அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்

Posted: நவம்பர் 7, 2011 in தமிழும் கமலும், பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, , , ,

எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம்தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.   

– கமல்ஹாசன்

நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் பல மனிதர்களில் சிலரை பார்த்தவுடனே எந்த காரணமும் இல்லாமலே நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அப்படித்தான், கமல்ஹாசன் அவர்களைப் பார்த்த முதல் நாளே மிகவும் பிடித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் மீதான அன்பு நடிகர், ரசிகர் என்பதையும் தாண்டிப் புனிதமானது. அபூர்வசகோதரர்களில் சர்க்கஸ் கலைஞனாக வரும் ‘அப்பு’ கமலை இளம்வயதில் மிகவும் பிடித்தது. ஒலியும் ஒளியும் போடும்போதெல்லாம் அடுத்த பாட்டு கமல் பாட்டாக இருக்க வேண்டுமென்று வேண்டுவேன். எங்கப்பா, சித்தப்பா மற்றும் சகோதரர்கள் எனப்பலரும் எங்கள் வீட்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் கமல்ஹாசனும் ஒருவர்.

கமல்ஹாசனும் சித்திரவீதிக்காரர்தான். அவருக்குச் சித்திரங்களின் மீது விருப்பம் அதிகம் என்பதை அவரது படங்களிலேயே நாம் காணலாம். அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் ஓவியராகவே வருவார். அந்தப்படத்தில் மதன் வரும் காட்சியில் மறைந்த ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நடிப்பதாக இருந்ததாம். ராஜபார்வையில் அந்திமழை பொழிகிறது பாடலில் மாதவி மரத்துக்கருகில் நிற்கும் கமல்ஹாசனை வரைந்து கொண்டிருப்பார். அப்படியே ஓவியத்திலிருந்து கமல்ஹாசன் நடந்து வருவார். அதேபோல, அபூர்வசகோதரர்களில் அண்ணாத்தே ஆடுறார் பாட்டு தொடக்கத்தின்போது ஜனகராஜின் கையிலுள்ள கமல்ஹாசன் ஓவியத்திலிருந்து உருவமாக மாறிவருவார். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு ஓவியர் வருவார். அவர் அப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரம். காக்கிச்சட்டை படத்தில் கதாநாயகி அம்பிகா ஓவியராக வருவார். அந்தப்படத்தில் கமல்ஹாசனை மிக அருமையாக பல விதங்களில் வரைந்திருப்பார். விருமாண்டி படத்தில் ஒரு ஓவியர் வருவார். படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் சித்திரமாக வரைந்துகொண்டேயிருப்பார். கமல் கிணற்றில் அபிராமியுடன் இருக்கும் காதல்காட்சி முதல் நீதிமன்றத்தில் அடிக்க ஓடிவரும் காட்சி வரை நிறையக்காட்சிகளை வரைந்து பதிவு செய்து கொண்டேயிருப்பார். ஆளவந்தான் படத்தில் நந்தகுமார் கதாபாத்திரம் ஓரிரு இடங்களில் கார்ட்டூனாக காட்டியிருப்பார்கள். அதற்காக நிறைய ஓவியங்களை வரைந்திருப்பார்கள். உன்னைப்போல் ஒருவனில் கமல்ஹாசன் சாயல்களை சொல்ல ஒருவர் கணினியில் வரைந்து கொடுப்பார். அதே போல இந்தியனிலும் கிழவர் கமல்ஹாசனைப் படமாக வரைந்து மிகப்பெரிய பதாகையாக வைத்திருப்பார்கள். பஞ்சதந்திரத்தில் ஒரு நீர்வண்ண ஓவியப் புத்தகம் ஒன்றிலிருந்து கதை பின்னோக்கிப் போகும். சிம்ரன் குழந்தைக்கு கமலின் முந்தைய வாழ்க்கையைப் படத்தைக் காண்பித்துக் கதை சொல்லிக்கொண்டே உணவு கொடுத்துக்கொண்டிருப்பார். மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் பாடலில் கமலும் அவரது காதலியும் சுவற்றில் ஓவியம் வரைவது போன்ற காட்சி வரும். அதுவும் அப்பாடல் பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் மிகவும் வித்தியாசமாக எடுத்திருப்பார்கள். ஹேராமில் கூட ஆதிமூலத்தின் ஓவியங்களைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். இப்படித் தன் படங்களில் ஓவியங்களை, ஓவியர்களை கமல்ஹாசன் அதிகம் காட்டியிருப்பார்.

