வெளிப்படைக் குறிப்புகள்

  1. உங்கள் குழந்தைப் பருவ நினைவுகளிலேயே நீங்கள் பொக்கிஷம் போல எதைக் கருதுகிறீர்கள்?

சிறுவயதில் அண்ணாநகரில் ஒரு காம்பவுண்டு வீட்டில் குடியிருந்தோம். அந்த காம்பவுண்டில் ஏழெட்டு வீடுகளும் வீட்டு உரிமையாளர் வீடும் இருந்தது. மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருந்தது. நாற்றங்கால் பள்ளி தொடங்கி இரண்டாம் வகுப்பு வரை அங்கிருந்த நாட்களை பொக்கிஷம் போல நினைக்கிறேன். சுந்தரம் பார்க், சுந்தரம் தியேட்டர், ப்ரியா காம்ப்ளக்ஸ், அம்பிகா மூகாம்பிகா, கனேஷ் தியேட்டர், சர்வேஸ்வரன் கோவில் என காம்பவுண்டு வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து சென்ற நாட்கள் அற்புதமான நாட்கள். பக்கத்து வீட்டிலிருந்த பூக்கட்டும் பாட்டியிடம் கொஞ்சம் பூ வாங்கி என்னிடமிருந்த மரயானை, குதிரை பொம்மைகளை வைத்து திருவிழா கொண்டாடி விளையாடிய நாட்கள் மறக்க முடியாதவை.

  1. இன்று நீங்கள் இவ்வாறிருக்க யார் காரணம்? உங்கள் இளம்பருவத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது யார்? அவரிடமிருந்து (அவர்களிடமிருந்து) என்ற கற்றுக் கொண்டீர்கள்?

இன்றிருக்கும் நிலைக்கு அப்பாதான் காரணம். சித்திரம் வரைவது, புத்தகங்களை சேகரிப்பது, வீதியில் அலைவது என எல்லாமே அவரை பின்தொடர்தல்தான். பின்னாளில் ஓவியர் மனோகர் தேவதாஸ், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன், சமூகச் செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களுடைய எழுத்து, ஓவியம், செயல் எல்லாம் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

  1. வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களிலேயே மிகவும் முக்கியமானது எது?

வாழ்க்கை ஒவ்வொரு கால இடைவெளியிலும் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. அதிலொன்று தொடர்ந்து விரும்பிச் செய்து வரும் செயல் நம்மை காக்கும்.

  1. நீங்கள் இப்போது உங்கள் இளவயதுக்குத் திரும்பமுடியும் என்றால் அந்தச் சிறுவனுக்கு என்ன அறிவுரை தருவீர்கள்?

இந்தக் கணத்தை முடிந்தளவு ரசித்து அனுபவி. பெரியவன் ஆனால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கனவு காணாதே!

  1. நீங்கள் ஒரு தவறான நம்பிக்கையைக் கைக்கொண்டிருந்தீர்கள். அதைக் கைவிட்டதன் காரணமாக அகவிடுதலை அடைந்தீர்கள் என்றால் அந்த தவறான நம்பிக்கை எது?

ஒவ்வொரு வருடமும் ஏராளமான இலக்குகளை குறித்துவைத்துக் கொள்வது, அதை அன்றாடப் பழக்கமாக்காமல் செயல்படுத்த முடியாமல் போவது பெருவருத்தம் தரும். தற்போது அப்படியான இலக்குகள் வேண்டாமென முடிவெடுத்திருக்கிறேன்.

  1. நீங்கள் உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்றால் எங்கு வாழ விரும்புவீர்கள்?

உலகின் பல்வேறுவகையான நிலப்பரப்புகளைப் பார்த்து அதன் ஒவ்வொரு அங்கத்திலும் கொஞ்சநாட்களாவது வாழ விரும்புகிறேன்.

  1. உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பது எது?

மதுரை, திருவிழா, வாசிப்பு, பயணம் போன்ற எல்லாமே!

  1. வெற்றி என்று எதனைச் சொல்வீர்? கால ஓட்டத்தில் வெற்றிக்கான உங்கள் வரையறை மாறியிருக்கிறதா?

வெற்றி என்பது நாம் விரும்பிய செயலின் உச்சத்தில் அடையும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தச் செயலை செய்யும்போதே மகிழ்ச்சியாகயிருந்தால் இன்னும் நல்லாருக்கும்.

  1. உங்களைப் பொறுத்தவரை ஞானம் என்பது என்ன?

வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வை. இன்பம் துன்பம் இரண்டிலும் சமநிலையான மனம்.

  1. நிபந்தனையற்ற அன்பு என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

சில தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக குழந்தைகளின் சிரிப்பில்.

  1. வாழ்க்கையின் அர்த்தம் அல்லது நோக்கம் என்பது என்ன? கால ஓட்டத்தில் இது பற்றிய உங்கள் கருத்து மாறியிருக்கிறதா?

வாழ்க்கையின் அர்த்தம் என்பது சமூகத்திற்கு பயனுற வாழ்தல். இந்த நோக்கம் இடையிடையே மாறிமாறித் தோன்றினாலும் நிறைவாகத் தோன்றுவது நம் வாழ்வு ஏதோ ஒருவகையில் பிறர்க்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற அவாதான்.

  1. காரணம் இல்லாமல் காரியம் எதுவும் நடப்பதில்லை என்று நம்புகிறீர்களா? ஆம் என்றால் எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றால் எதை வைத்துச்சொல்கிறீர்கள்?

ஆம், காரணம் இல்லாமல் காரியம் எதுவும் நடப்பதில்லை என்று நம்புகிறேன். நம்முடைய எண்ணங்களே நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு நம் மீதான வெறுப்பு ஒரு விபத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் இணையான எதிர்விளைவு உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாவது விதி.

  1. ஒரு ஏமாற்றமோ, தோல்வியோ ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

சிறுவயதிலிருந்தே நிறைய ஏமாற்றங்கள், தோல்விகள் பல விடயங்களில் ஏற்பட்டிருப்பதால் பெரிய வலி ஒன்றும் தோன்றாது. ஏமாற்றமும் தோல்வியும் சில தருணங்களில் நல்லதாகக்கூட பின்னாளில் மாறியிருக்கிறது. உதாரணத்திற்கு, பத்தாம் வகுப்பிற்குப்பின் நான் விரும்பிய டிப்ளமா படிப்பு கிடைத்திருந்தால் சித்திரவீதிக்காரன் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.

  1. எது உங்களுக்கு பணிவைத் தருகிறது? எதை நினைத்துக் கொள்ளும்போது இவ்வளவுதான் யதார்த்தம் என்று புரிகிறது?

பிரபஞ்சத்தின் பேருருவை உணர்ந்திருப்பதும் காலம் குறித்த பார்வையும் வாழ்வில் பணிவைத் தருகிறது. நெருநல் உளனொருவன் என்னும் திருக்குறளை நினைத்துக் கொள்ளும்போது அதன் யதார்த்தம் புரிகிறது. நேற்றிருந்தவன் இன்றில்லை என்பதுதான் இந்த உலகத்தின் பெருமையாக இருக்கிறது. நானுமில்லாத நாள் வரத்தானே போகிறது என்ற தெளிவு இருக்கிறது.

  1. நமக்கும் இறப்பு நேரிடும் என்று முதன்முதலாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த எண்ணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திற்று?

இறப்பை குறித்து பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவே பலசமயங்களில் ஆறுதலாகயிருக்கும். ஒருமுறை உணவு நஞ்சாகி மருத்துவமனையிலிருந்தபோது இறப்பு நெருங்கிவிட்டது என நினைத்தேன். அச்சமயம் எடுத்த பணிகளை திறம்பட முடிக்கவில்லையோ என்ற குற்றவுணர்வு இருந்தது. மற்றபடி இறப்பு என்பது ஒரு வகையான விடுதலை.

  1. இறப்பிற்கு பிறகு என்னதான் நடக்கிறதென்று நம்புகிறீர்கள்?

இறப்பிற்கு பிறகு ஒன்றும் நடப்பதில்லை. சொர்க்கம் நரகம் எல்லாமே நாம் வாழும் காலத்தில் அனுபவிப்பதுதான்.

  1. காதல், திருமணம் போன்ற உறவுகளில் இருவருக்கும் ஒரே மாதிரியான இறை நம்பிக்கை முக்கியம் என்று வலியுறுத்துவீர்களா?

யாரிடமும் ஒரே மாதிரியான இறை நம்பிக்கை முக்கியம் என வலியுறுத்த மாட்டேன். பன்மைத்துவமே எப்போதும் நன்று. பிறர் வேறொரு நம்பிக்கை வைத்திருந்தால் அதை மகிழ்ச்சியாகத்தான் பார்ப்பேன்.

