Archive for the ‘பார்வைகள், பகிர்வுகள்’ Category

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிறார்களுக்கான திரைப்படங்களை ஜனவரி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை வேளைகளில் திரையிட்டு வருகின்றனர். The Red Balloon, Children of Heaven, Fly Away Home படங்கள் திரையிடப்பட்டன. திரையிடலுக்குப் பிறகு படம் குறித்த உரையாடல்களும் நடைபெற்றன. படம்பார்த்த சிறார்களும் பெற்றோர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பையும் வழங்கிவருகிறார்கள். பேராசிரியர் பிரபாகர் அய்யா திரைப்படங்களை காணும் கலையை இந்த உரையாடல்கள் வாயிலாக கற்றுக்கொடுப்பதாக உணர்கிறேன்.

The Red Balloon

1956இல் எடுக்கப்பட்ட The Red Balloon படத்தை முதன்முதலாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்த்தேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு அற்புதமாக படம் எடுத்திருக்கிறார்களே என்று எண்ணி வியந்தேன்.

Albert Lamorisse இயக்கிய படம். அவருடைய மகன்தான் படத்தில் வரும் சிறுவன். ஒரு கம்பத்தில் சிக்கியுள்ள பலூனை எடுக்கும் சிறுவன் அந்த பலூனை தன் கூடவே வைத்துக்கொண்டு அலைகிறான். அவனது அன்பில் அந்த பலூனும் இணைந்து அவன் கூடவே திரிகிறது. பலூனோடு அந்தப் பையன் உரையாடுவதும் அதைக்கேட்டு அந்த பலூன் நடந்துகொள்வதும் சிறப்பு. அந்த பலூன் அவனோடு ஒளிந்து பிடித்தெல்லாம் விளையாடுகிறது. அந்த ஊரிலுள்ள மற்ற சிறுவர்கள் பொறாமையோடு சிகப்பு பலூனைத் தாக்குகிறார்கள். அந்தப் பையன் பலூன் உடைந்த சோகத்திலிருக்கும்போது ஊரிலுள்ள எல்லா பலூன்களும் சேர்ந்து வந்த அந்தப் பையனைத் தூக்கிச் செல்லும் காட்சி கவிதை.

Children of Heaven

ஆனந்தவிகடனில் செழியன் எழுதியபோது Children of Heaven படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து பின்னால் அந்தப் படத்தை பார்த்தேன். Majid Majidi  இயக்கிய மிக அற்புதமான படம்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அந்த திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்த்தபோது இன்னும் பல காட்சிகள் மனதைக் கவர்ந்தன. குறிப்பாக இலந்தை அடைதின்னும் சிறுமி என்னை பால்ய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றாள். ஏழ்மையான குடும்பத்தின் அன்றாட வாழ்வை அழகாகப் பதிவு செய்த படம். அண்ணன் தங்கை இடையிலான அன்பை மிக எதார்த்தமாகப் பதிவு செய்த படம். இந்தப் படம் குறித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு நன்றி.

Fly Away Home 

Carroll Ballard   இயக்கிய Fly Away Home  தாயை இழந்த மகளை ஆற்றுப்படுத்தும் தந்தையின் அன்பை, வாத்துகளை தாய்போல பார்த்துக் கொள்ளும் சிறுமி – பின்னாளில் தந்தை மேல் கொள்ளும் பாசம், பறக்கும் சிறிய கிளைடர் விமானம் மூலம் பறவைகளை வலசைக்கு அழைத்துச் செல்லும் காட்சி என ஏராளமான சிறப்புகள். படம் பார்க்கும் நாமும் சேர்ந்து பறக்கும் அனுபவத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த மூன்று படங்களையும் என் மகள் மதுராவோடு சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்க்க முடிந்தது. நாம் தொலைக்காட்சிகளில் அன்றாடம் காணும் திரைப்படங்களிலிருந்து இந்தப் படங்கள் மாறுபட்டிருப்பதைக் குறித்து மதுராவோடு தொடர்ந்து உரையாடி வருகிறேன். கலைஞர் நூற்றாண்டு நூலகம் சிறுவர்களுக்கான நிகழ்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றி.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராஜசிங்கமங்கலத்திலுள்ள உறவினர் இல்லத்திற்கு செல்லத் திட்டமிட்டோம். இராஜசிங்கமங்கலத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலம் குறித்து இணையத்தில் தேடியபோது காரங்காடு சூழலியல் சுற்றுலா பற்றி அறிய முடிந்தது. உப்பு நீரில் வளரும் அலையாத்தி தாவரங்களைக் காண பிச்சாவரம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் இராமநாதபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த காரங்காடு பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

இராஜசிங்கமங்கலம் சென்று அங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ள காரங்காட்டுக்குச் சென்றோம். காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து தமிழக வனத்துறையினர் காரங்காடு சூழலியல் சுற்றுலாவை நடத்திவருகின்றனர். இதில் படகு சவாரி, துடுப்பு சவாரி போன்ற விசயங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

படகு சவாரி செல்வதற்கு பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறுவர்களுக்கு 100 ரூபாயும் வாங்குகின்றனர். இது ஒரு மணி நேர படகு பயணத்திற்கான கட்டணம். பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு படகில் அமர்ந்தோம். காரங்காடு அழகான கடற்கரை கிராமம். ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. கரைகளில் மீன்பிடிப்படகுகள் நிற்கின்றன.

படகுப்பயணத்தின்போது இரண்டு பக்கங்களிலுமுள்ள அலையாத்தி மரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆலா, நீண்ட காலுள்ள நாரை, கடல்புறா போன்ற பறவைகளைப் பார்த்தோம். கரைப்பகுதிக்கு அருகில் மீனவர்கள் நீருக்குள் நடந்துபோய் வலைவீசி மீன்பிடிப்பதைக் காண முடிந்தது. மோட்டார் படகினை மிகவும் மெல்ல ஓட்டி வந்தனர். மிகக் குறைந்த ஆழமே உள்ள பகுதியில் படகு செல்கிறது.

ஓரிடத்தில் படகை நிறுத்தி மேடான இடத்தில் நம்மை இறக்கி விடுகின்றனர். சுற்றிலும் நீர் இருக்க நாம் அப்பகுதியில் இறங்குவது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. கடலினைப் பார்க்கும்போது உற்சாகம் அலைஅலையாய் வந்து சேர்கிறது. அங்கிருந்து படகில் ஏறியதும் கொஞ்சதூரம் கடலுக்குள் படகுப் பயணம்.

அலையில் படகு மெல்ல ஏறி இறங்க நம் மனமும் அதோடு சேர்ந்து இயங்குகிறது. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே படகு மீண்டும் வருகிறது. காரங்காடு தேவாலயம், கரையோர வீடுகள் வேடிக்கை பார்த்தபடி பயணம் நிறைவடைந்தது. காரங்காடு படகு குழாம் பயணச்சீட்டு எடுக்குமிடம் அருகில் சிறு உணவகம் ஒன்றிருக்கிறது. கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, கணவாய் கட்லெட், இறால் கட்லெட் கிடைக்கிறது. மேலும் தக்காளி சாதம், தயிர் சாதமும் கிடைக்கும். தேநீர், சர்பத், மோர் போன்ற குடினிகளும் கிடைக்கிறது. காரங்காடு தேவாலயத்திற்கு அருகில் ஒரு பழைய மண்டபம் ஒன்றுள்ளது.

காரங்காடு படகுப் பயணம் முடித்து மதுரை வரும் வழியில் பார்த்த கிராமங்களிலிருந்த நீர்நிலைகளை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை எங்கும் காணமுடியவில்லை. கிராம மக்களின் நீராதாரமாக விளங்கும் கண்மாய், குளங்களை அவர்கள் பராமரிப்பதைப் போல நமது ஊர்களிலும் பராமரித்தால் சிறப்பாக இருக்கும். 2023-இன் மறக்க முடியாத பயணமாகவும் காரங்காடு பயணம் அமைந்தது.

படங்கள் உபயம் : செல்லப்பா

காணொளி உபயம் : History with Madura

மாலைநேர மஞ்சள்வெயில் அடித்துக் கொண்டிருந்தது. பாளையங்கோட்டை தபால் நிலையத்திற்கு நேரேயிருந்த தெருவில் இருந்த வீடுகளை வேடிக்கை பார்த்தபடியே அந்த இளைஞன் வந்து கொண்டிருந்தான். மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பழைய காரை வீடுகளும், மஞ்சள் காவி அடித்த சுவர்களையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. சில வீடுகளைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்கள். தெருமுட்டும் இடத்தில் இருந்த வீட்டின் வெளிக்கதவைத் திறந்து மாடிநோக்கிச் சென்றான்.

அய்யா! என்று அழைத்தபடி வந்த குரலைக் கேட்டு வாசலருகே வந்தவர், வந்த இளைஞனை உள்ள வாங்க என்று வரவேற்பறையில் அமர வைத்தார். இடதுபக்கம் இரும்பு அடுக்குகளில் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பின்னால் இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். அதற்குமேலே பெரியார் படம் மாட்டப்பட்டிருந்தது. வந்திருந்த இளைஞனை எங்கிருந்து வற்றீங்க? என்ன பண்றீங்க? என விசாரித்தார் தொ.ப. என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.

