மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது.                               

– சு.வெங்கடேசன், காவல்கோட்டம்.

காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு.

பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை அடக்கி ஆள நினைத்தவர்கள் எல்லாம் அடங்கிப்போனார்கள். வழக்கம்போல இறுதியில் அதிகாரங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போனது. ஆனால், ஆதியிலிருந்து இன்றுவரை மதுரை எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்கிறது. மதுரை உலகின் தொல் நகரம். அது எளிய மக்களின் நம்பிக்கைகளிலும், கதைகளிலும் வாழ்கிறது. அதன் தொன்மை ஒவ்வொரு வீதிகளிலும், மலைகளிலும் படிந்து கிடக்கிறது. காவல்கோட்டம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான மதுரையின் கதையைப் பேசுகிறது. 600 ஆண்டுகளாக மதுரை அடைந்த மாற்றங்களை கதையினூடாக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

காவல்கோட்டத்தை வாசிக்கத்தொடங்கியதும் அமணமலை ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் பெரியாம்பிளைகளும், கிழவிகளும் மற்றும் வீதிகளில் திரியும் காவக்காரர்களும் ரொம்பநாள் பழகினவர்கள்போல நெருக்கமானார்கள். வாசித்தபின் மதுரை, அமணமலை, களவு, காவல், கோட்டைகள், அரசு பற்றியெல்லாம் பேசிக்கொண்டே திரிந்தேன். எங்கம்மா பிறந்த கிராமத்தில் வயல்களில் கருதைக் கசக்கிட்டி போவதைப் பத்தி முன்பு சொன்னபோது அதெப்படி ஒரு வயக்காட்டு நெல்லை கசக்கி எடுத்துட்டுப் போகமுடியும் என்று சந்தேகப்பட்டேன். இந்நாவல் வாசித்தபோதுதான்  எப்படி கருதைக் கசக்கிட்டு போவாங்க என்பதை அறிந்தேன்.

கருதைக் கசக்கச் செல்லும் கொத்தின் நிலையாள் காவலுக்கு நிற்க மற்றவர்கள் உள்நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக நெற்கதிர்களை மட்டும் உருவி மடியில் போட்டு கொஞ்சம் நிறைய வரப்பில் வைத்துள்ள சாக்கில் போட்டுத் திருடுகிறார்கள். யாரேனும் வருவதுபோல் தெரிந்தால் நிலையாள் கொடுக்கும் சமிக்கை மூலம் வயலில் பதுங்கிக்கொள்வார்கள். இப்படித்தான் வயலில் கருதைக்கசக்கி நெல் திருடுகிறார்கள். இப்படித்திருடு போவதால் அந்தக் கிராமத்தில் காவக்காரர்கள் இல்லையென்றால் காவலுக்கு ஆள் போடுகிறார்கள். இப்படி களவின் மூலம் காவலையும் அடைகிறார்கள். சமீபத்தில்கூட ஒரு வங்கியில் திருட வந்தவர் எப்படி திருட முயன்றார் என்று காவல்துறையினருக்கு விளக்கிக்காட்டிவிட்டு “இதுக்கு அப்புறமும் வாட்ச்மேன் போடலை பாருங்க” என கேலியாக சொன்னது ஞாபகம் வருகிறது. களவிலிருந்துதான் காவல் பிறக்கிறது. இந்நாவலில் வெங்கடேசன் களவையும் காவலையும் அருமையாக பதிவு செய்துள்ளார்.

இளமையிலிருந்தே களவுக்கு செல்வதற்கு ஊர்பெருசுகள் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். ஓடுறது, தாண்டுறது, எறியிறது, தூக்குறது, சாப்பிடுறது என ஐந்து பயிற்சிகள் அடிப்படை. அப்போதுதான் களவின் போது யாரிடமும் சிக்காமல் தப்பித்து வர முடியும். களவுக்கு சென்று தேர்ந்த ஒருவன்தான் காவக்காரனாகிறான். தங்கள் காவலின் போது களவு போனால் அது காவக்காரர்கள் பொறுப்பு. திருடிய தடத்தை வைத்து எந்த ஊர்க்காரன் திருடிப் போயிருப்பான் எனக்கண்டறிந்து திருடிய பொருளை மீட்டுக்கொடுக்கிறார்கள்.  களவின் போது நிலையாள் கம்பாகவும், மொண்டிக்கம்மாகவும் இருந்த கம்பு காவலின் போது காவக்கம்பாக மாறுகிறது. அவனுடைய தள்ளாத வயதில் அதுவே ஊண்டுகம்பாகிறது. ஊர்பெரியாம்பிள மாயாண்டியின் கம்பு நிலைக்கம்பாக, காவக்கம்பாக, ஊண்டுகம்பாக இருக்கிறது. அவருடைய கம்பே பல வருடக்கதைகளை அறியும்.

காவக்காரர்களை ஒழிக்க ஆங்கிலேய அரசு பலவாறு முயற்சிக்கிறது. அதற்காக போலீஸ்படையை நிறுவியது. மதுரை கீழமாசிவீதி விளக்குத்தூண் அருகிலுள்ள காவல்நிலையம்தான் மதுரையில் உருவாக்கப்பட்ட முதல் காவல்நிலையம். போலீஸ்க்காரர்களின் பலத்தை அதிகரித்து தாதனூர் காவக்காரர்களை ஒடுக்க அரசு முயல்கிறது. தாதனூர் தன்னுடைய காவலை இழக்காமல் தக்கவைக்க ஒருபுறம் போராடுகிறது. நாவலின் பாதிக்கதை காவலை இழக்காமல் போராடுவதில்தான் நகர்கிறது. அதை மிகவும் சுவாரசியமாக சு.வெங்கடேசன் பதிவு செய்திருக்கிறார். இறுதியில் அதிகாரத்தின் மூலம் கள்ளர்கள், குறவர்கள் போன்ற நிறைய இனக்குழுக்களை கைரேகைத்தடைச்சட்டத்தின் மூலம் ஒடுக்குகிறது.

ஆனால், இன்றும் தனியார் காவலையும், களவையும் ஒழிக்க அரசால் முடியவில்லை. வேலைவாய்ப்பையும், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் நாட்டின் பாதுகாப்பிற்காகவென காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் கோடிக்கணக்கில் வெட்டியாக செலவழித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.  பணியிடங்களில் வேலைக்கு வரும்போதும், போகும்போதும் நம் கைரேகையை வைக்கச்சொல்லும் முறை நிறைய இடங்களில் பரவலாக உள்ளது. களவு, காவல், கைரேகைத்தடைச்சட்டம் எதுவும் இன்னும் அழியவில்லை.

மதுரையின் கோட்டை நாவலின் இன்னொரு முக்கியமான அம்சம். விஜயநகர பிரதானியாக விஸ்வநாதன் பொறுப்பேற்ற பின் மதுரையின் வளர்ச்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறான். மூன்று ஆண்டுகளில் திருச்சியிலும், மதுரையிலும் கோட்டைகளைக் கட்டுகிறான். 1529ல் மதுரை கோட்டையைக் கட்ட நான்கு வாசல்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்படுகிறது. பலமைல் நீளத்தில் உட்கோட்டை, வெளிக்கோட்டை அமைக்கப்படுகிறது. அந்தக்கோட்டையை நகர விரிவாக்கத்திற்காக 1844ல் கலெக்டர் ப்ளாக்பர்ன் இடிக்க முடிவெடுக்கிறார். ப்ளாக்பர்னிற்கு நிலஅளவையாளர் மாரெட் மற்றும் பெருமாள் மேஸ்திரி உதவுகிறார்கள். மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

திருமலைநாயக்கர் உருவாக்கிய வசந்த மண்டபத்தில் மக்களுடன் ஆலோசனை நிகழ்த்துகிறார். இடிக்கும் பகுதி மக்களுக்கே சொந்தம் என்ற இலவச அறிவிப்பை கொடுத்து கவர்கிறார். கோட்டையில் உள்ள 21 காவல்தெய்வங்களையும் இறக்க முடிவெடுக்கிறார்கள். கோட்டையிலிருந்து காவல்தெய்வங்கள் வெளியேறும் காட்சி  புல்லரிக்க வைத்து விடுகிறது. துடியான தெய்வங்களை இறக்கிகொண்டு போய் வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயிலில் வைத்து தெய்வங்களுக்கு பலியாக 21 எருமைகளை வெட்டுகிறார்கள். மேலும், மனிதப்பலி கொடுத்ததாக வதந்தி பரப்புகிறார்கள். இதற்கிடையில் ஊர் பெரிய மனிதர்கள் சென்னை போய் மனுக்கொடுத்து கலெக்டரை பணிநீக்கம் செய்ய வைத்து விடுகிறார்கள். அவரோ கொடாக்கண்டனாக தன் திட்டத்தை விவரித்து மீண்டும் வந்து பணியைத் தொடங்குகிறார்.

கோட்டை இடிக்கப்படுகிறது. கிராமங்களிலிருந்து ஆட்கள் வந்து தங்கி மாதக்கணக்காக வேலை செய்கிறார்கள். இடித்த பணியாளர்கள் சிலர் கோட்டையை தங்கள் மேனியில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். ஊரே தூசியில் மிதக்கிறது. செல்வந்தர்கள் கோட்டையைத் தகர்த்த கற்களை வைத்து பெரிய வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். யானைக்கல் தரைப்பாலம் இந்தக் கோட்டையின் கற்களில் கட்டப்பட்டதுதான். கோட்டை தகர்ந்ததும் வெளியிலிருந்து மக்கள் வந்து குடியேறுகிறார்கள். நகரம் விரிவடைகிறது.

தாதுவருஷப்பஞ்சத்தை இந்நாவல் விரிவாக பேசுகிறது. மழை பொய்த்துப்போக கடும்வெயிலும், கொள்ளைநோய்களும் பரவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிகிறார்கள். கிறிஸ்துவ மிஷனரிகள் மதுரையில் பசுமலையிலிருந்து தங்கள் பணிகளை மேற்கொண்டனர். சாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் கல்வி கொடுத்தனர். ஏழை & அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள். சில பாதிரிகள் நகர நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேடுகளை கண்டிக்கும் அளவு நேர்மையானவர்களாக இருந்தார்கள். பெரியாறு அணையைக் கட்டி மேல்நாட்டுக்கள்ளர்களை தந்திரமாக ஒடுக்கியது ஆங்கிலேயஅரசு.

மேல்சாதிஇந்துக்கள் தங்கள் குழந்தைகள் கற்க தனிப்பள்ளிகளை கட்டுகிறார்கள். நாடார்கள் முன்னேறுவது கண்டு அதை தடுக்கப் பார்க்கிறார்கள். தாதனூர்க்காரர்கள் காவலில் நாடார்களின் பேட்டை காப்பாற்றப்படுகிறது. மதுராகோட்ஸ் மில் திறக்கப்பட்டதன் மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைத்தது. இயந்திரங்கள் மக்களை சக்கையாக பிழிந்து துப்பின. பொன்னகரம் உருவாகியது. ரயில் போக்குவரத்து, தபால்துறைகள் சிறப்பாக செயல்படத்தொடங்கின. நீதிமன்றங்கள் மற்றும் காவல்நிலையங்களை கொண்டுவந்து பிரச்சனைகள் அதன்கீழ் தீர்க்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையைக் கொண்டு வந்தார்கள். அரசரடிப் பகுதியில் பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது.

ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர் பெரியாம்பிளைகள்  பேசிக்கொண்டிருப்பதையும், கிழவி குமரிகளுக்குமிடேயேயான கதையாடலையும்  அவர்கள் பேசிக்கொள்ளும் பாலியல் கதைகளையும், சொலவடையையும்  அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். பாலியல் மற்றும் உளவியல் எனப் பல பிரச்சனைகளுக்கு தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கிழவிகள் தீர்வு சொல்ல குமரிகள் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், கள்ளர் சமுதாய மக்களின் பழக்க வழக்கங்களையும் இந்நாவலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

சு.வெங்கடேசன் கவிஞர் என்பதை நிறைய பக்கங்களில் நிரூபித்துவிடுகிறார். மதுரை, இருள், களவு குறித்த அவரது வர்ணனைகள் அற்புதம். அந்தப் பக்கங்களை வாசித்துக்கொண்டே இருக்கலாம். சு.வெங்கடேசனின் பத்தாண்டுகால உழைப்பை  நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் வரலாறாக இந்நாவலை அமைத்த சு.வெங்கடேசனுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும். காவல்கோட்டத்தின் கதை என்னைக்காக்கும் மதுரையின் கதை.

காவல்கோட்டத்திலிருந்து

பின்னூட்டங்கள்
  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    வரலாறு பேசுகிறது. அருமையான படங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

  2. தருமி சொல்கிறார்:

    படித்து மாளாது என்று ஒதுக்கி வைத்த புத்தகத்தைச் சிறிதாவது எட்டிப் பார்க்க வைத்து விடுவீர்களென நினைக்கிறேன்.

  3. maduraisuki சொல்கிறார்:

    சிறந்த பதிவு ! படங்களுடன் அருமையான விளக்கங்கள் ! நன்றி நண்பர/ காவல்கொட்டம் குறித்து நல்ல பதிவுகள் நன்றி மதுரைசுகி

  4. மதுரை சரவணன் சொல்கிறார்:

    ஒருவழியா எழுதிட்டீங்க… அருமையாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  5. ஆருத்ரா சொல்கிறார்:

    மதுரையின் தொன்மை, புதிதான நக‌ர நிர்மாணம் , களவு , காவல் ‌ அறிய கிடைத்ததில் மகிழ்ச்சி. காவல் கோட்டம் வாசிக்க ஆவலாயுள்ளேன். துாங்கா பா‌ர்த்துப் போக ஆவல் . சிறப்பான பதிவு.

  6. ஆருத்ரா சொல்கிறார்:

    மதுரையின் தொன்மை, புதிதான நக‌ர நிர்மாணம் , களவு , காவல் ‌ அறிய கிடைத்ததில் மகிழ்ச்சி. காவல் கோட்டம் வாசிக்க ஆவலாயுள்ளேன். துாங்கா நகரம் பா‌ர்த்துப் போக ஆவல் . சிறப்பான பதிவு.

  7. DJ சொல்கிறார்:

    சில தினங்களுக்கு முன்னர் தான் காவல்கோட்டத்தை முழுதாய் வாசித்து முடித்தேன். மதுரையை இதுவரை நேரடியாகப் பார்த்திராத எனக்கே நாவல் பிரமிப்பாக இருந்தபோது உங்களுக்கு தெரிந்த இடங்களில் நிகழும் இக்கதை தானாகவே உள்ளிழுத்துக் கொள்வதில் அதிசயமேதுமில்லை. இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் கைவராத ஒரு மொழி வெங்கடேசனுக்குக் கைவந்தது என்னளவில் வியப்பாயிருந்தது. அரவான் படத்தைப் பார்த்தபோது கூட நாவலோடு ஒப்பிட்டு ஒப்பிட்டே பார்க்க ஒருவகையில் அது சுவாரசியமான ஓர் ஆட்டமாயிருந்தது.

    • Prasanna சொல்கிறார்:

      //இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் கைவராத ஒரு மொழி வெங்கடேசனுக்குக் கைவந்தது என்னளவில் வியப்பாயிருந்தது//

      Russia,latin america ilakkiyangal paditthathu illaya????

  8. Prasanna சொல்கிறார்:

    //மதுரையை அடக்கி ஆள நினைத்தவர்கள் எல்லாம் அடங்கிப்போனார்கள். வழக்கம்போல இறுதியில் அதிகாரங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போனது. //

    Arputham

பின்னூட்டமொன்றை இடுக