திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.

மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.

இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.

இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.

ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.

மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பான ஏமாறும் கலையை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்தாண்டு (2024) தொடக்கமாக வாசிக்க எடுத்தேன். கதைகதையாம் காரணமாம் தொடங்கி மூன்று கதைகள் வாசித்தேன். அவரின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று ஏமாறும் கலை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்தேன்.

யுவன் சந்திரசேகர் தன் கதையுலகிற்குள் வாசிப்பவரையும் அழைத்துச் செல்கிறார். அவர் கரட்டுப்பட்டியில் கதை நடக்கிறது என்றால் நாம் கரட்டுப்பட்டி தெருவில் நிற்கிறோம், வங்கியில் நடப்பதுபோல எழுதினால் நாம் பணமெடுப்பவராய் வரிசையில் நிற்கிறோம், இந்துஸ்தானி இசையை மையம் கொண்ட கதையென்றால் நாமும் பின்வரிசையில் நின்று புல்லாங்குழலிசை கேட்கிறோம். அவர் ஒரு கதையில் ஒரு கதையை மட்டும் சொல்வதில்லை. பல கதைகளைச் சொல்கிறார். மேலும், அந்தக் கதையில் வரும் எல்லோரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார். சில கதாபாத்திரங்களை நாமும் வழியில் சந்தித்திருப்போம்.

யுவன் சந்திரசேகர் கதை சொல்வதைப்போல எங்கப்பா என்னிடம் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும் மதுரையிலிருந்து புறப்பட்டு போய் திரும்பிவந்தது வரை கதையாய் என்னிடம் சொல்லிய நாட்கள் நினைவில் எழுகிறது. எத்தனையெத்தனை மனிதர்கள். ஏமாறும் கதை தொகுப்பிலுள்ள 12 கதைகளும் ஏதோ ஒருவகையில் யாரோ ஒருவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. சில கதையில் வரும் முக்கிய மாந்தர்களின் மரணமோ, தற்கொலையோ அது நம்மையும் உலுக்கி எடுக்கிறது.

ஒருவர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தபின் தெரியாததுபோல் நாமும் நடிப்பதுதான் ஏமாறும் கலை. வங்கிக்கு பணமெடுக்க வரும் பெண் ஒருவர் தன் கணவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது; அவரால் நடக்க முடியாதெனப் பொய் சொல்லி ஒவ்வொருமுறையும் வந்ததும் பணமெடுத்து சென்றுவிடுவார். பின்னாளில் ஒரு விசேச வீட்டில் அப்பெண் அவள் கணவனுடன் சேர்ந்து நிற்பதை பார்த்து நொந்துவிடுவார் கதைசொல்லி. உடன் பணியாற்றுபவர் அதைத் தெரியாததுபோல் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். அதுதான் ஏமாறும் கலை.

ஊரில் இறந்தவர் குரலில் குறிசொல்லும் பெண்ணின் கதையை வாசிக்கையில் எங்க ஊரில் முன்பு இறந்தவர்கள் பேய் பிடித்ததாகச் சொல்லி அவர்களைப் போல் பேசிய கதைகளை நிறைய கேட்டிருக்கிறேன். மனம்புகுதல் என்ற கதை இதைப்பற்றி பேசுகிறது. கரட்டுப்பட்டியில் நடக்கும் இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள் முப்பது வயதிற்கு மேலானவராய் இருந்தால் இதுபோன்றதொரு கதை உங்களிடமும் இருக்கும்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் காதலை அறிந்த குடும்பம் அவளது சோற்றில் விசம் வைத்துக் கொள்கிறது. ஆணவக்கொலையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் பானு பன்னீர்செல்வம் மீது கொண்ட காதலால் இறந்துபோகிறாள். முடிவற்று நீளும் கோடை எனும் இக்கதை மறக்க முடியாத ஒரு தம்பியின் பார்வையில் நகர்கிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் கால்போன போக்கில் பயணிப்பவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். தங்கையா என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த கதைகளும் மூன்று முத்தங்களும்தான் மூன்றாவது முத்தம் கதை. ரயில்வே போர்ட்டராக தங்கையா இருக்கையில் என்ஜின் டிரைவராக வரும் லால் சொல்லும் கதை சுவாரசியம்.

தன்னோடு வங்கியில் உடன் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனிடம் தன் தாய் பற்றி பகிர்ந்து கொள்ளும் கதை தாய்மை யாதெனில். மகனுக்காக வாழும் அம்மா பக்கத்துவீட்டில் திருமணமாகி சண்டையிட்டு வந்த ஜம்னாவுடன் பேசும் மகனின் மீது சந்தேகம் கொள்வது அவளது அன்பென்கிறது கதை.

ஒவ்வொரு கதையாய் கதையில் வரும் மாந்தர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்தத் தொகுப்பை நீங்கள் வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறுதான் இல்லையா? கவிஞர் சுகுமாரன் யுவனின் கதைகள் குறித்து சொல்லும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன். “தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப்பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதிநவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார்.”

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; நன்றி – கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிறார்களுக்கான திரைப்படங்களை ஜனவரி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை வேளைகளில் திரையிட்டு வருகின்றனர். The Red Balloon, Children of Heaven, Fly Away Home படங்கள் திரையிடப்பட்டன. திரையிடலுக்குப் பிறகு படம் குறித்த உரையாடல்களும் நடைபெற்றன. படம்பார்த்த சிறார்களும் பெற்றோர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பையும் வழங்கிவருகிறார்கள். பேராசிரியர் பிரபாகர் அய்யா திரைப்படங்களை காணும் கலையை இந்த உரையாடல்கள் வாயிலாக கற்றுக்கொடுப்பதாக உணர்கிறேன்.

The Red Balloon

1956இல் எடுக்கப்பட்ட The Red Balloon படத்தை முதன்முதலாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்த்தேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு அற்புதமாக படம் எடுத்திருக்கிறார்களே என்று எண்ணி வியந்தேன்.

Albert Lamorisse இயக்கிய படம். அவருடைய மகன்தான் படத்தில் வரும் சிறுவன். ஒரு கம்பத்தில் சிக்கியுள்ள பலூனை எடுக்கும் சிறுவன் அந்த பலூனை தன் கூடவே வைத்துக்கொண்டு அலைகிறான். அவனது அன்பில் அந்த பலூனும் இணைந்து அவன் கூடவே திரிகிறது. பலூனோடு அந்தப் பையன் உரையாடுவதும் அதைக்கேட்டு அந்த பலூன் நடந்துகொள்வதும் சிறப்பு. அந்த பலூன் அவனோடு ஒளிந்து பிடித்தெல்லாம் விளையாடுகிறது. அந்த ஊரிலுள்ள மற்ற சிறுவர்கள் பொறாமையோடு சிகப்பு பலூனைத் தாக்குகிறார்கள். அந்தப் பையன் பலூன் உடைந்த சோகத்திலிருக்கும்போது ஊரிலுள்ள எல்லா பலூன்களும் சேர்ந்து வந்த அந்தப் பையனைத் தூக்கிச் செல்லும் காட்சி கவிதை.

