குன்றிலிருந்து குன்றம் நோக்கி

Posted: நவம்பர் 11, 2010 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல்

எனக்கு மலைகளை காண்பது மிகவும் பிடிக்கும். அதுவும் வெயில் இல்லாமல் மோடம் போட்டது போல இருக்கும் போது ஏற மிகவும் பிடிக்கும். வெகு நாட்களாக திருப்பரங்குன்றம் அருகிலுள்ள மொட்டைமலைக்கு செல்ல வேண்டுமென நினைத்து கொண்டிருந்தேன். இந்த மலையின் பெயர் கூடைதட்டிபறம்பு என்று நா.பா’வின் குறிஞ்சி மலர் நாவலில் படித்தேன். ஒரு விடுமுறை நாள் மிக சிறப்பாக அமைந்தது. காலையிலிருந்தே வெயிலின் வீச்சு குறைவாக இருந்ததால் நானும் எங்க அண்ணனும் மாலை ஐந்து மணி போல சென்றோம்.

மூலக்கரையில் இறங்கி மலை நோக்கி நடந்தோம். வீடுகள் இம்மலைக்கு அருகில் நிறைய வந்து விட்டன.மலை கரடு மாதிரி இருந்தது. கொஞ்சம் ஏறியதும் படிகள் இருக்கிறது. மலை மேலே முருகன் கோயில் கட்டியிருக்கிறார்கள். மலையிலிருந்து மதுரையை பார்க்கும் போது மிக பெரிய மாநகரமாக காட்சி தந்தது. அவ்வளவு வீடுகள்.

தொலைவில் நான்கு கோபுரங்களும் மதுரையின் வரலாற்று பெருமையை பறைசாற்றி கொண்டிருந்தன. யானை மலையை இங்கிருந்து பார்க்கும் பொழுது யானை போல் இல்லாமல் பெரிய குன்று போல தோன்றியது.சமண மலை, நாகமலை, பசுமலை எல்லாம் இங்கிருந்து நன்றாக தெரிந்தன. தென்கால் கண்மாயில் தண்ணீர் குறைவாக இருந்தது.மீன்பிடிக்கிறவர்கள் தண்ணீரில் வலை போட்டு வட்டமாக நின்று கொண்டிருந்தனர். உலகில் வயிற்று பொழைப்புக்காக பலர் மிகவும் சிரமப்பட ஒரு சிலர் மட்டும் நோகாம நொங்கு தின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறுபாறையில் அமர்ந்து மதுரையின் மொத்த அழகையும் பருகிட முயன்றேன். மதுரை என்ன ஒரு கோப்பை கரும்புச்சாறா மொத்தமா பருக ஏதோ என்னால் முடிந்த மட்டும் பார்த்து ரசித்து வந்தேன். மலைகளுக்கு செல்லும் போது நம் மனது மிகவும் லேசாகிவிடுகிறது. அங்கேயே தங்கி விடவும் மனசு விரும்புகிறது. மிகவும் உயரத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே பயங்கலந்த இனம்புரியாத உவகை நம் உள்ளத்தில் வந்து ஒட்டி கொள்கிறது.

அங்கிருந்து திருப்பரங்குன்ற மலையை நோக்கி வந்து அமர்ந்தோம். திருப்பரங்குன்றமலை சின்ன யானை மலை போல இருந்தது. மலையின் உயரம் கோபுர உயரத்தையும் சேர்த்து முழுங்கி கொண்டது.ஆனாலும், கோபுரம் மிக அழகாக அமைந்திருந்தது. தொலைவில் இருந்த ஆஞ்சநேயர் கோயில் கோபுரம் பெரியது போல தோன்றியது. மலை மேல் இருந்து பார்க்கும் காட்சி கீழிருந்து பார்ப்பதை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது. வீடுகள் தான் மலையில் இருந்து பார்க்கும் போது ஆச்சர்யத்தை அளிக்கிறது. திருப்பரங்குன்றமலை தன் பிரமாண்டத்தை தன்னடக்கத்துடன் ஒளித்து வைத்து கொண்டிருப்பது போல சாந்தமாக இருந்தது.

திருப்பரங்குன்றமலையில் பாறைகளை பார்க்கும் போது நாமும் சமணர்களை போல பேசாமல் அங்கு போய் இருந்து விடலாமா எனத் தோன்றியது. ஒரு நாள் எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி மற்றும் அவர்களது நண்பர்கள் திருப்பரங்குன்றமலை மேல் ஒரு இரவு முழுக்க தங்கி பேசிக் கொண்டிருந்தார்களாம், என்று “இலைகளை வியக்கும் மரம்” கட்டுரை தொகுப்பில் படித்ததை அண்ணனிடம் சொல்லி நாம் அது போல் தங்க முடியவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தேன்.

அச்சமயம் மூன்று இளைஞர்கள் மலை மேல் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. நானும் அண்ணனும் சினிமா, புத்தகங்கள், வேலை, இளமை கால நினைவுகளை பற்றி பெரும்பாலும் உரையாடிக்கொண்டிருந்தோம்.

சூரியன் சிவந்த பழம் போல மாறியது. ஒரு அதிசயம் மலை மேல் இருந்து பார்த்தால் சூரியன் அடிவானம் வரை போய் மறையாமல் பாதியிலேயே மறைந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை. மலையிலிருந்து பார்க்கும் பொழுது இரயில்கள் மிக அற்புதமாக தெரிந்தது. நீலவண்ணரயில் பூச்சி போல அழகாக நகர்ந்து சென்றது. மாலை தொடங்கியதும் எல்லா இடங்களிலும் மின்விளக்குகள் போடப்பட்டு கோலாகலமாக இருந்தது. மறுநாள் நல்ல முகூர்த்தநாள் என்பதால் திருமண மண்டபங்கள் நிறைய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிலவு ஒளியில் திருப்பரங்குன்றமலை இன்னும் சாந்தமாக காட்சி தந்தது. மதுரை மின்விளக்கு ஒளியில் பார்த்தபோது தான் தூங்காநகரென்பதை எனக்கு உணர்த்தியது போல இருந்தது. பிறகு நாங்கள் இறங்க மனமில்லாமல் மெல்ல இறங்கினோம்.

பறவையின் பார்வையை சற்று நேரம் பெற்றிருந்ததை போன்ற எண்ணம் மனதில் உதித்தது. மலையிலிருந்து வரும் போது சிறகிழந்த பறவை போல் ஆனேன். நம் வாழ்க்கையை இது போன்ற பயணங்கள் தான் உயிர்ப்பித்து கொண்டிருக்கின்றன. மலைகளின் தனிமை மனதில் வந்து அப்பிக் கொண்டது.

பின்னூட்டங்கள்
  1. சங்கரபாண்டி சொல்கிறார்:

    மொட்டமலைகிட்டத் தான் ஆடுகளம் படத்துல பேட்டைக்காரன் வீடு இருக்கு பாத்தீங்களா? மதுரைய நல்லா காட்டியிருக்காங்க

  2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரை வாசகன் , இயற்கையை இரசிக்கும் உங்கள் மனம் – இரசித்ததை அழகுற எழுத்தில் வடிக்கும் திறமை – எழுத்தின் நடுவே, படித்ததில் மனதில் பதிந்ததைச் சேர்க்கும் தன்மை. – படங்களைச் சேர்த்து – பார்த்ததைப் பகிரும்அழகு – அத்தனையும் அருமை அருமை – நல்வாழ்த்துகள் நண்பா – நட்புடன் சீனா

பின்னூட்டமொன்றை இடுக