மதுரை சித்திரைத் திருவிழா குறித்த நினைவுகளும் பழமரபுக்கதைப்பாடல்களும்

Posted: ஏப்ரல் 28, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

எல்லா ஊரிலும் திருவிழாக்கள் என்றாலே கொண்டாட்டந்தான். அதுவும் நம்ம ‘விழாமலிமூதூரில்’ சித்திரை திருவிழா என்றால் பெருங் கொண்டாட்டமாகத்தானிருக்கும். தமிழகத்திலேயே அதிக மக்கள் கூடும் சித்திரை திருவிழா சிறப்பை எல்லாம் ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது, தனி வலைத்தளமே வேண்டும். மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும், சித்திரை மாதத்தில் தேனூருக்கருகில் வைகையில் இறங்கி கொண்டிருந்த அழகர் திருவிழாவையும் ஒருங்கிணைத்துப் பெருந்திருவிழாவாக்கிய பெருமை திருமலை நாயக்கரையே சேரும். இதை மக்கள் தங்கை மீனாட்சி திருமணத்திற்கு அண்ணன் அழகர் வரும்முன் திருமணம் முடிந்து விடுவதால் கோவித்துக் கொண்டு அழகர் திரும்பிச்செல்வதாகவும் கதைகளை கட்டிவிட்டனர். தமிழண்ணல் தொகுத்த தாலாட்டில் இக்கதை வேறு விதமாய் கூறப்படுகிறது.

சம்பா கதிரடித்து – சொக்கர் 

           தவித்துநிற்கும் வேளையிலே

சொர்ணக்கிளிபோல – மீனாள்

         சோறுகொண்டு போனாளாம்

நேரங்கள் ஆச்சுதென்று – சொக்கர்

          நெல்லெடுத்து எறிந்தாராம்

அள்ளி எறிந்தாராம்                                                    

          அளவற்ற கூந்தலிலே

மயங்கி விழுந்தாளாம் – மீனாள்

        மல்லிகைப்பூ மெத்தையிலே

சோர்ந்து விழுந்தாளாம்

      சொக்கட்டான் மெத்தையிலே

அழுதகுரல் கேட்டு

     அழகர் எழுந்திருந்து

வரிசை கொடுத்தாராம்

          வையகத்தில் உள்ளமட்டும்

 சீரு கொடுத்தாராம்

           சீமையிலே உள்ளமட்டும்

மானாமதுரை விட்டார்

          மதுரையிலே பாதிவிட்டார்

தல்லாகுளம் விட்டார்   

          தங்கச்சி மீனாளுக்குத்

 தளிகையிலே பாதிவிட்டார்

-தமிழண்ணல், தாலாட்டு

மதுரையே மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேறியதும் உற்சாகமாகிவிடுகிறது. காலையும் மாலையும் அம்மையும், அப்பனும் மாசிவீதிகளில் வலம் வருவதைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் நகரவீதிகளில் கூடுவர். எத்தனை ஊர்களுக்கு மதுரை போல் அழகான வீதிகள் வாய்த்திருக்கிறது எனத் தெரியவில்லை. நான்கு பக்கமும் கோபுரத்தை நோக்கி செல்லும் வீதிகள். அதுவும் மாலை நேரங்களில் மதுரை நகரவீதிகளின் அழகே தனி. ஒவ்வொரு வீதியும் அழகான சித்திரத்தை கொண்டிருக்கும்.

சித்திரைத் திருவிழா தொடங்கியதும் பெரும்பாலும் மாலை வேளைகளில் மீனாட்சியம்மன் கோயில்கிட்ட போயிருவேன். கோயிலில் சாமி கிளம்பும்முன் அம்மன் சன்னதி வாசலில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை வேடிக்கை பார்க்கவே போய்விடுவேன். சென்ற ஆண்டு வரை செண்டைமேளம் வைத்திருந்தார்கள். இம்முறை அதை மாற்றி தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம் வைத்திருந்தனர். அதற்கே இம்முறை விழாக்குழுவினர்க்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மேலும், சிறுவர் சிறுமியர்களை வைத்து நிறைய கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். சின்ன குழந்தைகள் கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம், அனுமன்ஆட்டம், கருப்புச்சாமியாட்டம், தெய்வங்களைப் போல் மாறுவேடம் என போட்டு ஆடிக்கொண்டே மாசிவீதிகள் முழுக்க சுற்றி வருகின்றனர். மேலமாசி வீதி முருகன்கோயில்கிட்ட பூக்கொட்டும் பொம்மைகளை காணவே பெருங்கூட்டமிருக்கும். ஒரு பொம்மை மாலையோடும் மற்ற பொம்மை ஒரு கூடையில் பூவோடும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும். சாமி வந்ததும் பூ கொட்டி மாலைகளை கொடுத்ததும் மக்கள் மகிழ்ச்சியாக கை தட்டுவர். இருபது நாட்கள் கிட்ட நடக்கும் சித்திரை திருவிழாவை தங்கள் இல்லத்திருவிழா போல மதுரை மக்கள் கொண்டாடி மகிழ்வர்.

திருக்கல்யாணத்திற்கு முதல்நாள் திக்விஜயத்தன்று நானும், சகோதரனும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றபோது அம்மன் சன்னதியிலிருந்து தெப்பக்குளம் செல்லும் வழியில் நேர்த்திகடன் போல கிராமத்து ஆண்களும், பெண்களும் கூட்டமாக ஆடினர். ஒயிலாட்டமா, சேவையாட்டமா எனத் தெரியவில்லை. ஒரே கொண்டாட்டமாகயிருந்தது. அப்படியே நாங்கள் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆட்டம் பார்த்துட்டு மேற்காடிவீதியில் நுழைந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாய் மறுநாள் கல்யாணத்திற்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தனர். சிறு சிறு குன்றுகள் போல நறுக்கிய காய்களைக் குவித்திருந்தனர்.

நானும் நண்பரும் ஒரு முறை பூப்பல்லக்கு பார்க்கச் சென்றபோது திடீரென வானம் கருத்து இருட்ட தொடங்கியது. சாமி பார்க்கும் முன்னரே கிளம்பினோம். டவுன்ஹால் ரோடு செல்லும் போதே மழைகொட்டத் தொடங்கியது. நண்பரது டி.வி.எஸ்50’ஐ எடுத்துட்டு நனைஞ்சுட்டே சென்றோம். ஆனாலும் கேப்ரன்ஹால்கிட்ட உள்ள கர்டர்பாலத்துக்கிட்ட தண்ணி நிரம்பி வண்டி அணைந்துவிட்டது. வண்டியை என்ன செய்தும் கிளப்ப முடியவில்லை. இடியுடன் கூடிய கனமழை வேறு. மழை நிற்கும்வரை காத்திருந்து பின் வீடு வரை நடந்தே சென்றோம். ஆனாலும் மறுநாள் காலை தேரோட்டத்திற்கு வழக்கம் போல சென்றுவிட்டோம்.

 

இம்முறை தேரோட்டத்தின் போது டீசர்ட் அணிந்து சென்றேன். அதனால் மேலமாசி வீதியில் கூட்டத்தோடு தேர் பார்க்க நின்றிருந்தவனை வெளியே வரச்சொல்லி காவலர்கள் வீதியில் நடக்க சொல்லி விட்டனர். என்ன காரணம் என்றால் நம் இளைஞர்கள் சித்திரை திருவிழாவில் செய்யும் அலப்பறைகள், சும்மா நிற்கும் நம்மளையும் பதம் பார்க்கும். தேர் ஒவ்வொரு வீதிதிரும்பி வரும் போது காண்பதே தனி அழகு. பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு இடையில் நகர்ந்து வரும்போது திடீரென நம் வீட்டு பக்கத்து தெருவிலிருந்து எதிர்த்தாற்போல் டைனோசர் வருவது போலிருக்கும். தேரிலிருக்கும் மரசிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கும். ‘பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி’ பாடலை ஒலிபெருக்கியில் போட தேரிழுக்கும் இளைஞர்களின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றுவிடும். மீனாட்சியம்மன் திருவிழாவை குறித்து பா.வெங்கடேசன் எழுதிய நீல விதி சிறுகதையில் இருக்கும் சில வரிகளை வாசியுங்கள். இவர் மதுரைக்காரர் என்பது நமக்கு பெருமை.