Children of Heaven

ஆனந்தவிகடனில் செழியன் எழுதியபோது Children of Heaven படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து பின்னால் அந்தப் படத்தை பார்த்தேன். Majid Majidi  இயக்கிய மிக அற்புதமான படம்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அந்த திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்த்தபோது இன்னும் பல காட்சிகள் மனதைக் கவர்ந்தன. குறிப்பாக இலந்தை அடைதின்னும் சிறுமி என்னை பால்ய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றாள். ஏழ்மையான குடும்பத்தின் அன்றாட வாழ்வை அழகாகப் பதிவு செய்த படம். அண்ணன் தங்கை இடையிலான அன்பை மிக எதார்த்தமாகப் பதிவு செய்த படம். இந்தப் படம் குறித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு நன்றி.

Fly Away Home 

Carroll Ballard   இயக்கிய Fly Away Home  தாயை இழந்த மகளை ஆற்றுப்படுத்தும் தந்தையின் அன்பை, வாத்துகளை தாய்போல பார்த்துக் கொள்ளும் சிறுமி – பின்னாளில் தந்தை மேல் கொள்ளும் பாசம், பறக்கும் சிறிய கிளைடர் விமானம் மூலம் பறவைகளை வலசைக்கு அழைத்துச் செல்லும் காட்சி என ஏராளமான சிறப்புகள். படம் பார்க்கும் நாமும் சேர்ந்து பறக்கும் அனுபவத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த மூன்று படங்களையும் என் மகள் மதுராவோடு சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்க்க முடிந்தது. நாம் தொலைக்காட்சிகளில் அன்றாடம் காணும் திரைப்படங்களிலிருந்து இந்தப் படங்கள் மாறுபட்டிருப்பதைக் குறித்து மதுராவோடு தொடர்ந்து உரையாடி வருகிறேன். கலைஞர் நூற்றாண்டு நூலகம் சிறுவர்களுக்கான நிகழ்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றி.

முன்பு ஆடு-மாடு என்ற வலைப்பக்கத்தை விரும்பி வாசிப்பேன். ஏக்நாத் எழுதும் கதைகள் அவரது கிராமத்திற்கே நம்மையும் அழைத்துச் சென்றுவிடும். அவர் சென்னையில் வசித்துவந்தாலும் தன்னுடைய கிராமத்தை, ஆடு மாடு கிடையை, வயல்வெளிகளை தன்னோடு சுமந்தபடியேயிருக்கிறார்.

வேசடை என ஏக்நாத் எழுதிய குறுநாவலை வாசித்தேன். பனஞ்சாடி என்ற மனிதரின் வழியே மந்தையூரின் கதையை எழுதியிருக்கிறார். வேசடை என்றால் நெல்லை வழக்கில் எரிச்சல், தொல்லை என்ற பொருளில் சொல்லப்படுகிறது. பட்டா கிடைக்காமல் அலைபவரின் எரிச்சல் என்ற பொருளில் இந்நாவலின் தலைப்பை வேசடை என வைத்திருக்கிறார்.

பனஞ்சாடி என்ற பெரியவர் தன் வீட்டிற்கு பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்திற்கு அலைகிறார் அலைகிறார் அலைந்து கொண்டேயிருக்கிறார். மனுவை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் என அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் பனஞ்சாடி. பின் பட்டா வாங்குவது லேசுப்பட்ட காரியமா?

பனஞ்சாடியின் இயற்பெயர் சங்கரலிங்கம். ஆனால், அந்தப் பெயர் அவருக்கே நினைவிலில்லை. அவருடைய தாத்தா பனஞ்சாடி என்ற கிராமத்திலிருந்து மனைவியின் ஊரில் வந்து தங்கிவிடுகிறார். அதனால் அந்த ஊர்க்காரர் என்ற பெயரில் பனஞ்சாடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள் அந்த வீட்டு ஆண்கள். எங்க ஊரிலும் பலரை அவர்கள் மனமுடித்துவந்த ஊர்ப்பெயரால் அழைக்கப்படுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

பனஞ்சாடி ஆடு மேய்ப்பவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரது மகனோ வீடுகட்டும் வேலையைப் பழகி கொத்தனாராகிவிடுகிறான். பனஞ்சாடியின் மகள் வழிப்பேரன் குத்தாலம் மாடு மேய்க்கிறான். அதனால் அவனுக்கு பொண்ணு கிடைப்பது குதிரைக் கொம்பாகயிருக்கிறது. பனஞ்சாடியின் மனைவி லட்சுமியாட்சிக்கு மருமகள் மேல் ஏகப்பட்ட பிராது இருக்கிறது. மாடியில் வந்து பனஞ்சாடியிடம் அவளை குறித்து குறைகூறிக்கொண்டேயிருக்கிறாள்.

இருமினாலும் பீடியைக் குடித்து இதம் காணும் பனஞ்சாடி. தன் ஊரில் மந்தையில் வீடுகள் வந்த கதையை நினைத்துப் பார்க்கிறார். ஆடுமாடுகளை கட்டிய இடங்கள் இன்று வீடுகளாகிவிட்டன. அதேபோல அவர் ஊரிலுள்ள பெரிய வீட்டின் கதையை தெரிந்தவர்கள் ஓரிருவரே. அந்த வீட்டில் பீடிக்கடை வைத்திருக்கும் பாய்க்கும் அந்தக் கதை தெரியாது. அந்த வீட்டின் கதை தெரிந்தவர்களில் பனஞ்சாடியும் ஒருவர். ஆட்டுக்கான கூடு செய்வதிலும் பனஞ்சாடி வல்லவர்.

பனஞ்சாடியின் நண்பர்களான அம்மாசி, ராமசாமி, கந்தன் வழியாகவும் கதையை சொல்கிறார். அம்மாசி அறுவடைக்காலத்தில் களத்திற்கருகில் கடை போட்டிருப்பார். மொச்சை, கடுங்காப்பி என அவரிடம் கொத்துக்காரர்கள் வாங்கி சாப்பிட்டு கூலிபோட்டதும் நெல்லாக கொடுத்துவிடுவார்கள். இந்தக் கதைகளை வாசிக்கையில் சிறுவயதில் பார்த்த அறுவடைக்கால நினைவுகள் மேலெழுந்தன. பனஞ்சாடிக்கும் சுடலிக்குமான காதல் அத்தியாயம் அருமை. பனஞ்சாடி பட்டா வாங்குவது, தன் மகள் வயிற்று பேரன் குத்தாலத்திற்கு திருமணம் முடிப்பது போன்ற செயல்களை நிறைவேற்றியதோடு இயற்கை எய்திவிடுகிறார்.

பனஞ்சாடியுடன் மாடு மேய்ப்பவரின் முன்னோர் ஒருவர் வயலில் மேயும் மாட்டை பத்திவிட அரிவாளை வீச அது மாட்டின் நாக்கை துண்டித்துவிடுகிறது. பின்னாளில் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் வாய்பேசாமல் ஆகிவிடுகிறார்கள். இதேபோல ஒரு கதையை என்னுடைய பள்ளி ஆசிரியர் பத்தாம் வகுப்பு படிக்கையில் சொல்லியிருக்கிறார். மாட்டை உயிரோடு தோலை உரித்த குடும்பத்தின் பிள்ளைகளின் கால்கள் மாட்டின் கால்களைப் போல ஆனதாக சொன்னார்.

கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பெரிய வீடுகள் பின்னாலுள்ள கதை, மூத்தவர்களுக்கும் ஊருக்குமான பிணைப்பு, காலம் மாறமாற அதன் அடையாளங்களை இழத்தல் எனப் பல விசயங்களை வேசடை நினைவூட்டுகிறது. இந்த நாவலை வாசிக்கையில் பனஞ்சாடியின் முகமாக மறைந்த ’பூ ராமு’ அவர்களின் முகமே நினைவிலிருந்தது.

நூறு பக்கங்களான இந்தக் குறுநாவலை வாசித்தபோது மந்தையூர் கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் ஏக்நாத். இவரது ஆடுமாடுகாடு, கெடைகாடு, ஆங்காரம் நூல்களை வாசிக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராஜசிங்கமங்கலத்திலுள்ள உறவினர் இல்லத்திற்கு செல்லத் திட்டமிட்டோம். இராஜசிங்கமங்கலத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலம் குறித்து இணையத்தில் தேடியபோது காரங்காடு சூழலியல் சுற்றுலா பற்றி அறிய முடிந்தது. உப்பு நீரில் வளரும் அலையாத்தி தாவரங்களைக் காண பிச்சாவரம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் இராமநாதபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த காரங்காடு பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

இராஜசிங்கமங்கலம் சென்று அங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ள காரங்காட்டுக்குச் சென்றோம். காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து தமிழக வனத்துறையினர் காரங்காடு சூழலியல் சுற்றுலாவை நடத்திவருகின்றனர். இதில் படகு சவாரி, துடுப்பு சவாரி போன்ற விசயங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

படகு சவாரி செல்வதற்கு பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறுவர்களுக்கு 100 ரூபாயும் வாங்குகின்றனர். இது ஒரு மணி நேர படகு பயணத்திற்கான கட்டணம். பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு படகில் அமர்ந்தோம். காரங்காடு அழகான கடற்கரை கிராமம். ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. கரைகளில் மீன்பிடிப்படகுகள் நிற்கின்றன.

படகுப்பயணத்தின்போது இரண்டு பக்கங்களிலுமுள்ள அலையாத்தி மரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆலா, நீண்ட காலுள்ள நாரை, கடல்புறா போன்ற பறவைகளைப் பார்த்தோம். கரைப்பகுதிக்கு அருகில் மீனவர்கள் நீருக்குள் நடந்துபோய் வலைவீசி மீன்பிடிப்பதைக் காண முடிந்தது. மோட்டார் படகினை மிகவும் மெல்ல ஓட்டி வந்தனர். மிகக் குறைந்த ஆழமே உள்ள பகுதியில் படகு செல்கிறது.

ஓரிடத்தில் படகை நிறுத்தி மேடான இடத்தில் நம்மை இறக்கி விடுகின்றனர். சுற்றிலும் நீர் இருக்க நாம் அப்பகுதியில் இறங்குவது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. கடலினைப் பார்க்கும்போது உற்சாகம் அலைஅலையாய் வந்து சேர்கிறது. அங்கிருந்து படகில் ஏறியதும் கொஞ்சதூரம் கடலுக்குள் படகுப் பயணம்.

அலையில் படகு மெல்ல ஏறி இறங்க நம் மனமும் அதோடு சேர்ந்து இயங்குகிறது. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே படகு மீண்டும் வருகிறது. காரங்காடு தேவாலயம், கரையோர வீடுகள் வேடிக்கை பார்த்தபடி பயணம் நிறைவடைந்தது. காரங்காடு படகு குழாம் பயணச்சீட்டு எடுக்குமிடம் அருகில் சிறு உணவகம் ஒன்றிருக்கிறது. கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, கணவாய் கட்லெட், இறால் கட்லெட் கிடைக்கிறது. மேலும் தக்காளி சாதம், தயிர் சாதமும் கிடைக்கும். தேநீர், சர்பத், மோர் போன்ற குடினிகளும் கிடைக்கிறது. காரங்காடு தேவாலயத்திற்கு அருகில் ஒரு பழைய மண்டபம் ஒன்றுள்ளது.

காரங்காடு படகுப் பயணம் முடித்து மதுரை வரும் வழியில் பார்த்த கிராமங்களிலிருந்த நீர்நிலைகளை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை எங்கும் காணமுடியவில்லை. கிராம மக்களின் நீராதாரமாக விளங்கும் கண்மாய், குளங்களை அவர்கள் பராமரிப்பதைப் போல நமது ஊர்களிலும் பராமரித்தால் சிறப்பாக இருக்கும். 2023-இன் மறக்க முடியாத பயணமாகவும் காரங்காடு பயணம் அமைந்தது.

படங்கள் உபயம் : செல்லப்பா

காணொளி உபயம் : History with Madura

மாலைநேர மஞ்சள்வெயில் அடித்துக் கொண்டிருந்தது. பாளையங்கோட்டை தபால் நிலையத்திற்கு நேரேயிருந்த தெருவில் இருந்த வீடுகளை வேடிக்கை பார்த்தபடியே அந்த இளைஞன் வந்து கொண்டிருந்தான். மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பழைய காரை வீடுகளும், மஞ்சள் காவி அடித்த சுவர்களையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. சில வீடுகளைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்கள். தெருமுட்டும் இடத்தில் இருந்த வீட்டின் வெளிக்கதவைத் திறந்து மாடிநோக்கிச் சென்றான்.

அய்யா! என்று அழைத்தபடி வந்த குரலைக் கேட்டு வாசலருகே வந்தவர், வந்த இளைஞனை உள்ள வாங்க என்று வரவேற்பறையில் அமர வைத்தார். இடதுபக்கம் இரும்பு அடுக்குகளில் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பின்னால் இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். அதற்குமேலே பெரியார் படம் மாட்டப்பட்டிருந்தது. வந்திருந்த இளைஞனை எங்கிருந்து வற்றீங்க? என்ன பண்றீங்க? என விசாரித்தார் தொ.ப. என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.

‘அழகர்கோயிலிலிருந்து வற்றேங்கய்யா. எம் பேரு பதினெட்டாம்படியான். பாலிடெக்னிக் படிக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன். அவரது முகத்தில் புன்னகையும், அன்பும் அந்த இளைஞனின் மீது கவிழ்ந்தது. ‘அழகர்கோயிலிலிருந்து என்னைப் பார்க்க வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சிப்பா.’ என்றார். அழகர்கோயில் புத்தகம் வாசித்ததும் உங்களைப் பார்த்து, அழகர்கோயில், பதினெட்டாம்படிக்கருப்பு, சித்திரைத் திருவிழா பற்றியெல்லாம் பேசனும்னு ஆசையா இருந்துச்சுங்கய்யா. அதான் பாளையங்கோட்டைக்கு வண்டி ஏறிட்டேன்.’ என்றவரிடம், தொ.ப. ‘அழகாபுரிக்கோட்டையிலருந்து பாளையங்கோட்டைக்கு வந்துட்டீங்க’ என சிரித்தபடி சொன்னார். 