கமல்ஹாசனை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்று விரும்பினேன். என் விருப்பத்தை எப்பொழுதும் மதுரை நிறைவேற்றிவிடும். நான்மாடக்கூடலிலேயே கமல்ஹாசன் தனது சண்டியர் படத்துவக்கவிழாவைத் துவங்கினார். சண்டியர் படத்துவக்கவிழாவிற்கு மறுநாள் எனக்கு இயற்பியல் முழுஆண்டுத்தேர்வு. ஆனாலும், கமல்ஹாசனைப் பார்த்துவிட்டு, தேர்வன்று அதிகாலை அழகரையும் பூப்பல்லக்கில் பார்த்துவிட்டுப்போய்த் தேர்வெழுதித் தேறினேன். இரண்டு அழகர்களைக் காணும் வாய்ப்பைத் தந்த அந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவை மறக்க முடியாது.  அதற்குப் பிறகு நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு இராஜாமுத்தையா மன்றத்தருகில் சிலை திறந்த அன்றும் கமல்ஹாசனை மற்றொருமுறை காணும் வாய்ப்பை மதுரை மீண்டும் பெற்றுத் தந்தது. கமல்ஹாசனும் நம்ம தென்பாண்டிநாட்டான்தானே.

‘தமிழ்வையை’யின் கரையிலுள்ள இராமநாதபுரத்தில் பிறந்த காரணத்தால் கமல்ஹாசனுக்கு தமிழ் மீது பற்று சற்று அதிகம். நடிகராயிருந்த போதும் மய்யம் எனும் இலக்கியப்பத்திரிக்கை நடத்தும் அளவு தமிழ் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பும் நடிகர் கமல்ஹாசன்தான். ஒரு நேர்காணலில் தொ.பரமசிவன் அய்யாவை சந்தித்ததை மிகவும் முக்கியமாக குறிப்பிடுகிறார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா கமல்ஹாசனுடைய நண்பர். மேலும், சுந்தர ராமசாமியையும் ஒருமுறை நேரில்போய் சந்தித்திருக்கிறார். ஜெயகாந்தன், தொ.பரமசிவன், கவிஞர் புவியரசு, ஞானசம்பந்தன், மனுஷ்யபுத்திரன், ஞானக்கூத்தன், ரா.கி.ரங்கராஜன், பாலகுமாரன், நீலபத்மநாபன், பிரளயன், மதன் எனப் பலருடனும் நட்புடன் இருக்கிறார். கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு கமல்ஹாசன் தன் நற்பணிமன்றத்தின் மூலமாக விழா எடுத்தார். அன்று கமல்ஹாசன் ஜெயமோகனின் கொற்றவையை பலமுறை வாசித்ததாக கூறினார். அதைப் படித்ததும் வியப்படைந்தேன். கமல்ஹாசனின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது தொ.பரமசிவன் அய்யா கமல்ஹாசன் குறித்து பேசிய பொழுது

கமல் சிறந்த வாசகர். மருதநாயகம் படத்திற்காக சில புத்தகங்களை வாசிக்கச்சொல்லி நான் அவரிடம் படிக்க பரிந்துரைத்த போது அதையெல்லாம் தான் வாசித்துவிட்டதாகக் கூறி மற்ற மொழிகளிலும் வந்த சில புத்தகங்களை எல்லாம் வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஆய்வு மாணவன் போன்ற அவரது உழைப்பைக் கண்டு வியந்தேன். மேலும், கமல்ஹாசன் கோணங்கி வரை வாசிக்கிறார். இப்ப உள்ள பல வாத்தியார்களுக்கு கோணங்கி யாருன்னே தெரியாது. அதனால் கமல் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்யாதது ஒருவகையில் நல்லதுதான். அப்படியில்லையென்றால் இந்த அளவு வாசிப்பு அவருக்கு கிட்டியிருக்காது

என்றார். கமல்ஹாசனின் இலக்கிய ஆர்வத்திற்குச் சான்றாக தொ.பரமசிவன் அய்யா சொன்ன இந்த ஒரு விசயம் போதும். கமல்ஹாசன் நடித்த அவள் அப்படித்தான் பட வசனகர்த்தாக்களில் வண்ணநிலவனும் ஒருவர்.

