த அளவு வாசிப்பு அவருக்கு கிட்டியிருக்காது

என்றார். கமல்ஹாசனின் இலக்கிய ஆர்வத்திற்குச் சான்றாக தொ.பரமசிவன் அய்யா சொன்ன இந்த ஒரு விசயம் போதும். கமல்ஹாசன் நடித்த அவள் அப்படித்தான் பட வசனகர்த்தாக்களில் வண்ணநிலவனும் ஒருவர்.

கமல் ஒருமுறை விகடனில் தன் வீடு குறித்துப் பேசும் பொழுது அவரது நூலகம் குறித்துச் சொன்னது:

என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைப் படிக்கிறது, எழுதறது எல்லாமே இங்கேதான்! ஷேக்ஸ்பியர், கம்பன், சித்தர்கள், காளிதாசர், பாரதி, ஜெயகாந்தன், லா.ச.ரா, மில்டன், கீட்ஸ், தேவதச்சன், வண்ணதாசன், தொ.பரமசிவம் எல்லோரும் இந்த ரூம்லதான் இருக்காங்க.

கமல்ஹாசனது திரைக்கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான நாவல்கள் எனலாம். உதாரணமாக, மகாநதி, அன்பேசிவம், தசாவதாரம்.

 விஜய் தொலைக்காட்சி மதுரை திருமலைநாயக்கர் மகாலில் கமலும் தமிழும் என்ற நிகழ்ச்சி நடத்தியபோது தமிழின் இலக்கிய ஆளுமைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு எடுத்த முக்கியமானதொரு விழா எனலாம். அன்று எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பிரளயன், ஞானசம்பந்தன், சிவசங்கரி, ஷாஜி, இரா.முருகன், கபிலன், சண்முகராஜா, இயக்குனர்கள் சசிக்குமார், சேரன், சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு சிறந்த கலைஞன் மற்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கலைஞானி கமல்ஹாசனும் அப்படித்தான் மற்ற கலைகளின் மீது விருப்பம் கொண்டவர். வீதிநாடகம் குறித்த கமல்ஹாசனின் விருப்பத்தினால்தான் அன்பே சிவம் படத்தில் வரும் நாட்டுக்கொருசேதி சொல்ல என்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை வீதிநாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரளயன் அவர்களைக் கொண்டு எடுத்திருப்பார். அந்த படத்தில் பிரளயனும் ஒரு காட்சியில் வருவார். பிரளயனின் வீதிநாடகங்களை இரண்டுமுறை மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது பெரும்பாக்கியம் என நினைக்கிறேன். தசாவதாரத்தில் தோற்பாவைக்கூத்து, அன்பேசிவத்தில் வீதிநாடகம், விருமாண்டியில் தேவராட்டம் (அதைச் சரியாக கம்பளநாயக்கர் வீட்டுவிழாக்களில் நடைபெறும் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்), அபூர்வசகோதரர்களில் புலியாட்டம், தேவர்மகனில் தப்பாட்டம், சிலம்பாட்டம், சலங்கைஒலியில் பரதக்கலைஞனாக, அபூர்வராகங்களில் மிருதங்கக்கலைஞனாக என தன் படங்களில் மற்ற கலைகளையும் காட்டியிருக்கிறார். புலியாட்டம் என்று ஒரு புத்தகம் வாசித்த போது அதில் அந்நூலாசிரியர் திரைப்படத்தில் புலியாட்டத்தை சிறப்பாக காட்டியது அபூர்வசகோதரர்களில்தான் என்கிறார்.

கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் ஓரிரு காட்சிகளில் கமல் வரும் படங்கள்கூட எனக்குப் பிடிக்கும். உதாரணத்திற்கு தில்லுமுல்லு, மகளிர் மட்டும், நளதமயந்தி. மறக்க முடியாத படங்கள் என்றால் தனிப்பதிவே எழுத வேண்டிவரும். அபூர்வசகோதரர்கள், உன்னால்முடியும் தம்பி, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, உயர்ந்த உள்ளம், சத்யா, குணா, தெனாலி, அன்பேசிவம், விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களில் சில காட்சிகளில் ஒன்றிப்போய் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன். அதுவும் வேலை கிடைக்காத நாளில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் பார்த்துக்கொண்டிருந்த போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வி.கே.ராமசாமி இறந்த பிறகு ஒரு கடையில் கணக்குபிள்ளை இறந்துட்டாருன்னு சொல்லும் காட்சி, பழம் விற்கும் பாட்டி இரண்டு ரூபாய்க்கு மூணுபழம் எனும்போது கமல் மூணுரூபாய்க்கு இரண்டுபழம் கேட்கும் காட்சியில் அந்தப்பாட்டியின் உயர்ந்த உள்ளம், கழிவுகளை அள்ளுவதற்காகத்தான் குடித்ததாய் அம்பிகாவிடம் புலம்பும் காட்சி எல்லாம் பார்த்து அழுதபோது சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனாலும், அதுபோல என்னை நெகிழ வைத்த காட்சிகள் கமல்ஹாசன் படங்களில் அதிகம். ரேடியோ மிர்ச்சியில் கமல்ஹாசன் பேசுவதை அடிக்கடி போடுவார்கள். அதில் வலி குறித்து பேசும் போது ‘வலிதான் உயிர் வாழ்வதற்கான அத்தாட்சி. NO PAIN NO GAIN’ என்று கூறிவிட்டு ‘வலியுடன் கமல்ஹாசன்’ என்பார். அதை கேட்டதும் எனக்கு மனசு ரொம்ப வலிக்கும்.

அன்பே சிவம்’ படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு குடையை வைத்து சண்டையிடும் காட்சி கமல்ஹாசனின் படங்களில் எனக்கு பிடித்த சண்டைக்காட்சி. அந்தப்படத்தில் இறுதியில் வரும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவைதான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.

கமல்ஹாசன் படங்களில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அதிலும் கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடிய சில பாடல்களை மற்றவர்கள் பாடினால் அந்தளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். உதாரணமாக ‘நினைவோ ஒரு பறவை, விக்ரம், கடவுள்பாதி மிருகம்பாதி, ஆழ்வார்பேட்டை ஆளுடா, சுந்தரிநீயும் சுந்தரன்ஞானும், கண்மணி அன்போடு, தென்பாண்டி சீமையிலே, ராஜா கையவச்சா, உன்னவிட,  தகுடுதத்தம், முத்தே முத்தம்மா’. அதே போல பாடல்களிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். வசனம் பாடலினூடாக வருவது, வட்டார வழக்கில் பேசுவது எல்லாம் கமல்ஹாசனின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மகாநதியில் வரும் ‘தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது’ என்னும் பாடலுக்கு முன் பாரதியின் ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை கமல்ஹாசன் வாசிப்பார். அதைத்தான் எனது அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன். மேலும், அந்தப்பாடலின் இறுதியில் வரும் வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை.

அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி!

எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வியென்பதை ஏற்பதில்லையடி!

கமல்ஹாசனின் துள்ளலான பாடல்களை உற்சாகமான வேளைகளில் பாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டும் போது பாடிக்கொண்டே ஓட்டுவது மகிழ்வான விசயம். ‘மாருகோ மாருகோ, பூப்போட்டதாவணி, அண்ணாத்தே ஆடுறார், ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வானிலே தேனிலா, பேரைச்சொல்லவா’ போன்ற பாட்டுகளை கேட்டாலோ அல்லது பாடினாலோ தானாகவே தோள்கள் அசைய, மெல்லிய ஆட்டம் உடலில் பரவத்தொடங்கும். அவரைப் போல நடனமாட வேண்டும் என்பது எனது இளமைக்கால விருப்பங்களுள் ஒன்று. அப்பொழுதெல்லாம் தனியாக கண்ணாடிமுன் அல்லது விளக்கொளியில் என் நிழலைப் பார்த்து ஆடிக்கொண்டிருப்பேன். கமல்ஹாசன் படங்களில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் தனித்துவமானவை. கதாநாயகர்களில் கமலும், ரஜினியும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மைக்கேல் மதனகாமராசன், தெனாலி, அவ்வைசண்முகி, பஞ்சதந்திரம், பம்மல். K. சம்பந்தம், வசூல்ராஜா எல்லாம் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும். கமல்ஹாசன் – கிரேஸிமோகன்  கூட்டணி என்றால் எல்லாத்தொகுதிகளிலும் மகிழ்ச்சிதான்.