அழகர்கோயில் புத்தகம் எப்படிக் கிடைத்தது என விசாரித்தவரிடம் நூலை வாங்கிய விசயத்தைப் பற்றி விரிவாகச் சொன்னான். ‘கிடாரிப்பட்டியில் உள்ள கல்வெட்டுக்களைப் பார்க்க பசுமைநடை குழுவினர் வந்தபோது இவ்வளவுபேர் இந்த மலைக்கு எதுக்கு போறாங்கன்னு நானும் போய் பார்த்தேன். எங்க ஊர் மலையைப் பத்தி நிறையச் சொன்னாங்க. மதுரைன்ற பெயர் பொறித்த 2000 வருசத்துக்கு முந்தைய கல்வெட்டு இருக்குன்றது தொடங்கி நிறைய தகவல்கள் கிடைச்சுது. அப்ப நீங்க எழுதுன அழகர்கோயில் நூல் பத்தியும் குறிப்பிட்டாங்க. அதற்குப்பிறகு பசுமைநடை நடத்துன விருட்சத் திருவிழாவுக்கான அழைப்பிதழில் உங்க பெயரைப் பார்த்தேன். மேலும், அந்த அழைப்பிதழே அந்த விழாவுக்கு அழைத்தது. அன்னைக்கு கீழக்குயில்குடி சமணமலை ஆலமரத்தடியில் நடந்த விழாவில் உங்களைப் பார்த்தேன். நீங்க பேசியது மனதைத் தொட்டது. அன்று விழா முடிந்தபிறகு உங்களோடு பேச நினைத்தேன். நீங்கள் சென்றுவிட்டது அப்பொழுதுதான் தெரிந்தது. இன்று அந்த வாய்ப்பு கிடைச்சுருச்சு’ என்றான் பதினெட்டாம்படியான்.

தொ.ப. பசுமைநடை நிகழ்வில் கலந்துகொண்டது பற்றியும், அழகர்கோயில் ஆய்வு செய்கையில் சமணமலை அடிவாரத்தில் போய் அமர்ந்து ஏகாந்தமாய் இருந்ததையும் குறிப்பிட்டார். அப்பொழுது தொ.ப.வின் துணைவியார் இருவருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார். தொ.ப. துணைவியாரிடம் ‘மதுரை அழகர்கோயில்ல இருந்து பார்க்க வந்திருக்காரு’ என சிரித்தபடி சொன்னார். அவங்க ‘மதுரைக்காரங்களைப் பார்த்தாலே இவரு ரொம்ப குஷியாடுவாருன்னு’ சொல்லி பலகாரங்களை எடுத்துவரச் சென்றார். பதினெட்டாம்படியான் தன் பையிலிருந்து அழகர்கோயில் தோசையையும், ஒரு சில்வர் போத்தலில் சிலம்பாற்று நீரையும் தொ.ப.விடம் கொடுத்தான். அதைப் பார்த்த கணத்தில் தொ.ப. கடந்த காலத்திற்கே சென்றார். 

ஆடித்திருவிழாவில் அழகர்கோயில் தோசையை தேர்வடம் பிடித்து இழுக்கும் ஊர்க்காரர்களுக்கு கோயிலிருந்து கொடுப்பதையும், சிலம்பாறு குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ளதையும் சொன்னார். அந்தப் புத்தகம் எழுதிய நாட்களில் அழகர்கோயில் மலையிலும், அழகர்மலையைச் சுற்றிய கிராமங்களிலும் அலைந்து திரிந்த கதையைச் சொல்லச்சொல்ல பதினெட்டாம்படியானின் கண்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

விருட்சத்திருவிழா முடிந்ததும் பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் அழகர்கோயில் புத்தகம் கிடைக்குமா எனக்கேட்க அவர் தொ.ப.தாசன் என ஒருவரை அடையாளம் காட்டினார். அந்த இளைஞன் புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை. ஆனாலும், நீங்க நாளை தல்லாகுளம் கருப்பசாமி கோயில்கிட்ட வாங்க நான் நகல் எடுத்து வச்சுருக்கேன் எனக்கூறி, மறுநாளே சொன்னதுபோல புத்தக நகலைக் கொண்டுவந்து கொடுத்தார் என தான் அழகர்கோயில் வாசித்த கதையை தொ.ப.விடம் பதினெட்டாம்படியான் கூறினான்.

அழகர்கோயில் எழுதி பல ஆண்டுகாலம் பதிப்பிக்கப்படாமல் இருந்து, பின் பதிப்பாகி வந்தபிறகு நல்ல கவனம் பெற்றதையும், தலைப்பிள்ளை போல அந்நூல் தன் பேர் சொல்வதையும் பதினெட்டாம்படியானிடம் கூறினார். நாட்டார்தெய்வங்களை ஏன் மளையாளம் எனச் சொல்கிறார்கள் என்ற ஐயத்தை தொ.ப.விடம் கேட்க, ‘நாட்டார்தெய்வங்களோட வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்த கரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடைய ஸ்பிரிட்சுவல் எஸ்சன்ஸ் அடங்கியிருப்பதாக நம்பிக்கை. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிற ஆறுகளின் வழியாகத்தான் நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. எனவே, தெய்வங்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தன என்ற நம்பிக்கையும் உருவானது’ என்றார். 

‘பதினெட்டாம்படியான் எங்க தாத்தாவோட பெயரைத்தான் எனக்கும் வச்சுருக்காங்க. என்னோட தங்கச்சி பேரு தீர்த்தக்கரை ராக்கு’ எனச் சொல்ல தொ.ப. ‘சரியாத்தான வச்சுருக்காங்க. பெயரன்னாலே தாத்தாவுடைய பெயரைக்கொண்டவன்தானே. அதுவுமில்லாம அழகர்கோயில் பக்கம் பதினெட்டாம்படிக்கருப்போட தங்கச்சியாத்தான் மலைமேல இருக்கிற இராக்காயியை நினைக்கிறாங்க. அதுனால உங்க தங்கச்சிக்கு தீர்த்தக்கரை ராக்கு பொருத்தமான பேரு’ எனச்சொல்லி சிலாகித்தார்.

பதினெட்டாம்படியான் அண்ணன் – தங்கை உறவு குறித்த மக்களின் கதையை தொ.ப.விடம் கேட்டான். ‘அழகருடைய தங்கையாகத்தானே மக்கள் மீனாட்சியை சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாம அழகர் மதுரைக்கு வரும்போது கொண்டுவரும் உண்டியல்களை, ஆபரணப்பெட்டிகளை சீர் என்றுதானே சொல்றாங்க. “தல்லாகுளம் விட்டார் – தமுக்கடிக்கும் மேடைவிட்டார் மானாமதுரை விட்டார் – மதுரையிலே பாதிவிட்டார்” அப்படின்னு வர்ணிப்பு பாட்டே இருக்கே. தமிழர்களுடைய பண்பாட்டின் வேராக இருப்பது அண்ணன் தங்கை உறவு’ எனச் சொன்னார்.