  1. இரண்டு மனங்கள் இணைந்து ஒன்றாயின, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன, ஈருடல் ஓருயிர் போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா? விளக்கவும்.

மனம் என்பது நம்முடைய மூளைதான். சில தருணங்களில் அதை இதயமாக கருதுகிறோம். அல்லது மனம் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறோம். இரண்டு நபர்களுக்கிடையில் ஒரேமாதிரியான எண்ணங்களும் உணர்வுகளும் தோன்றலாம். மற்றபடி என்னைப்பொறுத்தவரை மனித மனம் (மூளை) தனக்குள்ளே பல அடுக்குகளைக் கொண்டது. அதன் அடுக்குகளை நாம் அறிவதே கடினம். இரண்டு மூளைகள் இணையுமா என்ன?

  1. உங்களை நீங்களே நேசிக்கிறீர்களா? அதை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்? அடுத்தவர் மீதான நேசத்தை வழக்கமாக எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

என்னை நானே நேசிக்கிறேன். தன்னோடான உரையாடல்களில், கண்ணாடி பார்க்கும்போது நான் என்னை நேசிப்பதை என்னிடம் வெளிப்படுத்துவதுண்டு. அடுத்தவர் மீது நேசம் இருந்தாலும் அதை சரிவர வெளிப்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

  1. இயற்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றைப் பற்றி எழுதுங்கள்.

மலைகள் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருபவை. ஏறுகின்ற மலைகளைவிட, மிகப்பெரிய மலைகளைக் காணும்போதே உற்சாகம் பொங்கும். யானைமலை, அழகர்மலை, சமணமலை, பரங்குன்றம் என பிடித்த மலைகள் ஏராளம். மலையிலிருந்து கீழே ஊர்களைப் பார்க்கிற போது பெரியபெரிய கட்டிடங்கள், பெரியபெரிய வாகனங்கள் எல்லாம் விளையாட்டுச் சாமான்களைப் போல தெரியும். இயற்கையின் முன் நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற உணர்வைத் தரும்.

  1. நீங்கள் அடுத்தவர்களை மன்னிப்பதுண்டா? உங்களை நீங்களே மன்னிப்பதுண்டா?

“நான் எல்லோரையும் முழுவதுமாகவும் தாராளமாகவும் மன்னிக்கிறேன். நான் அவர்களுக்கு அமைதியும் ஆரோக்கியமும் இணக்கமும் வாழ்வில் ஏற்பட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என்ற ஜோசப் மர்பியின் கூற்றை அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்வேன். நாம் நம்மை மன்னிப்பதும் பிறரை மன்னிப்பதும்தான் மன அழுத்தத்திலிருந்து காக்கும் மருந்து என்றே சொல்லலாம்.

  1. உங்களைப் பொறுத்தவரை விசுவாசம் என்றால் என்ன? நீங்கள் யாருக்கு மிகமிக விசுவாசமாக இருக்கிறீர்கள்?

விசுவாசம் என்பது ஒருவகையில் நன்றியுணர்வின் வெளிப்பாடுதான். நம் இக்கட்டான தருணங்களில் நம்மை மீட்டவர்களுக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுவது நன்றியுணர்வின் வெளிப்பாடுதான். நானும் பல இக்கட்டான தருணங்களில் எனக்கு உதவிய மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

  1. நட்பு சார்ந்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன? நண்பர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்?

நட்பு சார்ந்து பெரிய எதிர்பார்ப்புகள் என்னிடமில்லை. நண்பர்களோடான ஆத்மார்த்தமான உரையாடல்கள் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தரும். அப்படியான உரையாடல்களும் பயணங்களும் அடிக்கடி வாய்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். பயணங்களின்போது மனமொத்த நண்பர்களோடு சேர்ந்து செல்ல வேண்டுமென்று விரும்புவேன்.

  1. நீங்கள் அன்பானவர்களைப் பிரிந்து தொலைவில் இருக்கும்போது பிரியத்தை எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?

அழுகையல்லாத கண்ணீர் வழியாக. ஆனால், அவர்கள் அதை உணர்வார்களா என்று தெரியாது.

  1. எந்த இசைக்கு நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?

நாட்டார் மக்களின் இசைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாயனம், உடுக்கு, உருமி, பறை அதிரும் போது எனக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த இசை உடலிலும் மனதிலும் அதிர்வை ஏற்படுத்துகிறது.