மதுரை சித்திரைப் பொருட்காட்சியும், சர்க்கஸூம்

Posted: மே 21, 2011 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியதும் பொருட்காட்சியும், சர்க்கஸூம் போட்டுருவாங்க. கோடைவிடுமுறை காலமென்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இவ்விரண்டு இடங்களுக்கும் வருவர்.

பொருட்காட்சி என்றாலே நிறைய கடைகள், டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய்பஜ்ஜி, பெரியராட்டினம், திக்கெட்டும் மக்கள் கூட்டம் இவைதான் ஞாபகம் வரும். சிறுவயதில் சித்திரைத் திருவிழாவின்போது பொருட்காட்சிக்கு சென்றதில் இருந்து இப்பவரை செல்லும் போதும் வயதின் மாற்றங்களால் சில விசயங்கள் மாறினாலும் பொருட்காட்சி போகணும் என்றாலே ஒரு குதூகலம் மனதில் வந்து விடுகிறது.

சிறுவயதில் பொருட்காட்சி போய் திரும்பும் போது கட்டாயம் அழுதுகொண்டுதான் பெரும்பாலும் வருவேன். ஏனென்றால் வில்லு வாங்கி தரச் சொல்லுவேன். யார் கண்ணையாவது குத்திரும், இப்படித்தான் ஒரு பையன் விளையாண்டு ஒரு சின்ன பிள்ள கண்ணெ அம்பால குத்திட்டான்னு பேப்பர்ல போட்டுருந்தாங்ஙன்னு கதய சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்துருவாங்க. ஆனாலும் விலங்குகள், பறவைகள் பிளாஸ்டிக் பொம்மைகள் செட்டா வாங்கித் தருவாங்க. தண்ணித் துப்பாக்கி சின்ன வயசுல பொருட்காட்சிலதான் வாங்குனேன்.

பெரியராட்டினம் முதல் சின்னராட்டினம் வரை இதுவரை எதுலயும் ஏறினதில்லை. பயம், பணப்பற்றாக்குறை இதுரெண்டும் இன்று வரை தொடரத்தான் செய்கிறது. பொருட்காட்சில பொம்பளப் பிள்ளைகளுக்குத்தான் நிறைய பொருட்கள் போட்டுருப்பாங்க. ஆனாலும் அந்த கடைகளுக்குள் நாங்களும் போய் வருவோம். தபால்துறை, சுற்றுலாத்துறை, மருத்துவதுறை போன்ற பல அரசுத்துறைகளில் இருந்து நிறைய காட்சிக்கூடங்கள் அமைத்து இருப்பார்கள். பொழுதுபோக்க வேறு வழியில்லன்னா அதப்போயி வேடிக்கை பார்ப்போம். மக்களுக்குத் தெரியாத நிறைய திட்டங்கள அரசு செய்யுறது அப்பத்தான் தெரியும். இம்முறை தேர்தல் சமயமென்பதால் இந்த அரங்குகள் எதுவும் அமைக்கவில்லை.

பொருட்காட்சியில் விற்கும் அந்த டெல்லி அப்பளம் வாங்கித் தின்பதே ஒரு மகிழ்ச்சியான விசயம். ஏனென்றால், வருடத்திற்கு ஒருமுறைதான் இதை வாங்கித் திங்க முடியும். கரும்புச்சாறும், மிளகாய் பஜ்ஜியும் இன்று மதுரையின் எல்லாப் பக்கமும் கிடைக்கிறது என்பதால் வாங்குவதில்லை. மேலும், பொருட்காட்சியில் விலை அதிகம் என்பதும் ஒரு காரணம். இம்முறை நுழைவுக்கட்டணத்தைக் கூட அஞ்சு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக்கிட்டாங்க.

சிறுவயதில் பொருட்காட்சின்னா விளையாட்டுச்சாமான் வாங்குற இடமா தெரிந்தது, இன்று பொருட்காட்சி கண்கொள்ளாகாட்சியாகத் தெரிகிறது. தேவதைகளைத் தேடித்தேடி அலைந்து பார்ப்பதே சுகம். அன்று குடும்பத்தோடு சென்றவன், இன்று நண்பர்களோடு செல்லவே விரும்புகிறேன். இதுதான் வயதின் மாற்றம்.      மதுரை தமுக்கத்தில் பல வீட்டு உபயோக கண்காட்சிகள் அடிக்கடி நடந்தாலும் சித்திரை பொருட்காட்சி போல எதுவும் வராது.