கம்பெனியின் வருடாந்தர கால அட்டவணைப்படியே சித்திரை மாதத் துவக்கத்தில் அவர்கள் மதுரை போய்ச் சேர்ந்த போது ஏற்கனெவே அங்கே இறைவியின் திருக்கோயில் உச்சியில் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டு விட்டிருந்தது. நகரம் முழுவதும் இரைச்சலும் உள்ளூர் மக்களோடு பக்கத்து கிராமங்களிலிருந்து நெருங்கி வந்த ஜனநெருக்கடியும் சூதாட்ட அரங்கங்களில் இரைந்த காசுகளின் சலசலப்பும் வெற்றிக் களிப்பும் பொய்ச் சண்டைகளும் வியாபித்திருந்தன. நுழைவெல்லைகளைப் பூத்தோரணங்களும் வண்ணச் சுதேசித் துணி வளைவுகளும் அலங்கரித்துக்கொண்டிருந்தன. கடவுளின் திருமணத்தை முன்னிட்டு நகரப் பெண்களுங்கூட புதிய உடைகளாலும் புதிய மஞ்சள் துண்டுகள் கோர்க்கப்பட்ட மங்கல நாண்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். வீதிகளின் ஒவ்வொரு சந்திப்புப் புள்ளியையும் அவர்களே தங்கள் சிரிப்பாலும் மணத்தாலும் நிறைத்திருந்தார்கள். லிண்டா இந்தியாவின் வேறெந்த நகரத்திலும் இவ்வளவு பெண்களை வீதிகளில் பார்த்ததேயில்லையென்று நினைத்துக்கொள்ளும்படியாக இறைவியின் பெயரால் ஆண்டுக்கொரு முறை அனுமதிக்கப்படும் சுதந்திரத்தை முழுவதுமாக அனுபவிக்கவென்று அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீடுகளைத் துறந்து தனியாகவும் குழுக்களாகவும் வெளியே திரிந்துகொண்டிருந்த அந்தப் பெண்கள் ஈரங்காயாத கூந்தலால் அங்கே கனன்று கொண்டிருந்த வெய்யிலைத் தணியச் செய்திருந்தார்கள். இடுப்பிலிருந்து தொங்கும் தோல் குடுவையிலிருந்து குறுகிய குழாய்கள் மூலமாக நீரை உறிஞ்சி ஜனநெரிசலின் மேல் சாரலாகத் துப்பும் கள்ளழகர்கள் கருத்த வீதிகளையும் ஈரத்தால் பெண் கூந்தலாக்கிக் கொண்டிருந்தார்கள். சித்திரைத் தெருக்களின் காற்றில் இரண்டாண்டுகளுக்கொரு முறை வஸந்தராமின் சுவாசத்தைப் புதுப்பித்துத் தரும் நீர்மோரின் வாசனையும் வெல்லப் பானகத்தின் திகட்டலும் சுழன்றுகொண்டிருந்தது. பட்டமேற்ற பின் மாசி வீதிகள் நான்கிலும் உலாவரவிருக்கும் இறைவியின் தரிசனத்திற்காக மொத்த ஜனங்களில் இரண்டிலொரு பகுதியினர் மருங்குகளில் நிதானித்துக் கொண்டிருந்த துரைமார்களின் மேல் பட்டுவிடாமல் தங்களுக்குள்ளே இடித்து நெருக்கியபடி காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சர்யத்தையும் அசூயையையும் உண்டாக்கும் வண்ணம் முன்பு பிரிந்துபோன அவர்களுடைய உறவினர்களும் பழைய காதலர்களும் காதலிகளும் மறதியின் சுழலிருந்து மீண்டு வெளியே வந்துகொண்டேயிருந்தார்கள். வளைவுகளில் தேரின் வரவை அறிவிக்கும் அதிர் வெடிகளின் கைக்குழந்தைகளைத் திடுக்கிட்டுக் கதற வைக்கும் சத்தம் சில நிமிடங்களுக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் வழிபாட்டிக்காக மாசி வீதிகளில் குவிந்து விட்டதைப் பயன்படுத்திக் கொண்டு வெளிவீதிகளில் வந்து நின்று கொண்ட ஆண்கள் கூட்டம் அங்கே உலா வந்து கொண்டிருந்த விளம்பர வண்டிகள் உதிர்த்த பெண் குரலிலும் பெண் சித்திரங்களிலும் சொக்கிப்போயிருந்தது.

(பா.வெங்கடேசன், நீல விதி, புது எழுத்து)

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வே அழகரின் மதுரை வருகை தான். அழகரின் அலங்காரத்தை வர்ணிக்கும் தசாவதார வர்ணிப்பு பாடலை கீழே வாசிங்கள். அழகரை அழைக்க அப்படியே அழகர்கோயில் பக்கம் செல்வோம்.

இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்

                    இசையும்படி தானணிந்து

கைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்

                             கணையாழி தானணிந்து

 இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு

                              இருபுறமும் பொன்சதங்கை

காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு

                                    காலில் பாடகமிட்டார்

-தசாவதார வர்ணிப்பு

அழகர் மலையிலிருந்து கிளம்பும் போது அவரை வரவேற்க இம்முறை அழகர்கோயிலுக்கே சென்றுவிட்டேன். அழகர் நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் அழகாய் கிளம்பிவந்தார். வண்டிவாசல் வழியாக சாமியை கொண்டுவந்து பதினெட்டாம்படிகிட்ட உள்ள மண்டபத்தில் வைத்தனர். அங்கு மரியாதைகள் முடிய அழகரை கோபுரத்தின்கீழ் சந்தனக்கதவில் குடியிருக்கும் பதினெட்டாம்படி கருப்புசாமி சன்னதிக்கே கொண்டு வருகின்றனர். அங்கு வைத்து அழகரின் நகைக் கணக்கை கருப்பனிடம் ஒப்படைத்த பிறகே கிளம்புவார்களாம். கருப்புசாமி வேடமணிந்தவர்களின் ஆட்டம் அங்கு நம்மை புல்லரிக்க வைத்து விடுகிறது.

அழகர் எதிர்சேவை பார்க்க தல்லாகுளத்திற்கு செல்வோம். அழகர் வரும் இரவு தல்லாகுளமே பலநூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அழகர் வேடமணிந்த துருத்தி நீர் தெளிப்போர், திரியெடுத்து ஆடுபவர்கள், முத்துசோலிப்பல்வரிசை கட்டி ஆடுபவர்கள் எல்லாம் தப்பும், தவிலும் வைத்து ஆடிவர ஒரு பெருங்கூட்டமே அவர்களோடு ஆடிவரும். நகரத்து இளைஞர்களும் அவர்களோடு சேர்ந்து ஆடி மகிழ்வர். ஆடாத கால்களும் அன்று லேசாக ஆடும். துருத்திநீர் தெளிப்போர் வட்ட வட்டமாக நின்று ஒயிலாட்டம் போல ஆடுவர். காணவே ரொம்ப அழகாய் இருக்கும். குதிரை வாகனத்தில் அழகர் பெருமாள் கோயிலை விட்டு வந்ததும் தண்ணீரை அவர்மேல் துருத்தி நீர்த்தெளிப்போர் பீய்ச்சி மகிழ்வர். அப்படியே குதிரை மிதந்து வருவது போலிருக்கும். அழகரை தூக்கி வரும் சீர்பாதம்தாங்கிகள் சில இடங்களில் அப்படியே சாமியை தண்டியலோடு வைத்து குலுக்குவர். பார்க்கவே கொண்டாட்டமாகயிருக்கும். குதுர குலுங்க, குலுங்க மதுரையே குலுங்கும். “கோவிந்தோ!”ன்னு குரல்கள் வானைப் பிளக்கும்.

இம்முறை அழகர் புதிய தங்கக்குதிரையில் வந்தார். வானவேடிக்கை கிளப்பிட்டாங்க. ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாட்டு எல்லாப்பக்கமும் போட்டுட்டே இருப்பாங்க. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. சில திருக்கண்களில் வர்ணிப்பு ஏற்பாடு செய்திருப்பாங்க. கேட்க ரொம்ப அருமையாயிருக்கும்.

 மதுரையில் எல்லோரும் ஒருமுறையாவது சித்திரை திருவிழாவின்போது தேர்வைச் சந்தித்திருப்பார்கள். நான் நாலாப்பு படிக்கிறப்ப முழுப்பரிட்சை திருவிழா சமயம்வர தல்லாகுளத்தில் சாமிபாத்துட்டுப்போய் பரிட்சை எழுதினேன். பாலிடெக்னிக் படிக்கிறப்ப முதலாமாண்டும், இறுதியாண்டும் திருவிழா சமயமே பரிட்சை. அதிலும் முதலாமாண்டில் கணக்கு பரிட்சையன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார். இரவு முழுக்க எதிர்சேவை, குதிரை வாகனம் பார்த்துட்டுப்போய் பரிட்சை எழுதினேன். அடுத்து இயற்பியல் பரிட்சைக்கு முதல்நாள் மதுரை மருத்துவக் கல்லூரி திடலில் கமல்ஹாசனின் சண்டியர் படத் தொடக்கவிழா ஒரு புறம், மறுபுறம் பூப்பல்லக்கில் அழகர் வருகிறார். இரண்டு அழகர்களையும் பார்த்துட்டு போய் பரிட்சையை ரொம்ப அழகாய் எழுதினேன். மறக்க முடியாத வருடமது.

