Posts Tagged ‘வைகை’

greenwalkers

மலைக்க வைக்குமளவு மழை இந்தாண்டில் மதுரையில் பெய்யாவிட்டாலும் முல்லைப்பெரியாறு பகுதியிலும், மூலவைகைப் பகுதியிலும் மழை பெய்து வைகை அணை ஓரளவு நிரம்பி அவ்வப்போது வைகையாற்றில் நீரோடுவதைப் பார்க்க முடிந்தது. தெப்பக்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம் பசுமைநடை செல்லும் போது வைகையை ஆற்றங்கரைச்சாலைகளிலும், பாலத்தின் மீதிருந்தும் பார்த்துக் கொண்டே சென்றேன். மீனாட்சிபுரம் பசுமைநடையின் போது அடுத்தடுத்த நடைகள் மருதநிலங்களினூடாக அமைந்த மலைகளை நோக்கியே இருக்குமென பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அறிவித்தார். வைகையை மலைமீதிருந்து பார்க்க சித்தர்மலை சென்றால் நன்றாகயிருக்குமென்று மனதுக்குள் தோன்றிய ஓரிரு நாட்களில் அடுத்தநடை சித்தர்மலையில் என குறுந்தகவல் வந்தது.

sithermalai1

வைகையில் கொஞ்சமாய் நீரோட்டம் இருந்ததை வேடிக்கை பார்த்தபடி அதிகாலைப்பனியினூடாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நோக்கி சகோதரர்கள் செல்லப்பா, பிரசன்னாவுடன் சென்றேன். கூதலான மார்கழியில் நீளமான இராத்திரியை வரவேற்க போர்வைகள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் முன்பாக நின்றிருந்த குழுவினருடன் இணைந்து கொங்கர்புளியங்குளம், செக்காணூரணி, விக்கிரமங்கலம், சொக்கன்கோவில்பட்டி, பெருமாள்பட்டி, பானாமூப்பன்பட்டி, போலக்காபட்டி வழியாக கல்யாணிப்பட்டி சென்று சித்தர்மலை அடிவாரத்தை அடைந்தோம். பெரியார்நிலையத்திலிருந்து கல்யாணிப்பட்டி தோராயமாக 40 கிலோமீட்டர்கள் வரும்.

பூஞ்சோலைகளுக்கு நடுவே சாலைகள். மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, பிச்சிப்பூ, கோழிக்கொண்டை என வழிநெடுகப் பூந்தோட்டங்கள். வெங்காயம், வெண்டைக்காய், நெல் மற்றும் பயறு வகைகளையும் இப்பகுதிகளில் பயிர் செய்கின்றனர். சமணக்கல்வெட்டுகள் உள்ள உண்டாங்கல்லு மலையையொட்டி உள்ள குளத்தில் நீர் நிறைந்திருந்தது. வழியில் கால்வாய்களில் நீர் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. காலை நேரங்களில் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் காண முடிந்தது. வழியில் பார்த்த அந்திமந்தாரை வண்ணத்தில் இருந்த சுடுகாடு கட்டிடம் மிகவும் ஈர்த்தது. ஆனாலும், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது.

சுடுகாடு

இருநூறுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். எல்லோரும் உற்சாகமாக மலையேறத்தொடங்கினோம். கொஞ்சம் பெரிய மலை. ஏற்கனவே சென்ற மலையென்பதால் சிரமமாகயில்லை. கொஞ்சதூரம் படிகள்; அதன்பின் பாறைகள். அதைப்பிடித்து ஏற இரும்புக்கம்பியிருக்கிறது. நரந்தம்புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. பறித்து நுகர்ந்து பார்த்தால் எலுமிச்சை நறுமணம். அதனால்தான் ஆங்கிலத்தில் லெமன்கிராஸ் என்கிறார்கள். மனதிற்கு புத்துணர்வு ஊட்டக்கூடியதாம். தேநீராக இதை அருந்தலாமாம். செதுக்கப்பட்ட சமணப்படுகையில் போய் படுத்தேன். வியர்வை பொங்கி வழிந்தது. எழுத்தாளர் அர்ஷியா அவர்களுடன் பாறைகளில் கிறுக்கியிருந்த பெயர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பெயிண்ட் டப்பா சகிதம் மலைகளுக்கு வந்து தங்கள் வருகைப் பதிவு செய்யும் காதல்கிறுக்கர்கள் நம்ம நாட்டில் அதிகம்.