‘அழகர்கோயிலிலிருந்து வற்றேங்கய்யா. எம் பேரு பதினெட்டாம்படியான். பாலிடெக்னிக் படிக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன். அவரது முகத்தில் புன்னகையும், அன்பும் அந்த இளைஞனின் மீது கவிழ்ந்தது. ‘அழகர்கோயிலிலிருந்து என்னைப் பார்க்க வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சிப்பா.’ என்றார். அழகர்கோயில் புத்தகம் வாசித்ததும் உங்களைப் பார்த்து, அழகர்கோயில், பதினெட்டாம்படிக்கருப்பு, சித்திரைத் திருவிழா பற்றியெல்லாம் பேசனும்னு ஆசையா இருந்துச்சுங்கய்யா. அதான் பாளையங்கோட்டைக்கு வண்டி ஏறிட்டேன்.’ என்றவரிடம், தொ.ப. ‘அழகாபுரிக்கோட்டையிலருந்து பாளையங்கோட்டைக்கு வந்துட்டீங்க’ என சிரித்தபடி சொன்னார். 

அழகர்கோயில் புத்தகம் எப்படிக் கிடைத்தது என விசாரித்தவரிடம் நூலை வாங்கிய விசயத்தைப் பற்றி விரிவாகச் சொன்னான். ‘கிடாரிப்பட்டியில் உள்ள கல்வெட்டுக்களைப் பார்க்க பசுமைநடை குழுவினர் வந்தபோது இவ்வளவுபேர் இந்த மலைக்கு எதுக்கு போறாங்கன்னு நானும் போய் பார்த்தேன். எங்க ஊர் மலையைப் பத்தி நிறையச் சொன்னாங்க. மதுரைன்ற பெயர் பொறித்த 2000 வருசத்துக்கு முந்தைய கல்வெட்டு இருக்குன்றது தொடங்கி நிறைய தகவல்கள் கிடைச்சுது. அப்ப நீங்க எழுதுன அழகர்கோயில் நூல் பத்தியும் குறிப்பிட்டாங்க. அதற்குப்பிறகு பசுமைநடை நடத்துன விருட்சத் திருவிழாவுக்கான அழைப்பிதழில் உங்க பெயரைப் பார்த்தேன். மேலும், அந்த அழைப்பிதழே அந்த விழாவுக்கு அழைத்தது. அன்னைக்கு கீழக்குயில்குடி சமணமலை ஆலமரத்தடியில் நடந்த விழாவில் உங்களைப் பார்த்தேன். நீங்க பேசியது மனதைத் தொட்டது. அன்று விழா முடிந்தபிறகு உங்களோடு பேச நினைத்தேன். நீங்கள் சென்றுவிட்டது அப்பொழுதுதான் தெரிந்தது. இன்று அந்த வாய்ப்பு கிடைச்சுருச்சு’ என்றான் பதினெட்டாம்படியான்.

தொ.ப. பசுமைநடை நிகழ்வில் கலந்துகொண்டது பற்றியும், அழகர்கோயில் ஆய்வு செய்கையில் சமணமலை அடிவாரத்தில் போய் அமர்ந்து ஏகாந்தமாய் இருந்ததையும் குறிப்பிட்டார். அப்பொழுது தொ.ப.வின் துணைவியார் இருவருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார். தொ.ப. துணைவியாரிடம் ‘மதுரை அழகர்கோயில்ல இருந்து பார்க்க வந்திருக்காரு’ என சிரித்தபடி சொன்னார். அவங்க ‘மதுரைக்காரங்களைப் பார்த்தாலே இவரு ரொம்ப குஷியாடுவாருன்னு’ சொல்லி பலகாரங்களை எடுத்துவரச் சென்றார். பதினெட்டாம்படியான் தன் பையிலிருந்து அழகர்கோயில் தோசையையும், ஒரு சில்வர் போத்தலில் சிலம்பாற்று நீரையும் தொ.ப.விடம் கொடுத்தான். அதைப் பார்த்த கணத்தில் தொ.ப. கடந்த காலத்திற்கே சென்றார். 

ஆடித்திருவிழாவில் அழகர்கோயில் தோசையை தேர்வடம் பிடித்து இழுக்கும் ஊர்க்காரர்களுக்கு கோயிலிருந்து கொடுப்பதையும், சிலம்பாறு குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ளதையும் சொன்னார். அந்தப் புத்தகம் எழுதிய நாட்களில் அழகர்கோயில் மலையிலும், அழகர்மலையைச் சுற்றிய கிராமங்களிலும் அலைந்து திரிந்த கதையைச் சொல்லச்சொல்ல பதினெட்டாம்படியானின் கண்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

விருட்சத்திருவிழா முடிந்ததும் பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் அழகர்கோயில் புத்தகம் கிடைக்குமா எனக்கேட்க அவர் தொ.ப.தாசன் என ஒருவரை அடையாளம் காட்டினார். அந்த இளைஞன் புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை. ஆனாலும், நீங்க நாளை தல்லாகுளம் கருப்பசாமி கோயில்கிட்ட வாங்க நான் நகல் எடுத்து வச்சுருக்கேன் எனக்கூறி, மறுநாளே சொன்னதுபோல புத்தக நகலைக் கொண்டுவந்து கொடுத்தார் என தான் அழகர்கோயில் வாசித்த கதையை தொ.ப.விடம் பதினெட்டாம்படியான் கூறினான்.

அழகர்கோயில் எழுதி பல ஆண்டுகாலம் பதிப்பிக்கப்படாமல் இருந்து, பின் பதிப்பாகி வந்தபிறகு நல்ல கவனம் பெற்றதையும், தலைப்பிள்ளை போல அந்நூல் தன் பேர் சொல்வதையும் பதினெட்டாம்படியானிடம் கூறினார். நாட்டார்தெய்வங்களை ஏன் மளையாளம் எனச் சொல்கிறார்கள் என்ற ஐயத்தை தொ.ப.விடம் கேட்க, ‘நாட்டார்தெய்வங்களோட வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்த கரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடைய ஸ்பிரிட்சுவல் எஸ்சன்ஸ் அடங்கியிருப்பதாக நம்பிக்கை. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிற ஆறுகளின் வழியாகத்தான் நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. எனவே, தெய்வங்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தன என்ற நம்பிக்கையும் உருவானது’ என்றார். 

‘பதினெட்டாம்படியான் எங்க தாத்தாவோட பெயரைத்தான் எனக்கும் வச்சுருக்காங்க. என்னோட தங்கச்சி பேரு தீர்த்தக்கரை ராக்கு’ எனச் சொல்ல தொ.ப. ‘சரியாத்தான வச்சுருக்காங்க. பெயரன்னாலே தாத்தாவுடைய பெயரைக்கொண்டவன்தானே. அதுவுமில்லாம அழகர்கோயில் பக்கம் பதினெட்டாம்படிக்கருப்போட தங்கச்சியாத்தான் மலைமேல இருக்கிற இராக்காயியை நினைக்கிறாங்க. அதுனால உங்க தங்கச்சிக்கு தீர்த்தக்கரை ராக்கு பொருத்தமான பேரு’ எனச்சொல்லி சிலாகித்தார்.

பதினெட்டாம்படியான் அண்ணன் – தங்கை உறவு குறித்த மக்களின் கதையை தொ.ப.விடம் கேட்டான். ‘அழகருடைய தங்கையாகத்தானே மக்கள் மீனாட்சியை சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாம அழகர் மதுரைக்கு வரும்போது கொண்டுவரும் உண்டியல்களை, ஆபரணப்பெட்டிகளை சீர் என்றுதானே சொல்றாங்க. “தல்லாகுளம் விட்டார் – தமுக்கடிக்கும் மேடைவிட்டார் மானாமதுரை விட்டார் – மதுரையிலே பாதிவிட்டார்” அப்படின்னு வர்ணிப்பு பாட்டே இருக்கே. தமிழர்களுடைய பண்பாட்டின் வேராக இருப்பது அண்ணன் தங்கை உறவு’ எனச் சொன்னார்.

மதுரையில் தொ.ப. பணியாற்றிய காலத்தில்தான் சிறுவனாக இருந்ததால் அவரிடம் படிக்க முடியாமல் போனதே என வருத்தப்பட்டான் பதினெட்டாம்படியான். மேலும், மதுரை குறித்தும், அதன் தொன்மை குறித்தும் தொ.ப.விடம் பேச மீனாட்சி என்ற தாய்த்தெய்வத்தின் சிறப்பை, பட்டம் சூடி அரசாளும் பெண் தெய்வம் இந்தியாவிலேயே மீனாட்சிதான் என பல விசயங்களை சொன்னார். 