கமல் ஒருமுறை விகடனில் தன் வீடு குறித்துப் பேசும் பொழுது அவரது நூலகம் குறித்துச் சொன்னது:

என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைப் படிக்கிறது, எழுதறது எல்லாமே இங்கேதான்! ஷேக்ஸ்பியர், கம்பன், சித்தர்கள், காளிதாசர், பாரதி, ஜெயகாந்தன், லா.ச.ரா, மில்டன், கீட்ஸ், தேவதச்சன், வண்ணதாசன், தொ.பரமசிவம் எல்லோரும் இந்த ரூம்லதான் இருக்காங்க.

கமல்ஹாசனது திரைக்கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான நாவல்கள் எனலாம். உதாரணமாக, மகாநதி, அன்பேசிவம், தசாவதாரம்.

 விஜய் தொலைக்காட்சி மதுரை திருமலைநாயக்கர் மகாலில் கமலும் தமிழும் என்ற நிகழ்ச்சி நடத்தியபோது தமிழின் இலக்கிய ஆளுமைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு எடுத்த முக்கியமானதொரு விழா எனலாம். அன்று எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பிரளயன், ஞானசம்பந்தன், சிவசங்கரி, ஷாஜி, இரா.முருகன், கபிலன், சண்முகராஜா, இயக்குனர்கள் சசிக்குமார், சேரன், சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு சிறந்த கலைஞன் மற்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கலைஞானி கமல்ஹாசனும் அப்படித்தான் மற்ற கலைகளின் மீது விருப்பம் கொண்டவர். வீதிநாடகம் குறித்த கமல்ஹாசனின் விருப்பத்தினால்தான் அன்பே சிவம் படத்தில் வரும் நாட்டுக்கொருசேதி சொல்ல என்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை வீதிநாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரளயன் அவர்களைக் கொண்டு எடுத்திருப்பார். அந்த படத்தில் பிரளயனும் ஒரு காட்சியில் வருவார். பிரளயனின் வீதிநாடகங்களை இரண்டுமுறை மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது பெரும்பாக்கியம் என நினைக்கிறேன். தசாவதாரத்தில் தோற்பாவைக்கூத்து, அன்பேசிவத்தில் வீதிநாடகம், விருமாண்டியில் தேவராட்டம் (அதைச் சரியாக கம்பளநாயக்கர் வீட்டுவிழாக்களில் நடைபெறும் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்), அபூர்வசகோதரர்களில் புலியாட்டம், தேவர்மகனில் தப்பாட்டம், சிலம்பாட்டம், சலங்கைஒலியில் பரதக்கலைஞனாக, அபூர்வராகங்களில் மிருதங்கக்கலைஞனாக என தன் படங்களில் மற்ற கலைகளையும் காட்டியிருக்கிறார். புலியாட்டம் என்று ஒரு புத்தகம் வாசித்த போது அதில் அந்நூலாசிரியர் திரைப்படத்தில் புலியாட்டத்தை சிறப்பாக காட்டியது அபூர்வசகோதரர்களில்தான் என்கிறார்.

கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் ஓரிரு காட்சிகளில் கமல் வரும் படங்கள்கூட எனக்குப் பிடிக்கும். உதாரணத்திற்கு தில்லுமுல்லு, மகளிர் மட்டும், நளதமயந்தி. மறக்க முடியாத படங்கள் என்றால் தனிப்பதிவே எழுத வேண்டிவரும். அபூர்வசகோதரர்கள், உன்னால்முடியும் தம்பி, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, உயர்ந்த உள்ளம், சத்யா, குணா, தெனாலி, அன்பேசிவம், விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களில் சில காட்சிகளில் ஒன்றிப்போய் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன். அதுவும் வேலை கிடைக்காத நாளில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் பார்த்துக்கொண்டிருந்த போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வி.கே.ராமசாமி இறந்த பிறகு ஒரு கடையில் கணக்குபிள்ளை இறந்துட்டாருன்னு சொல்லும் காட்சி, பழம் விற்கும் பாட்டி இரண்டு ரூபாய்க்கு மூணுபழம் எனும்போது கமல் மூணுரூபாய்க்கு இரண்டுபழம் கேட்கும் காட்சியில் அந்தப்பாட்டியின் உயர்ந்த உள்ளம், கழிவுகளை அள்ளுவதற்காகத்தான் குடித்ததாய் அம்பிகாவிடம் புலம்பும் காட்சி எல்லாம் பார்த்து அழுதபோது சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனாலும், அதுபோல என்னை நெகிழ வைத்த காட்சிகள் கமல்ஹாசன் படங்களில் அதிகம். ரேடியோ மிர்ச்சியில் கமல்ஹாசன் பேசுவதை அடிக்கடி போடுவார்கள். அதில் வலி குறித்து பேசும் போது ‘வலிதான் உயிர் வாழ்வதற்கான அத்தாட்சி. NO PAIN NO GAIN’ என்று கூறிவிட்டு ‘வலியுடன் கமல்ஹாசன்’ என்பார். அதை கேட்டதும் எனக்கு மனசு ரொம்ப வலிக்கும்.

அன்பே சிவம்’ படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு குடையை வைத்து சண்டையிடும் காட்சி கமல்ஹாசனின் படங்களில் எனக்கு பிடித்த சண்டைக்காட்சி. அந்தப்படத்தில் இறுதியில் வரும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவைதான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.

கமல்ஹாசன் படங்களில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அதிலும் கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடிய சில பாடல்களை மற்றவர்கள் பாடினால் அந்தளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். உதாரணமாக ‘நினைவோ ஒரு பறவை, விக்ரம், கடவுள்பாதி மிருகம்பாதி, ஆழ்வார்பேட்டை ஆளுடா, சுந்தரிநீயும் சுந்தரன்ஞானும், கண்மணி அன்போடு, தென்பாண்டி சீமையிலே, ராஜா கையவச்சா, உன்னவிட,  தகுடுதத்தம், முத்தே முத்தம்மா’. அதே போல பாடல்களிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். வசனம் பாடலினூடாக வருவது, வட்டார வழக்கில் பேசுவது எல்லாம் கமல்ஹாசனின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மகாநதியில் வரும் ‘தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது’ என்னும் பாடலுக்கு முன் பாரதியின் ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை கமல்ஹாசன் வாசிப்பார். அதைத்தான் எனது அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன். மேலும், அந்தப்பாடலின் இறுதியில் வரும் வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை.

அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி!

எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வியென்பதை ஏற்பதில்லையடி!

கமல்ஹாசனின் துள்ளலான பாடல்களை உற்சாகமான வேளைகளில் பாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டும் போது பாடிக்கொண்டே ஓட்டுவது மகிழ்வான விசயம். ‘மாருகோ மாருகோ, பூப்போட்டதாவணி, அண்ணாத்தே ஆடுறார், ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வானிலே தேனிலா, பேரைச்சொல்லவா’ போன்ற பாட்டுகளை கேட்டாலோ அல்லது பாடினாலோ தானாகவே தோள்கள் அசைய, மெல்லிய ஆட்டம் உடலில் பரவத்தொடங்கும். அவரைப் போல நடனமாட வேண்டும் என்பது எனது இளமைக்கால விருப்பங்களுள் ஒன்று. அப்பொழுதெல்லாம் தனியாக கண்ணாடிமுன் அல்லது விளக்கொளியில் என் நிழலைப் பார்த்து ஆடிக்கொண்டிருப்பேன். கமல்ஹாசன் படங்களில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் தனித்துவமானவை. கதாநாயகர்களில் கமலும், ரஜினியும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மைக்கேல் மதனகாமராசன், தெனாலி, அவ்வைசண்முகி, பஞ்சதந்திரம், பம்மல். K. சம்பந்தம், வசூல்ராஜா எல்லாம் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும். கமல்ஹாசன் – கிரேஸிமோகன்  கூட்டணி என்றால் எல்லாத்தொகுதிகளிலும் மகிழ்ச்சிதான்.