மதுரையில் தொ.ப. பணியாற்றிய காலத்தில்தான் சிறுவனாக இருந்ததால் அவரிடம் படிக்க முடியாமல் போனதே என வருத்தப்பட்டான் பதினெட்டாம்படியான். மேலும், மதுரை குறித்தும், அதன் தொன்மை குறித்தும் தொ.ப.விடம் பேச மீனாட்சி என்ற தாய்த்தெய்வத்தின் சிறப்பை, பட்டம் சூடி அரசாளும் பெண் தெய்வம் இந்தியாவிலேயே மீனாட்சிதான் என பல விசயங்களை சொன்னார். 

அழகர் கல்யாணத்துக்கு வராமல் துளுக்க நாச்சியார் வீட்டுக்கு கோவித்துக்கொண்டு போவது பற்றி மக்கள் சொல்லும் கதைகளைப் பற்றி தொ.ப.விடம் கேட்க ‘நம்ப முடியாத, விடை சொல்ல முடியாத கேள்விகளுக்கு கதைகளை விடையாகச் சொல்வது நாட்டார் மரபு’ என எடுத்துரைத்தார். அப்பொழுது அவரது பேத்தி மதுரா வந்து தாத்தாவிடம் ஏதோ கேட்க அவர் ‘இங்கபாரு, மதுரையில இருந்து வந்துருக்காங்க. வணக்கம் சொல்லு’ எனச் சொல்லச் சொன்னார். அந்தச்சிறுமியும் பதினெட்டாம்படியானுக்கு வணக்கம் சொல்லியது. தொ.ப.வின் குணமும், அவரது வீடும் அவனுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது. 

தொ.ப. பதினெட்டாம்படியானிடம் ‘நீங்க பாலிடெக்னிக்கில் என்ன படிக்கிறீங்க?’ எனக் கேட்க ‘எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்’ எனச் சொன்னான். உடனடியாக அவர் ‘படிப்பது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் ஆனால் நீங்கள் தமிழ் நேசன்’ என்றார் சிரித்தபடி. மேலும், ‘உங்கள் பாடங்களைத் தாண்டி நிறைய வாசிங்க. குறிப்பா வயதான மனிதர்களை கண்டு நிறையப் பேசுங்க. அவங்களோடு உரையாடுங்க. திருவிழாக்குள்ள அலைந்து திரிந்து என்னென்ன விதமான வேண்டுதல்கள், எத்தனைவிதமான மக்கள், திருவிழாக் குறித்த கதைகளை சேகரிங்க.’ என்றார். தொ.ப.வின் துணைவியார் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்தார். அவர்தான் இப்பொழுதே கிளம்பினால்தான் ஊருக்குப் போக முடியும் எனச் சொல்லிக் கிளம்ப, அவர்கள் அந்த இளைஞனை சாப்பிட வைத்தனர். சாப்பிட்டு முடித்து அவரிடம் விடைபெற்றுக் கிளம்பும்போது, தொ.ப. தான் எழுதிய ‘விடுபூக்கள்’ என்ற நூலைக் கொடுத்தார். பதினெட்டாம்படி அவரிடம் கையொப்பம் கேட்டுவாங்கிக்கொண்டான். 

வாசல்வரை வந்து சிரித்தபடி விடைகொடுத்தார் தொ.ப. மாடியிலிருந்து இறங்கி வீதியில் நடக்கத்தொடங்கிய பதினெட்டாம்படியான், தெருமுக்குத் திரும்பிய கணத்தில் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பு கதவு மணிகள் அதிர்ந்து ஒலித்தது. இரவுப்பூசை செய்த பூசாரி கருப்பன் சிரிக்கிறான் எனச் சொல்லிக்கொண்டார்.

-சித்திரவீதிக்காரன்

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தேசிய நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்களின் பெயரில் மாவட்ட அளவில் சிறந்த நூலகருக்கான விருதும், சிறந்த வாசகர் வட்டத் தலைவருக்கான நூலக ஆர்வலர் விருதும் வழங்கிவருகிறது. இந்தாண்டு தல்லாகுளம் நூலகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வாசகர் வட்டத் தலைவருக்கான “நூலக ஆர்வலர் விருது” எனக்கு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை வழங்கிய தல்லாகுளம் நூலகர் திரு. கி. ஆறுமுகம் அவர்களுக்கும், மாவட்ட நூலக அலுவலர் அவர்களுக்கும் நன்றிகள் பல.

சென்னையில் நடைபெற்று வந்த விருது வழங்கும் விழா இந்தாண்டு எஸ். ஆர். அரங்கநாதன் அவர்கள் பிறந்த சீர்காழியிலேயே நடைபெற்றது. அதற்காக மகிழ்வுந்தில் அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சீர்காழிக்கு சென்றோம். எங்களுடன் தல்லாகுளம் நூலகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்துதந்த புரவலர் இராமசந்திரக்குமார் (குமார் மெஸ் உரிமையாளர்) அவர்களும், பேராசிரியர் பாலகிருஷ்ணன், முருகேசன் அவர்களும் வந்தனர்.

விருது வழங்கும் நிகழ்விற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களும், அந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர். நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் இந்த விழாவை ஒருங்கிணைத்தார். விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தல்லாகுளம் நூலகத்தின் வாசகர் வட்டம் வாயிலாக பல்வேறு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் சுப்பாராவ், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார், பேரா.பாலகிருஷ்ணன், கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன், வழக்கறிஞர் கா.பிரபுராஜதுரை, வழக்கறிஞர் பெ.கனகவேல், வழக்கறிஞர் ஜெயமோகன், மருத்துவர் ராஜன்னா, எழுத்தாளர் சு. ரகுநாத், லயன் முத்துக்கிருஷ்ணன், ராஜ்குமார், இளங்கோ, ஜோதியம்மாள், கார்த்திக், ஜெயராமன், செல்வி. நிவேதா போன்ற பலரும் வாசகர் வட்டக் கூட்டங்களின் போது வந்து உரையாற்றியிருக்கிறார்கள்.

தல்லாகுளம் நூலகரான ஆறுமுகம் அவர்களின் ஒத்துழைப்பில் இந்த வாசகர் வட்ட நிகழ்வுகள் சாத்தியமானது. நூலகத்திற்கு போட்டித் தேர்வு மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் ஆகியோரது படங்களையும், புத்தகம் குறித்த ஓவியங்களையும் நூலகச்சுவரில் வரைந்த ஓவியர் ராகேஷ் அவர்களுக்கும் இக்கணத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

உலக புத்தக தினவிழா, தேசிய நூலக வாரவிழா, தூங்காநகர நினைவுகள் நூலுக்கான நிகழ்ச்சி, கி.ரா.வைக் கொண்டாடுவோம், தொ.ப. பிறந்தநாள் விழா போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம்.

தொ.ப.வின் பிறந்த நாளையொட்டி அறியப்படாத தமிழகம் நூலை அனைவருக்கும் வழங்க உதவிய சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு நன்றி. பதாகைகளை வடிவமைத்துக் கொடுத்த ஹக்கீமுக்கு நன்றி.