sithermalai

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா சித்தர்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களைக் கூறினார். மேலும், சேரநாட்டிற்கும் பாண்டியநாட்டிற்குமான பெருவழிப்பாதை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் யாத்ரீகன் நிகழ்ச்சியில் ‘கண்ணகி சென்ற பாதை’ குறித்து பேசியதைக் குறிப்பிட்டார். அக்கதையில் உள்ளபடி பார்த்தால் கண்ணகி இவ்வழியாகத்தான் சேரநாட்டிற்குள் சென்றிருக்க முடியும். அக்காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதையில் இம்மலை அமைந்திருக்கிறது என்றார்.

map

பசுமைநடைக்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த விஜயகுமார் அவர்களை பல்மருத்துவர் ராஜன்னா அறிமுகம் செய்து வைத்தார். POETRY IN STONE எனும் தளத்தில் தொடர்ந்து சிலைகள், கோயில்கள் மற்றும் நம் கலைச்செல்வங்கள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்து வருகிறார். மேலும், சிலைத் திருட்டை தடுத்து நம் வரலாற்றுப் பொக்கிஷங்களை காக்கும் பணியையும் செய்து வருகிறார். இத்தளத்தை முன்பு தொடர்ந்து வாசித்திருக்கிறேன். படங்கள் மிகவும் தெளிவாகவும், அந்த இடத்தின் வரலாறு மிக எளிமையாகவும் பதிவு செய்திருப்பார்.

விஜயகுமார் அவர்கள் பசுமைநடை குழுவினருடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். “பசுமைநடைக்கு பத்து இருபது பேர் வருவார்களென்று நினைத்தேன். ஆனால், இங்கு கடலே திரண்டிருக்கிறது. மதுரையில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். நான் சிங்கையிலே ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை எங்க அலுவலக வாசலில் சாலைப்பணி செய்யும் நம்மாள் ஒருவர் அந்த ஊர்க்கார மேலதிகாரியிடம் உடைந்த ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மேலதிகாரி புரிந்தாலும் புரியாத மாதிரி நடித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் என்ன விசயம் என்று கேட்டேன். அவர் இரண்டு சீருடைகள் கொடுத்திருக்காங்க. ஒன்றை மாற்றி ஒன்றை துவைத்துப் போட்டால் காயமாட்டேங்குது. அதனால் இன்னொரு உடுப்புக்கேட்டேன் என்றார். நான் அந்த மேலதிகாரியிடம் ஆங்கிலத்தில் கூறினேன். உடனே, உனக்கு எப்படி அவன் பேசுவது புரிந்தது என்றார். நானும் அந்த ஊர்க்காரர்தான் என்றேன். அவன் ஏளனமாகப் பார்ப்பது போலத்தெரிந்தது. நான் அந்த மேலதிகாரியிடம் சொன்னேன். எங்க ஊர் 2500 ஆண்டுப் பழமையான ஊர் மட்டுமல்ல, தொடர்ந்து உயிர்ப்புடன் வாழும் தன்மையுடையது என்றேன். அது மேலதிகாரிக்கு தெரியாதது வருத்தமல்ல. நம்மாட்களுக்கே தெரியவில்லையே அதுதான் வருத்தமாக உள்ளது.

திருடுறாங்க. நம்மாட்களே நம்ம ஊர் கலைச்செல்வங்களை திருடி பகிரங்கமா ஏலத்துல விற்கிறாங்க. நாம பார்த்தாலும் இந்தியாக்காரன்தானே அதன் மதிப்புத் தெரியாது என நம்முன்னே விக்குறாங்க. இதையெல்லாம் தடுக்கணும். நம்ம ஆட்கள் முகநூலில் தமிழன் என பல பொய்யான தகவல்கெல்லாம் நெஞ்சை நிமிர்த்துறாங்க. ஆனால், உண்மையான வரலாறு எல்லோருக்கும் தெரியவில்லை. நாம் கோயிலில் உள்ளதை சிலைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவற்றை திருமேனியென நம் முன்னோர்கள் கொண்டாடியிருக்காங்க. காலையில் எழுப்பி குளிப்பாட்டி உணவு கொடுத்து இரவு பாட்டுப்பாடி தூங்க வைத்திருக்காங்க. நாம் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம்.