அழகர் கல்யாணத்துக்கு வராமல் துளுக்க நாச்சியார் வீட்டுக்கு கோவித்துக்கொண்டு போவது பற்றி மக்கள் சொல்லும் கதைகளைப் பற்றி தொ.ப.விடம் கேட்க ‘நம்ப முடியாத, விடை சொல்ல முடியாத கேள்விகளுக்கு கதைகளை விடையாகச் சொல்வது நாட்டார் மரபு’ என எடுத்துரைத்தார். அப்பொழுது அவரது பேத்தி மதுரா வந்து தாத்தாவிடம் ஏதோ கேட்க அவர் ‘இங்கபாரு, மதுரையில இருந்து வந்துருக்காங்க. வணக்கம் சொல்லு’ எனச் சொல்லச் சொன்னார். அந்தச்சிறுமியும் பதினெட்டாம்படியானுக்கு வணக்கம் சொல்லியது. தொ.ப.வின் குணமும், அவரது வீடும் அவனுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது. 

தொ.ப. பதினெட்டாம்படியானிடம் ‘நீங்க பாலிடெக்னிக்கில் என்ன படிக்கிறீங்க?’ எனக் கேட்க ‘எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்’ எனச் சொன்னான். உடனடியாக அவர் ‘படிப்பது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் ஆனால் நீங்கள் தமிழ் நேசன்’ என்றார் சிரித்தபடி. மேலும், ‘உங்கள் பாடங்களைத் தாண்டி நிறைய வாசிங்க. குறிப்பா வயதான மனிதர்களை கண்டு நிறையப் பேசுங்க. அவங்களோடு உரையாடுங்க. திருவிழாக்குள்ள அலைந்து திரிந்து என்னென்ன விதமான வேண்டுதல்கள், எத்தனைவிதமான மக்கள், திருவிழாக் குறித்த கதைகளை சேகரிங்க.’ என்றார். தொ.ப.வின் துணைவியார் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்தார். அவர்தான் இப்பொழுதே கிளம்பினால்தான் ஊருக்குப் போக முடியும் எனச் சொல்லிக் கிளம்ப, அவர்கள் அந்த இளைஞனை சாப்பிட வைத்தனர். சாப்பிட்டு முடித்து அவரிடம் விடைபெற்றுக் கிளம்பும்போது, தொ.ப. தான் எழுதிய ‘விடுபூக்கள்’ என்ற நூலைக் கொடுத்தார். பதினெட்டாம்படி அவரிடம் கையொப்பம் கேட்டுவாங்கிக்கொண்டான். 

வாசல்வரை வந்து சிரித்தபடி விடைகொடுத்தார் தொ.ப. மாடியிலிருந்து இறங்கி வீதியில் நடக்கத்தொடங்கிய பதினெட்டாம்படியான், தெருமுக்குத் திரும்பிய கணத்தில் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பு கதவு மணிகள் அதிர்ந்து ஒலித்தது. இரவுப்பூசை செய்த பூசாரி கருப்பன் சிரிக்கிறான் எனச் சொல்லிக்கொண்டார்.

-சித்திரவீதிக்காரன்

1964இல் மதுரைக்கு பதினொரு வயதில் தன் பாட்டியோடு சிறுபையனாக வந்திறங்கினார் டி.கே.சந்திரன். வறுமை கற்றுத்தந்த பாடங்களோடு கடும் உழைப்பையும் சேர்த்து வாழ்வில் முன்னேறிய கதைதான் அறக்கயிறு. டி.கே.சந்திரன் தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளையும் அவர்களின் உழைப்பையும் குறித்து எழுதிய நூல். டி.கே.சந்திரன் அவர்களின் வாழ்வை வாசிக்கும்போது மதுரையின் ஒரு காலகட்டத்தின் கதையை நாம் அறியலாம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த நூலை எனக்கு வழங்கினார்.

1953இல் தாயாரின் ஊரான சின்னாண்டிபாளையத்தில் பிறந்தவர் டி.கே.சந்திரன். திருப்பூர் அவினாசி அருகே உள்ள தேவராயம்பாளையம்தான் டி.கே.சந்திரனின் சொந்த ஊர். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா தறியில் துணிமட்டும் நெய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை தானே விற்பனை செய்யவும் தொடங்கினார்.

டர்க்கி காட்டனில் இருந்து தயாரிக்கப்படும் துண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் பிரத்யேகமான மக்கம் தறிகள் மதுரையில் இருந்தன. டி.கே.சந்திரனுடைய அப்பா மதுரைக்கு வந்து புதிய நெசவு நுட்பங்களை அவ்வப்போது அறிந்து செல்வார். மதுரையிலிருந்த உறவினர் ஒருவரின் ஆலோசனையில் 1962இல் ‘கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம்’ என்ற கடையை கீழவாசலில் தொடங்கினார். கடையை டி.கே.சந்திரனின் தாய்மாமாவும் சித்தப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாய்மாமாவிற்கு சமைத்துப்போட பாட்டி உண்ணாமலையோடு கடைக்கு உதவியாக இருக்க சிறுவயது டி.கே.சந்திரனையும் மதுரைக்கு அவரது அப்பா அனுப்பிவைக்கிறார். திருப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடியாக வர முடியாத காலம். பழனி வந்து அங்கிருந்து சொக்கன் டிரான்ஸ்போர்ட் பேருந்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மதுரை வருகிறார்கள். அப்போது நகரப்பேருந்து கட்டணம் 10 பைசா.

காலையில் எழுந்து கடையைத் திறந்துவைத்து சுத்தம் செய்துவிட்டு பள்ளிக்குச் சென்று மீண்டும் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு கடையிலுள்ள தாய்மாமாவிற்கு சாப்பாடு கொண்டுசென்று கொடுப்பது இவரது பணியாக இருந்தது. மாலைவேளைகளில் கடைக்கு வருபவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க, கடையை கவனித்துக்கொள்ள என உதவியாக இருக்கிறார்.

5 பைசா தினமும் அவருக்கு அவங்க மாமா கொடுப்பார். அதில் பக்கோடா வாங்கி இரவு உணவுக்கு தொட்டுக் கொள்வது, அதை சேர்த்துவைத்து 25 பைசாவில் தியேட்டரில் படம் பார்ப்பது என அந்தக் காலத்தை நம் கண்முன் கொண்டுவருகிறார். மரக்கட்டை பேனா என அழைக்கும் நேவி பேனா பற்றி வாசிக்கையில் நம்முடைய பால்ய நினைவுகளும் மனதில் எழுகிறது.

மதுரை சுங்குடி சேலை உருவான கதையை நூலினூடாக சொல்கிறார். “சாயமிடுவதில் கைதேர்ந்த ஒரு சௌராட்டிரர் நெய்த துணிகளில் சிறுசிறு கற்களை வைத்து நூலினால் முடிச்சிட்டு பின் அந்தத் துணிக்கு சாயமிட்டுப் பார்த்தார். நூல் முடிச்சு இருந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் சாயம் ஏறியிருக்க முடிச்சிட்ட பகுதிகள் வட்டமாக வெள்ளை நட்சத்திரம் போல் வடிவம் இருப்பதைக் கண்டுகொண்டார். இப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளே பின்னாலில் மதுரையின் பாரம்பரியச் சின்னமான சுங்குடி சேலை என அறியப்பட்டது.”

ஆறாம் வகுப்புவரை வீட்டிற்கு அருகிலிருந்த சந்திரா பள்ளியில் படித்துவந்த டி.கே.சந்திரன் ஏழாம் வகுப்பில் விருதுநகர் இந்து நாடார் பள்ளி சேர்கிறார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்திலிருந்த காலம். மதுரையில் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். அதன்பின் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருகிறது. கதர் வேட்டி போய் கலர் பார்டர் வைத்த வேட்டிகள் அறிமுகம் ஆகின்றன.

கந்தராஜ் என்ற கணக்கு ஆசிரியர் இவரது கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் அப்போதே 600க்கு 508 மதிப்பெண் வாங்கி கணக்கிலும் 100க்கு 100 வாங்கியிருக்கிறார். மெரிட் ஸ்காலர்சிப்பில் 500 ரூபாய் உதவித்தொகை பெற்று அப்போதிருந்த கல்லூரி புதுமுக வகுப்பான பியூசி-க்கு அமெரிக்கன் கல்லூரியில் சேர்கிறார். இவரது தமிழ் ஆசிரியராக சாலமன் பாப்பையா இருந்திருக்கிறார்.

அமெரிக்கன் கல்லூரியிலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பொறியியல் படிக்க விரும்பியிருக்கிறார். தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மாணவனின் வயது 21ற்குள் இருக்க வேண்டும். இவர் பிறந்த வருடம் 1950 எனத் தெரியாமல் சர்டிபிகேட்டில் இருந்ததால் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது. பிறகு தியாகராசர் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் சேர்கிறார். இவரது அண்ணன் ‘நீ என்ன வாத்தியாராகவா போகிறாய்? எனகேட்டு ஒரு யோசனை சொல்கிறார். பிறகு பி.எஸ்.சி பிசிக்ஸ் படிப்பை பாதியில்விட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிகவியல் சேர்கிறார்.

படிப்பை முடித்தபின் டெலிகாம் டிபார்ட்மென்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விண்ணப்பத்தை பார்த்து போஸ்ட்கார்டில் மதிப்பெண்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி கடிதம் வர தேர்வாகி மத்திய அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். சென்னையில் இரண்டு மாத பயிற்சி முடிந்து மதுரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலைக்கு வருகிறார். அப்போது (1975) இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவிக்கிறார்.