2024இல் மாதம் ஒரு நிகழ்வு எனத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முயற்சிகளைச் செய்ய உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

1964இல் மதுரைக்கு பதினொரு வயதில் தன் பாட்டியோடு சிறுபையனாக வந்திறங்கினார் டி.கே.சந்திரன். வறுமை கற்றுத்தந்த பாடங்களோடு கடும் உழைப்பையும் சேர்த்து வாழ்வில் முன்னேறிய கதைதான் அறக்கயிறு. டி.கே.சந்திரன் தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளையும் அவர்களின் உழைப்பையும் குறித்து எழுதிய நூல். டி.கே.சந்திரன் அவர்களின் வாழ்வை வாசிக்கும்போது மதுரையின் ஒரு காலகட்டத்தின் கதையை நாம் அறியலாம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த நூலை எனக்கு வழங்கினார்.

1953இல் தாயாரின் ஊரான சின்னாண்டிபாளையத்தில் பிறந்தவர் டி.கே.சந்திரன். திருப்பூர் அவினாசி அருகே உள்ள தேவராயம்பாளையம்தான் டி.கே.சந்திரனின் சொந்த ஊர். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா தறியில் துணிமட்டும் நெய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை தானே விற்பனை செய்யவும் தொடங்கினார்.

டர்க்கி காட்டனில் இருந்து தயாரிக்கப்படும் துண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் பிரத்யேகமான மக்கம் தறிகள் மதுரையில் இருந்தன. டி.கே.சந்திரனுடைய அப்பா மதுரைக்கு வந்து புதிய நெசவு நுட்பங்களை அவ்வப்போது அறிந்து செல்வார். மதுரையிலிருந்த உறவினர் ஒருவரின் ஆலோசனையில் 1962இல் ‘கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம்’ என்ற கடையை கீழவாசலில் தொடங்கினார். கடையை டி.கே.சந்திரனின் தாய்மாமாவும் சித்தப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாய்மாமாவிற்கு சமைத்துப்போட பாட்டி உண்ணாமலையோடு கடைக்கு உதவியாக இருக்க சிறுவயது டி.கே.சந்திரனையும் மதுரைக்கு அவரது அப்பா அனுப்பிவைக்கிறார். திருப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடியாக வர முடியாத காலம். பழனி வந்து அங்கிருந்து சொக்கன் டிரான்ஸ்போர்ட் பேருந்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மதுரை வருகிறார்கள். அப்போது நகரப்பேருந்து கட்டணம் 10 பைசா.

காலையில் எழுந்து கடையைத் திறந்துவைத்து சுத்தம் செய்துவிட்டு பள்ளிக்குச் சென்று மீண்டும் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு கடையிலுள்ள தாய்மாமாவிற்கு சாப்பாடு கொண்டுசென்று கொடுப்பது இவரது பணியாக இருந்தது. மாலைவேளைகளில் கடைக்கு வருபவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க, கடையை கவனித்துக்கொள்ள என உதவியாக இருக்கிறார்.

5 பைசா தினமும் அவருக்கு அவங்க மாமா கொடுப்பார். அதில் பக்கோடா வாங்கி இரவு உணவுக்கு தொட்டுக் கொள்வது, அதை சேர்த்துவைத்து 25 பைசாவில் தியேட்டரில் படம் பார்ப்பது என அந்தக் காலத்தை நம் கண்முன் கொண்டுவருகிறார். மரக்கட்டை பேனா என அழைக்கும் நேவி பேனா பற்றி வாசிக்கையில் நம்முடைய பால்ய நினைவுகளும் மனதில் எழுகிறது.

மதுரை சுங்குடி சேலை உருவான கதையை நூலினூடாக சொல்கிறார். “சாயமிடுவதில் கைதேர்ந்த ஒரு சௌராட்டிரர் நெய்த துணிகளில் சிறுசிறு கற்களை வைத்து நூலினால் முடிச்சிட்டு பின் அந்தத் துணிக்கு சாயமிட்டுப் பார்த்தார். நூல் முடிச்சு இருந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் சாயம் ஏறியிருக்க முடிச்சிட்ட பகுதிகள் வட்டமாக வெள்ளை நட்சத்திரம் போல் வடிவம் இருப்பதைக் கண்டுகொண்டார். இப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளே பின்னாலில் மதுரையின் பாரம்பரியச் சின்னமான சுங்குடி சேலை என அறியப்பட்டது.”

ஆறாம் வகுப்புவரை வீட்டிற்கு அருகிலிருந்த சந்திரா பள்ளியில் படித்துவந்த டி.கே.சந்திரன் ஏழாம் வகுப்பில் விருதுநகர் இந்து நாடார் பள்ளி சேர்கிறார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்திலிருந்த காலம். மதுரையில் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். அதன்பின் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருகிறது. கதர் வேட்டி போய் கலர் பார்டர் வைத்த வேட்டிகள் அறிமுகம் ஆகின்றன.

கந்தராஜ் என்ற கணக்கு ஆசிரியர் இவரது கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் அப்போதே 600க்கு 508 மதிப்பெண் வாங்கி கணக்கிலும் 100க்கு 100 வாங்கியிருக்கிறார். மெரிட் ஸ்காலர்சிப்பில் 500 ரூபாய் உதவித்தொகை பெற்று அப்போதிருந்த கல்லூரி புதுமுக வகுப்பான பியூசி-க்கு அமெரிக்கன் கல்லூரியில் சேர்கிறார். இவரது தமிழ் ஆசிரியராக சாலமன் பாப்பையா இருந்திருக்கிறார்.

அமெரிக்கன் கல்லூரியிலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பொறியியல் படிக்க விரும்பியிருக்கிறார். தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மாணவனின் வயது 21ற்குள் இருக்க வேண்டும். இவர் பிறந்த வருடம் 1950 எனத் தெரியாமல் சர்டிபிகேட்டில் இருந்ததால் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது. பிறகு தியாகராசர் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் சேர்கிறார். இவரது அண்ணன் ‘நீ என்ன வாத்தியாராகவா போகிறாய்? எனகேட்டு ஒரு யோசனை சொல்கிறார். பிறகு பி.எஸ்.சி பிசிக்ஸ் படிப்பை பாதியில்விட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிகவியல் சேர்கிறார்.

படிப்பை முடித்தபின் டெலிகாம் டிபார்ட்மென்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விண்ணப்பத்தை பார்த்து போஸ்ட்கார்டில் மதிப்பெண்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி கடிதம் வர தேர்வாகி மத்திய அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். சென்னையில் இரண்டு மாத பயிற்சி முடிந்து மதுரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலைக்கு வருகிறார். அப்போது (1975) இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவிக்கிறார்.

1976இல் சேலத்தில் ஒரு புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அப்போது 1000 போஸ்ட்கார்டுகளில் சேலம் டைரக்டரியைப் பார்த்து ஊரிலுள்ள முக்கிய ஆட்களுக்கு செந்தில்முருகன் காதி வஸ்திராலயம் என்ற புதுக்கடைக்கு ஆதரவு தரும்படி கடிதம் போடுகிறார். இவரது இந்த உத்தி பலனளித்து அந்தக் காலத்திலேயே ஒரே நாளில் 3000 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது.