முன்பு தூர்தர்ஷனில் அலைவரிசை பிரச்சனை ஏற்படும் பொழுது குறுக்கும் மறுக்குமாக கட்டங்கள் தெரிய ‘கொய்ங்ங்’ என்று தடங்கல் ஒலி கேட்கும். சண்டியர் படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஏற்பட்ட தடங்கலை, படத்தின் பெயர் மாற்றியதால் பேர் போடும் போது அது போல கட்டங்களில் பெயர்கள் மட்டும் சாதாரணமாக வர பின்னால் இளையராஜாவின் இசையில் பிளிறல் போன்ற ஒலி பின்னனியில் ஒலித்துக்கொண்டிருக்கும். தனது கருத்தை நுட்பமாக பதிவு செய்திருப்பார்.

‘நடிகர்களுள் ஒரு நாயகன்’ என்று எழுத்தாளர் வாஸந்தி சொன்னது கமல்ஹாசனின் மனிதநேய குணத்திற்கு மிகவும் பொருந்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் நடிகர்களில் முதன் முதலில் கண்தானம், இரத்ததானம் என்பதையும் கடந்து உடல்தானம் செய்து அதன் மீதான கவனத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாபர் மசூதி இடித்த பொழுது அதைக்கண்டித்து திரைப்படத்துறையிலிருந்து எதிரொலித்த முதல்குரல் கமல்ஹாசனுடையது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சனை வந்தபோது தொழிலாளர் பக்கம் நின்றவர் கமல்ஹாசன். ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றியவர்.

கமல்ஹாசனைக் குறித்த செய்திகள், கமல்ஹாசனின் நேர்காணல்கள், கமல்ஹாசன் நிழற்படங்கள் என எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். கமல்ஹாசனைக் குறித்து வந்த புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கி விடுவேன். கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற விசயம் என்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் குறித்து எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் போட்டாலும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பும் சகோதரர்கள், என்னைப் பார்க்கும் போது கமல் குறித்து பேசும் நண்பர்கள், விருமாண்டி வந்த சமயம் முழுபக்க ஃப்ளோஅப் வந்ததை பார்த்ததும் எனக்கு எடுத்து வர நினைத்த ஆசிரியர் என கமல்ஹாசன் மீதான எனது அன்பை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பதிவில் உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றிகள் பல.

என்னுடைய வாசிப்பு மேம்பட கமல்ஹாசனும் ஒரு காரணம். அவருடைய நல்லசிவம் (அன்பேசிவம்), வின்சென்ட் பூவராகன் (தசாவதாரம்), உதயமூர்த்தி (உன்னால் முடியும் தம்பி) போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் வாழ்வில் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ நடிகர் என்பதோடு இல்லாமல் என்னுடைய அபூர்வ சகோதரராகவே நினைக்கிறேன். பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானையும், கடலும் மட்டுமல்ல கமலும்தான். அவரை குறித்து நினைத்தாலே இனிக்கும், பார்த்தால் பசி தீரும். உயர்ந்த உள்ளம், வெற்றிவிழா நாயகன், அன்பால் ஆளவந்த அபூர்வசகோதரர், எனக்குள்ஒருவன் மருதநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்து இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி. அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் சித்திரவீதிக்காரன்.

பின்னூட்டங்கள்
  1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்காரன் – மதுரை வாசகன்

    முழுவதும் படித்தேன் . பொறுமையாகப் படித்தேன் . இருப்பினும் மனதில் பல எண்ணங்கள் ஒடுகின்றன. எப்படி மறு ம்ழொஇ எழுதலாம் எனப் பல்வேறு சிந்தனைகள். பொறுமையாக மீண்டும் ஒரு முறை படித்து பிறகு மறு மொழி இடுகிறேன். இன்றிரவௌக்குள் நிச்சயம் இடுவேன்.