இம்முறை குதிரைவாகனத்தில் அழகரை தல்லாகுளத்தில் பார்த்துட்டு பெரியார் பேருந்து நிலையம் வரை நடந்தே வந்தோம். அப்போது வைகையில் தண்ணி வேகமாக வந்து கொண்டிருந்தது அழகரைப் பார்க்க. யானைக்கல் பாலத்தில் ஆத்தில் விழுவது போல் படுத்திருந்தவரை பார்த்தது, மனைவியை மடியில் தூங்க வைத்து அமர்ந்து கொண்டிருந்தவர் என திருவிழா பார்க்கவந்த விதவிதமான மக்களைப் பார்த்துட்டே சித்திரை வீதிக்குச் சென்றோம். அம்மன் சன்னதி முன் தண்ணீர் பீச்சுபவர்களின் ஆட்டம் பார்த்து சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த பாட்டியை பார்த்ததும் மனசு லேசாக வலிக்கத் தொடங்கிவிட்டது.

அடுத்த வருடம் அழகரை வண்டியூரில் போய் பார்க்கணும் என நினைத்திருக்கிறேன். அங்குபோய்தான் இதுவரை பார்த்ததில்லை. தல்லாகுளத்தில் அழகருக்கு பூப்பல்லக்கில் விடைகொடுத்துத் திரும்பினேன். அழகரோ மதுரையப்பக்கம் நல்ல மழைய கொடுத்துத் திரும்பிட்டார். கட்டாயம் மதுரையில் ஒருமுறையாவது சித்திரை திருவிழா வந்து பாருங்க.

(படங்கள் தினமலர் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இன்னொரு ஓவியம் பொருள்காட்சியில் மதுரை குறித்த 1000 புகைப்படக்கண்காட்சியில் பழங்காலமதுரை குறித்த ஓவியம். தினமலருக்கும் சுற்றுலாத்துறைக்கும் நன்றி. அழகர் கோட்டோவியம் பழைய தினமணி இதழைப் பார்த்து நான் மைபேனாவில் வரைந்தது. பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ சிறுகதை தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம். தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் நூலிலிருந்துதான் தமிழண்ணல் தாலாட்டு தொகுப்பில் உள்ள பாடலையும், தசாவதார வர்ணிப்பையும் எடுத்தேன். சித்திரை திருவிழா மற்றும் தமிழ்நாட்டு வைணவம் பற்றி அறிய அழகர்கோயில் வாசிங்க. அழகர்கோயில். தென்திசைபதிப்பகம்)

பின்னூட்டங்கள்
  1. சங்கர் சொல்கிறார்:

    சித்திரைதிருவிழாவிற்கு தல்லாகுளத்திலுள்ள திருக்கண்ணிற்கு சொந்தபந்தமெல்லாம் சேர்ந்து சென்று அங்கு ஒரு வாரம் தங்கியிருப்போம். எதிர்சேவை,குதிரைவாகனம், பூப்பல்லக்கு எல்லாம் பார்த்துட்டுத்தான் வருவோம். பெருமாள் கோயிலுக்கு, தண்ணியெடுக்க, பொருள்காட்சி, பூங்கான்னு எல்லோரும் சேர்ந்து தான் திரிவோம். ரொம்ப மகிழ்ச்சியான நாட்கள் அவை. தேரில் தெய்வமும்,நேரில் தேவதையும் காணும் திருவிழாக்கள் எல்லாமே பெருங்கொண்டாட்டந்தான்.

  2. rajendran சொல்கிறார்:

    you have a good and useful blog

  3. gowtham சொல்கிறார்:

    mega nanru

  4. ரவி சொல்கிறார்:

    நன்றாக இருக்கிறது.அடுத்து எழுதும்போது go for more specific details.

பின்னூட்டமொன்றை இடுக