1976இல் சேலத்தில் ஒரு புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அப்போது 1000 போஸ்ட்கார்டுகளில் சேலம் டைரக்டரியைப் பார்த்து ஊரிலுள்ள முக்கிய ஆட்களுக்கு செந்தில்முருகன் காதி வஸ்திராலயம் என்ற புதுக்கடைக்கு ஆதரவு தரும்படி கடிதம் போடுகிறார். இவரது இந்த உத்தி பலனளித்து அந்தக் காலத்திலேயே ஒரே நாளில் 3000 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது.

1979இல் மதுரை ஆரியபவன் அருகே ஐந்தாவது புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுத்து கடையைப் பார்த்துக் கொள்ளும் சூழல். 1985இல் மத்திய அரசு வேலையை விட்டு குடும்ப நிறுவனத்தை பார்த்துக் கொள்ளத் தொடங்குகிறார். 2020இல் 40,000 பேர் பணிபுரியும் நிறுவனமாக அவர்களது நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. மதுரையில் மட்டுமல்ல, ஆசியாவிலே பெரிய திரையரங்காக இருந்த தங்கம் திரையரங்கு இருந்த இடத்தில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடையையும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை என்ற பெயரில் நகைக்கடையும் இவர்களுடையதுதான்.

டி.கே.சந்திரன் தன் வாழ்வில் வாசிப்பு, பயணம் ஏற்படுத்திய மாற்றங்களையும் எழுதியிருக்கிறார். தரத்தை முன்னிறுத்தி அறத்தோடு தொழிலை முன்னேற்றிய கதையையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார். அவரது கதையாக மட்டும் நில்லாமல் இந்நூல் வாழ்வில் கடின உழைப்பால் முன்னேறிய ஜி.டி.நாயுடு, இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார், அப்துல்கலாம், ஆர். பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், தைரோகேர் வேலுமணி, சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்பிரமணியம், எடிட்டர் லெனின், சூழலியளாளர் நித்யானந்தம், களப்பணியாளர் மாணிக்க அத்தப்ப கவுண்டர், மதுரை காந்திமதி அம்மாள், உமா பிரேமன், அன்புராஜ் என பலரது கதையையும் சொல்லியிருக்கிறார். இதில் ஜி.டி.நாயுடு தவிர மற்றவர்களை நேரில் சந்தித்தும் இருக்கிறார். பவா செல்லத்துரை யூடியுப் உரைகள் டி.கே.சந்திரன் அவர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அவரோடு நட்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

அறக்கயிறு வாசித்து முடிக்கையில் “வறுமை என்பது சிந்தனையின் வறுமையாக இருக்க கூடாது. நாம் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். கடின உழைப்பும் செயலில் தெளிவும் சமூகத்தின் மீதான அக்கறையும் இருந்தால் கட்டாயம் நாமும் வெல்லலாம்” என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. இந்நூல் சுயமுன்னேற்ற நூல் அல்ல. ஆனாலும், வாசித்து முடித்ததும் நம்முள் உத்வேகம் எழும்.

அறக்கயிறு, வம்சி பதிப்பகம்

எழுத்து வழியாக அறிந்த பலரை நேரில் காணும் வாய்ப்புகள் தந்தது மதுரைப் புத்தகத்திருவிழா. அதில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுடனான சந்திப்பு என் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு நாவல்கள், சிறந்த நூறு புத்தகங்கள் பட்டியலை சகோதரரின் உதவியுடன் ஆயிரம் பிரதிகள் எடுத்து மதுரை புத்தகத் திருவிழாவில் வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பட்டியலை வாங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், என்னிடம் அவரது அலைபேசி எண்ணையும் வழங்கினார்.

புத்தகத் திருவிழா நிறைவடைந்த பிறகு நூலகத்தில் உயிர்மை மாத இதழில் பசுமை நடை குறித்த தகவலை பார்த்தேன். முத்துக்கிருஷ்ணனோடு அலைபேசி வழியாகப் பேசலாம் என்றால் உள்ளுக்குள் எப்போதும்போல ஒரு தயக்கம். நகருக்குள் சென்று பேசலாம் என நினைத்தேன். டவுன்ஹால்ரோடு பிரேமவிலாஸ் அருகே நண்பருக்காக காத்திருந்த வேளையில் பேசலாமா என்று யோசித்தேன். வாகன இரைச்சலில் சரியாகப் பேசமுடியாதோ என யோசித்து சித்திரை வீதிப்பக்கம் சென்று பேசலாம் என தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கருகில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் குரல் அங்கு ஒலிப்பதுபோல தோன்ற திரும்பிப் பார்த்தால் அவர் நண்பர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு நானும் பசுமை நடையில் இணைவது குறித்து பேசினேன். எனது எண்ணை வாங்கிக்கொண்டு குறுந்தகவலும் அனுப்பினார். அதன்பின் நவம்பர் 14, 2010ல் சமணமலையில் பசுமை நடை என்ற தகவலும் அவரது எண்ணிலிருந்து வந்தது. அதே சமயத்தில்தான் மதுரை வாசகன் வலைப்பூவும் அக்டோபர் 23ல் சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் உதவியுடன் தொடங்கினேன். பசுமை நடையில் இணைந்ததையும் வலைப்பதிவு எழுதத் தொடங்கியதையும் 2010இல் என் வாழ்வில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளாக பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அறிவுப்புலங்கள் மட்டுமே சொந்தமென வைத்திருந்த வரலாறு, தொல்லியலை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனையே சேரும். ஒவ்வொரு நடையும் தொடங்கியதிலிருந்து, முடியும்வரை எல்லோரையும் வழிநடத்துவார். காலை உணவை பசுமைநடைக்கு வந்தவர்களுக்கெல்லாம் வழங்கிய பின்னரே அவர் சாப்பிடுவார். கொலபசி எழுதியவர், பிறர்பசி அறிந்தவர். பஞ்சாபி ரெஸ்டாரென்ட்டில் பட்டர்நாண் – பன்னீர் டக்காடக் என நான் தேடி உண்ண வழிகாட்டியவர்.

பசுமைநடையில் இணைந்து மதுரையின் தொல்தலங்கள், மலைகள், மதுரை வீதிகள், கல்மண்டபங்கள், நீர்நிலைகள் என எழுத்தின் வழியாக அறிந்த இடங்களிலெல்லாம் நடமாடும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு நடையையும் வலைப்பூவில் தொடர்ந்து ஆவணப்படுத்திவந்தேன். பசுமைநடை குழுவில் இணைந்து கற்றவை ஏராளம், ஏராளம்.

நான் எழுதிய திருவிழாக்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை தூண்டியதோடு அதை தொகுக்கச் சொன்னார். நான் வலைப்பூவில் எழுதியதை அப்படியே எடுத்துக் கொடுக்க இன்னும் மேம்படுத்தச் சொன்னார். மேம்படுத்திய பிரதியை பின்னாளில் தொல்லியல் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் நூலை வெளியிட்டு என்னை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

மதுரை குறித்து அவர் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூலின் வாயிலாக அவரது மதுரை அனுபவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. மதுரையின் பல அறியப்படாத விசயங்களை, மறந்துபோன விசயங்களை தம் எழுத்துக்கள் வாயிலாக அதில் மீட்டெடுத்திருக்கிறார். அதேபோல, அவர் பயணித்த ஊர்களும், நாடுகளும் ஏராளம். தனது பயண அனுபவங்களை அவர் நூலாக விரிவாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப்பதிவின் வாயிலாக வைத்துக்கொள்கிறேன்.

இயற்கை பேரிடரின் போதெல்லாம் நிவாரணப் பணிகளை பசுமைநடை குழு மேற்கொள்ளும். சமீபத்திய கொரோனா ஊரடங்கின்போது அவர் வேலையின்றி வாடும் ஒவ்வொருவராகத் தேடித்தேடி நிவாரணப் பொருட்கள் வழங்க தேர்ந்தெடுத்த பட்டியல் குறிப்பிட வேண்டிய விசயம். டிரைசைக்கிள் ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், சாலையோரத்தில் பொம்மை செய்யும் பிறமாநிலத்தவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள், கரும்புச்சாறு கடைபோடுபவர்கள், பறையாட்டக்கலைஞர்கள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று பொருட்களை வழங்கிய விதம் குறிப்பிடத்தகுந்தது. நான் பார்த்த தனிநபர் நூலகத்தில் தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகம் தனித்துவமானது. பல அரிய நூல்களைக் கொண்டது. பல நாடுகளுக்குப் பயணித்து சில அழகிய கலைப்பொருட்களையும் நூலகத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்.

அ.முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களில், உரையாடல்களில் ஒலிக்கும் சமூக அக்கறையை அவரது செயல்களிலும் பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன் தனியார் வங்கியொன்றில் பெருங்கடனில் சிக்கவிருந்த என்னை அதிலிருந்து மீட்டு நல்வழி காட்டினார். உடல்நிலை சரியில்லாதபோது தகுந்த மருத்துவரைப் பார்க்க எனக்கு மட்டுமல்லாது, எனக்கு தெரிந்தவர்களுக்குக் கூட அவரது உதவியை பெற்றிருக்கிறேன். பல நண்பர்களுக்கு இதுபோல இக்கட்டான தருணங்களில் அவர் உதவியிருக்கிறார்.