    நல்வாழ்த்துகள் நண்பா – நட்புடன் சீனா

  2. கலைஞானி கமல்ஹாசன் குறித்த தங்கள் மறுமொழியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    -அன்புடன் சித்திரவீதிக்காரன்.

  3. yanaikutty சொல்கிறார்:

    ஒரு ரசிகனின்
    பார்வை …
    ரசித்து
    படித்து
    மகிழத்தான்
    இந்த பதிவு .
    கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
    கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
    ரசிப்புடன் .
    யானைக்குட்டி

  4. செங்கோவி சொல்கிறார்:

    அருமையான அலசல்..சினிமாமீது மட்டுமல்லாமல் பல கலைகளின்மீதும் ஆர்வம் உள்ளவர் என்பதை விரிவாக விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்..நன்றி.

  5. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரை வாசகன் – சித்திர வீதிக்காரன்

    ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் விடச் சிறந்த மனிதத்தினைக் கடைப் பிடிக்கும் கமல ஹாசனின் பரம விசிறியாகி, அவரைப் பற்றிய இடுகை எழுதியது நன்று. குடும்பமே கமலின் இரசிகர்களாக இருந்ததும் நன்று. கமலஹாசனின் ஓவிய ஆர்வத்தினை எடுத்துக் காட்ட எத்த்னை சான்றுகள். நினைவாற்றல் பாராட்டத் தக்கது. இயற்பியல் தேர்வுக்கு முன்னர் இரு அழகர்களைக் கண்டு சென்றது கமலின் மீது உள்ள பிரியத்தினைக் காட்டுகிறது. கமலின் இலக்கிய ஆர்வத்தினையும் அலசியது நன்று. கமலின் நூலகம், விஜய் தொலைக் காட்சியின் கமலும் தமிழும் பற்றி எழுதியதும் நன்று.

    கமலின் திரைப் படங்களைப் ப்ற்றியும் மற்ற கலைகளின் மீது அவருக்குள்ள ஆர்வம் பற்றியும் எழுதியது அவரின் பரிணாமத்தினை விளக்குவதாக இருக்கிறது. கமலின் படத்தில் வரும் பாடல்கள், சண்டைக்காட்சிகள், அவரது நடிப்பு என அனைத்திலும் ஒன்றி – அவரின் பரம ரசிகனாக, இவ்விடுகை எழுதப்பட்டிருப்பது நன்று.

    கமலைப் பற்றிய நேர்காணல்கள், நிழற் படங்கள், செய்திகள் என அனைத்தையும் சேமித்து வைத்திருக்கும் அன்பு பாராட்டத் தக்கது.

    அவரை முன் மாதிரியாக வைத்து, வாசிப்பு ஆர்வத்தினை வளர்ப்பது நன்று.

    உலக நாயகன் கமல ஹாசனின் பிறந்த நாளன்று, அவரைப் பற்றிய பல செய்திகளுடன், நிழற்படங்களுடன், தகவல்களும் நிறைந்த நீண்டதொரு இடுகை எழுதியது பாராட்டுக்குரியது .

    கமல் நடித்த உன்னைப் போல் ஒருவனுக்கு எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுதியது மறந்து விட்டதா ?

    நல்வாழ்த்துகள் மதுரை வாசகன்

    நட்புடன் சீனா

  6. superlinks சொல்கிறார்:

    வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

  7. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

    கமல் தீவிர ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்.ஒரு நடிகனிடம் இப்படித்தீவிர
    அன்பு வைத்துப் பாழாகிறார்களே என்று வருத்தப் பட்டிருக்கிறேன் ஆனால் அவர்
    நடிப்பு மட்டுமல்லாது பிறகுணங்கள், இலக்கிய ஆர்வம்,தொண்டுள்ளம்,மேலும்
    பற்பல திறன்களை தர்க்கரீதியில் எடைபோட்டு மிகவிரிவாகப் பதிவிட்டு
    மற்றவர்களையும் அவர் மீது அன்பு கொள்ளத்தக்க வகையில் மாற்றும் உங்கள்
    பதிவு மிக அருமையாக உள்ளது.அவர் கலை மேம்பாட்டுக்காக தீவிரமாக
    உழைப்பது மிகவும் பாராட்டத் தக்கது completely dedicated to good cenema என்று
    கூறலாம். அருமையான பதிவுக்கு நன்றி.

