வேசடை – ஏக்நாத்

Posted: பிப்ரவரி 4, 2024 in வழியெங்கும் புத்தகங்கள்

முன்பு ஆடு-மாடு என்ற வலைப்பக்கத்தை விரும்பி வாசிப்பேன். ஏக்நாத் எழுதும் கதைகள் அவரது கிராமத்திற்கே நம்மையும் அழைத்துச் சென்றுவிடும். அவர் சென்னையில் வசித்துவந்தாலும் தன்னுடைய கிராமத்தை, ஆடு மாடு கிடையை, வயல்வெளிகளை தன்னோடு சுமந்தபடியேயிருக்கிறார்.

வேசடை என ஏக்நாத் எழுதிய குறுநாவலை வாசித்தேன். பனஞ்சாடி என்ற மனிதரின் வழியே மந்தையூரின் கதையை எழுதியிருக்கிறார். வேசடை என்றால் நெல்லை வழக்கில் எரிச்சல், தொல்லை என்ற பொருளில் சொல்லப்படுகிறது. பட்டா கிடைக்காமல் அலைபவரின் எரிச்சல் என்ற பொருளில் இந்நாவலின் தலைப்பை வேசடை என வைத்திருக்கிறார்.

பனஞ்சாடி என்ற பெரியவர் தன் வீட்டிற்கு பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்திற்கு அலைகிறார் அலைகிறார் அலைந்து கொண்டேயிருக்கிறார். மனுவை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் என அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் பனஞ்சாடி. பின் பட்டா வாங்குவது லேசுப்பட்ட காரியமா?

பனஞ்சாடியின் இயற்பெயர் சங்கரலிங்கம். ஆனால், அந்தப் பெயர் அவருக்கே நினைவிலில்லை. அவருடைய தாத்தா பனஞ்சாடி என்ற கிராமத்திலிருந்து மனைவியின் ஊரில் வந்து தங்கிவிடுகிறார். அதனால் அந்த ஊர்க்காரர் என்ற பெயரில் பனஞ்சாடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள் அந்த வீட்டு ஆண்கள். எங்க ஊரிலும் பலரை அவர்கள் மனமுடித்துவந்த ஊர்ப்பெயரால் அழைக்கப்படுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

பனஞ்சாடி ஆடு மேய்ப்பவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரது மகனோ வீடுகட்டும் வேலையைப் பழகி கொத்தனாராகிவிடுகிறான். பனஞ்சாடியின் மகள் வழிப்பேரன் குத்தாலம் மாடு மேய்க்கிறான். அதனால் அவனுக்கு பொண்ணு கிடைப்பது குதிரைக் கொம்பாகயிருக்கிறது. பனஞ்சாடியின் மனைவி லட்சுமியாட்சிக்கு மருமகள் மேல் ஏகப்பட்ட பிராது இருக்கிறது. மாடியில் வந்து பனஞ்சாடியிடம் அவளை குறித்து குறைகூறிக்கொண்டேயிருக்கிறாள்.

இருமினாலும் பீடியைக் குடித்து இதம் காணும் பனஞ்சாடி. தன் ஊரில் மந்தையில் வீடுகள் வந்த கதையை நினைத்துப் பார்க்கிறார். ஆடுமாடுகளை கட்டிய இடங்கள் இன்று வீடுகளாகிவிட்டன. அதேபோல அவர் ஊரிலுள்ள பெரிய வீட்டின் கதையை தெரிந்தவர்கள் ஓரிருவரே. அந்த வீட்டில் பீடிக்கடை வைத்திருக்கும் பாய்க்கும் அந்தக் கதை தெரியாது. அந்த வீட்டின் கதை தெரிந்தவர்களில் பனஞ்சாடியும் ஒருவர். ஆட்டுக்கான கூடு செய்வதிலும் பனஞ்சாடி வல்லவர்.

பனஞ்சாடியின் நண்பர்களான அம்மாசி, ராமசாமி, கந்தன் வழியாகவும் கதையை சொல்கிறார். அம்மாசி அறுவடைக்காலத்தில் களத்திற்கருகில் கடை போட்டிருப்பார். மொச்சை, கடுங்காப்பி என அவரிடம் கொத்துக்காரர்கள் வாங்கி சாப்பிட்டு கூலிபோட்டதும் நெல்லாக கொடுத்துவிடுவார்கள். இந்தக் கதைகளை வாசிக்கையில் சிறுவயதில் பார்த்த அறுவடைக்கால நினைவுகள் மேலெழுந்தன. பனஞ்சாடிக்கும் சுடலிக்குமான காதல் அத்தியாயம் அருமை. பனஞ்சாடி பட்டா வாங்குவது, தன் மகள் வயிற்று பேரன் குத்தாலத்திற்கு திருமணம் முடிப்பது போன்ற செயல்களை நிறைவேற்றியதோடு இயற்கை எய்திவிடுகிறார்.

பனஞ்சாடியுடன் மாடு மேய்ப்பவரின் முன்னோர் ஒருவர் வயலில் மேயும் மாட்டை பத்திவிட அரிவாளை வீச அது மாட்டின் நாக்கை துண்டித்துவிடுகிறது. பின்னாளில் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் வாய்பேசாமல் ஆகிவிடுகிறார்கள். இதேபோல ஒரு கதையை என்னுடைய பள்ளி ஆசிரியர் பத்தாம் வகுப்பு படிக்கையில் சொல்லியிருக்கிறார். மாட்டை உயிரோடு தோலை உரித்த குடும்பத்தின் பிள்ளைகளின் கால்கள் மாட்டின் கால்களைப் போல ஆனதாக சொன்னார்.

கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பெரிய வீடுகள் பின்னாலுள்ள கதை, மூத்தவர்களுக்கும் ஊருக்குமான பிணைப்பு, காலம் மாறமாற அதன் அடையாளங்களை இழத்தல் எனப் பல விசயங்களை வேசடை நினைவூட்டுகிறது. இந்த நாவலை வாசிக்கையில் பனஞ்சாடியின் முகமாக மறைந்த ’பூ ராமு’ அவர்களின் முகமே நினைவிலிருந்தது.

நூறு பக்கங்களான இந்தக் குறுநாவலை வாசித்தபோது மந்தையூர் கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் ஏக்நாத். இவரது ஆடுமாடுகாடு, கெடைகாடு, ஆங்காரம் நூல்களை வாசிக்க வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக