மாவூற்று வேலப்பர் கோவில் சித்திரைத் திருவிழா

Posted: மே 16, 2023 in ஊர்சுத்தி
குறிச்சொற்கள்:, , , ,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற வழக்கிற்கேற்ப இங்கு முருகன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை முதல்நாளன்று இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்தி வருதல் என ஏராளமான நேர்த்திக்கடன்களோடு வருகின்றனர்.

“மாவூற்று வேலப்பர் கோவில் பழமையான முருகன் கோவில். வள்ளிக்கிழங்கைத் தோண்டும்போது முருகனின் சிலை சுயம்பு மூர்த்தியாக கிடைத்தது என பளியர்கள் சொல்கின்றனர். தமிழகத்தின் ஆதிகுடிகளான பளியர்கள் இக்கோவிலின் பூசாரிகளாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்க விசயம். சித்திரை முதல்நாளன்று நடக்கும் திருவிழா மிகச் சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திருவிழா” என பேராசிரியர் சுந்தர் காளி அவர்கள் கூறினார்.

நானும் நண்பர் ரகுநாத்தும் மதுரையிலிருந்து அதிகாலை கிளம்பி இருசக்கரவாகனத்தில் ஆண்டிப்பட்டி நோக்கி சென்றோம். வழிநெடுக மலைகள், சில இடங்களில் குடைவரை போல மரங்கள் அடர்ந்த சாலை, சேமங்குதிரைகளில் காவல் தெய்வங்கள், நிறைந்திருக்கும் கண்மாய்கள், ஆண்டிப்பட்டி கணவாய் என வேடிக்கை பார்த்தபடி சென்றோம். ஆண்டிப்பட்டியிலிருந்து தேனி செல்லும் வழியில் தெப்பம்பட்டி விலக்கிலிருந்து இடதுபுறமாகத் திரும்பினோம்.

சாலையோரமிருந்த ஒரு தேநீர்கடையில் சூடாக உருளைக்கிழங்கு சமோசாவும், அப்பமும் தின்றோம். “தமிழ் வருசப்பிறப்புன்னு சொல்றீங்க, ஒரு வருசத்தோட பேரு கூட தமிழ்ல இல்ல. அப்புறம் என்னா தமிழ்வருசப்பிறப்பு” கடைக்காரர் எப்போதும் வருபவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடல்களை கேட்டபடி தேநீர் அருந்தினோம். அங்கிருந்து மாவூற்று வேலப்பர் கோவில் செல்லும் வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் அன்னதானமும், தாகசாந்திக்கு நீர்மோரும், பானகமும் வழங்கியதைக் காண முடிந்தது.

இராஜதானி, ஆர். சுந்தரராஜபுரம், கண்டமனூர் விலக்கு கடந்து தெப்பம்பட்டி சென்றோம். மலையடிவாரத்தில் எல்லா வாகனங்களையும் நிறுத்தியிருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கினோம். கோவிலை நோக்கி நடக்கும் சாலையில் வழிநெடுக புளியோதரை, தக்காளிசாதம், தயிர்சாதம் என வண்டிகளில் வைத்து தட்டுதட்டாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு பானகமும், நீர்மோரும் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் குடும்பம்குடும்பமாக கோவிலை நோக்கி நடந்தபடி இருக்கிறார்கள். காவடி எடுத்து வருபவர்கள் முன்னே நையாண்டி மேளம் அல்லது தேவராட்டம் வைத்து ஒரு குழு ஆடியபடி வருகிறார்கள். வண்ண உடைகளில் உருமியின் இசைக்கேற்ப தேவராட்டம் ஆடுவதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாகயிருக்கிறது. அதிலும் உருமியின் உருமல் இதயத்தை சுண்டி இழுக்கிறது.

சுடச்சுட வடை- பஜ்ஜி சுடுபவர்கள் ஒருபுறம், அல்வா, பூந்தி, மிக்சர் என பலகாரக் கடைக்காரர்கள் ஒருபுறம், தோடு, சிமிக்கி என அலங்காரப் பொருள் விற்பவர்கள் ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டுச்சாமான்கள் விற்பவர்கள் ஒருபுறம் என மலையடிவாரம் திருவிழாக்களையுடன் திகழ்கிறது. நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துபவர்கள் ஒருபுறம். தங்களுக்கு பிடித்த படத்தை, பெயரை பச்சை குத்துபவர்கள் ஒருபுறம் என அடிவாரத்தில் விதவிதமான முகங்களைக் காணமுடிகிறது.

வழியில் கருப்புசாமி கோவில்முன் இரண்டு சேமங்குதிரைகள் வரவேற்கின்றன. ஆடுகளை கருப்புசாமிக்கு பலியிடுபவர்கள், பொங்கலிடுபவர்கள் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். காவடி எடுத்துவருபவர்கள் கருப்புசாமியை வணங்கிச்செல்கிறார்கள். சிறுகுன்றின்மீது கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி மலைகள் அழகாக அமைந்துள்ளன. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் காவடி எடுத்துவருபவர்களோடு வந்த தேவராட்ட குழுவினர் ஆட கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கிறது. தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் இதுபோன்ற வழிபாடு சார்ந்த நிகழ்வுகளால் உயிர்ப்போடு திகழ்கின்றன.

காவடி எடுத்து வருபவர்கள், அலகுகுத்தி வருபவர்கள், பால்குடம் எடுத்து வருபவர்கள் முருகன் சன்னதிக்கு அருகில் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவருகின்றனர். முருகன் சன்னதிக்கு நேரே மயில் சிலை அமைந்துள்ளது. மயிலுக்கு வலப்புறமாக ஏழுகன்னிமார் சிலைகள் உள்ளன.

கோவிலுக்கு பின்புறமுள்ள மலையில் சிறுசுனையிலிருந்து நீர் வருகிறது. அது நிரம்பியிருக்கும் சிறுகுளத்தில் பக்தர்கள் குளிக்கின்றனர். சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்கின்றனர். பெரிய மருதமரங்கள் நிறைந்துள்ளன. மலையிலிருந்து படியிறங்கிவரும் வழியில் சிறுகுகையில் முருகனின் சிலையொன்று உள்ளது.

மாவூற்று வேலப்பர் கோவில் திருவிழா முடிந்து அடுத்து தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக திருவிழாக்கடைகாரர்களிடம் உரையாடியபோது கூறினர். தாகம் தணிக்க பானகம் குடித்தோம், கம்மங்கூழ் குடித்தோம், நீர்மோர் குடித்தோம். ஆனாலும், வெயில் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தது. அனல்பறக்கும் சாலையில் மதுரை நோக்கி வந்தோம்.

திருவிழாக்காட்சிகளையும் அதைக்குறித்த பேராசிரியர் சுந்தர்காளி உரையையும் காண எங்கள் மதுரை பக்கத்தை சொடுக்குங்கள்.

படங்கள் & காணொளி – ரகுநாத்

பின்னூட்டமொன்றை இடுக