ஏமாறும் கலை – யுவன் சந்திரசேகர்

Posted: பிப்ரவரி 11, 2024 in பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பான ஏமாறும் கலையை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்தாண்டு (2024) தொடக்கமாக வாசிக்க எடுத்தேன். கதைகதையாம் காரணமாம் தொடங்கி மூன்று கதைகள் வாசித்தேன். அவரின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று ஏமாறும் கலை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்தேன்.

யுவன் சந்திரசேகர் தன் கதையுலகிற்குள் வாசிப்பவரையும் அழைத்துச் செல்கிறார். அவர் கரட்டுப்பட்டியில் கதை நடக்கிறது என்றால் நாம் கரட்டுப்பட்டி தெருவில் நிற்கிறோம், வங்கியில் நடப்பதுபோல எழுதினால் நாம் பணமெடுப்பவராய் வரிசையில் நிற்கிறோம், இந்துஸ்தானி இசையை மையம் கொண்ட கதையென்றால் நாமும் பின்வரிசையில் நின்று புல்லாங்குழலிசை கேட்கிறோம். அவர் ஒரு கதையில் ஒரு கதையை மட்டும் சொல்வதில்லை. பல கதைகளைச் சொல்கிறார். மேலும், அந்தக் கதையில் வரும் எல்லோரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார். சில கதாபாத்திரங்களை நாமும் வழியில் சந்தித்திருப்போம்.

யுவன் சந்திரசேகர் கதை சொல்வதைப்போல எங்கப்பா என்னிடம் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும் மதுரையிலிருந்து புறப்பட்டு போய் திரும்பிவந்தது வரை கதையாய் என்னிடம் சொல்லிய நாட்கள் நினைவில் எழுகிறது. எத்தனையெத்தனை மனிதர்கள். ஏமாறும் கதை தொகுப்பிலுள்ள 12 கதைகளும் ஏதோ ஒருவகையில் யாரோ ஒருவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. சில கதையில் வரும் முக்கிய மாந்தர்களின் மரணமோ, தற்கொலையோ அது நம்மையும் உலுக்கி எடுக்கிறது.

ஒருவர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தபின் தெரியாததுபோல் நாமும் நடிப்பதுதான் ஏமாறும் கலை. வங்கிக்கு பணமெடுக்க வரும் பெண் ஒருவர் தன் கணவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது; அவரால் நடக்க முடியாதெனப் பொய் சொல்லி ஒவ்வொருமுறையும் வந்ததும் பணமெடுத்து சென்றுவிடுவார். பின்னாளில் ஒரு விசேச வீட்டில் அப்பெண் அவள் கணவனுடன் சேர்ந்து நிற்பதை பார்த்து நொந்துவிடுவார் கதைசொல்லி. உடன் பணியாற்றுபவர் அதைத் தெரியாததுபோல் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். அதுதான் ஏமாறும் கலை.

ஊரில் இறந்தவர் குரலில் குறிசொல்லும் பெண்ணின் கதையை வாசிக்கையில் எங்க ஊரில் முன்பு இறந்தவர்கள் பேய் பிடித்ததாகச் சொல்லி அவர்களைப் போல் பேசிய கதைகளை நிறைய கேட்டிருக்கிறேன். மனம்புகுதல் என்ற கதை இதைப்பற்றி பேசுகிறது. கரட்டுப்பட்டியில் நடக்கும் இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள் முப்பது வயதிற்கு மேலானவராய் இருந்தால் இதுபோன்றதொரு கதை உங்களிடமும் இருக்கும்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் காதலை அறிந்த குடும்பம் அவளது சோற்றில் விசம் வைத்துக் கொள்கிறது. ஆணவக்கொலையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் பானு பன்னீர்செல்வம் மீது கொண்ட காதலால் இறந்துபோகிறாள். முடிவற்று நீளும் கோடை எனும் இக்கதை மறக்க முடியாத ஒரு தம்பியின் பார்வையில் நகர்கிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் கால்போன போக்கில் பயணிப்பவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். தங்கையா என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த கதைகளும் மூன்று முத்தங்களும்தான் மூன்றாவது முத்தம் கதை. ரயில்வே போர்ட்டராக தங்கையா இருக்கையில் என்ஜின் டிரைவராக வரும் லால் சொல்லும் கதை சுவாரசியம்.

தன்னோடு வங்கியில் உடன் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனிடம் தன் தாய் பற்றி பகிர்ந்து கொள்ளும் கதை தாய்மை யாதெனில். மகனுக்காக வாழும் அம்மா பக்கத்துவீட்டில் திருமணமாகி சண்டையிட்டு வந்த ஜம்னாவுடன் பேசும் மகனின் மீது சந்தேகம் கொள்வது அவளது அன்பென்கிறது கதை.

ஒவ்வொரு கதையாய் கதையில் வரும் மாந்தர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்தத் தொகுப்பை நீங்கள் வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறுதான் இல்லையா? கவிஞர் சுகுமாரன் யுவனின் கதைகள் குறித்து சொல்லும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன். “தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப்பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதிநவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார்.”

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; நன்றி – கலைஞர் நூற்றாண்டு நூலகம்

பின்னூட்டமொன்றை இடுக