1979இல் மதுரை ஆரியபவன் அருகே ஐந்தாவது புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுத்து கடையைப் பார்த்துக் கொள்ளும் சூழல். 1985இல் மத்திய அரசு வேலையை விட்டு குடும்ப நிறுவனத்தை பார்த்துக் கொள்ளத் தொடங்குகிறார். 2020இல் 40,000 பேர் பணிபுரியும் நிறுவனமாக அவர்களது நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. மதுரையில் மட்டுமல்ல, ஆசியாவிலே பெரிய திரையரங்காக இருந்த தங்கம் திரையரங்கு இருந்த இடத்தில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடையையும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை என்ற பெயரில் நகைக்கடையும் இவர்களுடையதுதான்.

டி.கே.சந்திரன் தன் வாழ்வில் வாசிப்பு, பயணம் ஏற்படுத்திய மாற்றங்களையும் எழுதியிருக்கிறார். தரத்தை முன்னிறுத்தி அறத்தோடு தொழிலை முன்னேற்றிய கதையையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார். அவரது கதையாக மட்டும் நில்லாமல் இந்நூல் வாழ்வில் கடின உழைப்பால் முன்னேறிய ஜி.டி.நாயுடு, இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார், அப்துல்கலாம், ஆர். பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், தைரோகேர் வேலுமணி, சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்பிரமணியம், எடிட்டர் லெனின், சூழலியளாளர் நித்யானந்தம், களப்பணியாளர் மாணிக்க அத்தப்ப கவுண்டர், மதுரை காந்திமதி அம்மாள், உமா பிரேமன், அன்புராஜ் என பலரது கதையையும் சொல்லியிருக்கிறார். இதில் ஜி.டி.நாயுடு தவிர மற்றவர்களை நேரில் சந்தித்தும் இருக்கிறார். பவா செல்லத்துரை யூடியுப் உரைகள் டி.கே.சந்திரன் அவர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அவரோடு நட்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

அறக்கயிறு வாசித்து முடிக்கையில் “வறுமை என்பது சிந்தனையின் வறுமையாக இருக்க கூடாது. நாம் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். கடின உழைப்பும் செயலில் தெளிவும் சமூகத்தின் மீதான அக்கறையும் இருந்தால் கட்டாயம் நாமும் வெல்லலாம்” என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. இந்நூல் சுயமுன்னேற்ற நூல் அல்ல. ஆனாலும், வாசித்து முடித்ததும் நம்முள் உத்வேகம் எழும்.

அறக்கயிறு, வம்சி பதிப்பகம்

மீனாட்சியம்மன் திருக்கல்யாண விழாவில் தொடங்கி அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு நிறைவடைகிறது எம்.ஏ.சுசீலா அவர்களின் தடங்கள் நாவல். தொடக்கமும் முடிவும் கொண்டாட்டமாக அமைந்தாலும் வாழ்வு எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்கிறது கதை. எம்.ஏ.சுசீலா தஸ்தாயெவெஸ்கியின் முக்கியமான நாவல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். ஏராளமான சிறுகதைகள் எழுதியவர்.

நாவல் முழுவதும் ஏராளமான பெண் கதாமாந்தர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள், தடங்கல்கள் அவற்றைத்தாண்டி தடம்பதித்த பெண்கள் என பலரது கதைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியை தம் தோழியோடு மின்னஞ்சல் வழியாக தான் சந்தித்த பல பெண்களின் வாழ்க்கை கதைகளைப் பகிர்ந்து கொள்வதுதான் கதைக்களம். நாவலை வாசிக்கையில் நாம் அறிந்த பலரது கதைகளை நினைவூட்டினாலும் கதை சொல்லும் விதத்தில் தனது பார்வையையும் சேர்த்தே எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர். கதாமாந்தர்களின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவர்களுக்கான பிரச்சனை பொதுவாகத்தான் இருக்கிறது. குடும்பம், திருமணம், பணிச்சூழல், சமூகம் என பல தளங்களில் பெண்கள் இயங்கினாலும் அவர்கள் வாழ்வில் மையம் கொண்டுள்ள விசயங்களை நாவல் பேசுகிறது.

கணவனின் சந்தேக குணத்தால் கஷ்டப்படும் பெண், கணவனின் பேராசையால் மரணமடைந்த பெண், கணவனின் பதவியாசைக்காக குடும்பவாழ்க்கையை விட்டுவிலகிய பெண், கட்டாயத்திருமணத்தால் வாழ்க்கையைத் தொலைத்த பெண், விடலைப்பையனின் காதலுக்காக தன்னை மாய்த்துக்கொண்ட பெண், துறவு வாழ்க்கையை உதறி தனித்து வாழ முற்படும் பெண், திருமணம் நின்றுபோனதால் வாழ்வின் மீதான நம்பிக்கையிழந்த பெண், தன் வாசிப்பால் வாழ்வை புரிந்துகொண்ட பெண், திருமணத்தைத்தாண்டி சாதித்த பெண் என கதை முழுக்க பெண்கள்.

தான் விரும்பிய பெண் விபத்தில் கால்களை இழந்தபோதும் அவளை விரும்பி ஏற்றுக்கொண்ட ஆண், தன் மகள்கள், மனைவிக்காக தன்னை மாற்றிக் கொண்ட ஆண் என கதையில் வரும் இரண்டு ஆண்கள் கவனிக்க வைக்கிறார்கள். வெறும் சம்பவங்களாக மட்டும் கதையைச் சொல்லாமல் வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் விதமாக கதையை கொண்டு செல்வது சிறப்பு. பேராசிரியையாகப் பணியாற்றும் பெண்ணுக்கும், வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கும் ஒரே பிரச்சனை சந்தேகம் கொண்ட கணவன். பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்யச் செல்லும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக வருபவர்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாவல் பேசுகிறது.

கல்லூரியை மையம் கொண்ட கதையென்பதால் கல்லூரியின் அமைப்பு, மாணவிகளின் குணநலன்கள், அங்கு நடைபெறும் பல்வேறு விழாக்கள், குறிப்பாக பொங்கல் விழா, ஆசிரியைகளின் பணிச்சூழல், நாட்டுநலப்பணித்திட்டத்திற்குச் செல்வது, ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எனப் பல விசயங்களை நாவல் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

மதுரையில் நிகழும் கதைக்களம் என்பதால் நாவலை வாசிப்பது மனதிற்கு நெருக்கமாகயிருக்கிறது. மீனாட்சியம்மன் கோவில், மேலமாசிவீதி, டவுன்ஹால்ரோடு, பத்துத்தூண் சந்து, தெப்பக்குளம், குருவிக்காரன்சாலை, பெசண்ட் ரோடு, கன்னடியர் மருந்துக்கடை, கௌரி கங்கா ஹோட்டல், செல்லத்தம்மன் கோவில், காமராஜர் சாலை, கீழக்குயில்குடி சமணமலை என கதாமாந்தர்கள் உலவும் இடங்களில் அலைந்துதிரிவதால் கதைமாந்தர்களை நேரில் பார்த்த உணர்வு. மதுரை மீதான நூலாசிரியரின் நேசம் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது.