இந்த மலையில் பாருங்க. பெயிண்ட் கொண்டு வந்து இந்த இடத்தின் அருமை தெரியாமல் கிறுக்கியிருக்காங்க. பின்னாளில் பசுமைநடைக்கு வரும் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து வந்து இதுபோன்ற விசயங்களைத் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. பசுமைநடைப் போல எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும். நான் வியட்நாம் பகுதிக்கு சென்ற போது இதுபோல அங்குள்ள மலையிலுள்ள கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் என்ன சொல்லியிருக்குன்னா ‘இதை நீங்க பார்த்துக் கொள்ளாவிட்டால் நான் செய்த பாவங்கள் எல்லாம் உன்னைச் சூழும்’ என நாலாம் நூற்றாண்டிலேயே நம்மாள் எழுதிவைத்திருக்கான். அந்தக்கோயில் வாசலில் உள்ள அந்த ஊர்க்காரன் நம்மாட்களைப் பார்த்ததும் கந்த சஷ்டி கவசம் போடணும் என்ற அளவிற்காவது பழகியிருக்கான். இன்று மாலை சங்கம் ஹோட்டலில் சோழர்காலச்சிலைகள் குறித்து பாண்டியத்தலைநகரத்தில் பேசுகிறேன். முடிந்தவர்கள் வந்து கலந்து கொள்ளுங்கள்” என்றார்.

sithermalai2

பசுமைநடையின் சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்திலுள்ள மகாவீரர் சிற்பங்களிலே மிகப்பெரியதும், மிக அழகானதுமான கீழக்குயில்குடி மகாவீரர் திருமேனிப் படத்தை விஜயகுமார் அவர்களுக்கு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வழங்கினார். அவருடைய தளத்தின் பெயரை (POETRY IN STONE) அந்தப் பரிசு நினைவூட்டியது. அவருக்கு மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூலை எழுத்தாளர் அஜாதசத்ரு மற்றும் கவிஞர் வழங்கினர்.

சித்தர்மலை

மலைமீது ஏறி வைகையைப் பார்க்க குழுவாகச் சென்றோம். மலைமீது மகாலிங்கங்கோயில் உள்ளது. சிவராத்திரிக்கும், ஆடி அமாவாசைக்கும் இங்கு அன்னதானம் நடப்பதை அங்குள்ள கோயில் பூசாரி சொன்னார். மிக அழகான கோயில். மலைமீதிருக்கும் மகாலிங்கம் மகிழ்வாகியிருக்கிறார். கீழே வைகை நதி கொஞ்சமாக ஓடினாலும், பளிங்கு போல மிகத் தெளிவாகயிருந்தது. கரையோரம் இருந்த தென்னை மரங்கள் சிறு செடிகள் போலவும், வைகை சிறுவாய்க்கால் போலவும் தோன்றியது. ஓவியர் ரவி அவர்களுடன் ஓவிய ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சில தகவல்களைக் கூறினார். வைகை பின்புலமாக குழுவாக நிழற்படம் எடுத்துக் கொண்டோம். அடுத்த நடை மலையடிவாரத்தில் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடலாமா என பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரிடமும் கருத்து கேட்டார். எல்லோரும் மகிழ்வாக சரியென்றனர்.

மகாலிங்கம்

மலைமீதிருந்து மெல்ல இறங்கினோம். பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூல் விற்பனைப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டே புதிய பசுமைநடைப் பயணிகளிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கினேன். வரும்போது நானும் கந்தவேலும் வந்தோம். கந்தவேலின் அதீதநிழற்பட ஆர்வத்தால் நின்று நின்று மெல்ல நிழற்படமெடுத்துக் கொண்டே வந்தோம். காலையில் கூட்டமாக வந்ததைக் குறித்து விசாரித்தவர்களிடம் பசுமைநடை மற்றும் சித்தர்மலை குறித்து கூறினோம்.

history of sidhermalai

விக்கிரமங்கலம் அருகே வந்தபோது மழை வந்தது. என்னுடன் வந்த சகோதரர்கள் விக்கிரமங்கலம், காடுபட்டி, தென்கரை வழியாக சோழவந்தான் சென்றுவிட்டனர். கடந்தமுறையைவிட இந்தாண்டு வைகையைப் பார்த்தது மிக மகிழ்வாயிருந்தது. இனியொருமுறை ஆற்றில் நிறைய வெள்ளம் போகும் போது சித்தர்மலைக்குப் போகணும்.

xpress

படங்கள் உதவி – அருண், பிரசன்னா, செல்லப்பா, செல்வம் ராமசாமி, சரவணன், ஹூபர்ட், தமிழ்ச்செல்வம், இந்தியன் எக்ஸ்பிரஸ்