சங்கச்சுரங்கத்திலிருந்து ஒரு பாடலெடுத்து அ.முத்துக்கிருஷ்ணனைப் பற்றிச் சொன்னால் ‘பிறர்க்கென முயலுநர்’ என்ற புறநானூற்றுப் பாடலைச் சொல்லலாம்.

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

பிறர்க்கென முயலும் தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை ‘பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ’ என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுவையான பல்வேறு ஆய்வுச் செய்திகள் அடங்கிய நூல் இது.

கோபுரத்திலிருந்து குதித்தவர்கள்

கோவில் கோபுரங்களில் ஏறி உயிர்துறந்தவர்களைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுக்கள் வாயிலாக கிடைக்கின்றன. திருப்பரங்குன்றம், திருவரங்கம் கோவிலைக் காக்க கோபுரமேறி உயிரை விட்டவர்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல சாமி தூக்குபவர்களான ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மீது வரி விதித்ததை எதிர்த்து மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் ஏறி உயிர்துறந்தவர், கொதிக்கும் நெய்யில் கைவிடும் சோதனையை எதிர்த்து சுசீந்திரத்தில் உயிர்துறந்தவரைப் பற்றிய குறிப்புகளும் கிடைத்துள்ளன. தலைவனுக்காக உயிர்நீத்தவர்களைக் குறித்தும் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

பெண் தெய்வங்கள்

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெண்தெய்வங்கள் உள்ளன. அவற்றின் கதைகளை ஆராய்ந்தால் ஆணவக்கொலைக்கு பழியான பெண்கள், உடன்கட்டை ஏறிய (ஏற்றப்பட்ட) பெண்கள் என சில ஒற்றுமைகளைக் காணலாம். அ.கா.பெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் களஆய்வு வாயிலாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்களைச் சேகரித்திருக்கிறார்.

கணவன் இறந்தபோது அவனது மனைவியர்களையும் உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கம் இந்தியா முழுவதிலும் இருந்திருக்கிறது. விதவையான பெண்களுக்கு இச்சமூகத்தில் மதிப்பு இல்லாத காரணத்தால் உடன்கட்டை ஏறுவதே மேல் என பூதப்பாண்டியன் மனைவி பாடிய சங்கப்பாடலை சான்றாகச் சொல்லலாம். வில்லியம் பெண்டிங் பிரபு 1829இல் இக்கொடிய பழக்கத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவந்தும் அது முற்றிலுமாக அகல பல காலம் எடுத்தது. நாம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்த இக்கொடுமை குறித்து விரிவாக பல கதைப்பாடல்கள், நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விரிவாக எழுதியிருக்கிறார் அ.கா.பெருமாள்.

பழமரபுக் கதைகள்

நம்முடைய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பழமரபுக் கதைகள் பாடல்களில் ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சிவன், திருமால், அகலிகை, மன்மதன் பற்றிய கதைகள் இருந்தாலும் அவை தமிழகத்திலிருந்த வாய்மொழி கூறுகளுடன் இணைந்தவை. முருகன் வள்ளி கதைகள், கண்ணன் நப்பின்னை கதைகளை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம் என எடுத்துரைக்கிறார் அ.கா.பெருமாள்.

பீமனைக் கொல்ல காந்தாரி எடுத்த முயற்சிகளை வைத்து ‘நெட்டூரி காந்தாரி’ என கன்னியாகுமரிப் பகுதியில் சொல்லப்படும் கதையை பதிவு செய்திருக்கிறார்.

கண்ணகியின் கதை

கேரளத்தில் வழிபடப்படும் பகவதியம்மன் வழிபாடு சிலப்பதிகார கண்ணகியின் வழிபாட்டின் நீட்சியே என்பதை கொடுங்கோளூர் பகவதியம்மன் கோவில் வழிபாட்டில் கண்ணகி வழிபாட்டை வெளிப்படையாகவே காண முடியும் என்றும், ஆற்றுக்கால் பகவதி தொடங்கி கேரளத்தில் வணங்கப்படும் பகவதியம்மன் வழிபாடு கண்ணகி வழிபாடு என்பதை மூத்த மலையாள அறிஞர்கள் ஏற்கத் தயங்கவில்லை என்றும் கூறுகிறார் அ.கா.பெருமாள்.

அகத்திய முனி

அகத்தியன் குறித்த கதைகள் ஏராளம். தமிழ்த்திரைப்படங்கள் வாயிலாகவும் அவர் தமிழ் முனி, சைவ முனி போன்ற தோற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மணிமேகலை நூல்தான் அகத்தியன் குறித்த புராணக்கதைகளை முதலில் கூறுகிறது. பின்னால் சேக்கிழார் அகத்தியர்தான் காவிரியைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் போன்ற கதைகளை எழுதினார். தமிழ் பண்பாட்டோடு அகத்தியன் குறித்த கதைகளும் நிறைய கலந்துவிட்டன.

நிகழ்த்துகலை

மக்கள் கூடியிருந்த தருணங்களில் நிகழ்த்தப்பட்ட ஆட்டத்தில் ஆண்களும் பெண்களும் பங்குகொண்டனர். பண்டைய இலக்கியங்களில் ஆட்டம் குறித்த செய்திகள் குறைவாகவும், அதில் பெண்கள் பங்கேற்ற செய்திகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து, வெறியாட்டு, போன்ற கூத்துக்களை பெண்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். இன்று கயிற்றில் மீது ஆடும் ஆட்டம் தமிழர்களிடம் முன்பிருந்திருக்கிறது என்பதை அ.கா.பெருமாள் சங்கப்பாடல் வழியாக எடுத்துரைக்கிறார். பழந்தமிழர் கலைகள் குறித்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இரட்டை காப்பியங்கள் ஆகிய நூல்களில் நிகழ்த்துகலைகள் குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கதைகள் நிகழ்த்தப்படும்போது நிலைத்த பனுவல் இடத்திற்கேற்ப மாறுபடுவதைக் குறிப்பிடுகிறார்.

அ.கா.பெருமாள் எழுதிய இந்நூலிலுள்ள கட்டுரைகளை வாசிக்கையில் நம்முடைய மரபு, தொன்மம், கலைகள், கதைகள், சங்கப்பாடல்கள், வாய்மொழி மரபுகள், நாட்டார் தெய்வங்கள், கல்வெட்டுச் சான்றுகள் என பலவிசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

கலை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சி.மோகனின் 70வது பிறந்தநாளையொட்டி ஒரு விழா எடுத்து அவருக்கு பணமுடிப்பு வழங்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. சி.மோகனின் படைப்புகளை வாசித்திருந்த வேளையில் அவரை சந்திக்க வேண்டும், இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஒருநாள் சி.மோகன் அவர்கள் அலைபேசியில் அழைத்து அவரது கட்டுரைத் தொகுப்புகள் குறித்து பேசுமாறு கேட்டார். இதுபோன்ற நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லை என்று தயக்கத்துடன் கூற தைரியமாகப் பேசுங்கள் என்று சொன்னார்.

சி.மோகனின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்த அண்ணனிடம் எனக்கு கிட்டிய வாய்ப்பைச் சொன்னேன். சி.மோகனின் கட்டுரைகள் குறித்து பேசுவதற்கான உரையைத் தயாரிக்க சில யோசனைகள் சொன்னார். ஏற்கனவே வாசித்து எழுதிய குறிப்புகளை வைத்து, மீண்டுமொருமுறை வாசித்து ஒரு உரையைத் தயார் செய்தேன். சி.மோகனின் எழுத்துக்கள் மிகவும் செறிவானவை. அவற்றை நம் விருப்பம்போல் சுருக்கியோ, வேறுவிதமாகத் தொகுத்தோ பேசுவது கடினமான விசயம்.

டிசம்பர் 17 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்குப் போய் முகலிவாக்கம் பகுதியிலுள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து புறப்பட்டு மைலாப்பூர் சென்றேன். கபாலீஸ்வரரை வணங்கினேன். அங்கிருந்து கவிக்கோ மன்றம் செல்ல கூகுள் மேப்பில் தேடி லஸ் சர்ச் ரோடு செல்வதற்கு பதிலாக மாறி வேறு வழியில் சென்றேன். அதுவும் நல்லதிற்குத்தான். எனக்குப் பிடித்த மனோகர் தேவதாஸ் வாழ்ந்த சாந்தோம் சர்ச் பகுதியை அடைந்தேன். அங்கு சென்று இயேசுநாதரை வணங்கினேன். பின் வந்தபாதையிலேயே திரும்பி சரியான பாதையை அடைந்தேன்.

