பரிபாடல் அமுதம் பருக வாரீர்…

Posted: ஜனவரி 2, 2023 in வழியெங்கும் புத்தகங்கள்

தொ.பரமசிவன் அய்யாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பேரா. ம. பெ. சீனிவாசன் தாம் எழுதிய ‘பரிபாடல் – திறனுரை’ நூலுக்கு தொ.ப. எழுதிய சிறு குறிப்பினை பற்றிக் குறிப்பிட்டார். சமீபத்தில் ‘பரிபாடல் – திறனுரை’ நூலில் ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்ற வாழ்த்துரையை வாசிக்க முடிந்தது. தொ.ப.வின் நூல்களில் இதுவரை இடம்பெறாத, அவரது கையெழுத்தில் அமைந்த இந்த உரையைப் பகிர்கிறேன்.

முன்னுரையில் ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு:

பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி முடிக்கப்பெற்ற உரை இது. எனினும் இப்போதுதான் வெளி வருகின்றது. ‘பரிபாடல் அறிமுகம்’ என்னும் முகவுரைப் பகுதியைப் படித்துவிட்டு 2010இல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவராய் விளங்கிய பேராசிரியர் அறிஞர் தொ. பரமசிவன் எனக்கொரு பாராட்டுக் குறிப்பினை அனுப்பியிருந்தார். ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்பது அதன் தலைப்பு, அதனைச் சில மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த போது, ‘நூலினை உடனே வெளியிட்டாக வேண்டும்’ என்ற வேகம் பிறந்தது. கைகொடுத்து உதவினார் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம் அவர்கள். அவருக்கு என் நன்றி உரியது.

என்னுடன் நாற்பத்தேழு ஆண்டுக்கால இலக்கியத் தோழமை கொண்டிருந்தவர் அறிஞர் தொ.பரமசிவன். இன்று அவர் நம்மோடு இல்லை. எனினும், ‘எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்’ இளவலை நினைந்து நெகிழ்கிறேன். அவரின் பொன்னான நினைவைப் போற்றுகிறேன்.

தொ..வின் வாழ்த்துரை:

பேரா.ம.பெ. சீனிவாசன் தமிழ் எழுத்துலகில் அறிமுகம் வேண்டாத எழுத்தாளர். ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவராக அவர் ஆக்கித் தந்த நூல்கள் தமிழ் இலக்கிய மாணவர்க்கும் ஆய்வாளர்க்கும் பெருவிருந்தாவன.

பேராசிரியர் இப்பொழுது தமிழ்ச் செவ்விலக்கிய ஆய்வுகளிலும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார். திருமுருகாற்றுப்படையினைத் தொடர்ந்து இப்பொழுது பரிபாடலுக்கு உரை வரைந்துள்ளார். நம்மைப் பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்.

மாணவர்களின் தேர்வுக்குரிய பதவுரை, பொழிப்புரையாக அன்றி அவருக்கேயுரிய மயக்குகின்ற மொழிநடையில் வரையப்பட்டுள்ளது இந்நூல். பழந்தமிழ் ஆய்வு முன்னோடிகள் கலித்தொகையினைப் ‘பாண்டிநாட்டு இலக்கியம்’ என்றும் பரிபாடலை ‘மதுரை இலக்கியம்’ என்றும் குறிப்பிடுவர். பக்தி இலக்கியத்தின் இசைப் பங்களிப்புக்கும் பரிபாடலே வழிகாட்டி. ஆயினும் இப்பாடல்கள் பாடப்பட்ட முறையினை அறிய இயலாமற் போனது தமிழர்க்குப் பேரிழப்பே.

தொல்காப்பியம் தொடங்கி உரையாசிரியர்கள் வழிவரும் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், பேரா. நா.வா.வின் பரிபாடல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் உள்வாங்கியிருப்பது அவரது வாசிப்புலகத்தின் வீச்சினை நமக்குக் காட்டுகிறது. உரைச் சிறப்புக்குச் சற்றும் குறையாத மிடுக்கோடு அமைந்துள்ளது, பேராசிரியரின் முன்னுரைச் சிறப்பு. இம்முன்னுரையைப் படித்தபோது உ.வே.சா. ஊன்றிய வித்துக்கள் வீண் போகவில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. மு.அருணாசலம் அவர்களின் தமிழிசை இலக்கண வரலாறு வெளிவந்துள்ள சூழலில் இந்த இசைநூல் உரையும் வெளிவந்திருப்பது சிறப்பு.

பழந்தமிழ் இலக்கியப் பணியில் முன்னடி வைத்திருப்பதாகப் பேராசிரியர் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், அம்முன்னடியே பொன்னடியாக ஒளிர்கிறது. தமிழிலக்கிய ஆய்வாளர்கள் இவரது தடம் பற்றி நடப்பார்களாக. பேராசிரியர்க்குத் தமிழுலகின் சார்பாக நமது நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி : ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

பின்னூட்டமொன்றை இடுக