தடங்கள் – எம்.ஏ.சுசீலா

Posted: ஜூன் 18, 2023 in நான்மாடக்கூடல், வழியெங்கும் புத்தகங்கள்

மீனாட்சியம்மன் திருக்கல்யாண விழாவில் தொடங்கி அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு நிறைவடைகிறது எம்.ஏ.சுசீலா அவர்களின் தடங்கள் நாவல். தொடக்கமும் முடிவும் கொண்டாட்டமாக அமைந்தாலும் வாழ்வு எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்கிறது கதை. எம்.ஏ.சுசீலா தஸ்தாயெவெஸ்கியின் முக்கியமான நாவல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். ஏராளமான சிறுகதைகள் எழுதியவர்.

நாவல் முழுவதும் ஏராளமான பெண் கதாமாந்தர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள், தடங்கல்கள் அவற்றைத்தாண்டி தடம்பதித்த பெண்கள் என பலரது கதைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியை தம் தோழியோடு மின்னஞ்சல் வழியாக தான் சந்தித்த பல பெண்களின் வாழ்க்கை கதைகளைப் பகிர்ந்து கொள்வதுதான் கதைக்களம். நாவலை வாசிக்கையில் நாம் அறிந்த பலரது கதைகளை நினைவூட்டினாலும் கதை சொல்லும் விதத்தில் தனது பார்வையையும் சேர்த்தே எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர். கதாமாந்தர்களின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவர்களுக்கான பிரச்சனை பொதுவாகத்தான் இருக்கிறது. குடும்பம், திருமணம், பணிச்சூழல், சமூகம் என பல தளங்களில் பெண்கள் இயங்கினாலும் அவர்கள் வாழ்வில் மையம் கொண்டுள்ள விசயங்களை நாவல் பேசுகிறது.

கணவனின் சந்தேக குணத்தால் கஷ்டப்படும் பெண், கணவனின் பேராசையால் மரணமடைந்த பெண், கணவனின் பதவியாசைக்காக குடும்பவாழ்க்கையை விட்டுவிலகிய பெண், கட்டாயத்திருமணத்தால் வாழ்க்கையைத் தொலைத்த பெண், விடலைப்பையனின் காதலுக்காக தன்னை மாய்த்துக்கொண்ட பெண், துறவு வாழ்க்கையை உதறி தனித்து வாழ முற்படும் பெண், திருமணம் நின்றுபோனதால் வாழ்வின் மீதான நம்பிக்கையிழந்த பெண், தன் வாசிப்பால் வாழ்வை புரிந்துகொண்ட பெண், திருமணத்தைத்தாண்டி சாதித்த பெண் என கதை முழுக்க பெண்கள்.

தான் விரும்பிய பெண் விபத்தில் கால்களை இழந்தபோதும் அவளை விரும்பி ஏற்றுக்கொண்ட ஆண், தன் மகள்கள், மனைவிக்காக தன்னை மாற்றிக் கொண்ட ஆண் என கதையில் வரும் இரண்டு ஆண்கள் கவனிக்க வைக்கிறார்கள். வெறும் சம்பவங்களாக மட்டும் கதையைச் சொல்லாமல் வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் விதமாக கதையை கொண்டு செல்வது சிறப்பு. பேராசிரியையாகப் பணியாற்றும் பெண்ணுக்கும், வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கும் ஒரே பிரச்சனை சந்தேகம் கொண்ட கணவன். பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்யச் செல்லும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக வருபவர்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாவல் பேசுகிறது.

கல்லூரியை மையம் கொண்ட கதையென்பதால் கல்லூரியின் அமைப்பு, மாணவிகளின் குணநலன்கள், அங்கு நடைபெறும் பல்வேறு விழாக்கள், குறிப்பாக பொங்கல் விழா, ஆசிரியைகளின் பணிச்சூழல், நாட்டுநலப்பணித்திட்டத்திற்குச் செல்வது, ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எனப் பல விசயங்களை நாவல் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

மதுரையில் நிகழும் கதைக்களம் என்பதால் நாவலை வாசிப்பது மனதிற்கு நெருக்கமாகயிருக்கிறது. மீனாட்சியம்மன் கோவில், மேலமாசிவீதி, டவுன்ஹால்ரோடு, பத்துத்தூண் சந்து, தெப்பக்குளம், குருவிக்காரன்சாலை, பெசண்ட் ரோடு, கன்னடியர் மருந்துக்கடை, கௌரி கங்கா ஹோட்டல், செல்லத்தம்மன் கோவில், காமராஜர் சாலை, கீழக்குயில்குடி சமணமலை என கதாமாந்தர்கள் உலவும் இடங்களில் அலைந்துதிரிவதால் கதைமாந்தர்களை நேரில் பார்த்த உணர்வு. மதுரை மீதான நூலாசிரியரின் நேசம் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது.

தடங்கள் நாவலை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. ஓவியர் ஜீவா மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களோடு கூடிய அழகானதொரு முகப்போவியத்தை வரைந்திருக்கிறார்.

பின்னூட்டமொன்றை இடுக