கவிக்கோ மன்றத்தில் எனக்கு முன்னதாக வந்திருந்த எழுத்தாளர் காலபைரவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரையும், டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பனும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சி.மோகன் அவர்களை முதன்முதலாக நேரில் பார்த்தேன். அன்பாக அரவணைத்துக் கொண்டார். மதுரையிலிருந்து நந்தசிவம் புகழேந்தி வந்திருந்தார். நிறைய நண்பர்களைப் பார்க்க முடிந்தது. நிகழ்விற்கு சென்னையிலுள்ள இன்னொரு அண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

கருத்தரங்கம், வாழ்த்துரைகள், பணமுடிப்பு வழங்குதல், சிறப்புரை, ஏற்புரை என விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது. சி.மோகனின் கட்டுரைகள் குறித்து நான் தயார் செய்து வைத்திருந்த உரையைப் பார்த்து கொஞ்சம் வாசித்தும், கொஞ்சம் பேசியும் முடித்தேன்.

அங்கிகரீக்கப்படாத கனவின் வலி என்ற நேர்காணல்கள் தொகுப்பும், சி.மோகனின் படைப்புகள் (நாவல்கள்-சிறுகதைகள்) தொகுப்பும் வெளியிடப்பட்டது.

தன் வாசகனை மேடையேற்றி அழகு பார்த்த சி.மோகனுக்கும், விழாவிற்கு வருவதாக சொன்ன பொழுதே எனக்காகப் பயணச் சீட்டை முன்பதிவு செய்த சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், நிகழ்விற்கு குடும்பத்தோடு வந்த சகோதரர் பழனிக்குமாருக்கும், மதுரையிலிருந்து வந்திருந்த நந்தசிவம் புகழேந்திக்கும், ஷ்ருதி டிவி சுரேஷ் அவர்களுக்கும், விழா முடிந்ததும் ரயில்நிலையத்தில் கொண்டுவந்து சேர்த்த தோழர் முத்துவிற்கும் நன்றி! நன்றி! நன்றி!

படங்கள் உதவி : நந்தசிவம் புகழேந்தி, சரவணன், ஈஸ்வர் (ஒளிப்படக்காதலன்)

செப்டம்பர் 8 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதில் முதல் நிகழ்வாக மதுரை புத்தகத் திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெற்றது. 200க்கும் மேலான அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் இவற்றோடு மாமதுரை அரங்கு, கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்கப் பயிலரங்கு, பள்ளி மாணவர்களுக்கான சிறார் அரங்கு, உரையரங்கு, கலைநிகழ்ச்சிகள் என மதுரை புத்தகத் திருவிழா பெருங்கொண்டாட்டமாக நடந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துக்கிருஷ்ணன், பவா செல்லத்துரை, சு.வெங்கடேசன் என பலரின் உரைகளை கேட்க வாய்ப்பு கிட்டியது.

மாமதுரை போற்றுதும்

மதுரையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் மாமதுரை போற்றுதும் அரங்கை அமைக்க ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களில் என்னையும் தேர்வு செய்திருந்தார்கள். பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், பேராசிரியர் இரத்தினக்குமார், பேராசிரியர் பெரியசாமி ராஜா இவர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது எங்களுக்கு பெருவாய்ப்பாக அமைந்தது. வரலாற்றுக்கு முந்தைய கால மதுரை தொடங்கி சமகால மதுரை வரை பல்வேறு விசயங்களை பதாகைகளாக வடிவமைத்தோம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு வந்து பார்த்தனர்.

மண்ணின் மைந்தர் விருது

மதுரை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளுமைகளை சிறப்பிக்கும் பொருட்டு மண்ணின் மைந்தர் விருது பத்து பேருக்கு வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர் வேதாச்சலம், எழுத்தாளர்கள் சுப்பாராவ், ந.முருகேசபாண்டியன், அ.முத்துக்கிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன், சுரேஷ்குமார் இந்திரஜித், இந்திரா சௌந்திரராஜன், லெட்சுமி சரவணக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக புத்தகங்களை வெளியிட்ட கல்லூரி மாணவிகள் எம். தீபிகா, எஸ்.சோபனா, என்.நிசாலினி, எஸ்.என்.அறிவுமதி, எம்.அனு, எம்.தீபிகா, ஆர்.எஸ்.சுவேதா, எஸ்.பி.தமிழ்ச்செல்வி ஆகிய எட்டு மாணவிகளுக்கு மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டது.

படைப்பூக்கப் பயிலரங்கு

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, சினிமா, நாடகம், புனைவு, தொல்லியல், பேச்சு, நுண்கலை என பலதுறைகளிலும் துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்துவந்து படைப்பூக்க பயிலரங்கு நடத்தினர். படைப்பூக்கப் பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சில நிகழ்வுகளின் உரைகளை கொஞ்ச நேரம் கேட்கவும் முடிந்தது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறார் பயிலரங்கு

பள்ளி மாணவர்களுக்கு காகிதக்கலை, ஓலைக்கலை, கதையாக்கம், சிறார் நாடகம், காமிக்ஸ் வரைதல், கதை சொல்லுதல், எழுத்தாக்கம் என பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. கூடுதலாக சிறார் திரைப்படங்கள் மதியத்திற்கு மேல் காண்பிக்கப்பட்டன. கதை வாசித்தல் போன்ற நிகழ்வுகளுடன் சிறார் அரங்கு உற்சாகமாக நிகழ்ந்தது.

வாங்கிய புத்தகங்கள்

ஒவ்வொரு அரங்கிலும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறைய இருந்தாலும் கைவசம் இருந்த தொகைக்கு ஏற்ப சொற்ப புத்தகங்களே வாங்கினேன். வெகுநாட்களாக வாசிக்க நினைத்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே, நான் திரு.வி.க. பள்ளியில் பயின்ற போது முன்னாள் மாணவராகயிருந்த வீரபாண்டியன் எழுதிய சலூன் என்ற இரண்டு நாவல்களையும்; மணிவாசகர் பதிப்பகத்தில் சங்க இலக்கியத்தில் யானைகள், தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு தூண்கள், கல்வெட்டில் வாழ்வியல் போன்ற நூல்களையும்; செண்பகா பதிப்பகத்தில் பதிமூன்று சிறுநூல்கள், யுரேகா பதிப்பகத்தில் அறிவியல்சார்ந்த குறுவெளியீடுகள், அதோடு மனங்கவர்ந்த அன்பின் வண்ணதாசனிடம் கையொப்பம் பெற்று ஒரு சிறு இசையில் நூல் ஆகியவற்றையும் வாங்கினேன்.

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை

2019ல் நடைபெற்ற 14வது மதுரை புத்தகத் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூல் இடம்பெற்றது. இரண்டாண்டு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு நடந்த 15வது மதுரை புத்தகத்திருவிழாவில் இரண்டாம் பதிப்பான திருவிழாக்களின் தலைநகரம் இடம்பெற்றது பெருமகிழ்ச்சி. 2023இல் இன்னும் விரிவாக 40 திருவிழாக்களோடு நூலைக் கொண்டுவரும் ஆசையை மதுரையும் தமிழும் நிறைவேற்றட்டும்.

பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்று திரும்பிய தனது அனுபவம் பற்றி ஓவியர் மனோகர் தேவதாஸ் சாந்தோம் தென்னிந்திய திருச்சபை தேவாலய செய்திமடல் ஒன்றில் எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து சகோதரர் அனுப்பியிருந்தார். நன்றியுணர்வு, மனநிறைவு, தந்தைமை, நெகிழ்ச்சி போன்றவை வெற்றுவார்த்தைகளல்ல, இன்றும் பொருளுள்ளவை என்று தோன்றச் செய்யும் கட்டுரை என்பதால் மனோகர் தேவதாஸ் அவர்களுக்குப் பிரியாவிடை தரும் இந்த தருணத்தில் பதிவேற்றுகிறேன்:

பத்மஸ்ரீ விருது பெற்ற அனுபவம் மனோகர் தேவதாஸ்

எனக்கு 2020 ஜனவரியில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. விருதளிப்பு விழா ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருந்தது. மார்ச் மாத மத்தியில் மடகாஸ்கரிலிருந்து சுஜா மெட்ராசுக்கு (சென்னைக்கு) வந்தாள். அவள் வந்த மூன்று நாட்களில் பெருந்தொற்று காரணமாக விழாவை அரசு காலவரையின்றி ஒத்திவைத்தது.

2021 அக்டோபர் மத்தியில் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. நவம்பர் 8-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முறைப்படி விருதை வழங்குவார் என்று கண்டிருந்தது. எனக்கும் உடன் வருபவருக்கும் விமானக் கட்டணம் திருப்பியளிக்கப்படும். ஓட்டல் அசோக்கில் நவம்பர் ஏழாந்தேதி பிற்பகலில் இருந்து ஒன்பதாந்தேதி முற்பகல் முடிய நாங்கள் சேர்ந்து தங்கிக்கொள்ளலாம். கைச்செலவுக்கும் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அக்கடிதம் சொன்னது.

என் உடன் வந்தது இளம் கட்டிடக்கலைஞனான முகிலன். முந்தைய நாள் விடிய விடிய மழைகொட்டியது. எனவே விமான நிலையத்திற்கு சற்று முன்னதாகவே போய்விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். மழை சட்டென்று வெறித்துவிட்டதால் விமானத்தில் ஏறும் நேரத்துக்கு மூன்று மணிநேரம் முன்னதாகவே போய்ச்சேர்ந்துவிட்டோம். மீண்டும் மழைகொட்டத் தொடங்கியதால் விமானம் தாமதமாக வந்தது. மாலை ஆறுமணிவாக்கில் தில்லியில் ஓட்டலை அடைந்தோம். அசதியூட்டுகிற பயணம் என்றாலும் இயல்புபோலவே இருந்தேன்.