முன்பு தூர்தர்ஷனில் அலைவரிசை பிரச்சனை ஏற்படும் பொழுது குறுக்கும் மறுக்குமாக கட்டங்கள் தெரிய ‘கொய்ங்ங்’ என்று தடங்கல் ஒலி கேட்கும். சண்டியர் படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஏற்பட்ட தடங்கலை, படத்தின் பெயர் மாற்றியதால் பேர் போடும் போது அது போல கட்டங்களில் பெயர்கள் மட்டும் சாதாரணமாக வர பின்னால் இளையராஜாவின் இசையில் பிளிறல் போன்ற ஒலி பின்னனியில் ஒலித்துக்கொண்டிருக்கும். தனது கருத்தை நுட்பமாக பதிவு செய்திருப்பார்.

‘நடிகர்களுள் ஒரு நாயகன்’ என்று எழுத்தாளர் வாஸந்தி சொன்னது கமல்ஹாசனின் மனிதநேய குணத்திற்கு மிகவும் பொருந்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் நடிகர்களில் முதன் முதலில் கண்தானம், இரத்ததானம் என்பதையும் கடந்து உடல்தானம் செய்து அதன் மீதான கவனத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாபர் மசூதி இடித்த பொழுது அதைக்கண்டித்து திரைப்படத்துறையிலிருந்து எதிரொலித்த முதல்குரல் கமல்ஹாசனுடையது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சனை வந்தபோது தொழிலாளர் பக்கம் நின்றவர் கமல்ஹாசன். ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றியவர்.

கமல்ஹாசனைக் குறித்த செய்திகள், கமல்ஹாசனின் நேர்காணல்கள், கமல்ஹாசன் நிழற்படங்கள் என எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். கமல்ஹாசனைக் குறித்து வந்த புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கி விடுவேன். கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற விசயம் என்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் குறித்து எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் போட்டாலும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பும் சகோதரர்கள், என்னைப் பார்க்கும் போது கமல் குறித்து பேசும் நண்பர்கள், விருமாண்டி வந்த சமயம் முழுபக்க ஃப்ளோஅப் வந்ததை பார்த்ததும் எனக்கு எடுத்து வர நினைத்த ஆசிரியர் என கமல்ஹாசன் மீதான எனது அன்பை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பதிவில் உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றிகள் பல.

என்னுடைய வாசிப்பு மேம்பட கமல்ஹாசனும் ஒரு காரணம். அவருடைய நல்லசிவம் (அன்பேசிவம்), வின்சென்ட் பூவராகன் (தசாவதாரம்), உதயமூர்த்தி (உன்னால் முடியும் தம்பி) போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் வாழ்வில் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ நடிகர் என்பதோடு இல்லாமல் என்னுடைய அபூர்வ சகோதரராகவே நினைக்கிறேன். பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானையும், கடலும் மட்டுமல்ல கமலும்தான். அவரை குறித்து நினைத்தாலே இனிக்கும், பார்த்தால் பசி தீரும். உயர்ந்த உள்ளம், வெற்றிவிழா நாயகன், அன்பால் ஆளவந்த அபூர்வசகோதரர், எனக்குள்ஒருவன் மருதநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்து இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி. அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் சித்திரவீதிக்காரன்.