தடங்கள் நாவலை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. ஓவியர் ஜீவா மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களோடு கூடிய அழகானதொரு முகப்போவியத்தை வரைந்திருக்கிறார்.

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தேனியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வீரபாண்டி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் அன்று தொடங்கி அடுத்த செவ்வாய் வரை எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பூப்பல்லக்கு, தேரோட்டம், ஊர்பொங்கல் என விழா நிகழ்வுகள்.

பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் கண்நோய் தீர்த்த கௌமாரி பல லட்சக்கணக்கான மக்களின் குறைகளையும் தீர்த்து வருவதை ஆண்டுதோறும் கூடும் நேர்த்திக்கடன்களின் வழியாக அறியலாம். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அக்கினிச்சட்டி எடுப்பது, ஆயிரம் கண் பானை எடுப்பது, முல்லையாற்று நீரை கொண்டுவருவது என பலவிதமான நேர்த்திக்கடன்களை கௌமாரிக்கு செலுத்துகின்றனர்.

தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டி குடும்பம்குடும்பமாக கோவிலுக்கு வந்து கிடாவெட்டி கொண்டாடிய கதைகளை இங்குவருகின்ற மூத்தவர்களிடம் கேட்கலாம். காலமாற்றத்தில் வாகனங்கள் மாறினாலும் கௌமாரியை நோக்கிவரும் அடியவர்களின் கூட்டம் குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டுதான் வருகிறது.

கோவிலுக்கு அருகில் ஒருபுறம் முல்லையாறும், மறுபுறம் உள்ள பெருந்திடலும் இத்திருவிழாவை பெருந்திருவிழாவாக மாற்ற உதவுகின்றன. நூற்றுக்கணக்கான கடைகள், குடைராட்டினம் தொடங்கி ஏராளமான பொழுதுபோக்கு விசயங்கள் மக்களை மகிழ்வூட்ட காத்திருக்கின்றன. அந்நாட்களில் தேனி வீரபாண்டித் திருவிழா மக்கள் கூடும் பெரும் சந்தையாக விளங்கியிருந்ததை சுற்றிப் பார்க்கும்போது அறிய முடிகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா சமயத்தில் தேனி வீரபாண்டித் திருவிழா குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும்போது போகவேண்டும் என பலமுறை திட்டமிட்டுருக்கிறேன். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பாக இருக்கும் என உடன்பணியாற்றும் அண்ணன் ஒருவர் சொன்னபோது வெள்ளிக்கிழமை செல்ல திட்டமிட்டோம். 12.05.23 வெள்ளியன்று மதுரையிலிருந்து மாலை தேனி நோக்கிப் புறப்பட்டோம். தேனி பேருந்து நிலையத்தில் இறங்கி ஆளுக்கொரு தோசை சாப்பிட்டு வீரபாண்டி செல்லும் சிறப்பு பேருந்தில் சென்றோம்.

வீரபாண்டியில் இறங்கி கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். வழிநெடுக கடைகள். கோவிலை நெருங்குவதற்கான சமிக்கையாக கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்குகிறது. முல்லையாற்றிலிருந்து தீச்சட்டிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. இரவில் ஆறு மின்விளக்கொளியிலும், தீச்சுடரிலும் அழகாகத் தெரிந்தது. புதிய தீச்சட்டியை வைத்து வணங்கி, தீ வளர்த்து அருள் இறங்கி கோவிலை நோக்கி தீச்சட்டியை சுமந்து செல்கின்றனர். தீச்சட்டி, அலகு குத்துதல், நீர்குடம், ஆயிரம்கண்பானை என ஒவ்வொரு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முன்னாலும் நையாண்டி மேளக் காரர்கள், டிரம்செட் இசைப்பவர்கள் வருகின்றனர். பலர் மருளேறி ஆடிவர அவர்கள் முன்னால் ’ரண்டக்ரண்டக்’ ஓசைக்கே ஆடிவருகின்றனர்.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரம் முழுவதும் மக்கள் வெள்ளமாய் போவதும் வருவதுமாகயிருக்கிறார்கள். வீரபாண்டி கோவிலைச் சுற்றியுள்ள பகுதி பெருவெளியாகயிருப்பது இங்கு நிறைய கடைகள், குடைராட்டினங்கள் போடுவதற்கு வசதியாகயிருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் போடப்படும் சித்திரைப் பொருட்காட்சியைவிட பத்து மடங்கு பெரிதாயிருப்பதற்கு இதுவே காரணம்.

குழந்தைகள் ஏறிக்குதிக்கும் பலூன்கள், வட்டமாய் சுழன்று செல்லும் டிராகன், குதிரை-கார்-பைக் என சுற்றிவரும் சிறிதும்பெரிதுமான குடைராட்டினங்கள், அல்வாக்கடைகள், ஏத்தங்காய் வற்றல்கள், மிளகாய்பஜ்ஜி டெல்லி அப்பளக்கடைகள், பானிபூரி மாசல்பூரிக்கடைகள் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கடைகள். குடைராட்டினத்தைப் போல அந்த வெளியையே சுற்றிச்சுற்றி வரும் மக்கள். எது எடுத்தாலும் 10 ரூபாய் கடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் என ஏராளமான கடைகள்.

முதல் செவ்வாயன்றும், வெள்ளியன்றும் நல்ல கூட்டம் வருகிறது. நள்ளிரவு முழுக்க ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் கோவிலை நோக்கி வந்தபடியிருக்கிறது. விடியவிடிய மக்கள் கூட்டங்கூட்டமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் நள்ளிரவில் கனமான கல்தோசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடலில் ஒருபுறம் இரவு நாடகம் நடக்கிறது. அதைப்பார்க்க ஏராளமான கூட்டம்.

தீ வளர்த்த சட்டிகளோடு ஆடிவரும் மக்கள் கோவிலுக்கு அருகில் அதை செலுத்திவிட்டு கௌமாரியம்மனை வணங்கிச் செல்கிறார்கள். தேரிலேறி கௌமாரி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளியன்று புறப்படும் கௌமாரியம்மன் தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாகச் சுற்றி திங்களன்று நிலையை அடைகிறது. செவ்வாயன்று ஊர்ப்பொங்கலோடு திருவிழா நிறைவடைகிறது. சு.வேணுகோபால் எழுதிய ஆட்டம் நாவலில் தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவைப் பற்றி எழுதியதை வாசித்திருக்கிறேன். அதை மீண்டும் தேடி வாசிக்க ஆசை.

விடியவிடிய அக்கினிச்சட்டி ஊர்வலம் பார்த்து அதிகாலையில் கிளம்பினோம். பேருந்து நிறுத்தும் இடத்தை நோக்கி நடக்க பெரும்பாலான கடைக்காரர்கள் ஆங்காங்கே அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தேனியிலிருந்து வரும் பேருந்து மக்களைக் கொண்டுவந்துவிட்டு திருவிழாப் பார்த்தவர்களை அழைத்துச் செல்கிறது. தேனி பேருந்து நிலையமருகே சூடாக ஒரு தேனீரை அருந்தி மதுரையை நோக்கிப் புறப்பட்டோம்.

நன்றி – கணேசன், சாலமன்