வீரபாண்டித் திருவிழா

Posted: மே 28, 2023 in ஊர்சுத்தி, பகிர்வுகள்
குறிச்சொற்கள்:,

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தேனியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வீரபாண்டி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் அன்று தொடங்கி அடுத்த செவ்வாய் வரை எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பூப்பல்லக்கு, தேரோட்டம், ஊர்பொங்கல் என விழா நிகழ்வுகள்.

பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் கண்நோய் தீர்த்த கௌமாரி பல லட்சக்கணக்கான மக்களின் குறைகளையும் தீர்த்து வருவதை ஆண்டுதோறும் கூடும் நேர்த்திக்கடன்களின் வழியாக அறியலாம். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அக்கினிச்சட்டி எடுப்பது, ஆயிரம் கண் பானை எடுப்பது, முல்லையாற்று நீரை கொண்டுவருவது என பலவிதமான நேர்த்திக்கடன்களை கௌமாரிக்கு செலுத்துகின்றனர்.

தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டி குடும்பம்குடும்பமாக கோவிலுக்கு வந்து கிடாவெட்டி கொண்டாடிய கதைகளை இங்குவருகின்ற மூத்தவர்களிடம் கேட்கலாம். காலமாற்றத்தில் வாகனங்கள் மாறினாலும் கௌமாரியை நோக்கிவரும் அடியவர்களின் கூட்டம் குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டுதான் வருகிறது.

கோவிலுக்கு அருகில் ஒருபுறம் முல்லையாறும், மறுபுறம் உள்ள பெருந்திடலும் இத்திருவிழாவை பெருந்திருவிழாவாக மாற்ற உதவுகின்றன. நூற்றுக்கணக்கான கடைகள், குடைராட்டினம் தொடங்கி ஏராளமான பொழுதுபோக்கு விசயங்கள் மக்களை மகிழ்வூட்ட காத்திருக்கின்றன. அந்நாட்களில் தேனி வீரபாண்டித் திருவிழா மக்கள் கூடும் பெரும் சந்தையாக விளங்கியிருந்ததை சுற்றிப் பார்க்கும்போது அறிய முடிகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா சமயத்தில் தேனி வீரபாண்டித் திருவிழா குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும்போது போகவேண்டும் என பலமுறை திட்டமிட்டுருக்கிறேன். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பாக இருக்கும் என உடன்பணியாற்றும் அண்ணன் ஒருவர் சொன்னபோது வெள்ளிக்கிழமை செல்ல திட்டமிட்டோம். 12.05.23 வெள்ளியன்று மதுரையிலிருந்து மாலை தேனி நோக்கிப் புறப்பட்டோம். தேனி பேருந்து நிலையத்தில் இறங்கி ஆளுக்கொரு தோசை சாப்பிட்டு வீரபாண்டி செல்லும் சிறப்பு பேருந்தில் சென்றோம்.

வீரபாண்டியில் இறங்கி கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். வழிநெடுக கடைகள். கோவிலை நெருங்குவதற்கான சமிக்கையாக கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்குகிறது. முல்லையாற்றிலிருந்து தீச்சட்டிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. இரவில் ஆறு மின்விளக்கொளியிலும், தீச்சுடரிலும் அழகாகத் தெரிந்தது. புதிய தீச்சட்டியை வைத்து வணங்கி, தீ வளர்த்து அருள் இறங்கி கோவிலை நோக்கி தீச்சட்டியை சுமந்து செல்கின்றனர். தீச்சட்டி, அலகு குத்துதல், நீர்குடம், ஆயிரம்கண்பானை என ஒவ்வொரு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முன்னாலும் நையாண்டி மேளக் காரர்கள், டிரம்செட் இசைப்பவர்கள் வருகின்றனர். பலர் மருளேறி ஆடிவர அவர்கள் முன்னால் ’ரண்டக்ரண்டக்’ ஓசைக்கே ஆடிவருகின்றனர்.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரம் முழுவதும் மக்கள் வெள்ளமாய் போவதும் வருவதுமாகயிருக்கிறார்கள். வீரபாண்டி கோவிலைச் சுற்றியுள்ள பகுதி பெருவெளியாகயிருப்பது இங்கு நிறைய கடைகள், குடைராட்டினங்கள் போடுவதற்கு வசதியாகயிருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் போடப்படும் சித்திரைப் பொருட்காட்சியைவிட பத்து மடங்கு பெரிதாயிருப்பதற்கு இதுவே காரணம்.

குழந்தைகள் ஏறிக்குதிக்கும் பலூன்கள், வட்டமாய் சுழன்று செல்லும் டிராகன், குதிரை-கார்-பைக் என சுற்றிவரும் சிறிதும்பெரிதுமான குடைராட்டினங்கள், அல்வாக்கடைகள், ஏத்தங்காய் வற்றல்கள், மிளகாய்பஜ்ஜி டெல்லி அப்பளக்கடைகள், பானிபூரி மாசல்பூரிக்கடைகள் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கடைகள். குடைராட்டினத்தைப் போல அந்த வெளியையே சுற்றிச்சுற்றி வரும் மக்கள். எது எடுத்தாலும் 10 ரூபாய் கடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் என ஏராளமான கடைகள்.

முதல் செவ்வாயன்றும், வெள்ளியன்றும் நல்ல கூட்டம் வருகிறது. நள்ளிரவு முழுக்க ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் கோவிலை நோக்கி வந்தபடியிருக்கிறது. விடியவிடிய மக்கள் கூட்டங்கூட்டமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் நள்ளிரவில் கனமான கல்தோசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடலில் ஒருபுறம் இரவு நாடகம் நடக்கிறது. அதைப்பார்க்க ஏராளமான கூட்டம்.

தீ வளர்த்த சட்டிகளோடு ஆடிவரும் மக்கள் கோவிலுக்கு அருகில் அதை செலுத்திவிட்டு கௌமாரியம்மனை வணங்கிச் செல்கிறார்கள். தேரிலேறி கௌமாரி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளியன்று புறப்படும் கௌமாரியம்மன் தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாகச் சுற்றி திங்களன்று நிலையை அடைகிறது. செவ்வாயன்று ஊர்ப்பொங்கலோடு திருவிழா நிறைவடைகிறது. சு.வேணுகோபால் எழுதிய ஆட்டம் நாவலில் தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவைப் பற்றி எழுதியதை வாசித்திருக்கிறேன். அதை மீண்டும் தேடி வாசிக்க ஆசை.

விடியவிடிய அக்கினிச்சட்டி ஊர்வலம் பார்த்து அதிகாலையில் கிளம்பினோம். பேருந்து நிறுத்தும் இடத்தை நோக்கி நடக்க பெரும்பாலான கடைக்காரர்கள் ஆங்காங்கே அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தேனியிலிருந்து வரும் பேருந்து மக்களைக் கொண்டுவந்துவிட்டு திருவிழாப் பார்த்தவர்களை அழைத்துச் செல்கிறது. தேனி பேருந்து நிலையமருகே சூடாக ஒரு தேனீரை அருந்தி மதுரையை நோக்கிப் புறப்பட்டோம்.

நன்றி – கணேசன், சாலமன்

பின்னூட்டமொன்றை இடுக