  8. razik சொல்கிறார்:

    Very nice article…i feel exactly same like…

    Long live andavare

  9. நீலவான் கூட நிறம் மாறிப்போகும்
    நேசம் நிறம் மாறுமா?
    என்ற வெற்றிவிழா படப்பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது. கமல்ஹாசன் குறித்த பகிர்விற்கு மறுமொழியளித்த அனைவரது நேசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பதிவை மய்யம் தளத்திலும், ஃபேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற சமூகத்தளங்களில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

  10. அப்பாதுரை சொல்கிறார்:

    உண்மையான ரசிகனின் உணர்வு நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. முழுதும் படித்தேன்!

  11. N SHANMUGA SIVA சொல்கிறார்:

    Very sharp observations , but you missed about his hab, like helping the old good artists by giving a re entry / life in cine world, NANDRI MARAKKATHA UNMAI KALAIGAN

  12. ஐஜஸ்[பாரதி ஹாசன் சொல்கிறார்:

    என் கமல் சாரின் ஆளுமையின் மீது ஒரு பொறாமை.
    நல்ல தகவல்கள் நன்றி!

  13. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார ,

    என்னுடைய கார்த்திகை 09 2011 தேதி யிட்ட நீண்ட மறுமொழிக்கு கருத்துக் கூற வில்லையே – ஏன் ?

    உன்னைப் போல் ஒருவனுக்கு வசனம் எழுதிய ப்திவர் / எழுத்தாளர் பெயர் மறந்து விட்டதா ?

    அவர் எனது இனிய நண்பரும் கூட

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    • கமல்ஹாசன் குறித்த நான் எழுதிய பதிவுக்கு தங்கள் நீண்ட மறுமொழி என்னை ஊக்கமளித்தது. விரைவில் கமல்ஹாசனின் பாடல்களில் பன்முகத்தன்மை குறித்து எழுத உள்ளேன்.
      உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு வசனம் எழுதியவர் இரா.முருகன் அவர்கள்தானே. அவருடைய பதிவுகள் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். தங்கள் நண்பர் என்பதை இப்போதுதான் அறிந்தேன். மகிழ்ச்சி. அவர்தான் பில்லா 2 படத்திற்கு வசனம் எழுதியிருப்பதாக வாசித்தேன்.

      மிக்க நன்றி.
      அன்புடன்,
      சித்திரவீதிக்காரன்.

  14. prasanth சொல்கிறார்:

    hai anna iam prasanth

  15. Vijayabharathi சொல்கிறார்:

    கமல் படங்களில் பொதுவாக ஒரு புற்றுநோய் கதாபாத்திரம் எதிர்பாக்கலாம். நம்மவர் முதல் மன்மத அன்பு வரை இது உள்ளது.. இவரின் பல நண்பர்கள் புற்றுநோய்க்கு பலியாகியுள்ளனர்.. மறைந்த இசைஅமைப்பாளர் மகேஷ் கமலுக்கு நெருங்கிய நண்பர்.. “Four Friends” என்ற மலையாள படத்தில் புற்றுநோய் பற்றி “Pep talk” ஒன்று அதனால் பாதிக்கபட்ட நான்கு நண்பர்க்களுக்கு சொல்லுவர்.. கமலை பற்றி இதுவும் ஒரு முக்கிய தகவல்!!

  16. உலகசினிமா ரசிகன் சொல்கிறார்:

    கமல்ஹாசன் நம்மோடு பயணப்பட்டு வரும் படைப்பாளி.
    ஒரு ரசிகனாக 360 டிகிரி வலம் வந்து அவரை பற்றி எழுதிய இப்பதிவு மிக உயர்வாக படைக்கப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக