Archive for the ‘ஊர்சுத்தி’ Category

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராஜசிங்கமங்கலத்திலுள்ள உறவினர் இல்லத்திற்கு செல்லத் திட்டமிட்டோம். இராஜசிங்கமங்கலத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலம் குறித்து இணையத்தில் தேடியபோது காரங்காடு சூழலியல் சுற்றுலா பற்றி அறிய முடிந்தது. உப்பு நீரில் வளரும் அலையாத்தி தாவரங்களைக் காண பிச்சாவரம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் இராமநாதபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த காரங்காடு பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

இராஜசிங்கமங்கலம் சென்று அங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ள காரங்காட்டுக்குச் சென்றோம். காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து தமிழக வனத்துறையினர் காரங்காடு சூழலியல் சுற்றுலாவை நடத்திவருகின்றனர். இதில் படகு சவாரி, துடுப்பு சவாரி போன்ற விசயங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

படகு சவாரி செல்வதற்கு பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறுவர்களுக்கு 100 ரூபாயும் வாங்குகின்றனர். இது ஒரு மணி நேர படகு பயணத்திற்கான கட்டணம். பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு படகில் அமர்ந்தோம். காரங்காடு அழகான கடற்கரை கிராமம். ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. கரைகளில் மீன்பிடிப்படகுகள் நிற்கின்றன.

படகுப்பயணத்தின்போது இரண்டு பக்கங்களிலுமுள்ள அலையாத்தி மரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆலா, நீண்ட காலுள்ள நாரை, கடல்புறா போன்ற பறவைகளைப் பார்த்தோம். கரைப்பகுதிக்கு அருகில் மீனவர்கள் நீருக்குள் நடந்துபோய் வலைவீசி மீன்பிடிப்பதைக் காண முடிந்தது. மோட்டார் படகினை மிகவும் மெல்ல ஓட்டி வந்தனர். மிகக் குறைந்த ஆழமே உள்ள பகுதியில் படகு செல்கிறது.

ஓரிடத்தில் படகை நிறுத்தி மேடான இடத்தில் நம்மை இறக்கி விடுகின்றனர். சுற்றிலும் நீர் இருக்க நாம் அப்பகுதியில் இறங்குவது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. கடலினைப் பார்க்கும்போது உற்சாகம் அலைஅலையாய் வந்து சேர்கிறது. அங்கிருந்து படகில் ஏறியதும் கொஞ்சதூரம் கடலுக்குள் படகுப் பயணம்.

அலையில் படகு மெல்ல ஏறி இறங்க நம் மனமும் அதோடு சேர்ந்து இயங்குகிறது. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே படகு மீண்டும் வருகிறது. காரங்காடு தேவாலயம், கரையோர வீடுகள் வேடிக்கை பார்த்தபடி பயணம் நிறைவடைந்தது. காரங்காடு படகு குழாம் பயணச்சீட்டு எடுக்குமிடம் அருகில் சிறு உணவகம் ஒன்றிருக்கிறது. கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, கணவாய் கட்லெட், இறால் கட்லெட் கிடைக்கிறது. மேலும் தக்காளி சாதம், தயிர் சாதமும் கிடைக்கும். தேநீர், சர்பத், மோர் போன்ற குடினிகளும் கிடைக்கிறது. காரங்காடு தேவாலயத்திற்கு அருகில் ஒரு பழைய மண்டபம் ஒன்றுள்ளது.

காரங்காடு படகுப் பயணம் முடித்து மதுரை வரும் வழியில் பார்த்த கிராமங்களிலிருந்த நீர்நிலைகளை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை எங்கும் காணமுடியவில்லை. கிராம மக்களின் நீராதாரமாக விளங்கும் கண்மாய், குளங்களை அவர்கள் பராமரிப்பதைப் போல நமது ஊர்களிலும் பராமரித்தால் சிறப்பாக இருக்கும். 2023-இன் மறக்க முடியாத பயணமாகவும் காரங்காடு பயணம் அமைந்தது.

படங்கள் உபயம் : செல்லப்பா

காணொளி உபயம் : History with Madura

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தேனியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வீரபாண்டி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் அன்று தொடங்கி அடுத்த செவ்வாய் வரை எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பூப்பல்லக்கு, தேரோட்டம், ஊர்பொங்கல் என விழா நிகழ்வுகள்.

பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் கண்நோய் தீர்த்த கௌமாரி பல லட்சக்கணக்கான மக்களின் குறைகளையும் தீர்த்து வருவதை ஆண்டுதோறும் கூடும் நேர்த்திக்கடன்களின் வழியாக அறியலாம். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அக்கினிச்சட்டி எடுப்பது, ஆயிரம் கண் பானை எடுப்பது, முல்லையாற்று நீரை கொண்டுவருவது என பலவிதமான நேர்த்திக்கடன்களை கௌமாரிக்கு செலுத்துகின்றனர்.

தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டி குடும்பம்குடும்பமாக கோவிலுக்கு வந்து கிடாவெட்டி கொண்டாடிய கதைகளை இங்குவருகின்ற மூத்தவர்களிடம் கேட்கலாம். காலமாற்றத்தில் வாகனங்கள் மாறினாலும் கௌமாரியை நோக்கிவரும் அடியவர்களின் கூட்டம் குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டுதான் வருகிறது.

கோவிலுக்கு அருகில் ஒருபுறம் முல்லையாறும், மறுபுறம் உள்ள பெருந்திடலும் இத்திருவிழாவை பெருந்திருவிழாவாக மாற்ற உதவுகின்றன. நூற்றுக்கணக்கான கடைகள், குடைராட்டினம் தொடங்கி ஏராளமான பொழுதுபோக்கு விசயங்கள் மக்களை மகிழ்வூட்ட காத்திருக்கின்றன. அந்நாட்களில் தேனி வீரபாண்டித் திருவிழா மக்கள் கூடும் பெரும் சந்தையாக விளங்கியிருந்ததை சுற்றிப் பார்க்கும்போது அறிய முடிகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா சமயத்தில் தேனி வீரபாண்டித் திருவிழா குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும்போது போகவேண்டும் என பலமுறை திட்டமிட்டுருக்கிறேன். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பாக இருக்கும் என உடன்பணியாற்றும் அண்ணன் ஒருவர் சொன்னபோது வெள்ளிக்கிழமை செல்ல திட்டமிட்டோம். 12.05.23 வெள்ளியன்று மதுரையிலிருந்து மாலை தேனி நோக்கிப் புறப்பட்டோம். தேனி பேருந்து நிலையத்தில் இறங்கி ஆளுக்கொரு தோசை சாப்பிட்டு வீரபாண்டி செல்லும் சிறப்பு பேருந்தில் சென்றோம்.

வீரபாண்டியில் இறங்கி கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். வழிநெடுக கடைகள். கோவிலை நெருங்குவதற்கான சமிக்கையாக கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்குகிறது. முல்லையாற்றிலிருந்து தீச்சட்டிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. இரவில் ஆறு மின்விளக்கொளியிலும், தீச்சுடரிலும் அழகாகத் தெரிந்தது. புதிய தீச்சட்டியை வைத்து வணங்கி, தீ வளர்த்து அருள் இறங்கி கோவிலை நோக்கி தீச்சட்டியை சுமந்து செல்கின்றனர். தீச்சட்டி, அலகு குத்துதல், நீர்குடம், ஆயிரம்கண்பானை என ஒவ்வொரு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முன்னாலும் நையாண்டி மேளக் காரர்கள், டிரம்செட் இசைப்பவர்கள் வருகின்றனர். பலர் மருளேறி ஆடிவர அவர்கள் முன்னால் ’ரண்டக்ரண்டக்’ ஓசைக்கே ஆடிவருகின்றனர்.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரம் முழுவதும் மக்கள் வெள்ளமாய் போவதும் வருவதுமாகயிருக்கிறார்கள். வீரபாண்டி கோவிலைச் சுற்றியுள்ள பகுதி பெருவெளியாகயிருப்பது இங்கு நிறைய கடைகள், குடைராட்டினங்கள் போடுவதற்கு வசதியாகயிருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் போடப்படும் சித்திரைப் பொருட்காட்சியைவிட பத்து மடங்கு பெரிதாயிருப்பதற்கு இதுவே காரணம்.

குழந்தைகள் ஏறிக்குதிக்கும் பலூன்கள், வட்டமாய் சுழன்று செல்லும் டிராகன், குதிரை-கார்-பைக் என சுற்றிவரும் சிறிதும்பெரிதுமான குடைராட்டினங்கள், அல்வாக்கடைகள், ஏத்தங்காய் வற்றல்கள், மிளகாய்பஜ்ஜி டெல்லி அப்பளக்கடைகள், பானிபூரி மாசல்பூரிக்கடைகள் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கடைகள். குடைராட்டினத்தைப் போல அந்த வெளியையே சுற்றிச்சுற்றி வரும் மக்கள். எது எடுத்தாலும் 10 ரூபாய் கடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் என ஏராளமான கடைகள்.

முதல் செவ்வாயன்றும், வெள்ளியன்றும் நல்ல கூட்டம் வருகிறது. நள்ளிரவு முழுக்க ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் கோவிலை நோக்கி வந்தபடியிருக்கிறது. விடியவிடிய மக்கள் கூட்டங்கூட்டமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் நள்ளிரவில் கனமான கல்தோசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திடலில் ஒருபுறம் இரவு நாடகம் நடக்கிறது. அதைப்பார்க்க ஏராளமான கூட்டம்.

தீ வளர்த்த சட்டிகளோடு ஆடிவரும் மக்கள் கோவிலுக்கு அருகில் அதை செலுத்திவிட்டு கௌமாரியம்மனை வணங்கிச் செல்கிறார்கள். தேரிலேறி கௌமாரி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளியன்று புறப்படும் கௌமாரியம்மன் தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியாகச் சுற்றி திங்களன்று நிலையை அடைகிறது. செவ்வாயன்று ஊர்ப்பொங்கலோடு திருவிழா நிறைவடைகிறது. சு.வேணுகோபால் எழுதிய ஆட்டம் நாவலில் தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவைப் பற்றி எழுதியதை வாசித்திருக்கிறேன். அதை மீண்டும் தேடி வாசிக்க ஆசை.

விடியவிடிய அக்கினிச்சட்டி ஊர்வலம் பார்த்து அதிகாலையில் கிளம்பினோம். பேருந்து நிறுத்தும் இடத்தை நோக்கி நடக்க பெரும்பாலான கடைக்காரர்கள் ஆங்காங்கே அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தேனியிலிருந்து வரும் பேருந்து மக்களைக் கொண்டுவந்துவிட்டு திருவிழாப் பார்த்தவர்களை அழைத்துச் செல்கிறது. தேனி பேருந்து நிலையமருகே சூடாக ஒரு தேனீரை அருந்தி மதுரையை நோக்கிப் புறப்பட்டோம்.

நன்றி – கணேசன், சாலமன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற வழக்கிற்கேற்ப இங்கு முருகன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை முதல்நாளன்று இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்தி வருதல் என ஏராளமான நேர்த்திக்கடன்களோடு வருகின்றனர்.

“மாவூற்று வேலப்பர் கோவில் பழமையான முருகன் கோவில். வள்ளிக்கிழங்கைத் தோண்டும்போது முருகனின் சிலை சுயம்பு மூர்த்தியாக கிடைத்தது என பளியர்கள் சொல்கின்றனர். தமிழகத்தின் ஆதிகுடிகளான பளியர்கள் இக்கோவிலின் பூசாரிகளாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்க விசயம். சித்திரை முதல்நாளன்று நடக்கும் திருவிழா மிகச் சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திருவிழா” என பேராசிரியர் சுந்தர் காளி அவர்கள் கூறினார்.

நானும் நண்பர் ரகுநாத்தும் மதுரையிலிருந்து அதிகாலை கிளம்பி இருசக்கரவாகனத்தில் ஆண்டிப்பட்டி நோக்கி சென்றோம். வழிநெடுக மலைகள், சில இடங்களில் குடைவரை போல மரங்கள் அடர்ந்த சாலை, சேமங்குதிரைகளில் காவல் தெய்வங்கள், நிறைந்திருக்கும் கண்மாய்கள், ஆண்டிப்பட்டி கணவாய் என வேடிக்கை பார்த்தபடி சென்றோம். ஆண்டிப்பட்டியிலிருந்து தேனி செல்லும் வழியில் தெப்பம்பட்டி விலக்கிலிருந்து இடதுபுறமாகத் திரும்பினோம்.

சாலையோரமிருந்த ஒரு தேநீர்கடையில் சூடாக உருளைக்கிழங்கு சமோசாவும், அப்பமும் தின்றோம். “தமிழ் வருசப்பிறப்புன்னு சொல்றீங்க, ஒரு வருசத்தோட பேரு கூட தமிழ்ல இல்ல. அப்புறம் என்னா தமிழ்வருசப்பிறப்பு” கடைக்காரர் எப்போதும் வருபவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடல்களை கேட்டபடி தேநீர் அருந்தினோம். அங்கிருந்து மாவூற்று வேலப்பர் கோவில் செல்லும் வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் அன்னதானமும், தாகசாந்திக்கு நீர்மோரும், பானகமும் வழங்கியதைக் காண முடிந்தது.

இராஜதானி, ஆர். சுந்தரராஜபுரம், கண்டமனூர் விலக்கு கடந்து தெப்பம்பட்டி சென்றோம். மலையடிவாரத்தில் எல்லா வாகனங்களையும் நிறுத்தியிருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கினோம். கோவிலை நோக்கி நடக்கும் சாலையில் வழிநெடுக புளியோதரை, தக்காளிசாதம், தயிர்சாதம் என வண்டிகளில் வைத்து தட்டுதட்டாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு பானகமும், நீர்மோரும் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் குடும்பம்குடும்பமாக கோவிலை நோக்கி நடந்தபடி இருக்கிறார்கள். காவடி எடுத்து வருபவர்கள் முன்னே நையாண்டி மேளம் அல்லது தேவராட்டம் வைத்து ஒரு குழு ஆடியபடி வருகிறார்கள். வண்ண உடைகளில் உருமியின் இசைக்கேற்ப தேவராட்டம் ஆடுவதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாகயிருக்கிறது. அதிலும் உருமியின் உருமல் இதயத்தை சுண்டி இழுக்கிறது.

சுடச்சுட வடை- பஜ்ஜி சுடுபவர்கள் ஒருபுறம், அல்வா, பூந்தி, மிக்சர் என பலகாரக் கடைக்காரர்கள் ஒருபுறம், தோடு, சிமிக்கி என அலங்காரப் பொருள் விற்பவர்கள் ஒருபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டுச்சாமான்கள் விற்பவர்கள் ஒருபுறம் என மலையடிவாரம் திருவிழாக்களையுடன் திகழ்கிறது. நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துபவர்கள் ஒருபுறம். தங்களுக்கு பிடித்த படத்தை, பெயரை பச்சை குத்துபவர்கள் ஒருபுறம் என அடிவாரத்தில் விதவிதமான முகங்களைக் காணமுடிகிறது.

வழியில் கருப்புசாமி கோவில்முன் இரண்டு சேமங்குதிரைகள் வரவேற்கின்றன. ஆடுகளை கருப்புசாமிக்கு பலியிடுபவர்கள், பொங்கலிடுபவர்கள் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். காவடி எடுத்துவருபவர்கள் கருப்புசாமியை வணங்கிச்செல்கிறார்கள். சிறுகுன்றின்மீது கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி மலைகள் அழகாக அமைந்துள்ளன. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் காவடி எடுத்துவருபவர்களோடு வந்த தேவராட்ட குழுவினர் ஆட கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கிறது. தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் இதுபோன்ற வழிபாடு சார்ந்த நிகழ்வுகளால் உயிர்ப்போடு திகழ்கின்றன.

காவடி எடுத்து வருபவர்கள், அலகுகுத்தி வருபவர்கள், பால்குடம் எடுத்து வருபவர்கள் முருகன் சன்னதிக்கு அருகில் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவருகின்றனர். முருகன் சன்னதிக்கு நேரே மயில் சிலை அமைந்துள்ளது. மயிலுக்கு வலப்புறமாக ஏழுகன்னிமார் சிலைகள் உள்ளன.

கோவிலுக்கு பின்புறமுள்ள மலையில் சிறுசுனையிலிருந்து நீர் வருகிறது. அது நிரம்பியிருக்கும் சிறுகுளத்தில் பக்தர்கள் குளிக்கின்றனர். சிறுவர்கள் குதித்து விளையாடி மகிழ்கின்றனர். பெரிய மருதமரங்கள் நிறைந்துள்ளன. மலையிலிருந்து படியிறங்கிவரும் வழியில் சிறுகுகையில் முருகனின் சிலையொன்று உள்ளது.

மாவூற்று வேலப்பர் கோவில் திருவிழா முடிந்து அடுத்து தேனி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக திருவிழாக்கடைகாரர்களிடம் உரையாடியபோது கூறினர். தாகம் தணிக்க பானகம் குடித்தோம், கம்மங்கூழ் குடித்தோம், நீர்மோர் குடித்தோம். ஆனாலும், வெயில் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தது. அனல்பறக்கும் சாலையில் மதுரை நோக்கி வந்தோம்.

திருவிழாக்காட்சிகளையும் அதைக்குறித்த பேராசிரியர் சுந்தர்காளி உரையையும் காண எங்கள் மதுரை பக்கத்தை சொடுக்குங்கள்.

படங்கள் & காணொளி – ரகுநாத்

பெங்களூருக்கு ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஈர்ப்பது அங்குள்ள மரங்கள்தான். ஒவ்வொரு சாலையிலும் எதாவது பெருமரம் அந்த வீதியின் காவல்தெய்வம் போலக் காத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள நகர நெரிசலைத்தாண்டி, பிரமாண்ட கட்டிடங்களைத் தாண்டி அந்த ஊரின் அழகு அந்த மரங்களில்தான் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

இராமன் ஆய்வகத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடமே ஒரு காடு போலிருக்கிறது. அங்குள்ள அரங்கை அவ்வளவு அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். அதைத் தொடங்கியபோது சர்.சி.வி.ராமன் இருந்த காணொளிகளை ஒலிபரப்புவதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதேபோல பிரபஞ்சம் குறித்தும், சூரியக்குடும்பம் குறித்தும் நிறைய செய்திகளை அங்குள்ள வல்லுநர்கள் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள்.

இராமனின் சேகரிப்புகள் எல்லாம் அரிதான பொருட்கள். அங்குள்ள கண்ணாடிப் படிமங்களைப் போன்று வேறெங்கும் கண்டதில்லை. மேலும், அவர் இசை ரசிகர் என்பதால் அவருடைய வீணையையும் காணலாம். இராமன் தொடங்கிய நூலகத்தை இப்போது மிகப்பெரிதாக எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். அங்கு இராமனின் வாழ்வை, அவரது கண்டுபிடிப்புகளை பற்றிய அரங்கை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்கள். மிக அரிய நூல்களைக் கொண்ட நூலகம்.

1962 ஜூலை 14இல் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பிரதமராகயிருந்த ஜவகர்லால் நேரு தொடங்கிவைத்திருக்கிறார். பள்ளி, கல்லூரியிலிருந்து வருபவர்கள் பார்வையிட சலுகை கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி தவிர ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. இயற்பியல், வேதியியில், உயிர்தொழில்நுட்பவியல், வானியல், கணினியியல் என பல்துறை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு செய்முறையையும் நாம் செய்து பார்க்கும்படி சிறப்பாக வடிவமைத்து அதைக்குறித்த விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

பெங்களூர் அரசு அருங்காட்சியம் இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. 1865இல் தொடங்கப்பட்டு 1877இல் தற்போதுள்ள இடத்தில் இந்திய ரோம கட்டிடக்கலையில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியது. இங்கு கன்னடச் செப்பேடுகள், கல்வெட்டுகள், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஓவியங்கள் என பல அரிய பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

அரசு அருங்காட்சியகத்தின் அருகில் வெங்கடப்பா ஓவிய கேலரி உள்ளது. பெங்களூரிலிருந்த வெங்கடப்பா என்ற ஓவியரின் படைப்புகள் இங்குள்ளன. 1886இல் பிறந்தவர். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்கெல்லாம் சென்று அந்த ஊரின் இயற்கை காட்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். இந்த கேலரியின் இரண்டாவது மாடியில் பல்வேறு ஓவியர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒரு அறையில் மரத்தில் செய்த அரிய மரச்சிற்பங்கள் உள்ளன.

ஜவகர்லால் நேரு கோளரங்கம் பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்த இடம். பிரபஞ்சத்தில் நமது பூமி எத்தனையெத்தனை சிறிது என்பதை அறிய கோளரங்கம் பெரிதும் உதவுகிறது. திரையரங்கு போன்ற இடத்தில் நடுவில் சிறிய புரொஜக்டரிலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. லால்பார்க் என்ற இடத்திலுள்ள தாவரவியல் பூங்காவும், பூங்காவின் தொடக்கத்திலுள்ள பாறைத்திட்டில் அமைந்துள்ள தொல்சின்னமும் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள்.

பெங்களூரில் மெஜஸ்டிக், கிருஷ்ணராஜ மார்க்கெட் பகுதியிலுள்ள கடைவீதிகள் மிகவும் பிரபலம். இந்த வீதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கிறது. துணிகள், கைப்பைகள், அலங்காரப்பொருட்கள் என ஒவ்வொருவரும் வேண்டியதை வாங்குகிறார்கள். சாலையோரங்களில் குடைமிளகாய் வைத்து சுடச்சுட பஜ்ஜி போடுகிறார்கள். இட்லி, தோசை, பூரி, பிரியாணி என தள்ளுவண்டிக்கடைகளில் ஒரு கூட்டம். பெங்களூரில் கிடைக்கும் சாம்பாரை சாம்பார்னு சொல்ல மட்டும் மனசு வரமாட்டேங்குது. எல்லா ஊர்களிலும் மாலை நேரங்களில் கடைவீதிகளுக்கான அழகு தங்க விலை போலக் கூடிக்கொண்டேயிருக்கிறது.

பெங்களூரில் பயணிப்பதற்கு பொறுமை ரொம்ப அவசியம். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவ்வளவு எளிதில் சென்று விட முடியாது. நகர நெரிசல், சிக்னலில் மாட்டி நம்முடைய பெரும்பாலான நேரம் அதில் போய்விடும். பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன.

aasaithambi1

தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலானவை ஈம எச்சங்கள் கிடைக்கும் புதைவிடங்களாக இருந்த நிலையில் இதுவரை கிடைக்காத அளவுக்கு ஒரு பெரிய பரப்பில் மக்கள் வாழ்ந்த கட்டிடப்பகுதிகளடங்கிய ஒரு வாழ்விடத் தளமாகக் கிடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கீழடி.

greenwalk

கீழடி பசுமைநடைக்கு எப்போதும்போல முந்நூறுக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். எல்லோரும் தெப்பக்குளத்திலிருந்து கீழடி நோக்கிச் சென்றோம். தென்னந்தோப்பிற்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு அகழாய்வுத் தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கீழடி அகழாய்வுக்குழிகளின் அருகே ஒரு மரத்தடியில் கூடினோம்.

keeladi7

செப்டெம்பர் 2018-இலிருந்து நான்காம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டுவரும் எழுவர் குழுவில் ஒரு அகழாய்வாளரான ஆசைத்தம்பி அவர்கள் இந்த இடத்தில் கிடைத்த பொருட்கள் குறித்தும் தொல்லியல்துறையின் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். இவர் இத்துறைக்கு வருவதற்கு முன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள சான்றுகளை மேற்கோள் காட்டிப் பேசியதோடு, அகழாய்வுப் பொருட்களைப் பற்றி பேசும்போது நெகிழ்வோடு பேசினார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இதுவரை 39க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது. இவை போக, நினைவுச்சின்னங்களைப் பராமரித்தல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளையும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.

கீழடியைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். தமிழ் நிலத்தில் இதுவரை நடந்த பல ஆய்வுகளில், வாழ்விடப் பகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது; இருந்தாலும் மக்கள் வாழ்ந்ததைக் குறிக்கும் ஈமச்சின்னங்கள் போன்ற சான்றுகளே அதிகம் கிடைத்திருக்கின்றன. அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு போன்ற துறைமுகப் பகுதிகளில் அகழாய்வுகள் நடந்துள்ளன.  அதன் வழியாக மக்கள் வாழ்விடப் பகுதிகள் அருகில் இருந்தது என அறியலாம். ஆனால், மக்கள் வாழ்ந்த கட்டிடப் பகுதிகள் கடந்த 50-60 வருடங்களில் தமிழகத்தில் கிடைக்கவில்லை. கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில் 110 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய இந்த தொல்லியல் மேடு கிடைத்தது.

keeladi2

அ.முத்துக்கிருஷ்ணன் சொன்னது போல வைகையாற்று நாகரிகத்தின் தொல்லியல் எச்சங்களைத் தேடுகிற exploration என்கிற அந்த மேற்பரப்பு ஆய்வு எப்படி நடந்ததென்றால் வைகைக்கு வடகரையிலும், தென்கரையிலும் எட்டெட்டு கிலோமீட்டர் தொலைவில் கிராமம் கிராமமாக நடந்தே போய் பார்ப்பது. மேற்பரப்பில் பானையோடுகள், மணிகள் போன்ற தடயங்கள் கிடைக்கும். அவற்றோடு அக/புறச் சான்றுகளான இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம். இந்த இடத்தைப் பொறுத்தவரை கூட கொந்தகை, கீழடி இரண்டு கிராமங்களிலும் 11-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கோயில்கள் உள்ளன. இதில் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள். இப்பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புப் பகுதிகளாக இருப்பதற்கான வலுவான சான்றுகளாக உள்ளன.

மேற்பரப்பு ஆய்வில் ஒரு தொல்லியல் மேடு (archaeological mound) கிடைத்தபிறகு சமஉயர வரைபடம் தயாரிக்கும் contour survey மேற்கொள்வோம். அதன்படி மேடான இடத்திலிருந்து சரிவான இடம் நோக்கி ஆய்வுக்குழிகளை அமைப்போம். நாம் இப்போது அமர்ந்திருக்கும் இடந்தான் இந்த 110 ஏக்கர் தொல்லியல் மேட்டில் உயரமான பகுதி. உங்கள் இடதுபுறந்தான் முதன்முதலில் ஆய்வுக்குழிகள் வெட்டப்பட்டன. முதலில் உறைகிணறுகளும், பானையோடுகளும் கிடைத்தன. பிறகு அக்குழிகளை விரிவாக்கம் செய்தபோது கிழக்கு மேற்காக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் கட்டிடப்பகுதியும் கிடைத்தது.

தொல்லியல் ஆய்வு நடைமுறைகளைப் பற்றி இன்னும் விளக்கவேண்டியுள்ளது. ஒரேயடியாக மேடு முழுவதையும் மொத்தமாகத் தோண்டிவிட முடியாது. 10க்கு 10 என்ற அளவில் அகழாய்வுக்குழிகள் அமைக்கப்படுகின்றன. ஆய்வுக்குழிகளை அமைப்பதற்கென்று சில உலகளாவிய விதிமுறைகள் உள்ளன.  ஒவ்வொரு முறையும் 2-3 செமீக்கு மேல் கொத்தக்கூடாது. அங்குலம் அங்குலமாக கிடைக்கும் பொருட்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு குழியில் கிடைக்கும் பொருட்களை வைத்துதான் அடுத்த குழியை எங்கு எடுப்பது என்று முடிவெடுப்போம். உள்ளுணர்வின் உதவியும் தேவை.

தமிழகத்தில் ஆய்வுக்குழிகளைத் தோண்டுவதற்கான அனுமதி ஜனவரி மாதம் தொடங்கி மழைக்காலம் துவங்குகிற செப்டம்பர் மாதம் வரை கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் அகழாய்வுக் குழிகளை மூடிவிடுவதுதான் வழக்கம். அவற்றை மூடிவிடுவதுதான் பாதுகாப்பு. கண்டெடுத்த தொல்லெச்சங்களை திறந்த வெளியில் வைத்தால் பருவகால மாற்றங்களால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது. மனிதர்கள் பாழ்படுத்தவும் வாய்ப்புண்டு. அதுபோக, தனியார் இடமாக இருந்தால் மூடித் தந்துவிடுவோம் என்று சொல்லித்தான் ஒப்பந்தமே போடப்படுகிறது. இந்திய அளவிலேயேகூட மூடப்படாத அகழாய்வு இடங்கள் மிகக்குறைவு. சிந்து சமவெளி அகழாய்வில் கொஞ்ச இடங்களில் – எங்கு வசதிப்படுகிறதோ அங்கு – மூடாமல் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறையைப் பொறுத்தவரை கங்கைகொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என்ற பகுதி அவ்வாறு விடப்பட்டுள்ளது.

keeladi

நான்காவது கட்டமாக கீழடியில் இந்த அகழாய்வு நடந்தாலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு இது முதல் கட்டம்.

இதில் மிகப்பெரிய கருப்பு சிவப்பு பானையொன்று கிடைத்தது. எத்தனை பானை விளிம்புகள் கிடைக்கின்றன என்பதை வைத்து அது என்னமாதிரியான இடம் என்று கணிக்கலாம். உதாரணமாக நான்கு ஐந்து விளிம்புகள் கிடைத்தால் ஒரு பத்து பேர் கொண்ட வீடு எனலாம். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட பானையோட்டு விளிம்புகள் கிடைக்கும்போது அது ஒரு சேமிப்புக் கிடங்கு போலத் தோன்றுகிறது. மணிகள் தயாரிக்கும் தொழில், துணிகளுக்குச் சாயமேற்றும் தொழில், அதைச் சார்ந்து வாழ்வோரின் வசிப்பிடங்கள் என ஒரு முன்னேறிய நகர நாகரிகமாக கீழடி உள்ளது. முந்தைய கட்டங்களில் கிடைத்த பொருட்களைத் தேதியிடல் செய்யும்போது அவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது.

பெரிய வட்டை (bowl) பற்றிச் சொன்னேன். கருப்பு சிவப்பு ஓட்டாலான இவ்வளவு பெரிய கலயம் இதுவரை இந்தியாவில் கிடைத்ததில்லை.  அதியமான் அவ்வைக்கு ‘நாட்படு தேறல்’ கொடுத்து விருந்தோம்பியதைப் போல உயர்குடி மக்கள் மது விருந்து நடத்தி உண்டாட்டு கொண்டாடியதைக் காட்டுவதாக இந்தக் கலயம் உள்ளது. இதை ஒரு முக்கியமான கண்டெடுப்பாகக் கருதுகிறோம்.

கருப்பு சிவப்புப் பானையோடுகளைச் செய்யும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. வைக்கும் பொருட்களோடு வினைபுரியாத வகையில் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் பளபளப்பாகச் சிவந்தும் இருக்கும். மெல்லிய இழைகளைக் கொண்ட புற்களை நிரப்பி பாண்டத்தை ‘கவிழ்த்து வைத்துச் சுடுதல்’ என்ற inverted firing முறையில் இதைச் செய்திருக்கிறார்கள். அலங்காரங்களும் செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அவை நிறம் மங்காமல் உயர் வேலைப்பாட்டுடன் இருக்கின்றன.

சிறியதும் பெரியதுவுமாக மீன் சின்னங்கள் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. அத்தகைய சிலவற்றை முழுவதுமாகத் தோண்டாமல் in situ – ஆக அப்படியே விட்டிருக்கிறோம். அழகன் குளத்தில் படகுச் சின்னம் பொறித்த பானையோடு கிடைத்ததைப் போல இது முக்கியத்துவம் வாய்ந்தது.

வட இந்தியாவில் நிறையவும் தென்னிந்தியாவில் அரிதாகவும் கிடைக்கக் கூடிய சாம்பல் நிறப் பாண்டம் வளையத்தோடு முழுமையாகக் கிடைத்துள்ளது.

கீழடுக்குகளில் கீறல்கள்/ குறியீடுகள் (graffiti marks) கொண்ட ஓடுகளும், அதற்குமேல் திசன், ஆதன் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 16க்கும் மேற்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளன.

keeladi3

முதல் அகழாய்வுக்குழியில் ஒரு உறைகிணறும், இரண்டாவது குழியில் 13 உறை கிணறுகளும் (ring well) கிடைத்திருக்கின்றன. ஒரே இடத்தில் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் ஒரு உறைகிணறு கிடைத்துள்ளது. நான்கு மீட்டர் ஆழத்திலும் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இது இரு குடியேற்றங்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது. காலத்தால் முற்பட்ட ஒரு குடியேற்றம் சில காரணங்களால் மண்மூடிப்போக மீள்குடியேற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இது காட்டுகிறது. சங்க காலம் தொட்டு கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியைக் காண்கிறோம்.

வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில் குறியீடுகள் ஏதும் இல்லாவிட்டாலும் சதுர வடிவிலான அதன் வடிவத்தையும் அதன் அளவையும் வைத்து பாண்டியர்களுடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறோம். இன்னும் கொஞ்சம் நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து ஆய்வும் ஆவணப்படுத்தலும் நடக்கின்றன.

ஒன்றரை மீட்டர் ஆழத்தில் தங்கத்தினாலான ஆறேழு பொருட்கள் கிடைத்துள்ளன. தங்கத்திலான தோடுகள், தொங்குதாலிகள் (pendent), காதில் மாட்டக்கூடிய வளையங்கள், பித்தான்கள் (button) கிடைத்துள்ளன. யானைத் தந்தத்திலான சீப்புகள், பிறபொருட்கள் கிடைத்துள்ளன. விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட அம்பு முனைகள் கிடைத்துள்ளன.

பெரிய விலங்கு ஒன்றின் முழுமையான எலும்புக்கூட்டு புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.

காடிகள் கொண்ட கூரை ஓடுகள் (grooved roof tiles) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில் கயிறு வைத்து கழிகளில் கட்டுவதற்கு ஏற்ப இரண்டு துளைகள் உள்ளன. கழிகள் ஊன்றுவதற்கான குழிகளும் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அவர்களது அறிவிற்கான சான்று.

காடியுடன் கூடிய கூரை ஓடு ஒன்றில் அதைச் செய்த முப்பாட்டன் அல்லது பாட்டியின் கை அச்சும் பதிந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு அதை நாம் தொடுகிறோம் என்பது புல்லரிப்பைத் தருகிறது.  

keeladi6

குயவுத்தொழில் நடந்ததற்கான சான்றாக சுடுமண் பொம்மைகள் செய்யும் அச்சு (mould) கிடைத்துள்ளது. அந்த அச்சில் செய்த சுடுமண் பொம்மையும் கிடைத்துள்ளது. இவை மந்திரம், சடங்குகளுக்குப் பயன்பட்டிருக்கலாம்.

இரும்புக் கட்டி ஒன்று கிடைத்துள்ளது. இரும்புக் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் செம்புக்காலம் அதிக அளவில் இல்லை என்ற கருத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் கண்ணுக்கு மைதீட்டக் கூடிய செம்புக்கம்பி கிடைத்துள்ளது.

கண்ணாடியை உருக்கி மணிகள் தயாரிக்க ஊதுஉலைகள் இருந்திருக்கின்றன. வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு வண்ணங்களிலான மணிகள் தயாரிக்கும் நுட்பம் மிகுந்ததாக கண்ணாடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் இருந்துள்ளது. கடுகு அளவேயான மணியிலிருந்து மிகப்பெரியது வரை வெவ்வேறு பாசிமணிகள் கிடைக்கின்றன.  ஒரே இடத்தில் குவியலாக 300 க்கும் மேலான மணிகள் கிடைத்துள்ளன.

பானை ஓட்டுச் சில்லுகள் விளையாட்டுப் பொருட்களாகவும், எடைக்கற்களாகவும் பயன்படத்தக்கவகையில் செதுக்கப்பட்டுள்ளன.

நாகரீக வளர்ச்சியின் அடிப்படையான சக்கரங்கள் கிடைத்துள்ளன. பானைகளுக்கு வண்ணந்தீட்டுவதற்கான இலச்சினைகள் (emblem) கிடைத்துள்ளன. நெசவுத் தொழில் இப்பகுதியில் நடந்திருப்பதற்கு சான்றாக பருத்தியிலிருந்து நூலைப் பிரிப்பதற்கான நூற்புக்கதிர்கள் (தக்ளி, spindle-whorl) நிறைய கிடைத்துள்ளன.

மண்ணில் செய்தது முதல் தந்தந்தில் செய்தது வரையான விளையாட்டுச்சாமான்கள், பகடைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைக்காததான ‘அகேட்’ என்ற பொருளாலான சாமான்கள் உள்ளன. இறக்குமதி செய்யும் அளவுக்கான செல்வச்செழிப்பை இது காட்டுகிறது.

நான்காவது கட்ட அகழாய்வில் இவ்வாறு 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடி அகழாய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

அகழாய்வாளர் ஆசைத்தம்பியின் ஆசை தம்பிதான் நமது பசுமைநடை நண்பர் உதயகுமார். ஆசைத்தம்பி அவர்களின் உரைக்குப் பின் உதயகுமார் தன் அண்ணன் தொல்லியல்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தான் இதில் ஆர்வமாக உள்ளதை தன்னிலை விளக்கமாக கூறினார்.

muthukrishnan

முன்னதாக அங்கு பசுமைநடை அமைப்பாளர், கீழடியின் புகழை உலக அரங்குகளில் எடுத்துரைத்து வந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கீழடியைத் தொல்லியல்துறை கண்டடைந்ததைப் பற்றிப் பேசினார்:

மதுரை மக்களின் வரலாற்று மீதான ஆர்வமே தொடர்ந்து நம்மைப் பயணிக்க வைக்கிறது. தமிழரிடையே இன்று கீழடி அளவுக்குப் புகழ்பெற்ற அகழாய்வுத் தளம் வேறில்லை. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் ஈம எச்சங்கள் முதல் கல் ஆயுதங்கள் வரை பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன என்றாலும் பெரும்பாலானவை burial sites எனப்படும் புதைவிடங்களாக இருந்த நிலையில் கீழடி மிகப்பெரிய வாழ்விடத் தளமாக (habitation site) கிடைத்துள்ளது.

வைகைநதிக்கரை நாகரிகத்திற்கான தேடுதலில், வைகையாறு உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள 256 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றின் இருமருங்கிலும் எட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள கிராமங்களுக்குச் சென்று வீட்டிற்கு வானம் தோண்டும்போதோ, உழவுப்பணிகளின் போதோ ஏதேனும் மட்பாண்டங்கள் கிடைத்ததா? விசித்திரமான பொருட்கள் கிடைத்தா? என்று கேள்விகளோடு மக்களைச் சந்தித்து கேட்டறிந்தனர். இதில் 256 கிலோமீட்டரில் 293 இடங்கள் கிடைத்தன. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையால் செய்யப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் 170 புதிய, குறிப்பிட்ட இடங்கள் இருந்தன. அவற்றிலிருந்து 18 இடங்கள்/ 9/ 3 இடங்கள் என்று  வடிகட்டி வடிகட்டி கடைசியாகக் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் அகழ்வாய்வுகள் தொடங்கின. அதிகம் பாதிக்கப்படாத ஒரு மண்மேடாக (undisturbed mound) இந்த இடம் கிடைத்தது. வரலாற்றுக்காலம் தொடங்கி இன்று வரை வேளாண் நடவடிக்கை தவிர மற்றபடி மக்களால் அதிகமாகத் தொந்தரவு செய்யப்படாத இடமாக, இந்த இடம் அப்படியே கிடைத்தது. இந்த இடம் குறித்து தொடர்ந்து பேசி, தொல்லியல்துறையை அழைத்துவந்தவர் என இவ்வூரில் வசிக்கக்கூடிய ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம்.

இந்த இடத்தில் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் செய்யப்பட்டது. நான்காவது கட்ட அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் செய்யப்பட்டது.

sundarkali.jpg

பேராசிரியர் சுந்தர்காளி கீழடியின் சிறப்புகளை, அகழாய்வுத் தகவல்களை விரிவாகக் கூறினார்.

birthday

எல்லோரும் அகழாய்வுக்குழிகளைப் பார்த்து வியந்தனர். தென்னந்தோப்பில் எல்லோருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சரணவன் அவர்களின் மகன் சர்வேஸ்வரன் பிறந்த நாள் கீழடியில் பசுமைநடையாளர்களால் கொண்டாடப்பட்டது. கீழடியை விட்டு வர மனமே இல்லாமல் கிளம்பினோம்.

keeladi1

 

கொத்தளம்

மதில்கள் நிறைந்த மாட மதுரையில் பாண்டியர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் கட்டிய கோட்டைகள் இடிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், மதுரையைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத கோட்டை ஒன்றுள்ளது. அந்தக் கோட்டை தமிழர்களின் பண்பாடு, தொன்மை இவைகளை காத்து நிற்கும் கோட்டை. அகழாய்வாகட்டும், அலங்காநல்லூர் சல்லிக்கட்டாகட்டும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் கோட்டையாக மதுரை திகழ்கிறது.

இடிந்து போன கோட்டைகளின் எச்சமாக அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் அமைந்துள்ள பாண்டியர் கால விட்டவாசலும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் வணிகவளாகப் பேருந்து நிலைய வாசலில் நாயக்கர் கால கொத்தளமும் உள்ளன. இம்முறை பசுமைநடையாக கொத்தளத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

பள்ளிவாசல் (1)

அதிகாலை கிளம்பி வணிகவளாகப் பேருந்துநிலையம் எதிரேயுள்ள பள்ளிவாசல் முன்னே எல்லோரும் கூடினோம். நண்பர்கள் எல்லோரும் ஆங்காங்கே கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வந்ததும் கொத்தளத்தை நோக்கி நடந்தோம். கொத்தளத்தின் கீழே நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கொத்தளத்தின் மீதேறினால் உள்ளே மரங்கள் நிறைந்த சிறு பூங்கா. மார்பிள் கல்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள் அரைவட்ட வடிவில் அனைவரும் அமர்ந்து பேசுவதற்கு ஏற்ற வடிவில் அமைந்துள்ளது. கொத்தளத்திலிருந்து பேருந்து நிலையம், யுனியன் கிறிஸ்டியன் பள்ளி, தேவாலயம் இவைகளை மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வந்திருந்தவர்களில் 95% பேர் முதன்முறையாக வந்தவர்கள் என்னைப்போல.

முத்துக்கிருஷ்ணன் (1)

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் மதுரையின் வரலாற்றில் இந்தக் கோட்டை கொத்தளம் குறித்து விரிவாகப் பேசினார். அவரது உரையின் சாரம் கீழே காணலாம்:

சங்க காலத்தில் கூடல் அழகர் பெருமாள் கோயில் இருந்த பகுதி இருந்தையூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கூடலழகர் பெருமாள் கோயில் அருகில் கிருதுமாலா நதி ஓடியிருக்கிறது. அந்நதி வைகையின் கிளைநதி. அதேபோல இன்மையில் நன்மைதருவார் கோயில் அமைந்த பகுதிக்கு நடுவூர் என்று பெயர். (அங்குள்ள அம்மனை இன்று மத்தியபுரி அம்மன் என்று அழைக்கிறார்கள்). அந்த சிவன் கோயிலை நடுவூர் சிவன் கோயில் என்றே அழைத்திருக்கிறார்கள். இப்போது தல்லாகுளம், சொக்கிகுளம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் பெயர்கள் இருப்பது போல அக்காலத்தில் இருந்தையூர், நடுவூர், ஆலவாய் என்று இப்பகுதிகள் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊர்களின் தொகுப்பாக மதுரை இருந்துள்ளது.

சங்க காலத்தில் பாண்டியர்கள் கோட்டை இருந்த இடம் தெரியவில்லை. ஆனால், பிற்காலப் பாண்டியர்கள் இருந்த கோட்டை தற்போது மீனாட்சியம்மன் கோயில் தெற்கு சித்திரைவீதிக்கருகில் உள்ள போலிஸ் கமிஷனர் அலுவலகமாக இருந்திருக்கலாம். அதன் உள்ளே போய் பார்த்தால் மாடங்கள், அதன் அழகிய விதானங்களைப் பார்த்தால் தெரியும்.  நேதாஜி ரோட்டிலுள்ள ராஜா பார்லி எதிரேயுள்ள தெருவிற்கு பாண்டியன் மேற்கு அகழித் தெரு என்று பெயர். திருமலைநாயக்கர் அரண்மனைகிட்ட தெற்கு அகழித் தெரு இருக்கிறது. பாண்டியர் காலத்தில் கோட்டையும் இருந்ததற்கு சான்றாக விட்டவாசல் இருக்கிறது. பாண்டியர் காலக் கோட்டையில் இடிக்காமல் விட்ட வாசலே இன்று விட்டவாசல் என்ற பெயரோடு திகழ்கிறது. பாண்டியர்களுக்குப் பிறகு சுல்தான்கள், விஜயநகர ஆட்சிக்குப் பின் நாயக்கர்கள் ஆட்சி 15ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

நாயக்கர் ஆட்சி காலத்தில் நிர்வாக அமைப்பு நிறைய மாற்றி அமைக்கப்பட்டது. விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களும், திருவாங்கூரின் ஒரு பகுதியும் நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த பரந்துபட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு பாளையக்காரர்களை நியமித்தார். அவர்கள் அமர நாயகர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் ஆட்சிசெய்து வரிவசூல் செய்து கொள்ளலாம். அதில் மூன்றில் ஒரு பகுதியை அவர்கள் செலவுகளுக்கும், மற்றொரு பகுதியை படைகளை பராமரிப்பதற்கும், மீதமுள்ள மூன்றாவது பகுதியை அரசுக்கும் செலுத்த வேண்டும். விசுவநாத நாயக்கரின் செயல்களுக்கு மூளையாக இருந்தவர் தளவாய் அரியநாத முதலி. இவர் காஞ்சிபுரம் பகுதியில் பிறந்தவர். இவர் மூன்று நாயக்க மன்னர்களிடம் பணியாற்றியிருக்கிறார். ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் இவரே. அம்மண்டபத்தின் வாயிலில் உள்ள குதிரை வீரன் சிலையை அரியநாதமுதலி என்றும் சொக்கநாதராவுத்தர் என்றும் சொல்லுவர். இவர் தொண்டை மண்டல வேளாளர்.

மதுரையில் பாண்டியர் கோட்டையைச் சுற்றி வெளியே நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மிக வலிமையாக கட்டப்பட்டது. 72 கொத்தளங்களின் கீழும் வீரர்கள் 50 – 100 பேர் தங்குவதற்கு இடவசதி இருந்தது. தற்போது கீழ்தளத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மதுரை கோட்டையை முற்றுகையிட பல மன்னர்கள் முயன்றனர். 1790களில் திண்டுக்கல்லை வென்று சோழவந்தானில் வந்து காத்திருந்தார் திப்பு சுல்தான். ஆனால், அவரால் மதுரையை வெல்ல இயலவில்லை. இந்தக் கோட்டையை பாதுகாத்த மற்றொருவர் மருதநாயகம் என்ற கான்சாகிப். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இக்கோட்டை ஜோகன் பிளாக்பர்ன் என்ற கலெக்டரால் நகரவிரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது. இக்கோட்டையை இடிக்கும் பகுதியில் அதை இடித்த மக்களே குடியேறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்போடு இக்கோட்டையை இடித்து அகழிகளை மேவினார். அவருக்கு இப்பணியில் உதவியாக இருந்த நில அளவையாளர் மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரியின் பெயர்களின் மதுரையில் மாசி வீதிகளுக்கு வெளியே அவர்கள் பெயர்களில் தெருக்கள் அமைந்தன.

சாந்தலிங்கம் (1)

பெரியார் பேருந்துநிலையத்திற்கு பின்னே வலைவீசித் தெப்பக்குளம் ஒன்று இருந்தது. அப்பகுதியில் இருந்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை நான் படியெடுத்திருக்கிறேன். ஆவணித்திருவிழாவின்போது வலைவீசிய திருவிளையாடலை நிகழ்த்திக்காட்ட கோயிலிலிருந்து சாமி வரும். தற்போது வருவதில்லை. அங்கு வலைவீசித்தெப்பமும் தற்போது இல்லை. அதேபோல டவுன்ஹால்ரோட்டில் உள்ள கூடலழகர் கோயில் தெப்பத்திற்கு மாசிமகத்திற்கு பெருமாள் வருகிறார். அங்கு தண்ணியில்லை.

இந்த கோட்டைக்கு நான் 1974 – 75 ல் முதன்முறையாக வந்திருக்கிறேன். அப்போது தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை படித்துக்கொண்டிருந்த மாணவன் நான். பாரதியார் விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றேன். பரிசு வழங்கிய நாளில் நான் ஊரில் இல்லாததால் அதை இங்குள்ள டி.ஓ.அலுவலகத்தில் வந்து பெற்றபோது முதல்முறையா வந்தது. அதன் பிறகு பலமுறை வந்திருக்கிறேன். மதுரையின் கோட்டையின் எச்சமாகத் திகழும் இந்தக் கொத்தளம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சாந்தலிங்கம் அய்யாவைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தர்காளி மரபுச் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அவைகளை அருங்காட்சியம் போல பாதுகாப்பதா? அல்லது அன்றாட மக்கள் புழக்கத்தோடு அதைப் பாதுகாக்கலாமா என்று இரண்டு பார்வைகளை சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் மதுரை குறித்து பேசினார். அந்த உரைகளை அடுத்த பதிவில் காணலாம். அற்புதமான நிகழ்வான அன்றைய நடை இன்றும் நினைவில் நிற்கிறது.

படங்கள் உதவி – அருண்

20140146_1520601538010456_8785251497691358081_n.jpg

தொல்லியல், கல்வெட்டுகள் மீதான காதல் பசுமைநடைப் பயணங்களில் துளிர்த்தது. ஒவ்வொரு மலையிலும் தமிழின் தொன்மை, பண்பாடு, வரலாறு என பல விசயங்களை அங்குள்ள கல்வெட்டுகள் மௌனமாக உணர்த்திக் கொண்டே இருந்தன. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களை வரலாற்று வகுப்பாகவே மாற்றி எங்களை அவரது மாணவர்களாக்கிவிட்டார். இந்நடையில் இன்னும் கூடுதல் சிறப்பாக கல்வெட்டுகளைப் படியெடுத்துக் காட்டி செய்முறை வகுப்பையும் விருப்பமுள்ளதாக்கி விட்டார். கல்வெட்டை படியெடுத்து காட்டியபோது பள்ளி செல்லும் மாணவன் முதல் ஓய்வு பெற்ற முதியவர் வரை எல்லோருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.

மாடக்குளம் கண்மாயில் உள்ள பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை பசுமைநடையாக 2012-இல் சென்ற போது பார்த்தோம். 2016-இல் பசுமைநடை நாட்காட்டியை மாடக்குளத்தில் வெளியிட்டபோது நீர்நிறைந்திருந்ததால் கல்வெட்டைப் பார்க்க முடியவில்லை. இம்முறை 16.7.2107 அன்று கல்வெட்டைப் பார்த்ததோடு அதை படியெடுப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

 

19642614_1520602788010331_4521376679230410892_n

ஒரு கல்வெட்டைப் பார்த்ததும் வாசிப்பது இலகுவானதல்ல. காலப்போக்கில் அதன்மீது படியும் தூசி, நீர், எண்ணெய், சுண்ணாம்பு போன்றவை அதை வாசிப்பதற்கு தடையாக அமைகின்றன. மேலும், ஒரு கல்வெட்டைப் படியெடுக்கும்போதுதான் அதை ஆவணப்படுத்த முடியும். அப்படி கல்வெட்டை படியெடுப்பதை படிப்படியாக சாந்தலிங்கம் அய்யா விளக்கினார்.

20031916_1520602174677059_5344261814083699559_n

கல்வெட்டை படியெடுக்கத் தேவையான உபகரணங்கள் சில. மேப்லித்தோ தாள், இரும்பு பிரஸ், நார் பிரஸ், மை, மை ஒற்றி, ஒரு வாளித்தண்ணீர், குவளை. முதலில் நாம் படியெடுக்கப்போகும் கல்வெட்டை இரும்பு பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வெட்டுகளின் மீது படிந்திருந்த புற அழுக்கு நீங்குகிறது. அதன்பிறகு நார்பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாளியிலுள்ள தண்ணீரை கல்வெட்டின் மீது ஊற்றும்போது கல்வெட்டு தெளிவாகத் தெரிகிறது.

20140182_1520601174677159_1356534778018266392_n

நாம் எடுக்க வேண்டிய அளவிற்கு மேப்லித்தோ தாளை கிழித்து வைத்து கொள்ள வேண்டும். அதை நீரில் முக்கி கல்லின் மீது ஒட்ட வேண்டும். ஷூ பாலிஸ் போடுவதற்கு தேவையான பிரஸ் போல உள்ள பெரிய பிரஸ் கொண்டு தாளின் மீது மெல்லத் தட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தாள் கல்வெட்டினுள் ஒட்டிவிடும். இதை கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிடும் அபாயமும் உள்ளது.

 

20046427_1520600454677231_2690470872136597246_n

இந்தியன் இங்க், விளக்கு கரி, சிரட்டை கரி கொண்டு தயாரிக்கப்பட்ட மையை மையொற்றியில் தொட்டுத்தொட்டு கல்வெட்டின் மீது அழுத்த வேண்டும். கல்வெட்டு உள்ள பகுதி வெள்ளையாக மற்ற பகுதி கருப்பாக மாற அந்தச் கல்வெட்டு அழகாகத் தெரியும். காய்ந்ததும் அதை எடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும். மேலும், அதன் பின்னால் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, என்று எடுக்கப்பட்டது போன்ற குறிப்புகளை விபரமாக எழுதி வைத்துக் கொள்வது நல்லது. கல்வெட்டு படியெடுத்தலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வந்த ஆய்வு மாணவர்கள் இரண்டு பேரும் அய்யாவின் வழிகாட்டுதலில் பசுமைநடை பயணிகளுக்கு செய்து காட்டினர்.

CIMG3892

மாடக்குளம் கல்வெட்டு சித்திரமேழி என்ற விவசாயக்குழுவினுடையது. இதன் மேலே ஒரு குடை, அதற்கு மேலே இரண்டு சாமரங்கள், அதன்கீழே இரண்டு புறமும் விளக்குகள், நடுவில் கலப்பை, விளக்கு அருகில் இரும்பு கருவிகள் அதன் கீழே ‘ஸ்வஸ்திஶ்ரீ இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்’ என்பதை சொல்லும் வட்டெழுத்துக் கல்வெட்டு. அதனடியில் யானை மீது வீரனொருவன் செல்வது போன்ற சித்திரக்குறியீடு உள்ளது. யானை என்பது அத்திகோசம் என்ற யானைப்படையைக் குறிக்கும் குறியீடாக கருதலாம். கி.பி.5ம் நூற்றாண்டிலேயே பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்பட வேண்டிய இன்னொரு விசயம் இந்த ஊரிலுள்ள ஈடாடி அய்யனார் கோயிலில் யானை மீது அமர்ந்த கருப்புசாமி சிலை உள்ளது. இந்தக் கல்வெட்டை கண்மாயில் கண்டுபிடித்து படியெடுப்பதற்கு முன்பே இந்தச் சிலை உள்ளது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஸ்வஸ்திஶ்ரீ என்பது மங்களமான வார்த்தை. இப்போது போட்டுத் தொடங்குவது போல அப்போது ஸ்வஸ்திஶ்ரீ பயன்பட்டிருக்கிறது.

20108392_1520602504677026_1187620972165438612_n

கருப்பு வெள்ளைப் படங்களில் உறைந்த காலம் போல படியெடுத்த தாளில் கருப்பு வெள்ளையில் ஒளிர்ந்த எழுத்துச் சித்திரங்களில் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான காலம் உறைந்திருந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு அருகே நின்று பார்த்தது மனநிறைவைத் தந்தது. பள்ளி, கல்லூரிகளில் வரலாறு வகுப்பறைகளில் முடங்கி முடைநாற்றமெடுக்க பசுமைநடைப் பயணங்களோ பல்துறை சார்ந்தவர்களை வரலாற்று மாணவராக, சூழலியல் ஆர்வலராக, நிழற்படக்கலைஞராக என பன்முகத்தன்மைகளை வளர்க்கும் அமைப்பாக உள்ளது.

20031782_1520602901343653_3341131522843178166_n.jpg

மாடக்குளம் குறித்த முந்தைய பதிவுகள்

மாடக்குளக்கீழ் மதுரை

ஆலவாயின் எழில் கபாலி மலையிலிருந்து

17190812_10210678483789723_1383421333775565590_n

இளம்பிராயத்தில் சிலப்பதிகாரம் கதை கேட்டதிலிருந்தே எனக்கு கண்ணகியைப் பிடிக்காது. ஏனெனில் கண்ணகி மதுரையை எரித்தாள் என்ற கதையால். பின்னாளில் ஜெயமோகன் எழுதிய கொற்றவை வாசித்த போது அக்கால மதுரைச் சூழலும், கண்ணகி மதுரையை எரித்த காரணமும் அறிந்த பின் சாந்தமானேன். மதுரையில் சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இடங்கள் பல உள. அதில் செல்லத்தம்மன் கோயிலும், கோவலன் பொட்டலும் முக்கியமான இடங்கள். கண்ணகியின் சிற்பம் உள்ள செல்லத்தம்மன் கோயிலுக்கு பசுமைநடையாக முன்பொரு முறை சென்றிருக்கிறோம். வெகுநாட்களாக பார்க்க வேண்டுமென்றிருந்த கோவலன் பொட்டலுக்கு 5.3.2017 அன்று சென்றோம்.

17757485_10210880174711870_5649541695805347157_n

எல்லோரும் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாண்டியன் அங்காடித்தெரு முனையில் கூடினோம். (சிலப்பதிகாரத்தில் அக்காலத்தில் மதுரையில் இருந்த அல்லங்காடி, நாளங்காடி பற்றி விரிவாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதைக்குறித்து தனிப்பதிவே எழுதலாம்) அங்கிருந்து அவரவர் வாகனங்களில் பழங்காநத்தம் நோக்கி சென்றோம். பழங்காநத்தத்திலிருந்து டி.வி.எஸ் நகர் செல்லும் சுரங்கபாலத்திற்கு அடியில் சென்று வலது புறம் திரும்பியதும் அதுதான் கோவலன் பொட்டல் என வண்டியை நிறுத்தியதும் சொன்னார்கள்.

பொட்டல் என்ற சொல் என் நினைவில் பெரிய திடலாக மனதில் பதிந்திருந்தது. கோவலன் பொட்டல் என்ற இடத்தின் பெயரையும் பெரிய திடலாகத்தான் நினைத்திருந்தேன். அந்தக் காலத்தில் கோவலனை வெட்டிய இடம் இன்று சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், அது மரங்கள் அடர்ந்த கல்லறைத் தோட்டமாகயிருக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். மரங்களுக்கடியில் இறந்தவர்களை புதைத்திருந்தனர். சுடுகாட்டின் நடுவே ஒரு சிறிய கட்டிடத்தின் உள்ளே மூன்று சிலைகள் உள்ளது. அதை கோவலன், கண்ணகி, மாதவி எனக் கூறுகின்றனர். சிலைகள் மிகச் சிறியதாக உள்ளதால் பகுத்துணர முடியவில்லை.

17191352_10210678511670420_5914690612762751590_n

எல்லோரும் அந்த இடத்தில் கூடினோம். பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தொடக்க உரை ஆற்றினார். பழங்காநத்தத்திற்கும், டி.வி.எஸ் நகருக்கும் இடையிலான பாலம் எதற்காக கட்டினார்கள் என்றே தெரியவில்லை. பலகோடி செலவளித்துக் கட்டிய பாலம் மக்கள் நடைபயிற்சி செய்வதற்குத்தான் இப்போது காலை வேளைகளில் பயன்படுகிறது என்றார். மேலும், டி.வி.எஸ். பள்ளியில் படிக்கும் போது இப்பகுதி வழியாக நடந்து செல்லும் போது சுடுகாடு இருந்ததால் வேகமாக கடந்துவிடுவோம். அப்போது இப்பகுதியில் ஒரு ஊருணி ஒன்று இருந்தது என தன் பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

17201191_10210678486269785_5460121395905849501_n.jpg

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அந்த இடத்தின் வரலாறு, தனக்கும் அந்த இடத்துக்குமான தொடர்பு குறித்து பேசினார்.

“1981-ல் உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்த போது, இந்த கோவலன் பொட்டல் பகுதியை அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மூன்று அகழாய்வுக் குழிகள் மட்டும் அப்போது இடப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள், தாழிகள் போன்றவற்றை காலக்கணிப்பு செய்த போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்விடப் பகுதியாகவும்; இறந்தவர்களை புதைக்கிற இடுகாடாகவும் இருந்திருப்பதை உறுதிசெய்தோம். இதேபோல தற்சமயம் கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் வயது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கரிம பகுப்பாய்வு மூலம் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பழங்காநத்தம் என்கிற பெயர் கூட பழங்கால நத்தம் எனும் சொல்லின் திரிபுதான். நத்தம் என்பதற்கு குடியிருப்பு என்பது பொருள். பழங்கால அல்லது பழைய குடியிருப்பு பகுதி என காலம் காலமாக வழங்கிவருகிறோம். எனவே இங்கு மக்கள் பல காலமாக இங்கு வசித்துவருகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. கோவலன் பொட்டல் என்பதற்கான பெயர் காரணம் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக இருக்குமே தவிர; இங்குதான் கோவலன் கொல்லப்பட்டான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இங்கு அகழாய்வு செய்த போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்மகனது முழுமையான எலும்புகள் கிடைத்தன. அந்த ஆணின் இடது கை முழங்கையில் இருந்து இல்லாமல் இருந்தது. அவன் ஊனமுற்ற மனிதனா அல்லது கை வெட்டுப்பட்ட மனிதனா என்பது தெரியவில்லை. இது போக மக்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய புதிய கற்கால கைக்கோடரி ஒன்றின் சிதைந்த பகுதியும்; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக் காசு ஒன்றும்; சில செப்புக்காசுகளும் கிடைத்தன. வரலாற்றில் நெடுங்காலமாக மக்களின் வாழ்விடப்பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளதை இங்கு கிடைத்த தொல்பொருட்கள் உறுதிசெய்கின்றன.” என்றார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா. மேலும், தனக்கு இந்த இடத்தோடு 55 ஆண்டுகால உறவு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கப்பாவுடன் ஒரு திருமணத்திற்கு ஜெய்ஹிந்த்புரம் வந்தேன். அப்போது இப்பகுதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மீனாட்சி நூற்பாலைக்கு முன்பாக ரயில்வே கேட் இருந்தது, அப்போது பாலம் கட்டவில்லை. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு காலைக்கடன்களை கழிக்க இப்பகுதிக்கு போகச் சொல்லி அப்போது அனுப்பினார்கள். அப்போதும் இதன் பெயர் கோவலன் பொட்டல்தான்” என்றார்.

17190910_10210678482789698_6364544683537357998_n

பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் கோவலன் பொட்டல் குறித்து, சிலப்பதிகாரம் குறித்து, அகழாய்வு குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.

“வரலாறு என்பது அங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது. அதுவும் மதுரை போன்ற மிகப் பழைய நகரங்களில் எங்கு நோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாகரீக காலத்தில் நாம் நமது ஓட்டத்தை சற்று நிறுத்தி ஒரு புள்ளியில் நின்று பார்த்தால் அந்த வரலாற்றை உணர முடியும்.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வே மூன்று அடுக்காக தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வு குழிகளின் அடிப்பகுதியில் இரும்புக்கால மண் அடுக்கு; அதற்கு மேலே உள்ள அடுக்கு சங்க காலத்தை சேர்ந்த அடுக்கு; அதற்கும் மேலே பாண்டியர் கால செப்புகாசுகள் கிடைத்திருப்பதால் அது இடைக்கால அடுக்கு என அறியப்படுகிறது. இங்கு தாழிகள் கிடைக்கபட்டுள்ளன என்பதை எப்படி பார்க்கிறோம் என்றால், தென் தமிழகத்தில்தான் அதிகமாக தாழிகள் காணக் கிடைக்கின்றன. எனவே இந்த பகுதிகளில்தான் தாழிகளில் புதைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது. வட தமிழ்நாட்டிலோ மேற்கிலோ கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் கற்பதுக்கைகளை தான் அதிக வயதுள்ளதாக கூறிவந்தனர். ஆனால் சமீப கால ஆய்வுகளுக்கு பிறகு தாழிகளில் புதைக்கப்படுகிற பழக்கம்தான் தொன்மையானது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கற்பதுக்கைகளை நான்கு காலகட்டமாக பார்க்கலாம். பள்ளம் தோண்டி கற்களை அடுக்கி அதற்குள் புதைத்து கற்களால் மூடுவது பழைய பழக்கம். அதன் பிறகு மேல் பரப்பில் கற்களை அடுக்கி புதைத்து அதன்மேல் கற்களை கொண்டு மூடுவது கற்திட்டை முறை. நெடுங்கற்கள் என்று பெரிய அளவிளான கற்களை நடுவது மூன்றாம் கட்டமாகவும் அதில் இருந்து சிறிய கற்களை நடுகற்களாக நடுவதுமாக காலத்தில் மாற்றம் அடைந்து வந்துள்ளன. இவ்வாறு கிமு.1300 ஆண்டில் இருந்து சங்க காலத்தின் இறுதி காலமான கிமு.5-ஆம் நூற்றாண்டு வரை இந்த பெருங்கற்காலச் சின்னங்கள் மாறிவந்துள்ளன.

கோவலன் என்கிற மனிதன் இருந்தானா, சிலப்பதிகாரம் நடந்த சம்பவமா என்று விவாதங்கள் எழுகின்றன. நடந்த ஒரு கதை மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதும் முன்னமே மக்கள் மத்தியில் இந்த கதை புழங்கி வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலேயே ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்கிற பெண்ணை பார்க்கிறோம். பேகன் என்கிற மன்னனுடைய மனைவி கண்ணகியினுடைய கதையை பார்க்கிறோம்.. அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த கதையை பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தின் பதிகத்தை பார்த்தாலே, சேரன் செங்குட்டுவனோடு இளங்கோ காட்டிற்கு செல்கையில் மலைவாழ் மக்கள் அந்த கதையை சொல்வதாகதான் வருகிறது. எனவே ஒரு நிகழ்ந்த சம்பவம், மரபுக் கதையாக மக்களிடம் புழங்கிவந்து படிப்படியாக வளர்ந்து தொன்மமாக மாறி பிறகு சிலப்பதிகார காப்பியமாகியிருப்பதாக தான் அறிய முடிகிறது.

தமிழகம், கேரளா மட்டுமல்லாது, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிங்களர்கள் வாழும் பகுதியிலும் கூட இந்த கதை புழங்கி வருகிறது. இலங்கையில் கண்ணகிக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன. பல கூத்துகள் பாடல்கள் இந்த கதையில் நிகழ்த்தப்படுகின்றன. பத்தினிதெய்வோ என்று இலங்கையில் மக்கள் கண்ணகியை தெய்வமாக வழிபடுகின்றனர்.

17201309_10210678495070005_4911996144100358032_n.jpg

சுந்தர்காளியின் உரைக்கு பிறகு ஓவியர் பாபு அந்த இடம் குறித்து பேசினார். அகழாய்வுகள் காலக்கணிப்புகளைத் தாண்டி தான் கதைகளை மிகவும் விரும்புவதாகச் சொன்னார். ஏனென்றால், இந்த கார்பன் டேட்டிங் போன்ற விசயங்கள் இதன் காலத்தை சமீபத்தில் காட்டுகிறது. எனக்கெல்லாம் இந்த இடம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற நம்பிக்கைதான் பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் இப்பகுதியில் ஒரு குழாயில் வென்னீர் ஊற்று வந்ததாகச் சொன்னார்.

பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் முதன்முதலில் தன்னுடைய பிரச்சனைக்காக பொதுச்சொத்தை சேதப்படுத்தியது கண்ணகிதான் எனக்கூற அதை சாந்தலிங்கம் அய்யா மறுத்து கண்ணகி நல்லவர்களை ஒன்றும் அப்போது எரிக்கச் சொல்லவில்லை என சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டினார்.

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவிஎனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகை அழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல்நகர்.

17202798_10210678496710046_4672592595240284209_n

சிலப்பதிகாரம் நூலில் கோவலன் கொலைசெய்யப்பட்டது குறித்து தேடியபோது அதில் இந்த இடத்தில்தான் வெட்டப்பட்டான் என்ற குறிப்பு எதுவும் இல்லை. மக்களின் நம்பிக்கைதான் இதை கோவலன் பொட்டல் என வெகுநாட்களாய் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுந்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்

  • சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை 211 – 217

17191390_10210678500670145_2235684531358895000_n.jpg

பன்னீர் செல்வம் அய்யா எழுதிய ‘தேயிலைப் பூக்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இலங்கை மலையகத் தமிழர்களின் வலியைச் சொல்லும் இந்நூல் இந்த இடத்தில் வெளியிடப்படுவது பொருத்தமானது என நூலாசிரியர் கூறினார். அற்புதமான நிகழ்வு, மறக்கமுடியாத நாள்.

படங்கள் உதவி – பிரசாத்

vaigai-river

ஆறாட்டு (தீர்த்தவாரி) என்ற சொல்லைக் கேட்டவுடன் கேரள மாநிலத்தில் திருச்சூரில் யானை ஊர்வலத்துடன் நடைபெறும் ஆறாட்டுத் திருவிழாவே நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் குளம், ஆறு, கடல் முதலிய நீர்த்துறைகளுக்குத் திருமேனிகளை எடுத்துச் சென்று நீராட்டும் வழக்கம் உள்ளது. இந்த ஆறாட்டு பெரும்பாலும் தைப்பூச நாளிலும், மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன.  

– தொ.பரமசிவன்

மதுரை வைகை ஆற்றின்(?) நடுவே மையமண்டபம் யானைக்கல் தரைப்பாலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்தைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் எழும். எனக்கும் வெகுநாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

cimg6794

மாமதுரை போற்றுவோம் நிகழ்வில் மூன்றாம் நாள் வைகையைப் போற்றுவோம் நடந்தது. அதையொட்டி அம்மண்டபத்தைப் போய்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆனால், அம்மண்டபத்தின் வரலாறு, தொல்லியல் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையை சமீபத்தில் சென்ற பசுமைநடை தீர்த்து வைத்தது.

cimg6765

ஓவியர் மனோகர் தேவதாஸ் தன்னுடைய “எனது மதுரை நினைவுகள்” நூலில் மையமண்டபம் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளதோடு அதைக்குறித்த அழகான சித்திரம் ஒன்றை வரைந்திருக்கிறார். அதில் அவர்கள் அக்காலத்தில் இம்மண்டபத்திலிருந்து கீழே மணலில் குதித்து விளையாடும் காட்சி காணக்கிடைக்கிறது. அதே போல ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை படத்திலும் இம்மண்டபம் அழகாகயிருக்கிறது.

14333852_1135758933161387_7968634936443672270_n

மதுரை அண்ணாமலைத் திரையரங்கம் முன்பு எல்லோரும் கூடினோம். அங்கிருந்து எல்லோரும் வைகையாற்றின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் நோக்கி நடந்தோம். திருமலைராயர் படித்துறையிலிருந்து திருவாப்புடையார் கோயில் பகுதியை இணைக்கும் பால வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் முதன்முறையாக வைகை மைய மண்டபத்திற்குள் வருவதால் ஒருவித ஆர்வத்தோடு அதைப் பார்த்தனர். எத்தனை நாளாக பாலங்களில் செல்லும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு இருந்தார்களோ!

14224874_1135756483161632_8032829292625034315_n

பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தனது உரையை வைகை அடைந்துள்ள சீரழிவுகளில் தொடங்கிப் பேசினார். “காவிரி பிரச்சனை உச்சத்தில் பந்த்கள், கடை அடைப்புகள் நடைபெறும் வேளையில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீர் சார்ந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பசுமைநடை தனது 50வதுநடையை இன்னீர் மன்றல் என்ற விழாவாக ஆயிரம் பேரைக் கொண்டு அறிஞர்களை அழைத்து வந்து நடத்தினோம். மனிதகுலம் நிலைத்திருக்க தண்ணீர் அவசியம். மதுரையின் ஊர்ப்பெயர்களைப் பார்க்கும் போது நிறைய குளங்கள் இருப்பதை அறிய முடிகிறது. தல்லாகுளம், சொக்கிகுளம், பீ.பீ.குளம் என. நாம் இப்ப எல்லாக் குளங்களையும் அழித்துவிட்டோம். நவீன நாகரீக வரலாற்றைப் பார்க்கும்போது அரசாங்கமும் தனியாரும் போட்டி போட்டு குளங்களை எல்லாம் அழித்துவிட்டோம்.

மதுரையில் கே.கே.நகர் போன்ற பகுதிகளில் விசாரிக்கும் போது 500 அடி, 600 அடி என ஆயிரம் அடியை நோக்கி தண்ணீரை உறிஞ்சத் தொடங்கிவிட்டோம். நல்ல தண்ணி மட்டுமல்ல உப்புத்தண்ணியையே லாரிகளில் வாங்கி மாதம் மூவாயிரம் செலவளிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. வைகை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி துவரிமான் – சமயநல்லூர் வரை ஆறாக இருக்கிறது. நம் கற்பனையில் ஆறு என்றால் தோன்றக்கூடிய நாணல், மணல் எல்லாம் பார்க்கலாம். மதுரைக்குள் நுழைந்ததுமே அதை நாம் சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம்.  இலக்கியத்தில்தான் வைகை ஆறாக ஓடுவதைப் படிக்க முடிகிறது. எனக்கு விபரம் தெரிந்து இதில் நீர் ஓடி நான் பார்த்ததில்லை. ஆற்றை வெள்ளம் வரும்போது தண்ணீர் வரும் வடிகாலாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்த ஒட்டுமொத்த நகரத்தின் சாக்கடையை அள்ளிட்டு போவதல்ல அதன் வேலை. நாம் இன்று மிகப்பெரிய வளர்ச்சி, நாகரீகம் அடைந்துட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. ஆற்றை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. இம்மண்டபத்தின் வரலாற்று வகுப்புக்குள் நாம் செல்லலாம்”.

14317555_1386023134760446_1976887661994938288_nவைகை மையமண்டபத்தின் தொன்மை குறித்து வரலாற்றுப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

மதுரைக்கு புதிதாக வருபவர்களும், வெளிநாட்டவர்களும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த மைய மண்டபத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர். மதுரை தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் போன்று இம்மண்டபமும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

வைகையாற்றில் நடுவே யானைக்கல் பாலத்திற்கு மேற்கே மையமண்டபம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது. கி.பி16 அல்லது 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இம்மண்டபம் நாயக்கர் கால கட்டடக்கலையை பிரதிபலிக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் (சிவன்), மீனாட்சி உற்சவ மூர்த்தங்கள் வைகையாற்றில் இறங்கி தீர்த்தவாரி கொண்டாடுவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது.

14333622_1386021711427255_7426074911169126201_n

மையமண்டபம் நான்கு பத்திகளை கொண்டுள்ளது. நடுவே உள்ள பத்தி அகலமாகவும் பக்கவாட்டிலுள்ள பத்திகள் குறுகலாகவும் உள்ளன. இம்மண்டபத் தூண்களில் தெய்வ உருவங்கள், விலங்கினங்கள் மற்றும் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் நான்கு வகையான தூண் அமைப்புகள் காணப்படுகின்றன. ஆற்றில் வெள்ளம் போகும்போதும் சேதமடையாத அளவிற்கு நல்லதொரு அடித்தளத்தை கொண்ட இம்மண்டபம் ஆற்றில் மணல் அள்ளுதல், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் தற்சமயம் மிகவும் சிதைந்து காணப்படுகிறது.

14344191_1135757329828214_7881985689555131940_n

மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து தீர்த்தவாரிக்கு இறைவனும் இறைவியும் இங்கு வந்ததற்கு சான்றாக இம்மண்டபத்திற்கு தென்கிழக்கே உள்ள கிணறு மீனாட்சியம்மன் கோயிலால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பால்குடம் எடுப்பவர்கள் இந்த கிணற்றுக்கு அருகில் இருந்துதான்  கிளம்பிச் செல்கிறார்கள்.

14264893_1135758819828065_1468253936454777900_n

14329947_1135758146494799_6798527837986367284_nபிற்காலப்பாண்டியர் காலத்தில் (கி.பி.1293ல்) பாண்டியர்களின் குறுநிலத்தலைவனான கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காலிங்கராயன்  மதுரையில் திருவாலவாய் நாயனார் திருநாட்களில் தீர்த்தமாடி எழுந்தருள வைகையாற்றங்கரையிலேயே “காலிங்கராயன் திருமண்டபம்” கட்டுவித்தான் என்ற தகவலை  கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. ஆனால் அம்மண்டபம் வைகையாற்றில் இன்று நமக்கு காணக்கிடைக்கவில்லை. இருப்பினும் நாயக்கர்காலத்தில் சுந்தரேஸ்வரர் ஆற்றில் தீர்த்தமாடி எழுந்தருள இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள இரண்டு கயல்களின் புடைப்புச் சிற்பத்தைப் பார்க்கும்போது இது விசுவநாதநாயக்கர் காலத்தில் (16நூற்றாண்டு) கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்க தோன்றுகிறது. இம்மண்டபத்தின் முகப்பிலுள்ள சிம்ம உருவங்கள், ராமர் சிலைகள் இவைகளை வைத்துப் பார்க்கும் போது இவை நாயக்கர்கால கட்டடக்கலையென அறிய முடிகிறது.

 வண்டியூர்க்கு அருகில் உள்ள தேனூர் மண்டபமும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. அந்த மண்டபத்திற்கு அழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். ஆரப்பாளையம் அருகில் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் ஆண்டுதோறும் புட்டுத்திருவிழா வெகுசிறப்பாக ஆவணிமாதம் கொண்டாடப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் மாசிமகத்தன்று கடலாடச் செல்வதற்கு கிள்ளை என்ற ஊரிலுள்ள கடற்கரைக்குச் செல்கிறார். சோழமன்னர்கள் காலத்தில் தலைவனொருவன் சாலை அமைத்து நன்னீர் குளங்களை வெட்டிவைத்துள்ளனர். அதைக் குறித்த கல்வெட்டில் மூன்று நன்னீர் குளங்கள் தொட்டான் என்று உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட அக்குளங்கள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வரும் போது நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிபாடலில் பாடப்பட்ட வைகையைப் பாதுக்காக்க வேண்டாமா? வைகையிலிருந்து சுருங்கைகள் அமைத்து மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு நீர் கொண்டு போனதற்கான தடயங்கள் உண்டு. இன்றளவும் மாசி மகத்திற்கு வரும் மீனாட்சி சுந்தரர் திருமலைராயர் படித்துறையிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளி ஆறாட்டு செய்து கிளம்புகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு இம்மண்டபத்தில் எழுந்தருளியிருக்கலாம் என்று தெரிய வருகிறது.

14224682_1135757819828165_6009558809074363966_n

பேராசிரியர் கண்ணன் பேசியதைத் தொடர்ந்து அந்த மண்டபத்தை சிறப்பாக பராமரித்து வரும் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர்க்கு ‘மதுர வரலாறு –  நீரின்றி அமையாது’ நூல் வழங்கப்பட்டது. அவர் அம்மண்டபத்தை தனிப்பட்ட ஆர்வத்தினாலும் பாதுகாத்து வருகிறார். அம்மண்டபத்தின் பின்னாலுள்ள மூன்று பெரிய கிணறுகள் இருந்ததாகவும் அவை தற்போது தூர்ந்து போய் விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், மண்டபத்தின் பின்னாலுள்ள மரங்களை வைத்து பராமரித்து வருவதாகவும் கூறினார்.

14355042_1135757659828181_7329806693558016297_nபசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் “வைகையாற்றின் கரைகளில் மக்கள் இறங்கும்படியான இடங்களில் குப்பைகள் அதிகமாக உள்ளதாகவும், அதே போல ஆற்றின் நடுவே பாலங்கள் உள்ள இடங்களிலும் ஆறு மிகவும் சீரழிந்து உள்ளதாகவும்” குறிப்பிட்டு பேசினார்.

எல்லாரும் அம்மண்டபத்திலுள்ள சிற்பங்களையும், பழமையான கட்டடக்கலையையும் கண்டு களித்தோம். பேராசிரியர் கண்ணன் அவர்களோடு மேலதிகமான வரலாற்றுத் தகவல்களை உரையாடினோம்.

14329963_1135759096494704_4434205074187716257_nவைகை ஆற்றில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கொண்டு வந்து போட்டிருந்த விநாயகர் சிலைகளைக் கண்டு வருத்தமாகயிருந்தது. ஏற்கனவே, ஆறு பாழாகி கிடக்கும் வேளையில் ரசாயனப் பூச்சும், நல்ல களிமண்ணினாலும் செய்யாத இந்த சிலையால் ஆறும், நீரும் மேலும் கெடத்தானே செய்யும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் கலந்து கொள்ள முடியுமா? அந்த ஊர்வலத்தில் பக்தி இருக்கிறதா?  அதில் வரும் இளைஞர்களின் ஆவேசத்தையும் அவர்களின் தலையில் கட்டியுள்ள வண்ணக் கொடிகளையும் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். களிமண்ணில் பிள்ளையார் செய்து சாதாரணமாக கிடைக்கிற எருக்கம்பூவையும், அருகம்புல்லையும் போட்டு வழிபடுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது. சிந்திக்க வேண்டிய விசயம்.

vaigai45

பசுமைநடை முடிந்து வைகை யானைக்கல் தரைப்பாலத்தில் வந்த முளைப்பாரி ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு திரும்பினோம். வைகையை மட்டுமல்ல, மற்ற ஊர்களிலுள்ள நீர்நிலைகளையும் காப்பது நம் கடமை என்று சொல்வதைவிட அத்தியாவசியத் தேவை.

படங்கள் உதவி – பாடுவாசி ரகுநாத், சாலமன், பாபு, செல்வம் ராமசாமி, கூகுள்

13524327_10206831716567667_3926960571942987772_n

எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ, அங்கே இடப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும். 

 – எல்.வி.இராமசாமி ஐயர்

இராமசாமி ஐயரின் கூற்றுப்போல மதுரையின் வரலாற்றை மறக்க உலகம் முயலும் போது தன் பெயரின் கீழேயே வரலாறு உறைந்திருப்பதை எடுத்துக்காட்டியது கீழடி. கீழடியின் காலடியில் மறைந்திருந்த தொல்நகரைக் கண்டு தென்னிந்தியா மட்டுமல்ல வடஇந்தியாவே வியந்து நிற்கிறது. கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து காந்திகிராமப் பல்கலைகழகத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர் சுந்தர்காளி பசுமைநடைப் பயணத்தின்போது எடுத்துரைத்த கருத்துக்களைக் காண்போம்.

பலவிதங்களில் இந்த அகழாய்வு முக்கியமானது. இவ்வளவு விரிவாக அகழாய்வு தமிழகத்தின் பிறபகுதிகளில் செய்யப்படவில்லை. மொத்தமாக இந்திய நாட்டில் நடந்த அகழாய்வுகளை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் மிகக்குறைவாகவே அகழாய்வுகள் நடந்துள்ளன. போதுமான அளவு அகழாய்வுகள் நடைபெறாததால் வரலாற்றை எழுதுவதற்கு, குறிப்பாக பண்டைய தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதற்கு போதுமான சான்றுகள் நமக்கு கிட்டவில்லை. சங்க இலக்கியத்திலும், தொடக்ககால காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் நமக்கு கிடைக்கக்கூடிய பல வரலாற்றுச் சான்றுகள் இதுமாதிரியான அகழாய்வின் மூலமாகவே உறுதிசெய்யப்படவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த அகழாய்வுகள் போதுமான அளவுக்கு செய்யப்படவில்லை. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் சர்வே, மாநில அரசாங்கத்தின் தொல்லியல்துறை இவையெல்லாம் இவற்றுக்கு ஒதுக்கிற தொகை மிகசொற்பமானது. இத்தகைய சூழ்நிலையில் கீழடியில் நடந்திருக்கிற இந்த அகழாய்வு பெரும் முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்த பகுதியில் கிடைத்திருக்கிற சான்றுகள், ஆதாரங்களை கொண்டு பார்க்கின்ற போது  இங்கு பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று உறுதிப்படுகிறது.

13600144_10206831728087955_1249979334865653039_n

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் பெரிய நகர வாழ்க்கை இருந்திருக்கிறது என்பது நமக்கு பழைய இலக்கியங்களால் தெரிய வருகிறது. சங்க இலக்கியங்களான மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பரிபாடல் இவற்றையெல்லாம் படித்துப் பார்க்கிறபோது மதுரையிலே நகரவாழ்க்கை செழித்தோங்கிய நிலையிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது தெரிய வருகிறது. ஆனால், மதுரை நகரத்திற்குள் பெரிய அகழாய்வுகள் செய்ய வாய்ப்பில்லாத சூழ்நிலையிலே மதுரைக்கு வெளியே தேடிக் கண்டுபிடித்து இந்த இடத்திலே செய்யப்பட்ட அகழாய்வு மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை நமக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த கீழடியில் பெரிய நகரம் இருந்தற்கான சான்றுகள் ஆரம்ப நிலையிலேயே கிடைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 80 ஏக்கர் பரப்பளவில் இன்னும் பத்து ஆண்டுகள் நடக்க வேண்டிய அகழாய்வின் தொடக்கம்தான் இது. இதிலேயே இவ்வளவு கிடைத்திருக்கிறது என்றால் இன்னும் போகப்போக எவ்வளவு கிடைக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். நமக்கு இங்கு கிடைத்திருப்பது தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நம்ம ஊர் நாணயங்கள், ரோமானிய நாணயங்கள், மிக முக்கியமாக மக்கள் வாழ்ந்த வாழ்விடம் (Habitational site).

13516454_10206831727607943_3610346561130649769_nசங்க காலத்தையொட்டி புதைப்பதற்கு பயன்படுத்திய இடங்கள் தமிழகம் முழுக்க பரவலாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகள், அவை சார்ந்த பொருட்கள், தானியங்கள் சேமித்து வைக்கும் குதிர்கள், உறை கிணறுகள் இந்த இடத்தில் அதிகமாக கிடைத்துள்ளன. குறிப்பாக கழிவுநீர் வெளியேறுவதற்கான அமைப்பு அதிகமாக கிடைத்துள்ளது.

சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது சுருங்கைகளைப் பற்றி படிக்கிறோம்.

surunga எப்படி பெரிய நகரங்களில் மதுரையில், காவிரிபூம்பட்டினத்தில், வஞ்சியில் எல்லாம் சின்ன வாய்க்கால்கள் பெரிய வாய்க்கால்கள் வழி ஓடி அவை எப்படி நகரத்திற்கு வெளியே இருந்த பெரிய அகழிகளில் கொண்டு போய் சேர்ந்த சுருங்கைகளைப் பற்றி படிக்கிறோம். சுருங்கை என்பது ‘சுருங்கா’ என்ற கிரேக்க மொழிச்சொல்லிலிருந்து உருவானவை. கழிவு நீரை வெளியேற்றுகிற பாதைகள். சுரங்கம் என்ற சொல் கூட அதிலிருந்து உருவானதுதான். இதுமாதிரியான அமைப்புகள் மிகவும் முன்னேறிய மேம்பட்ட நகரவாழ்வு இருந்த்தற்கான தொல்லெச்சங்கள். கி.மு.300 வாக்கிலேயே மிக மேம்பட்ட நகரவாழ்க்கை இருந்ததற்கான தடயங்கள், தொல்லெச்சங்கள்.

பரிபாடலில் ஆற்றில் தண்ணீர் வரும்போது நீரணி விழா நடக்கிறது. அதை அறிவிக்கிறார்கள். மக்கள் சந்தோஷத்தோடு ஆற்றில் போய் குளிக்கிறார்கள். இந்த இடம் ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கியத்திலே இருக்கிற விசயங்களை வரலாற்றாசிரியர்கள் சான்றாக கொள்ளும் போது மிக நம்பத்தகுந்த விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை புறந்தள்ளி விடுவார்கள். இந்த மாதிரியான அகழாய்விலே நேரடியாக நமக்கு கிடைக்கிற தடயங்கள், தொல்லெச்சங்களை கொண்டு பார்க்கிற போது இலக்கியங்களிலே காணப்படுகிற பல விசயங்கள் நமக்கு இங்கு உறுதிப்படுகின்றன. குறிப்பாக பிற்கால இலக்கியங்களைவிட சங்க இலக்கியத்துல (கி.மு.500 முதல் கி.பி.300 வரையிலான நீண்ட நெடிய காலகட்டத்திலே எழுதப்பட்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட) அந்தப் பாடல்களிலே காட்டப்படும் வாழ்க்கை என்பது பெரிதும் நம்பகத்தன்மையோடு இருக்கிறது என்பதை இந்த அகழாய்வுகள் மெய்ப்பிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

13528992_10206831679166732_942505378809681990_n

தமிழ்நாட்டிலே நகர உருவாக்கம் எப்போது ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பலவாறு விவாதித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக இதிலே பேராசிரியர் சம்பக லெட்சுமி (Champakalakshmi) அவர்களுடைய TRADE, IDEOLOGY AND URBANIZATION: SOUTH INDIA 300 BC to A.D 1300. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த புத்தகம். சமீபத்திலே கண்டுபிடிக்கப்படுகிற விசயங்கள் புதிதாக கிடைத்த தொல்லியல் சான்றுகள் இவற்றைக்கொண்டு பார்க்கிறபோது அவருடைய கோட்பாடுகள் பல நேரங்களில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் காலாவதி ஆகிவிடுமோ என்ற ஒரு நிலையிருக்கிறது. ஏனென்றால் அவரும் அவரைப் பின்பற்றுபவர்களும் தமிழ்நாட்டிலே நகர உருவாக்கம் என்பது ரோமானிய வணிகத் தொடர்பால் திடீரென்று ஏற்பட்ட ஒரு ஆவேச நிலை. அது தோன்றிய மாதிரியே ஒரு குறிப்பிட்ட காலத்தில் கி.பி.300 வாக்கிலேயே அது நின்று போய்விட்டது, தடைபட்டு விட்டது என்றெல்லாம் ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். நகர உருவாக்கம் வட இந்தியாவைப் போல, கங்கை சமவெளிப்போல பெரிய அளவில் தென்னிந்தியாவில் நடைபெறவில்லை. தென்னிந்தியாவிலும் கூட தக்கானப் பகுதிகளிலும், ஆந்திரப் பகுதிகளிலும் நடைபெற்றது போல தமிழ்பகுதியிலே பெரிய அளவிலே நகர உருவாக்கம் ஏற்படவில்லை என அவர் வாதிடுகிறார். அவரைப் பின்பற்றி வேறு பலரும் அந்த வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த வாதத்தை எல்லாம் தவிடுபொடியாக்குகிற விதத்திலே நமக்கு தமிழ்நாட்டிலே அண்மைக்காலத்திலே சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது ரொம்ப முக்கியமான விசயம்.

13533068_10206831726047904_5038508857291282127_n

இன்னொன்று என்னவென்றால் தமிழ் எழுத்தினுடைய காலத்தை வரையறுப்பதிலும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை பெரிதும் மாறி வருகிறது. தமிழ் எழுத்துகளின் காலத்தை கி.மு.200 முன்னால் கொண்டு போக முடியாது என ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கடுமையாக வாதிட்டு வந்த நிலை மாறி இன்று கி.மு.600 வரைக்கும் அதை கொண்டு போவதற்கான சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அண்மைக்காலத்தில் புலிமான்கோம்பை, தாதப்பட்டி இந்த இடத்திலே கிடைத்த நடுகல் கல்வெட்டுகள், பழனி பக்கத்துல பொருந்தல் என்ற இடத்திலே பானையோட்டிலே கிடைத்த எழுத்துக்குறிப்பு. தமிழ்பிராமி எழுத்தினுடனைய காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கு, மறுகணிப்பு செய்வதற்கு வலியுறுத்துகிற சான்றுகள் திரும்ப திரும்ப கிடைத்து வருகின்றது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நம்முடைய பண்டைய தமிழகத்தின் வரலாற்றை தொன்மையான எழுதுவதற்கு இன்னும் இருபது ஆண்டுகளில் முற்றிலும் மாறான ஒரு புதிய அணுகுமுறையை கையாளும் காலம் உருவாகிவருகிறது.

13529036_10206831734968127_5402493825751544215_n

வட இந்தியாவில் இருந்து வரலாற்றை எழுதுவது என்ற நிலை மாறி தென்னிந்தியாவில் இருந்து வரலாற்றை எழுதவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்றெல்லாம் வட இந்திய வரலாற்று ஆசிரியர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிற நிலை இருக்கிறது. ஏனென்றால், வட இந்தியாவிலே பாலி, பிராகிருத மொழிகளை எழுத பயன்படுத்திய பிராமி எழுத்துகளுடைய வரலாற்றை கி.மு. 300க்கு மேல் கொண்டு போக முடியவில்லை. அசோகர் சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளுக்கு முன்னால் அவற்றை கொண்டு போக முடியவில்லை. ஆனால் தென்னிந்தியாவில் அதற்கும் முன்னதாக கி.மு. 600 வாக்கிலேயே பிராமி எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும், பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. எனவே, தென்னிந்தியாவில் இருந்து இந்திய வரலாற்றை எழுதத் தொடங்க வேண்டிய ஒரு கால கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான முக்கியமான ஒரு புள்ளியாக இந்த கீழடி அகழாய்வு இருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். பெரிய அளவிலே ஒரு நகரத்தை இங்கே கண்டுபிடித்திருக்கிறார்கள். மதுரை இதுவரைக்கும் நீண்டிருந்ததா அல்லது மதுரைக்கு பக்கத்திலேயே ஒரு நடுத்தர அளவிலான நகரம் இருந்ததா இனிமேற்கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். அதை நாம் இன்றைக்கு நேரிலேயே வந்து பார்ப்பது சந்தோஷம் தருகிற விசயம். மத்திய அரசின் தொல்லியல் சர்வேக்கும் அங்கு பணியாற்றுகிற தொல்லியல் அலுவலர்களுக்கும் நன்றிகள். வாழ்த்துகள்.

தொகுப்பு : சித்திரவீதிக்காரன்

படங்கள் உதவி – மாரியப்பன், ரகுநாத்

பரிபாடல் உரை – புலியூர் கேசிகன்