அமைச்சகத்தில் தொடர்புடைய மூன்று அலுவலர்களில் ஒருவரான பத்மா என்ற தமிழருடன் விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தொடர்பில் இருந்தேன். அவர் தமது இரு நண்பர்களுடன் எனது அறைக்கே வந்து பார்த்தது மகிழ்ச்சி அளித்தது. ஒன்றாம் வகுப்பில் இருந்து சுஜாவுடன் கூடப்படித்த ஜனகா எனக்கு மயில் பச்சை நிறத்தில் ஒரு குர்தாவைப் பரிசளித்தார். ஒரு மாதம் முன்பு SCILET பிரெமிளா பரிசாகக் கொடுத்திருந்த பட்டு வேட்டியோடு இந்தக் குர்தாவை அணிந்துகொண்டேன்.

விருது வழங்கும் நாளில் 2.30 மணிக்கு ஒத்திகையும் அதைத் தொடர்ந்து முறையான வைபவமும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடந்தேறின. முகிலனுக்கு அழைப்பு இருந்தாலும் குடியரசுத் தலைவரிடம் என்னைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை. ஒரு ராணுவ வீரரே என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் முகிலன் உடன்வந்த பிறருடன் அமர்ந்திருந்தார். குடியரசுத் தலைவர்க்கு ‘நமஸ்கார்’தான் செய்யவேண்டுமேயொழிய கைகுலுக்கக் கூடாது என்று விருதுபெறுபவர்களிடம் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. எனது முறை வந்தது. பார்வையாளர்கள் சற்று கூடுதல் உற்சாகத்துடன் கைதட்டியதாக முகிலன் சொன்னார். விருது வாங்க எந்தப் பக்கம் திரும்பவேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் எனக்குச் சொல்லவேண்டியிருந்தது. நிழற்படம் எடுக்கப்பட்டது. அவர் ‘எக்ஸலண்ட்’ என்று சொன்னார். பின் கை குலுக்கியபடி ‘காட் பிளஸ் யூ’ என்றார்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு பிரம்மாண்டமான அரங்கொன்றில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பிரதமர் என்னிடம் வந்தார். என்னிடம் உற்சாகமாகக் கைகுலுக்கி மதுரை பற்றிய எனது நூல் நாட்டுக்கு ஒரு கொடை என்று சொன்னார். திருமதி நிர்மலா சீதாராமன் நுட்பமான எனது கோட்டோவியங்கள் அவரது மாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டன என்றார். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அவர் பிறரையும் சந்திக்கவேண்டியிருந்ததால் விடைபெற்றார். பிறகு குடியரசுத் தலைவர் எனக்கு கைகொடுத்தார். எங்கள் முதலமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது எனது புத்தகத்தைத்தான் கொடுத்தார் என்று சொல்லத் துவங்கினேன். “ஆம், அந்தச் சிறந்த புத்தகத்தை திரு ஸ்டாலின் எனக்குக் கொடுத்தார்” என்று உடனே சொன்னார். விருதுபெற்ற வேறு சிலரையும் சந்தித்தேன்.

சென்னையில் கனமழை பொழிந்துகொண்டிருந்ததால் திரும்பி வரும் விமானம் தாமதாகலாம் என்று பயந்துகொண்டிருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் மழை நின்றது. பயணம் சௌகர்யமாகவே இருந்தது.

தில்லியில் நாங்கள் காலை 8.15 மணிக்கெல்லாம் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்துவிட்டோம். விமானத்தில் ஏறிய முதல் ஆட்கள் நானும் முகிலனும்தான். விமானத்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி தன்னை துணை விமானி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு பெண் இந்த விமானத்தைச் செலுத்தவிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னேன். ரோசி என்ற விமான பணிப்பெண் என்னைப் பற்றி நிறையத் தெரிந்துவைத்திருந்தார். கொஞ்ச நேரத்திலேயே என்னை ‘மனோகர் அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி டி’சில்வா – அவர் ஒரு தமிழர் – ஒரு அறிவிப்பைச் செய்தார். “ ஓவியரும், எழுத்தாளரும், இசைக்கலைஞரும், அறிவியலாளரும், இன்ன பிறவுமான திரு மனோகர் தேவதாஸ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டு நம்முடன் இவ்விமானத்தில் ஊர்திரும்புகிறார் ” என்றார். நான் எழுந்து நின்றேன். பயணிகள் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் உணர்ந்தேன். 2020-இல் விருது அறிவிக்கப்பட்டபோது தி இந்து நாளிதழில் ஃபேபியோலா எழுதியிருந்த கட்டுரையின் அறிமுக வரிகளைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். முகிலனும் நானும்தான் முதல் ஆளாக வெளியேறி ஏரோபிரிட்ஜில் கால்வைத்தோம். விமானிகள் இருவரும் நேரில் வந்து வாழ்த்தி விடைதந்தார்கள்.

மாலை 4.30 மணிவாக்கில் வீடுதிரும்பினோம். பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பும் என்னை வரவேற்குமுகமாக தமிழ்த் திரைப்படப் பாடல் சரணம் ஒன்றை சற்றே மாற்றிப்பாடி எனது உதவியாளரான கிரேஸ் வரவேற்றார்.

பாதுகாப்பான பயணத்திற்காகவும், அற்புதமான இந்த அனுபவத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி.

-மனோ

நன்றி: EānMé (December 2021), CSI St. Thomas English Church, Santhome, Chennai

மதுரை 1950 அஞ்சலட்டை வெளியீடு

மனோகர் தேவதாஸ்

செந்தீ நடராசன் எழுதிய பண்பாட்டுத் தளங்கள் வழியே நூலில் தொ.பரமசிவன் அய்யாவின் மதிப்பரையைப் பார்க்கக் கிடைத்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொ.ப.வின் நூல்களில் வராத இந்த மதிப்புரையை பகிர்கிறேன்.

மதிப்புரை

தமிழ் ஆய்வுலகம் என்ற ஒன்று 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் கருக்கொண்டது. அதன் முதல் அசைவாக மனோன்மணியம் சுந்தரனாரின், ‘ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’யினைக் குறிப்பிடலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் ‘செந்தமிழ்’ இதழின் வழியாகத் தமிழ் ஆய்வுலகம் உருத்திரளத் தொடங்கியது. முதல் முப்பது ஆண்டுகளுக்குள் தமிழ் ஆய்வுலகம் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அதாவது எழுத்திலக்கியச் செய்திகளுக்கு உரைவிளக்கம் தருவதோடு பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் தேங்கிப் போயிருந்த காலத்தில் இலக்கியச் செய்திகளைக் களஆய்வுச் செய்திகளோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கின்ற முயற்சியினைச் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியர் மு. இராகவையங்கார் தொடங்கி வைத்தார். இதுவே தமிழாய்வுலகம் பெற்ற புதிய பரிமாணத்தின் தொடக்கமெனலாம். அவரைத் தொடர்ந்து ‘தமிழ்க்கிழவர்’ மயிலை. சீனிவேங்கடசாமி இந்தப் புதிய நெறியினை வளர்த்தெடுத்தார்.

1923-இல் தாம் இளைஞராக இருந்த போதே ‘லட்சுமி’ என்னும் இதழில் மணிமேகலை காட்டும் மணிபல்லவத் தீவினைக் கண்டறியும் முயற்சியில் அவர் கட்டுரை ஒன்றெழுதினார். அதற்குப் பின் வந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ப்பண்பாட்டின் வலிமையான வேர்கள் அவைதீக மரபில் கால் கொண்டிருப்பதை அவரது எழுத்துக்கள் தமிழாய்வாளர்களுக்கு எடுத்துக் காட்டின. அவரைத் தொடர்ந்து காசுகள், அணிகலன்கள், விளக்குகள் எனப் புழங்கு பொருட்களை முதலடையாளமாகக் கொண்டு மறைந்திருந்த தமிழ் மரபினை மீண்டும் கட்டமைத்துக் காட்டியவர் சாத்தன்குளம் அ. ராகவன் ஆவார். இந்த மூவரின் ஆய்வுலக வழித் தோன்றலாக நமக்கு கிடைத்தவர் பேராசிரியர் நா. வானமாமலை ஆவார்.

இயக்கவியல் பொருள் முதல்வாதப் பின்னணியில் எளிய மக்களின் வாழ்க்கை அசைவுகளையும், வழக்காறுகளையும் மூலப்பொருளாகத் திரட்டி அதற்குரிய ஆராய்ச்சி முறையியல் ஒன்றையும் அவர் உருவாக்கிக் காட்டினார். அவரது தொடர்ந்த முயற்சியின் விளைவாக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஆய்வுத் துறையாகவும், கல்விப் புலமாகவும் வளர்ந்தது. பழங்காலத்துச் சமணமுனிவர்களைப் போல தன்னுடைய கருத்தியலை ஏந்திச் செல்ல அவர் ஒரு மாணவர் பட்டாளத்தையும் உருவாக்கினார். தமிழாய்வுலகில் அவரது ‘நெல்லை ஆய்வுக்குழு’ மாணவர்கள் முயற்சி நினைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மாணவர் வரிசையில் இந்த நூலாசிரியர் செந்தீ நடராசன் ஒருவர் என்பதை நானறிவேன்.