சித்திரைத் திருவிழாவின்போது மதுரையில் சர்க்கஸ் போடுவாங்க. விடுமுறை காலமென்பதால் மே மாதம் வரை சர்க்கஸ் நடக்கும். ராஜ்கமல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், பாம்பே சர்க்கஸ், கிரேட் இந்தியன் சர்க்கஸ் என பல சர்க்கஸ் குழுக்கள் மதுரையில் சர்க்கஸ் போட்டிருக்கிறார்கள். பொதுவாகவே எல்லா ஊர்களிலும் சர்க்கஸ் நடக்கும் இடங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கின்றன. இப்போது கூட மதுரை அரசரடியில் கிரேட் இந்தியன் சர்க்கஸ் போட்டுருக்காங்க. அண்ணாநகரில் படிக்கிறப்ப பள்ளியிலிருந்து மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் போட்டிருந்த சர்க்கஸ்க்கு கூட்டிட்டு போனாங்க. அப்ப யானை கிரிக்கெட் விளையாடியது, அந்தரத்தில் பறக்கும் பார்விளையாட்டு, கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற சாகசக் காட்சிகளும், கோமாளிகளின் கூத்துகளும் (அந்த கூடாரத்தின் மதிய நேர வெயில் உட்பட) இன்றும் நினைவில் உள்ளன. இம்முறை கிரேட்இந்தியன் சர்க்கஸ்க்கு சென்றேன். அதே காட்சிகள்தான் என்றாலும் சர்க்கஸ் கலைஞர்களின் கடின பயிற்சியும், அயராத உழைப்பும்தான் என்னை பிரமிக்க வைத்தது.

அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்து சர்க்கஸோடு அப்பு கமலையும் மிகவும் பிடித்துபோனது. இப்படத்தில் கமல் சர்க்கஸ் கலைஞனாகவே மாறிவிட்டார். ஏனென்றால், தன் உயரத்தை குறைத்துக் காட்டியதே பெரிய வித்தைதானே. மேலும், அப்பு கதாபாத்திரம் வழியாக சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வையும் வலியையும் அருமையாகக் காட்டியிருப்பார். அதுவும் சர்க்கஸ் முதலாளி மகள் அப்புவை ஏமாற்றி மற்றொருவனுடன் மோதிரம் மாற்றிக்கொள்ளும் காட்சி குள்ளமான மனிதர்களின் வலியை நம் கண்முன்னே காட்டி நம்மையும் கலங்க வைத்துவிடும். இம்முறைகூட சர்க்கஸ் பார்க்கும் போது அந்த அழகிகள் மற்றும் கோமாளிகள் முகத்தில் ஏதோ ஒரு வித வலி தென்பட்டதாகவே தோன்றுகிறது.  

இதற்கு முன் திருவனந்தபுரத்தில் ஓணத்தின் போது கிழக்கையன்கோட்டையில் சர்க்கஸ் பார்த்தது. யானையக் கட்டி தீனி போட முடியுமான்னு எல்லோரும் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், சர்க்கஸ்ஸில் அத்தனை மனிதர்கள், விலங்குகள், கூடாரங்கள் என எல்லாவற்றையும் கட்டி காப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுப்பார்கள். தினசரி எவ்வளவு செலவாகும். சர்க்கஸ் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் கலையாயிருக்கிறது. சாதாரண சாமியானா கட்டுறது எவ்வளவு சிரமமென்று எனக்கு நன்றாகத் தெரியும். அதுவும் அவ்வளவு பெரிய கூடாரத்தை அமைத்து அதை மழை, வெயிலில் காப்பது ரொம்ப கடினமான காரியம். சர்க்கஸ் பார்க்க யார் வர்றாங்களோ இல்லையோ மழை கட்டாயம் வந்துரும். ரஷ்யாவில் சர்க்கஸ் கலையை கற்றுத்தர பள்ளிகளெல்லாம் இருக்கிறதாம். ஆனால், இங்கு வழிவழியாக கற்றுக் கொள்ளும் கலைஞர்கள்தான். மேலும், விலங்குகளை சர்க்கஸ்ஸில் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வேறு சர்க்கஸ ஒரு வழி பண்ணிகிட்டுருக்கு.

பா.வெங்கடேசனின் நீல விதி எனும் கதைதான் சர்க்கஸ் குழுவினரை குறித்து நான் வாசித்த சிறுகதை. இதில் மதுரையில் சர்க்கஸ் காட்சிகள் குறித்து நன்றாக பதிவு செய்திருக்கிறார். அந்த சர்க்கஸில் உள்ள புகழ்பெற்ற வெள்ளையானை ஒரு தீ விபத்தில் காயப்பட்டிருந்ததால் சோகமாக இருக்கும். அக்குழு மதுரை சித்திரைத் திருவிழா சமயம் இங்கு வந்து காட்சிகள் போடும்போது அவர்கள் வலி, சோகம் எல்லாம் மாறும். நம் மதுரை வெள்ளை யானையைக்கூட காயத்திலிருந்து ஆற்றிவிடுவதாகவே கதையில் வரும். வாசித்துப் பாருங்க. (ராஜன் மகள், பா.வெங்கடேசன், காலச்சுவடு பதிப்பகம்)

சித்திரை மாசம் மதுரையப் பக்கம் வந்திங்கண்ணா பொருட்காட்சி,சர்க்கஸ் பக்கம் ஒரெட்டு வந்துட்டுப் போங்க! அப்புறம் அடுத்த வருசம் சித்திரை மாசம் எப்படா வரும்ன்னு காத்துட்டு இருப்பீங்க!

ராட்டினம் படம் மதுரை பதிவர் சகோதரி ஆனந்தி அவர்கள் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி

பின்னூட்டமொன்றை இடுக