ஆறு கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளுமே களஆய்வுச் செய்திகளை மூலத் தரவுகளாகத் கொண்டவை.

முதற் கட்டுரையான ‘அவ்வை நோன்பு’ அந்த நோன்பினைச் சமணத்தோடு தொடர்புப்படுத்த முயலுகின்றது. இந்த முயற்சிக்கான அடிப்படைக் காரணம் அவ்வை என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாக நிகண்டு நூல்களில் காணப்படுவதேயாகும். ஆனால் இலக்கியங்களில் இந்தச் சொல் இந்தப் பொருளில் பதிவு பெறவில்லை. இதனோடு ஒலித் தொடர்புடைய, ஐயன் என்பதின் பெண்பாற் சொல்லான ‘ஐயை’ என்ற சொல்லே காணப்படுகிறது. அவ்வை நோன்பு மகப்பேற்று நோன்பு என்பதாகவே தோற்றமளிக்கிறது. சமணமே உலகில் முதன் முதலாக புலாலை நீக்கச் சொன்ன மதமாகும். பிச்சை எடுப்பதனை அங்கீகரித்த மதமுமாகும். அவ்வை நோன்பில் புலால் இடம் பெறாமையும், பிச்சை மதிப்பிற்குரிய செயலாகவும் காட்டப் பெறுவது ஆய்வாளர் செந்தீ நடராசனை இந்தத் திசை நோக்கி சிந்திக்கத் தூண்டியிருக்கலாம். ஆனால் அவ்வை நோன்பு நேரிடையாகவும், மறைமுகமாகவும், வணிகத்தோடு தொடர்புடைய சாதியாரால் தான் இன்றளவும் விரும்பிக் கொண்டாடப்படுகிறது. சமணம் வணிகரால் வளர்க்கப்பட்ட மதம். ‘வாரிசுரிமைக் கவலை’யும் அதன்விளைவாகத் தத்தெடுக்கும் பழக்கமும் வணிகச் சாதியாருக்கே மிகவும் உண்டு. இனக்குழுச்சடங்குகளோடு பெருஞ்சமய நெறிகள் ஊடாடியிருக்கின்றன. அந்த வகையில் ஓர் இனக்குழுச் சடங்கின் எச்சத்தை தமிழ் நாட்டுச் சமணம் உள் வாங்கியிருக்கலாம் என்ற செந்தீநடராசனின் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது கட்டுரையும் சமணம் பற்றியதாகவே அமைகின்றது. திகம்பர சமணத் துறவிகளின் தோற்றத்தைக் குறிக்கும் ‘மயிராண்டி’ என்ற சொல் வைதீக நெறியாளர்களால் வசைச் சொல்லாக மாற்றப்பட்டதை இவர் கூர்மையாக இனம் கண்டு காட்டுகிறார். ஆனால் இலையிலிட்டுப் படைத்த உணவைச் சுற்றி நீர் தெளிப்பது சமண வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வீட்டுச் சடங்குகளில் படைக்கப் பெற்ற உணவைச் சுற்றி பெண்கள் கையில் சிறிதளவு நீர் எடுத்துத் தெளிப்பதை ‘நீர் விளவுதல்’ என்ற சொல்லாலும் குறிப்பர். பாத்திரத்தில் பூவிதழ்கள் இட்ட நீரையே இவ்வாறு எடுத்துத் தெளிப்பர். இது சடங்கின் முடிவைக் குறிக்கும் ஓர் அசைவாகும். மாறாக உண்ணும் இலையினைத் தரையில் விரிப்பதற்கு முன்னால் அந்த இடத்தில் தண்ணீரைத் தெளித்து ‘தலசுத்தி’ செய்யும் முறை சமணருக்குரியதே.

கோவலனுக்கு உணவு படைக்க முற்படும் கண்ணகி

“மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி  

குமரி வாழையின் கோட்டகம்”

விரித்த செய்தியினைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.

(தலசுத்தி செய்யும் இப்பழக்கம் வைணவப் பார்ப்பனர்களிடையே இன்றும் காணப்படுகிறது.) ஆனால் நீர் விளவுதல் பெண்கள் செய்யும் வீட்டுச் சடங்குகளின் நிறைவுப் பகுதி என்றே தோன்றுகிறது; சமணத் தோற்றமுடையது என ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எஞ்சிய மூன்று கட்டுரைகளும், கட்டுரைகளுக்கான மூலத்தரவுகளும் நாஞ்சில் நாடு, ஆய்நாடு, வேணாடு என்று மூன்று பெயர்களில் சுட்டப்படும் நிலப்பகுதியினைச் சார்ந்ததாகும்.

முடிப்புரை அம்மன் வழிபாடு ஒடுக்கப்பட்டவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வமாக்கப்பட்டால், மேல்சாதி ஆளுமை அதனை எப்படிப் பார்த்தது என்பதற்கான அடையாளமாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இது அறியப்படாத வழிபாட்டு நெறியாகக் காணப்படுகிறது. ‘புரை’ என்பது இடப்பொருள் தரும் சொல்லாகும். இங்கே முடி தலையிடத்தில் சூடப்பட்ட அணிகலனாகத் தோன்றவில்லை. மாறாக, காலமல்லாத இறப்பைச் சந்தித்த பெண்ணின் தலைமுடியாக இருக்கலாம். இவ்வகை நிகழ்வுகளின் தொகுதி முடிப்புரை அம்மன் என்னும் வழிபாட்டு நெறியினை (Cult) உருவாக்கி இருக்க வேண்டும். திரு. செந்தீ கண்டுபிடித்துள்ள இந்த புதிய ஆய்வுக்களம் நம்முடைய ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.

கேரளச் சமூகத்தின் திருமண உறவுகள் குறித்த கட்டுரையும், குமரி மாவட்டச் சமூக ஒடுக்குமுறைக்கெதிரான குரல்களைப் பற்றிய கட்டுரையும் தனித்தனியே இரண்டு நூற்களுக்குப் பொருளாக விரிக்கத்தக்கன. திரு. செந்தீ அவர்களின் உழைப்பு அதனைச் சாத்தியமாக்குமென நினைக்கின்றேன், நம்புகின்றேன்.

கடைசர் பற்றிய கட்டுரை இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழில் சார்ந்து மக்கள் திரள்களின் தன்னடையாளத்தைக் காண முயல்வது தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். எண்ணிக்கையில் சிறுத்தவர்களாக, மூன்று அல்லது நான்கு வகையான தொழில் செய்கின்ற கடைசர் போன்ற மக்கள் திரள்கள் (சாதிகள்) தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. “அனுலோமம்”, “பிரதிலோமம்” என்ற வடசொற்கள் குறிப்பிடும் (தமிழில் இவற்றுக்கு நிகரான சொற்கள் காணப் பெறவில்லை என்பது வியப்பே). சாதிக்கலப்பு மணங்கள் தமிழ்நாட்டில் உட்சாதிகளின் எண்ணிக்கையினை வட்டாரம் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் பெருக்கிக் காட்டியுள்ளன. இதன் விளைவாகவே ஒவ்வொரு சாதியும் சாதியின் உட்பிரிவுகளும் அடையாளத்தைக் காட்ட முற்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சாதித் தொன்மங்களும், சாதிப் புராணங்களும் தோன்றத் தொடங்கின. இதனை மட்டும் நம்மால் உறுதியாகக் கணிக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் கள ஆய்வு நடத்தப் பெற்றால் மட்டுமே இந்நிகழ்வுகள் குறித்த ஆய்வுக் கோட்பாடு ஒன்றை நம்மால் உருவாக்க முடியும். அந்த வகையில் திரு, செந்தீ அவர்களின் “கள ஆய்வு” முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

பண்பாட்டுத் தளத்தில் நம்மை நோக்கி நிறைய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. அதிகாரப்பின்னணியில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் கொடுமையான முயற்சிகள் நாள்தோறும் அரங்கேறுகின்றன. வளமற்றதாகக் கருதப்படும் மண் கூட ஒரு போதும் ஒற்றைத் தாவரத்தை ஏந்தி நிற்பதில்லை. வளமான மக்கள் திரள்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆயிரமாயிரம் அசைவுகளை உடையன. பன்முகத் தன்மை என்பதே மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர்சார்ந்த இயல்பாகும். மண் சார்ந்த அசைவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் திரு. செந்தீ போன்றவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பினை நேர்மையாக ஆற்றுகின்றார்கள். இவரைப் போன்றவர்கள் அணி திரட்சியே தமிழ் ஆய்வுலகத்திற்கு புதிய தடம் அமைத்துத் தருமென நம்புகிறேன், வாழ்த்துகின்றேன்.

பேராசிரியர் – தொ.பரமசிவன்

தமிழியல் துறைத்தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

நெல்லை.

1-12-2002.